- வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1
- வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2
- வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3
- வேகமாய் நின்றாய் காளி- 4
- வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5
இந்தப் பகுதியில் வியாபாரங்கள் மின் கழிவை (e-waste) எப்படி உருவாக்கின்றன என்று பார்ப்போம். பெரிய வியாபாரங்கள், பலநூறு, ஏன் சில சமயம், பல்லாயிரம் கணினிகளைப் பயன்படுத்துகின்றன. கணினித் தொழில்நுட்பம் வளர வளர, வியாபாரங்கள், ஏன் புதிய கணினிகளை நிறுவுகின்றன? தனி மனிதர்களை விட, வியாபாரங்களுக்கு இது ஒரு அவசியமான தேவையாகிவிட்டது. உதாரணத்திற்கு, எல்லா விதத்திலும் சமமான இரு வியாபாரங்களில், ஒரு வியாபாரம், தன்னுடைய நுகர்வோருக்கு உடனடியாக பொருள் விவரப் பட்டியல்களை (invoice) தருகிறது என்றால், அந்த வியாபாரம், மற்ற வியாபாரத்தை விட, அதிகம் விற்க முடியும். அதனால், அதிக லாபமும் ஈட்ட முடியும். ஆகவே, வேகமான, நவீனமான கணினிகள் என்பது ஒரு வியாபாரத் தேவை. பல வியாபாரங்களில், ஆயிரக்கணக்கான கணினிகளை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் பழைய கணினிகளை என்ன செய்கிறார்கள்?
- தர்ம அமைப்புகளுக்கு (charities) அன்பளிப்பாகக் கொடுத்து விடுகின்றனர்
- குத்தகைக்கு (lease) எடுத்து, குத்தகைக்காரருக்கு திருப்பித் தந்து விடுகின்றனர்.
இந்தக் குத்தகை விஷயம், வியாபாரத்தில், ஒரு செலவாக எளிதில் கையாள முடியும். ஆனால், மின்கழிவு விஷயத்தில், குத்தகை என்பது, ஒரு வியாபாரம், தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு ஈடானது
வியாபாரங்கள் கணினிக்கு அடுத்தபடியாக பெருவாரியாக பயன்படுத்துவது அச்சு எந்திரங்கள் (computer printer) மற்றும் நகலெடுக்கும் எந்திரங்கள் (photo copying machines). இவ்வகை எந்திரங்கள் பெரும்பாலும் குத்தகைக்கு வாங்கப்படுகின்றன. அச்சு மற்றும் நகலெடுக்கும் எந்திரங்களை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணம், இவற்றில் அச்சு மை அதாவது toner ஒரு எந்திரத்தின் இயக்க காலத்தில், பலமுறை மாற்றப்பட வேண்டும். வியாபாரங்களில், ஒவ்வொரு எந்திரத்திலும், இவ்வகை அச்சு மை, மாதத்திற்கு 5 முதல் 10 முறை வரை மாற்றப்படுகிறது. சில ஆயிரம் எந்திரங்களில் மாதத்திற்கு ஐந்து அல்லது பத்து முறை இவ்வகை அச்சு மை மாற்றப்பட்டால் அந்த அச்சு மை பொதியுறை (cartridge) என்ன ஆகிறது? பெரும்பாலும், வியாபாரங்கள் இந்த விஷயத்தையும் குத்தகைக்காரரிடமே விட்டு விடுகின்றன. குத்தகைக் காரர்கள், இந்தப் புதிய பொதியுறையை மீண்டும் புதிய மையுடன் பயன்படுத்துகின்றனர். சில முறை, பயன்படுத்திய பின் இவை தூக்கி எறியப்படுகின்றன. இவ்வகை அச்சு மை மிகவும் விஷத்தன்மை கொண்டவை.
கடந்த 15 ஆண்டுகளாக, நமது திறன்பேசிகளில் காமிரா என்பது ஒரு முக்கிய அங்கம். உலகில் அதிகமாக வண்ணப் படங்கள் மனிதர்கள் எடுக்கத் தொடங்கியது, திறன்பேசி அறிமுகத்திற்கு பிறகுதான். கனடாவின் சிபிசி தொலைக்காட்சி நிறுவனம், ஒரு கணக்கெடுப்பில் 2010 முதல் 2015 வரை உலகில் 25 பில்லியன் வண்ணப்படங்கள், திறன்பேசி கேமராக்களால் எடுக்கப்பட்டன என்று கணித்துள்ளது. இந்த 25 பில்லியன் வண்ணப் படங்களில், வெறும் 20 சதவீத வண்ணப்படங்கள் மட்டுமே மனிதர்களால் பார்க்கப்பட்டவை. மீதம் இருக்கும் 20 பில்லியன் வண்ணப் படங்களை யாருமே இன்னும் பார்க்கவில்லை. எங்கோ ஒரு மேகக் கணிமை மையத்தில் இவை தூங்கிக் கொண்டிருக்கின்றன. சமீபகாலத் திறன்பேசி வளர்ச்சியை வைத்துப் பார்த்தால், தூங்கிக் கொண்டிருக்கும் படங்களின் எண்ணிக்கை இன்று இரட்டிப்பாகி 40 பில்லியன் வண்ணப் படங்களை தொட்டிருக்கும் என்று தாராளமாகச் சொல்லலாம். இந்த 40 பில்லியன் வண்ணப் படங்களைத் தேக்க, சரியான கணினி கட்டமைப்பு தேவை. அத்துடன், அந்த வண்ணப் படங்களை தேவைப்பட்ட பொழுது உடனே பார்க்கவும் வசதி வேண்டும். இது எப்படி சாத்தியம் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!
தேர்ந்த வண்ணப்படக் கலைஞர்கள், தங்களது படங்களை சில இணையதளங்களில் விற்கிறார்கள். உலகின் மிக அதிகமாக வண்ணப்படங்கள் விற்கும் தளங்களான, Shutterstock, Gettys, Adobe என்ற மூன்று இணயதளங்களிடம் மட்டுமே 1 பில்லியன் வண்ணப்படங்கள் இருக்கின்றன!
இதே போல கூகுள் தேடல் சேவை மிக துரிதமாக வேலை செய்யும் ஒரு சேவை. எந்த ஒரு தேடல் வாக்கியத்தை அதில் உள்ளிட்டாலும், சில நொடிகளில், தேடலுக்கு பதில்கள் உடனே நமக்கு கிடைக்கின்றன. அதுவும், இரவு பகல், விடுமுறை பாராது என்றும் நமக்கு இது கிடைக்கிறது. உலகம் புதிய தகவல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. மேலும், தகவல் வளர்ச்சி என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் ஒவ்வொரு நாளும், இந்தத் தேடல் சேவை இன்னும் கடினமாகிவிடும் என்று தோன்றலாம். ஆனால், இதன்பின் இயங்கும் தேடல் தொழில்நுட்பம், இந்த ராட்சச தகவல்களை சேகரிப்பது, மற்றும் நமக்கு உடனே பதில் அளிக்கவும் வழி வகுத்த வண்ணம் இருக்கிறது. இதன் பின்னணி, ஏராளமான தகவல்களை தேக்கும் வசதி மற்றும் அதிவேகமாக அவற்றிலிருந்து தகவல்களை மீட்கும் சக்தி என்பது உண்மை.
எப்படி வளர்ந்து வரும் கூடுதலான தகவல்களோடு முன்னைவிட வேகமாக நம்மால் கேள்விகளுக்கு விடை காண முடிகிறது? இதற்குக் காரணம், கூகுள் போன்ற அமைப்புகள் தங்களது கட்டமைப்பை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் அதிவேக வன் தட்டுகள் (hard drives) மற்றும் எஸ் எஸ் டி (SSD – Solid State Drives) என்ற மின்னல் வேகத் தேக்க அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளன. ஆக, இந்தக் கட்டமைப்பில், புதுப்பித்தல் என்பது ஒரு அன்றாட விஷயம். மற்ற வியாபாரங்களை விட, இந்த தேவை தேடல் சேவைக்கு மிகவும் அதிகம். அத்துடன், யூடியூப் போன்ற வீடியோ தளங்கள் வெறும் எழுத்துக்களை மட்டும் தேடுவதில்லை. நகரும் படங்களைத் தேடுவது என்பது ஏராளமான தேக்கத் தேவை கொண்ட ஒரு அமைப்பு. இந்தத் தேவையை கூகுள் போன்ற நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கின்றன? தன்னுடைய பழைய வன் தட்டுக்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதியவற்றை வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல மில்லியன் கணினிகள் கொண்ட கூகுள் போன்ற அமைப்பு, அந்தப் பழைய கணினிகள் மற்றும் வன் தட்டுக்களை என்ன செய்கின்றன? சற்று யோசித்தால் தெரியும், இது குத்தகைக்காரரிடம் விடும் விஷயமல்ல.

மின்னணுவியல் தொழிலின் இன்னொரு முகத்தையும் நாம் இங்கு ஆராய வேண்டும். முதல் விஷயம், மின்னணுவியல் நிறுவனங்கள் உருவாக்கும் சாதனங்களைச் சார்ந்தது. இந்த விஷயத்தில், ஆப்பிள் நிறுவனம் ஒரு வில்லன் என்று சொல்லலாம். ஆப்பிளின் எந்த எந்த ஒரு கணினியையோ அல்லது திறன்பேசியையோ எந்த வகையிலும் நாம் பழுது பார்ப்பது மிகவும் கடினம். ஆப்பிள் நிறுவனமோ, தன்னுடைய நுகர்வோரை, எப்படியாவது புதிய மாடல்களை வாங்க வைப்பதையே குறியாகக் கொண்ட ஒரு அமைப்பு, எனவே பழுது பார்ப்பதற்கு அது கேட்கும் கட்டணம் மிக அதிகமாக இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் உலகின் மிகப் பணக்கார நிறுவனங்களில் ஒன்று. இதைப் பார்த்த மற்ற நிறுவனங்களும், தங்களுடைய தயாரிப்புக்களை, பழுது பார்ப்பதைக் கடினமாக்கி வருகிறார்கள். உதாரணத்திற்கு, சமீபத்தில் என்னுடைய டெல் மடிக்கணினியில் உள்ள வன்தட்டை (hard drive) மாற்ற முயற்சி செய்தபோது, அதை வேண்டுமென்றே மிகவும் இக்கட்டாக வடிவமைத்திருந்தனர். இதனால், ஒரு பழுதுபார்க்கும் நிபுணரிடம் எடுத்துச் சென்று, புதிய வன்தட்டை அதில் நிறுவினேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, “ஏன் இப்படி தேவைக்கு ஏற்ப புதிய பாகங்களைச் சேர்ப்பதைக் கடினமாக்குகிறார்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்பொழுது என்னிடம் எடுத்து வந்து உங்களால் குறைந்தபட்சம் புதிய வன்தட்டைச் சேர்க்க முடிகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது உங்களால் முடியாது. ஏனென்றால் வன்தட்டை கணினியில் தாய் தட்டோடு (mother board) முழுவதும் சோல்டர் செய்து விடுவார்கள். உங்களது கணினியில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் வேறு ஒரு புதிய மாடலை வாங்குவதை விட்டால் வேறு வழி இருக்காது” என்றார்.
மறு பயன்பாட்டிற்கு எதிராகவே மின்னணுவியல் தொழில் பொதுவாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. சில பழுது பார்க்கும் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவர்களின் பாடு மிகவும் கடினமாகி விட்டது. எந்த பாகங்களை ஒரு தயாரிப்பில் பயன்படுத்துகிறோம் என்று தயாரிப்பாளர்கள் சரியாக வெளியிடுவதே இல்லை. இதனால், ஒன்றில் இரண்டு விஷயங்கள் பழுது பார்க்கும் வேலையில் நடக்கிறது. பழுது பார்க்க மிகவும் நேரமாகிறது. ஏனென்றால், பழுது பார்த்தல் என்பது ஒரு பொறியியல் ரீதியான விஷயமாக இல்லாமல், இதை மாற்றிப் பார்க்கலாம், அல்லது அதை மாற்றிப் பார்க்கலாம் என்று ஒரு சிக்கலான தொழிலாகிவிட்டது. உங்களது டொயோட்டா காருடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். டொயோட்டா நிறுவனம், புதிய காரை அறிமுகப்படுத்தி, அதில் எந்தெந்த பாகங்கள் இருக்கிறது என்று வெளியிடாமல் போனால், தனிப்பட்ட பழுது பார்க்கும் மையங்கள் என்ன செய்ய முடியும்? சில தயாரிப்பாளர்கள், ஒரு படி மேலே சென்று, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பழுது பார்க்கும் நிறுவனங்களை, நீதிமன்றத்திற்கு இழுக்கவும் தயங்குவதில்லை.
இவ்வாறு தொழில் ரீதியாகவும் இன்றைய சூழலில் அதிக மறுபயன்பாட்டிற்கு வாய்ப்பில்லது போய்விட்ட்து வேதனைக்குரியது.
இன்னொரு முக்கியமான விஷயம், இன்றைய மின்னணுவியல் சாதனங்கள் எல்லாவற்றிலும் ஏதாவது மென்பொருள் இருக்கத்தான் செய்கிறது. சில மென்பொருள், வன்பொருளோடு சேர்ந்து வேலை செய்கிறது. ஏதாவது பழுது பார்க்க நேர்ந்தால் நுகர்வோரின் மிகப்பெரிய அச்சம், அந்த சாதனத்தின் பொறுப்புறுதி (product warranty) அதாவது வாரண்டி ரத்தாகிவிடும். நுகர்வோர் பழையதை தூக்கி எறிந்து புதிய மாடல்களை வாங்குவதையே மிகவும் பாதுகாப்பாக நினைக்கிறார்கள்.
அடுத்த பகுதியில் இந்த வேகத்தின் மீது நம்முடைய மோகம் உலகத்தை எங்கு கொண்டு போயுள்ளது என்று சில திடுக்கிடும் தகவல்களுடன் பார்ப்போம்.
(தொடரும்)
பயனுள்ளதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர். அமெரிக்க நுகர்வோர் இயக்கம் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லையா?
நன்றி இரமணன். ப்ளாஸ்டிக் கழிவு அளவிற்கு இந்த விஷயத்தில் அமெரிக்க நுகர்வோர் இயக்கங்கள் அதிகம் இதைக் கண்டு கொள்வதில்லை. ப்ளாஸ்டிக்கால் அமெரிக்க கடற்கரைகள் மற்றும் ஆறுகள் பாதிக்கப்படுகின்றன. மின்கழிவு என்பது எங்கோ உள்ள ஆசிய நாடுகளுக்கு சொண்டு செல்லப்படுவதால் அதிகம் ஆராயப்படுவதில்லை.
அதைவிட முக்கிய காரணம், உள்ளூர் அரசாங்கங்கள் சொல்வதை சாதாரணர்கள் பின்பற்றுவதால், தங்களது கடமையை சரியாகச் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஏன், நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். இதைத் தோண்டத் தோண்ட மிகப் பெரிய பூதங்கள் வெளிவந்தது என்னவோ உண்மை.
ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பல அரசாங்கங்கள் முயன்று வருகின்றன. ஆனால், மின்கழிவிற்கு என்று விடிவு வரும் என்று தெரியவில்லை.