முள் முனை

“எழுது கோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்” இது பாரதி சொன்னது.  “அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு, நெறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி, குறுகிய செயல்கள் தீர்த்து, குவலயம் ஓங்கச் செய்வாய், நறுமண இதழ் பெண் நங்காய், நின் நலம் காணார் ஞாலம் காணார்.” இது அவரது தாசன் சொன்னது.  “நான் படைப்பதனால் என் பேர் இறைவன்,” என்றார் கண்ணதாசன். இதழ்கள் நான்காவது தூண் என போற்றப்படுகின்றன. அவைகளின் வீச்சு அதிகம்; மக்களுக்குச் சரியான வழிகாட்டவேண்டும்; அறத்தின் சார்பில் நின்று பேச வேண்டும்; சமுதாய ஏற்ற இறக்கங்களைச் சமன் செய்ய மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்; மனிதன் வாழ்வதற்குத் தகுதியாக பூமி என்றும் இருக்க, இயற்கைச் சூழல் கேடுகளை எடுத்துக்காட்டி போராட வேண்டும்; நாட்டின்ஆன்மாவைக் காட்டுவதாக, அதன் மக்களின் பண்பாடுகளைப் போற்றுவதாக அமைய வேண்டும். 

சீரிய எண்ணங்கள் சிதைந்து போய்க்கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகிறோம். பரபரப்பிற்காக செய்திகள் விதைக்கப்படுகின்றன. விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் ஊகத்தின் அடிப்படையிலும் கள நிலவரம் புரியாமலும் இதழ்கள், குறிப்பாக சில சமூக அரசியல் இதழ்கள் தங்கள் இன மொழி அடையாளங்களைப் பெரும்பாலும் புலப்படாவண்ணம் மறைத்து படிப்போரை மூளைச்சலவை செய்துவிடுகின்றன. நிர்வாகம் பல்வேறு சமயங்களில் அயலாரிடம் சென்றுவிடுவதால், உண்மைக்குரல் ஒடுங்கி அடங்கிவிடுகிறது. மேலும், பத்திரிகை தர்மம் என்ற சொல் அடையாளம் இழந்துவிட்டது. இல்லையெனில் சீனாவின் கொரோனோ வைரஸை வால் ஸ்ட்ரீட் இதழ்  ‘ஆசியாவின் நோய்மகன் சீனா’ எனத் தலைப்பிட்டு எழுதியிருக்குமா? மனிதர் சாக மனிதர் சிரிக்கும் கீழ்மை அல்லவா இது? 

ஸ்டீஃபன் கார்டன் எழுதிய  ‘சிடிசன் ரிபோர்டர்ஸ்’ குறித்து லிசா முன்டே எழுதிய ஐடா டார்பெல்(Ida Tarbell) என்ற சிறப்புமிக்க இதழாளரைப் பற்றிய குறிப்பு எப்படி எழுதுகோல் அறத்தில் நின்று செயல்படவேண்டுமென்ற முனைப்போடு டார்பெல் செயல்பட்டதைச் சொல்கிறது. 

மக்களாட்சியின் இரு பெரும் பிரிவுகளான பழமைவாதமும், முற்போக்கு வாதமும் ஒருபுறத்திலும், தொழில்நுட்பம் சார்ந்த மகத்தான வளர்ச்சி ஒரு புறத்திலும் நிலவிய காலம். சமூகத்தில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள், பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிய அச்சமும், தயக்கமும், சிறிது ஊக்கமுமான நிலைப்பாடுகள், வெள்ளைக் கறுப்பின பேதங்கள் மிகுந்த சூழலில் டார்பெல் இதழியலாளராக வருகிறார். வடமேற்கு பென்சில்வேனியாவில் பிறந்து வளர்ந்தவர் இவர். இவரது தந்தைக்கு சிறு எண்ணை வயல் இருந்தது. அதைப் போன்ற பலவற்றை மறைமுகமாக அபகரித்து வளர்ந்து கொழுத்து நின்றது ராக்ஃபெல்லரின் ஸ்டான்டர்ட் ஆயில் நிறுவனம். எண்ணையை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் சேவைகள் பெரும் நிறுவனத்திடம் குறைந்த தீர்வையும், சிறு/ குறு வியாபாரிகளிடம் அதிகக் கட்டணமும் பெற்றன.  “நியாயமற்ற சலுகைகளை நான் வெறுக்கத் தொடங்கினேன்,” என்கிறார். இதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல குறு/ சிறு வர்த்தகர்கள் நலிந்தனர். தங்கள் உடமையான நிலம் போய் அவர்கள் தொழிலாளிகளென மாறினர். சட்டங்கள் உழைப்பை மதிப்பதாக எப்போதுமே இருக்காது போலும். 

20-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் அது. டார்பெல் அக்காலத்தில் அரிதான கல்லூரிப்படிப்பு படித்த பெண். படித்த பெண்கள் ஒன்று திருமணம் செய்து கொள்ளலாம், அல்லது ஆசிரியையாக இருக்கலாம் அல்லது இறை சேவையில் ஈடுபடலாம். இவருக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை. தன் கனவுகளுக்குத் திருமணம் ஒரு தடை என நினைத்தார். தமிழ்ப் பெருமாட்டி ஒளவையார், தனக்கு இளமையும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம் என்று வேண்டி வரம் பெற்றாராம்; நாடு, மொழி, காலம் மாறுபட்டிருந்தாலும், சங்க காலத்திற்கும் முன்பிருந்து 20-ம் நூற்றாண்டு வரை(இன்றும் கூட எனச் சொல்லலாம்) பெண்ணுக்குக் கட்டுக்கள் அதிகம். 

சில காலம் பார்த்த ஆசிரியை வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. முன்னேற்ற இதழ் என்றாலும் அதில் ஊக்கமிகு செயல் இல்லை என்பதால் ‘Chautauquan’ இதழில் நிலைக்க விரும்பவில்லை. தனது முப்பதாவது வயதில் பாரிசுக்குப் போய் நிறுவனம் சாரா செய்தியாளராக சில காலம் வேலை பார்த்தார். குயவர்களையும், மீனவர்களையும் பற்றி ந்யூ யார்க்கரின் ஜோசப் மிச்செல், தானியங்கள் விளைவிப்போர் பற்றி ஜான் போன்றவர்கள் எழுதிய அரை நூற்றாண்டுகளுக்கும் முன்னரே களத்திற்கு நேரே சென்று எழுதியவர் இவர். (தமிழகத்தில் ராஜம் கிருஷ்ணனும் கள ஆய்வு செய்து எழுதியவர்.)

அதிகம் அறியப்படாத இடங்கள், துறைகள், பொது மக்கள் ஆகியோரைப் பற்றி இவர் எழுதியவை ஐரோப்பாவிற்கு வந்த போது மெக்லூரை(SS McClure) இவரைத் தேடி வரவைத்தது. ’பாரீஸின் வீதிகளில் வலம் வரும் மேன்மை மிகு படைப்பு’ என்று மெக் இவரை வியந்தார்: ‘ஆ! இந்தப் பெண் சிறப்புடைய எழுத்தாளர்’. 

சில நிகழ்வுகள் வரலாறு ஆவது போல் இந்த இருவரின் சந்திப்பைச் சொல்லலாம். SS McClure, McClures’ என்ற இதழின் ஆசிரியர். எமிலி ஜோலியையும், லூயி பாஸ்சரையும் பேட்டி கண்டு டார்பெல் எழுதினார். SS McClure யின் நீடித்த தூண்டுதலின் பேரில் இவர் அமெரிகா திரும்பினார். நெப்போலியனின் சரிதம் எழுதுவதற்கு இவர் எடுத்த முயற்சிகள், ஆவணக்காப்பகங்களில் செலவிட்ட நேரங்கள் நல்ல பலனைக் கொடுத்தன. McClure இதழ் விற்பனை ஏறியது. இவருடைய அடுத்த தொடர் லிங்கனைப் பற்றியது. நான்கு வருடங்கள் ஆராய்ந்து 20 பகுதிகளாக இவர் வெளியிட்ட அந்தத் தொடர் அமோக வரவேற்பைப் பெற்றது. போட்டிப் பத்திரிகையாளர்களின் காதில் புகை வந்தது; ‘பெண் எழுதும் வரலாறாம்’ என்ற கேலி வேறு. ஆனால், இவருக்குத் தடைகள் என்பது செயலூக்கிகள் என்பது, பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை. இவர் தலைநகரின் பெருந்தலைகளைச் சார்ந்து லிங்கன் சரிதத்தை எழுதவில்லை. லிங்கனின் பிறப்பிடமான கென்டக்கிக்குச் சென்றார். அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஊராரிடம் கேட்டறிந்தார்; ஆவணக் காப்பகங்களுக்குச் சென்றார். இதுவரை யாருமே பேட்டி காணாதவர்களை, லிங்கனுடன் தொடர்புள்ளவர்களை சந்தித்துப் பேசினார். நூலகங்களில் தேடினார். லிங்கனின் வாரிசான அவர் மகனுடன் நட்பு கொண்டு அதுவரை வெளியாகாத, அரிதான லிங்கனின் படத்தைப் பெற்று வெளியிட்டார். மக்கள் நிஜ லிங்கனைப் பார்த்தனர். 

1860 முதல் 1895க்குள் அமெரிக்காவில் இதழ்கள் 575 லிருந்து 5000 எனப் பெருகின. அயர்லாந்தைச் சேர்ந்த SS McClure 1893-ல் ஒரு இதழ்  தொடங்கினார். இடையறாது எண்ணங்களாலும், திட்டமிடுதலாலும் இயங்கிய மூளைக்குச் சொந்தக்காரர் அவர்; சின்ன உடம்புக்காரர், அமெரிக்காவில் அன்னியர். கோக் போன்ற நிறுவனங்கள் விளம்பரங்களில் கொட்டும் பணமழையை அறிந்த அவர் , இதழின் விலையைக் 35 சென்டிலிருந்து 15 சென்டாகக் குறைத்து போட்டியாளர்களை வியக்க வைத்தார். வேலைப் பாதுகாப்பு, நேரம், சுதந்திரமாகச் செயல்படும் களம் இவை அமைந்தால் ஆற்றலுள்ளவர்களைக் கவரலாம் என அவருக்குத் தெரிந்திருந்தது. அது மட்டுமல்ல, இதழின் தார்மீக நோக்கமும், குறிப்பாடும் துலங்கி வர இத்தகைய அனுகூலம் அவசியம் என அவர் அறிந்திருந்தார். எழுத்தாளர்களைத் தேர்வு செய்வதிலும், அவர்கள் சொல்வதை கவனித்துக் கேட்பதிலும் அவருக்கு ஆர்வமிருந்தது. மக்களாட்சியின் உயர்விற்கு வழி சொல்பவை தங்கள் கட்டுரைகள் என உணர்ந்த டார்பெல், ஸ்டீஃபென்ஸ், பேகர், வில்லியம் ஆலென் ஆகிய நான்கு தூண்களின் பலத்தில் அவர் தன் கோட்டையைக் கட்டினார். 

அந்த இதழில் வயோலா ரோஸ்போரோ புனைவுகளின் ஆசிரியையாக இருந்தார். 1906-ல் விலியா கேதர் இணைந்தார். மெக்கிற்கும், டார்பெல்லுக்குமான புரிதல் என்பது அபூர்வமானது. மெக் மாற்றி மாற்றிச் சீர் செய்யப்பட்ட கட்டுரைகளைப் பலமுறை படிக்கச் சித்தமாக இருந்தது போல், இவரும் கருத்துக்களைக் கேட்பதிலும், அதை எழுத்தில் கொண்டுவருவதிலும் கருத்தாக இருந்தார்; சிறிது தன் திறமை இன்னமும் மேம்படவேண்டும் என நினைப்பவராகவும் இருந்தார்.  “அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இட்டு நிரப்பினர். அதிக மன ஊசலாட்டத்தில் இருக்கும் மெக்கை இவர் ஒரு சகோதரியைப் போல, அன்னையைப் போல நடத்தி இயல்படையச் செய்வார்.” என்று அங்கே பணிபுரிந்தவர்கள் சொன்னார்கள். இருவர் இடையே இருந்த அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் அருமையான விளைவுகளைத் தந்தன. மெக்கிற்கு இவர் மேல் ஈர்ப்பு இருந்தாலும், அதை டார்பெல் பிரதிபலிக்கவில்லை. 

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரிலுள்ள ஸ்டான்டர்ட் ஆயில் அலுவலகங்களுக்கு தன் பழுப்புக்கூந்தலை உயரே தூக்கி முடிந்து, நீளக் கவுன் அணிந்தவாறு வந்து சென்ற அந்த உயரமான பெண் இன்றைய புலனாய்வு இதழியலில் முக்கிய முன்னோடி. சளைக்காமல் ஆண்களின் அந்த உலகில் முன்னேறியவர். அந்தக் குழுமத்தைப் பற்றிய தரவுகளுக்காக அங்கேயே சென்றவர். ‘வேட்டை நாய்’ எனச் செல்லமாகச் சொல்லப்பட்ட ஹென்றி ராஜர்ஸ் இவருடன் அந்த நிறுவனத்தைப் பற்றி உரையாடியவர். இன்றைய மொழியில் அவர் நிறுவனம் சார்ந்த ஒரு செய்தி அமைப்பாளர் மற்றும் செய்திக் களன். அவர் கொடுத்து உபசரித்த பாலுக்கு டார்பெல் தன் பணத்தைக் கொடுத்து ‘இது தொழில் முறையான சந்திப்பு’ என்று சொல்லாமல் சொன்னார். தன் கேள்விகளின் ஆதாரம் அல்லது தகவல் அளித்தவர்கள் யாரென்பதை அவர் கடைசி வரையில் ‘வேட்டை நாயிடம்’ சொல்லவில்லை. அதே போல், தான் எழுதியுள்ளதைக் காட்டி பிழைகளைத் திருத்திக் கொண்டாலும், உண்மைத் தகவல்களை மாற்ற இசையவேயில்லை. இவருக்கு ராக்ஃபெல்லர் பேட்டி அளிக்க மறுத்த போது இவர் சோர்ந்துவிடவில்லை. ஃபெல்லர் பங்கேற்ற ஞாயிற்றுக் கிழமை பள்ளி உரையில் இருந்து சில தகவல்கள்; நீதி மன்றங்களில் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஃபெல்லர் அளித்த பிரமாணப்பத்திரங்கள், அந்தந்தப் பகுதியில் உள்ள சிற்றேடுகளில் அந்த நிறுவனத்தைப் பற்றி வந்த தரவுகள் மூலம் டார்பெல் 19 பகுதிகள் கொண்ட தொடரை எழுதினார். இவரது அருமைத் தந்தை தன் மகளுக்கு ராக்ஃபெல்லரால் தீங்கு நேர்ந்துவிடும் எனப் பயந்து அதைச் செய்ய வேண்டாமென்று சொல்லியும் கூட டார்பெல் கேட்கவில்லை. நவம்பர் 1902-ல் முதல் பகுதி வந்தது. மூன்றாம் பகுதி வெளியான இதழ், வாசகர்கள் பெருமளவில் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள உதவியது. ஆம், நிலக்கரிச் சுரங்க தொழிலாளிகளிடையே நிலவிய அமைதியின்மை பற்றி ரே பேகர் எழுதிய கட்டுரை, நகராட்சி நிர்வாகத்தில் இலஞ்சம் என்ற ஸ்டீஃபன்சன்னின் கட்டுரை, டார்பெல்லின் ஃபெல்லர் கட்டுரை மூன்றும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. இதழ் கடைகளிலிருந்து நிமிடத்தில் விற்பனையாயிற்று. அதற்கு 4,00,000 சந்தாதாரர்கள் வேறு இருந்தனர். அறிவுஜீவிகளின் திறமையான கூட்டு என்று அது பின்னர் எல்லரி செட்ஜ்விக்கால் சொல்லப்பட்டது. பரபரப்பிற்காக எழுதாமல், எல்லாம் இனிமையாகத்தான் இருக்கிறது என்று பூசி மெழுகாமல், உண்மைகளை, மேலும் தெளிவுகளை, எழுதுபவரின் உள்ளொளியோடு வழங்கினார்கள் அவர்கள். 

டார்பெல்லை மக்கள் தெரிந்து கொண்டனர்.  ‘எல்லாம் சொல்லியும், செய்தும் முடித்தாகிவிட்டது என்பது இல்லை,’ என்ற தாரக மந்திரம் இவரது. எதிர்பாராத இடங்களிலிருந்து உண்மைகளைக் கண்டறிபவர் என்ற போற்றப்படுபவரான ராபர்ட் கேரொவிற்கெல்லாம் முன்னோடி இவர். புலனாய்ந்து எழுதுவதற்கான புலிட்ஸர் பரிசு அப்போது வழங்கப்பட்டிருந்தால் அதற்கான தகுதி உடையவரும் இவர். 

மெக்கின் பெருமிதப் பகட்டுகளும், அவரது மன வீழ்ச்சிகளும், இரு எழுத்தாளப் பெண்களுடனான அவரது உறவும் நிறுவனத்திலிருந்து 1906-ல் முக்கிய ஆளுமைகளை விலகச் செய்தது. டார்பெல் ‘த அமெரிகன் மேகசைன்’னில் இணைந்தார். அதிலும் இன்றைக்கும் முக்கியமான பிரச்னையான பொது மக்களை வாட்டும், அதிகரித்துக்கொண்டே செல்லும் வரிகளைப் பற்றியும் அதனால் ஏறும் விலை வாசியைப் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். தான் பெண்ணாகப் பிறந்ததால் ‘பிரசுரிப்போர் ஆண்டு விழா’விற்கு அழைக்கப்படாமல் போன போது அவருக்கு வருத்தமிருந்தது. 1908-ல் நேஷனல் ப்ரஸ் க்ளப் ஆண்களுக்கெனவே தொடங்கப்பட்டது. பெண்களுக்கு பெருமை கிடைப்பதாகத் தெரிந்தவுடன் அவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். ஆனால் மெக்கிற்கு டார்பெல் மேல் நம்பிக்கை மிகுந்திருந்தது. உருக்கமாக அவர் டார்பெல்லுக்கு கடிதம் எழுதினார் “நான் கனவில் உன்னைக் கண்டேன். நீ என்னை அணைத்து முத்தமிட்டாய்.” டார்பெல்லும் அவரையும், அந்த அறிவு பூர்வமான தர்க்கங்களையும் இழக்கும் நிலைக்காக வருத்தப்பட்டார். மெக் அளித்த தோழமை எங்கும் கிடைக்கவில்லை. புரட்சிகரமானவர்கள் தங்கள் சித்தாந்தங்களுடன் இணையச் சொன்ன போது டார்பெல் தயங்கினார். நோக்கங்களுக்கும், ஒரு கொள்கையை மட்டுமே சார்ந்த செயல்பாடுகளுக்கும் இடையே இவர் சமாதானம் செய்து கொள்ள விரும்பவில்லை. அது இவருக்கு ஒவ்வாமையைத் தந்தது. எந்த இனிய நிகழ்வும் முடிவிற்கு வந்து விடுமல்லவா? 

புது சமுதாயத்திற்கான அறம் மற்றும் வளர்ச்சி  என்பதில் பத்திரிகைகளின் மகத்தான பங்கு என்பதை டார்பெல் போன்றவர்கள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே செயல் மூலம் நிரூபித்தார்கள். வானொலி போன்ற சாதனங்கள் பயன்பாட்டில் வரவில்லை;நிறுவனங்களோ அசுர உரு எடுத்தன. தொழிலாளர்களின் பாதுகாப்பும், உரிமைகளும் பெரிதெனக் கருதப்படாத நிலை. இந்நிலையில் ரூஸ்வெல்ட் முன்னெடுத்த நம்பிக்கையில்லா தீர்மானச் சட்டங்களும், உணவு மற்றும் மருந்துக்கட்டுப்பாடு விதிமுறைகளும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றன. குட்விண் எழுதிய ஒரு நூல்:The Bully Pulpit: Theodore Roosevelt, William Howard Taft, and the Golden Age of Journalism. அதில் அவர் அரசியல் ஊழல்கள், மைய அதிகாரம், உழைப்பவர் நிலை ஆகியவற்றை தோலுரித்துக் காட்டிய கட்டுரையாளர்களையும், இதழியலாளர்களையும், நிருபர்களையும் பாராட்டுகிறார். கார்டன் ஒரு இதழியலாளர். அவர் இன் சிடிசன் ரிபோர்டர்’:SS McClure, IdaTarbell, and The Magazine That Rewrote Amrica’-ல் எழுதுகிறார்: ‘இன்றைக்குப் போலவே அன்றைக்கும் அறை கூவல்கள்; இயைபுள்ள, தெளிவான, உண்மைகளைப் பேசும் கட்டுரைகள், அன்றாட சலிப்பிலிருந்து மட்டுமின்றி, எதை நோக்கி யாரால் நம் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது என்ற அறிதலை பொது மக்களிடம் உண்டாக்கின. திறமைகள், உழைப்பு, நல் நோக்கம் இவை அழகாகக் கலந்த கலவை அது. பல பாகங்கள் ஒன்றாக இணைந்து மிகப் பெரும் உரு எடுத்த விந்தை அது.’

தகவல்கள், தரவுகள், அறம், சத்யம் இன்றைக்கும் தேவைப்படும் இக்கோட்பாடுகளைப் பின்பற்றி செயல்படும் அனைவருக்கும் டார்பெல் சிறந்த முன்னோடி. 

{Ref:Review: Stephanie Gorton’s ‘Citizen Reporters’ }

(The Woman Who Made Modern Journalism:Ida Tarbell championed reportorial methods and investigative goals that are as potent today as ever. Liza Munde. Jan/Feb 2020 issue. Liza is the author, most recently, of Code Girls:The Untold Story of the American Women Code Breakers of World War II. She is a Senior Fellow at New America)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.