ஹா ஜின் எழுதிய நாசக்காரன் (Saboteur) என்ற இங்கிலிஷ் சிறுகதை. சீனாவை கதைக் களனாகக் கொண்டது.
தமிழில்: ராமன் ராஜா
சீனாவில் தற்போது கோவிட்-19 என்று பெரும் வைரஸ் தொல்லை. இந்த மாதிரி வியாதிகள் எல்லாம் எப்படி ஆரம்பிக்கின்றன, யாரால் பரவுகின்றன? இதைப் பற்றி 1996 வாக்கிலேயே தீர்க்க தரிசனமாக ஒரு கதை எழுதியிருக்கிறார் ஹா ஜின். ஓர் அப்பாவிக் குடிமகனுக்கு நீதி நியாயக் குறைவு ஏற்படும்போது இந்த மாதிரியெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பழுப்பு நிறத்தில் நுரைத்துப் பொங்கியது கோலா. அதன் அருகே வதக்கின வெள்ளரிக் காய், பன்றிக் கறி எல்லாம் புடை சூழ, இரண்டு அட்டைப் பெட்டிகளில் அரிசிச் சோறு சுடச் சுடக் காத்திருந்தது.
மிஸ்டர் சூ, தன் புத்தம் புதிய மனைவியுடன் தேன் நிலவுக்கு வந்திருந்தார். மூஜி ரயில் நிலையம் எதிரில் ஒரு ஹோட்டலில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரயிலைப் பிடிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சூ இரண்டு சாப் ஸ்டிக்குகளையும் ஒடித்துப் பிரித்தார்; நிதானமாக சாப்பாட்டை மெல்ல ஆரம்பித்தார். அவர் தாடை சுருங்கிச் சுருங்கி விரிந்தது.
அவர்களுக்கு வலது பக்க மேஜையில் இரண்டு ரயில்வே போலீஸ்காரர்கள். டீயை உறிஞ்சியபடியே தங்களுக்குள் ஏதோ பேசிச் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் தடியன், மறுவன் இளைஞன். அவர்கள்தான் இந்தக் கதையின் வில்லன்கள். அவ்வப்போது சூவும் அவர் மனைவியும் இருந்த பக்கம் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
அந்த ஏரியாவே அழுகின முலாம்பழ வாசனை அடித்தது. டேபிள் மீது ஈக்கள் சுழன்றன. எதிரே கூவிக் கூவிக் காய்கறி, பழம் விற்றுக் கொண்டிருந்தவர்கள், ரயிலைப் பிடிக்க விரைந்து கொண்டிருந்தவர்கள் என்று நெரிசல் கூட்டம். இளம் வெயில். சேர்மன் மாவோவின் சிலையின் கீழ் சில சோம்பேறிகள் கிரானைட் கதகதப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
மிஸ்டர் சூ, வருவது அறியாமல் நிதானமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். முகத்தில் களைப்பு எழுதி ஒட்டியிருந்தது. ஒரு வேளையாகத் தேன் நிலவு முடிந்ததே என்று கொஞ்சம் நிம்மதியாகக் கூட இருந்தது. இரண்டு மாதம் முன்புதான் மஞ்சள் காமாலை வந்து ஆளை சக்கையாய்ப் பிழிந்து விட்டுப் போயிருந்தது. இப்போது அலைச்சலில் அவருடைய ஈரல் மறுபடி தொந்தரவு கொடுக்க ஆரம்பித்திருக்கிறதோ என்று சந்தேகம். வயிற்றை அமுக்கினால் வலித்தது. ஒரு வேளை, போன ஹெபடைடிஸ் திரும்பி வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது.
எதிரே புது மனைவி கண்ணாடியைக் கழற்றிவிட்டு வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். கணவனை அக்கறையுடன் பார்த்தாள்.
‘இனிக்கும் இதயமே, எப்படி இருக்கிறீர்கள்? ‘ என்று விசாரித்தாள்.
“ராத்திரி சரியாகத் தூங்கவில்லை, அதுதான் ஒரே தலை வலி.”
“ஒரு ஆஸ்பிரின் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன் ?”
“பரவாயில்லை. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே. ஒரு தூக்கம் போட்டால் சரியாகப் போய்….”
அப்போது அந்தப் போலீஸ்காரர்கள் டீக் கோப்பையை எடுத்தார்கள். இவர்கள் இருந்த பக்கம் அலட்சியமாக வீசிக் கொட்டினார்கள். சூ, மனைவி இருவரின் காலிலும் சுடச் சுட டீ! செருப்பு முழுவதும் நனைந்துவிட்டது.
“ரௌடிப் பசங்க” என்று மனைவி பல்லைக் கடித்தாள்.
சூ எழுந்துவிட்டார். “காம்ரேட் போலீஸ் ! என்னய்யா இதெல்லாம் ?” என்றார் சத்தமாக.
தடிப் போலீஸ்காரன், கொஞ்சும் விலை மாது போன்ற குரலில் “எந்..த எதெல்லாம் ?” என்றான். இளம் போலீஸ்காரன் உதட்டை மடித்து உற்சாகமாய் விசில் அடித்தான்.
“ஆள் மேலே டீயை ஊத்திட்டீங்களே அப்பா ! இதோ பாரு, காலெல்லாம் நனைஞ்சு போச்சு.”
“பொய் ! தானே தன் மேலே ஊத்திக்கிட்டு, எங்களை முறைக்கிறியா? “
“காம்ரேட் போலீஸ், சட்டத்தைக் காப்பாத்தறதுதான் உங்க கடமை. நீங்களே அத்து மீறி சாதாரண பப்ளிக்கை இப்படிக் கொடுமைப் படுத்தலாமா?”
இப்போது அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டது.
தடிப் போலீஸ், தன் சகாவை நோக்கி, “இந்த ஆள் சரிப்பட மாட்டான். எடு விலங்கை! மாட்டு கையிலே!”
“என்னய்யா அக்கிரமமா இருக்கு!” என்று சூ கதறக் கதற, அவர் கையை முறுக்கி விலங்கைப் பூட்டி விட்டார்கள். மேலும் ஏதாவது பேசுவதற்குள் தடியன் துப்பாக்கியை உருவிக் காட்டினான்.
“எதுவானாலும் ஸ்டேஷன்ல வந்து பேசு. அது வரையில நாக்கை சுருட்டி உள்ளே வச்சுக்க.”
இளைஞன் தன் பங்குக்குக் குற்றம் சுமத்தினான்: “நீ ஒரு நாச வேலைக்காரன். பொது இடத்திலே வந்து சட்டம் – ஒழுங்கைக் கெடுத்துகிட்டு இருக்கே. தெரிஞ்சுதா?”
இளம் மனைவியால் பயத்தில் வாய் பேசவே முடியவில்லை. அவள் இப்போதுதான் காலேஜ் படிப்பை முடித்த பெண். போலீஸ் குற்றவாளிகளுக்கு விலங்கு போட்டுக் கைது செய்வார்கள் என்றெல்லாம் பேப்பரில் படித்திருக்கிறாளே தவிர, ஒரு கைதுப் படலத்தை நேரில் பார்த்ததே இல்லை. “ப்ளீஸ், ப்ளீஸ் !” என்று பரிதாபமாகக் கெஞ்சினாள்.
அவர் இழுக்க, போலீஸ்காரர்கள் இழுக்க, சூ சப்போர்ட்டுக்கு மேஜைக் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். “ஐயோ! நாங்க இப்போ ட்ரெயினைப் பிடிக்கப் போகணும். பையிலே பாருங்க, ரிசர்வ்ட் டிக்கெட்கூட இருக்கு!”
தடியன் அவர் நெஞ்சில் ஒரு குத்து விட்டான். “வாயை மூடு. உன் டிக்கெட் செத்துப் போச்சு!” துப்பாக்கிக் கட்டையைத் திருப்பி அவர் கையில் ஓங்கி அடிக்க, சூ பதறிப் போய் மேஜையைக் கைவிட்டார். இரண்டு போலீஸ்காரர்களும் பக்கத்துக்கு ஒரு பாதியாக அவரை ஏறக் குறையத் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.
இனி அவர்களோடு போவது தவிர வேறு வழியில்லை என்பது புரிந்துவிட்டது. சூ தலையைத் திருப்பி மனைவியைப் பார்த்துக் கத்தினார்: “எனக்காகக் காத்திட்டிருக்காதே. ரயிலைப் பிடித்துப் போயிடு. நாளைக் காலைக்குள்ள நான் வரலேன்னா, யாரையாவது இங்கே அனுப்பு”.
அவள் தலையை மட்டும் ஆட்டினாள். வாயைப் பொத்திக்கொண்டு விம்மினாள்.
ரயில்வே போலீஸ் ஸ்டேஷனின் பின் பக்கம் இருந்தது அந்த லாக்கப் ரூம். சூவின் ஷூவில் இருந்த லேஸ் கயிறுகளை எச்சரிக்கையாக உருவிய பிறகுதான் உள்ளே அடைத்துப் பூட்டினார்கள்.
ஒரு சின்ன ஜன்னல்தான்; ஆனால் கம்பிகள் கடப்பாறை கடப்பாறையாக இருந்தன. அப்பால் ஒரு தோட்டம் தெரிந்தது. சில பைன் மரங்கள் வெயில் காய்ந்து கொண்டிருந்தன. அசந்தர்ப்பமாக உல்லாச ஊஞ்சல் ஒன்று தொங்கியது. மாடியில் சமையலறை இருக்க வேண்டும். ‘சுப் சுப் சுப்’ என்று மாமிசம் வெட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
குறுகலாக இருந்த பெஞ்ச்சில் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டார் சூ. ஒரே அசதியாக இருந்தது. போலீஸ்காரர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று யோசிக்கக் கூட முடியவில்லை. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை – கலாச்சாரப் புரட்சிதான் முடிந்து போய்விட்டதே? கட்சி இப்போதெல்லாம் ‘சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்’ என்றுதான் பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறது. எனவே காவல் துறையினர் சட்டத்தை மதிப்பதில் சாதாரண மக்களுக்கு உதாரணமாக நடந்து கொள்ள வேண்டாமோ?
‘அமைதியாக இரு, சூ. பதறாமல் பக்குவமாக உண்மையை எடுத்துச் சொன்னால், போலீஸ் ஒன்றும் தலையை வாங்கி விடமாட்டார்கள்’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார்.
பிற்பகலில் அவரை இரண்டாவது மாடியில் இருந்த விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். போகிற வழியில் மாடிப் படிக் கட்டில் அந்த குண்டு போலீஸ்காரன் மறுபடி எதிர்ப்பட்டான். இவரைக் கண்டதும் இளித்துக் கொண்டே விரல்களைத் துப்பாக்கியாக்கி ‘டுமீல்’ என்று சுட்டுக் காட்டினான். ‘போடா, கூமுட்டை!’ என்று சூ (மனதுக்குள்தான்) திட்டிக் கொண்டார்.
விசாரணை அறையில் இருந்த மேஜை ஒரு ஃபர்லாங்க் நீளம் இருக்கும் போல் இருந்தது. அந்தக் கோடியில் தலைமை அதிகாரி, பக்கத்தில் கழுதை மூஞ்சியுடன் யாரோ ஒருவன், இந்தப் பக்கம் கைது செய்த குண்டன். பிரித்து வைத்த ஃபைல் ஒன்றில் இவருடைய கேஸைப் பற்றிய காகிதங்கள் படபடத்தன. ‘அட! அதற்குள்ளாகவா நம்மைப் பற்றி இவ்வளவு காகித வேலை செய்துவிட்டார்கள்!’ என்று ஆச்சரியப்பட்டார் சூ. இன்னும் யோசித்துப் பார்த்தால், நம் பெயரில் ஃபைல் ஒன்று ஏற்கனவே இருந்திருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அது எப்படி? மூஜி நகரத்துக்கு அவர் வருவதே இதுதான் முதல் தடவை. அவர் வசிப்பதோ, முன்னூறு மைல் தள்ளி!
கையில் இருந்த பேப்பரைப் பார்த்தபடியே “உங்கள் பெயர் ?” என்றார் அதிகாரி. அச்சிட்ட படிவத்திலிருந்து கேள்விகளைப் படிக்கிறார் போலிருந்தது. பக்கத்தில் க்ளார்க் ஒருவன் கறுப்பு மைப் பேனாவால் எழுதிக் கொள்ளத் தயாராக இருந்தான்.
“சூ மகுவாங்.”
“வயது?”
“முப்பத்து நாலு.”
“வேலை?”
“காலேஜில், லெக்சரர்.”
“எங்கே?”
“ஹார்பின் பல்கலைக் கழகம்.”
“அரசியல் ஈடுபாடு?”
“கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.”
அதிகாரி பேப்பரைக் கீழே வைத்தார். “உங்கள் மீது இருக்கிற குற்றச்சாட்டு, பொது இடத்தில் நாச வேலை செய்தது. அதனால் இது வரை பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், நீங்கள் ஒரு கட்சி உறுப்பினர். கட்சிக்காரர் என்பவர் பொது ஜனங்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா ? அவர்களே இப்படிச் செய்தால் – தண்டனையும் கடுமையாகத்தான் இருக்க வேண்டும்.”
“ஐ’ம் சாரி சார்,..” என்று இடை மறித்தார் சூ.
“என்ன ?”
“நான் எதுவுமே செய்யலை சார். உங்க போலீஸ்காரங்களைக் கேளுங்க. அவங்கதான் சட்டம் ஒழுங்கையெல்லாம் நாசமாக்கறவங்க. நான் பாட்டுக்கு மனைவியோட சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்போ, வேணும்னே காலிலே டீயைக் கொட்டினாங்க. தட்டிக் கேட்டதுக்கு, துப்பாக்கியால அடிச்சு விரலை உடைச்சே விட்டுட்டாங்க.”
“அதுக்கு என்ன ஆதாரம்? சாட்சி இருக்கா? எப்படி நம்ப முடியும்?”
“இதுதான் சார் சாட்சி” என்று பரிதாபமாக கையைக் காட்டினார்.
“இதை வெச்சுக்கிட்டு உங்க கால்ல டீ கொட்டிச்சுன்னு எப்படி நம்பறது? நீங்களே கூட உங்க விரலை உடைச்சிகிட்டிருக்கலாம் இல்லையா?”
“நான் சொல்றதெல்லாம் உண்மை, உண்மை, உண்மை!” பொங்கி எழுந்துவிட்டார் சூ. “உங்க போலீஸ் ஸ்டேஷனே என் கிட்ட வந்து மன்னிப்பு கேட்கப் போகுது, பாருங்க. என் ரயில் டிக்கெட் வீணாப் போச்சு; என் கல்யாணத்துக்கு வாங்கின ஷூ ரெண்டும் நாசமா போச்சு! தலை நகரத்துல நாளைக்கு எனக்கு ஒரு மாநாடு இருக்கு – அதுக்கும் நேரத்தோட போக முடியாது போலிருக்கு. இத்தனைக்கும் சேர்த்து நீங்க எனக்கு வப்பையா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருக்கும். நான் ஏதோ பார்க்கிறதுக்கு சாதுவா இருக்கேனேன்னு தப்புக் கணக்கு போட்டுட்டீங்க போல இருக்கு. நீங்க குசு விட்டா, நாங்க பயந்து நடுங்கிருவோமா?”
சூவின் அடங்கிக் கிடந்த அருமை பெருமைகள் எல்லாம் சரம் சரமாக வெளியே புறப்பட்டன: “நான் படிச்சவன்யா. பட்டம் வாங்கினவன். தத்துவவாதி. டையலக்டிகல் மெடீரியலிஸம்னு கேள்விப்பட்டதாவது உண்டா? உங்களுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகுது? அதில நான் எக்ஸ்பர்ட்! தினச் செய்தி பத்திரிகையில எழுதுவேன். நாளைக்கே உங்களைப் பத்தி எழுதி நார் நாரா கிழிச்சுத் தொங்க விடறேனா இல்லையா பாருங்க. சுப்ரீம் கோர்ட்டுக்கு வேணாலும் போறேன், இரண்டில ஒண்ணு பார்த்துடறேன். உங்க பேரு என்ன, ஆபீசர்?.. . அட, சொல்லுய்யா!”
கடந்த காலத்தில் இந்த மாதிரி சூவின் பராக்கிரமங்கள் வெளிப்படும் போதெல்லாம், அவர் விரும்பிய காரியம் நடந்திருக்கிறது. ஆனால் இந்த முறை பலிக்கவில்லை.
“சும்மா ஓவரா ஃபிலிம் காட்டாதய்யா!” என்றான் கழுதை மூஞ்சியன். “உன்னைப் போல எத்தனை பேரைப் பார்த்திருக்கோம்? இதைக் கொஞ்சம் பாரு” என்று ஃபைலை அவர் பக்கம் நகர்த்தினான். “நீ செய்த கலாட்டாவையெல்லாம் கண்ணால பார்த்த சாட்சிகள் வாக்கு மூலம் கொடுத்திருக்காங்க. இது போதும். உன்னைப் பிடிச்சு உள்ளே வைக்கிறதுக்கு!”
மேலோட்டமாகப் படித்துப் பார்த்தார் சூ. திக்கென்று இருந்தது. ஃபைலில் வித விதமான கையெழுத்துக்களில் பல புகார்க் கடிதங்கள் இருந்தன. ரயில்வே ஸ்டேஷன் எதிரே சூ வம்பு வழக்காடியதாகவும், அமைதியாக இருக்கச் சொன்ன போலீஸ்காரர்களைப் பார்த்துக் கத்தி ரகளை செய்ததாகவும் எழுதியிருந்தது. சாட்சிகளில் ஒரு பெண்மணி, தான் ஷாங்காய் துறைமுகத்தில் கொள்முதல் ஏஜெண்ட்டாக இருப்பதாக அடையாளம் தெரிவித்திருந்தாள். ஷாங்காய்க்காரிகள் சரியான சமயம் பார்த்து இங்கே எப்படி வந்தார்கள்!
சூ மெல்ல முனகினார். பய வலியுடன் வயிற்று வலியும் சேர்ந்துகொண்டது. அடி வயிற்றிலிருந்து ஆரம்பித்து விலாவுக்குத் தொற்றி ஏறியது வலி.
“செஞ்சது எல்லாம் தப்புன்னு ஒத்துக்குங்க” என்றார் போலீஸ் அதிகாரி. “நீங்க செய்த குற்றம் கொஞ்சம் பெரிசுதான். ஆனா தப்பை ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துட்டா அதிகம் பிரச்னை இருக்காது. என் தவறை உணர்ந்தேன் – திருந்தினேன் – இனி ஒரு போதும் ஒழுங்கை மீற மாட்டேன்னு விவரமா சுய பரிசோதனை செய்து எழுதுங்க. உங்களை ரிலீஸ் பண்ணறதும் பண்ணாததும் உங்க நடத்தையைப் பொறுத்து இருக்கு.”
“நடக்காது! நான் குற்றவாளின்னு அர்த்தம் வர மாதிரி ஒரு வார்த்தைகூட எழுதித் தரமாட்டேன். ஏன்னா நான் நிரபராதி… அதிருக்கட்டும், இப்போ நீங்க எனக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்க. நாளைக்கு எங்க யுனிவர்சிடிக்காரங்க ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டா உபயோகப்படும்.”
“மன்னிப்புக் கடிதமா? அதெல்லாம் எங்க வரலாற்றிலேயே எழுதினதில்லை,” இகழ்ச்சியாகச் சிரித்தார்கள் விசாரணை அதிகாரிகள்.
“ஏன், இப்போ முதல் தடவையா வரலாறு படையுங்களேன்.”
“தேவையில்லை. பார்த்துடலாம். கடைசியில நீங்க எங்க வழிக்கு வந்துதானே ஆகணும்?” அதிகாரி சிகரெட் புகையை சூவின் முகத்தருகே ஊதினார்.
இரண்டு காவலர்கள் வந்து கைதியைக் கைப்பிடியாகப் பிடித்து இழுத்துப் போனார்கள்.
“நான் உங்களைப் பத்தி மாநில அரசுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறேன். சும்மா விடப் போறதில்லை இதை! நீங்கள்ளாம் ஜப்பான் மிலிடரி போலீசை விட மோசம்!” சூவின் சாபங்கள் தூரத்தில் தேய்ந்து ஓய்ந்தன.

ராத்திரி டின்னருக்கு ஒன்றும் சுவாரசியமில்லை. ஒரு பன் ரொட்டி, கொஞ்சம் சிறுதானியக் கஞ்சி, ஒரு துண்டு டர்னிப் கிழங்கு. அதைக்கூட சாப்பிட விடாமல் சூவுக்கு குளிர் ஜுரம் நடுக்கி எடுத்தது. வியர்த்து வியர்த்துக் கொட்டியது. சந்தேகமே இல்லை; இன்றைய தினத்தின் அழுத்தங்கள் தாங்காமல் காமாலைதான் திரும்பி வந்துவிட்டது. கைவசம் மாத்திரைகூட இல்லை; சூட்கேஸை மனைவி எடுத்துப் போய்விட்டாள்.
வீட்டில் இருந்திருந்தால் இத்தனை நேரம் அவர் கலர் டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார். மல்லிகை டீயை உறிஞ்சியபடியே மாலைச் செய்திகளைப் பார்த்து ரசிப்பார். இப்போது இங்கே தன்னந்தனியாக லாக்கப்பில் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறது. இந்த லைட் பல்பு வேறு ஆரஞ்சு நிறத்தில் அழுது வடிகிறதே! ராத்திரி பூரா அணைக்காமல் எரிய விடுவார்கள் போலிருக்கிறது. இனி தூக்கம் வந்த மாதிரிதான்.
சிறை அறைக்கு வெளியே ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. போலீஸ் கோஷ்டி சீட்டு விளையாடுகிறது போலிருக்கிறது. எங்கோ தூரத்திலிருந்து ஓர் அக்கார்டியன் இருமிக் கொண்டிருந்தது. மேஜை மீது அந்த ஒப்புதல் வாக்கு மூலக் கடிதம், கையெழுத்தை எதிர்பார்த்து பால் பாயிண்ட் பேனாவுடன் காத்திருந்தது. ஒரு படித்த புலவரும் ராணுவ சிப்பாய்களும் சந்தித்த கதை ஞாபகம் வந்தது. புலவர் மேலே மேலே வாதாடுவார்; அவர் சொல்லும் ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் அங்கே குழப்பம் அதிகமாகும்!
சூ தன் வயிற்றைப் பிசைந்து விட்டுக் கொண்டே இருந்தார். என்ன ஆகுமோ என்ற பயத்தைவிட, இப்படி நேரம் வீணாகிறதே என்றுதான் கவலையாக இருந்தது. அங்கேயானால், ஏகப்பட்ட வேலை கிடக்கிறது. அடுத்த வாரம் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதித் தந்தே ஆக வேண்டும். படிக்க வேண்டிய புத்தகங்கள் மலையாகக் குவிந்திருக்கின்றன. இப்போது இந்த எலிப் பொந்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேனே!
காலடிச் சத்தம் கேட்டு எழுந்து கொண்டார். கதவு அருகே போய்க் கத்தினார். “காம்ரேட் போலீஸ்! காம்ரேட் போலீஸ்!”
“என்ன?” என்று கரகரத்தது ஒரு குரல்.
“உங்க ஆபீசர்களிடம் போய்ச் சொல்லுங்க. எனக்கு உடம்பே சரியில்லை. இதயக் கோளாறு! மஞ்சள் காமாலை!”
“சனி, ஞாயிறுன்னா ஆபீசர் யாரும் வர மாட்டாங்க. திங்கள் கிழமை வரை பொறுத்துக்குங்க.”
“என்னது? திங்கள் கிழமை வரையா? மருந்து மாத்திரை இல்லாம இங்கே கிடந்தேன்னா செத்தே போயிருவேன்.”
“செத்தா பாத்துக்கலாம்!”
“எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நீங்களும் உங்க போலீஸ் ஸ்டேஷனும்தான் பொறுப்பு ஏத்துக்கணும், ஆமாம்.”
“அவ்வளவு சீக்கிரமா உங்க உயிர் போயிடாது. சும்மா படுங்க.”
சிறைப் படுக்கையில் கொசுவும் மூட்டைப் பூச்சியும் பிடுங்கின. லைட் வேறு எரிந்துகொண்டே இருந்தது. இத்தனைக்கு நடுவிலும் சூ ஓரளவு நன்றாகத்தான் தூங்கினார். புது மனைவி பக்கத்தில் இல்லை என்பதே ஆறுதலாகக்கூட இருந்தது. சக்கையாகப் பிழிந்த ஹனிமூன் ஓய்ந்த பிறகு தனியாகத் தூங்க முடிவதே நிம்மதிதான்.
ஞாயிறு காலையில் தோட்டத்தில் சூரியன் பளிச்சென்று காய்ந்து கொண்டிருக்க, தரையில் குருவிகள் தத்திக் கொண்டிருந்தன. சூ ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு காலைக் காற்றை நுகர்ந்தார். சேர்மன் மாவோ ஒரு முறை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன தன் நண்பரைப் பார்க்கப் போனபோது சொன்னாரே – “இங்கே வந்ததுதான் வந்துவிட்டீர்கள். முடிந்த வரை இதையும் உற்சாகமாக அனுபவிக்கப் பாருங்களேன்!”
மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள முயற்சித்தார் சூ. பதறினால் ஹெபடைடிஸ் அதிகரித்துவிடும். ஈரல் பெரிதாக வீங்கிக் கிடப்பதை உணர முடிந்தது. ஜூரமும் குறையவே இல்லை. நாள் பூரா படுக்கையில் படுத்துக் கொண்டு தன் ஆராய்ச்சிக் கட்டுரையை அசை போட முயன்றார்.
போலீஸை நினைத்தால்தான் ஆத்திரமாக வந்தது. ‘கயவாளிப் பசங்க! இந்தப் போலீஸ்காரர்கள் பெயரையெல்லாம் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்து இங்கே நடக்கிற அக்கிரமத்தைப் பற்றி அனல் கக்கும் கட்டுரை ஒன்று எழுதினால்தான் மனது ஆறும்! பல்கலைக் கழகத்துக்குத் தெரிந்தால் போதும்; யாரையாவது அனுப்பி வைப்பார்கள். கடைசியில் போலீஸ் என்னை ரிலீஸ் செய்து அனுப்பத்தான் வேண்டியிருக்கும். ஆனால் நானா அவ்வளவு சுலபமாகக் கிளம்புவேன்? போலீஸ் அதிகாரிகள் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்து என் காலைப் பிடித்துக் கெஞ்சின அப்புறம்தான் விடுவேன்… அவசரப்பட்டு அளவுக்கு மீறிப் பெரிய பீட்ஸாவை வரவழைத்து விட்டார்கள். இப்போது தின்னத் தெரியாமல் முழிக்கப் போகிறார்கள்!’
திங்கள் கிழமை, பிரகாசமாகப் பொழுது விடிந்தது. வெளியே தோட்டத்தில் யாரோ முனகும் சத்தம் கேட்டு ஜன்னல் அருகே போய்ப் பார்த்தார். ஓர் இளைஞனைப் பைன் மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். அவன் நெளிந்து நெளிந்து யாரையோ திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் வேறு யாரையும் காணோம். பையனைப் பார்த்தால் தெரிந்த முகம் போல இருந்தது. கண்ணை இடுக்கிப் பார்த்தார் சூ. அட! இது நம்ம பழைய மாணவன் ஃபென்ஜின் இல்லை? படித்து முடித்துவிட்டு ஏதோ எட்டணா வக்கீலுக்கு ஜூனியராகச் சேர்ந்தான்… இவன் எங்கே இங்கே வந்தான்!
ஒரு விநாடி கழித்துத்தான் அவருக்கு உறைத்தது: ‘என் மனைவிதான் யுனிவர்சிடிக்குப் போய் விசாரித்து, என்னைக் காப்பாற்றுவதற்காக இவனை அனுப்பி வைத்திருக்கிறாள்! போயும் போயும் ஃபென்ஜினையா அனுப்பினாய் பெண்ணே? இவன் சரியான மர மண்டையாச்சே! வந்ததும் வராததுமாகப் போலீசிடம் ஏதாவது தகறாறு செய்திருப்பான். உடனே பிடித்துக் கட்டி வைத்துவிட்டார்கள் . இப்போது நான்தான் இவனையும் சேர்த்துக் காப்பாற்ற வேண்டும்!’
காவலன் கொண்டு வந்த சோளக் கஞ்சியையும் கீரையையும் பேசாமல் சாப்பிட்டு முடித்தார். கிண்ணத்தை எடுத்துப்போக வந்த ஆளிடம் ‘யார் அது, மரத்தில் கட்டி வைத்திருப்பது?’ என்று மெல்ல விசாரித்தார்.
‘ஏதோ வக்கீலாம். திமிரு புடிச்சவன். எங்க மேலதிகாரியைப் பார்த்துத் திருடன்னு சொல்லிட்டான். அவரு கடுப்பாகி இவனைப் புடிச்சு மரத்தில கட்டி வைங்கடான்னாரு; கட்டிட்டேன்!’
தன்னை விடுதலை செய்ய வந்தவனை விடுவிப்பது எப்படி என்று சூ யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தோட்டத்திலிருந்து ‘ஐயோ!’ என்று அலறல் கேட்டது. ஃபென்ஜினுக்கு எதிரே போலீஸ்காரன் ஒருவன் நின்றிருந்தான். அவன் பக்கத்தில் ஒரு இரும்பு பக்கெட் இருந்தது. நேற்று சூவைக் கைது செய்த அதே இளம் போலீஸ்காரன்தான். அவன் திடீரென்று கையை ஓங்கி ஃபென்ஜினுக்குப் பொறி கலங்கும் அறை ஒன்று கொடுத்தான். அறைந்துவிட்டு முழு பக்கெட் தண்ணீரையும் அவன் தலையில் கவிழ்த்தான்.
‘வக்கீல் சார், வெய்யில்ல நாள் முழுக்க நின்னுகிட்டிருந்தா உங்களுக்கு சன் ஸ்ட்ரோக் வந்துடக் கூடாதுல்ல? அதுக்குத்தான் இந்தக் குளியல்!’ என்று அறிவித்தான். கையிலிருந்த சிகரெட்டைக் கீழே எறிந்து திருகித் திருகி மிதித்துப் பொடியாக்கினான்.
ஃபென்ஜின் கடுமையான வசவு ஒன்றை வாய் வரை கொண்டு வந்துவிட்டுக் கடைசி நேரத்தில் அப்படியே விழுங்கிவிட்டு, ‘எனக்கு ஒண்ணுக்குப் போகணும்’ என்று கெஞ்சினான்.
‘ஒண்ணு ரெண்டெல்லாம் பாண்ட்லயே போய்க்க !’ என்று இரக்கமில்லாமல் ஆலோசனை கூறிவிட்டுப் புறப்பட்டான் போலீஸ்காரன். போவதற்கு முன் சூவின் லாக்கப் ஜன்னல் பக்கம் திருப்தியாக ஒரு முறை பார்த்தான். தோல் உறையிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த அவனுடைய துப்பாக்கி சூரிய ஒளியில் பளீரிட்டது.
சிறைக் கதவு திறந்தது. காவலர்கள் சூவை மறுபடி அதிகாரியின் மாடி அறைக்கு அழைத்துப் போனார்கள். குறிப்புகள் எழுதும் க்ளார்க் அதே இடத்தில் அதே மாதிரி உட்கார்ந்திருந்தான். ஆனால், அவன் கையில் இப்போது பேனா பேப்பர் எதுவும் இல்லாதததைக் கவனித்தார் சூ.
“ஆங்…, ப்ரொபசர் சார். வந்துட்டீங்களா? உட்காருங்க” என்றார் அதிகாரி. “உங்க லாயரைப் பார்த்தீங்க இல்லே? அந்த ஆளுக்கு மரியாதையே தெரியலை, கொஞ்சம் கத்துக் குடுங்கடான்னு சொன்னார் எங்க பாஸ். அதான், பைன் மரத்தடியில பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியிருக்கோம்!”
“அதுவும் சட்ட விரோதம்தான். நாளைக்கு பேப்பர்ல இதெல்லாம் அச்சாகுமேன்னு உங்களுக்கு பயமே இல்லையா ஆபீசர்?”
“நீ பேப்பர்ல எழுது, டி.வி.யில வேணாலும் காமி. வேற என்னய்யா புடுங்கிடுவே நீ? எல்லாம் கட்டுக் கதைன்னு சொல்லி கேஸை க்ளோஸ் பண்ணிடுவோம். இங்கிருந்து தப்பிக்க உனக்கு ஒரே வழி, மன்னிப்புக் கடுதாசி எழுதிக் கொடுக்கறதுதான்.”
“நான் மாட்டேன்னு சொன்னால்… ?”
“அப்ப உங்க லாயர் ஃப்ரெண்டு வெய்யில்லயே கிடந்து வதங்கட்டும்!”
சூ நாற்காலியைப் பிடித்து சமாளித்துக் கொண்டார். தலை வலி மண்டையைப் பிளந்தது. வயிற்றைப் புரட்டியது. ஹெபடைடிஸ் முழு வீச்சில் தாக்க ஆரம்பித்துவிட்டது என்று புரிந்து கொண்டார். நெஞ்சு முழுவதும் கோபம் திகுதிகுத்தது.
அதிகாரி தானாகவே ஒரு படி இறங்கி வந்தார். “சரி, நீங்க உங்க கைப்பட எழுதிக் கொடுக்க வேண்டாம். நடந்தது என்னன்னு இதில விவரமா எழுதியிருக்கோம். ஒரு கையெழுத்து மட்டும் போட்டுருங்க!”
ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார் சூ. “எங்கே, காட்டுங்க?”
கழுதை மூஞ்சியன் ஓர் ஏளனச் சிரிப்புடன் காகிதத்தை அவர் பக்கம் தள்ளினான்.
“ஜூலை 13ம் தேதி நான் மூஜி ஸ்டேஷனில் கலவரம் செய்து பொது அமைதியை சீர்குலைத்தேன் என்று ஒப்புக் கொள்கிறேன். ரயில்வே காவலர்கள் என்னை எச்சரித்தபோதும் அதை ஏற்காமல் அடங்க மறுத்தேன். எனவே என் கைதுக்கு நான் மட்டுமே காரணம். இரண்டு நாள் சிறை வாசத்துக்குப் பிறகு நான் என் குற்றத்தின் எதிர்ப் புரட்சித் தன்மையை உணர்ந்துவிட்டேன். இதற்குப் பிறகு நான் சித்தாந்தப் படிப்பினைகளைக் கற்றுக் கொள்வேன் என்றும், இனி இது போன்ற குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.”
மண்டைக்குள் ஒரு கிளி ‘பொய்! முழுப் பொய்!’ என்று கூவினாலும், சூ கிளியின் வாயை அமுக்கினார்.
“இதில கையெழுத்துப் போட்டா, என்னையும் லாயரையும் விட்டுடுவீங்களா?”
“ஆமாம் !” அதிகாரி ஃபைலின் மீது விரலால் தாளம் போட்டார்.
சூ கையெழுத்துப் போட்டார்.
அதன் கீழே கை நாட்டும் வைக்கச் சொன்னார்கள். நாட்டினார். விரலைத் துடைத்துக் கொண்டார்.
“சரி. நீங்க போகலாம்”.
சூவுக்கு நாற்காலியிருந்து எழுந்திருப்பதே பெரும் பிரயத்தனமாக இருந்தது. தடுக்கி விழாத குறையாக வெளியே நடந்து வக்கீல் பையனை சந்திக்கப் போனார். அவர் நெஞ்சே ஓர் அணு குண்டு மாதிரி கனத்துக் கொண்டிருந்தது. அது மட்டும் வெடித்தால் இந்த போலீஸ் ஸ்டேஷன், போலீஸ்காரர்கள், அவர்கள் மனைவி மக்கள் அத்தனை பேரும் தூள் தூள்!
அப்படி எதையும் வெடிக்க முடியாதுதான். ‘ஆனால் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும். செய்யப் போகிறேன்’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டார் சூ.
“ஸாரி ஃபென்ஜின், என்னாலதானே உனக்கு இத்தனை சித்ரவதையும்.”
“பரவாயில்லை சார். இவங்கல்லாம் காட்டு மிராண்டிப் பசங்கதானே. வேற என்னத்த செய்வாங்க?” ஃபென்ஜினின் பாண்ட் காலிலிருந்து இன்னும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் கை ஒரு முறை நடுங்கி ஓய்ந்தது.
“முதல்ல இங்கேருந்து கிளம்பலாம்.”
போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே ஒரு டீக்கடை இருந்தது. சூ நேராக அதில் நுழைந்தார்.
“ரெண்டு கப் ப்ளாக் டீ குடுங்க” கல்லாவில் இருந்த கிழவியிடம் ஒரு யுவான் நோட்டை நீட்டினார்.
அதைக் குடித்து முடித்ததும் இன்னொரு டீ கொண்டு வரச் சொன்னார்.
எதிர்ப் புறம் ரயில்வே ஸ்டேஷனை அடைவதற்குள் மற்றொரு பெட்டிக் கடையில் நின்றார். “லைட்டாக ஏதாவது சாப்பிடலாமா?”
“சார் ! நீங்க என்னை ஒண்ணும் விருந்தாளி மாதிரி நடத்த வேண்டாம் சார்” என்று கூச்சப்பட்டான் பையன்.
“இல்லேப்பா. எனக்கே பசிக்கிறது.”
அடுத்த ஒரு மணி நேரம், பட்டினியால் தவிப்பவர் போல் கடை கடையாக ஏறி இறங்கினார் சூ. போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி நாலைந்து ரெஸ்டாரெண்ட்கள் இருந்தன. சூ அதில் ஒவ்வொன்றாகப் போய் உட்கார்ந்து கொள்வார். ஏதாவது ஓர் ஐட்டம் மட்டும் ஆர்டர் செய்வார். கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டுக் கிளம்பிவிடுவார். நூடுல்ஸ், வான்ட்டோன், சத்து மாவுக் கூழ் என்று ஏது கிடைத்தாலும் வாங்கினார்.
பேராசிரியருக்கு ஏதாவது மரை கழன்றுவிட்டதா என்று ஆச்சரியப்பட்டான் ஃபென்ஜின். பசித்தால் ஏதாவது ஒரு ஹோட்டலில் போய் வயிறு முட்ட சாப்பிடுவதுதானே ?
ஆனால், அவனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. சாப்பாட்டு வாயுடனேயே ப்ரொபசர், “இந்த ஊர்க்காரப் பயல்கள் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டி விட்டுத்தான் மறு வேலை!” என்று அடிக் குரலில் சபதம் செய்தபடி இருந்தார்.
கடைசியாக நுழைந்த ஹோட்டலில் சூப்பை இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொண்டுவிட்டார். சிக்கனையும் காளானையும் கூட அப்படியே வைத்துவிட்டார்.
பேராசிரியரின் மஞ்சள் படர்ந்த முகத்தையும் தனக்குத் தானே பேசிக் கொள்வதையும் பார்த்துக் கவலைப்படான் ஃபென்ஜின்.
அடுத்த ஒரு மாதத்தில் மூஜி நகரில் எண்ணூறு பேருக்கு மேல் ஹெபடைடிஸ் தொற்றால் பாதிக்கப் பட்டார்கள். இரண்டு போலீஸ்காரர்கள் உள்பட, ஆறு பேர் இறந்தேவிட்டார்கள்.
தொற்று நோய் எப்படி ஆரம்பித்தது என்று கடைசி வரை யாருக்கும் தெரியவில்லை. ***