வெங்காயக் கண்ணீர்

இடுக்கண் எனும் சொல்லுக்குத் துன்பம் என்று பொருள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார். இடுக்கண் எனும் சொல்லுக்கு Distress, Woe, Affliction என்று பொருள். ‘இடுக்கண் வந்துள்ள காலை, எரிகின்ற விளக்கு’ காற்றில் நடுங்குவது போல, மனம் நடுக்குறும் என்பார் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி எனும் பெருங்காப்பியத்தில்.

இடும்பை எனும் சொல் தரும் பொருளும் துன்பம்தான். Suffering, Affliction, Distress, Calamity என்கிறது பேரகராதி. இடும்பைக்கு இரண்டாவது பொருள் Evil, Harm, Injury, தீமை. மூன்றாவது பொருள் நோய், Disease என்கிறது. நான்காவது பொருள் Poverty, தரித்திரம் என்கிறது. ஐந்தாம் பொருள், அச்சம், Fear, Dread என்கிறது.

தொல்காப்பிய, பொருளதிகார நூற்பா, கைக்கிளை எனப்படும் ஒருதலைக் காமம் பற்றிக்  கூறும்போது அது,  ‘ஏமம் சாலா இடும்பை’ என்கிறது. அதாவது ஒருதலைக்காமம் என்பது பெருமை தராத துன்பம். ஒருதலைக் காமம் என்பது, விருப்பம் இல்லாதவரை, ஒருதலைப் பட்சமாகக் காமுறுவது, காதலிப்பது. விருப்பம் இல்லை என்றால் விட்டுவிட வேண்டும்தானே! தன்னைக் காதலித்தே தீரவேண்டும் என்பது அடிபிடிக் கட்டாயமா? தன்னைக் காதலிக்காத பெண்ணைக் குத்திக் கொல்வது, ஆள் வைத்துக் கடத்துவது, நான்கு பேரை அனுப்பிக் கற்பழிப்பது என்றால் அதன் பெயர் காதலா? ஒருதலைக் காதலால் பைத்தியம் பிடித்து அலைவதும், மது குடித்து மயங்கிக் கிடப்பதும், பரதேசியாகப் போவதும் நூறு தமிழ் சினிமாக்களில் கண்டதுண்டு. அதனைப் பெருமை தராத இடும்பை, துன்பம் என்கிறது தொல்காப்பியம். ‘தீயொழுக்கம் யாண்டும் இடும்பை தரும்’ என்பான் திருக்குறள் ஆசான். நமக்கு திருக்குறள் பேசும் செய்திகள் முக்கியமல்ல. அவன் சைவனா, வைணவனா, சமணனா, பௌத்தனா, கிறித்துவனா, இசுலாமியனா, திராவிடக் கழகத்தவனா என்பதுதான் முக்கியம்!

அவரவர் மதத்தில், கட்சியில், பிரதேசத்தில் சேர்ப்பதில்தான் அடிதடி!

‘தேரான் தெளிவும் தெளிந்தார் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்’

என்கிறார் திருவள்ளுவர், அவரைச் சொந்தம் கொண்டாடுபவரை எண்ணி.

எல்லாம் சரிதான் நாயன்மாரே!
துன்பம் என்றால் என்ன?

கூழுக்குப் போட உப்பு வாங்கத் துட்டில்லை என்பவனின் துன்பமும் காய்ச்சிய பாலில் சர்க்கரை போட மறந்துவிட்டவனின் துன்பமும் ஒன்றா? ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்றுரைக்கின் பலவேயாம்! என்பான் கம்பன், யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலில்.

ஆமாம்! அரசு நகரப் பேருந்துக்கு, நிழற்குடையில்லா நிறுத்தத்தில், வெயிலில், புகையில், தூசில், இரைச்சலில், நெரிசலில், பசியில் ஒன்றேகால் மணி நேரம் பேருந்துக்குக் காத்து நிற்பவன் துன்பமும் ஆடி அல்லது பென்ஸ் அல்லது லம்பார்கினி சொகுசுக் காரில், தன் இருக்கையில், தண்குளிரில், பன்ன  சினிமாப் பாட்டில் லயித்து, சிக்னலில் முப்பது நொடிகள் காத்துச் சலிப்பவனின் துன்பமும் ஒன்றேதானா?

சினிமா நடிகையின் தீண்டலின்போது உதிர ஒழுக்கு அதிகமாகி, மருத்துவமனையில் ஓய்வெடுக்கும்போது, வெளியே மணல்சோறு தின்னும், மொட்டை போடும், காவடி எடுக்கும், அலகு குத்திக் கொள்ளும், ஆவேசத்தில் தீப்பாயும் தமிழ் ரசிகர் கூட்டத்தின் இடுக்கண் – இடும்பை – துன்பம் சொல்லத் தரமானதா?

இன்று பாரத மணித் திருநாட்டின் பெருந்துன்பம் என்பது மரணம் ஏற்படுத்தும் டெங்கு முதலாய நோய்கள் அல்ல, ஓராண்டில் இரயில்வே லெவல் கிராசிங்குகளில் எண்ணூறு பேர் செத்துப் போனதல்ல. பல லட்சம் கோடிப் பணம் அரசு வங்கிகளில் வாராக்கடனாக இழந்து நிற்பதல்ல. கொலை, கொள்ளை, கள்ளநோட்டு, ஆள் கடத்தல், வன்புணர்வுத் தீனங்கள் அல்ல. காசு வாங்கி வாக்களிப்பதல்ல. சாதி அரசியல் அல்ல. சினிமாக்கள் பரப்பும் ஒழுக்கக் கேடுகள் அல்ல. அரசு மருத்துவமனைகள் சவக்கிடங்குகள் போலக் காட்சிப்படுவதல்ல. பல்கலைக்கழக வளாகங்களில் நடப்பாண்டில் மட்டும் நடந்த இருபத்திநான்கு தற்கொலைகள் அல்ல! பிறகு வேறென்ன? அவற்றைவிட எல்லாம் பெரிய இனமானச் சிக்கல் – வெங்காய விலை உயர்வு.

திராவிட இயக்க இதழான ‘விடுதலை’ வாசித்த காலத்தில், 1960-ம் ஆண்டு முதல்  ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் மேடைப் பேச்சுக்கள் கேட்க ஆரம்பித்த காலத்தில், எனக்கு வெங்காயம் எனும் சொல் அறிமுகம் ஆயிற்று. எனக்கு அப்போது 13-14 வயது. வெங்காயம் எனும் சொல் நூதனமாகப்பட்ட நாட்கள் அவை.

வெங்காயத்துக்கான எம் சொல், உள்ளி. என் அப்பனைப் பெற்ற ஆத்தா, பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை, உள்ளியை ஈருள்ளி என்பாள். சிலசமயம் ஈராய்ங்கம் என்றாள். வெள்ளைப் பூண்டினை வெள்ளாய்ங்கம் என்றாள். வெள்ளுள்ளி அல்லது வெளுத்துள்ளி என்றால் வெள்ளைப் பூண்டு. வெறுமனே பூண்டு அல்லது பூடு என்றாலும் அது Garlic தான். வடநாட்டில் காந்தா அல்லது ப்யாஸ் என்றால் வெங்காயம். லசூன் என்றால் வெள்ளைப் பூண்டு.

உள்ளி எனும் சொல்லுக்குப் பிங்கல நிகண்டு வெண்காயம் என்று பொருள் சொல்கிறது. அதாவது, வெங்காயம். இலக்கணம் பற்றிப் பேராசிரியர்களிடம் பேசுங்கள். உள்ளி எனும் சொல், Onion எனும் பொருளில் தமிழ், கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் வழங்குகிறது. இன்றும் பெங்களூர் தெருக்களில், உள்ளி, வெள்ளுள்ளி என்று தள்ளு வண்டிகளில் வைத்து கூவி விற்பவரைக் காணலாம். பேரகராதி, உள்ளிக்குத் தரும் இரண்டாம் பொருள் வெள்ளைப் பூண்டு. உள்ளி, ஈருள்ளியைத் தமிழில் நீருள்ளி என்றும் சொல்வதுண்டு. கன்னடமும் மலையாளமுமே ஈருள்ளி, நீருள்ளி என்கிறது Onion குறிக்க. மலையாளத்தில் சவாலா என்றும் புழங்குகிறார்கள்.

நான் நாஞ்சில் நாட்டை, தமிழ்நாடு அரசாங்கம் வேலை தராமல் புறக்கணித்த வலி சுமந்து, நீங்கி 47 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், என் வீட்டில் இன்னும் புழங்கும் சொல் உள்ளிதான். எனது பேரன்கள் வரை அச்சொல்லைக் கடத்தியாயிற்று. பெரிய உள்ளியை பெல்லாரி என்றோம். 2012-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றபோது அறிந்த விடயம், சின்ன உள்ளியை அவர்கள் Pearl Onion என விளித்தது.

இன்றைய எம் கதிகேடு, வெங்காயம் என்றால் அது நற்றமிழ், உள்ளி என்றால் அது வட்டாரா வழக்கு! பேராசிரியத் திறனாய்வாளர் கற்பிக்கும் தமிழ்மொழி இவ்வாறுதான்.

இலக்கியங்கள் பலவற்றில் இருந்தும், தனிப்பாடல்களாகக் கிடந்தனவற்றையும், சிறந்த பாடல்கள் எனத் தாம் கருதியனவற்றை ஒருவர் தொகுத்துள்ளார். அவர் பெயரும் காலமும் அறியோம். ஆனால் முத்தமிழ், ஐந்தமிழ், ஏழ்தமிழ், ஒன்பான் தமிழ் அரைகுறைகளை அறிவோம். மொழியின் துர்பாக்கியம், அசம்பாவிதம், தீப்பேறு! தொகுத்தவர் காலம் நாயக்கர் காலம் என நம்பப்படுகிறது. எனவே கி.பி. 1500-க்குப் பிறகு எனக் கொள்ளலாம். அவர் தொகுத்த ‘விவேக சிந்தாமணி’ நூலில் 234 பாடல்கள். அவற்றுள் ஒரு பாடல் –

‘கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக்
கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன்குணத்தைப்
பொருந்தக் காட்டும்’

என்று விரியும். கற்பூரத்தால் பாத்தி பிடித்து, கஸ்தூரி போன்ற வாசனைத் திரவியங்களை உரமாக இட்டு, நறுமணம் கமழும் பன்னீர் போன்ற நீரைப் பாய்ச்சினாலும், உள்ளியானது அதன் சொந்தக் குணத்தைத் தவறாமல் வெளிக்காட்டும் என்பது பொருள். இதில் எனது ஈடுபாடு உள்ளி எனும் சொல், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்ப் பாடலில் ஆளப்பட்டுள்ளது என்பதில்.

வெங்காயம் எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளது. ‘வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?’ என்று தொடங்கும் சொக்கநாதப் புலவரின் பாடலில் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. பொருள் வேறு என்றாலும் சிலேடைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பேராசிரிய நண்பர் ஒருவர், உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமே இல்லாததால் அது உள்ளி எனப்பட்டது என்றார். நான் கேட்டேன், எனில் தமிழ்ப் பேராசிரியர்களை உள்ளி எனலாமா என்று. என்ன செய்ய? நமக்கு வாக்கில் சனி! அவரே சொன்னார் உள்ளி, ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதியானதால் அது ஈருள்ளி எனப்பட்டது என்று. அவர் சொன்னது உண்மையா என்று உரைக்க நமக்கு அறிவு போதாது!

அந்த வழக்கு கிடக்கட்டும்! நாம் பேச வந்த விடயம் வெங்காய விலை உயர்வு.

இஃதோர் வேளாண்குடி பெருகிச் செழித்திருந்த நாடு. வேளாண் தொழில் செய்கிறவன் எந்த நாட்டுக்கரசன், எம்மொழி பேசுகிறவன், எம்மதம் சார்ந்தவன் என்றாலும் அவன் வேளாளன் என்கிறது தமிழ். வேளாளன் எனத் தம்மைச் சொல்லிக் கொள்கிறவரில் பலர் இன்று வேளாண்மை செய்பவரில்லை. ‘வேளாண்மை எனும் செருக்கு’ என்பார் திருவள்ளுவர். அது சாதிச் செருக்கு அல்ல, தொழிற் செருக்கு. வேளாண்மை செய்பவன் தாளாண்மை கொண்டவன்.

‘தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாளாண்மை போலக் கெடும்’

என்பார் திருக்குறள் ஆசான்.  அதிகாரம் ஆள்வினை உடைமை. நான்கு குறட்பாக்களில் திருக்குறள் வேளாண்மை எனும் சொல் ஆள்கிறது. இன்று வேளாண்மைக்கு நாம் தரும் மதிப்பு மயிருக்கு நிகரானது.

நீள அகலமும், மக்கட்தொகையும், பல்வேறுபட்ட பருவநிலைகளும், மண் வளங்களும், நீர்வளங்களும், வறட்சியும் கொண்ட நிலம் நமது. ஒரு பகுதி செழித்திருந்தால், இன்னொரு பகுதியில் வறட்சி இருக்கும். ஒரு பகுதி வெள்ளப்பெருக்கில் அல்லற்படும்போது, இன்னொரு பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளின் ஆழம் அதிகரிப்பார்கள். மழையில் தவளைகள் கத்தும் ஓரிடத்து, மற்ற இடத்து அனல் தாங்கா அரவங்கள் ஊரும்.

ஒரு பருவ காலத்தில் தக்காளி கிலோ நூறு ரூபாய் விற்கும். இன்னொரு பருவகாலத்தில் பத்துக்கிலோ கூடை பதினைந்து பணத்துக்கும். ஒரு பருவ காலத்தில் வெங்காயம் ஐம்பது ரூபாய்க்கு மூன்று கிலோ எனக் கூவுவார். இன்னொரு பருவ காலத்தில் கிலோ நூற்றைம்பது பணம் என மிரட்டுவார்.

விலை வீழ்ச்சிக்கான காரணம் உற்பத்திப் பெருக்கு என்றால், விலை ஏற்றத்துக்கான காரணங்கள் மழை, காற்று, கடும் வெயில், நோய். உற்பத்தி குறையும்போது அதிகாரத்தின், அரசியலின், வங்கிகளின், சொந்த சமூகங்களின் ஆதரவு பெற்றோர் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்கிறார்கள். கிடைக்கும் கொள்ளை லாபத்தில் முருகனுக்கு  முத்து வேல், அம்மனுக்கு வைரக் கொலுசு, பெருமாளுக்கு நவமணி மாலை, ஈசனுக்கு பொன்னங்கி, விநாயகனுக்கு முத்து மணிப் பல்லக்கு…

தக்காளி கிலோ நூறு ரூபாய்க்கு விற்கும்போது வாயில் வயிற்றில் அடித்துக் கண்ணீரும் கம்பலையுமாக மூக்குச் சிந்தும் சமூக மனச்சாட்சி, தக்காளி பத்துப் பணத்துக்கு மூன்று கிலோ விற்கும்போது, விலை கிடைக்காமல் அழுகிய தக்காளிப் பழங்களைச் சாலையோரங்களில் வண்டி வண்டியாகக் கவிழ்க்கும்போது, விவசாயிக்குப் பரிந்து ஒரு சொட்டு மௌனக் கண்ணீர் சிந்துவதில்லை. போதிய விலையின்றி, குடம்குடமாகப் பால் சாலைகளில் கவிழ்க்கப்பட்ட  போராட்டங்கள் நடந்ததுண்டு நாட்டில். பஞ்சப்படி, பயணப்படி, அகவிலை உயர்வுப்படி, நகரப்படி, மலைப் பிரதேசப்படி, வீட்டு வாடகைப்படி பெற்று, ஊதிய உயர்வு கோரி, சாலைகளில் அன்ன நடை, குரலுயராத கோஷம் என நிழல் பார்த்து நடக்கும் அரசு ஊழியர், ஆசிரியப் பெருங்குடியினர், வங்கி ஊழியர் எவரும் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி பயிர் செய்த விவசாயிக்கு இரங்கி என்றாவது குரல் கொடுத்ததுண்டா? வீணாகிப் போனதற்காக வயிறு எரிந்ததுண்டா?

பேருந்துக் கட்டண உயர்வுக்கு, கையில் பலூன் தாங்கி சென்னையில் ஊர்வலம் நடத்திய புரட்சியாளர் நாம். இட்டிலி விலை உயர்வுக்கு, 1967-க்கு முந்திய தமிழக சட்டசபையில் உறுப்பினர் ஒருவர் இட்டிலி கொண்டு காட்டி, தேச சேவை ஆற்றினார்.

இன்று வெங்காய விலை உயர்வு.

நோயினால் தாக்கப்பட்டு, பருவத்தால் சேதப்படுத்தப்பட்டு விளைச்சல் பாதிக்கப்படும்போது வெங்காய விலை உயர்கிறது. வெங்காயம் என்று இல்லை; எந்தப் பொருளுமே! Supply and Demand Theory. புதுமுக வகுப்பு கல்லூரியில் வாசித்தபோது பொருளாதாரப் பாடத்தின் தொடக்கம். பருவ காலங்களில், முல்லையோ மல்லிகையோ, ஒரு நாளின் உற்பத்தி திட்டமாக இருக்கும்போது, திருமண நாட்களின்போது மட்டும் பூ விலை ஏன் உயருகிறது? முழம் பதினைந்து பணம் மற்ற நாட்களில் விற்றது, அன்று மட்டும் ஏன் முப்பது பணம் ஆகிறது? இன்னும் வாடகை டாக்சி ஆப்பரேட்டர்கள், நெருக்கடி நேரத்தில் ஏன் தனி  ரேட் வாங்குகிறார்கள்?

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்போது உயர்தர சைவ உணவு விடுதிகளில் மசால் தோசைக்கும், காளான் பிரியாணிக்கும் அதிக விலை வாங்கினால் உங்களுக்கு எப்படி இரத்தக் கொதிப்பு ஏறும்? விமான நிறுவனங்கள், பயணச் சீட்டுக்களை விற்கும்போது, தேவை அதிகமாக இருந்தால் அதைத்தானே செய்கிறார்கள்? தங்கும் விடுதிகள் விடுமுறை நாட்களிலும் திருவிழாக் காலங்களிலும் எதற்காக அதிக வாடகை வசூலிக்கிறார்கள்? தண்ணீர் செலவில், மின் பயன்பாட்டில் ஏதும் மாற்றமுண்டா? இந்திய அரசாங்கம், இரயில்களின் இருக்கிற இருக்கைகளை விற்றுவிட்டுப் போகவேண்டியதுதானே! Emergency quota என்று ஒன்று உண்டுதானே? பிறகு எதற்கு தத்கால்? தத்காலுக்குத் தமிழ் என்ன பேராசிரியர்களே?

இனிமேல் தொலைத் தொடர்புக்கும், மின் பயன்பாட்டுக்கும் Peak Hours-க்குத் தனிக்கட்டணம் வந்தால் எப்படி இருக்கும்? என்ன செய்ய இயலும் நம்மால்?

தக்காளி அல்லது வெங்காயம் விலை, உழவர் சந்தையில் அதிகம் என்றால், ஒரு கிலோ வாங்குகிற நான் கால் கிலோ வாங்குவேன். மலிந்த காலத்தில் மட்டுமே தக்காளி சட்னி, தக்காளி ஜுஸ், தக்காளி ஊறுகாய், தக்காளி கொத்சு, தக்காளி சாதம், தக்காளி உப்புமா. நீங்கள் அரசு அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தால் எல்லா நாளும் தீபாவளி. காசும் பொன்னும் உண்டுமானால் கார்த்திகை மாதம் கல்யாணம்!

கடந்த ஒரு மாதத்தில், வெங்காய விலை உயர்வை நகைச்சுவையாகக் கொண்டு எனக்கு வந்த முப்பதுக்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் செய்திகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

  1. காதலனின் வரவு காத்திருக்கும் காதலி, ஊடல் கொள்ளும் வேளையில், காதலன் விரைந்து வந்து, பரிசாகக் கொணர்ந்த நகைப்பெட்டி திறந்து காட்டுகிறான். வெங்காய மணிகள் கோர்த்த கழுத்தணி!
  2. மனைவிக்குப் பிறந்தநாள் பரிசாக, வெங்காயக் காதணிகள்.
  3. இரண்டு வெங்காயம் கடன் கேட்டு வருகிறாள், பக்கத்து வீட்டுக்காரி. அலமாரி திறந்து ஒன்றேயொன்று தருகிறாள் வீட்டுக்காரி.
  4. உணவு விடுதியில் வெங்காய ரோஸ்ட் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளரை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் அனைவரும்.
  5. வெங்காய ஊத்தப்பம் கொணரப் பணித்ததைக் கண்டு, வருமான வரித் துறைக்குத் தகவல் சொல்கிறார்கள்.
  6. மணம் பேசி முடிக்க வந்தவர் சொல்கிறார், பெண்ணுக்குப் பொன், பொருள் ஏதும் வேண்டா. ஐந்து கிலோ வெங்காயம் தாருங்கள் போதும் என்று.
  7. வெளிநாட்டில் இருந்து வரும் பயணியிடம், வெங்காயம் வைத்துள்ளாரா என்று கெடுபிடி செய்கிறார் சுங்க அதிகாரி.
  8. நாளிதழ் செய்தி – மலத்துவாரத்தினுள் யோனித் துவாரத்தினுள் திணித்து வெங்காயம் கடத்தியவர் கைது, என்று.
  9. வெங்காய பஜ்ஜிக்கு பில் தொகை ரூபாய் 400.00
  10. உணவு விடுதி வாசலில் அறிவிப்புப் பலகை – வெங்காய சாம்பார், வெங்காய சமோசா, வெங்காய ஊத்தப்பம், வெங்காய ரோஸ்ட் தயாரிப்பில் இல்லை.
  11. வட இந்தியப் பதிவு எண் கொண்ட ஆட்டோவில் இருந்து ஒருவர் இறங்குகிறார். வாடகைப் பணமாகப் பெரிய வெங்காயம் ஒன்று தருகிறார். மிச்சம் இரண்டு பொடி வெங்காயம் தருகிறார் ஆட்டோக்காரர்.
  12. வட இந்தியர் ஒருவர் டால் – ரொட்டி சாப்பிடுகிறார். அவர் முகத்துக்கு நேராக, நூலில், தனித்தனியாக வெங்காயம், தக்காளி, பூண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாய் ரொட்டிக்கும் வெங்காயம், பூண்டு அல்லது தக்காளியைப் பிடித்து மோந்து கொள்கிறார்.
  13. கார் டீலர் ஷோ-ரூம் வாசலில் ஒரு அறிவிப்பு : பென்ஸ் கார் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்.
  14. ஃபோட்டோ ஸ்டுடியோ வாசலில் அறிவிப்புத் தட்டி : திருமணங்களுக்கு ஃபோட்டோ, வீடியோ எடுக்க முன்பதிவு செய்தால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம்.

இதற்குமேல் எழுதச் சோர்ந்து போகிறது மெய்யும் மனமும். அடப்பாவிகளா? நான்குபேர் வாழும் வீட்டுக்குத் தினமும் ஒரு கிலோ வெங்காயமா செலவழிக்கிறீர்கள்? நான்கு மாதத்தில் அடுத்த அறுவடை வந்துவிடும். வெங்காயம் விளையும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம்!

மக்களின் அன்றாடக் கவலைகளில் இதுவும் ஒன்று, மறுப்பதற்கில்லை. தன் மலத்துவாரத்தில் விரல் விட்டுக் குடைந்து, மணத்திப் பார்ப்பாரா எவரும்? எல்லோருக்கும் இஃதோர் நகைச்சுவை ஆகிப் போயிற்று. இந்த நகைச்சுவைக் கடை விரிப்பவர் உண்மையில் வெங்காய விலை ஏற்றத்தால் மிக வருந்தி உழல்பவரா?

சந்தர்ப்பம் ஓர்ந்து, பதுக்கல்காரர்கள் நலம் காண்பார்கள். அவர்களுக்கு அரசியல்காரர்களின், அதிகாரிகளின், சட்டம் ஒழுங்கு பேணுகிறவர்களின் மறைமுக ஆதரவும் இருக்கலாம். எவர், எங்கு பதுக்குகிறார் என்பதை அறிந்துகொள்ள இயலாதா? இதுவென்ன ராஜீவ்காந்தி கொலையின் துப்புத் துலக்கும் சூத்திரமா? அல்லது சந்திராயனுக்கு விண்கலம்  அனுப்புவதா?

சரி! அரசாங்கம் பதுக்கலைத் தடுக்க ஆர்வமில்லாது இருக்கிறது என்றே கொள்வோம். பொதுமக்கள் எடுத்த நடவடிக்கை என்ன? ஒரு மாதம் வெங்காயம் வாங்கமாட்டோம், வெங்காயம் இல்லாமல் சமைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் இருந்தால், பதுக்கல்காரர்கள் கிலி அடைய மாட்டார்களா?

இப்படி விதவிதமாகக் கேலிச் சித்திரங்கள் அனுப்புபவர், பதினைந்து நாட்களாக வெங்காயம் உண்ணாதிருந்து எத்தனை கிலோ இளைத்துப் போனார்கள்? அல்லது நோய்ப்பட்டு மருத்துவமனைகளில் கிடக்கிறார்களா?

எதையும், அதன் தீவிரத் தன்மையை நீர்த்துப் போகச் செய்வது நம் இயல்பு. ஒரு காலத்தில் சினிமாப் பாடல் வரி ஒன்று – “இட்டிலியே ஏன் இளைத்துப் போனாய்? நீ எந்தப் பயல் மீது காதலானாய்?” என்று.

பொறுப்பான மத்திய அமைச்சர் சொல்கிறார் – நாங்கள், எங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு பயன்படுத்துவதில்லை என்று. ஒருவர் பன்றிக்கறி, மாட்டுக்கறி தின்பதில்லை என்றால் அதன் விலை, கிலோ ஐந்தாயிரம் ரூபாய் என விற்றால் அது பொருட்டில்லையா? தம் குல மாண்பு பேசும் தருணமா இது? உடனே முதன்மை அமைச்சருக்கும் மத்திய அமைச்சருக்கும் கிலோ வெங்காயம் அன்பளிப்பாகப் பார்சல் அனுப்பினார்களாம். இதுவும் நகையாக்கமன்றி வேறென்ன?

வெங்காயம், காலரி குறைவான, அதிக சத்துக்கள் கொண்ட, சி மற்றும் பி விட்டமின் கொண்ட, பொட்டாசியம் நிறைந்த உணவுப் பண்டம் என்கிறார்கள். கொலஸ்ட்ரால் குறைக்கும், இரத்த அழுத்தம் குறைக்கும், நீரிழிவு நோய்க்கும் நல்லது என்கிறார்கள்.

ஐயாயிரம் அல்லது ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, சீனா, இந்தியா முதலிய நாடுகளில் பயிர் செய்யப்பட்ட பூண்டினம் வெங்காயம் என்பார்கள். எகிப்தில் பூசாரிகள் வெங்காயம் உண்ணத் தடை இருந்திருக்கிறது. பாலுணர்வைத் தூண்டும் தன்மையுடையது என்கிறார்கள். எனில் மக்கட்தொகை குறைப்புக்கும் வெங்காய விலை உயர்வு உதவும்தானே!

வெங்காய விலை பற்றி ஆயிரம் பேசுகிறவர்கள், கிரெடிட் கார்டுக்கு இனிமேல் காசோலை மூலம் பணம் செலுத்தினால் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் நூற்றைம்பது பணம் தண்டம் எனும் அறிவிப்பு பற்றிப் பேசுவதில்லை.  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிரந்தரமாய் விலையேற்றியதைப் பற்றி அனக்கம் காட்டுவதில்லை. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவன் குறைந்த அளவு இரண்டாயிரம் கணக்கில் வைத்திருக்க வேண்டும் அல்லது மாதம் நூறு பணம் அபராதம் என்பது பற்றிப் பேசுவதில்லை. ஏனெனில் நகைச்சுவை செய்வோருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

விளைபொருள் மலிந்து, சந்தையில் கூவியும், கூறுகட்டியும் விற்கப்படும் காலத்தில் அவற்றைச் சற்று அதிகமாக வாங்கி ஆதரித்தவர் எவர்? தக்காளியும் வெங்காயமும் என்றும் நிரந்தரமாகக் கிலோ பதினைந்து ரூபாய்க்குக் கிடைக்கவேண்டும் எம் சம்பளம் மட்டும் ஆண்டாண்டுக்குக் கனமாக அதிகரிக்க வேண்டும் என்பது சரியா?

சம்பளக் கமிஷன் அறிவிப்பு வந்த உடனேயே சந்தையில் பொருள்களின் விலை ஏறி விடுகிறதோ என்ற அச்சமும் ஏற்படுகிறது சாமான்யருக்கு? முட்டை முந்தியதா? பெட்டை முந்தியதா?

எதையும் நகைச்சுவையாக மாற்றிவிட்டால், பிரச்னையின் தீவிரத் தன்மையைக் குறைத்துவிடலாம் என்பது இங்கு ஒரு தந்திரம். Taking the steam off என்பர் ஆங்கிலத்தில். தமிழ் சினிமாக்கள் செய்வது அதுதான். மேதை என்று கொண்டாடப்படுகிற ஒரு பத்திரிகையாளர், பத்திரிகை முதலாளி, மதுபான நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், நகைச்சுவை நடிகர், நாடகக்காரர், 1960 முதல் இறக்கும்வரை செய்தது அதைத்தான். எல்லாம் கேலி, கிண்டல் எனவாகிப் போனால் தாம் ஆதரிக்கின்ற ஆளும் வர்க்கத்தின் மேனி வியர்க்காது!

சொந்த மகள் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டால், மனைவி கொலை செய்யப்பட்டால், அதில்கூட கேலியும் கிண்டலும் தோன்றுமா எவருக்கும்?

சினிமா நடிகர் ஒழுக்கும் தக்காளிச் சாறுக்கு மூக்குச் சிந்திக் கண்ணீர் பெருக்கும் சமூகம் நாம். அசல் மனிதர் அடிபட்டு, உதிரம் ஒழுகக் கிடந்தால் அதைத் தக்காளிச் சாறு என்றெண்ணி வேடிக்கைதானே பார்ப்போம்!

வெறும் வெங்காயத்தைத் தல்லி உரித்து வைத்துக் கொண்டு, காய்ந்த ரொட்டி தின்பவனின், பச்சை மிளகாய் கடித்துக் கொண்டு பழைய கஞ்சியோ கூழோ குடிப்பவனின் துயரம் அர்த்தமாகுமா ஒரு சிலருக்கேனும்?

எல்லாம் பொழுது போக்கு நமக்கு!

விழுந்து இடுப்பு ஒடிந்தவனுக்கே வேதனை அர்த்தமாகும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.