பானுமதி ந.

இன்றைக்கு வள்ளுவர் இருந்தால் அவர் சொல்லக்கூடும், ”பெண்ணிற் பெருந்தக்க யாவுள அறிவெனும் திண்மை உண்டாகப் பெறின்.” ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் பெண்களின் ஆற்றல் உலகில் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அறிவியலில் அவர்கள் செய்து வரும் சாதனை வியக்க வைப்பதோடு நிற்காமல் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுப் பொது மக்களின் கவனத்தைப் பரவலாகப் பெறுகிறது. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது இந்திய விஞ்ஞானிகளுக்கான உயரிய ஒன்று. 1958-ல் இதை இந்திய அரசு நிறுவியது. 62 ஆண்டுகளில் 15 பெண்கள் இதைப் பெற்றிருக்கிறார்கள். இன்போஸிஸ் நிறுவனமும் அறிவியல் ஆய்வில் ஈடுபடும் பெண்களின் பங்களிப்பை மதிப்பீடு செய்து $100000/- பரிசென வழங்குகிறது. அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் ஆய்வாளர்களைத் தெரிவு செய்து இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இது செயல்படுகிறது. பிப் 11, அகில உலகப் பெண்கள் அறிவியல் தினம்; 2019-ம் ஆண்டுக்கான விருதும் பரிசுத் தொகையும் திருமதி. சுனிதா சரவாகி மற்றும் மஞ்சுளா ரெட்டி இருவருக்கும் கிடைத்துள்ளது. அவர்கள் இருவருமே சொல்வது”இது எங்களின் தனிப்பட்ட வெற்றியல்ல; உலகின் அனைத்து அறிவியல் ஆர்வலருக்கும், முக்கியமாக மகளிருக்கும் ஊக்கம் கொடுக்கும் அங்கீகாரம்.”
Centre for Cellular and Molecular Biology(CCMB) Hyderabad –ல் முதன்மை விஞ்ஞானியான மஞ்சுளா தன் முனைவர் பட்ட ஆய்விற்காக 86-ல் பதிவு செய்து கொண்டார். பல்வேறு சூழல் தடைகள் இருந்தன அவருக்கு. அவர் இந்தியாவிலேயேதான், இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்பெல்லாம் செய்தார். சியாட்டிலில் தனது முனைவர் பட்டத்திற்குப் பின்னான ஃபெல்லோஷிப் பெற்றார். அவரது 42-ம் வயதில் தான் சிசிஎம்பியில் அவருக்கான ஆய்வகம் அமைந்தது. பாக்டீரியா செல் சுவர்கள் செயலாற்றும் விதத்தை அவர் ஆய்வு செய்தார். நுண்ணுயிரியின் திசுக்கள் இருபது நிமிடங்களில், மனித உடலின் இயல்பான 35 டிகிரி வெப்ப நிலையில் தங்கள் சவ்வினையும், சுவர்களையும் எப்படி அமைத்துக் கொள்கின்றன என்ற கேள்வி நூறு வருடங்களாகப் பதிலில்லாமல் இருந்தது. பாக்டீரியாவின் திசுக்கள் வளர்வதற்கு நொதிகள் தேவை என முன்னரே தெரிந்திருந்தது; ஆனால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கலிருந்தது. உயிர் வேதியியலையும், மரபியலையும் இணைத்து மஞ்சுளா துணிகரமாக தன் ஆய்வைச் செய்தார். நோய்களுக்குக் காரணமான இந்தத் திசுச் சுவர் நொதிகள், பிளவுகளின் மூலம் நுண்ணுயிர்களை வளரச் செய்கின்றன்ன என்பது அரிய, முக்கியமான கண்டுபிடிப்பாகும். இந்த ஆராய்ச்சி எந்த வகையில் உபயோகமானது என்று சிந்தித்தால் அதன் பயன்கள் புரியும். உணவு பாதுகாப்பு, வேளாண் பெருக்கம் மற்றும் உலக சுகாதாரம் பற்றிக் குறிப்பிடும் உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது: ’நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்த்து வளரும் பாக்டீரியாக்கள் மிகப் பெரிய மக்கள் நலம் சார்ந்த சவாலாகும்’. பாக்டீரியாவின் செல் சுவர்களின் வேலையைப் பற்றிய இவரது ஆய்வு, நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை மட்டும் குறி பார்த்து, நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பான்களைச் செயலிழக்கச் செய்து நலத்தை மேம்படுத்தும். மனித நலம் சார்ந்த உயிரியல் கண்டுபிடிப்பு இது. புதுமருந்து கண்டுபிடிப்புகளுக்கு பாக்டீரியாவின் சுவர்கள் எப்படி வளர்கின்றன என்பது மிகச் சிறந்த வழி காட்டி எனலாம். மஞ்சுளா இந்தியாவிலேயே பயின்று இங்கேயே ஆய்வினை மேற்கொண்டு வெற்றியும் பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பு.
சுனிதா, ஐஐடி-கரக்பூரில் கணினியியலில் பி டெக் படித்தார். பின்னர் கலிபோர்னியாவில் முதுகலையும், முனைவர் ஆய்வும் செய்தார். ஐபிஎம், கூகுள் போன்ற நிறுவனங்களில் ஆழ் இயந்திரக்கற்றலை நடைமுறையில் செயல்படுத்தும் அறிவை கணிணிகளுக்கு வழங்கும் துறையில் இயங்கினார். உலகின் சிறந்த நிறுவனங்கள், மற்றும் கலாசாலைகளின் உயரிய விருதுகளைப் பெற்றவர். பல உரிமங்களுக்குச் சொந்தக்காரர்; அவற்றில் சில இந்தத் தலைப்புகளில் தேடினால் கிட்டும்:1. Data Base System and Method Employing Data Group operator for Group-By operations, 2. Efficient Evaluation of Queries with mining predicates.
அமெரிக்காவிலிருந்து அவரும், அவர் கணவரும் இந்தியா திரும்ப முடிவு செய்த போது அவரது பேராசிரியர்கள் அது அத்தனை சிறந்த முடிவல்ல என்றனர். தற்சமயம் இந்தியத்தொழில்நுட்பக்கழகம், மும்பையில் கணிணித்துறை பேராசிரியரான இவர், வடிவமைக்கப்படாத தரவுகளிலிருந்து தகவல்களை நம்பகமான முறையில் எடுப்பதில் வல்லவர். இயந்திரக் கற்றல் முறையினைப் பயன்படுத்தி, கணிணிகளைக் கற்கவைக்கிறார் இவர். செயற்கை நுண்ணறிவில் காணப்படும் வளர்ச்சி இவரது ஆய்விற்கு உறுதுணை. ‘டேடா மோல்ட்’ என்ற மென்பொருள் உருவாக்கியுள்ளார். ஒரு சிறு உதாரணம் பார்ப்போம்:கூகுளில் மேற்கு மாம்பலம், சென்னை இப்போதும் இராமக்ருஷ்ணாபுரம் எனக் காட்டுகிறது. வாடகை வண்டியை அமர்த்துவது கூட கடினம். சுனிதாவின் ஆய்வு செயற்கை நுண்ணறிவின் மூலம் கணிணியைத் தானே தேட வைத்து வேலையைச் சுலபமாக்குகிறது. இதை ‘விலாசத்தைச் சுத்தப்படுத்துதல்’ என்று சொல்கின்றனர்.
இவரும் இவரது குழுவும் இணைந்து கொணர்ந்த QuTree என்பது வடிவம் மற்றும் பலதரப்பட்ட மேம்பாடுகளுடன் வழங்கப்படும் ஒரு பொருளை குழு சார்ந்து பொதுமைப்படுத்தும் விதத்தில் எண்ணிக்கைகளைச் சார்ந்து தகவல்கள் அளிப்பதாகும்; உதாரணம்:ஒரு உணவுப் பண்டத்தின் நீள, உயர, அகல, மேலே தூவப்படும் சேர்க்கைகள் போன்றவை. தான் ஒரு ‘போர்’ ஆசாமி என்று தன்னை இவர் சொல்லிக் கொள்கிறார்! ஆண்களின் துறை என்று கருதப்படும் ஒன்றில் நடைமுறை வாழ்க்கைக்கு உதவிகரமான ஒன்றைச் செய்துள்ளார் இவர்.
அமெரிகாவின் மிக உயரிய பொது மக்கள் விருதான ‘’Presidential Medal of Freedom” ஒபாமாவின் கைகளால் 2015-ல் பெற்ற ஆப்பிரிக்க –அமெரிக்கரான கேத்ரின் ஜான்ஸன், விண்வெளிப் பயணங்களுக்கு கணிதம் மூலம் துணை நின்றவர். பிப் 24, 2020-ல் தனது 101-வது வயதில் காலமான இவர் தன் சாதனைகள் அனைத்தும் வேலை சார்ந்தவையே என்கிறார். 1953-ல் நேஷனல் அட்வைசரி கமிட்டி ஃபார் எரோனாடிக்ஸ்சில்(NACA) இவர் பணி என்ன தெரியுமா? தன் மேலாளர்களான வெள்ளை ஆண்கள் செய்யும் வேலைகளை, இயந்திரக் கணக்குக் கருவி மூலம் ஆராய்ந்து தவறுகளை நீக்கிச் சரி செய்து கொடுப்பது. அந்த வேலை’கம்ப்யூட்டர் ‘ என்று அழைக்கப்பட்டது. NACA and NASA இரண்டிலும் பணியாற்றியவர் இவர். விண்வெளி வீரர்களை வானில் அனுப்பவும், பின்னர் நிலவிற்கு அனுப்பவும் இவர் எழுதிய கணிதக் கோட்பாடுகள் உதவின. சுருங்கச் சொன்னால் மனிதனின் விண்வெளி பயணத்தின் மையம் இவர் கணிதத்தில் இருந்து பிறந்ததுதான்.
இளங்கணித மேதையான இவர் மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர். எல்லாவற்றையும் கணிதம் எனப் பார்த்தவர். ‘வீட்டிலிருந்து தெருவிற்கு எத்தனை அடிகள், எத்தனைப் பாத்திரங்களை எத்தனை மணி நேரத்தில் சுத்தம் செய்கிறோம், எத்தனை துணிகள் துவைக்கிறோம் என்று சிறு வயதிலேயே கணக்கிடுவாராம். நான்கு வயதிலியே 2-ம் வகுப்பில் சேர்ந்தவர். இவரது படிப்பிற்காக குடும்பம் இடம் பெயர்ந்தது.
இவருடன் பணி புரிந்த ஒரு ஆண், தொழில் சார்ந்த அமர்வில் இவரும் பங்கேற்க வந்து அமர்ந்தவுடன் அந்த இடத்திலிருந்தே எழுந்து சென்று விட்டாராம். ஆனால், ஒருமுறை, ஒரு அமர்விற்கு ஆண் பணியாளர்கள் மட்டும் அழைக்கப்பட’நான் வரக்கூடாது என்று சட்டம் ஏதும் இருக்கிறதா? ’ எனக் கேட்டாராம்; பின்னர் உடனே அதில் அனுமதிக்கப்பட்டார். வேலைச் சூழலில் பொதுவாக நிலவிய ஆண்- பெண், வெள்ளை இனம்- கறுப்பினம் போன்ற பிரிவினைகளை இவர் அதிகம் பொருட்படுத்தவில்லை.
இவர் கணிதப் பட்டதாரி. முதலில் விமானங்கள் மோதிக்கொள்வதை ஆய்வு செய்து வான்வழிப் பயணங்களில் பாதுகாப்பு பற்றிய அறிவுறுத்தலை வழங்கினார். இவருடன் சேர்ந்து 12 பேர்கள் 600 பக்கங்களுக்கு ‘வானியல் தொழில் நுட்பக் குறிப்புகள்’ எழுதிக் கொடுத்தனர். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் விண்ணில் பறத்தல், ராக்கெட்டின் இயங்கு விசை, சுற்றுப்பாதையின் அளவீட்டுக் கணக்குகள், வெப்பத் தடுப்புகளின் தேவை போன்ற அனைத்தையுமே மிகத் துல்லியமாகக் கணிதம் மூலம் வழங்கியதுதான். இதில் சிக்கலான ஒன்று என்னவென்றால் விண்வெளி வீரர்கள் பூமியில் இறங்கும் பாதை, நேரம், இடம் ஆகியவை சரியாகக் கணக்கிடப் படவேண்டும்; இல்லையெனில் உயிர் ஆபத்து இருக்கிறது அல்லவா?

ஆனால் கேத்ரின் சொன்னார் ’இதைச் சரியாகக் கணிதப்படி கொடுக்க நான் தயார்; உங்களுக்கு எப்போது வேண்டும், எங்கே விண்வெளி வீர்ர்கள் கடலிறங்க வேண்டும் என்று சொல்லுங்கள். நான் பின்னிருந்து முன்னோக்கும் வழியில் இதன் சுற்றுவட்டப்பாதை மற்றும் இறங்கும் இடத்தைக் கணித்துக் கொடுக்கிறேன்’. கணிதத்தில் திறமையும், நம்பிக்கையும் இருந்தால் தான் இவ்வாறு சொல்ல இயலும்.
பொறியாளர் Ted Shopinski யுடன் இவர் கொடுத்த தொழில் நுட்ப ஏடு ‘எப்போது ஒரு விண்கலத்தை ஏவலாம், அதை எப்போது மீளச் செய்யலாம் என்பதை துல்லியமாகக் கூறியது. முதல் முறையாக நாசாவில் ஒரு பெண் எழுதிய தொழில் நுட்பக் கட்டுரை இது என்பது மிகப் பெரிய கௌரவம். இவர் கைகளால் எழுதிய கணித சூத்திரங்கள், வழி முறைகள், விடைகள், அக்காலக் கணிணியின் கணிக்கீடுகளை விட நம்பத் தகுந்ததாக இருந்தது! தனது விண்வெளிப் பயணத்திற்கு முன்பாக ‘க்லென்’, இவரை விட்டு கணிதங்களையும் பிறவற்றையும் சரி பார்க்கச் சொன்னார் என்பது எத்தகையதொரு மதிப்பு! ஐபிஎம் கணிணி சொன்ன ராக்கெட் ஏவுதல், சுற்று வட்டப்பாதை கணக்குகளைத் தனது 43-ம் வயதில் ஒன்றரை நாட்களில் இவர் சரி பார்த்து ஒப்புக்கொண்ட பின்னர் தான் பயணமே தொடங்கியது.
ஒரு கிரகத்தின் சுற்று வட்டப் பாதையின் உள்ளும், புறமும் ஒரு விண்கலம் எப்படிப் பயணிக்க வேண்டும் என்ற அடுத்த முக்கியமான கணக்கீடுகளை இவரும், சகப் பணியாளர்களும் இணைந்து செய்தனர். அப்போலோவின் நிலாப் பயணத்திலும் மற்றும் வான்வெளி பயணங்களிலும் இன்றளவும் இவர் கணிதம் பயன்படுகிறது.
ஆச்சர்யம் என்னவென்றால் இவர் தான் ஆசிரியை ஆவதற்காக ஆங்கிலமும், ஃப்ரெஞ்சும் படிக்க விரும்பினார். கிளேடர் என்ற இவரது ஆசிரியர் இவரது கணிதத்திறமையைக் கண்டறிந்து இவரைக் கணிதப் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். முதுகலை முதல் செமஸ்டரில் கல்யாணமானதால் குடும்பத்திற்காகத் தன் படிப்பை நிறுத்திக்கொண்டார். கணவர்1956-ல் இறந்துவிட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேம்ஸ் ஜான்சனை மணந்தார்.
‘ஹிடன் ஃபிகர்ஸ்’ என்ற புகழ் பெற்ற, ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் இவரது வாழ்வெனும் காவியத்தைப் போற்றுகிறது. முதலில் அதை லீ ஷட்டர்லி நூலாக எழுதினார். பின்னர் அது அருமையான திரைப்படமாயிற்று. கணிதத்தின்பால் மாறாக் காதல், வெளியில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் பொருட்படுத்தாமை, தனக்கான இடத்தைக் கேட்டுப் பெறுதல், தன் சாதனைகளைப் பெரிதாகக் கருதாத தன்மை போன்ற பல உன்னதங்கள் நிரம்பி இருக்கின்றன இவரிடம்.
குறிக்கோள், ஊக்கம், திறன் மேம்படுத்திக் கொள்ளல், அயராது உழைத்தல் எனச் செயல்பட்ட இம்மூவரின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டி.
‘திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்; உடையவள் சக்தி ஆண்பெண் இரண்டும் ஒரு நிகர் செய்துரிமை சமைத்தாள்’ – பாரதி ***
குறிப்புகள்:
Sources:infosys-science-foundations. com/prize/laureates/2019/manjula-reddy. asp and infosys-science-foundations. com/prize/laureates/2019/sunitha-sarawagi. asp and Wideangle in The Hindu dt 9thFeb2020
https://www. washingtonpost. com/local/obituaries/katherine-johnson-hidden-figure-at-nasa-during-196os-space-race-dies-at-101/2020/02/24