தெளிவு

மாலதி சிவராமகிருஷ்ணன்

“எங்க ஊரு திருவாரூரிலிருந்து ஒரு பத்து, பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. கிராமத்திலிருந்து நாங்க எல்லாம் திருவாரூர் தேர் பார்க்கப் போனோம். நான் திருவாரூர் தேருக்குப் போனேனா, அங்க பாக்க பாக்க அத்தனை சமாசாரம் இருந்தது! நான் பலூன்ல பொம்மை செய்யறவன் பின்னாடியே வேடிக்கைப் பாத்துண்டே போயிட்டேன். அவன் பலூன்ல நாய், பூனை, ஆனை, சேர், குரங்கு, சைக்கிள்னு என்ன என்னவோ பண்ணினான். மாஜிக் மாதிரி இருந்தது. அவன்  நான் கூடவே வரதைப் பார்த்ததும்’ என்ன பாப்பா பலூன் வேணுமா?’னு எங்கிட்ட கேட்டான். பயமா போயிடுத்து. ஒரே ஓட்டம் பிடிச்சேன்.

 இப்ப ரோஸ் கலர்ல ஜவ்வு மிட்டாய் விக்கறவனை வேடிக்கை பார்க்க ஆரமிச்சேன். தெரியிமில்லையா? ஒரு பெரிய தடியில நிறைய ரவுண்டா அந்த மிட்டாயைச் சுத்தி வச்சுருப்பான். நாம கேட்டா அதுல இருந்து பிச்சு தருவான். அதுக்கு முன்னாடி “அங்கே பார்! இங்கே பார்! மேலே பார்! கீழே பார்! அக்கம் பார்! பக்கம் பார்!”னு பாட்டு மாதிரி சொல்லி நம்மளை அங்க இங்க பாக்க வைப்பான், அப்படி பாத்துண்டு இருக்கும் போதே ,  டபக்னு அந்த மிட்டாயை வாட்ச் மாதிரி, கண்ணுக்குப் போட்டுக்கற கண்ணாடி மாதிரி, கழுத்துக்குப் போட்டுக்கற செயின் மாதிரி, கை வளை மாதிரின்னு வித விதமா பண்ணித்தருவான். நாம அங்க இங்க பாக்கும் பொழுது அவன் என்ன பண்றான்னு பாத்துண்டே நின்னுண்டு இருக்கேன், அங்க நாலாவது வீட்டு சாம்பு மாமாவும், ராதை மாமியும் வந்தா! எங்க ஊர்லேந்து நிறைய பேர் அந்த தேர்த் திருவிழாவுக்கு வருவா. அது மாதிரி அவாளும் வந்திருந்தா! 

“என்னடி அம்மு!இங்க நின்னுண்டிருக்கே? அவாள்லாம் எங்கே?”ன்னா.நான் “தெரியலை! அவாள்லாம்  தொலைஞ்சு போயிட்டா! நாந்தான் இங்க இருக்கேன்”னு சொன்னேன். அவா இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சா! “நல்ல கதை! அவா தொலைஞ்சு போயிட்டாளா? சொல்றதைப் பாரேன்னா”.அப்புறம் எங்க தாத்தா ,பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி கிட்ட கொண்டு விட்டா!  எல்லாரும் என்னைக் கோவிச்சுண்டா! ”

 விஜயா மாமி அந்த பெரிய பிரப்பங்கூடை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு , தலையை லேசாக குனிந்தவாக்கில் வாயை மூடிக்கொண்டு வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தாள். அன்னிய ஆடவன் முன் உட்கார்ந்திருக்கிற அசௌகர்யம் ஏதும் இன்றி இயல்பாக அமர்ந்து, கண்கள் மினுங்க, குரலில் உற்சாகம் கொப்பளிக்க, கைகளை ஆட்டி கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

சிரிப்பு அடங்கியதும் “ நீங்க தொலைஞ்சு போயிருக்கீங்களா? தொலைஞ்சா சுவாரசியமா இருக்கும் சில சமயம்,  இல்ல?” என்று இவனைக் கேட்டாள்.

 மாமியின் பேச்சை எப்படி எடுத்துக்கொள்வது என்பது பற்றிய குழப்பம் சுந்தரத்துக்கு ஆரம்ப காலங்களில் இருந்தது. இப்போது அந்த பேச்சைத் தொடர்வதில் அவனுக்கு கொஞ்சம் தெளிவு வந்திருக்கிறது.  மாமியின் பேச்சில் பொதுவாக ஒரு   ஐம்பதைந்து வயதான , மேல் மத்தியதர குடும்ப பெண்மணியிடம்  நாம் எதிர்பார்க்கிற மனமுதிர்ச்சி, பக்குவம், நிதானம் இவை எதுவும்  இருப்பதில்லை . மனதில் தோன்றியதை தோன்றியவுடன் பேசுகிற சுதந்திரமான, விளையாட்டுத்தனமான மனநிலையில் இருப்பவர்போலத்தான்  அவர் பேசுகிறபோது தோன்றும். சில சமயம் அவரின் கேள்விகள் இருட்டு அறைக்குள் , தெருவில் வருகிற காரின் தலை விளக்கு வெளிச்சம் ஒரு க்ஷணம் சடக்கென்று  எதிர்பாராத வெளிச்சத்தைத் தருவது போல இருக்கும் . ஆனால் அவர் புரிந்து கொண்டு அந்த கேள்வியைக் கேட்கவில்லை என்பது போல அடுத்து சம்பந்தமேயில்லாமல் ஏதோ சொல்லுவார். அது மாதிரி அவர் அப்பொழுது  பளீரென்று ஒரு கேள்வி கேட்டார் ” ரொம்ப கூட்டமா இருக்கற இடம் ரொம்ப தனியா இருக்கறமாதிரியும் இருக்குமில்லை?” அடுத்த நொடியே “சொல்லுங்க! நீங்க தொலைஞ்சு போயிருக்கீங்களா?”

சுப்ரமணியன் சாரும் விஜயா மாமியும் அவர்கள் பெண் ராதிகாவுடன் பக்கத்து வீட்டுக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன் குடி வந்திருந்தார்கள். சார் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பெரிய வேலை பார்த்து ஓய்வு பெற்றிருந்தார்.  பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக இரண்டு வருடம் பணியாற்றி அதிலிருந்தும் ஓய்வு பெற்று அந்த வீட்டுக்கு குடி வந்திருந்தார். அதற்கு முன்னர் அரசு அளித்திருந்த பெரிய பங்களாவில் குடியிருந்தாலும் அந்த சின்ன வீட்டிலும் இயல்பாக, சந்தோஷமாக இருந்தார்கள்.  சார் கணக்கில் புலி, பெரிய மேதை என்றே சொல்லலாம். ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்கிற நிறைய பேருக்கு சார் கணக்கு பயிற்சி அளித்து இலவசமாக உதவி செய்துகொண்டிருந்தார்.  

அவரின் மற்ற குழந்தைகள் நல்ல வேலைகளோடும், கல்யாணமாகியும் வேறு வேறு ஊர்களில் இருந்தனர்.  அவருடைய கடைசிப் பெண் ராதிகாவின் கடைசி வருட கல்லூரி படிப்பை முடிப்பதற்காக ஒரு வருடத்திற்கு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். சாரும் , ராதிகாவும் சட்டென்று பழகிவிட்டனர்.  தவிர ராதிகாவிற்கும் , சுந்தரத்தின் பெண் யமுனாவிற்கும் ஏறத்தாழ ஒரே வயது என்பதால் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ள பல விஷயங்கள் இருந்தன. மாமிதான் அதிகமாக யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவர் என்று தோன்றியது. உமாவுடன்   கொஞ்சம் போல பேசுவார். இவனைப் பார்த்தவுடன் ‘சரி ! அப்புறம் வரேன்’ என்று போய்விடுவார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இவன் வாசல் வராந்தாவில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, மாமி காம்பவுண்ட் சுவருக்கு அப்பாலிருந்து “நான் உங்க கூட பேசட்டுமா?” என்றார்.

“பேசலாமே! சொல்லுங்க “ என்றான் ,லேசான ஆச்சரியத்துடன்.

“நான் உங்களை சி எஸ்னு கூப்பிடட்டுமா?” இவன் சிரித்துக் கொண்டே “அதுக்கென்ன? கூப்பிடுங்களேன்” என்றான். சி. சுந்தரம் என்கிற அவன் பெயரை சி எஸ் என்று கூப்பிடுவதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை .

ஆனால்  இவன் அவரை  மாமி என்று அழைக்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.  இவனும் என்னங்க, வாங்க என்று எப்படியும் குறிப்பிடாமல் பொதுவாக அழைத்து சமாளித்துக் கொண்டிருந்தான்.

அன்றிலிருந்து தினம் சாயங்காலம் தவறாமல்  சுந்தரத்துடன் பேசுவார். பொதுவாக அவர் சிறிய வயது அனுபவங்கள், கிராமத்து வீட்டில் தன்னுடைய மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் அவர் வளர்ந்தது, அந்த வீட்டு மனிதர்கள், அந்த  கிராமத்து மனிதர்கள் என்று பேசுவார். ஒரு பத்து வயது பெண்ணின் பார்வையில் அவை அனைத்தும் இருக்கும். அவர் வளர்ச்சி அந்த பருவத்தோடு அந்த கால கட்டத்தோடு நின்று போய்விட்டதோ என்று  கூட சில சமயம் அவனுக்குத் தோன்றும். பொதுவாகவே நம் அனைவருக்குமே சிறு வயது நினைவுகளின் நீட்சியும் , வீச்சும், ஆழமும், அடர்த்தியும், அளவும் பின்னர் வரும் காலங்களைப் பற்றிய நினைவுகளில் இருப்பதில்லை என்றாலும் கூட அவர் விஷயத்தில் கொஞ்சம் அது அதிகமாகவே இருப்பதாக சுந்தரத்திற்குப் பட்டது.  அந்த சில்லு சில்லான அனுபவ சிதறல்கள் ஜிக்சாக் புதிரின் துண்டுகளாக இவனுக்குத் தோன்றின. அவற்றை வைத்து அவரை, அவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயன்றான். கிடைத்த சித்திரம் கோணல் , மாணலாக வண்ணங்கள் குழம்பிய ஓவியம் போல இருந்தது.

“என்ன பதிலையே காணும்? தொலைஞ்சு போயிருக்கீங்களா, இல்லையா?”

“போயிருக்கேன்! போயிருக்கேன்! இங்க நம்ம ஊர் சித்திரை திரு விழாலதான்!  அப்பல்லாம் திருவிழாவுக்கு வர ஜனங்களுக்காக டெம்பரவரியா குழாயெல்லாம் நட்டு வச்சிருப்பாங்க! அது எத்தனை இருக்குன்னு எண்ணிக்கிட்டே அப்படியே போயிட்டேன்”

மாமி கையை கொட்டிக்கொண்டு சிரித்தாள். “அப்புறம்?”

சுப்ரமணியன் சார் காம்பவுண்ட் அருகில் வந்து “ வரியாம்மா விஜயா? விளக்கு ஏத்தணுமே!” என்றார்.

மாமி கொஞ்சம் ஏமாற்றத்தோடு “சரி வரேன்!” என்றாள். இவனைப் பார்த்து

“சி எஸ்! நாளைக்கு பாக்கி கதையை சொல்லுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

சார் இவனைப் பார்த்து சிரித்து தலையை ஆட்டி விடை பெற்றார். உள்ளே போகும் பொழுது மாமி சாரிடம் ” இன்னிக்கு ராத்ரிக்கு என்ன டிஃபன் பண்ணப் போறேள்?” என்று கேட்டுக் கொண்டே போனாள்.

மாமிக்கு நரம்பு சம்பந்தமான ஏதோ வியாதி , மற்றும் சில உடல் பிரச்னைகள் இருந்தன. எனவே சாரே வீட்டு வேலைகளில் பெரும்பாலானவற்றை செய்வார், அலுப்பில்லாமல், சந்தோஷமாக.

அடுத்த இரண்டு நாட்கள் சுந்தரம் வாசலில் பேப்பர் படிக்க வரவில்லை, ஆளும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. மாமி வாசலுக்கும் கொல்லைக்கும் நடந்து நடந்து அலைந்தாள். பொறுக்க முடியாமல் உமாவிடம் “ஏன் உமா, சி எஸ் எங்க?” என்று கேட்டாள்.

“அவங்க பெரியப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு திருனவேலி போயிருக்காங்க மாமி ! இன்னிக்கு வந்திடுவாங்க”என்றாள்.  வந்திருப்பான் போலிருக்கிறது, ஆனாலும் அடுத்த நாளும் அவன் வாசல் வராந்தாவுக்கு பேப்பர் படிக்க வரவில்லை.

 நான்காம் நாள் அவனைப் பார்த்ததும் மாமி ஓட்டமும் நடையுமாக வந்து அவன் முன்னால் அமர்ந்து  “என்ன சி எஸ் ! என்னை நீங்க அவாய்ட் பண்றீங்களா என்ன? நான் வந்து வந்து பாத்து எப்படி ஏமாந்து போனேன் தெரியுமா?” குரல் உடைந்து கேட்டாள்.

அவன் திகைத்துப் போய் பக்கத்தில் அமர்ந்து இருந்த உமாவைப் பார்த்தான்.

“என்ன உமா?” என்றான் உதவி கோருவது போல. குரல் நடுங்கியது.

உமா “அதெல்லாம் இல்லை மாமி! அவர் ஊர்லேந்து வந்தாரா, அப்புறம் அவங்க கன்ஸல்டன்சி வேலைக்காக வெளியே போயிட்டு ரொம்ப நேரம் கழிச்சிதான் வந்தாரு! நாங்களே சொல்லிக்கிட்டுதான் இருந்தோம் , மாமியோட பேசவேயில்லையேன்னு” பேசிக்கொண்டே மாமியின் பின்னால் வந்து நின்று அவர் தோள்களின் மேல் தன் கைகளை வைக்கப் போனாள். மாமி சேரின் முன் பக்கமாக நகர்ந்தார்.  ஒரு கணம் தயங்கிய உமா , மாமியை சுற்றிக்கொண்டு அவர் அருகில் அமர்ந்தாள். 

மாமி பேசாமல் இருந்தார்.  

உமாதொடர்ந்தாள் ” மாமி எங்க எல்லாருக்குமே தெரியும்,  தினம் சாயங்காலம் அஞ்சரையிலேந்து ஆறரை மணி வரை உங்க நேரம் சி எஸ்ஸோட பேசற நேரம்னு. அதை எதுக்கு தவிர்க்கப் போறோம்? வேலை  அதிகமா இருந்தா மட்டும் அது தப்பிப் போயிடுது. சரியா? தப்பா நினைச்சுக்காதீங்க!”

மாமி கண்ணைத் துடைத்துக்கொண்டு  “ சரி! தாங்க்ஸ்!” என்றார் முணுமுணுப்பாக. 

உமா  சுந்தரத்தைப் பார்த்தாள். அவன் முகம் துயரத்துடனும் , பயத்துடனும், குழப்பத்துடனும் இருந்தது. 

மாமி ஆரம்பித்தாள், குரல் கம்மி இருந்தது.

“ நாங்க எல்லாம் ஒரு தடவை வீட்டுல ஒளிஞ்சு விளையாடிண்டுருந்தோம். பெரிய  கிராமத்து வீடு இல்லையா? நிறைய ரகசிய இடம் இருக்கும் ஒளிஞ்சுக்க. எங்க பெரியப்பா பையன் மணிதான் தேடணும், நாங்கள்லாம் ஒளிஞ்சுக்கணும்னு ஷாட் பூட் த்ரீ போட்டு முடிவாச்சு. எனக்கு ஒரே குஷி, ஏன்னா நா ஒரு நல்ல இடம்  கண்டுபிடிச்சு வச்சுருந்தேன். அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதுன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன். கிராமத்து வீட்டுல நெல் போடற குதிர் இருக்குமில்லையா? அதுல முதல் கட்டுல இருந்த குதிர்ல நெல்லு இருந்தது. இரண்டாம் கட்டு குதிர் காலியாத்தான் இருந்தது. அதுக்குள்ள போறதுக்கு ஒரு ஈஸியான வழியும் இருந்தது. எல்லாரும் ஒளிஞ்சுக்கற வரைக்கும் போக்கு காட்டிட்டு, அதுல போய் ஒளிஞ்சுண்டேன்.

மணி ஒத்தொருத்தரையா கண்டுபிடிச்சுண்டிருந்தான். நான் குதிருக்குள்ள உட்கார்ந்துண்டு சத்தம் வராம சிரிச்சுண்டிருந்தேன் .

ரொம்ப நேரம் தேடற சத்தம் கேட்டுண்டே இருந்தது. என்னை மட்டும் கண்டே பிடிக்கலை.  எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. என்னைக் கண்டுபிடிக்கணும்னு காத்துண்டுருந்து காத்துண்டுருந்து அப்படியே நான் அதுக்குள்ளேயே தூங்கிப் போயிட்டேன் போலிருக்கு. ரொம்ப நேரம் கழிச்சு பாத்தா , ஒரே இருட்டா இருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறி வெளிலே வந்துட்டேன். லைட்லாம் போட்டு இருந்தது. சாயங்காலமாயிடுத்து.  அவா யாரையுமே காணும். நான் மெதுவா சித்தி கிட்ட கேட்டேன் “அவாள்லாம் எங்க?”

“அவாள்லாம் ஆத்தங்கரைக்கு விளையாடப் போயிருக்கா? நீ போகலையா?  யானை தீவாந்தரத்தை நினைச்சுண்டு இருக்கற மாதிரி நீ எதையோ நினைச்சுண்டு உட்காந்துண்டுருப்பே! அவா போய்ட்டா போலிருக்கு” அப்படின்னா. 

“இரு ! இரு! எங்க போறதா இருந்தாலும் இந்த போர்ன்விடாவை குடிச்சுட்டுப் போ” என்றாள்.

நான் திண்ணையிலே உட்காந்துண்டு அவாளுக்காக காத்துண்டிருந்தேன்.  என்னைப் பார்க்கும்பொழுது யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன்.

இருட்டினத்துக்கப்புறம் அவா வந்தா. ஆத்தங்கரையில நடந்த விளையாட்டைப் பத்திப் பேசிண்டே எல்லாரும் உள்ள போனா. நான் “என்னடா மணி?”ன்னேன்

அவன் “என்ன ?”ன்னு கேட்டுண்டே உள்ளே போனான். அவங்க யாருக்குமே நான் ஒளிஞ்சுண்டதோ, என்னைக் கண்டுபிடிக்கலைங்கிறதோ, நான் அவங்களோட மத்யானம் ஒளிஞ்சு கண்டு பிடிக்கிற விளையாட்டுல இருந்தேன்னோ  ஞாபகமே இல்லை! ”

மாமி சொல்லி நிறுத்தினாள்.

சுந்தரமும், உமாவும்  பேச்சற்று ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

மாமி கொஞ்ச நேரம் பேசாமலிருந்துவிட்டு “சரி அப்புறம் பார்க்கலாம்” என்றபடி தன் வீட்டிற்குச் சென்றார்.

மறு நாள் மாமி உள்ளே நுழையும் பொழுது யமுனா டென்னிஸ் பயிற்சிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள். “ஹை மாமி ! வாங்க!” என்று விட்டு உள்ளே திரும்பி  ”அப்பா உங்க ஃப்ரண்ட் வந்திருக்காங்க” சிரித்துக்கொண்டே சொன்னாள். .

மாமி ஏற்ற இறக்கம் இல்லாத உணர்ச்சியற்ற குரலில் மெதுவாக “ ஆமா! நான் உங்க அப்பாவோட ஃப்ரண்ட்தான்! அதுக்கென்ன இப்ப?” என்றார்.    மாமி வீட்டு காம்பௌண்ட் அருகில் டென்னிஸ் ராக்கெட்டுடன் காத்துக் கொண்டிருந்த ராதிகா,

“ஏய்! யமுனா! இப்ப வரப் போறியா இல்லையா?” முகம் சாயங்கால வெயிலில் ஜிவுஜிவுத்தது.

மாமியையும் ,ராதிகாவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு யமுனா கொஞ்சம் கெஞ்சுவது போலவும் கொஞ்சம் அழுவது போலவுமான குரலில் சொன்னாள்,

“ஸாரி! மாமி! நான் சாதரணமாதான் சொன்னேன். ப்ளீஸ்! தப்பா எடுத்துக்காதீங்க! ஸாரி மாமி!  வெரி வெரி ஸாரி !”

“போதும் உன்னோட எஃஸ்ப்ளனேஷன்!  வா சீக்கிரம்! எரிச்சலா இருக்கு” 

ராதிகா   டென்னிஸ் ராக்கெட்டால் காம்பவுண்ட் சுவரைத் தட்டியபடி சிடுசிடுத்தாள்.

மாமி  யமுனாவைப் பார்த்து “சரி சரி! பரவாயில்லை! அவ டென்னிஸ் பாட்டை உடைச்சுடுவா போலருக்கு! சீக்கிரம் விளையாடப் போ” என்றபடி உள்ளே போனார்.

உமா கடைசி சுற்று நடையில் இருக்கும் பொழுது சுப்ரமணியன் சார்  பூங்காவிற்குள் நுழைந்தார். குழந்தைகளின் கூச்சலும், பறவைகளின் சத்தமுமாக பூங்கா ஆரவாரமாக இருந்தது. குழந்தைகளின் விளயாட்டு இடத்திலிருந்து சற்று தூரம் தள்ளி ஓரளவு அமைதியாய் இருந்த  பெஞ்சில் அமர்ந்தார். 

“ஏன் சார் நடக்கலையா?” என்றாள் உமா.

“இல்லை, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்னுதான் வந்தேன். டைம் இருக்கா உங்களுக்கு?”

“சொல்லுங்க சார்!” என்றபடியே அவர் அருகில் அமர்ந்தாள்.

 தலைக்கு மேல் மரத்தில் பறவைகளின் கூச்சல். சார் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

“உங்களுக்குத் தெரியும் விஜயா பாவம் ரொம்ப நல்லவ!  அவ சின்ன வயசிலே ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில நிறைய குழந்தைகளோட வளந்துருக்கா!  அதுவும் உங்களுக்குத் தெரியும், அவளே சொல்லியிருக்கா நிறைய தடவை! தாத்தா, பாட்டி பெரியப்பா பெரியம்மா, சித்தப்பா, சித்தி அத்தை எல்லாரும் ரொம்ப நல்லவங்க அன்பானவங்க. ஆனா ஒரு கிராமந்திர வீட்டுல பெரிய அளவுலே விவசாயம் பண்ணிண்டு இருந்த சூழல்ல ,அதுவும் கூட்டுக் குடும்பத்தில,பெரியவங்களுக்கு குழந்தைகளோட தனிப்பட்ட முறையில நேரம் செலவழிச்சிருக்கமுடியாது. குழந்தைகளுக்கு இடையிலே பொதுவா ‘பலசாலியே வாழத்தகுந்தவன்’ங்கிற தியரிதான் செல்லுபடியாகும். அதனால  பேசாம இருந்து பழகிப் பழகியே அவளுக்கு யாரோடையும் பேசறதுக்கு எதுவும் இல்லாம போயிடுத்து.”

“அவங்க அப்பா. அம்மா…?”

“ஹாங்க்! அதைத்தான் சொல்ல வந்தேன். அவங்க வீட்டிலேயே அவங்க அப்பா ஒரு ரிபெல்னுதான் சொல்லணும். எல்லாரும் விவசாயத்தில ஈடுபட்ட வீட்டுல பி.ஈ,, எம்.பி.ஏ னு  பிரமாதமா படிச்சு, ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் தென் மண்டல பொறுப்பாளாராக பெரிய பதவியில், சென்னையில் கார் , பங்களான்னு ஆடம்பரமான வாழ்க்கை, குழந்தைகள் சென்னையின் பெயர் பெற்ற பள்ளிகளில் படிப்பு என வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. இவளுக்கு ஒன்பது வயது இருக்கும்பொழுது அவங்க ஒரு முறை திருச்சி கோவில்களுக்குப் போய்விட்டு கிராமத்திற்கு போவதாக ஏற்பாடு. திருச்சிக்கு அருகில் பயங்கரமான கார் விபத்தில் அப்பா, அம்மா, விஜயாவுடைய  இரட்டை சகோதரி விமலா , அவள் அண்ணா ஸ்ரீனிவாஸ் எல்லாரும் அந்த இடத்திலேயே மரணமடைய இவள் மட்டும் லேசான காயங்களோடு உயிர் தப்பினாள். மருத்துவ உதவி வரும் வரை அந்த ஓரிரு மணி நேரங்கள் அவர்கள் அனைவரோடும் தனியாக இவள் கழித்ததை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அதற்குப் பிறகுதான் இவள் கிராமத்தில் தாத்தா பாட்டி வீட்டிற்குப் போயிருக்கிறாள். பாவம்!”

கேட்டுக்கொண்டிருந்த உமா பெஞ்சை இறுக்கிப் பிடித்தாள்.

“அதனால அவளுக்கு வாழ்க்கையிலே யார் மேலயும் நம்பிக்கை வரல ! எதிலயும் பிடிப்பு இல்லை.தனக்குள்ளயே சுருங்கிப் போயிட்டா. அதனாலதான் எனக்கு ஆச்சரியமா இருந்தது, உங்க குடும்பத்தோட அவ சகஜமா பழகறது. குறிப்பா சுந்தரத்துகிட்ட அவ சுவாதீனமா , சௌகர்யமா, இயல்பா உணர்ந்தது எனக்கு ரொம்ப  ஆச்சர்யமா இருந்தது. அவ சந்தோஷத்தைப் பார்க்க எனக்கும் சந்தோஷமா இருந்தது. இதை உங்க கிட்ட சொல்லணும்னு ரொம்ப நாளா நினைச்சேன் . சொல்லிட்டேன். நீங்க, சுந்தரம் இரண்டு பேரும் தப்பா நினைச்சுக்கலையே?”

சொல்லும் பொழுது சாரின் மூக்கும் முகமும் சிவந்தன. கண்களைக் கொட்டிக்கொண்டு தொண்டையை செருமி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டார்.

“புரியுது சார்! நாங்க யாரும் எப்படியும் நினைக்கலை! மேலும் இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு சார்? இந்த உலகத்தில ஒரு மனிதருக்கு சக மனிதர் மேல நம்பிக்கை, பிடிப்பு, ப்ரியம் எல்லாம் வரது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. இங்க மாமி விஷயத்தில அப்படி நடந்திருப்பது நல்ல விஷயம்தானே”

அவர் தலையை ஆட்டினார்.

“ பேசட்டும் பாவம்!” என்றாள்.

இருவரும் சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

மேலிருந்து சரக்கொன்றை புஷ்பங்கள் தங்கமாய் சொரிந்து கொண்டிருந்தன.

“நான் வரேன், சார்! நீங்க?” உமா கிளம்பிக்கொண்டே கேட்டாள்.

“இல்லம்மா, நான் கொஞ்சம் வாக் போயிட்டு அப்புறம் வரேன்” என்றார். ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.