பந்தயம்

தொப்பென்று கனவில்  மாம்பழம் விழுந்ததை கேட்டு விழித்தான் ராமன். மணி என்ன இருக்கும் என்று   எண்ணியவாறு முற்றத்தை நோக்கினான்.வெயிலுக்காக சிறுகட்டைகளை வைத்துக்கட்டி அதன் மேல் பனைநாரால் கட்டப்பட்டிருந்த பனையோலை இற்று உதிர்ந்த இடைவெளியில் வானம் கருநீலமாகத் தெரிந்தது.

       நேரமாகியிருக்கும் என்ற பதட்டத்துடன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த அக்காமேல்  படாமல் மெதுவாக எழுந்து இரும்புக் கிரில்க்கதவை ஓசையெழுந்துவிடாமல் மெல்லத் திறந்து வெளியே வந்தான்.

கீழத்தெரு ராமனோ பக்கத்துவீட்டு குப்பனோ போயிருப்பார்களோ என்றெண்ணியபடி நாலு வீடு தள்ளியிருந்த பெரியப்பா வீட்டிற்குச் சென்றான். அமாவாசைக்குபின் நான்காம் நாள் நிலா   மரங்களின் நிழல்களில்லாத மணல் வீதியில்  மெல்லொளியைப் பரப்பியிருந்தது.

போன வாரமெல்லாம் மாம்பழம் பொறுக்கச் சென்றதை நினைத்துக்கொண்டான்.இவர்களுக்கு சொந்தமாக எந்தப் பழ மரங்களும் இல்லை. கீழே விழும் பழங்களை பொறுக்கிக் கொள்வது தவறில்லை,ஆனால் மரத்திலிருந்து பறித்தால் அடி வாங்கவேண்டியிருக்கும். சில நாட்களில் இவர்களுக்கு முன்னதாகவே வேறு யாராவது சென்றுவிட்டால் இவர்களுக்கு எதுவும் கிடைக்காது. விடியலிலேயே முழித்தும் பயனில்லாமல் போய்விடும். நேற்று , குத்தகைக்கு எடுத்தவன்  மாமரத்தை உலுக்கி எல்லாப் பழங்களையும், பறித்துக்கொண்டு போய்விட்டதால்  பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலிருக்கும் புளியமரத்தில் விழும் பழங்களை பொறுக்கிவரலாம் என்று  ராணியக்கா கூறிய யோசனையை செயல்படுத்தத்தான்  இப்போது பெரியப்பா பெண்ணான ராணியக்காவை எழுப்பச் சென்றான்.

  பனையோலை வேய்ந்த செம்மண்ணால் அமைக்கப்பட்ட வீட்டையடைந்து உள்ளே நோக்கினான். இருளுக்குள் படுத்திருந்தவர்களை அவதானிக்க சற்று நேரமானது.தன் அம்மாவின் மேல் ஒரு காலைப்போட்டபடி கைகளை தலைக்கு வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அக்கா,அக்கா என லேசாக குரல்கொடுத்தான்.ராணி விழிக்கவில்லை,பெரியம்மாதான் முழித்து “யாரது ” என்றாள். “நான்தான் ராமு” என்றான்.’என்னடா,  இந்நேரத்தில” என்றாள்.

“புளியம்பழம் பொறுக்கப்போலாம்னு அக்கா சொன்னுச்சு,அதான் ” என்றான்  இந்த இருட்டுலபோய் எப்படிடா பொறக்குவீங்க,இன்னும் கொஞ்சம் விடிஞ்சபிறகு போகலாம், போய் படு”என்றபடி ராணியை அணைத்தபடி படுத்துக்கொண்டாள் பெரியம்மா.

           புளியம்பழங்களை பார்த்தவுடன் விழியில் ஓர் ஒளியுடன் “என் செல்லம் ” என இரு கைகளாலும் கன்னத்தில் வழித்து தன்  நெற்றியில்  சொடக்கிடும் அம்மாவின் முகம் நினைவிலெழ ,   வீட்டிற்குத்  திரும்ப விரும்பாமல், தனியாகவே செல்லலாம் என முடிவு செய்து புளியமரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். புளியம் பழங்களைப் பொறுக்கிவந்து வெயிலில் காயவைத்து, ஓட்டைத்தட்டி சுளையை கோணி ஊசியால் கீறி கொட்டையை எடுத்துவிட்டு  பனையோலைப் பெட்டிக்குள் வைத்தால் எப்போது வேண்டுமோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். 

          ஊருக்கு நடுவில் இருந்த திடலுக்கு அருகில் அம்மரம் இருந்தது. வருடம் முழுவதும் மணல் பறக்கும் திடலை அறுவடை காலத்தில் சுத்தமாக கூட்டிவிட்டு சாணிப்பால் தெளித்துப் பெருக்கி நெல் அடிக்கும் களமாக  உபயோகப்படுத்துவார்கள். அப்போது நெல் வாசமும் அதனை உரல் மீது அடிக்கும்போது தெறித்துவிழும் மணிகளும், சற்று தள்ளி  அடித்த கதிர்களில் எஞ்சியுள்ள நெல்லையுதிர்க்கவென காளைகளைப் பிணைத்து அதன்மீது நடக்கவிடும்போது எழும் கதிரின் பச்சைமணமும் மனதில் உண்டாக்கும் கிளர்ச்சியை அசைபோட்டபடி நடந்தான்.இப்போதுதான் நடவு முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதமாகும் அறுவடைக்கு. வேப்பங்காய்கள் இப்போதுதான் முற்றியிருக்கின்றன. இன்னும் பத்து நாட்களானதும் அமுல் டப்பாவில் ஆணியால் துளையிட்டு, அதில் சிறிய கயிறைக்கட்டி தோளில் மாட்டியபடி பசங்களுடன் சேர்ந்து  வேப்பம்மரங்களில் ஏறி பழங்களைப் பறிக்கலாம். கொண்டுவந்து வாசலில் கொட்டி , குவியலாகச் சேர்ந்ததும் காலால் மிதித்து பிதுக்கி, கொட்டைகளைமட்டும் கூடைகளில் அள்ளிச் சென்று கண்மாயில் அலசிக் கொண்டுவந்து காய வைப்பதோடு பிள்ளைகளின் வேலை முடியும். காய்ந்த வேப்பம் முத்துகளை டவுனுக்கு கொண்டுசென்று எண்ணையாக்குவதோ பிண்ணாக்கிற்கு விற்பதோ பெரியவர்களின் வேலை. 

       திடலைக் கடந்து பிய்ந்து  தொங்கும் கருப்புக் குடையைப்போல  நின்ற மரத்தின் அடியில்  சென்று, காலால் மெல்ல அளைந்தபடி நடந்தான்.வேகமாக நடந்தால்   பழத்தின் மேல் மிதித்து நசுங்கிவிடக்கூடும்.காலில் தட்டுப்பட்ட பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து டவுசர் பையில் போட்டுக்கொண்டான்.

        இப்போது, காற்று கொஞ்சம் பலமாக வீசினால் பழங்கள் நிறைய விழுமே என யோசித்தபடி துழாவினான்.மெல்ல காற்று வீசுவது சற்று அதிகரித்தது.திரும்பி திடல் பக்கம் பார்த்தான்.மெல்லிய திடுக்கிடல் ஏற்பட்டது.ஐயோ,அந்த நினைவில்லாமல் தனியாக வந்துவிட்டேனே.

          நேற்று மதியம் பள்ளி இடைவேளையின்போது பசங்களோடு இந்தத் திடலில்   விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கே கீழே பரவியிருந்த சிறு சருகுகளும் துண்டுத் தாள்களும் மெல்ல சுழன்று மேலெழுந்து பறந்தபடி நகர ஆரம்பித்தது.காற்றில் பறந்துபோவதை அவ்வப்போது பார்த்திருந்தாலும் மேலெழும்பி தலைக்குமேல் உயர்ந்ததை பார்த்தபோது சற்று அச்சமாக இருத்தது.அப்போதுதான் எட்டாவது படிக்கும் முத்துக்குமார்  “இது போன மாசம் செத்துப்போன சுந்தரத்தோட ஆவிதான். அவன் அவுட்டத்துலதான் செத்தான், அதனாலதான் இன்னும் அடங்காம அலையிறான் ” என்று கூறி பயத்தைப் பெருக்கினான்.இதைக் கேட்டவுடன் ஆட்டத்தை அப்படியே விட்டுவிட்டு எல்லோரும் கலைந்து ஓடிவிட்டார்கள்.அதை மறந்துவிட்டு யாரும் இல்லாமல் தனியா வந்துவிட்டேனே.அவன் அச்சத்துடன் பார்த்துக்  கொண்டிருந்தபோதே சருகுகளும் குப்பையுமாக மெல்ல சுழன்று மேலெழுந்து நகர ஆரம்பித்தது.இவனை நோக்கி நகர்வதாகத் தோன்ற , பயத்துடன் பின்பக்கமாய் நடக்கத் தொடங்கினான்.

      ஒரு மாதத்திற்கு முன் யாரால் என்ன செய்யமுடியும் என போட்டி வந்தது. தன்னால் சைக்கிள் ஓட்ட முடியும் என சுந்தரம் கூற இவன் மாட்டு வண்டியே ஓட்டுவேன் என குதிக்க, மாறி மாறி சொல்லிவந்ததில் கடைசியாக அவன் கண்மாயில் நீச்சலடித்து தாமரைக் கொட்டை பறிக்க முடியும் என்றபோது இவன் அதெப்படி முடியும் என விழிவிரித்ததும் அவன் தன் முடிவில் உறுதிகொண்டு கண்டிப்பா முடியும் என்றான். கண்டனூரில் இருக்கும் சித்த வைத்தியர் சிவசாமி கண்மாயில் வளர்ந்துள்ள தாமரையை அதன் கொட்டைக்காக குத்தகைக்கு எடுத்து காவலுக்கும் ஆள் போட்டிருக்கிறார். தாமரைக் கொட்டையில் மருந்து செய்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறாராம். காவல்காரர் இருக்கும்போது பறிக்கவே முடியாது  என இவன் சவால்விட , யார் தடுத்தாலும் நான் பறித்துவந்து காட்டுவேன் என்றபடி கிளம்பியவனை, மறுநாள்  பதறியோடிய பலருடன் சென்று தாமரைக்கொடி காலில் சுற்றியபடி கண்மாய் கரையில்  பிணமாகக் கிடத்தப்பட்டிருந்தவனைத்தான் பார்த்தான். தன்னால்தான் இப்படியாகிவிட்டது என்று சில நாட்களுக்கு குமைந்து கொண்டிருந்தான் .

         இன்னும் கொஞ்சதூரம் நடந்தால் போதும் பள்ளிக்கு முன்பாகவே இருக்கும் பிள்ளையார் கோவிலை அடைந்துவிடலாம்.    ஐந்தாறு பேர் கோவில் திண்ணையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம்தான் பயத்தை பெருக்காமல் மட்டுப்படுத்தியது.

       உடனே திரும்பி ஓட ஆரம்பித்தான். மணலில் வேகமாக. காலை ஊன்றியபோது , இன்னொருவருடைய  காலும் ஊன்றுவதுபோல எழுந்த சத்தத்தில் இன்னும் வேகமாக ஓடினான். அவன் மூச்சிரைத்த ஒலி  நாயினுடையதுபோலக் கேட்டது. இடுப்பு உயரத்திற்கு இருந்த கோவில் திண்ணையில்  ஆங்காங்கே படுத்திருந்தவர்கள் நிழலுருவங்களாக தெரிந்தார்கள். எம்பி அப்படியே குப்புறப் படுத்தான்.தரையில் படர்ந்திருந்த மணல் உறுத்தியது. பின்னால் சத்தம் கேட்கிறதா என் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். சற்று தலையைத் தூக்கி சுற்றிலும் படுத்திருந்தவர்களை அடையாளம் தெரிகிறதா எனப் பார்த்தான்.அருகில் தென்பட்ட காவல்காரரைத் தவிர  மற்ற யாரையும் தெரியவில்லை .

       சில நிமிடங்கள் எந்த அரவமும் இல்லை.சற்று நேரத்தில் காவல்காரர் செருமியபடி கையருகில் இருந்த சிறு மணிகள் கட்டிய காவல் கம்பை எடுத்து ஊன்றியபடி நடந்து செல்வதைக் கேட்டான்.சிறுநீர் விழும் ஓசை சன்னமாகக் கேட்டது.திரும்பிவருவது போன்ற ஒலி கேட்கும்போதே சருகுகள் சுழலும் மெல்லோசையையும்  தொடர்ந்து  சத்தமாக இருமுவதையும் கம்பை ஓங்கி ஓங்கி தரையில் குத்தும் ஓசையையும் கண்களை இறுக்க மூடியபடி , கைகால்கள் நடுங்க கேட்டுக்கொண்டிருந்தான்.

      சத்தம் கேட்டு எழுந்தவர்கள் காவல்காரரை தூக்குவதையும்       கோவில் திண்ணைக்கு கொண்டுவராமல் அருகிலிருந்த பள்ளியின் ஒட்டுத்திண்ணையில் கொண்டு வைப்பதையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

             அப்படியே படுத்திருந்தவன் ஆள் நடமாட்டம் அதிகமானதை உணர்ந்தவுடன் எழுந்து பள்ளிக்கூடப் பக்கம் பார்வையைத் திருப்பாமல்  பதட்டமடங்கி அமைதியடைந்த மனதுடன் வீட்டை நோக்கி நட.க்க ஆரம்பித்தான

2 Replies to “பந்தயம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.