அவர் வழியே ஒரு தினுசு

This entry is part 10 of 17 in the series 20xx கதைகள்

2019-1

இரு கைகள் அகலத்தில் ஒரு வண்ணப் புத்தகம். அட்டையில் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் முகப்புப் படம். அவள் பிரித்துப் பார்த்தாள். அதன் முப்பத்தியிரண்டு பக்கங்களில் இரட்டை டாக்டர் (எம்.டி., பிஎச்.டி.) பட்டம் பெற்ற இருபது பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் தங்களைப் பற்றி எழுதிய ஒரு பக்கக் கட்டுரைகள். முக்கியமாக ஏகப்பட்ட படங்கள், தனித்தனியாக, சிறுதொகுதியாக, குடும்பத்துடன், (ஒருசிலர்) குழந்தைகளுடன். எல்லாருக்கும் விலையுயர்ந்த ஆடைகள், (பெண்கள் என்றால் ஆரோக்கியம் இல்லாத குதியுயர் காலணிகள்,) மட்டற்ற மகிழ்ச்சி, சாதனைச் சிரிப்பு. மற்ற பத்தொன்பது அதி புத்திசாலிகளுடன் அவளும் அதில் இருந்திருக்க வேண்டும். அதை நினைவூட்ட அவள் தந்தை 2019-வகுப்பினரைச் சிறப்பிக்கும் புத்தகத்தை அனுப்பியிருந்தார். 

“எனக்கு எம்.எஸ்.டி.பி. (மெடிகல் சயன்டிஸ்ட் ட்ரெய்னிங் ப்ரோக்ராம்) போகப் பிடிக்கல.” 

“உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. எவ்வளவோ பேர் அதுக்கு காத்திண்டு இருக்கும்போது, நீ கிடைச்சதை வேண்டாம்னு சொல்றியே. நியாயமா?”

“எனக்கும் அதுக்கும் ஒத்து வராது, அவ்வளவுதான்.” 

“இவ்வளவு தூரம் வந்தப்பறம்தான் அதைக் கண்டுபிடிச்சியா?” 

ஹார்வர்ட் வழங்கிய அரிய வாய்ப்பைத் தன் மகள் மறுத்தது எப்படிப்பட்ட இழப்பு என்ற வருத்தம் இப்போதும் அவருக்கு. அது அவளுக்குத் துளிக்கூட இல்லை. புத்தகத்தின் வரவேற்பு சுயபெருமை பக்கங்கள் அவள் தீர்மானத்தின் விவேகத்தை உறுதி செய்தன. 

எட்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுக விருந்தில் சந்தித்த அவர்களை அவளுக்கு எந்த அளவு ஞாபகம் இருக்கும்? ஐந்தாறு மஞ்சள் சைனீஸ், ஒரு போலி கறுப்பு, இரண்டு ஹிஸ்பானிய பழுப்பு, அவளையும் சேர்த்து இந்திய மாநிறத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண், மீதி வெள்ளைகளில் பாதிக்கு மேல் யூதர்களாக இருந்தால் ஆச்சரியம் இல்லை.  

அலானா அடரோவா. ரஷ்யாவில் பிறந்து பேசத் தொடங்கிய பருவத்தில் பெற்றோர்களுடன் வர்ஜினியாவுக்கு குடிபெயர்ந்தவள். புகுந்த நாட்டின் விசுவாசத்தைக் காட்ட கொடிக்கு முன் ஒரு படம், மார்க்ஸையும் புட்டினையும் பழித்து ஒரு சில வாக்கியங்கள்.  

டேனியல் அகீபோ. தகுதி இல்லாமல் உயர்மட்டக் கல்லூரியில் இடம் பிடிப்பதற்காக ஆன்டர்சன் என்ற பெயரை அகீபோவுக்கு மாற்றி ஆப்பிரிக்கக் கறுப்பு வேஷம் போட்ட கரீபியன். 

ஆல்பெர்ட்டோ ரீகோ. சௌபாலோவின் சேரியில் பிறந்து வளர்ந்து முன்னோர்கள் புண்ணியத்தில் பாஸ்டனுக்கு வந்தவன். அவன் திரும்பிப் போய் அந்நகரத்தின் ஏழை மக்களுக்குச் சேவை செய்வதாக இல்லை. 

க்ரிஸ்டினா கார்சியா. படிப்பைத் தொடங்கியபோது இரண்டு குழந்தைகள், பயிற்சியின் நடுவில் மூன்றாவது, முடியப்போகும் சமயத்தில் நான்காவது, வயிற்றில்.  

நீ மருத்துவம் படித்து என்னடி லாபம்? இன்றைய மனிதப் பிரச்சினைகளைக் கணக்கெடுத்தால் இரண்டாவது குழந்தை அநாவசியம், மூன்றாவது குற்றம், நான்காவது மன்னிக்க முடியாத பாவம். 

எல்லாருக்கும் உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசை. பூமியை சூடாக்கும் வாயுக்களில் பத்து சதம் சுற்றுலாப் பயணங்களால் என்பதை அவர்களுக்கு யார் சொல்வது?  

அவளுக்கான கற்பனை பக்கத்தில்… 

ஸ்— குட்டையாக வெட்டப்பட்ட கூந்தலில் கௌரவமாக ஒரு படம். தம்பி பெற்றோர்களுடன் ஒன்று. வெள்ளை ‘ஃபியான்சே’யுடன் தனியாக இன்னொன்று. 

என் பாட்டி பார்கின்சன் நோயில் பல வருஷங்கள் அவதிப்பட்டதை நேரில் பார்த்தபோது மருத்துவத்துக்கு என் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தீர்மானித்தேன்… (பாட்டியின் நோய் மட்டுமே உண்மை.) 

எனக்கு ஊக்கமும், முக்கியமாகப் பணமும் தந்து உதவிய என் பெற்றோர்களுக்கு நன்றி!… 

‘டயபீடிஸுக்கும், இருதயக் குறைபாடுகளுக்கும் சம்பந்தம்’ என்ற ஆராய்ச்சியில் (அந்நோய்களில் அவதிப்படும் மனிதர்களுக்கு அதனால் எந்தப் பயனும் இராது) எனக்கு வழிகாட்டிய பேராசிரியர்…  

இன்னும் சில பக்கங்களைப் புரட்டியதும் அவள் தேடிய பெண்…

ஏஞ்சலினா ரேவதி யுவராஜ். களையான வட்ட முகம், கவர்ச்சியான புன்னகை, சுருளான கூந்தல். 

என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக இருந்து வழிகாட்டும் (பைபிள்) கடவுள் இந்த மிக உயரிய, உன்னதக் கல்வியில் பங்குபெற எனக்கு வழி செய்திருக்கிறார். (அவர் மனம் வைத்தால் அதை யாரால் தடுக்கமுடியும்?) அதற்காக அவருக்கு என் மனம் நிறைந்த முதல் நன்றி. என் தாய் க்ரேஸ்…  

னிதக் கணக்கில் எட்டு ஆண்டுகளுக்கு முன்… 

ஒரு குட்டிப் பிசாசு மூச்சு வாங்க ஓடி வந்து சாத்தானின் முன் நின்று, 

“பாஸ்! பாஸ்! ஏஞ்சலினாக்கு ஹார்வேர்ட் ப்ரோக்ரம்ல யாவே இடம் பண்ணப் போறாராம்.”  

“தன்னுடைய பக்தர்கள் ஆசையாக் கேட்டதுக்காக, ட்ரம்ப் என்கிற வெத்து வேட்டு ஆசாமியை அரசியல்ல புகுத்த அவர் திட்டம் போட்டிருக்கார். அதை எப்படித் தடுக்கறதுன்னு யோசிட்டிருக்கேன். நீ என்னமோ காலேஜ், அட்மிஷன்னு சில்லறை விஷயத்தைப் பெரிசு படுத்தறே.”  

“அப்படி விட முடியுமா? சின்னதா இருந்தாலும் யாவேக்கு அப்பப்ப தொந்தரவு கொடுத்திட்டே இருக்கணும். அப்பத்தான் மனிதர்களுக்கும் வாழ்க்கை சுவாரசியப்படும், நாம காரியத்தை கெடுத்திடுவோம்னு பயமும் இருக்கும்.”  

“சரி விவரமாச் சொல்!”  

கேட்டதும், 

“ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேர்ல யாரோ ஒருத்தரை தள்ளிட்டு இரண்டாவது மட்டத்தில இருக்கற ஏஞ்சலினாவை அவர் புகுத்திர முடியாது. கறுப்பு ஆம்பளைக்கு பதிலா இவளைப் போட்டா அந்த இனத்துக்காரங்க சண்டைக்கு வருவாங்க. வெள்ளையோட இடத்தில புகுத்தினா ஃபாக்ஸ் நியூஸ்ல அதை பிரமாதப் படுத்திடுவாங்க. ஸ்வப்னா கோவிந்தராஜன், ஸ்வேதா சசிசேகரன். இந்த இரண்டு பேர்ல ஒருத்தி தானா விலகினாத்தான் ஏஞ்சலினாக்கு சான்ஸ். பல வருஷங்கள் மனசு வச்சு உழைச்சிருக்காங்க. அதுக்கு சிகரம் வச்ச மாதிரி இந்த அட்மிஷன். உதவித் தொகையோட பயிற்சி. அது முடிஞ்சதும் நிரந்தர வேலை, கணிசமான வருமானம். அவங்க எதுக்கு விட்டுட்டுப் போகணும்? யாவே ஏமாறப் போறார், நாம கைகொட்டிச் சிரிக்கலாம்.”  

குட்டிப் பிசாசுக்கு அவ்வளவு நிச்சயம் இல்லை. 

பள்ளிக்கூடத்திற்குப் பிறகும் கல்வி தொடரும் என்று ஸ்வப்னா உணர்ந்த நாளில் இருந்தே அவளுடைய அறிவுத் தேடலின் முடிவு ஹார்வர்டின் எம்.எஸ்.டி.பி என்பது தீர்மானிக்கப்பட்ட, மாற்ற முடியாத விஷயம்.  

“பயாலஜி, மத்த சயன்ஸ் எல்லாத்திலியும் எழுபத்தைந்துக்கு மேல. என்.சி.சி.ல நாலு வருஷம். எல்லாம் இருந்தும் என்ன? மெட்ராஸ் மெடிகல்ல கைவிரிச்சிட்டாங்க. மணிவாசகத்தின் தங்கை… என் க்ரேட்ல பாதி. அவளுக்குத் திறந்த கதவு. இந்தியால மெரிட்டுக்கு எங்கே மதிப்பு?” என்ற தந்தையின் புலம்பலை எத்தனை முறை கேட்டிருக்கிறாள்! 

ஸ்வப்னாவை மறுக்க இடம் வைக்கக் கூடாது என சம்பளம் இல்லாத அரசாங்க மேனிலைப் பள்ளிக்குப் பதிலாக ஆண்டுக்கு முப்பதாயிரம் டாலரில் (வெள்ளை வெளேர் மாணவிகளுடன்) க்ரீன்விச் அகடெமி. நான்கு ஆண்டுகள் முடிந்தபோது அவள் வேலடிக்டோரியன். எம்.ஐ.டி.யில் அடுத்த நான்கு ஆண்டுகள், உயிரியல், வேதியியல், எழுத்துக்கலை என மூன்று மேஜர்கள். எம்காட் திறன் தேர்வில் ஆயிரத்தில் ஒருத்தி. 

மார்ச் தொடங்கியதில் இருந்து அவளைவிட அவள் தந்தை ஆவலுடன் எதிர்பார்த்தார். 

“ஹார்வர்ட் இல்லாட்டா என்னப்பா, ட்யுக், வேன்டர்பில்ட் இருக்கு.”  

“அதெல்லாம் உன் தகுதிக்கு போறாது.”  

அந்த நல்ல நாளில், முகத்தை சோகமாக்கி, 

“எனக்கு… எனக்கு… எம்.எஸ்.டி.பி.ல…” 

“சொல்லுடி!”  

“கிடைக்க..” 

“நீதான் டாப்ல இருப்பே. என்னமோ எனக்கு விளையாட்டு காட்டறே?” 

மேற்குக் கடற்கரையில் வளர்ந்த ஸ்வேதாவின் பாதை வித்தியாசமானது. அவள் படித்த ஃப்ரீமான்ட் பள்ளிக்கூடங்களில் சமுதாயத்தின் பலதரப்பட்ட பல இனத்துக் குழந்தைகள். புத்தகப் படிப்பையும் தாண்டி யோகா, சங்கீதம், டென்னிஸ் ஆகியவற்றிலும் மனதைச் சிதறவிட்டதால் பள்ளிக்கூட இறுதிவிழாவில் அவள் மாணவர் வரிசையின் வாலைப் பிடித்து நடந்தாள். பட்டப் படிப்பிற்கு பக்கத்திலேயே பெர்க்கலி. கணிதம், இயற்பியல் அவளுக்குப் பிடித்த பாடங்கள் என்பதால் கெமிகல் எஞ்சினீரிங் மேஜர். மூன்று ஆண்டுகள் முடிந்ததும் வந்த கோடை விடுமுறை. தென் கலிஃபோர்னியாவில் தினப்படி மருந்துகளைப் பெருமளவில் தயாரிக்கும் தொழிலகத்தில் பயிற்சி. அவள் ஆர்வம் மருந்துகளில் இருந்து மருத்துவத்துக்குத் தாவியது. அதற்காக அடுத்த பதினெட்டு மாதங்கள் வேதியியல், உயிரியல் இரண்டிலும் அதிகப்படி வகுப்புகள் எடுத்தாள், எம்காட் தேர்வுக்கு இரவு பகலாகத் தயார் செய்தாள். அவளுடைய காலம் தள்ளிய முயற்சியால் அவளுக்கு எங்கே எம்.எஸ்.டி.பி. கிடைக்கப் போகிறது என்று அலட்சியமாக இருந்த அவள் தந்தை, முடிவு தெரிந்ததும் எல்லா இந்திய நண்பர்களிடமும், “ஸ்வேதாவுக்கு ஹார்வர்ட்ல மெடிகல், எம்.ஐ.டி.ல ரிஸர்ச், எப்படி?” என்று பெருமையடித்து அவர்களின் எரிச்சலைக் கொட்டிக் கொண்டார். 

மார்ச் மூன்றாம் வார இறுதியில் எதிர்கால மருத்துவ-விஞ்ஞானிகளுக்கான அறிமுக விருந்து. வெவ்வேறு படிகளில் ஏறி அங்கே வந்திருந்தாலும் ஸ்வப்னா, ஸ்வேதா இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே ஒருவரையொருவர் பிடித்துவிட்டது. 

“கலிஃபோர்னியால வளர்ந்து பரத நாட்டியம் கற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கியே, பரவாயில்ல,” என்று ஒருத்தி மற்றவளை வம்புக்கு இழுக்க, 

“மூணு மேஜர் செய்து கொண்டே ஒரு ஆண்-தோழனையும் பிடிச்சிருக்கியே, எனக்கு அந்த சாமர்த்தியம் இருந்தா…” என்று அவள் திருப்பிக் கொடுக்க…

வரப்போகும் ஆண்டுகளில் நட்பு இன்னும் இறுகும் என்ற நம்பிக்கையில் இருவரும் பிரிந்தார்கள். 

குட்டிப்பிசாசின் சந்தேகத்தை நிரூபிப்பதுபோல் மேலுக்குத் தொடர்பு இல்லாத சம்பவங்கள்…  

மேயர் ராமனாதன் செட்டியார் வள்ளியம்மாள் அரங்கம். திருமண வைபவங்கள் வரவேற்புடன் கோலாகலமாக முடிந்துவிட்டன. “அப்பறம் பார்க்கலாம்” என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து ஊர்திகளின் உறுமல்கள். 

கைப்பையில் செருகிய அலைபேசியின் உறுத்தல். லதா எடுத்துப் பார்த்தாள். அவள் ஆவலுடன் எதிர்பார்த்த தகவல்.  

சென்னை-ஃப்ராங்க்ஃபர்ட் ஃப்ளைட்டில் ஓர் இடம் காலி. பத்து நிமிடங்களுக்குள் ஒப்புதல் தெரிவித்தால் காத்திருக்கும் உனக்கு அது ஒதுக்கப்படும். 

பத்து நிமிடங்கள் என்ன, பத்து நொடிகளிலேயே. 

நல்லவேளை, இன்னும் ஒரு நாள் தங்க வேண்டாம். தயாராக இருந்த பெட்டி பைகளுடன் பெரிய அக்காவிடம் அவசர விடைபெறல். 

“ப்ரமீளா கல்யாணத்துக்குன்னு இவ்வளவு தூரம் வந்தியே, ரொம்ப சந்தோஷம்.” 

“அப்படியே சொந்தக்காரா எல்லாரையும் பார்த்தேன்.” 

“சரி, ஜாக்கிரதையாப் போயிட்டு வா!” 

இளைய அக்கா சங்கீதாவிடம், 

“வர்ற வியாழக்கிழமை வேலைக்காக ஒரு இடத்தைச் சுத்திப் பார்க்க ஃப்ரீமான்ட் வரணும். அப்ப உன்னையும் வந்து பார்க்கறேன்.” 

“எந்த ஃப்ளைட்னு டெக்ஸ்ட் அனுப்பு, ஸ்வேதா உன்னை அழைச்சிண்டு வருவோ.” 

விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனையை லதா முடித்தபோது, பயணிகளின் வரிசை லுஃப்தான்ஸா விமானத்தில் புகுந்து கொண்டிருந்தது.  

வியாழன் மாலை கிளம்பி, மறுநாள் நள்ளிரவுக்குப் பின் சென்னை வந்து, கல்யாண சந்தடியை முழுக்க அனுபவித்து, நாற்பத்தெட்டு மணிக்குள் கிளம்பிய அலைச்சலினால், ஜன்னலில் தலையை சாய்த்ததும் வந்த தூக்கம். விமானத்தின் இறக்கைகள் பரக்க விரிந்து எழுப்பிய ஓவென்ற ஓசையில் முடிந்தது. ஜன்னல் திரையைத் திறந்தபோது காலை வெளிச்சத்தில் புல் தரையெங்கும் வெண்பனி. 

“ஒஓ!” 

“மார்ச் கடைசியில் பெய்யும் பனி தரையில் தங்காது” என்று ஜெர்மன் உச்சரிப்பில் பக்கத்து இருக்கைக்காரி தைரியம் சொன்னாள். 

கும்பலில் கலந்து விமான நிலையத்தில் நடந்தாள். கதவுகளின் இடைவெளி வழியே பார்த்தபோது பனி உதிர்ந்தாலும் விமானங்கள் ஊர்வது தெரிந்தது. அப்போதே வாஷிங்டன் விமானம் கிளம்பக்கூடாதோ? பிற்பகல் ஒரு மணிக்குத்தான். முந்தைய நாள் உடுத்திய புடவைக்கு பதில் மேற்கத்திய சம்பிரதாய ஆடை அணிந்ததும் வேலையின் பொறுப்பு. தோள்பையின் மடிக்கணினியைத் திறந்தாள். 

‘ரோஸ்ட்டட் கார்லிக் நிறுவனம் ஃப்ரீமான்ட்டில் (கலிஃபோர்னியா) புதிய கடை திறப்பது உசிதமா?’ பதில் தேட – வாடகைக்கு வந்திருக்கும் காலி இடம், அதைச் சுற்றிய மற்ற கடைகள், அப்பகுதி மக்களின் வாங்கும் திறன் எனப் பக்கம் பக்கமாகத் தகவல்கள்…  

பதினோரு மணிக்கு மேல் மற்ற தொடரும் பயணிகளுடன் லதா விமானத்தின் உள்ளே சென்று அமர்ந்தாள். ஜன்னல் வழியே தெரிந்த காட்சி நம்பிக்கை தருவதாக இல்லை. ஓடுதளத்தில் பனி படிந்து விரைவில் வழுக்கும் அளவுக்குச் சேர்ந்துவிட்டது. விமானம் கால்பங்குகூட நிரம்பவில்லை, அதன் கதவு சாத்தப்பட்டது. மற்ற பயணிகளுக்கு விமானம் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பாது என்று தெரிந்திருக்க வேண்டும். 

விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிப்பு. எங்கும் பேரமைதி. வெளியே எந்த நடமாட்டமும் இல்லை. எங்கு பார்த்தாலும் சாம்பலைப் பூசியது போன்ற சோகம். 

நிலைமையை மறக்க மடிக்கணினியைத் தட்டில் வைத்து வேலையில் ஆழ்ந்தவள், நெக்கர்சீஃப் அணிந்த பணிமகள் சாப்பாட்டுத் தட்டை நீட்டிய போதுதான் தலை நிமிர்ந்தாள். 

“என்ன?” 

“சிக்கன் சாலட், ட்யுனா சான்ட்விச்.” 

“வெஜிடேரியன்?”  

“இந்த இருக்கை எண்ணுக்கு இது தான்.” 

திடீரெனக் கிளம்பிய அவள் உணவு விருப்பம் அவர்களுக்கு எப்படித் தெரியும்?  

பிரித்து வாயில் போடும்படி தட்டில் எதுவும் இல்லை. 

“வெளியே போய்ச் சாப்பிடலாமா?”  

“பாதுகாப்பு விதிகளின்படி அதற்கு அனுமதி கிடையாது.”  

கல்யாண விருந்து கிட்டத்தட்ட பதினாறு மணிக்கு முன். 

பயணிகள் அதிகம் இல்லாததால் உரையாடல் ப்ரீமியம் எகானமி வரிசையில் அமர்ந்திருந்த ஒருவன் காதில் விழுந்திருக்க வேண்டும். எழுந்து வந்தான். ஒரு கையில் விமான உணவுத் தட்டு, இன்னொன்றில் மிளகாய்ப்பொடி தடவிய தோசை.  

“என் பெயர் ப்ரஷாந்த். நான் எதை சாப்பிடறதுன்னு யோசிச்சிண்டிருந்தேன். நீங்க ஒண்ணு எடுத்துக்கலாம்.”  

“இப்பவும் யோசித்துப் பிடித்ததை எடுத்துண்டு மற்றதைக் கொடுத்தா எடுத்துப்பேன்.” 

அம்மா ஆசையாகக் கட்டிக் கொடுத்த தோசையைக் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து அவனும், விமான உணவை அவளும் தின்னத் தொடங்கினார்கள்.  

“என் பெயர் லதா. வர்ஜினியா கன்ஸல்டிங்ல இருக்கேன்.” 

வறுத்த பூண்டின் மணம் ஃப்ரீமான்ட்டின் காற்றில் பரவலாம் என்பதைக் குறிப்பிட்டாள்.  

“நான் ஜார்ஜ்டௌன்ல அஸோஸியேட் ப்ரொஃபஸர், இப்போதைக்கு. சிங்கப்பூர் இன்சியாட்ல வரச்சொல்லி கூப்பிட்டிருக்கா. அது எப்படி இருக்குன்னு பார்த்துட்டு திரும்பிப் போறேன்.”  

“ஸ்னோ இப்படி பழி வாங்கும்னு நினைக்கல. என் பெண்ணும் பையனும் தனியா இருக்கா. சரியான நேரத்துக்குக் கிளம்பியிருந்தா ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு போயிருப்பேன்.”  

“நிலமையைப் பார்த்தா, இன்னும் நாலு மணியாவது அடைஞ்சு கிடக்கணும்.” 

“கிளம்பினா சரி. ரொம்ப நாளைக்கு அப்பறம் நடக்கற கல்யாணம். போக வேண்டாம்னு நினைச்சேன். குழந்தைகளையும் கூட்டிண்டு போறதுன்னா செலவு, அதுகளுக்கும் அலைச்சல். ஸ்ப்ரிங் ப்ரேக்னால அவங்க டீச்சர் மூணு நாளைக்கு பார்த்துக்கறேன்னு சொன்னா. நான் மட்டும் கிளம்பி வந்தேன். இன்னிக்கி ரெண்டு பேரையும் வீட்டில கொண்டுவந்து விட்டிருப்பா. யாருக்கும் கதவைத் திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன். இருந்தாலும்…” 

“என்ன வயசு?”  

“எட்டு. ட்வின்ஸ். தீபா, தீபக்.”  

அலைபேசியில் படத்தைக் காட்டினாள். பெண்ணுக்கு தலைமயிரும் உடல் வளர்ச்சியும் அதிகம். 

“சாப்பாட்டுக்கு ரொம்ப தாங்க்ஸ்.”  

“நமக்குள்ள என்ன?”  

அவன் தன் இருக்கைக்குப் போக அவள் ‘வறுத்த பூண்டு’ வேலையைத் தொடர, பனிப்பொழிவு நிற்க, வாரும் இயந்திரங்களால் பனி அகற்றப்பட, விமான நிலையம் திறக்கப்பட, மற்ற பயணிகள் உள்ளே நுழைந்து இடம் பிடிக்க… நெக்கர்சீஃப் பணிமகள், 

“மிஸ்! நீ விரும்பினால் முன்னால் போய் உட்காரலாம்.” 

“அதற்கு அதிகப் பணம் எவ்வளவு?”  

“ஒன்றும் இல்லை. சாப்பாடு போடாமல் ஆறு மணி உன்னை காத்திருக்க வைத்ததற்கு பரிகாரம்.” 

தன் பைகளை எடுத்துக்கொண்டு பத்து வரிசைகளைத் தாண்டினாள். 

“நம்ம பேச்சு முடியலன்னு என்னை இங்கே அனுப்பியிருக்கா” என்று ப்ரஷாந்த்துக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தாள். 

“அவளுக்கு ஏமாற்றம் இல்லாம பேசிட்டா போறது.” 

விமானம் நகர்ந்து, மேலே ஒட்டியிருந்த பனி போகக் குளித்து, ஓடி மேலே எழும்பியது. 

“அப்பாடா! பத்து மணிக்கு வாஷிங்டன். வீட்டுக்குப் போக பன்னண்டு மணி.” 

அவள் சொல்ல நினைத்ததை அவன் சொல்லிவிட்டான். 

“நீங்க சிங்கப்பூர் எப்ப மறுபடி போகணும்? 

“ஒரு மணி முன்னால வரைக்கும் அதைப் பத்தியே யோசிச்சிண்டு இருந்தேன். இப்ப இங்கேயே தங்கிடலாமான்னு ஒரு எண்ணம்” என்று தயங்கினான்.   

“இன்சியாட் உலகத்தில நம்பர் ஒன் பிசினஸ் ஸ்கூல் ஆச்சே.” 

“உண்மைதான். ஆனா இங்கே இருந்தா ஒரு லாபம். நீங்க தனியா ட்ரிப் போகும் போதெல்லாம் தீபக், தீபா ரெண்டு பேரையும் என்கிட்ட விட்டுட்டுப் போகலாம். சொந்தக் குழந்தைகள் மாதிரி நான் பார்த்துப்பேன்” என்று நிதானமாகச் சொன்னான்.  

அதன் அர்த்தம் புரிந்ததும் லதாவின் கண்களில் ஈரம் படர்ந்து, புன்னகை நெளிந்து, சிரிப்பாக வெடித்தது. 

நெக்கர்சீஃப் பணிமகளை அழைத்து, கடுமையான குரலில்,   

“எல்லாம் உன்னால் வந்தது. நீ என்னை முன்னால் வந்து அமரச் சொன்னதால் தான், இந்த ஆள் என் சம்மதம் கேட்கிறான்.”  

“அவனைப் பார்த்தால் பொறுப்புள்ளவனாகத் தெரிகிறது. நான் உன் நிலைமையில் இருந்தால் உடனே சரி சொல்லி விடுவேன்.”  

“நீ சொன்னதால்…” 

ப்ரஷாந்த் பக்கம் திரும்பி, 

“வீட்டுக்குப் போனதும் தீபா தீபக் கிட்ட உங்களுக்கு ஒரு அப்பா வாங்கி வந்திருக்கேன்னு சொல்லப் போறேன்.”  

பணிமகள் ஒலியியக்கத்தில், “விமானம் தாமதித்ததால் பலருக்கு அசௌகரியம். இருவருக்கு மட்டும் ஒரே சந்தோஷம். மிஸ்டர் 20ஏ ப்ரபோஸ் செய்ய, மிஸ் 20பி அதை ஏற்க… மணமகன் மணமகளுக்கு முத்தம் தர நான் அனுமதி கொடுக்கிறேன்” என அறிவித்தாள். 

அவள் சொன்ன பிறகு எப்படிச் செய்யாமல் இருக்க முடியும்?  

பலத்த கைதட்டல். 

அறிமுக விருந்து முடிந்ததும் வந்த இளவேனில் விடுமுறைக்கு ஸ்வேதா வீட்டில் வந்து தங்கினாள். தனியாக இருந்த அப்பாவுக்கு துணையாக நான்கு நாள். தினம் காலையில் அவருக்குப் பிடித்த தோசை, மாலையில் பூண்டு ரசம், வேக வைத்துத் தாளித்துக் கொட்டிய உருளைக் கிழங்குக் கறி. புதன்கிழமை சான்ஹொஸே விமான நிலையத்தில் இருந்து அம்மாவை அழைத்து வந்தாள். அதேபோல மறுநாள் லதா சித்தியை. அவளை மட்டும் பார்த்த ஸ்வேதாவுக்கு ஏமாற்றம்.  

பெட்டி வருதற்கு முன், 

“தீபா தீபக் கூட வருவார்கள் என எதிர்பார்த்தேன்.”  

“அவர்கள் இப்போ புது அப்பாவுடன்” என்றாள் லதா குறும்புச் சிரிப்புடன்.  

அதற்கு சிறு விளக்கம் தந்ததும்,   

“சந்தோஷம், சித்தி!” என்று ஓர் அன்பு அணைப்பு. “என்ன எதிர்பாராத அதிருஷ்டம்!”   

அலைபேசியில் லதாவுக்கு ஃபேஸ்டைம் அழைப்பு. 

“த்ஸொ! த்ஸொ! த்ஸொ!” என்று ஸ்வேதா தலையசைத்து, “இப்பத்தான் நீ வந்து இறங்கினாய், அதற்குள் கூப்பிட்டுவிட்டான். என்ன கரிசனமான கணவன்!” என்றாள்.  

“நான் உன்னை கேலி செய்யற நாளும் வரும்.” 

ஸ்வேதா சற்றே தள்ளி நிற்க,   

“பேகேஜ் க்ளெய்ம்ல இருக்கேன். கூட்டிண்டு போக ஸ்வேதா வந்திருக்கா. இப்பத்தான் நீ ரொம்ப ரொம்ப நைஸ்னு அவ கிட்ட சொல்லிண்டிருந்தேன்.” 

பெட்டிகளின் ஊர்வலம். 

“இந்தா! நீ அவரோட பேசு. நான் பெட்டியை எடுத்துண்டு வரேன்.”  

சித்தி நீட்டிய அலைபேசியின் படத்தில் முப்பத்தைந்தைத் தாண்டிய தோற்றம். அதைக் கவனித்த ஸ்வேதா, தவறில்லை என, 

“ஹலோ சித்தப்பா!” என்றாள். 

“கன்க்ராஜுலேஷன், ஸ்வேதா!”  

“தாங்க்ஸ். அதை நான் தான் சொல்லணும். திருமணத்துக்கு முன்பே தந்தை ஆனதுக்கு பாராட்டுக்கள்!”  

“நன்றி! இறுதித் தேர்வுகளுக்குப் படிக்கிறியா?” என்ற கேள்வியைத் தொடர்ந்து, “ப்ரொஃபஸருக்கு பேச வேறு விஷயம் தெரியாது.” 

“இது எனக்கு ஐந்தாவது வருஷம். போன செமிஸ்டரோட எல்லாம் முடிச்சுட்டேன். ஒரு ப்ராஜெக்ட் மட்டும் மிச்சம்.”  

“எதைப் பத்தி?” 

“மார்க்கெட்டிங். இந்தியாவில் சத்து இல்லாத செயற்கை சாப்பாட்டை விற்க எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற தலைப்பில். சென்னை டிவியில் சோடா, சாக்லேட், சிப்ஸ் இதுக்கெல்லாம் எவ்வளவு கமர்ஷியல்! கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் இட்டிலி, லட்டு, காப்பிக்கு பதிலாக வெள்ளை ப்ரெட், டோநட், கோலா. அதானல உடல் பருமன், இதய பலவீனம், இரத்தத்தில் சர்க்கரை.”   

நீண்ட மௌனம். அதைத் தொடர்ந்து, 

“நான் ஜியார்ஜ்டௌனில் அஸோஷியேட் ப்ரொஃபஸர் ஆஃப் மார்க்கெட்டிங். இந்தியா மாதிரி வளர்ந்துவரும் நாடுகளின் சந்தை என் சிறப்பு.” 

“ஓ! ஐ’ம் சாரி, சித்தப்பா! எனக்கு அது தெரியாது. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்!”  

“இட்’ஸ் ஓகே. நீ சின்னப் பெண். நாங்க ‘பிக் ஃபுட்டு‘க்கு ஜாலரா தட்டற மாதிரி, யாரோ கொடுக்கற பணத்தில எட்டு வருஷப் படிப்பு முடியும்போது நீயும் ‘பிக் ஃபார்மா’க்கு தாளம் போடணும். ரிசர்ச் கூட அவங்க கொடுக்கற ட்யுன்ல நீ பாடற பாட்டு, நீயா புதுசா ஒண்ணும் எழுத முடியாது. கென்டெக்கி ஃப்ரைட் சிக்கன் இந்தியால பரவின மாதிரி, அமெரிக்க மெடிகல் ப்ராக்டிஸும் பரவப் போறது. தொழில் வேற, சொந்தக் கொள்கைகள் வேற.”  

எதோ கவனத்தில் நடக்கும்போது சடாலெனப் பனியில் சறுக்கி விழுந்தது போல ஒரு சில கணங்கள். தன் மேல் அவள் (தெரியாமல்) எய்த குற்றக் கணையை சித்தப்பா அவளிடமே திருப்பி அனுப்பி அவள் மனதைக் காயப்படுத்திவிட்டார்.

லதா பெட்டியுடன் வருவதைப் பார்த்து, 

“சித்தி கிட்ட கொடுக்கறேன். பை சித்தப்பா!” 

“பை ஸ்வேதா!” 

சித்தியிடம் இருந்து பெட்டியை வாங்கிக்கொண்டு அவளுக்குச் சில தப்படிகள் முன்னால் அதை இழுத்து நடந்தாள். காருக்கு வந்து பெட்டியை வைத்து, அதை நிறுத்துவதற்கான கட்டணம் செலுத்தி, வீடு வரும் வரை அவள் எண்ணங்கள் சுற்றுப்புறத்தை மறந்தன. நல்லவேளை, புது சித்தப்பாவுடன் பேசிக்கொண்டே வந்த சித்தி. 

அவள் கொள்கை என்ன?  

மக்கள் உடல் நலம். அப்படியென்றால்…  

மருந்து தயாரிப்பில் வேலை செய்ததால் பிக் ஃபார்மா ஸ்வேதா கேள்விப்பட்டதுதான். நோய்களை முழுக்க குணப்படுத்தாமல் மருந்துகளால் கட்டுக்குள் வைத்திருப்பதும், பழைய மருந்துகளுக்கு புது நோய்கள் கண்டுபிடிப்பதும், மருந்துகளின் விலைகளை காரணம் இல்லாமல் உயர்த்துவதும் அவர்கள் தொழில். அதற்காகக் கவர்ச்சிகரமான தொலைக்காட்சி விளம்பரங்கள், அரசியல்வாதிகளைக் கைக்குள் அடக்கி இயற்றப்பட்ட சட்டங்கள். 

சட்டம் படித்த அவள் தாய் வர்த்தக நிறுவனங்களுக்கோ வக்கீல்களின் கூட்டாளியாகவோ வேலை செய்யாமல் ப்ளான்ட் பேரன்ட் ஹூட் போன்ற சேவை அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படும்போது அவள் ஏன் கொள்கையை விட்டுக் கொடுத்துத் தொழில் செய்ய வேண்டும்?

மருத்துவம் கிடைக்காவிட்டால் அதற்கு அடுத்தபடியாக இருக்கட்டும் என பொதுமக்கள் நலத்தில் மாஸ்டர்ஸ் பட்டம் வாங்க, சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கு விண்ணப்பம் செய்திருந்தாள். அதைக் கணினியில் மறுபடி இழுத்து வந்து…  

அறிமுக விருந்தும் சந்திப்பும் முடிந்தபோது, ஸ்வப்னாவின் நண்பர்கள் இளவேனில் விடுமுறைக்கு முந்தைய வாரமே ஐரோப்பா கிளம்பிப் போய்விட்டார்கள். தனியாக பஸ்ஸில் க்ரீன்விச் போவது பிடித்தமானதாக இல்லை. உற்சாகத்தை வரவழைக்க தோஸா ஃபாக்டரி. மாணவர்கள் ஊரில் இல்லாததால் அதிக கும்பல் இல்லை. இருவருக்கான மேஜையில் பெரிய மசாலா தோசைக்காக ஆசையுடன் காத்திருந்தபோது, 

“நான் சேர்ந்து கொள்ளலாமா?” 

கம்பி கண்ணாடியுடன் பேராசிரியர்களுக்கான தோற்றம், வெளிநாட்டு உச்சரிப்பு. கேம்ப்ரிட்ஜில் அவர்களுக்கு என்ன பஞ்சம்? 

“ஓ, ஷுர்.” 

“தாங்க்ஸ்.” 

மெனு அட்டை எடுத்து வந்த பரிசாரகனிடம் அதை வாங்காமல், “எனக்கு எல்லாவற்றிலும் கொஞ்சம்” என்றார். 

“நான் கார்லோஸ் லெவி-கோஸ்டா. சௌபாலோ பல்கலைக்கழத்தில் இருக்கிறேன்.”   

ஸ்வப்னா தன் பெயரையும் முடிக்கப் போகிற படிப்பையும் சொன்னாள். 

மேஜையில் பாதி இடத்தை அடைத்த (தாலி) உணவுத்தட்டு முதலில் வந்தது. அதில் நிறைய கிண்ணங்கள். 

“இதெல்லாம் என்னென்ன என்று சொல்லமுடியுமா?”  

“இங்கே பிறந்து வளர்ந்திருந்தால் முடிந்திருக்காது. நான் பதினோரு வயது வரை இந்தியாவில். அங்கே பாட்டியின் சமையல். அதனால் நான் ஒரு சராசரி அமெரிக்கன், சாப்பாட்டைத் தவிர.”  

“குட் ஃபார் யு. நீ சொல்வதை நான் பதிவு செய்யலாமா?” 

“நிச்சயமா.” 

தன் அலைபேசியில் அதற்கான ஏற்பாடு செய்தார். 

ஸ்வப்னா ஒவ்வொன்றையும் சுட்டி விளக்கம் தர அவர் சுவை பார்த்தார். 

“அப்பளம் – பருப்பில் செய்து காய வைத்துப் பொரித்தது. தயிர்ப் பச்சடி காரத்துக்கு இதம். நான் – யீஸ்ட் போட்டு கரியில் சுட்ட ரொட்டி. உருளைக் கிழங்குப் பட்டாணி காரமாக இருக்கும்.” 

“ஹாலபீனோ சாப்பிடும் எனக்கு அதிகம் இல்லை.”  

அறிமுகம் முடிந்ததும் அவளுக்குத் தோசை வந்தது. 

“இது தோஸா – அரிசி பருப்பு மாவுகளைக் கலந்து புளிக்க வைத்தது. ஒரு துண்டு தரட்டுமா?”  

“சின்னதாக.”  

வெட்டி மசாலா சேர்த்து சட்டினி தடவிக் கொடுத்தாள். 

“பிரமாதம், தாங்க்ஸ்.” 

சாப்பிட்டபோது, 

“உன் விளக்கத்தை பதிவுசெய்த காரணம் சொல்கிறேன். விதவிதமான பாரம்பரிய உணவு வகைகப் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் எப்படி சிதைக்கின்றன என்பது என் ஆராய்ச்சியின் நோக்கம். அவை விற்கும் தனித்துவம் இல்லாத உணவுகளால் ஊளைச் சதையும் அதன்வழியாக பல நிரந்தர நோய்களும் அதிகரிக்கின்றன. முழுமையான சாப்பாட்டுக்கு பதில் நொறுதீனி. நெருக்கமான குடும்பச் சமுதாய விருந்துக்கு பதில் தனித்து உள்ளே தள்ளும் உணவு. சௌகரிய உணவுப் பொருட்களை ஓரிடத்தில் தயாரித்து பிளாஸ்டிக் உறைகளில் அடைத்துப் பல இடங்களுக்கு அனுப்புவதால் உண்டாகும் சக்தி விரயம் மற்றும் கழிவுப் பொருட்கள். போட்டியிட முடியாமல் தவிக்கும் சில்லறை வியாபாரிகள். எங்கள் நாட்டில் அம்மாதிரி உணவின் விற்பனை கடந்த இருபது ஆண்டுகளில் ஐம்பது சதம் அதிகரித்து இருக்கிறது. அண்மைக் காலப் பொருளாதார வளர்ச்சியினால் இந்தியாவில் எப்படிப்பட்ட பாதிப்பு என்பதைக் கண்டறிய ஒரு மாதம் அங்கே போகிறேன்.” 

“உங்கள் தட்டில் இருக்கும் அத்தனை பதார்த்தங்களையும் ஒரே வாயில் அள்ளிப் போட்டதுபோல, ஏழெட்டு வாக்கியங்களில் எத்தனை விஷயங்கள்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.  

“ஐ’ம் ரியல்லி சாரி. இது என் நீண்ட கால ஆய்வு என்பதால் அதைப் பேச ஆரம்பித்தால் நடுவில் நிறுத்தமாட்டேன்.” 

“நீங்கள் சொன்னதை ஜீரணிக்க அதன் முழு விவரங்கள் தரமுடியுமா?” 

“ஓ! ஷுர். இந்த அட்டையில் என் மின்-முகவரி. நீ அதற்கு ஒரு குறிப்பு எழுதினால் என் மொத்த கட்டுரைகளுக்கும் பிரதி அனுப்புவேன்.” 

“இப்போதே” என்று அலைபேசியை எடுத்தாள். “நான் அவற்றை வைத்து ஒரு பிரபல அறிவியல் கட்டுரை எழுதப் பார்க்கிறேன். உங்களுக்கு மறுப்பு இல்லையே. 

“என் கொள்கைகள் பிரபலம் அடைந்தால் எனக்குத்தான் பெருமை.” 

ஸ்வப்னா தன் அறைக்குப் போனபோது லெவி-கோஸ்டா அண்மையில் வெளியிட்ட பதினோரு அறிவியல் அறிக்கைகள் காத்திருந்தன. அவற்றை வைத்து அடுத்த இரண்டு நாளில் ஓர் எளிய ஆனால் விஞ்ஞான விளக்கங்களுடன் ஒரு கட்டுரை. கோககோலா, நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விற்பனையை அதிகரிக்க முடியாததால் வளர்ந்துவரும் நாடுகளை முற்றுகையிட்டதில் ஆரம்பித்து… அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவு எப்படி சத்துக்களை இழக்கிறது, அவற்றில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் உடலின் ஹார்மோன்களை எப்படி பாதிக்கின்றன என்பதைத் தொடர்ந்து… மாரடைப்பு, மிகையான இரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகளைக் குறைக்கும் விலையுயர்ந்த மருந்துகளுக்கு பதில் அந்தந்த நாட்டின் பாரம்பரிய உணவை, சிற்சில முன்னேற்றங்களுடன், பாதுகாக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் கட்டுரை முடிந்தது. 

கட்டுரையை லெவி-கோஸ்டாவுக்கு அனுப்பிய ஒரு மணிக்குள் அதன் தரத்தைப் பாராட்டி ஒரு சில திருத்தங்களைக் குறிப்பிட்டு அவரிடம் இருந்து பதில் வந்தது. நியுயார்க் டைம்ஸின் அறிவியல் பகுதி ஆசிரியரின் கவனத்துக்கு அதை அனுப்பியதும் வீட்டை நோக்கிப் பஸ்ஸில் பயணம். 

புதன்கிழமை. இலக்கணத் திருத்தங்களுடன் கட்டுரை விரைவில் வெளியிடப்படும் என்ற குறுந்தகவல் அவள் மனதை அலைத்தது. பல ஆண்டுகளாக ஆசை வைத்திருந்த பிஎச்.டி., எம்.டி.யின் மேல் முதன் முறையாகச் சந்தேகம். மருத்துவம் படித்தாலும் பிரபல அறிவியல் கட்டுரைகளில் தொடங்கி அறிவுசான்ற கதைகள் எழுதுவது அவள் அந்தரங்க ஆசை. அவளுக்கு ஏற்கனவே இருக்கும் திறமையை வளர்த்த எட்டு ஆண்டுகள் எம்.எஸ்.டி.பி.யில் செலவழிப்பது அவசியமா? அதற்குப் பதில் இலக்கிய எழுத்தில் கவனம் செலுத்தி…   

“நான் அப்பவே சொன்னேன். நீங்கதான் கேக்கல.” 

“என்னடா ஆச்சு இப்ப?” 

“ஸ்வப்னா ஸ்வேதா ரெண்டு பேருமே ஹார்வர்ட் போகலாமா வேண்டாமான்னு யோசிக்கறாங்க. யாவே அவங்க மனசை கலச்சிருக்காரு.” 

“எப்படி?” 

“எப்படியோ சுத்தி வளைச்சு… ‘அல்ட்ரா-ப்ராசஸ்ட் ஃபுட்’னால வர்ற வியாதிகள் என்கிற ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.”

“அவர் வழியே எப்பவும் ஒரு தினுசு.”  

“நான் விடறதா இல்ல. நமக்கு இன்னும் சான்ஸ் இருக்கு. இது எப்படி?”  

“ப்ரில்லியன்ட். ஜமாய்!”  

சனிக்கிழமை. 

முந்தைய தினம் ‘ரோஸ்ட்டட் கார்லிக்’கின் எதிர்கால இடத்தை நேரில் பார்வையிட்டு, அதன் சுற்றுப்புறத்தையும் கணக்கில் எடுத்து லதா காலையில் வாஷிங்டனுக்குத் திரும்பிப் போனாள். 

மதியம். அஷ்வின், ‘ஒரு முக்கியமான காரணத்துக்கு சான்ஃப்ரான்சிஸ்கோ வந்தேன், அப்படியே உங்களையும்…’ என்று முன்னறிவிப்பு இல்லாமல் வீட்டுக்கு வந்தான். அம்மா வார்த்த தோசைகளைத் தின்றுவிட்டு நீண்ட தூக்கம் போட்டான். எழுந்ததும் எதற்கு என்று சொல்லாமல் அப்பா அம்மா அக்கா மூவரையும் கிளப்பி தன் காரில் வடக்கு நோக்கி ஓட்டினான். 

ஒரு மணி பயணத்துக்குப் பின் நாபா பள்ளத்தாக்கில் நுழைந்ததும்,  

“ஒயின் டேஸ்ட் பண்ண அழைச்சிண்டு போறியா?” என்று அப்பா வாயில் நீர் ஊறக் கேட்டார். 

“ஒயினுடன் இன்னும் என்னன்னவோ….”  

அஷ்வின் விருப்பப்படி எல்லாரும் விலையுயர்ந்த ஆடைகளில். ஆண்கள் ஜாக்கெட், ட்டை, கறுப்புக் காலணிகள். அம்மா வெள்ளி திருமண நாளுக்கு வாங்கிய பட்டுப் புடவையில். அறிமுக விருந்தில் ஸ்வேதா அணிவதற்காக அவள் தந்தை வாங்கிக் கொடுத்த நீண்ட பட்டு ஆடை – அதில் கையால் வரைந்த வண்ணக் கோடுகளும் இடுப்பில் கட்டிக்கொள்ள துண்டும் – அவளுக்குக் கைகொடுத்தது.  

சில சின்ன சாலைகள். கடைசியில் தெருவோரத்தில் காரை நிறுத்தினான். உட்கார்ந்த அலுப்பு தீர இறங்கி நின்றார்கள். ஒரு பக்கம் திராட்சைத் தோட்டம், மேற்கு வானத்தின் மஞ்சளில் குளித்தது. இன்னொரு பக்கம் உயரமான பூச்செடிகள் மறைத்த கட்டடம். அதன் அறிவிப்புப் பலகை கண்ணில் படுமுன்பே அம்மா கண்டுபிடித்துவிட்டாள். 

“ஃப்ரெஞ்ச் லான்ட்ரி மாதிரின்னா இருக்கு” என்றாள் நடுங்கிய குரலில்.  

“அதேதான்” என்றார் அப்பா.  

“மாம், கவலைப்படாதே! உனக்கும் ஸ்வேதாவுக்கும் ஸ்பெஷல்லா வெஜிடேரியன் சாப்பாடு.”  

“நம்ம நாலு பேர் சாப்பிட ஆயிரம் டாலருக்கு மேல ஆகுமே.”  

“அந்தக் கவலையும் உனக்கு வேண்டாம். ஐந்தாவதாக வரப்போகும் ஒருவரின் செலவு.”  

இருவர் மட்டும் அமரும் டெஸ்லா அவர்களைத் தாண்டி நிற்க, அதிலிருந்து கால்களை வெளிக்காட்டிய மாலையுடையில் ஒரு ‘கவர்கர்ல் மாடல்’ இறங்க. 

“இவள் என் உள்ளம் கவர் அழகி, டயானா ஷெரிடன். ‘க்ரோயிங் சர்க்ல்’ நிதி நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ கிளையின் உப தலைவி. இன்னும் சில நாளில் சியாட்டில் கிளைக்குத் தலைவி.”  

தன் குடும்பத்தை அவளுக்கு அறிமுகம் செய்தான். முகமன்கள், அணைப்புகள். அது முடிந்ததும், 

“ஓ! முக்கியமான ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே. டயானா என் எதிர்கால மனைவி.” 

பாராட்டுகள், இன்னொரு அணைப்புகள். 

“வெல்கம் டு அவர் ஃபேமிலி!” 

கட்டடத்தின் உள்ளே தனி உலகம். அங்கே நான்கு மணி நேர விருந்து. 

உழைத்தோ உழைக்காமலோ சம்பாதித்த டயானாவின் டாலர் நிறைவு பெறட்டும் என ஸ்வேதா பத்து வரிசை சாப்பாட்டையும் அனுபவித்துச் சுவைத்தாள். 

கின்டர்கார்டனில் விளையாடி ஒன்றாம் வகுப்பில் ஸ்வேதா கால் வைத்தபோது, பதினைந்து மாதம் கழித்துப் பிறந்த அஷ்வினும் சேர்ந்து கொண்டான். நான்காம் வகுப்பு முடிந்ததும் ஐந்தாவது அநாவசியம் எனத் தானே முடிவெடுத்தான். ஸ்வேதாவுக்கு ஓராண்டு முன்பே பள்ளிப் படிப்பை முடித்தான். கல்லூரியில் கணினியியல் பட்டம் மூன்று வருஷத்தில். ஸ்வேதா எதிர்காலத்தை யோசனை செய்கிறபோது, அவன் மூன்று ஆண்டுகளாக கேல்-சாஃப்ட்டில் பிரதான மென்பொருள் அமைப்பாளன். திருமணத்திலும் அவளை முந்திக்கொண்டதில் அதிசயம் இல்லை.  

அவன் டயானாவைக் குறிப்பிட்டதாக நினைவு இல்லை. திடீரென்று முடிவானதோ?   

“கேல்-சாஃப்ட்டின் எதிர்காலத்தைக் கணிக்க சென்ற மாதம் அந்நிறுவனத்துக்குப் போனேன்” என்றாள் அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த டயானா. 

சமீபத்தில் ஏற்பட்ட தொடர்பு. 

“திடீரென நேற்று என்னை சந்திக்க வந்தான். பாட்டரி ஸ்பென்சருக்கு அழைத்துப்போய், கோல்டன் கேட் பாலம் பின்னணியில் இருக்க என் சம்மதம் கேட்டான். எப்படி மறுப்பது?” 

அவளுடைய அலைபேசியில் அப்படத்தைக் காட்டினாள். டயானா முன் மண்டியிட்ட அஷ்வின் கையில் திறந்த மோதிரப் பெட்டி. அவள் ஆச்சரியத்துடன் கன்னத்தில் கைவைக்கிறாள். எல்லாம் பொன்வாசல் பாலத்தின் மகிமை. 

பெயர் தான் ஸ்வேதா, நிறத்தில் அவள் நல்ல கறுப்பு. அஷ்வின் வெள்ளை மட்டுமல்ல, அசப்பில் ஐரோப்பிய களை. பேச்சில் மயக்கும் சாமர்த்தியம். ஒரு சில வாரப் பழக்கத்தில் அழகும் செல்வமும் நிறைந்த ஒருத்தியை அவன் வளைத்துப் போட்டதில் அக்காவுக்கு பொறாமை இல்லை, பெருமை.  

“நீ ஹார்வர்ட் எம்.எஸ்.டி.பி.யில் சேரப்போகிறாய் என ஆஷ் சொன்னான்.” 

“உண்மை தான்.” 

“பெருமைப்பட வேண்டிய விஷயம்.” 

“நானா? இல்லை ஹார்வர்டா?” 

“நல்ல வேடிக்கை.” 

திரும்பி வந்தபோது, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பையனின் எதிர்காலம் நிச்சயம் ஆனதில் சந்தோஷம், திருப்தி. ஸ்வேதாவின் ஆண்-தோழன் அளவில்கூட யாரும் இல்லாத குறை வரும் ஆண்டுகளில் நிவர்த்தியாகும் என்று அவர்களுக்கு நம்பிக்கை.  

ஸ்வேதாவுக்குத்தான் இரவில் தூக்கத்தை நிறுத்தி வைத்த நிச்சயமின்மை. 

இரண்டு நாள்களுக்கு முன் முடிவான தீர்மானத்தில் மறுபடி விரிசல்.  

காலம் ஐந்து ஆண்டுகள் ஓடி நிற்கிறது. தென் கலிஃபோர்னியா பல்கலையில் பொதுமக்கள் நலத்தில் பட்டம் (எம்.பி.எச்.) வாங்கி மாநில சுகாதாரத் துறையில் அவளுக்கு ஒரு சாதாரண வேலை. அஷ்டாங்க யோகாவில் முறையாகப் பயிற்சி பெற்று வாரம் மூன்று மாலைகளில் வகுப்பு. மற்றவர்களின் உடல் மன ஆரோக்கியத்தை வளர்ப்பதில் வரும் திருப்தி மட்டும் அன்று, ஒவ்வொரு வகுப்புக்கும் கிடைக்கும் ஐம்பது டாலர் சன்மானத்துக்காகவும். கூப்பான்கள் வெட்டி விலைகளை ஒப்பிட்டு மளிகை சாமான்கள் வாங்குகிறாள். விமானத்தில் பயணிக்க நேரும்போது சாதா வகுப்பு, அதுவும் அகால வேளைகளில். அஷ்வினுக்கும் டயானாவுக்கும் ஃப்ரெஞ்ச் லான்டிரி மாதம் ஒருமுறை. தேவையான சாமான்கள் வீட்டிற்கே கொண்டு தரப்படுகின்றன. விமானத்தில் கால் நீட்ட காலி இடம், சௌகரியமான நேரங்களில். அவர்கள் மௌன்ட்டன்வியு மாளிகையில் ஒருவரை யொருவர் தேட, அவளுக்குச் சாதாரண மக்கள் வாழும் பகுதியில் ஒளிந்துகொள்ள முடியாத ஒற்றைப் படுக்கையறை இல்லம். 

ஹார்வர்ட் திரும்ப அவளை அழைக்கிறது. அஷ்வின் டயானா அளவுக்கு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு முன் கூனிக்குறுக அவசியம் இல்லாத நிலையான வருமானம்… எட்டு ஆண்டுகள் நிமிஷமாக ஓடிவிடும்… 

அவசரப்படாதே! என மனதின் இன்னொரு பாதியில் ஒரு எச்சரிக்கை.  

வாழ்க்கை இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற நியதியா? எது வாழ்க்கையில் முக்கியம், எது ஆத்ம திருப்தி தருகிறது என்பதை அறிவதுதான் லட்சியம். அவற்றை அடைய முடியும் என்பதுதான் நம்பிக்கை. மற்றபடி… எது இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? 

ஹார்வர்ட், தென் கலிஃபோர்னியா நாட்டின் எதிர் மூலைகளில். அவள் எந்தப் பக்கம் போகப் போகிறாள்?   

அதே தினம், கிழக்குக் கடற்கரையில்… 

அப்பாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்கு முன் ஸ்வப்னா தன் மன மாற்றத்தை அம்மாவிடம் சொல்வதாகத் திட்டம். அவள் அதை அப்பாவிடம் பிட்டுப் பிட்டு வைப்பாள் என்ற நம்பிக்கை. அது அவசியமா என்ற சந்தேகத்தை எழுப்பியது முந்தைய தினம் வந்த இன்னொரு மின்னஞ்சல்.  

ஸ்வப்னா கோவிந்தராஜன்,  

உன் கட்டுரையைப் படித்த செய்தித்தாளின் இணை ஆசிரியர் அது உணவுப் பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். அவர் குறிப்பிட்ட மாற்றங்களை மனதில் வைத்துக் கட்டுரையை மாற்றி எழுதி அப்பகுதி ஆசிரியருக்கு அனுப்ப அறிவுரை கொடுக்கிறேன். 

நெஸ்லேயையும் நெபிஸ்கோவையும் பழித்தது இணை ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. அவர் பரிந்துரைத்த மாற்றங்கள் அவள் கட்டுரையை கேழ்வரகு தோசையும், குஸ்குஸ்ஸும் செய்யும் சமையல் குறிப்புகளாக மாற்றும். யார் அதைப் படித்து அவற்றை சமைக்கப் போகிறார்கள்? அவள் எழுத்தின் மதிப்பு அவ்வளவுதானா? 

காலையில் அம்மா ‘குட் மார்னிங்’கைத் தொடர்ந்து, 

“நீராவுக்கு ஹட்சன் வேலி மருந்தகத்தில் மகளிர் நலத்துறையின் தலைவர் வேலை கிடைச்சிருக்காம். நேற்று இரவு கூப்பிட்டுச் சொன்னாள். அது இது எல்லாம் சேர்த்து அரை மில்லியன் டாலர் கிடைக்கும்.”  

யூ.எஸ்.ஸில் காலடி வைத்த நாளில் இருந்து அம்மா யாரையாவது குறிப்பிட்டால் அவர்களின் வருமானமும் ஒட்டிக் கொண்டிருக்கும். ‘நீராவோட அம்மா வந்திருந்தா. அவளுக்கு சிடி லைப்ரரில உக்காந்த இடத்தில வேலை, ஐம்பதாயிரம் சம்பளம். இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.’  

அவள் நீராவுடன் நிறுத்தவில்லை. பள்ளிக்கூடத்தில் ஸ்வப்னாவுக்கு பல படிகள் குறைவாகச் செய்த வெள்ளை மாணவிகள் சிலரின் அப்போதைய வருமானத்தையும் வரிசைப்படுத்தி அவளைத் தர்ம சங்கடத்தில் வைத்தாள்.   

அம்மா தன் தோழிகள், உறவுக்கார பெண்களிடம், “ஸ்வப்னா பெத் இஸ்ரேல் ஹாஸ்பிடலில் என்டோக்ரினாலஜிஸ்ட். ஆரம்பத்திலேயே வருஷத்துக்கு இருநூறு ஆயிரம்” என்று பெருமையடித்துக் கொள்ளும் வாய்ப்பைத் தருவதா? 

இல்லை,

மதுஸ்ரீ முகர்ஜி போல அறிவியல், மனிதத்துவம் இரண்டையும் இணைக்கும் உயர்தர புத்தகங்கள் எழுதிய பெருமையைத் தேடுவதா? 

எதிர்காலம் ஓர் இழையில் ஆடியது.  

“ஸ்வப்னா, ஸ்வேதா விவகாரம் எப்படிடா போச்சு?”  

“ஒருத்தியை தக்க வச்சிட்டேன். ஆனா, இன்னொருத்தி வேண்டாம்னுட்டா. ஏஞ்சலினாக்கு அடிச்சது பார்! அதிருஷ்டம்.” 

“ஒண்ணாவது தேறட்டும்னுதான் யாவே ரெண்டு பேர் மேலேயும் வலை வீசியிருக்கார். அவர் கில்லாடி.”  

Series Navigation<< நிஜமான வேலைஎன்ன பொருத்தம்! >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.