கமலதேவி
சீதா
ஒரே ஒரு தூக்கமாத்திரை இருந்தால் பரவாயில்லை என்று சீதா முதல் முறையாக நினைத்த இரவை முடித்த காலை அது. கண்களில் தீயின் காந்தல். இந்த நாளைப் பற்றி இருந்த கனவுகளில் ஒன்றைக் கூட மிச்சமில்லாமல் அழித்தபடி பிறந்திருக்கிறது இந்த நாள். நாட்காட்டியை பார்த்தாள். ஏசு கொஞ்சம் தலையைச் சாய்த்தபடி புன்னகை சோகம் இரண்டிற்கும் மத்தியில் பார்த்தார். நேரத்தைக் கவனித்துக் குளியலறைக்குச் சென்றாள்.

பேருந்தின் நெரிசலில் இருந்து இறங்கிய சீதா காட்டன் புடவையை சரிசெய்து கொண்டாள். சாலையிலிருந்து பிரிந்த கிளைப்பாதையை அடையும் நேரத்தில் அலைபேசி அழைத்தது. அம்மாதான். என்ன சொல்வது? என்று அலைபேசி திரையை பார்த்துக்கொண்டு நின்றாள். அழைப்பு நின்று மறுஅழைப்பு வந்ததும் எடுத்தாள்.
“எங்க இருக்க சீதா?”
“ஆபீஸ்க்கு போற வழியில, ” என்றவள் சற்று நேர மௌனத்திற்குபின், “நான் வரலம்மா…எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்க. . ”
“லீவ் சொல்லிட்டதா சொன்ன, ”
“லீவ கேன்சல் பண்ணிக்கலாம்மா, ”என்று பேச்சை முடித்தாள்.
“சீக்கிரமா குளிக்கனும். . இல்லன்னா ஈரத்த காயவைக்கனும், ”என்று சிஸ்டர் விடுதி வாயிலில் சொன்னது நினைவில் வந்தது. முடியைத் தொட்டுப்பார்த்துக் கொண்டாள். ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுர வீதியில் தன்அலுவலகம் நோக்கி நடந்தாள். இந்த மாதிரி மனநிலை சூழும் நேரங்களில் கொஞ்சம்விட்டால் ஒருபொறியை கங்காக்கி காட்டுத்தீயாக்கிவிடும் மனசு என்று லகானை இழுத்துப்பிடித்தாள்.
சத்திரத்தில் பேருந்து ஏறுகையில் சாப்பிடப்பிடிக்கவில்லை. இப்போது லேசான கைநடுக்கம் பசியை நினைவுபடுத்தியது. இடதுபுற சந்திலிருந்த காவேரி மெஸ்ஸில் நுழைந்தாள். காலை உணவு முடிந்திருந்த வேளை.
கல்லாவில் கவனமாக இருந்த நாராயணன் புன்னகைத்தார். அவர் கண்கள் அவளின் முகம்கண்டு அவள் அமரும்வரை உடன்வந்தது.
“அண்ணா…ஒரு காப்பி…”என்றபடி சுவரோர பெஞ்சில் அமர்ந்தாள்.
ஊருக்கு செல்ல ஒருமாதிரி இருந்ததால் சனி ஞாயிறை விடுதியில் ஓட்டுவதற்குள் பெரும்பாடாக இருந்தது. அம்மா வேறு ஊருக்கு வரச்சொல்லி பிடுங்கிக்கொண்டிருந்தாள். பிள்ளையார் கோவிலில் அமர்ந்திருக்கும் ஊர்க்கார ஆட்களை கடந்து தெருவிற்குள் நுழைய வேண்டும் என்பதே முதலில் நினைவில் எழுந்தது.
அவளைவிட இளையபெண்களின் இரண்டுவரிசை பெண்ணழைப்பு முடிந்து விடைபெற்று மேளதாளத்துடன் தெருவை கடந்து போன இரவுகளில் புன்னகைத்து விடைகொடுத்திருக்கிறாள். இப்பொழுது அத்தனை தாராளமில்லை மனதிற்கு.
தெருவின் அத்தனை அம்மாக்களின் அத்தைகளின் முகங்கள் கண்முன்னால் வந்து போயின. சரவணனை நினைத்ததும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. ஊரில் யாரும் செய்யாத செயல் என்றாலும் அவன் செய்வதை தவறென்று சொல்ல முடியுமா?
சரவணன் தன் திருமணப்பேச்சில் தீவிரமாக இறங்கிய அன்று விஜயாம்மா, ஆயிரம் காரணகாரியம் இருக்கும். அவ அகங்காரியாவே இருக்கட்டுமே…அவ கல்யாணத்துக்கு நிக்கையில நீ எப்படி கல்யாணம் பண்ணுவ சரவணா? செய்யக்கூடாதுன்னா கூடாது என்றாள். சரவணன், உங்ககாலத்துக் கதையவே பேசாதீங்க. . எனக்கும் வயசாகலயா? என்றான்.
பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்தது. கடைசியாக அவன் என்னைய நம்பற பொண்ணும் வயசுதாண்டிதான் நிக்குது என்றான். “நீ இருக்கற தெம்புல கொஞ்சம் காத்திருக்க மாட்டாளா?”என்று விஜயாம்மாவிற்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்றான். அம்மா தூணில் சாய்ந்து ஓட்டுச் சாய்ப்பை பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயத்திற்கு நாள் குறித்ததும் சீதா ஊருக்குச் செல்வதை தவிர்த்துவந்தாள்.
பள்ளி செல்லும் காலத்திலிருந்து பேருந்திற்காக நிற்கும் ஊரின் ஆலமரத்தடியிலிருந்து எத்தனை அலட்சியமாக நடப்பாள். நான்காவதுவீட்டு கௌசிக் என்ன நினைப்பான். அனுசுயா என்ன சீதா இப்படி என்று கேட்டால்?
இரவுப்பேருந்தில் ஒன்பது மணிக்கு ஊருக்கு சென்றால் பாதையில் அமர்ந்திருக்கும் கூட்டம் நிதானமில்லாமல் தம்பிகல்யாண சோறு போடப் போறான் நீ எப்ப பாப்பா? என்று கேட்டால்?
தெருவில் எத்தனையோ இளைய பையன்களுக்கு திருமணமாகவில்லையா என்ன? என்ற கேள்விகளால் சீதாவின் மனம் கலங்கி கலங்கித் தெளிந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் மண்டபத்தில் இருப்பார்கள். மண்டபதிற்கு செல்வதை நினைத்தால் உடலெங்கும் ஆயிரம் தேன்பூச்சிகள் மொய்ப்பதை போல இருந்தது.
“வழக்கமா சாயரச்சதானே வருவேள். கால டிபன் எடுக்கலயா? ரெண்டு இட்லிக்கப்பறம் காப்பி சாப்பிடலாம்,” என்று நாராயணன் நகர்ந்தார்.
மீண்டும் அலைபேசி. இவன் எதற்கு இந்த நேரத்தில்? என்று நினைத்து எடுக்காமல் இருந்தாள். மூன்றாவது முறை எடுத்து, “ஹலோ…”என்றாள்.
“என்ன பிஸியாங்க. . மண்டப சத்தமே காதில விழலயே. . ”
மனசுக்குள் பகீரென்றது. சென்னையில் இவனுக்கு எப்படி அதற்குள் தெரிந்தது.
“என்ன?”
“தெரியுங்க? உங்க தம்பி சரவணனுக்கு இன்னிக்கு என்கேஜ்மெண்டாமே?” அவன்குரலில் கேலி இருக்கிறதா? என்று அவள் மனம் கவனித்தது.
“……”
“பேஸ்புக்ல பாத்தேன். . ”
“ஓ…”
“என்னை கன்சிடர் பண்ணலாம்…பழச மனசில வச்சிக்காதீங்க,”
“அம்மாக்கிட்ட பேசுங்க. . ”
“உங்க முடிவுதான்னு எனக்கு தெரியாதா. . ”
“நான் அம்மாட்ட சொல்றேனே…அவங்கள கான்டாக்ட் பண்ணுங்க. . ப்ளீஸ்,”
பேசிமுடித்து அவன் எண்ணை ப்ளாக் செய்துவிட்டு நிமிர்ந்தாள். ஜாதகம் பார்க்க சொல்லிய பின், வயசு கம்மியான பொண்ணா இருந்தா பரவாயில்லன்னு சொந்தபந்தத்துல சொல்றாங்க என்று இவன் வீட்டார் தரகரிடம் சொல்லியனுப்பிய அன்றுதான் சரவணன் அப்பாவிடம் அவன் திருமணபேச்சை தொடங்கினான்.
சாப்பிட்டு முடித்தவளின் எதிரில் காப்பியுடன் அமர்ந்த நாராயணன், “ஒருவாரமா முகம் பாக்கச் சகிக்கல. என்னத் துன்பம்ன்னாலும் ரங்கனார் இருக்கார். ரங்கனார் ஆட்சியில அரசூழியத்துக்கு வந்திருக்கேள். . அவன்ட்ட விடுங்கோ,” என்றார்.
சாமான்களை எடுத்துவைத்துக்கொண்டே மாமி,“சரியா சொன்னேள். விசனப்படாதேள். உண்டி சுருங்கினா உடம்பு வாடிப்போயிடும். இந்த வயசில வாண்டாம்,” என்றபடி உள்ளே நுழைந்த புதியவரை நோக்கிச் சென்றாள். மீண்டும் மனசிற்குள் ஒருகுமிழி உடைந்தது. அதைச் சிதறவிடாமல் புன்னகையில் ஒன்றிணைத்தாள்.
மெஸ்ஸிலிருந்து வெளியேறி பொழுது புதிதாக வேலைக்கு வந்திருந்த எழுத்தர் தலையாட்டியபடி கடந்து சென்றான். சட்டென்று திரும்பி நடந்து பேருந்தில் ஏறினாள்.
சரவணனுக்கு எதற்கு இப்படியொரு தர்மசங்கடம் என்று அவளுக்குத் தோன்றியது. ஒத்துவராத மாப்பிள்ளைகளை அவனே வேண்டாம் என்று சொல்லி பெரியவர்களிடம், “தம்பி நீயே தட்டிவிடாதடா,” என்று வாங்கிக்கட்டியிருக்கிறான். திருமணமையங்களில் ஜாதகங்களைத் தேடி அலைந்திருக்கிறான். சீதா வேலைக்கு சென்ற புதிதில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தான். இந்த ஒருஆண்டில்தான் மெதுமெதுவாக நிறம் மாறிப்போனான்.
சரவணன் வேலைக்கு செல்வதும், நிற்பதும் என நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்ததால் வீட்டிற்கு வரும் நாட்களில் சிடுசிடுவென ஆகியிருந்தான். மனம்விட்டுப் பேசிய அந்த சிரித்தமுகம் தீவிரமாக மாறியிருந்தது. அக்கறை என்ற பெயரில் பேசும் அக்கம்பக்கத்தார், உறவுகளின் சொற்கள் அவனைக் குத்திக்கொண்டேயிருந்தன. வலியால் சுழித்ததைப் போல முகம் மாறிப்போனான்.
சீதா துறையூரில் இறங்கிய பொழுது மணி பதினொன்றைக் கடந்திருந்தது. முதுகில் வெயில் எரிந்தது. மண்டபம் இருக்கும் பாதையில் நடக்கையில் திரும்பிவிடலாமா? யாருக்கும் தெரியப்போவதில்லை என்ற எண்ணம் வந்ததும் நின்றாள். பனிக்காலம் முடித்த புதுவெயில். கண்கள் எரிந்தன. கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு கைப்பையிலிருந்த தண்ணீரை எடுத்துக்குடித்தாள்.
நூறுஆட்கள் கொள்ளும் சிறுமண்டபம். மண்டபத்தினுள் வண்ண சருகுத்தாள்களின் சரசரப்பு ஒலி நிறைந்திருந்தது. வெயிலிலிருந்து உள்ளே நுழைந்ததால் காற்றிலாடிய அவற்றின் ஒளி கண்களை கூசச்செய்தது. புருவங்களில் ஒரு மின்னல்வெட்டு வலி. கண்களை இறுக மூடித்திறந்தாள்.
அவளை நோக்கி வேகமாக வந்த சித்தி, “இப்பதான் பொட்டுவச்சு முடிச்சோம்…நீயும் வந்து வச்சிடு. .” என்று அவசரஅவசரமாக சீதாவை எதிலிருந்தோ தப்பிக்க வைப்பவள் போல இழுத்துச்சென்றாள்.
நித்யா, “என்ன சித்தி நீங்க ஹாஸ்டல்லருந்து வரீங்க. ஊருக்கு வந்திருந்தா எங்களோட சேந்து ஜாலியா வந்திருக்கலாம்,” என்றாள். சித்தி நித்யாவை முறைத்து, “அப்பறம் பேசிக்கலாம்,” என்று சீதாவின் கையைப்பிடித்து நடந்தாள்.
சரவணன் மேடையில் இளம் பச்சை ஷெர்வானியில் புன்னகையுடன் நின்றிருந்தான். தங்கக்கலர் கீழ்ஆடையும் செருப்பும். இந்த மாதிரி உடையை எங்கு வாங்கியிருப்பான். இதெல்லாம் போடக்கூடியவனா? ஊரில் பாண்ட்சர்ட்டை டக் செய்தாலே கிண்டலடிப்பார்கள் என்பவனா! கண்களை விரித்துப்பார்த்தாள். அவள் சற்று பூசின உடல். சிவப்புபட்டில் இருந்தாள். முகம் பூரிப்பில் விரிந்திருந்தது. இருவருமே முப்பதை தொடப்போகிறவர்கள் என்ற எண்ணம் வந்ததும் சீதாவின் மனம் தாழ்ந்தது.
“இவதான் சீதா?” என்று ஊதாப்பட்டு அணிந்த அம்மாவிடம் சீதாவை சித்தி அறிமுகம் செய்தாள். அவள் நன்றாக சிரித்து,“வாம்மா,” என்று பக்கத்திலிருந்த அம்மாளிடம்,“சௌந்தர்யா நாத்தனார்,” என்றாள். அவள் உடனே சீதாவின் கழுத்தைப் பார்த்தாள்.
அதற்குள் சித்தி அவசரமாக சீதாவை இழுத்துக்கொண்டு முன்னால் நகர்ந்தாள். நீண்ட முகமும் குண்டுக்கண்களும் கொண்ட அம்மாள் இடையில் குறுக்கிட்டு சித்தியிடம் பேசினாள்.
சித்தி, “சரவணனோட அக்கா…சீதா,” என்றாள்.
அந்த அம்மாளின் கண்கள் தன்வயிற்றைப் பார்ப்பதை உணர்ந்ததும் சீதா அனிச்சையாக முந்தானையை முன்னால் பிடித்துக்கொண்டாள். பெண்பார்க்க வருகிற மாப்பிள்ளைகள் எவ்வளவோ பரவாயில்லை என்று மனசுக்குள் ஓடியது. முப்பதிற்கு பின் சின்னதொப்பை விழுந்திருக்கிறது. சேலையில் எங்கோ ஓடி மறைந்து கொள்ளும். அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் இவர்களுக்கு.
முதல்வரிசையில் அப்பா அமர்ந்திருந்தார். நடப்பதெல்லாம் அவன் ஆடல் என்று அவர் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் என்று தோன்றியதும் முகத்தை சுருக்கினாள்.
மெதுவாக சித்தி,“ஏண்டி. . . ஆபீஸ் போறாப்பல தான் வீட்டு விஷேசத்துக்கு வரதா. பட்டு கட்டியிருக்கலாமில்ல. யாருக்காச்சும் பொண்ணு கேக்க தோணுமில்ல.” என்றாள். மேடைக்கு கீழே செருப்பை உதறிவிட்டு நின்றாள்.
அம்மா மேடையின் இடதுஓரத்தில் நின்றிருந்தாள். ஒல்லியாக மாநிறத்தில் அரக்குப் பட்டில் அழகாக. சீதாவைப் பார்த்ததும் இறங்கிவந்தாள். சித்தி நகர்ந்ததும் அம்மா, “வந்தது நல்லது. . நாளைக்கு ஒரு சொல்லு வரக்கூடாது சீதா,”என்றாள்.
அம்மா சரவணனை யாரோ போல் பேசுவது மனதிற்கு சங்கடமாக இருந்தது. சரவணன் முகத்தை என்னவோ செய்திருக்கிறான். வழவழ முகத்தை குங்குமமும் சிரிப்பும் எடுத்துக்காட்டியது. அவளிடம் சிரித்துப் பேசிக்கொண்டே திரும்பும் போது சீதாவைப் பார்த்தான். உதட்டை மடித்து புன்னகைத்து, “வா…சீதாக்கா. ”என்று அழைத்தான். சீதா மேடையிலேறி அவளுக்கும் அவனுக்கும் சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு நின்றாள்.
“என்ன அண்ணி தலையில பூக்கூட இல்லாம வந்திருக்கீங்க?உங்களுக்கு நல்ல லாங் ஹேர். . அழகாயிருக்கு,” என்ற சௌந்தர்யா அவள் பக்கத்திலிருந்தவளிடம் பூ எடுத்து வர சொன்னாள். சரவணன் பூவை வாங்கி சீதாவிடம் கொடுத்தான். நீர் தெளித்து வைத்திருந்த மல்லிகை தலைக்கு கனமாக இருந்தது. அப்பா அவளையே பார்த்துக்கொண்டிப்பதை உணர்ந்த சீதா கீழிறங்கி சென்றாள்.
“சீதம்மா. . காலையில சாப்பிட்டியா..”என்றார். அவள் தலையாட்டியபடி பின்னலை முன்னால் போட்டுக்கொண்டு வேறுதிசையில் பார்த்தாள்.
“சீதம்மா. . நல்லா படிக்கனும். பெண்பிள்ளை வேலைக்கு போனும்மா. . அதுதான் முக்கியம். பின்னாடி மத்ததெல்லாம் தானா அமையும்,” என்று சொல்லிக்கொண்டே விடுமுறைநாட்களில் வலியே தெரியாமல் முடிக்கு சிக்கல் எடுப்பார். அப்பா இப்போது எதாவது சொல்வார் என்று அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் சிவனே என்று அமர்ந்திருந்தார்.
வெகுளியான அப்பாக்கள் பிள்ளைகளைக் கைவிட்டுவிடுகிறார்களா? அல்லது அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளுக்கு நடைமுறை வாழ்வில் சமர்த்து போதாதா? என்று சீதாவின் மனதில் தோன்றிய கணம் கௌரி நினைவில் வந்தாள்.
அதென்னடீ திடீர்ன்னு சிடுமூஞ்சி, குடிகாரா, முரடு அப்பாவா இருந்தவா நல்லவளா போயிடறா. சாதுவெல்லாம் பிறர் பழிக்கறாப்பல ஆயிடுது என்று சீதாவிடம் அலைபேசியில் பேசும்போதெல்லாம் கேட்டுக்கொண்டேயிருப்பாள். சீதா தெரியல கௌரி. . ஆனா வெகுளியான அப்பா பிள்ளைகள் நம்மளாட்டம் பட்டுத்தெளியறாங்க என்பாள். ஆமா. . புராணத்துல வரத்தை அள்ளிக்கொடுத்துட்டு மூர்த்திகளே பட்டுத்தெளியறதுகள் என்று கெளரி சிரிப்பாள். அவள் சிரிக்கும் பொழுது சிங்கப்பல்லும் மூக்குத்தியும் ஒளிரும் அவள் முகம் மனதில் வரும்.
வீட்டில் ஒரே அறையில் இருந்தும் சரவணன் காதலித்ததைக் கூட அறியாத மூடப்பெண்ணாக இருந்ததை நினைத்து சீதா குனிந்து அமர்ந்தாள். மாமாவின் கால்கள் கண்களில் பட்டன. நிமிர்ந்தாள். மாமா அவளை உற்றுபார்த்தபடி அப்பாவின் அருகில் அமர்ந்தார்.
சீதாவிற்கு நல்ல வசதிவாய்ப்புள்ள வரன் வந்த அன்று மாமா வீட்டிற்கு வந்து அம்மாவை சத்தம் போட்டார். மாமா,“கல்லாவில பணம் எண்றவங்க வேணாம்ன்னா நமக்கு மாப்பிள்ளை அமையுமா? நம்ம ஆளுக சிறுசிலருந்து எல்லாம் கடையில வளந்ததுக,” என்றார்.
சீதா குறுக்கே புகுந்து, “அவங்க கீழ எல்லாம் என்னால இருக்க முடியாது. . ” என்றாள்.
அவளை எதிர்பார்த்திருந்தவர் குரலை உயர்த்தி, “பின்ன எப்பிடி வேணும்?”என்றார்.
“எனக்குத்தோணனும்,”
“நம்ம சாமியே மலையாண்டி காட்டானாக்கும்,”
“ஆமா. . . ஆனா அவன் சித்தனாக்கும். அத்தை எவ்வளவு படிச்சவங்க. நீங்க அவங்களப் பேச்சில குத்தி எடுக்கறது எதனால?”என்றாள்.
“அவளப்பத்தி நீ பேசாத. . அவ குணவதி,”
“அப்போ நீங்க?”
“படிச்சவன்ல்லாம் குணம் மனம்ன்னு சொல்ல முடியுமா?” என்று மாமா அம்மாவிடம் கேட்டார்.
“நான் சொல்றது புரியலயா மாமா…எங்க தாத்தா மாதிரி. .”
“அது சரி. . வேதாந்தம் பேசறதெல்லாம் கடைசியில உங்கதாத்தா ஓடிப்போனாப்ல தான். உனக்கும் விதியிருக்கோ என்னவோ?”
மாமா நாற்காலியை நகர்த்தும் ஒலியால் சீதா மனதிலிருந்து வெளியே வந்தாள். மணப்பெண் அறைக்குள் சென்றதும் சரவணன் வந்து அப்பாவின் அருகில் வந்தான்.
மாமா,“சரவணா. . வரும்படி போதுமா?இனிமே ரெண்டாளு. .”என்றார்.
“வேறவேலை பாக்கற வரைக்கும் தள்ளிநகத்தனும் மாமா,”
“அதனால என்ன கண்ணு. . நல்ல வேல அமையும். கல்யாணமெல்லாம் பண்ற வயசில பண்ணனும். பொண்ணு பரவாயில்ல,”என்று சிரித்தார்.
சரவணன் சிரித்துக்கொண்டே சீதாவைப் பார்த்தான். சீதாவை அம்மாவிடம் சொல்லிக்கொடுத்து பின்னால் நின்று சிரிக்கும் சரவணன் கண்கள் அவை. ஆனால் புருவச் சுருக்கம் மட்டும் புதிது.
மாமா, “எத்தன வருசம் காக்கறது. இன்னொரு பிள்ளை வீட்டுக்கு வந்துட்டா, இவ அகங்காரத்துக்கு வீடு வீடா இருக்காது மச்சான். அமையற எடத்துக்கு தள்ளுங்க,” என்று மெதுவாக அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்பா பதில் சொல்லத் தெரியாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார். உணவு முடித்து வந்தவர்கள் அப்பாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். சீதா நேரம் பார்த்துக் கிளம்பினாள். காலையில் ஈரமாக முடிந்த தலையின் கனத்தோடு பூவும் கனத்தது. பூவை எடுத்து ஆளில்லாத வரவேற்பு மேசையில் வைத்துவிட்டு நடந்தாள்.
பிற்பகலில் திருச்சி செல்லும் பேருந்தில் பத்துஆட்களுக்குள்தான் இருந்தார்கள். இந்தக்கூட்டமின்மை ஒரு ஆசுவாசம். அரசுப்பேருந்து நிதானமாக சென்றது. தளர்ந்து அமர்ந்தாள். வலதுபுறம் கொல்லிமலை உடன்வந்தது. பாட்டி எத்தனை நாட்கள் மலையைக்காட்டி பழமை பேசுவாள். எல்லாவற்றிலும் தாத்தா எப்படியோ வந்து விடுவார்.
‘மலஉச்சியில நிக்கும்
அறப்பள்ளீஸ்வரரே. . வாரீரோ. .
உம்ம மறிச்ச சத்தியெல்லாம்
விலகியோடும் காலமெப்போ. .
நீர் வரும் வழிப்பாத்து ஒத்தக்காலில்
நிக்கும் இந்தப்பாவி தடம் பதிஞ்சு
பாறையும் நெக்குதய்யா. . ”
பாட்டி திண்ணை சுவரில் சாய்ந்து கொண்டு காணாமல் போன பாட்டாவை நினைத்து அடிக்கடி பாடுவாள்.
உள்ளே சரவணன், “கேட்டியா பாடற பாட்டை. பாட்டா ஓடாம இருந்திருந்தா காட்டுமிராண்டி பேச்சுக்கேட்டு காது புளிச்சதய்யான்னு பாட்டு மாறியிருக்கும்,” என்பான். சீதா அவளையறியாமல் புன்னகைத்தாள்.
***