என்ன பொருத்தம்!

This entry is part 11 of 17 in the series 20xx கதைகள்

2019-2

அமர்நாத்

திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது நடக்காத காரியம் என்பதால் அம்மாவுக்குப் புதுக்கணக்குகள். ஸ்வேதாவின் முப்பதாவது பிறந்ததினம் வந்து போனதும் அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமானது.  

அவள் தம்பி அஷ்வினுக்கும் மனைவி டயானாவுக்கும் எவ்வளவு ஒற்றுமை! எட்டு ஆண்டுகளும் இரண்டு குழந்தைகளும் அவர்கள் திருமணத்தை அசைக்கவில்லை. அம்மா கொடுக்கும் காரணம் இருவருக்கும் ஒரே பிறந்ததேதி. நிஜமான காரணம் ஸ்வேதாவுக்குத் தெரியும். கார்ப்பொரேட் உலகில் அநியாய வருமானம். அதை உயர்மட்ட உணவுவிடுதிகளிலும், உலகத்தை அளக்கும் பயணங்களிலும், தேவையற்ற மின்பொருட்களிலும் பறக்கவிடுவதில் இருவருக்கும் மனப்பொருத்தம். 

“கத்தோலிக்க பீட்டர் இரண்டு வருஷம் உன்னோடு பழகிட்டு இன்னொரு கத்தோலிக்கப் பெண்ணை, அதுவும் அவனைப்போல இத்தாலிய பரம்பரையில வந்த ஒருத்தியைப் பிடிச்சிண்டு போயிட்டான். மார்மன் ஸ்டீவ் ஆறுமாசம் கூட தாக்குப்பிடிக்கல. பத்துக் குழந்தைகள் பெற்றுத்தள்ள இன்னொரு மார்மன் பெண், உன்னைவிட பத்துவயசு குறைச்சலா. நீ மட்டும் நம்ம பாரம்பரியத்தை ஏன் விட்டுக்கொடுக்கணும்? உனக்கும் ஒரு ப்ரஹசரண மாப்பிள்ளை…” 

“அப்படியொருவன் கேட்டதும் கிடைக்கப்போகிறானா?” என்று ஸ்வேதாவுக்கு அலட்சியம். 

அம்மாவின் விருப்பம் தாத்தாவின் எண்பதாவது பிறந்ததினத்தைக் கொண்டாட அவள் மட்டும் திருச்சிக்குப் போனபோது நிறைவேறியது.   

கிறிஸ்மஸ் விடுமுறை. அதை அனுபவிக்கவும் அப்பாவுக்குத் துணையாகவும் ஸ்வேதா பிறந்துவளர்ந்த இல்லத்திற்குப் போனாள். சென்னையில் இருந்து கிளம்புமுன்பே அம்மா, “ஸ்வேதாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்” என்று கோடிகாட்டினாள். சான் ஹொஸே விமான நிலையத்தில் இருந்து வீடு வருவதற்குள் எல்லா விவரமும் கொட்டினாள். 

“இத்தனை வருஷம் (சொந்த ஊர்) லால்குடிக்கு எத்தனையோ தடவை போயிருக்கேன். பக்கத்தில இருக்கும் தின்னியம் கோவிலைப் பார்த்ததில்ல. இந்த தடவை முருகர் தரிசனம் பண்ண பாபுவோட போனேன். நாங்க கார்லேர்ந்து இறங்கினப்ப டொயோடா இன்னோவால வந்த ஒரு குடும்பம். வயசான அப்பா அம்மா, அடுத்த தலைமுறையில ஒரு கணவன் மனைவி, அவங்க குழந்தை. அது ரெண்டு கையை நீட்டினதும் தாத்தா அன்பா அதைத் தூக்கிண்டார். அப்பறம், ஆறடிக்கு மேல ஒருவன். அவரோட இரண்டாவது பையனா இருக்கும்னு நினைச்சேன். ஒண்ணா கோவிலை சுத்திவந்தோம். அபிஷேகத்துக்கு பிரமாதமா ஏற்பாடு பண்ணியிருந்தா. பேசறதிலியும் எல்லாத்தையும் ஆச்சரியமா பார்க்கறதிலியும் அந்தப்பையன் வெளிநாட்டிலேர்ந்து வந்தவன்னு தோணித்து. விநாயகர் பிரகாரத்தில பெரியவர்கிட்ட நைசா பேச்சுக்கொடுத்தேன். நான் எதிர்பார்த்தமாதிரி அவாளுக்கு அந்த ஊர் பூர்விகம். பையனைப்பத்தியும் விசாரிச்சேன். யூ.எஸ்.லேர்ந்து வந்திருக்கான், இன்னும் கல்யாணம் ஆகல, வயசு முப்பத்திரெண்டுன்னு விவரம் கொடுத்தார். ‘என் பெண்ணும் அங்கேதான் இருக்கா, அவனைவிட இரண்டு வயசு குறைச்சல். அவன் நம்பர் தரமுடியுமா?’ன்னு கேட்டேன். ‘நான் அவனோட சித்தப்பா. அதனால முதல்ல எனக்கொரு ஈ-மெய்ல் அடிங்கோ!’ன்னு பிசினெஸ் அட்டை கொடுத்தார். திருச்சிக்குத் திரும்பிப்போனதும் அவருக்கு நம்ம கோத்திரம், ஸ்வேதாவோட நட்சத்திரம் படிப்பு வேலை எல்லாத்தையும் எழுதினேன். அண்ணா மன்னியோட பேசி அவா சரின்னு சொன்னதும் அவர் எனக்கு பதில் போட்டார்.” 

“அதில…” 

“பையனோட ஃபேஸ்புக் அக்கௌன்ட். அதிலேர்ந்து தான் சம்பந்தம் ஆரம்பிக்கணும்.” 

“நான் ஃபேஸ்புக்கில் இல்லியே.” 

“இப்பத்தான் ஆரம்பியேன்!”  

“எவனோ ஒருவனுக்காக நான் செய்யமுடியாது.” 

“நீ இப்படி விட்டேத்தியா இருந்தா எப்படி?”  

“அதில வேற விவரம் என்ன இருந்தது?” என்று அப்பா சமாதானம் செய்ய வந்தார். 

“அவனோட அப்பா ரங்கநாதன் வுட்மான்ட் காலேஜ்ல ப்ரொஃபஸர்.”   

“அவரைக் கண்டுபிடிச்சுடலாம்.” 

வீட்டிற்கு வந்ததும் அவரைக் கண்டுபிடித்து அவருடன் தொடர்புகொண்டு அப்பா கதையை வளர்த்தினார். பையன் பெயர் ராகுல். ஒரு சிறு நிறுவனத்தில் பொறுப்பான பதவி. இந்நாட்டிலேயே பிறந்துவளர்ந்த பெண்ணை சந்திப்பதில் அவனுக்கு விருப்பம். 

“ஸ்வேதா சசிசேகரன், எஸ்.எஸ். அதுமாதிரி ராகுல் ரங்கநாதன், ஆர்.ஆர்,” இருவருக்கும் அம்மா பொருத்தம் கண்டுபிடித்தாள். 

ராகுல் ஸ்வேதா இருவரின் அலைபேசி எண்களின் பரிமாற்றத்துக்குப்பின் அப்பா விலகிக்கொண்டார். 

விடுமுறை முடிந்து ஸ்வேதா தன் வசிப்பிடம் திரும்பிப்போக வேண்டும். அப்போது வந்தது அந்த அழைப்பு. 

“ஹாய்! நான் ராகுல் ரங்கநாதன்.”  

“ஹாய் ராகுல்! நான் ஸ்வேதா.” 

“ஸ்வேதா! நம் பெற்றோர்கள் நம்மை சந்திக்க வைப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் ஆசையைக் கெடுக்காமல் ஒருமுறை சந்திப்போமா?”  

“ஷுர். அதனால் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.”  

“நீ சான்டியாகோவில் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த வார நடுவில் நான் வேலைவிஷயமாக அங்கே வருவதாக இருக்கிறேன்.”  

“சனிக்கிழமை மாலை…”

“மாயாபஸார், ஆறுமணி…”   

“பர்ஃபெக்ட்.”  

சந்திக்கப்போகிறார்கள் என்று தெரிந்ததும் அம்மாவுக்கு நம்பிக்கை வளர்ந்தது. 

“முருகன் கோவிலில் பிள்ளையார் சந்நிதியில் கல்யாணபேச்சு ஆரம்பிச்சுது. புதுவருஷத்தில நல்லபடியா முடியட்டும்!”  

மாயாபஸார் இன்டியன் குஸீன். பாரம்பரிய இந்திய உணவகம். 

பலமுறை அதன் வாசல்வழியாக ஸ்வேதா நடந்திருக்கிறாள். வீட்டிற்கு வெளியே இந்திய சாப்பாடு மற்றவர்கள் கட்டாயப்படுத்தினால் மட்டுமே சாப்பிடுவது வழக்கம். பளபளக்கும் உலோகப்பிடியை முதல்முறையாக இழுத்து மங்கிய வெளிச்சத்தில் நுழைந்ததுமே, வரவேற்புமங்கை கூடுதலான புன்னகையுடன், “உன் ‘டேட்’ உனக்காகக் காத்திருக்கிறான்” என்று அவளை அழைத்துப்போனாள். நிறைய இடைவெளிகளுடன் மேஜைகளின் நீளமான வரிசை. கோடியில் தனிமைகாத்த ஒன்றின் எதிர்ப்புறத்தில் இருந்து அவன் எழுந்து கைநீட்டினான். நல்ல உயரம். அவள் அளவுக்குக் கறுப்பு இல்லை. களையான முகம். குறுந்தாடியும் குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிரும். நீல ஜாக்கெட்டின் இடதுபுறத்தில், ஒரு வட்டத்திற்குள் அடங்கிய கரண்டியும் பிடிவைத்த பாத்திரமும் மஞ்சள் எம்ராய்டரியில். சமையல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சின்னம். 

கார்பொரேட் அடையாளத்தில் தன் அடையாளத்தை இழந்தவனோ?  

“ஹாய்! ஐ’ம் ராகுல்.”  

ஸ்வேதா அவன் கையைப்பற்றி, 

“ஹாய்! ராகுல்! என் பெயர் ஞாபகம் இருக்கிறதா?” 

“ஸ்வப்னா இல்லை இல்லை, ஸ்வாதி, அதுவும் இல்லை. ம்ம்…” முகம் பிரகாசிக்க, “ஞாபகம் வந்துவிட்டது, ஸ்வேதா” என்றான். 

பரவாயில்லை, வேடிக்கையாகப் பேசத்தெரிந்தவன்.  

“கரெக்ட்.” 

“என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்” என்று சொல்லிவிட்டு மற்றவள் அகன்றாள். 

ஸ்வேதா கையில் எடுத்துவந்த ஜாக்கெட்டை நாற்காலியின் முதுக்குப் போர்த்தினாள். மேஜையில் கால்கள் தொட்டுக்கொள்ளும் நெருக்கத்தில் அமர்ந்தார்கள். 

“ஸ்வேதா! என் பெயரில் எத்தனையோ பேர். அதனால், நீ என்னைப்பற்றி எதுவும் கண்டுபிடித்திருக்க முடியாது. ஆனால், உன்னைப்பற்றி எனக்கு நிறையத் தெரியும்” என்றான் குறும்புப்புன்னகையில். “இப்போது நீ அணிந்திருக்கும் ஆடையில் உன் படத்தைக்கூட நான் பார்த்தேன்.”  

“அது எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்தது. விலையுயர்ந்த ஆடை இப்பவும் எனக்குப் பொருந்துகிறது.” 

“இப்போது இன்னும் அழகாக இருக்கிறாய்.”  

“தாங்க்ஸ். நான் நன்றாகவே வயது கூடியிருக்கிறேன்.”  

“ஹார்வேர்டில் எம்.எஸ்.டி.பி. கிடைப்பது சுலபம் இல்லையே.”  

“ஒன்றரை வருஷ மும்முரமான உழைப்பின் பரிசு.”  

“ஏன் அதைத் தொடரவில்லை?”  

“ஒரு குறிக்கோளை நோக்கி அடையும்வரை ஒரு உந்துதல், ஆர்வம். அதை அடைந்ததும் இதற்காகவா இவ்வளவு மெனக்கெட்டோம் என்ற அதிருப்தி, ஏமாற்றம்.”  

“பிறகு, பொதுமக்கள் நலத்தில் எம்.எஸ்.”  

“கரெக்ட்.”  

“இப்போது மாநில அலுவலகத்தில் வேலை.” 

“அதுவும் சரி.” 

“எங்கே?” 

“ஹில்க்ரெஸ்ட் ஹெல்த் ஹவுஸ். உடல்நலத்தைப் பேணும் உணவு வகைகளை மக்களிடையே பரப்புவது என் பொறுப்பு.” 

“அது தவிர, ஸ்மால் ப்ளானெட் யோகாவில் ஆசிரியை.” 

“அஷ்டாங்க யோகாவில் கற்றுக்கொண்டதைப் பயிற்சிசெய்ய ஒரு வழி. என்னைப்பற்றிய ரகசியம் இன்னும் ஏதாவது…”  

“நீதான் சொல்ல வேண்டும்.” 

“வேலையிலும் சொந்தமாகவும் சேகரித்த விஷயங்களை வைத்து நான் எழுதிய ‘லோ-இம்பாக்ட் குக்கிங்’ என்ற தொகுப்பு.” அவள் சொன்னது அவன் கவனத்தில் பதிவதற்குள்,  

“முன்பசிக்கு” என்று இரண்டு தட்டுகளுடன் பணிமகள். ஒவ்வொன்றிலும் இரண்டு சமோஸாக்கள். ஸ்வேதாவுக்குமுன் வைக்கப்பட்ட தட்டில் ஒரு கையகல சப்பாத்தி ஆவிபறந்தது. 

“நீ முதலில் இரண்டையும் சுவை பார்த்துச் சொல்லவேண்டும்.” 

ஏன் என்ற கேள்வியுடன் ஸ்வேதா அவற்றை உற்றுப்பார்த்தாள். உயர்மட்ட உணவகம் என்பதால் புதிய காய்களும், சுத்தமான எண்ணெயும் பயன்படுத்தியிருக்கலாம். மற்றபடி வித்தியாசம் தெரியவில்லை.  

சப்பாத்தியின் ஒரு துண்டை விண்டு மெதுவாகக்கடித்து மென்றாள்.  

“எப்படி?” 

அடுப்பில் இருந்து தட்டில்வைத்து எடுத்துவந்தது என்பதைத்தவிர வாசனையிலும் மாவின் தன்மையிலும் குறிப்பிட்டுச்சொல்ல ஒன்றும் இல்லை. ஏமாற்றம் தராமல் இருக்க, 

“தொட்டுக்கொள்ள இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” 

“சன்னா வரப்போகிறது. சமோஸா?” 

வெளிப்பகுதி நன்றாகப் பொரிந்திருந்தது. உருளைக்கிழங்கும் வெங்காயமும் கலந்த கலவையில் காரத்துக்குமேல் எந்த சுவையும் தெரியவில்லை. 

“வீட்டில் செய்தால் இவ்வளவு மொரமொரப்பாக இராது” என்றாள் பட்டும்படாமல். 

“தாங்க்ஸ். இதெல்லாம் என்னை அறிமுகம் செய்வதற்காக.” 

கேள்விக்குறியுடன் பார்த்தாள். 

“சமோஸா ஆறுவதற்குமுன் சாப்பிடுவோம்.” 

சட்னியில் தோய்த்து… 

“இந்த சப்பாத்தி கைபடாமல் மெஷினில் செய்தது. மாவு, தண்ணீர், எண்ணெய், உப்பு அந்தந்த பெட்டகத்தில் வைத்தால் போதும். அதுவாகவே மாவு பிசைந்து, வட்டமாக இட்டு, கல்லில் சுட்டு, ஒரு நிமிடத்துக்கு ஒன்று என்று ‘சப்பாத்திஷெஃப்’ வெளியே தள்ளும். அதைச் சாப்பிடவும் செய்யலாம்.” 

“அதை டிசைன் செய்தது ராகுல் ரங்கநாதன். இனி உன்னை என்னால் வலைத்தளத்தில் வலைபோட்டு பிடிக்க முடியும்” என்று புன்னகைத்தாள். 

பாராட்டை பெருமிதத்துடன் ஏற்றான். 

“சமோஸா கூடவா?” 

“உள்ளே வைத்த காய் ‘மசாலாமாடிக்’கில் செய்தது. பரிசோதனை மட்டத்தில் இருக்கும் அதை இரண்டுநாள் முன்னதாக இங்கே கொண்டுவந்து கொடுத்தேன். நன்றாக வேலைசெய்ததாகத் தெரிகிறது.” 

“லெட் மீ கெஸ். தோலியுரித்த வெங்காயம் உருளைக்கிழங்கு, காரத்தூள், மசாலாப்பொடி, எண்ணெய், தண்ணீர் – அந்தந்த டப்பிகளில் வைத்து காரத்தின் அளவை ஒன்றில் இருந்து ஐந்துக்குள் ஒரு எண்ணில் குறிப்பிட்டால் ‘மசாலாமாடிக்’ செய்துதரும்.” 

“நீ எங்கள் கம்பெனியில் சேர்ந்துகொள்ள வேண்டும்.” 

“யோசிக்கிறேன்.” 

“மசாலா மட்டுமல்ல, ரெசிபியைப் புகுத்தி தேவையான சாமான்களை நுழைத்தால் இந்திய உணவு எதையும் செய்யலாம்.” 

அலுவலகச் சதுரத்தைவிட்டு வெளியே போகாத சோம்பேறிகளுக்கு. 

ஆளுக்கொரு உணவுத்தட்டு. 

“நான் இங்கே எப்போது வந்தாலும் இதைச் சாப்பிடுவேன். விதவிதமான கறிகள். அந்தப் பழக்கத்தில்…” 

சாதத்தைச் சுற்றி அகன்ற கிண்ணங்கள். அவற்றில் கண்ணைக்கவரும் வெள்ளை மஞ்சள் சிவப்பு பச்சை வண்ணங்கள். ஒரு மூலையில் இரண்டாக மடித்த தோசை. 

உணவுத்தட்டை அவள்முன் வைத்த பணிப்பெண், 

“எங்களிடம் சப்பாத்தி செய்ய ஒரு புது மெஷின். எந்தப்பதத்தில் எவ்வளவு என்று சொன்னால் உடனே செய்து தரும்” என்று பெருமையாகச் சொன்னாள். 

“முழு கோதுமை மாவில், சற்று பழுப்பாக இரண்டு.” 

“நோ ப்ராப்ளம்.” 

ராகுலுக்கு கோதுமை மாவும் வெள்ளை மாவும் பாதிபாதிக்கலந்து இரண்டு மடங்கு எண்ணெயுடன். 

அவள் அகன்றதும், 

“நீ யார் என்று அவளுக்குத் தெரியவில்லையே.” 

“அதுவும் நல்லதுக்குத்தான். ‘சப்பாத்திஷெஃப்’ எப்படி போகிறது என்று நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.” 

தோசை தின்று முடிப்பதற்குமுன் சப்பாத்திகள் வந்தன. அவளுக்கு பழுப்பு, அவனுக்கு முறுகல் வெள்ளை. 

“நான் எம்ஐடியில் எம்.எஸ். ரோபாடிக்ஸ் பிரதான பாடம். டோர்டியாமேகர் போல சமையலுக்கு உதவும் சின்ன உபகரணங்கள் விற்ற ‘குச்சினா-க்ராஃப்ட்’டில் வேலை. படிப்பை வீணாக்காமல் ‘சப்பாத்திஷெஃப்’ அமைத்துக்கொடுத்தேன். இரண்டு ஆண்டுகளில் அதற்கு நல்ல விற்பனை.” 

ஸ்வேதா கவனமாகக் கேட்டாள். கம்பெனியின் மதிப்பு அவனால் பலமடங்கு அதிகரித்திருக்கும்.  

“எல்லாம் எப்படி?” என்று வரவேற்புமங்கை வந்து விசாரித்தாள். 

“பிரமாதம்.”  

“இங்கே அளவு சாப்பாடு இல்லை. பிடித்ததை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.”  

“இதுமாதிரி சப்பாத்தி நான் சாப்பிட்டதே இல்லை” என்று ராகுலைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னாள். “இதேபோல் இன்னும் இரண்டு. பட்டாணியில் அளவான காரமும் புளிப்பும் எனக்குப் பிடித்தமாதிரி” என்று காலியான கிண்ணத்தைக் காட்டினாள். 

“நீ விரும்பியது உடனே வரும்.”  

“நீ சாதத்தைத் தொடவில்லையே. வீணாகப்போகாமல் நான் எடுத்துக்கொள்ளட்டுமா?” என்று ராகுல் கேட்டது அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் கைபடாத பாகத்தைக் கரண்டியால் எடுத்து அவன் தட்டில் வைத்தாள்.  

“‘சப்பாத்திஷெஃப்’ விலையைத் தெரிந்துகொள்ளலாமா?”  

“ரகசியம் ஒன்றும் இல்லை. உணவு விடுதிகளுக்கு அதிக சக்தியும் பலவிதங்களில் தயாரிக்கும் திறனும். மூவாயிரம் டாலர். குடும்பங்களுக்கு ஆயிரத்தில் இருந்து ஆயிரத்திஐநூறு வரை…” 

அலட்டிக்கொள்ளாமல் அரைமணியில் இருபது சப்பாத்திகள் செய்வேன். அதற்குப்போய் சமையலறையில் பாதிஇடத்தை அடைத்துக்கொண்டு ஒரு இயந்திரம். அதுவும் ஆயிரம் டாலருக்குமேல். அதைப்போல மசாலாமாடிக்கை எடுத்துவைத்து அதைத் தாஜா செய்வதற்குள் நிமிஷமாக ஒரு வெஜிடப்ல் செய்துவிடலாம்.  

“மாயாபஸார் போன்ற விடுதிகளுக்கு இது நிச்சயம் பயன்படும். பணியாட்கள் தினம் அதை உபயோகத்தில் வைத்து அவ்வப்போது பொறுப்பாகச் சுத்தம்செய்வதால் இயந்திரம் நல்லநிலைமையில் இருக்கும். ஆனால், தனிப்பட்டவர்கள் கைகளில்…” வாக்கியம் அவநம்பிக்கையாக பாதியில் நின்றது.  

“மாலை இரவு என்று நினைத்த நேரத்தில் சப்பாத்தி கிடைக்கும். என் கசின் வீட்டில் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் பையன்களே செய்துகொள்கிறார்கள்.”  

“மாவு சர்க்கரை வெண்ணெய் யீஸ்ட் போட்டால் சுடச்சுட பரெட் செய்துதரும் என்று ப்ரெட்மேக்கர் விற்பனை செய்யப்படுகிறது. நான் அறிந்து பலருக்கு ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் அப்புறம் இருப்பதில்லை. பாத்திரத்தின் வாஷர் தேய்ந்து ஓட்டை, அதன் கலக்கி காணாமல்போய்விட்டது, கருகிய ப்ரெட் என்று எதாவது ஒரு காரணத்தால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே தூக்கியெறியப்படும் இயந்திரங்கள். அவற்றைத் தயாரிப்பதில் வீணான இயற்கை வளங்கள்.”     

சப்பாத்திஷெஃப் கெட்டுப்போவதற்கு அதில் எத்தனையோ பாகங்கள் – மாவு எண்ணெய் தண்ணீர் இவற்றை அளவாக வெளியிடும் கதவுகள், பிசையவும் இடவும் செயற்கைக்கரம், எல்லா விவரங்களையும் கட்டுப்படுத்தும் மைக்ரோப்ராஸசர். அவன் அக்கறையுடன் அமைத்துக்கொடுத்த இயந்திரங்கள், சமையல் உபகரண மயானத்தில், ப்ரெட்மேக்கர்களுடன் உறவுகொள்ளும் என்பதை அவள் வெளிப்படையாச் சொல்லவில்லை. ஆனாலும், அவன் முகத்தில் வருத்தம் தோன்றி மறைந்தது. 

“உணவு விடுதிகளுக்கு மட்டும் விற்று எங்கள் கம்பெனி லாபத்தில் இயங்காது. யூ.எஸ். கனடா யூகே நாடுகளில் இந்தியப்பரம்பரை குடும்பங்கள் பத்து மில்லியன். ‘சப்பாத்திஷெஃப்’ வாங்கும் சக்தி ஒரு மில்லியன் குடும்பத்துக்கு நிச்சயம். ஆண்டுக்கு ஆயிரம் விற்பது எங்கள் குறிக்கோள்.” 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாடலைப் புதுப்பித்தால் விற்பனையை அதிகரிக்கலாம்.   

“குட் லக்!”  

பேச்சை மாற்ற, 

“நீ ஏதோ புத்தகம் எழுதியதாக…”   

“நிச்சயம் அது பெஸ்ட் செல்லர் ஆகாது.”  

“அதனால் என்ன, எதைப்பற்றி?” 

“என் வேலையில் பல ஏழைக்குடும்பங்களைச் சந்திக்க வேண்டிவருகிறது. தெற்கே இருந்து வந்த அகதிகள், உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உயர்வருமானம் இழந்தவர்கள், கணவன் கைவிட்ட தாய்கள், போரில் அடிபட்டு இராணுவத்தில் இருந்து வெளியேறியவர்கள், இப்படி. சிக்கனமான ஆனால் ஆரோக்கியமான உணவு வகைகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்வது என் வழக்கம். சப்பாத்தியை எடுத்துக்கொண்டால், கோதுமை மாவு எண்ணெய் மொத்தமாக வாங்கி, பருவத்தில் கிடைக்கும் காய்களுடன் சமைத்து சாப்பிட்டால், ஒரு சப் சான்ட்விச், ஒரு சோடா வாங்கும் செலவில் ஒரு குடும்பமே திருப்தியாகச் சாப்பிடலாம். இதுமாதிரி இன்னும் பல சமையல் விவரங்கள்.”  

“தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் தட்டுகளும் உறைகளும் இல்லை.” 

சுற்றுப்புற உணர்வு அவனுக்கு இருக்கிறது.   

“அதனால் தான் ‘லோ-இம்பாக்ட் குக்கிங்’ என்று அதற்குப் பெயர் கொடுத்தேன்.”  

“கவர்ச்சியான பெயர்!”

மெலிதான இசை. ராகுல் அலைபேசியை எடுத்துப்பார்த்தான். 

“ஸ்வேதா! என் சகோதரி ரமாவின் பிரசவம் பற்றிய அழைப்பு. எக்ஸ்க்யூஸ் மீ!” என்று அவன் எழுந்து பின்வாசலை ஒட்டியிருந்த நடைவழிக்குப் போனான்.  

கடந்துபோன ஒருமணி அவள் மனதில் வேகமாக ஓடியது. அவளுக்கும் ராகுலுக்கும் அம்மா எத்தனையோ பொருத்தங்கள் கண்டுபிடித்தாலும் ஒரு முக்கியமான நோக்கில் வித்தியாசம். அவசியம் இல்லாத சமையல் இயந்திரங்களின் விற்பனை அவன் தொழில். சாப்பாட்டுச் செலவுகளையும், உணவுப்பொருட்கள் வீணாவதையும் குறைப்பது அவள் நீண்டகாலக் குறிக்கோள். தொழில் வருமானத்தை மட்டுமல்ல, ஒருவரின் மனநோக்கையும் நிர்ணயிக்கிறது. பீட்டருக்கும் அவளுக்கும் மனவேற்பாடு உண்டானதே பொதுமக்கள் நலத்தில் எம்.எஸ். பட்டம் வாங்கி வெவ்வேறு இடங்களில் வேலை தேடியபோது தான். பெரிய மருந்து நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மக்களில் இத்தனைபேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இன்னின்ன நோய்கள், அவற்றுக்கு என்னென்ன மருந்துகள் விற்கலாம் என்று கணக்குக்காட்டுவது அவன் வேலைத்திட்டம். அதற்கு எதிராக அரசாங்க அலுவலகத்தில் நுழைந்து மருந்துகளின் துணையில்லாமல் மக்களின் உடல்நலத்தை உயர்த்த அவள் முயற்சித்தது விரிசலுக்குக் காரணம். ஸ்டீவ் விஷயத்தில், அவள் புத்தகம் எழுதி அதனால் அதிகப்படி வருமானத்துக்கு வழிசெய்யாமல் அதை இலவசமாகப் பரப்புவது அவனுக்குப் பிடிக்கவில்லை. டாலரை எண்ணியெண்ணி செலவழிக்கும் சில்லறை மனிதர்களுடன் பழகும் அவளுக்கும், அஷ்வின் டயானா போல பணத்தை எப்படியெல்லாம் வாரியிறைக்கலாம் என்று யோசிக்கும் குடும்பங்களைக் குறிவைக்கும் ராகுலுக்கும் ஒத்துப்போகுமா? முடிவை அவனுக்கே விட்டுவிடலாம். அதற்கு உதவிசெய்ய அவளைப்பற்றிய இன்னும் சில விவரங்கள்… 

திரும்பிவந்து அமர்ந்த ராகுல்,  

“குட் நியூஸ்!” 

“இன்றைய ஸ்பெஷல்” என்று இரண்டு அகன்ற கிண்ணங்களை மேஜைமேல் வைத்து காலியான தட்டுக்களை பணிப்பெண் எடுத்துச்சென்றாள். 

“தாய் குழந்தை இருவரின் ஆரோக்கியத்துக்காக” என்பதை அவள் சொல்ல கிண்ணங்களைத் தட்டிக்கொண்டார்கள். 

“நமக்காகவும்” என்பதை அவன் சேர்த்தான். 

கிண்ணத்தில் மிதந்த ரசமலாய் துண்டுகளாக வெட்டப்பட்டு அவர்கள் நாக்குகளை இனிப்பாக்கின. 

“சான்டியாகோ பிடித்திருக்கிறதா?”  

“அதிகக்குளிர் இல்லை, வெயில்காலத்தில் சூடும் இல்லை. வாடகை தான் மிக அதிகம். என் குட்டி வீட்டிற்கு ஆயிரத்திநானூறு டாலர். கைக்கு வரும் சம்பளத்தில் பாதியைவிடக் கொஞ்சம் குறைச்சல். ஆனால், வேலைக்கு, சாமான்கள் வாங்க எல்லாம் நடக்கிற தூரம். கார் அவசியம் இல்லை, என் நிதிநிலைமைக்குக் கட்டிவராது. மாயாபஸாருக்குக் கூட ஒன்றரை மைல் நடந்துதான் வந்தேன்.” 

அவளுடைய ‘எல் ச்சீப்போ’ வாழ்க்கையையும், நடப்பதற்கு ஏற்ற காலணிகளையே அவள் அணிவதையும் அவனுக்குக் காட்டியாகிவிட்டது.  

“உன் உடல் நல்லநிலையில் இருக்க வேண்டும்.”   

“தாங்க்ஸ்.”  

“எனக்கும் நடக்க ஆசை. அலுவலகம், பயணம் என நேரம் தான் கிடைப்பதில்லை.”  

கிண்ணங்கள் காலியானபோது வரவேற்புமங்கை வந்து மேஜைமேல் பில்லை வைத்தாள். அதில் பெரிய பூஜ்யம். குறும்புப்புன்னகையில், 

“சாப்பாட்டிற்கு யார் பணம் கொடுப்பது என்று யோசிக்க வேண்டும். எங்கள் அன்பளிப்பு.” 

“தாங்க்ஸ், சாப்பாடு பிரமாதம். இது தான் என் முதல் வருகை. மற்றவர்களுக்கு மயாபஸாரை நான் பரிந்துரைப்பேன்” என்றாள் ஸ்வேதா. 

மற்றவள் ராகுலிடம், 

“‘மசாலாமாடிக்’கிற்கு நல்ல உபயோகம். அதை வாங்கத் தீர்மானித்துவிட்டோம்.” 

“நன்றி செலுத்தும்விதமாக சகாய விலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.” 

அவள் அகன்றதும் இருவரும் எழுந்து  குளிர் ஜாக்கெட்டை அணிந்தார்கள்.

“நேரம் நல்லவிதமாகப் போனது.” 

“எனக்கும் தான்.”  

“நான் அடுத்த வாரம் மறுபடி சான்டியாகோ வரவேண்டும்.”  

“இன்னொரு உணவு விடுதிக்கு ‘மசாலாமாடிக்'” என்று கேலியாகச் சிரித்தாள்.  

“கரெக்ட். அப்போது மறுபடி சந்திக்க முடியுமா? உன் வாழ்க்கைமுறை என் வட்டத்தில் இல்லாத ஒன்று. அதை இன்னும் தெரிந்துகொள்ள ஆசை. சுவாரசியமான பல விஷயங்கள் பேசினோம். எல்லாமே பாதியில் நிற்கிறது. அவற்றைத் தொடர்ந்து விவாதிக்க வேண்டும்.” 

அவளுடைய கருத்துக்களும் கொள்கைகளும் அவனைக் கவர்ந்து இருக்கின்றன. இருவருக்கும் நடுவில் ஏதோவொரு பொருத்தம். 

“ஓ! ஷுர், முடியும் என்று நினைக்கிறேன்.”  

வாசல் நோக்கி நடந்தார்கள். வரவேற்புமங்கைக்கு இன்னொரு நன்றிப்புன்னகை. 

வெளியே காலடி வைத்தபோது மாலை வெளிச்சத்தில் மிச்சம் இல்லை. 

“ஸ்வேதா! இருட்டிவிட்டதே, துணைக்காக நானும் உன்னுடன் நடக்கட்டுமா?” 

அவள் புன்னகையில் சம்மதம். 

மறுநாள். காலைநேரம் மதியத்தைத் தழுவியபோது அம்மா அழைத்தாள். ‘முதல் டேட் எப்படிப் போச்சு?’ என்று அவள் கேட்பதற்குமுன்பே, 

“மாம்! நீ ஒரு டேட்டிங் சர்வீஸ் ஆரம்பிக்கணும்!”   ***

Series Navigation<< அவர் வழியே ஒரு தினுசுமிகப்பெரிய அதிசயம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.