வேகமாய் நின்றாய் காளி- 4

This entry is part 4 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

ரவி நடராஜன்

சில தர்மசங்கடமான புள்ளிவிவரங்களுடன் இந்தப் பகுதியை நாம் தொடங்குவோம் 

  1. ஒரு கணினி மானிட்டர் மற்றும் ஒரு கணினியைத் தயாரிக்க என்ன தேவைப்படுகிறது? ஒன்றரை டன் தண்ணீர், 48 பவுண்டு ரசாயனங்கள், மற்றும் 530 பவுண்டு தொலெச்ச எரிபொருள் இவை யாவும் தேவை 
  2. வெள்ளி மற்றும் தங்கம் போன்ற உலோகங்கள் திறன்பேசியின் மின்சுற்றில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு மில்லியன் திறன்பேசிகளை நாம் மறுபயன்பாடு செய்தால், அதிலிருந்து நாம் 20,000 பவுண்டு செப்பு (copper), 20. பவுண்டு செலேடியம் (caladium), 150 பவுண்டு வெள்ளி (silver), மற்றும் 50 பவுண்டு தங்கம் (gold) மீட்டெடுக்க முடியும்
  3. ஆனால் மிக முக்கியமாக இந்த மீட்டெடுப்புப் பணியில் ஏராளமான ஈயம் (lead) காற்றுடன் கலந்து மனித உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இதனால், இவ்வகைத் தொழில்கள் ஆசிய நாடுகளில் அதிகமாக நடக்கிறது. பெரும்பாலும், மேற்கத்திய நாடுகள் தங்களுடைய பயன்படாத பழைய மின்கழிவை (electronic waste or e-waste) ஆசிய நாடுகளுக்கு அனுப்பி விடுகின்றன. இந்த வழக்கம் மின் கழிவுத் தொழிலை மிகவும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. 
  4. 2016 -ஆம் ஆண்டில், உலகில் 44.6 மில்லியன் டன்கள் மின் கழிவு உருவாக்கப்பட்டது என்று கணிக்கப்பட்டுள்ளது 
  5. இதில் ஏறக்குறைய 16.8 டன்கள் சின்ன எந்திரங்களும், 9.1 மில்லியன் டன்கள் பெரிய எந்திரங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது
  6. மேலும், 6.6 மில்லியன் டன்கள் வெறும் கணினித் திரைகள், (மானிட்டர்கள்) போன்ற விஷயங்கள் இதில் அடக்கம் 
  7. இந்த 44 மில்லியன் டன்களில், ஏழு மில்லியன் டன்கள் வட அமெரிக்காவில் மட்டுமே உருவாக்கப்பட்டது 
  8. இதில் இன்னொரு வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், உலகின் மொத்த மின் கழிவில், வெறும் 16 சதவீதமே மீட்கப்படுகிறது
  9. ஒவ்வொரு வருடமும், 300 மில்லியன் கணினிகள் மற்றும் ஒரு பில்லியன் திறன்பேசிகள் தயாரிக்கப்படுகின்றன
  10. வட அமெரிக்கா மற்றும் யுரோப் உருவாகும் மின் கழிவில், 40% ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. பாக்கி. 60 சதவீத மின் கழிவு நிலத்தில் புதைக்கப்படுகிறது (landfills) அல்லது எரிக்கப்படுகிறது. மின் கழிவை எரித்தல்,  சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயமாகும். இதனால், பல வித கொடூர நோய்கள் பரவ வாய்ப்புள்ளது
  11. 2016 இல் சைனா அமெரிக்காவை விட அதிக மின் கழிவை உருவாக்கியது. உதாரணத்திற்கு, 2016 -ல் 7.2 மில்லியன் டன்களை சைனா உருவாக்கியது. அமெரிக்கா இரண்டாவது இடத்தில் 6.3 மில்லியன் டன்களை உருவாக்கியது. ஜப்பான், 2.1 மில்லியன் டன்களை உருவாக்கியது 
  12. இன்னொரு சுவாரசியமான விஷயம். எல்லா விஷயத்திலும் அமெரிக்காவும் சைனாவும் மட்டுமே முன்னே உள்ளன என்று நினைக்க வேண்டாம். சராசரி ஒரு மனிதருக்கு எத்தனை மின் கழிவை உருவாக்குகிறார்கள் என்று பார்த்ததில் முதலிடத்தில், இருப்பது யுரோப்பிய நாடுகளான  நார்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து டென்மார்க், பிரிட்டன், நெதர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ், மற்றும் ஆஸ்ட்ரியா
  13. இன்றைய கணிப்புபடி வருடம் ஒன்றுக்கு 40-50 மில்லியன் டன்கள் மின் கழிவை உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறோம். இதை வேறுவிதமாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நொடியும், 800 மடிக்கணினிகளைத் தூக்கி எறிவதற்குச் சமமானது 
  14. சராசரித் திறன்பேசிப் பயன்பாட்டாளர், தன்னுடைய திறன்பேசியை, 18 மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறார் 
  15. உலகில் நாம் உருவாக்கும் விஷத்தன்மை உடைய கழிவில், 70% மின்கழிவு. இந்த மின்கழிவில், 85% புதைக்கப்பட்டு அல்லது எரிக்கப்பட்டு வருகிறது. இது, மிகவும் சுற்றுச்சூழலுக்கு அபாயகரமானது
  16. கழிவு பொருட்களில் மிகவும் மோசமான பொருள்கள், கணினி திரைகள், எல்சிடி டிவிக்கள் (LCD TVs) , பிளாஸ்மா டிவிக்கள் (Plasma TVs), மற்றும் பழைய வகை சிஆர்டி டிவிக்கள் (CRT TVs).  இதிலென்ன அபாயம் என்று தோன்றலாம். இந்தத் திரைகளில், மெர்குரி (Mercury), ஈயம் (Lead), ஆர்சீனிக் (Arsenic), செலினியம் (Selenium), குரோமியம் (Chromium) போன்ற விஷப் பொருட்கள் அடக்கம்
  17. ஆசிய நாடுகளில்,  மின் கழிவிலிருந்து பல வகை உலோகங்களை மீட்டெடுக்கும் தொழில்களில் ,ஒரு நாளைக்கு சராசரி ஊதியம் 100 ரூபாய். இந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் கிடையாது. இவர்கள் எப்பொழுதும் நச்சுப் பொருட்களைக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.  அதிலும், பெரும்பாலும் இவ்வகைத் தொழிலாளர்கள் குழந்தைகள்!
  18. பூமிக்குள் புதைக்கப்பட்ட மின் கழிவிலிருந்து நாம் சொன்ன விஷ ரசாயனங்கள் மண்ணோடு கலக்கிறது. நாளடைவில், இது பூமிக்கடியில் உள்ள குடிநீரைத் தாக்கும் அபாயம் உள்ளது

நிறைய புள்ளி விவரங்கள் நாம் எங்கு பார்த்து விட்டோம். அடுத்தபடியாக, ஒரு மிகவும் சுவாரஸ்ய, துரத்தலான விஷயத்தைப் பார்ப்போம் – தூக்கி எறியப்பட்ட மின்னணுவியல் சாதனம் என்னவாகிறது? அது எப்படி கையாளப்படுகிறது? எங்ககெல்லாம் போகிறது? அதை என்னவெல்லாம் செய்கிறார்கள் ? இது போன்ற கேள்விகள் நமக்கு எல்லோருக்கும் தோன்றும். இப்படி கேள்வி கேட்பதோடு நிற்காமல் ஜிம் பக்கெட் (Jim Puckett) என்னும் அமெரிக்கர்,  விடாமல் மின் கழிவைத் துரத்தத் தொடங்கினார் .இவர் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. என்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தச் செயலில் இறங்கினார். இந்தச் சோதனையில், இவர் சில மின்னணு சாதனங்களில் டிராக்கர் என்று சொல்லும் சின்னக் கருவியை (geo tracker) இணைத்து அவற்றை மறுபயன்பாடு (recycling center) செய்யும் மையங்களில் கொண்டு சேர்த்தார். இவை பெரும்பாலும் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள வாஷிங்டன் மற்றும் ஆரகன் மாநிலங்களில் இருப்பவை. 

மறுபயன்பாடு அத்தனை சாதனங்களுக்கும் வாய்க்கவில்லை! கொடுக்கப்பட்ட சாதனங்களில், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவை விட்டு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தன! விசா பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல்! சொல்லப் போனால், சிலவற்றின் பயணம் 12,000 மைல் வரை. எங்கெல்லாம் இவை சென்றன? மெக்சிகோ, தாய்வான், சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து, கென்யா போன்ற நாடுகளுக்கு இவை பயணம் செய்தன. பெரும்பாலும், இவை பசிபிக் பெருங்கடலைத் தாண்டி ஹாங்காங் துறைமுகத்திற்குச் சென்று, அங்கிருந்து சைனாவுக்குப் போய் சேர்ந்தது.

Image result for guiyu china e waste

பக்கெட், சீன மொழிப் பேசும், ஒரு மொழி பெயர்ப்பாளருடன், விடாமல் சைனாவில் சில பெரிய கன்டெய்னர்களைத் தொடர்ந்தார் (இவற்றில்  டிராக்கர்கள் தாங்கிய மின்னணு சாதனங்கள் பயணம் செய்ததை அவருடைய கணினி காட்டியது).  இவர் சென்ற இடத்தில் எந்திரங்களால் சாதனங்களை உடைக்கும் சத்தம், மற்றும் கண்ணாடி உடையும் இரைச்சல் இவருக்குக் கேட்டது. பெரும்பாலும் இவ்வகை அமைப்புகள், வெளியுலகிற்கு மூடப்பட்டு ரகசியமாக இயங்கும்  கடத்தல் அமைப்புகள். அங்கு பக்கெட் மின்னணுவியல் சாதனங்கள் வாங்குவதாகக் கூறி, உள்ளே செல்ல முயற்சித்தார். அதாவது, பழைய மின்னணுவியல் சாதனங்களை வாங்கி அவற்றைப் பழுதுபார்த்து, பாகிஸ்தானில் விற்பதாகச் சொன்னார். இப்படிச் சொன்னவுடன் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். உடைப்பதற்கு முன் கொஞ்சம் லாபம் பார்ப்போமே என்ற நப்பாசை இவர்களுக்கு!

அங்கு அவர் பார்த்த காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. தொழிலாளர்கள் பல எல்சிடி டிவி -க்களை பிரித்தெடுத்து அவற்றை உடைத்து, கூடவே அதனுள் இருக்கும் மின்சுற்றுக்களை உருக்கி, பலவிதமான மிகவும் அபாயகரமான வேலைகளைச் செய்தனர். இதில் எவரும் முகத்திரை (face mask) கூட அணியவில்லை. இங்கு இருக்கும் கிராமத்துச் சீனர்கள் மின்சுற்றுக்களைப் பிரித்து, அவற்றைப் பெரிய பட்டறையில் உருக்கி, அதிலிருந்து செப்பு மற்றும் தங்கத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (hydrochloric acid) பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு, மிகவும் தீங்கான மெர்குரி (mercury) மற்றும் ஈயம் (lead) இந்தப் பகுதியில் எங்கும் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி இருக்கும் நீர் நிலைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பட்டறையில் எரிக்கப்படுவதால் புகைமூட்டம் அதிகமாகவும் உள்ளது.

Related image

 இத்தனைக்கும், சைனாவில் மின் கழிவை இறக்குமதி செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. அப்படியும், இவர்கள் எப்படியோ சில கன்டெய்னர்களில் இவற்றைக் கடத்தல் செய்கிறார்கள். சைனாவின் ஷாண்டூ பகுதியில் இருக்கும் ஒரு ஊர் குய்யு (Guiyu). இந்தப் பகுதி, உலகின் மின் கழிவுத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. 1990 வரை, குய்யு என்பது வெறும் விவசாயம் செய்து வந்த ஒரு சின்ன கிராமம். இன்று, அங்கு 75 சதவீத வீடுகளில் மற்றும் மையங்களில் ஒரு லட்சம் சீனர்கள் – அதாவது, அவ்வூருக்கு வெளியிலிருந்து வந்த சீனர்கள், வேலை செய்கிறார்கள். இவர்களின் வேலை, மின்னணுவியல் கம்பிகளில் உள்ள செப்பைப் பிரித்தெடுப்பது, பிளாஸ்டிக்கை உடைப்பது, மின்சுற்றுக்களை அமிலத்தில் கலந்து, அதிலிருந்து தேவையான வெள்ளி மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது. அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்தபின், எஞ்சி இருக்கும் மின்னணு குப்பை கூளங்களை எரிக்கிறார்கள். அப்படியே விட்டால், அரசாங்கத்திடம் மாட்டிக் கொள்வார்கள். இதனால் பலவிதமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் – நீர் மாசுபடுகிறது, அத்துடன் காற்று மாசுபடுகிறது. இதில், மிக அதிகமாக நச்சுப் பொருள்கள் கையாளப்படுகின்றன – மெர்குரி மற்றும் கேட்மியம். உலகத்தின் மிகப்பெரிய தளம் குய்யு என்றாலும், இதைப்போல பல தளங்கள் நைஜீரியா, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, நாமெல்லாம் மென்பொருளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் பெங்களூரிலேயே, இதுபோன்ற அமைப்புகள் சேரிகளில் இயங்குகின்றன (இதுதான் சிலிக்கான் பள்ளத்தாக்கோ?). உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் (Moradabad) என்ற ஊரில், இந்தியாவில் அதிகமான மின்கழிவு கையாளப்படுகிறது. இதில் இரண்டு லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது அதில் உள்ள தொழிலாளர்கள் நிலை, சைனாவில் இருப்பதை விட உயர்ந்தது அல்ல.

இந்த நோய், மலேசியாவையும் தொற்றிக் கொண்டுள்ளது. மலேசியாவிலும், மின் கழிவுத் தொழில் சட்டத்திற்குப் புறம்பானது. இங்கிருக்கும் சில கடத்தல்கார்ர்கள், மலேசியாவின் கிராமப் புறங்களில். இவ்வகை அரசல் புரசலான தொழில்களில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசாங்கத்திடம் முறையிட, அங்கு அரசாங்க சட்டத்துறை செல்வதற்குள், அடர்ந்த காடுகளுக்கு தங்களது தொழிற்சாலையை இடம் மாற்றுகிறார்கள். இவர்கள் எரிக்கும் குப்பையின் புகை இவர்களை தூரத்திலிருந்தே அடையாளம் காட்டிவிடும். விடாமல் இவர்களை மலேசிய சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள். முழு தடை விதிக்க இன்னும் மலேசிய அரசு தயங்குகிறது.

சைனாவின் தடையை எதிர்த்த சிலர், இன்று, அரசாங்கம் செய்தது சரியென்று ஒப்புக் கொள்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் பேய்ஜிங்கில் மீண்டும் நீல வானமும் வெள்ளை மேகமும் பார்க்க முடிகிறது என்று மகிழ்கிறார்கள்.

நாம் வேகத்திற்காகத் துடித்து எடுக்கும் முடிவுகளால், என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகிறன என்று சிந்திக்க கூட நம்மிடம் நேரமில்லை. இந்த வேகத்திற்கு பின்னால் நாம் ஓடுகையில், உலகின் மின்னணுவியல் குப்பைத் தொட்டி, கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது. இதனால், பலவித மனித, வணிக, மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் உலகெங்கும் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. இதைப் பற்றி விரிவாக அடுத்தப் பகுதியில் பார்ப்போம்
(தொடரும்)

Series Navigation<< வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.