மூதாதையின் கவிதை

மனித குலத்தின் புராதனமான பாடல்கள்

மனித நாகரிகத்தின் வரலாற்றில் இசையமைக்கப்பட்ட பாடல்களிலேயே தொன்மையானது என ஆய்வாளர்கள் கருதுவது 1400 B.C.E. (Before Current Era) ஆண்டுகளில் சுமேரியாவில் களிமண் பலகையில் எழுதப்பட்ட ’ஹூரியனின் ஆறாவது பாசுரம்’ என்ற பாடல். 2100 B.C.E. ஆண்டுகளில் பாபிலோனில் எழுதப்பட்ட ’ஹில்காமேசின் வீரபுராணம்’ மற்றும் 100 B.C.E ஆண்டுகளில் கிரேக்கத்தில் இயற்றப்பட்ட ’செக்கிலியோஸின் கல்லறை வாசகம்’ ஆகியவற்றைக் கவிதைகளிலேயே பழமையானவை எனச் சொல்லாம். இவை அனைத்தும் இசையமைக்கப்பட்டு இசைப் பாடல்களாகக் கேட்கக் கிடைக்கின்றன. 

மேற்சொன்ன பாடல்களைப் போலவே பழமையானவை தமிழின் சங்கப் பாடல்கள். ஆனால் சங்கப் பாடல்களுக்கு ஏன் இதுவரை எவரும் இசையமைக்கவில்லை? என்ற கேள்வி வியப்புக்கும் விவாதத்துக்கும்  உரியது.  

நம்மிடையே  உள்ள இரண்டாயிரம் வருடங்களின் புகழ் பெற்ற கவிதைகள் இசைவடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக ஆறு சங்கப் பாடல்கள் இசைவடிவம் பெற்று ’சந்தம் (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பது இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு.  இப்பாடல்களுக்கு இசையமைத்தவர் திருவாரூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இசையமைப்பாளர். ராஜன் சோமசுந்தரம். மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரியின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாகாணத்தில் உள்ள டர்ஹாம் சிம்பொனியின் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் குழு இத்தொகுப்புக்கு பின்ணனி இசை அளித்துள்ளது. இரண்டாயிரம் வருடங்களில் சங்கப் பாடல்களுக்கு நிகழாத ஒன்று என்பதால், இதை ஒரு கனவு முயற்சியாக வரலாற்று நிகழ்வாக கருத இடமிருக்கிறது. 

கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறநானூறு, பாடல் 192), கபிலரின் ’வேரல் வேலி வேர்கோட் பலவின்’ (குறுந்தொகை, பாடல் 18), செம்புலப்பெயல் நீராரின் ’யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ (குறுந்தொகை, பாடல் 40), ஒக்கூர் மாசாத்தியாரின் ‘முல்லை ஊர்ந்த கல்லுயரேறி (குறுந்தொகை, பாடல் 275), பெயரறியாத புலவர் ஒருவர் இயற்றிய ’கலம் செய் கோவே’ (புறநானூறு, பாடல் 258), கயமனாரின் ‘ஞாயிறு காயாது மரநிழற்பட்டு’ (குறுந்தொகை, பாடல் 378), என சந்தம் தொகுப்பில் தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆறு பாடல்களுமே சங்கப்பாடல்களின் மிகச்சிறந்த மாதிரிகள் என சொல்லத்தக்கவை. 

தொன்மையான கவிதைகளுக்கு இசையமைக்க மூன்று விதிகள்

வெவ்வேறு ஊர்களை, வாழ் நிலைகளை சேர்ந்த புலவர்கள் இயற்றிய பல்வேறு விதமான கவிதைகளை நம் முன்னோர்கள் ஆராய்ந்து அறிந்து கற்றுத் தெளிந்து தெரிவு செய்து தொகுக்க நமக்கு கிடைத்தவை எட்டுத்தொகை நூல்கள்.  இரண்டாயிரம் வருடங்களாக நீடித்து நிலை பெற்றுவிட்ட இக்கவிதைகள் கருங்கல்  சிலைகளைப் போல என்றென்றைக்குமாகக் காலத்தில் உறைந்து நின்று விட்ட மனித உள நிலைகளின் மாதிரிகள். சங்ககால தமிழரின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை காட்சிப்படுத்தும் உயிருள்ள துளிகள். காலம் உள்ளவரையும் நீடித்து நிற்கும் வல்லமை பெற்றவை.  ஆகவே சிறப்பான கவனம் கூடிய ஆளுகையை கோரி நிற்பவை.  

இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தைய கவிதைகளை இன்றைய மனிதன் ஒருவன் எவ்வாறு கையாள வேண்டும்? உலகின் தொன்மையான கவிதைகளுக்கு இசை வடிவம் அளிக்க முற்படும் இன்றைய நவீன யுக இசைஞன் கடைபிடிக்க வேண்டிய முறைமைகள் என, கீழ்க்காணும் எளிய அடிப்படைகளை வரையறுக்கலாம்.

அ) சொல் எண்ணி, சொற்சுவை குன்றாமல் சொற்களை சிதைக்காமல் கவிதையை கையாளுவது. 

ஆ) இசைக்குள் பாடலை வலிந்து சுருட்டி திணித்து வைக்காமல், கவிதையை முன்னிறுத்தி,  கவிதையை மையப்படுத்தி, சிற்பத்திற்கு ஆடை அணிவிப்பதுபோல கவிதையின் வரிகளை சுற்றி இசையை வனைவது. 

இ) கவிதையின் வரிகளை வெறுமனே பாடிவைக்காமல், கவிதையில் மையமாகி நிற்கும் கூறுபொருளுக்கும் உணர்ச்சி நிலைக்கும் இயையு உடைய ராகங்களில் மெட்டுகளை அமைப்பது; நவீன பாணியில் சமகாலத் தன்மையுடன் இசைக் கோர்வைகளை அமைத்தாலும் பாடல்கள் சுட்டும் மனநிலையை  காட்சிப்படுத்தும்படி இசைக் கோவைகளை அமைப்பது.

சுருக்கமாகச் சொல்வதானால் இப்பாடல்களின் தொன்மை, இவற்றுள் உறைந்து நிற்கும் மானுட மனத்தின் நுண்மை, கவித்துவம், அவைகளை காலந்தோறும் இயற்றிவரும் கவிஞனின் உலகளாவிய மனத்தின் காலாதீதம் ஆகியவற்றால் இப்பாடல்கள் ஆணையிட்டு கோரி நிற்கும் செவ்வியல் தன்மைக்கு உரிய மரியாதையுடனும் கவனத்துடனும் இப்பாடல்களை கையாளுவது எனலாம். 

சங்கப்பாடலுக்கு இசையமைப்பதன் சவால்கள்

சங்கப் பாடலகளுக்கு இசை வடிவம் அளிக்கும் ஓர் இசைஞன் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?  கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, தேவாரம், திருப்புகழ், குற்றாலக்குறவஞ்சி ஆகியவை இசைப்பதற்காக என்றே இயற்றப்பட்டைவை. எட்டுத்தொகை நூல்களான புறநானூறு, அகநானூறு மற்றும் குறுந்தொகையின் பாடல்களை பயிலும் எவரும் அவை இசைப்பதற்காக இயற்றப்பட்ட ’இசைப்பாடல்கள் (lyric)’ அல்ல, என்பதை உணர முடியும். 

இசைக்கு என உத்தேசித்து இயற்றப்படாத பாடல்களுக்கு இசையமைப்பது சவாலானது. இருந்தும் இந்த தொகுப்பின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவற்றிற்குரிய இயல்பான மனோபாவத்தில் அசலாக ஒலிக்கின்றன.  வழக்கில் இல்லாத சொற்கள் என்றாலும் அவை இசையை விட்டு விலகி துருத்திக்கொண்டு நிற்கவில்லை என்பதுடன், சொற்களின் நீட்டல்கள், குறுக்கல்கள், விளிகள் அனைத்துமே தங்களின் இயல்புக்கு உரிய பாந்தமான இடத்தை சமகால இசையின் கோர்வையில் கண்டு கொண்டுள்ளன. துல்லியமான பின்னணி இசையும், உலகத்தரமான ஒலிப்பதிவும் கேட்கும் அனுபவத்தை இனிமையான ஒன்றாக ஆக்குகின்றன. 

வழக்கமான பக்திப் பாடல்களின் மோஸ்தரை சங்கப் பாடல்களின் மீது போர்த்தவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது. இரண்டாயிரம் வருடங்கள் பழமையான வரிகள் சொற்கள் இசையால் எவ்விதமான சிதைவையும் அடையவில்லை என்பதுடன் ஒவ்வொரு வரியும் சொல்லும் அவை உத்தேசிக்கப்பட்ட காட்சியையும் உணர்வெழுச்சியையும் அர்த்தச் செறிவுடன் இயல்பாக முன்வைக்கின்றன. பாடல்களையும் அவற்றின் உணர்வு நிலைகளையும் சிதைக்காமல் பாடலுக்குள் பொதிந்துள்ள உன்னதத்தை மேலேற்றும்படி அமைந்துள்ள இசை குறிப்பிடத்தக்கது. 

இசையின் வெற்றி

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளின் பின் உள்ள கவிஞனின் மனவிரிவிவை இசையாக்க சர்வ ஸ்வரங்களையும் கொண்டு முழுமை பெற்ற ஒரு சம்பூர்ண ராகமே சரியான தேர்வாக அமைய முடியும். மேற்கத்திய இசையுடன் பின்னணியுடன் வருவதாலும் மேற்கத்திய இசையில் பரவலாக புழங்குவதாலும் ஒரு இசையமைப்பாளர் அநேகமாக சங்கராபரணத்தை தேர்ந்தெடுக்கக்கூடுவது என்பது இயல்பானது. தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசையிலும் தமிழின் தாலாட்டுப் பாடல்களிலும் மறைந்து வாழும் தொன்மையான ஆனந்த பைரவி ராகம் இந்த பாடலுக்கு சிறப்பான ஒரு தேர்வு. பாடலின் தொன்மையை அதற்குரிய மரபான நாட்டுப்புற இசையுடன் பொருத்துவதன் வாயிலாக இப்பாடல் தன் முழுமையை அடைந்துள்ளது. 

சம காலத்தின் உலக இசை மரபுகளின் பல்வேறு போக்குகளின் மாதிரியில் நவீன இசை மரபுகளின் கோவையாக இப்பாடலை அமைத்திருப்பது, விமானமே கண்டுபிடிக்காத காலத்தில் ’இந்த உலகமே என்னுடைய ஊர், உலகத்தின் மக்கள் அனைவருமே என் உறவினர்’ என்று அறைகூவ முடிந்த தமிழ்ச் சமூகத்தின் மூதாதை ஒருவனின் மன விரிவின் துணிவிற்கும், நாகரிக உயர்வுக்கும், பொருத்தமான தெரிவு என்று சொல்ல வேண்டும்.

தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடலும் அந்த பாடல் முன்வைக்கும் உணர்வுக்கும் வெளிப்பாட்டிற்கும் ஏற்ற பொருத்தமான ராகங்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய இசையில் சிம்பனி வாசிப்பு முறையை பின்பற்றி இயற்றி இசையமைக்கப்பட்டிருந்தாலும் பின்னணி  இசை உட்பட ஒவ்வொரு பாடலும் ஒற்றை ராகத்தில் அந்த ராகங்களின் இயல்பான ஸ்வரங்களை மட்டுமே கொண்டுள்ளன என்பது இப்பாடல்கள் ஒவ்வொன்றையும் அந்த ராகத்தின் செவ்வியல் தூய்மையுடன் நிற்க வைக்கிறது. 

ஒவ்வொரு பாடலும் அதன் உள்ளடக்கத்திற்குப் பொருந்தி வரும் உணர்வுபூர்வமான மிகவும் இயல்பான ராகங்களை தொகுப்பில் கண்டடைந்திருக்கின்றன. 

 • தலைவி பெரும் காதலில் வாடுகிறாள். விரைவில் வந்து அவளை மணம் செய்யமாட்டாயா? எனத் தலைவனைத் தோழி கேலியுடன் இடித்துரைப்பது, ’வேரல் வேலி வேட்கோட் பலவின்’ பாடல். இதில் பலாப்பழம் என்ற உவமை தலைவனின் நிலவளம், தலைவியின் அழகு, அவளின் உள நிலை, காவலற்ற தன்மை ஆகிய அனைத்தையு சுட்டி நிற்கிறது. தலைவன் மீது தலைவியின் தோழி வைக்கும் மெல்லிய கேலி,  தோழியின் விளையாட்டுத் தன்மை, இடித்து உரைப்பதன் குற்றச்சாட்டு ஆகிய அனைத்தும் உரையாடலின் சரளம் கூடிய ஆபேரியில் அமைந்துள்ளன.
 • போரிலிலிருந்து மீண்டு வரும் தலைவனின் வருகையை நோக்கிக் காத்திருக்கும் தலைவி தன் தோழியுடன் உரையாடுவது ‘முல்லை ஊர்ந்த’ பாடல். தலைவியின் விரகத்தின் மெல்லிய தவிப்பு, அதனால் விளையும் பொறுமையின்மை ஆகியற்றை தர்மவதி ராகம் சரியாக முன்வைக்கிறது.
 • இறந்து விட்ட தலைவனின் பிரிவு தாளாமல்  அவனுக்கு புதைதாழி செய்யும் கலைஞனின் முன் கதறி அழும் தலைவியின் பாடல் ’கலம் செய் கோவே’. தலைவனை இழந்து நிற்கும் தலைவியின் பெரும் துக்கத்தை, கையறு நிலையின் ஆற்றாமையை சொல்ல சக்கரவாகம். 
 •  மணமுடித்துக் கணவனுடன் தன்னை விட்டுப் பிரிந்து ஊர் நீங்கும் வேளையில் தாயின் உணர்வுகளை  வெளிப்படுத்துவது ’ஞாயிறு காயாது மரநிழல் பட்டு’. மகளின் பிரிவை எதிர்நோக்கி தாய் எதிர்கொள்ளும் மென்சோகம், அதே சமயம் அவளுக்குப் பொருத்தமான தலைவன் அமைந்ததில் தாய் கொள்ளும் மனநிறைவு,  தன் மகளின் பொருட்டு தாய் இறையின் முன் வைக்கும் பிரார்த்தனை மற்றும் அவள் விடுக்கும் வாழ்த்துச்செய்தியின் மங்கலம் ஆகிய அனைத்தையும் ஒருசேரப் பாட மத்யமாவதி.   
 • மென்மையான நீரொழுக்கைப் போலப் பக்கவாட்டில் படர்ந்து பெருகும் நெகிழ்வும், அலையாடி எழுந்து பெருகிச் செல்லும் நீர்மையின் குளுமையும் கொண்ட ராகம் த்விஜாவந்தி. மழைத்துளியாகவும், மெல்லிய நீரொழுக்காகவும் பெருகும் வெள்ளமாகவும் ஆகும் காதலை இசைக்கவும், செம்புலப் பெயல்நீர் போல ’அன்புடை நெஞ்சங்கள் கலந்துவிட்டதை’ குறிக்கவும் பொருத்தமான தேர்வு. 

உலகின் எம்மொழியின் சிறந்த கவிதையைப் போலவும் மனித உணர்வுகளை வரிகளின் வழியாக அகநிலக் காட்சிகளாக விரித்துக் காட்டுபவை இந்த தொகுப்பில் உள்ள பாடல்கள். அவ்வரிகளின் காட்சித் தன்மையை இசையின் வழி ஒரு சம்பவமாக நம் கண்முன் நிகழ்த்திக்காட்ட முடிந்திருப்பதை இத்தொகுப்பின் முக்கியமான வெற்றி என்று சொல்லவேண்டும். 

பாடல் வரிகளுடன் இசைக்கோவை நுட்பமாகப் பொருந்தி வரும் புள்ளிகள் பல. 

 1. ’கலம் செய் கோவே’ பாடலில் துயரால் பிறழ்ந்த தலைவியின் அகத்தை காட்டும் படி, தொடக்கத்தில் ஸ்ருதி பிறழ்ந்த ஒலிக்கும் தந்தி இறுதியில் அறுந்து வீழ்வது; பாடல் முடிவை நோக்கிச் செல்லச் செல்ல அதிகரித்துக்கொண்டு வரும் ஆற்றாமைக்கு இறுதி வரிகளில் உயர்ந்து எழுந்து செல்லும் குழலிசையும் மோசமாகிச் செல்லும் அவளின் உயிர் நிலைக்கு தாழ்ந்து கொண்டே வந்து இல்லாமலாகும் செல்லோவின் தந்தி இசையும் குறியீடாவது. 
 2. ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்ற வரிகளைத் தொடர்ந்து ஆண் குரலும் பெண் குரலும் முரணான ஸ்தாயிகளில் இணைந்து முயங்குவது.  இருவருக்குமான ஊடலின் பிணக்கை குறிப்பால் உணர்த்தும் விதமாக ஆண்குரல் தழைந்து  செல்கையில் பெண்குரல் மீறிச் செல்வது. 
 3.  வேரல் வேலி வேர்கோட பலவின் பாடலில் தலைவியின் தோழி வைக்கும் மெல்லிய கேலியை, விளையாட்டை குழலின் துள்ளல் இசை கூற,  ’யாரது அறிந்திசினோரே’, என்ற மையமான வரி தலைவனைப்பார்த்து தோழி வைக்கும் இடித்துரைப்பாக திரும்பத் திரும்ப ஒலிப்பது; கேள்விக்கு விடையைப் போல ’காமமோ பெரிதே ’என்ற வரி வருவது. 
 4. ’முல்லை ஊர்ந்த’ பாடலை ஓர் உண்மைச் சம்பவமாக நிகழ்த்திக் காட்டுகிறது இசை. கல்லின் மேல் ஏறிப்பார்க்க ’சென்மோ தோழி’ என தோழியை அழைக்கும் தலைவியின் உற்சாகத்தைப் படியெடுத்து, அவளின் குரலைப் பின் தொடர்ந்து வா வா என தோழியை அழைக்கும் குழலின் துள்ளல் இசை; ’தேர்மணிக்கொல்’ வரிகளை தொடர்ந்து தொலைவில் தென்படுவது தலைவனின் தேர்தான் என்பதை உறுதிப்படுத்தி அது தலைவன்தான் என்பதை அறிவிக்கும்படியாக திடீரென தோன்றி எழுந்து இணையும் தலைவனின் பின் குரல்; தலைவனின் தேர் ஊரை நெருங்கும்போது தலைவியின் உற்சாகத்தையும் இதயத் துடிப்பையும் படியெடுக்கும் திடீரென உயர்ந்தெழுந்து வேகம் கூடும் பின்னணி இசை, மற்றும் தலைவனின் தேர் அதிவேகமாகத் தலைவியின் இல்லத்தை நெருங்கி அடைந்து நிறுத்தத்திற்கு வருவது என இப்பாடல் ஓர் உண்மை நிகழ்வாக நம் கண் விரிகிறது. 

இந்த முயற்சி ஏன் முக்கியமானது?

தமிழ்நாட்டின் திரைப்படங்கள் மியூஸிக்கல் (musical) என்று சொல்ல முடிகிற பாடல்கள் நிரம்பிய ஒரு வகையான இசைச் சித்திரங்கள். திரைத் துறையின் எல்லைகளின் பிரம்மாண்டத்தைத் தாண்டிய சமகால இசை என்பது தமிழ்நாட்டில் அரிதாகவே நிகழ்கிறது. ஆகவே, ’சமகால இசை’ (contemporary music) என்றாலே அது ’திரை இசை’ என்று ஆகிச் சுருங்கி விட்டிருக்கிறது. சமகால இசையில் திரை இசை தவிர பெரும்பாலும் வேறு இல்லை எனும் அளவுக்கு.  உலக இசையின் பரப்பில் வைத்துப் பார்த்தால் தமிழ்நாட்டின் இந்நிலை ஒரு சலிப்பூட்டும் விந்தை. 

இன்னொரு பக்கம் கர்நாடக இசையின் ராகங்களில் இசைக்கப்படுவது எந்த விதமான பாடலாக இருந்தாலும் (பக்திக்கு சம்பந்தமில்லாத பாடலாக இருந்தாலும்), அவைகளின் மீதும் பக்தி ரசம் ஊறிய, பக்திப் பாடல்களுக்கே உரிய இசை அணிகளை அப்படியே எடுத்துப் போர்த்தி பக்திப் பாடலின் வடிவில் பாடுவதே இசை மேடைகளில் பொதுவாகக் காணக்கிடைக்கிறது. 

இந்நிலையில் கர்நாடக இசையின் மரபான ராகங்களைக் கொண்டு மேற்கத்திய ஒழுங்கின் பின்னணியில் சமகாலத்தின் நவீன இசையில் சங்கப் பாடல்களை அவை கோரி நிற்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்படி, அசலான ஒரு வடிவில் முன்வைப்பதால் ’சந்தம்’ குறிப்பிடும்படியான முக்கியமான ஆக்கமாகி நிற்கிறது. 

சங்கப் பாடல்களைப் பொறுத்தவரை அவற்றின் உவமைகள், உருவகங்கள், கவிநயம், சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றை வியந்து போற்றுவதுடன் நின்று விட்டது தமிழ் கூறும் நல்லுலகு. ஆகவே ’சந்தம்’ போல இன்னும் பல தொகுதிகள் உருவாவதற்கான வெளியும் அவசியம் இருக்கத்தான் செய்கிறது. சங்க இலக்கியங்களின் வீர கதைப் பாடல்கள், காதல் பாடல்கள், கதைப் பாடல்கள் ஆகியவை நம் செவ்வியல் பண்பாட்டு இசைப் பாணியில் வடிவெடுத்துப் புத்துயிர் கொள்ள ’சந்தம்’ ஒரு முன் மாதிரியாகவும் இனிய ஆரம்பமாகவும்  அமையட்டும்.  

4 Replies to “மூதாதையின் கவிதை”

 1. Excellent, very brave venture and it has come out s…o beautiful. Makes the heart swell with pride and eyes shed tears of joy at having heard these timeless poetry very naturally and melodiously sung. No words can describe the happiness I felt.

  Thanks Solvanam for the article, thanks to the writer of the review and thanks to all the artists featured in the album. I will get this album and listen to it again and again.

Comments are closed.