தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள்

Dr. கடலூர் வாசு


கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்: என் மனைவியின் பெரியன்னை, 70 வயதானவர், எங்களுடன் சந்தோஷமாக சில வாரங்கள் தங்கியிருந்த சமயம். ஒரு நாள் காலை, அவரது மகன், தன் மனைவி வேலைக்குச் சென்ற பின், பிள்ளையை பள்ளியில் கொண்டுவிட்ட பின், வீட்டு உத்தரத்தில் கயிற்றைக் கட்டி கழுத்தில் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்ற அதிர்ச்சி மிக்க செய்தி வந்தது. பெரியன்னையிடம் அதை சொல்லாமல் உடனே ஊருக்கு அனுப்பி வைத்தோம். சில நாட்கள் கழித்து துக்கம் விசாரிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, “சந்தோஷமா இருந்த என்னை இந்த கண்றாவியை பார்க்கணும் என்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் அனுப்பி வைத்தாயா?” என்று கேட்டது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

என் வேலையில் தற்கொலை முயற்சி பலிக்காமல் நினைவு தப்பியவர்களை சிகிச்சை செய்து மனநோய் மருத்துவப் பகுதிக்கு மாற்றியவுடன் என் வேலை முடிந்து விடும். என் மனமும் அடுத்த நோயாளியின் பக்கம்திரும்பிவிடும். சமீபத்தில், ஒருதலைசிறந்த மருத்துவ சஞ்சிகையில் வெளிவந்தகட்டுரை என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்ததோடு, அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று எண்ணச் செய்தது.
அக்கட்டுரையின் தலைப்பும், கருது பொருளும் ஒன்றேதான் – தற்கொலை. ஒரு வருடத்தில் 800,000 நபர்களின் தற்கொலை முயற்சி பலித்து விடுகிறது.

அமெரிக்காவில் மனிதர் இறப்பிற்கு இது பத்தாவது காரணமாகவுள்ளது. அதே நேரம் இதுவே, 15 லிருந்து 24 வயதுள்ளவர்களிடையே உயிரிழப்புக்கு முதல் காரணமாக உள்ளது என்பது, பெற்றோர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தரும் விஷயம். எனது உறவினரின் செல்வந்த நண்பரது 20 வயது மகன், மும்பையில் 10வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டானென்று கேள்விப்பட்டபோது, செல்வத்திற்கும் சந்தோஷத்திற்கும் பத்து மாடிக்கும் மேல் தூரம் என்றே தோன்றியது.

அதே நேரம், 80 %க்கும் மேலான தற்கொலைகள் ஏழை-நடுத்தரநாடுகளில்தான் நடைபெறுகிறதென்ற உலக சுகாதார மையத்தின் (World Health Organization) அறிவிப்பிலிருந்து, ஏழ்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்ற எனது முந்தைய முடிவை என்ன செய்ய? அது தவறானதா என்ற கேள்வி எழுந்தது. தகவல்களைச் சிறிது கூர்ந்து நோக்குவோம்.

உலகளவில், வயதானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெண் வர்க்கத்தினர் ஆண்களை விட மனவலிமை படைத்தவர்கள் என்பது-அனுபவத்தில் நம்மில் அனேகருக்கும் தெரியும் என்றாலும்- தற்கொலை செய்வோரில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைப் போல இரு மடங்கு என்பதிலிருந்து தெளிவாகத் தெரிய வருகிறது. மற்ற எல்லா நாடுகளிலும் இதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறதென்பது மகிழ்ச்சிகரமாகவுள்ளதென்றாலும், மிகப் பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 1.5 % ஆக உயர்ந்து கொண்டே போவது மேற்கூறிய மாதிரி, தனத்திற்கும் மனத்திற்கும் ஏதாவது சம்பந்தமுள்ளதா என்றே நினைக்கத் தோன்றுகிறது தற்கொலைக்குப் பலியாகும் ஒவ்வொருவருக்கும் நிகராக, 20 நபர்கள் தற்கொலைமுயற்சியில் ஈடுபடுகின்றனர், மேலும் 200 நபர்கள் தற்கொலைசெய்து கொள்ளலாமா என்று சிந்திக்கின்றனர் என்னும் புள்ளி விவரம் வேதனை அளிப்பதாகவுள்ளது. தற்கொலை முயற்சியெடுத்தவர்களில் 1.6%த்தினர் ஒரு வருடத்திலும், 3.9த்தினர், 5 வருடங்களுக்குள்ளும், சாவைச் சந்தித்து விடுகின்றனர்.


அபாயக் குறிகள்:

இவை பலவகையானவை – மரபணுக்கள், மனம், குணம் ஆகிய அனைத்துமே ஒருவருடைய தற்கொலையில் பங்கேற்கின்றன. இவற்றின் பங்கு ஒரு நபரின் வயதை பொருத்தது. இவற்றின் விளைவுகள் ஒன்றுசேர்ந்து முடிவாக ஒருவரை தற்கொலை பாதையில் இழுத்து செல்கின்றன. இவற்றில் முக்கியமானவை மனோவியாதிகளாகும்: மன அழுத்தம், இருமுனை மனக் கோளாறு (பை போலார் டிஸார்டர்), மனச்சிதைவு(ஸ்கிட்சோஃஃப்ரீனியா), போதைப்பொருட்களின் துஷ்ப்ரயோகம், வலிப்பு நோய், மூளையில் பலத்த அடி இவை ஓவ்வொன்றும் தற்கொலைக்கான வாய்ப்பை மூன்றுமடங்காக அதிகரிக்கிறது.

மேலும் முந்தைய தற்கொலை முயற்சி, சிறுவயதில் பாலியல் அத்துமீறல் அனுபவம் , குடும்பத்தினரிடையே தற்கொலை முயற்சி, சிறுவயதிலேயே தற்கொலைக்கு ஒரு பெற்றோரை இழத்தல் போன்றவற்றிற்கும் இதில் பங்குண்டு. தற்கொலையினால் உயிரிழந்தவர்களின் கடந்த கால நிகழ்வுகளின் பின்னணி பற்றிய ஆய்வுகளில் மனோவியாதியும், போதைப்பொருட்களுக்கு அடிமையாயிருப்பதுமே தற்கொலைக்கு மிக முக்கிய காரணங்களாக இருப்பது தெரிய வருகிறது இந்தச் சரிவான பாதையில் பிரவேசிப்பதற்கும், நடப்பதற்கும் முடிவெடுப்பதற்குமான காரணிகள் பாதை முழுவதுமே பதிந்துள்ளன.

இப்பாதையிலிருந்து வெளிவருவது ஒருவரின் மனோதிடத்தைப் பொறுத்துள்ளது. தவறான இலக்கை நோக்ச்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தனிமை, தன்னம்பிக்கையிழப்பு, பிறருக்கு பாரம் போன்ற எண்ணங்களினால், உற்றார் உறவினர்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகுவது ஒரு முக்கியமான அறிகுறியாகும் இதனுடன் உடலிலிருந்து உயிரைப் பிரிக்கும் சாதனங்கள் உடனடியாக கிடைக்கும் வகையில் இருந்தால், தவறான முடிவோ என்று மறுமுறை ஆலோசிப்பதும் கூட அனாவசியமாக தோன்றும் வாய்ப்புண்டு விவாகரத்து, கணவன், மனைவி, அல்லது வயதுவந்த குழந்தைகள் போன்றவர்களின் இறப்பு, இம்முடிவை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

ஒரு தனிநபரின் குணவிசேஷங்களிருந்து தற்கொலை பாதிப்புக்குள்ளாகும் சாத்தியமுள்ளதா என்பதை அறிவதெப்படி? முன் சொன்னாற்போல், மற்றவர்களுக்கு பாரம் என்றோ, சமூகப் புறக்கணிப்பாலோ, மனக்கிளர்ச்சியடைபவர்கள், உயிரை துச்சமாக நினைப்பவர்கள், மிகுந்த வலியையும் பொருட்படுத்தாது தன்னையே முன்பு துன்புறுத்திக் கொண்டவர்கள், தான் நினைத்த அளவிற்கு எக்காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள் ஆகியோராம்.

குடும்பத்தினர் இவர்களது மனநலனை எவ்வாறு பாதிக்கிறார்கள்? தாயின் தற்கொலை எண்ணங்களும் நடத்தையும், தந்தையை விட அதிகமாக பாதிக்கிறது. பெற்றோர்களின்தற்கொலை முடிவு பெரியர்வர்களைவிடச் சிறி யர்வர்களையே மிகவும் பாதிக்கிறது மரபணுக்கள் 30லிருந்து 50% அளவிற்கு காரணமாகக் கூறப்பட்டாலும், அதற்கான மரபணுக்கள் என்று தற்சமயம் எதுவுமே அறியப்படவில்லை. சிறுவயதில் மிக்க துன்பத்திற்குள்ளானவர்கள் அதிர்ச்சிதரும் சம்பவங்களினால் அதிகமாகத் தாக்கப்படுவதால், தவறான முடிவுகளையெடுக்கிறார்கள் என ஒரு கணிப்புமுள்ளது.


சிகிச்சை முறைகள்:

தற்கொலைமுயற்சியில் இறங்க முனைபவர்களை விரைவில் கண்டறிய பல்வகை திட்டங்கள் உருவாகியிருந்தாலும், அவசரச் சிகிச்சை நிலையங்களிலோ, குடும்ப மருத்துவரினாலோ உபயோகிக்கும் தரத்தையெட்டவில்லை. பெரும்பான்மையானவை மன அழுத்தத்தை அளக்கும் கருவிகளேயன்றி தற்கொலை அளவுகோள்களல்ல.

நாட்டளவில், ஒரு மக்கள் தற்கொலைக்கு எவ்வழிகளையும் சாதனங்களையும்ம் பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறிந்து தடுப்புமுறைகளை அமலாக்குவதன் மூலம் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கலாம். உலகளவில் 40% கயிற்றையும் 20% பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மிக அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ததினால் ஸ்ரீலங்காவில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது.

உயரத்திலிருந்து குதித்தும், சிலமருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டும் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களும் அதிகமாயுள்ளனர். உயரமான கட்டமைப்புகளைச் சுற்றிப் பெரியதடுப்புகளை அமைப்பதின் மூலம் இவ்வழி பயன்படுவதைக் குறைக்கலாம். பாரசிட்டமால் போன்ற மாத்திரைகளின் விற்பனை எண்ணிக்கையைக் குறைப்பதும் ஒரு சிறந்த வழியாகும்.

2017ல், அமெரிக்காவில் 14542 நபர்கள் துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டனர்; 23,854 நபர்கள் தங்கள் சொந்தத் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டனர் போன்ற புள்ளிவிவரங்கள், மாநிலங்கள் துப்பாக்கிச் சொந்தக்காரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் துப்பாக்கி மூலத் தற்கொலைகளைக் குறைக்க முயற்சியெடுத்துள்ளன.

லிதியம் எனும் இருமுனை மனக் கோளாறு மருந்து, இக்கோளாறுடையவர்களின் தற்கொலையை 14% குறைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. அது போலவே, அபினிக்கு அடிமையானவர்களின் சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் மெத்தடோன், பியூப்ரோனார்ஃபின் போன்ற மருந்துகளும் இவர்களிடையே தற்கொலைத் தடுப்பு மருந்துகளாக உள்ளன.
தற்கொலையைப் பற்றிச் சிந்திப்பவர்களிடம் அதைப்பற்றி நேரிடையாக விவாதிப்பது அவர்களுடைய மன அழுத்தத்திற்கு மட்டும் சிகிசிச்சை அளிப்பதை விட ஒரு வருடத்திற்காவது பயனுள்ளதாக அமைந்துள்ளது.

முடிவாக, தற்கொலை தடுப்பென்பது மிக விரிவான விசாரணைகளையும் சோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் கொண்டது. இவை முறையே தற்கொலையை பற்றிய சிந்தனை, நடத்தை பற்றி நேரடி விசாரணை, மனநல, சமூகத் தேவைகளை ஆய்தல், சரியான வினாப்பட்டியல் மூலம் சுயமாகவே ஊறு விளைவித்துக் கொள்பவர்களையும் தற்கொலை செய்து கொள்பவர்களையும் கண்டறிதல், முறையான மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவது போன்றவையாகும். ***

ஆதாரம்: Suicide By Seena Fazel MD,and Bo Runezon MD,Ph.D. NEJM 382;3; January 16,2020.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.