திருமண ஏசல் பாடல்கள்

எஸ்.இராமச்சந்திரன் / சசிகலா கஸ்தூரிரங்கன்

தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் என்று கருதப்படுகிறது. சிற்றிலக்கியங்களைப் பிரபந்தங்கள் என்றும் சொல்வதுண்டு. 96 என்ற எண் 8 என்ற எண்ணின் அதிகபட்ச மடங்கு ஆகும். கலைகள் எண்ணெண் வகையின – அதாவது 64 வகையின எனக் கூறுவதுண்டு. அது போன்றே 96 (8 X 12) வகைச் சிற்றிலக்கியங்கள் என்று குறிப்பிடுகிற இந்த மரபும் உருவாகி இருக்கவேண்டும். இவற்றுள் கோவை என்ற சிற்றிலக்கிய வகை மிகப் பழமையானதாகத் தெரிகிறது. பாண்டிக்கோவை, திருச்சிற்றம்பலக் கோவை (திருக்கோவையார்) ஆகியன கி.பி. 8 – 9 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகையில் “நந்திக்கலம்பகம்” இதே போல் பழமையானது; நந்திவர்ம பல்லவன் மேல் பாடப்பெற்றது. உலா நூல்களுள் பழமையானது சேரமான் பெருமாளின் “திருக்கயிலாய ஞான உலா” ஆகும்.

கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பேரரசர்களின் ஆட்சியில் தடுமாற்றம் ஏற்படுகிறது. தன்னிகரில்லாத தலைவன் என்கிற ஒற்றை ஆளுமையைப் பாடுகிற அரசவைப் புலவர்களே இல்லாத ஒரு சூழல் உருவாகிவிடுகிறது. அந்தச் சூழலில் பல்வேறு வகையான சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்குகின்றன. சிற்றிலக்கியங்களுக்கான இலக்கணத்தை வரையறுக்கும் பாட்டியல் நூல்களும் இக்காலக்கட்டத்தில் தோன்றத் தொடங்கின.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த அருணகிரிநாதர் தமது “தருவர் இவர் ஆகுமென்று” எனத் தொடங்கும் குருமலைத் திருப்புகழில் இத்தகைய சில சிற்றிலக்கிய வகைப்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.

“தருவரிவராகுமென்று பொருள் நசையில் நாடி வண்டு
தனைவிடுசொல் தூது தண்ட முதலான
தருமுதலதான செஞ்சொல் வகைபாடி”   

வசதி படைத்த செல்வர்களிடம், இவர்கள் பொருள் தருவார்கள் என்று நம்பித் தேடிச் சென்று, வண்டு விடு தூது, தண்டம், சரச கவி மாலை, சிந்து, கலித்துறை, ஏசல் இன்பதரு போன்ற சிற்றிலக்கிய வகைகளில் அவர்களின் புகழைப் பாடிப் பரிசிலும் பெறாமல் தாம் மனவேதனை அடைந்ததாக அருணகிரியார் இப்பாடலில் குறிப்பிடுகிறார். அதாவது, அருணகிரிநாதரே இவ்வாறு பாடிப் பரிசில் பெற்று வாழ்க்கையை ஓட்டி வந்தவராகத் தம்மைக் குறிப்பிட்டுக்கொள்கிறார். தமது கவித்திறம் முருகன் அருளைப் பாடுவதற்குப் பயன்படாமல் நரஸ்துதி எனப்படுகிற தனிமனிதப் புகழினைப் பாடுவதற்குப் பயன்படுகிறது என்ற கழிவிரக்கத்தில் இவ்வாறு அருணகிரியார் பாடினார் போலும். ஆனால் அருணகிரியாரால் பாடப்பட்ட அத்தகைய சிற்றிலக்கியம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. இப்பட்டியலில் ஏசல் என்ற சிற்றிலக்கிய வகை குறிப்பிடப்படுவது கவனத்துக்கு உரியதாகும்.

ஏசல் என்ற சொல்லுக்குக் குற்றம் சாட்டுதல் என்பதே பொருளாகும். குற்றம் என்று பொருள்படும் 27 சொற்களுள் ‘ஏசு’ என்பதும் ஒன்று எனத் திவாகர நிகண்டு (8ஆவது அத்தியாயம், பண்பு பற்றிய பெயர்த் தொகுதி) குறிப்பிடுகிறது. திருஞான சம்பந்தர் தேவாரம் (முதல் திருமுறை) திருவீழிமிழலைப் பதிகத்தில்,

“வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே”

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீட்டை விடக் குறைந்த மதிப்புடைய உலோகத்தில் வார்த்து அடிக்கப்பட்ட காசு வாசி படும் காசு ஆகும். திருவீழிமிழலை இறைவன் சம்பந்தருக்கு வாசி படும் காசு வழங்கினார்; அதனால் நிறைவுறாத சம்பந்தர் வாசி தீர்ந்த காசு (அதாவது அந்தக் காசில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீட்டுக்குச் சமமான தரமுடைய உலோகத்தில் வார்த்து அடிக்கப்பட்ட காசு) வழங்குமாறு இறைவனிடம் வேண்டுகிறார். நடந்துவிட்ட நிகழ்வுக்காகத் தாம் அவரைக் குற்றம் சாட்டப்போவதில்லை என்ற பொருளிலேயே “ஏசல் இல்லையே” என்று சம்பந்தர் குறிப்பிடுவதாகச் சைவ அடியார்கள் பொருளுரைப்பர்.

அங்கதம் என்ற ஒன்றினைப் பற்றித் தொல்காப்பியம் (பொருளதிகாரம், செய்யுளியல், 123-125ஆம் நூற்பாக்கள்) குறிப்பிடுகிறது. ஆனால் அது வசை எனப் பொருள்படும். நேரடியாகவோ மறைமுகவாகவோ ஒருவரைப் பழித்து வசைபாடுவது அங்கதம் ஆகும். சம்பந்தர், தமது தேவாரத்தில் (3ஆம் திருமுறை) “மானின் நேர்விழி” எனத் தொடங்கும் திருஆலவாய்ப் பதிகத்தின் 10ஆம் பாடலில் பின்வருமாறு பாடுகிறார்.

“……………………………………………………………………………………………பொய்த்தவம்

பொங்குநூல் வழியின்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா அங்கதர்க்கெளியேனலேன் திரு ஆலவாயரன் நிற்கவே”

அங்கதர் என்ற சொல் வன்மம் மிகுந்து வசைபாடுவோர் என்று பொருள்படுகிறது. எனவே அங்கதம் என்பதும் ஏசல் என்பதும் வெவ்வேறு வகையின என்பதை நாம் உணரலாம்.

பள்ளு, குறவஞ்சி என்ற சிற்றிலக்கிய வகைகளில் ஏசல் இடம்பெறுவதுண்டு. பண்ணை உழவனாகிய தேவந்திரக் குடும்பனின் மூத்த தாரமும் இளைய தாரமும் ஒருவருக்கொருவர் சக்களத்தி (சகக் கிழத்தி)ச் சண்டையில் ஈடுபடுவது பள்ளு நூல்களில் இடம்பெறுகிற ஏசல் ஆகும். நீண்ட நாள் பிரிந்து பல இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு ஒருவரையொருவர் சந்திக்க நேர்கிற போது குறவனும் குறத்தியும் கேலி – கிண்டலுடன் ஏசிப்பேசிப் பிறகு இணங்கி மகிழ்வது குறவஞ்சியில் இடம்பெறும் ஏசல் ஆகும்.

இத்தகைய ஏசல்கள் போன்றே முழுமையாக அமைந்த தனி ஏசல் இலக்கியங்களும் உண்டு. ஸ்ரீரங்க நாச்சியார், உறையூர் நாச்சியார் என்ற திருவரங்க நாதனின் தேவிமார் இருவரும் ஒருவரையொருவர் ஏசிப் பேசுவது போன்று அமைந்த பாடல் வடிவிலான ஏசல் நூல் (ரெங்கநாயகி – நாச்சியார் ஏசல்) புத்தகமாக வெளிவந்துள்ளது. திருப்பரங்குன்றத்து முருகப் பெருமான்மீது காதல் கொண்ட மகளைக் கோபித்துக்கொண்டு தாய் ஏசுவது போல் அமைந்த ‘திருப்பரங்கிரி முருகன் பெயரில் தாய் மகள் ஏசல்’ என்ற பாடல் வடிவ இலக்கியமும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்கள் ஆகும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை என்ற ஊரினை அடுத்து அமைந்துள்ள அகரம் என்ற சிற்றூரில் துறையப்ப சாஸ்தா என அழைக்கப்படும் ஐயனார் கோயில் உள்ளது. அந்த ஐயனார்மீது காதல் கொண்டு களவு மணம் பூண்ட மகளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானிக்கும் தாய் அவளைக் குற்றம் சாட்டிக் கேள்விகள் கேட்பது போலவும்,  மகள் உண்மையை மறைத்துப் பொய்யான மறுமொழிகள் கூறுவது போலவும் அமைந்த துறையப்ப சாஸ்தா பேரில் தாய் – மகள் ஏசல் என்ற ஓலைச்சுவடி அவ்வூரில் உள்ளது. (18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தகும் அந்த ஓலைச்சுவடி இக்கட்டுரை ஆசிரியர்களுள் ஒருவரான எஸ்.இராமச்சந்திரனால் வாசித்து எழுதப்பட்டுள்ளது; பதிப்பிக்கப்படவில்லை.)     

இத்தகைய பூசல் பாடல்கள் தவிர, திருமண நிகழ்வுகளின் போதும் சில ஏசல் பாடல்கள் பாடப்பட்டதுண்டு. அவை சம்பந்தி சண்டை என வழங்கப்படுகிற பூசல் குறித்த ஏசல் பாடல்கள் ஆகும். 1963ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழில் சாவி அவர்களால் எழுதப்பட்ட ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற தொடர் கதை வெளிவந்தது. அக்கதையில் “ஷம்பந்தி ஷண்டை” என்றே இப்பூசல் குறிப்பிடப்படும். இந்தப் பூசல் தொடர்பான ஏசல் பாடல்கள் பல சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை திருமண நிகழ்வுகளில் பாடப்பட்டு வந்தன.

திருமணம் தொடர்பான ஊஞ்சல் சடங்கு, நலங்கு போன்றவற்றின் போதும் மருவீடு (மருவு வீடு = திருமணம் புரிந்த குடும்பம்) வருகிறபோது நிகழ்கிற வரவேற்பிலும் பாடப்பட்ட பாடல்கள் பல. அவற்றில் சில விட்ட குறை தொட்ட குறை போல இப்போதும் தொடர்கின்றன. இத்தகைய பாடல்களை ஏசல் பாடல்கள் என்று குறிப்பிட முடியாவிட்டாலும் இவற்றில் நைச்சியமாகவோ நையாண்டித் தொனியிலோ பேசுவது போன்ற வாசகங்கள் அமைந்திருக்கும். கொங்கு நாட்டு நிலவுடைமைச் சமூகத்தில் நிகழ்கிற மருவீடு வரவேற்புப் பாடல்கள், ஆலாத்திப் பாடல்கள் என்ற பெயரில் இன்றும் வழங்குகின்றன. மகளிர் – குறிப்பாக இளம் பெண்கள் ஆலத்தித் தட்டினை ஏந்தி நின்று வரவேற்கும் விதத்தில் இப்பாடல்களைப் பாடுவர். (ஆலத்தி என்ற சொல் தண்ணீரைக் குறிக்கும் ஆலம் என்ற சொல்லோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது.மாலையைப் போல் வட்டமாகச் சுழற்றப்படுவதால் ஹாரத்தி என்று வழங்கப்பட்டு ஆலத்தி என்று திரிந்ததாகச் சிலர் கருதுகின்றனர்.)

“ஆலாத்தி ஆலாத்தி அருமையான ஆலாத்தி
கொங்கு மக்கள் சிறப்பச் சொல்லும்
பெருமையான ஆலாத்தி”

எனத் தொடங்கி வளர்ந்து செல்லும் அத்தகைய பாடலில் (ஒட்டன்சத்திரம் திரு. பாலு அவர்கள் தெரிவித்த பாடல் வரிகள்) குடிப்பெருமை குறித்த வரிகள் இடம்பெறுவது வழக்கம். ஆலத்தித் தட்டில் காசு போடுவதற்கு மணமகனை வேண்டுகிற வரிகளில் கேலி சற்றே இழையோடும்.

“இந்தத் தட்டு வெள்ளித் தட்டு – உங்க
வெள்ளையான மனசு போல
இந்தத் தட்டு பெருந்தட்டு – உங்க
பெரிய மனசு போல
அள்ளி இறையுங்க மச்சான்
தங்கக்காசுகளை”

வளைகாப்பு போன்ற சடங்குகளின் போதும், பாடல்கள் பாடப்படுவதுண்டு. திரைப்படங்களிலும் இவற்றின் வடிவத்தில் கவிஞர்களால்  இயற்றப்பட்ட பாடல்கள் இடம்பெற்றதுண்டு. எடுத்துக்காட்டாக 1959ஆம் ஆண்டு வெளிவந்த கல்யாணபரிசு என்ற திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களால் இயற்றப்பட்ட “அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு” என்ற பாடலைக் குறிப்பிடலாம். இத்தகைய பாடல்களில் எல்லாம் சூழலின் இறுக்கத்தையும் சடங்குகளின் இயந்திரத் தன்மையையும் நெகிழச் செய்து கொண்டாட்டமாக மாற்றுகிற வகையில் கேலியும், சிரிப்பும் இயல்பாக அமைந்திருக்கும். இப்பாடல்கள் அனைத்துமே மகளிர் கூடிப் பாடுவதாகவே அமைந்திருக்கும்.

சம்பந்தி சண்டை குறித்த திருமண ஏசல் பாடல்கள் இன்றைய நிலையில் வழக்கொழிந்து விட்டன என்றே சொல்லலாம். சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதிவரை இவை பாடப்பட்டு வந்தன. தமிழகத்தின் தானியக் களஞ்சியமான தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த நிலவுடைமைச் சாதியினர் திருமணங்களில் இத்தகைய பாடல்கள் பாடப்பட்டன.1959ஆம் ஆண்டில் வெளிவந்த காவேரியின் கணவன் என்ற திரைப்படத்தில் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அப்பாடல், திருமண ஏசல் பாடலின் பாணியில், பகடி செய்யும் விதத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா(ள்) பொண்ணு வந்தா(ள்)
பொட்டி வண்டியிலே
புள்ளையைப் பெத்த அம்மா வந்தா(ள்)
மொட்டை வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான்
ஓட்டை வண்டியிலே
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த
கம்மர் கட்டு முட்டாயி
ஷோக்கா வாங்கித் தின்னுப்புட்டு
விட்டானையா கொட்டாவி
ஓட்டாஞ்சல்லியை எடுத்துக்கிட்டு
ஓடுனாங்க மாருக்கட்டு
ஓராழாக்கு அரிசி வாங்கி
ஒலையிலே தான் போட்டுக்கிட்டு
கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு
கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
குழவிக் கல்லு புள்ளைய ஒண்ணு
குஷியாகப் பெத்துக்கிட்டு
ஆராரோ நீயாரோ
அருமையான குழந்தையாரோ”                            

இத்தகைய திரைப்படப் பாடல்களுக்கு அடிப்படையாக அமைந்தவை சம்பந்தி ஏசல் பாடல்களே. மகளிர் குழுவாகப் பாடுவதற்கு ஏற்பப் புனையப்பட்ட திருமண ஏசல்  பாடல்களில் சில : (திருவல்லிக்கேணி சரஸ்வதி கான நிலையம் 1970களில் வெளியிட்டுள்ள பாடல் வரிகள்)

“ஆகா சம்பந்தி இந்த
   கல்யாண விமரிசை தனை
 எந்த ஜில்லாவிலும்
    நான் கண்டதே இல்லை
 மாப்பிள்ளை அழைக்க வந்தார்
     மந்தையாக மூன்று பேர்கள்
 அச்சில்லாத வண்டியும்
     அதற்கேற்ற குதிரையும்
  பாதி வழி வருகும் போது
     விழுந்ததே மண்டை உடைந்ததே
  இந்த மாயப் பேச்சுகள் பேசியே என்னை
     மர்மமாகவே அழைத்து வந்தாய்”   (ஆகா)
“சாப்பிட அழைத்தாய் சம்பந்தி – இப்போ
  கூப்பிடாமலே நீ நின்றாயே பிந்தி
சர்க்கரை இல்லாத பாயசம் – வெகு
   அக்கறையாக நீ பரிமாறினாய்
வெற்றிலை வேலியில் என்றாய் – பாக்கு
   கண்ணாயிரம் கடையில் இருப்பதாய்ச் சொன்னாய்
இந்த சம்பந்தம் அதிசயம் – எனக்கு
     வந்த சம்பந்தம் அதிலும் அதிசயம்”

இவ்வாறு தொடர்கிற சம்பந்தி ஏசல் பாடல்கள் அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்பப் புதியனவாகப் புனைந்து சேர்க்கப்படுவதும் இயல்பே.

வண்டி மெட்டு ஓசைக்காரி – இவள்
வாய்ப் பேச்சில் கணைக்காரி
மாட்டு வண்டியில் வரும் ராங்கிக்காரி – எனக்கு
வாய்த்தாள் வெகு வம்புக்காரி
பட்டுப் புடவைக் காரி – வெல்
 வெட்டு ரவிக்கைக் காரி
காப்பு கொலுசுக்காரி இவள்
  சோப்பு பவுடர் ஷோக்குக் காரி
அக்கரையில் நிற்கும் பெண்ணே
  ஆற்றினிலே வெள்ளம் வந்தால்
இக்கரைக்கு எப்படி நீ
  வந்து சேரப் போறாயோ ?

என்பன போன்று அப்போதைக்கு அப்போது புனைந்து பாடுகிற பாடல் வரிகளும் உதிரிகளாகச் சேர்க்கப்படும். ராங்கிக்காரி என்பது wrongகாரி என்பதன் திரிபாகவோ rankகாரி என்பதன் திரிபாகவோ இருக்கலாம். கணைக்காரி என்பது வக்கணைக்காரி என்பதன் தவறான வடிவமாக இருக்கலாம்.

இத்தகைய பாடல்கள் இன்றைய நிலையில் முற்றிலும் வழக்கொழிந்து விட்டன. இதற்கான காரணங்கள் ஆராயத்தக்கவை. மரபு வழிப்பட்ட நிலவுடைமை சார்ந்த குடும்ப அமைப்பில் மகளிர்க்கு உரிய பங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. இல்லத்தரசியர் என்ற பாத்திரத்தை வகிக்கின்ற மகளிரே குடும்ப கௌரவம் குலப்பெருமிதம் போன்றவற்றின் பாதுகாவலராகக் கருதப்பட்டனர். மேலும் குலம், கோத்திரம் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிற திருமணங்களில் மணமகனும் மணமகளும் முதல் முறையாகச் சந்தித்து விரைவில் அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்படவேண்டுமெனில் அவர்களுக்கு இடையில் உள்ள மனத் தடைகள் நீங்கினால் தான் அது சாத்தியம். அத்தகைய மனத் தடைகள் நீங்கி இயல்பாகவும் தயக்கமின்றியும் அவர்கள் அந்நியோந்நிய உணர்வை அடைவதற்கு இத்தகைய குழுப்பாடல்கள் உதவிகரமாக இருந்தன. மேலும் சடங்குகளின்  தீவிரத் தன்மைக்கு இடையே இளைப்பாறுதல் போலவும் இத்தகைய ஆடல் பாடல்கள் அமைகின்றன. வேத யக்ஞச் சடங்குகளுக்கு இடையில் கூட புராணப் பிரவசனம் போல வேதக் கதைகள் கூறப்படுவது வழக்கம் என்பதற்கு மகாபாரதத்தில் ஆதாரம் உள்ளது. அது போன்றும் திரைப்படங்களின் கதை ஓட்டத்தின் ஊடே நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்று ஆசுவாசம் ஏற்படுத்துவதைப் போலவும் இத்தகைய பாடல்கள் அமைந்திருந்தன என்றும் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்டவாறு, குடும்ப அமைப்பில் ஏற்பட்டு வருகிற அடிப்படை மாற்றங்கள், சாதி கடந்த திருமணங்கள், மகளிரும் பொது வாழ்வில் முதன்மையான இடம் பெறுகிற நிகழ்வுகள் ஆகிய ஜனநாயக இயக்கப்போக்குகளின் பரவலே, இத்தகைய பாடல் மரபுகள் வழக்கொழிந்து போனமைக்கு முதன்மையான காரணமாகும். உள்ளாட்சி நிர்வாகம், அரசியல் கட்சிப் பதவிகள், ஆட்சிப் பதவிகள் போன்றவற்றில் மகளிர் பெருமளவில் இடம் பெறத்தொடங்கி விட்டதால் இல்லத்தரசியர் என்ற பாத்திரம் மட்டுமே மகளிருக்குரியது என்ற நிலை மாறிவிட்டது.

கூட்டுக்குடும்ப அமைப்பின் சிதைவு, வியாபார மயமாதல், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலமான ஐரோப்பிய – அமெரிக்க நாகரிகத்தின் பரவல் போன்றவையும் இம்மாற்றத்திற்கான பிற காரணங்களாகும். சடங்குகளில் கூட மேலைப் பண்பாட்டு வடிவங்களைப் பின்பற்றுகிற மனநிலை பரவலாக உருவாகிவிட்டமையால், இத்தகைய மரபு வழிப்பட்ட பாடல்களைப் புனைவதற்கான உளவியலும் இன்று இல்லாமலே போய்விட்டது.

அறிவியல் தொழில்நுட்ப-தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வழியிலான நுகர்வுக் கலைகளின் வளர்ச்சியால் தெருகூத்து போன்ற நாட்டுப்புறக் கலைவடிவங்கள் தேய்வடைந்தமையைப் போன்றே இத்தகைய திருமணப் பாடல் மரபும், மாறி வருகிற சமூகச் சூழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வழக்கொழிந்து விட்டது.   

One Reply to “திருமண ஏசல் பாடல்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.