மகரந்தம்

புண்ணாகும் பாரத பூமி

“நீரின்றி அமையாது உலகு” என்கிறார் திருவள்ளுவர். இங்கே உலகு என்பது மக்கள் மட்டுமன்று. உலகியல் என்ற  விரிவான அர்த்தத்தில் உலகின் வளம், பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் நீடிக்கும் திறன் போன்றவற்றை உள்ளடக்குகிறது. அண்மைய சென்னைக் குடிநீர் வறட்சி இக்குறளின்  சிறந்த எடுத்துக்காட்டு.

சென்ற ஆண்டு கோடையில், சென்னை நகரின் நீர் ஆதாரங்களான 4 ஏரிகளும் வறண்டு போனதால், குடிமக்கள் தண்ணீருக்காக அல்லாடி அலைந்தனர். அதிக விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் அமோகமாக நடந்தது. ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் குடிநீருக்கு அரசையே  நம்பியிருந்தார்கள். 2019- ஜூலை மாதம் அரசு முயற்சியால் , 135 மைல் தொலைவிலுள்ள ஜோலார்பேட்டை யிலிருந்து ரயில் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர் வீதம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஹோட்டல்கள் மூடப்பட்டன. அலுவலர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டார்கள். IT ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கிடைத்தது. தண்ணீர் அத்தியாவசியமாக  தேவைப்படும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கு மேலும் இந்த ஆண்டில் அவதிப்பட வேண்டியிருக்கும் என்கிறது நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கை. சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்கள் இந்த ஆண்டில் வறண்டு போகுமாம். உலகின் ஜனத்தொகையில் 17% கொண்டுள்ள நம் நாட்டிலுள்ள புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்கள் உலகில் உள்ளதில் வெறும் 4 விழுக்காடு. இங்கே  ஒரு புதிரான முரண்பாட்டையும் சொல்லியாகவேண்டும் .உண்மையில் இந்தியா நீர்ப்பிரச்னை இருக்கக் கூடாத நீர்-மிகை நாடு. இங்கே தேவைக்கு மேல் மழை பெய்கிறது. மத்திய நீர் ஆணைய தகவல்படி, நம் தேவை ஆண்டுக்கு 3000 பில்லியன் கன மீட்டர் மழை ; ஆனால் தேவையை விட 1000 பில்லியன் கன மீட்டர் அதிகமாக (அதாவது ஆண்டுக்கு 4000 பில்லியன் கன மீட்டர் ) மழை பெய்கிறது . ஆனால் இதில் 8% மட்டுமே நேரடி உபயோகத்துக்கு கிடைக்கிறது. மீதி நிலத்தடிக்கும்  கடலுக்கும் ஓடி விடுகிறது. இதனால் எல்லாப் பயன்பாட்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டி இருக்கிறது .

இணைப்பில் காணப்போகும் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையில் இந்த  பிசகான சுழலிலிருந்து மீள்வதற்கான பன்முக அணுகுமுறைகள் பட்டியலிடப் பட்டுள்ளன. நடுவண் அரசும் திறமையான நீர்ப் பயன்பாட்டை அடிநாதமாகக் கொண்ட  தேசிய நீர்க் கொள்கையை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவும், தன் சமூகப் பொறுப்பை உணர்த்தும் வகையில் டைம்ஸ் நீர் உச்சி மாநாடு 2020 -க்கு ஏற்பாடு செய்துள்ளது. “நீர்ப்  பயன்பாட்டில் தன்னிறைவு அடையும் இந்தியா” என்பது உச்சி மாநாட்டின் ஆய்வு பொருள். நீர்த் தன்னிறைவுத் திட்ட விவரங்களையும், செயல் முறைகளையும் அறிய கீழ்க்கண்ட சுட்டியைத் தட்டுங்கள்.

https://timesofindia.indiatimes.com/spotlight/times-water-summit-a-glimmer-of-hope-for-indias-water-woes/articleshow/74383430.cms.

அரசியல் கோளாறுகளில் சிக்கிச் சீரழியும் மானுடவியல்

அனைத்து சமூக அறிவியல்களும் மேலைத் தத்துவ மரபில் தோன்றியவையே. அதே  மரபில் வந்த மானுடவியல் (anthropology ) மனிதனை ஆய்ந்தறியும் துறை. 19-ஆம் நூற்றாண்டில்தான் அது அறிவியல் துறையாக ஏற்கப்பட்டது.  அதைக் காலனியம் ஈன்றெடுத்த செல்லக் குழந்தை என்கிறார் பக்தவத்சல பாரதி என்கிற புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் தன் மானுடவியல் கோட்பாடுகள் என்னும் நூலில். 

ஏனெனில்  மானுடவியலின் வளர்ச்சி காலனிய அரசியல் தேவைகளுக்கேற்ப ஐரோப்பாவில் ஒரு வகையாகவும், அமெரிக்காவில் வேறொரு வகையாகவும் இருந்தது. ஐரோப்பிய மானுடவியல் வளர்ச்சி குடியேற்ற நாட்டு சமுதாய அமைப்பில்  சிறப்புக் கவனம் செலுத்தியதால் அது சமூக மானிடவியல் என்ற பெயர் பெற்றது.

அமெரிக்க மானுடவியலின் வளர்ச்சி பூர்விகக் குடிகளின் பண்பாட்டை ஆய்வதில் முழு கவனம் செலுத்தியதால் அது பண்பாட்டு மானிடவியல் என்ற அடையாளம் பெற்றது. 1960-களில் இவ்விரு தனித்த அடையாளங்கள் இணைக்கப்பட்டு சமூக -பண்பாட்டு மானுடவியல் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்  பட்டு வருகிறது.   

மானுடவியல் முறையான பயில்துறையாக  19-ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட போதிலும். தாறுமாறான குவியலாய்க் கிடந்த  ஒத்திசைவில்லாத, போலிஅறிவியல் ஊகங்களிலிருந்து இடை இணைக்கப்பட்ட (interlinked ) தனித்தனி துறைகளாக வடிவெடுத்தது 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் என்று அடித்துக் கூறுகிறார்,  “The divisions of the human league” கட்டுரையின் ஆசிரியர் Jane O’ Grady. [கீழே இணைப்பைப் பார்க்கவும்.]
இந்த கட்டுரையில் இவர்,  சார்ல்ஸ் கிங் எழுதிய – மனிதத்துவத்தின் மறு கண்டுபிடிப்பு : இனம் (Race ),  கலவி(sex) , பாலினப் பாகுபாடு(gender) களின் கதை மற்றும் பண்பாட்டின் கண்டு பிடிப்பு (The Reinvention of Humanity:A Story of Race, Sex, Gender and the Discovery of Culture)என்னும் நூல் குறித்த தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விமர்சித்திருக்கிறார் . 

பிரான்ஸ் போவாஸ் (Franz Boas, 1858-1942) ஒரு புகழ் பெற்ற ஜெர்மானிய -அமெரிக்க மானுடவியலாளர் . தற்காலத்திய மானுடவியலின் முன்னோடி . அமெரிக்க மானுடவியலின் தந்தையாகவும் கருதப்படுபவர் . மனிதப் பண்பாடுகள் மற்றும் சமூகங்களின் ஆய்வில்  முதன்முதலாக அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தியவர் . அதன் வழியே பண்பாட்டு ஒப்புமையியம் (cultural relativism ) என்ற கோட்பாட்டை நிறுவினார் . மேலை நாட்டு இனமும்  கலாச்சாரமுமே உயர்ந்தது என்ற கருத்து நிலவிய அன்றைய காலகட்டத்தில் இவரது பண்பாட்டு ஒப்புமையியக் கோட்பாடு அவருக்கு நிறைய ஏதிரிகளைத் தருவித்தது. மானுடவியலை ஒரு கல்விப் புலமாக்குவதற்கு 4-துறை (four field ) அணுகுமுறையை அவர்  ஆதரித்தார். அதாவது பண்பாட்டு மானுடவியல், புதைபொருள் ஆராய்ச்சி, மொழியியல் மானுடவியல் , பௌதிக மானுடவியல் ஆகிய நான்கு துறைகளும் இணைந்த பயில் துறையாக மானுடவியல் அமைந்தால், அதுவே பண்பாடு மற்றும் பட்டறிவு கற்பிக்கும் முழுமையான மானுடவியல் துறை  என்பது அவர் கருத்து.

இவரிடம் பயின்ற மார்கரெட்  மீட், ரூத் பெனடிக்ட், ஜோரா நீல் ஹர்ஸ்டன், எல்லா டெலோரியா ஆகியோர்  இவரது கோட்பாட்டின் தீவிர ஆதரவாளர்களாகி, ஒப்புமையியத்தில், கலவி, பாலின பாகுபாடு என்ற  இரு கருத்தாக்கங்களையும் சேர்த்து, கோட்பாட்டை அடர்த்தியாக்கினார்கள்.

போவாஸ் மற்றும் அவருடைய சீடர்களின் ஆய்வு முடிவுகள் நம்பகத்தன்மை அற்றவை என்று காட்டுவதே  கட்டுரையாளரின் நோக்கம் என்பது தெளிவாகிறது. 

https://standpointmag.co.uk/issues/february-2020/the-divisions-of-the-human-league/

[குறிப்புகள்: கோரா]

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.