
“அம்மாவுக்கு எல்லாமே தெரிஞ்சிருந்தது,” என் சகோதரி ஸாலி சொன்னாள். “அவ மந்திரக்காரிதான். அவ செத்துப் போய்ட்டாலும், இப்பக் கூட அவளால என்னைப் பார்க்க முடியும்னு எனக்குப் பயமா இருக்கும்.”
“எனக்கும்தான். நா ஏதாச்சும் ஏடாகூடமாச் செய்றேன்னா, அப்பத்தான் நா கவலைப்படுவேன். இதுல கேவலம் எதுன்னா, நா ஏதாச்சும் நல்லபடியாச் செய்றேன்னு வச்சுக்க, அப்ப அவ என்னைப் பாக்க மாட்டாளான்னு, ‘ஏ அம்மா, இதைப் பாத்தியா!’ன்னு சொல்லணும் போல எனக்கு இருக்கும். செத்துப் போனவங்க எல்லாம் நம்ம நடுப்பறவே இருந்துகிட்டு, நம்மளைப் பார்த்து விழுந்து சிரிச்சுகிட்டு இருந்தாங்கன்னா எப்டி இருக்கும்? கடவுளே, ஸாலி, அது கூட அவ சொல்ற மாதிரியே இருக்கு இல்லை? ஐயோ, நானும் அவளை மாதிரியே ஆயிட்டேனா?”
எங்கள் அம்மா, நம்முடைய முழங்கால் எல்லாம் இப்போதிருப்பதற்கு எதிர்பக்கமா மடிஞ்சதுன்னா, நாற்காலிகளெல்லாம் வேறு எப்படி இருக்கும்னு யோசிச்சிருக்கா. கிரிஸ்துவுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்துக் கொன்றிருந்தா என்ன ஆகியிருக்கும்? சங்கிலில சிலுவையைக் கோர்த்துகிட்டுத் திரியறத்துக்குப் பதிலா, எல்லாரும் நாற்காலிங்களை கழுத்தில மாட்டிகிட்டுத் திரிவாங்களான்னு யோசிப்பாங்க.
“அவ எங்கிட்டே சொன்னா, “நீ எதை வேணா செய், ஆனா குழந்தை பெத்துக்கறதை மட்டும் செய்யாதே,’ ” என்றாள் ஸாலி. “கல்யாணம் செய்துக்கற அளவுக்கு முட்டாளா இருந்தீன்னா, அவன் பணக்காரனாவும், உன்னை கைல வச்சுத் தாங்கறவனாவும் பாத்துக்க. ‘ஒரு நாளும், இல்லெ, ஒரு தடவை கூட காதலுக்காகக் கல்யாணம் செஞ்சுக்காத. ஒரு ஆணை நீ காதலிச்சேன்னா அவன் கூடவே இருக்கணும்னு உனக்குத் தோணும், அவனை திருப்திப்படுத்தணும்னு இருக்கும், அவனுக்காக ஏதாச்சும் செய்துகிட்டே இருக்க வேண்டி வரும். அவனை, “நீ எங்கேதான் போயிருந்தே?” இல்லே, “நீ இப்ப என்ன யோசிச்சுகிட்டிருந்தே?” இல்லே, “நீ என்னை இன்னமும் காதலிக்கிறியா?”ன்னு ஏதாவது கேட்டுகிட்டே இருப்பே, அதெல்லாம் அவன்கிட்டே நல்லா உதை வாங்கறதுக்காகத்தான் கேட்பே. இல்லைன்னா, அவன் சிகரெட் வாங்கறேன்னு வெளில போவான், திரும்பியே வர மாட்டான்.’ “
“அவ காதல்ங்கற வார்த்தையையே வெறுத்தாள், இல்லியா? ஜனங்க தேவடியான்னு வையற மாதிரி அந்த வார்த்தையை அவ சொன்னா.”
“அவ குழந்தைங்களெ வெறுத்தா. என்னோட நாலு குழந்தைங்களும் சிறிசா இருக்கையிலெ அவளை ஒரு வாட்டி ஏர்போர்ட்டிலெர்ந்து அழைச்சு வரப் போனேன். அவ ஒரு கத்தல் போட்டா, ‘அதுங்களைத் தூரப் போகச் சொல்லு!’ ஏதோ அவங்களை வேட்டை நாய்க் கூட்டம்னு நெனச்சாப்ல இருந்தது.”
“என்னை அவ ஏன் தள்ளி வச்சா, நான் ஒரு மெக்ஸிகனைக் கல்யாணம் பண்ணினதாலயா, இல்லை அவன் ஒரு கத்தோலிக்கன்கிறதாலயான்னு எனக்குத் தெரியவே இல்லை.”
“அவ கதோலிக்கச் சர்ச்சைக் குத்தம் சொன்னதுக்குக் காரணம், அது எல்லாரையும் நெறைய்ய குழந்தை பெத்துக்கச் சொன்னதுதான். காதல்லுங்கறது ஜனங்களுக்கு மகிழ்ச்சி தரும்னு இந்த போப்புகள்தான் வதந்தியைப் பரப்பினாங்கன்னு அவ சொன்னா.”
“காதல் உன்னை அவதிக்குள்ளாக்கும்,” எங்கள் அம்மா சொன்னார். “நீ உன்னோட தலைகாணியை அழுது ஈரமாக்கிட்டுத் தூங்குவே, உன்னோட கண்ணீரால ஃபோன் பூத்தெல்லாம் ஆவி படர்ந்து இருக்கும், உன்னோட கதறல் நாய்களை எல்லாம் ஊளையிட வைக்கும், ரெண்டு சிகரெட்களை ஒரே நேரத்தில புகைக்க நீ முயற்சி செய்வே.”
“அப்பா உன்னை அவதிக்குள்ளெ தள்ளினாரா?” நான் அவளிடம் கேட்டேன்.
“யாரு, அவரா? அவர் யாரையுமே அவதிப்படுத்தி இருக்க மாட்டார்.”
ஆனால் நான் என் அம்மாவின் புத்திமதியைப் பயன்படுத்தினேன், என் மகனின் திருமணத்தைக் காப்பாற்ற முடிந்தது. கோக்கோ, அவனோட மனைவி, என்னைக் கூப்பிட்டாள், கென் சில மாதங்கள்லெ அவளை விட்டுட்டுப் பிரிஞ்சு போயிடறதா முடிவு பண்ணி இருந்தான். அவனுக்குத் தனியா இடம் வேண்டி இருந்ததாம். கோக்கோ அவன் மேலே உசிரையே வச்சிருந்தா; அவ பதறிப் போயிருந்தா. அவளுக்கு என் அம்மாவின் குரலில் புத்தி சொல்றேன் நான்னு எனக்கே தெரிஞ்சது. நிஜமாவே, அம்மா மாதிரி டெக்ஸாஸ் பக்கத்துப் பேச்சுல நீட்டி நீட்டி, பரிகாசம் செய்ற மாதிரிப் பேசினேன். “அந்த முட்டாளுக்கு அவனோட மருந்தையே கொஞ்சம் கொடு.” அவனைத் திரும்பி வான்னு கூப்பிடவே கூப்பிடாதேன்னு அவகிட்டே சொன்னேன். “அவனைக் கூப்பிடாதே. உனக்கு நீயே மர்மமான கடிதங்களோட பூக்களை அனுப்பிக்க. அவனோட ஆஃப்ரிக்க சாம்பல் கிளிக்கு, “ஹெல்லோ ஜோ!”-ன்னு கூப்பிடச் சொல்லிக் கொடு.” நல்ல உடுப்புகள் போடற, அழகான ஆண்கள் சிலரைக் கூட்டு சேர்த்துக்க, அவங்களுக்குக் காசு கொடுத்தாவது உங்களோட வீட்டுக்கு அடிக்கடி வந்து கொஞ்ச நேரம் அங்கே இருந்துட்டுப் போகச் சொல்லுன்னு யோசனை சொன்னேன். அவங்களை சேஸ் பானிஸ் ரெஸ்டராண்டுக்குக் கூப்பிட்டுப் போய் மதியத்துல சாப்பிடு. அவனோட துணிமணிங்களையோ, இல்லை அந்தக் கிளியையோ எடுத்துப் போகிறத்துக்குன்னு கென் வழக்கமா வர்ற நேரத்தில எல்லாம் வெவ்வேற ஆம்பளைங்க வீட்டுல உக்காந்திருக்கற மாதிரி ஏற்பாடு செய்னு சொன்னேன். கோக்கோ என்னைக் கூப்பிட்டுகிட்டே இருந்தா. அவ நான் சொல்றதை எல்லாம்தான் செய்தா, ஆனா அவன் இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரல்லியேன்னு கேட்டா. ஆனா, அவள் இப்ப அத்தனை அவதிப் படற மாதிரி தெரியல்லை.
கடெசில கென் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டான். “ஓ அம்மா! இதக் கேளு.. கோக்கோ எவ்ளவு கழிசடை பாரு… நான் எங்களோட வீட்டுக்கு கொஞ்சம் சி.டியை எல்லாம் எடுத்துக்கிட்டு வரறதுக்குன்னு போனேனா, அங்கே இந்த ஆளு உக்காந்திருக்கான். கதம்பக் கலர்ல ஒரு சைக்கிள் பந்தயக்காரன் மாதிரி உடை போட்ருக்கான், ஒரே வியர்வையா இருக்கணும். என்னோட படுக்கைல படுத்துகிட்டு, என்னோட டிவிலெ ஓப்ரா ஷோவைப் பாத்துகிட்டிருக்கான், என்னோட கிளிக்கு எதையோ திங்கக் கொடுக்கறான்.”
நான் என்ன சொல்ல முடியும்? கென்னும் கோக்கோவும் அதுக்கப்பறம் சேர்ந்து சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்காங்க. சமீபத்துல அவங்களைப் பார்க்கப் போயிருந்தேன், ஃபோன் மணியடிச்சது. கோக்கோ எடுத்துப் பேசினா, கொஞ்ச நேரம் பேசினா, அப்பப்ப சிரிச்சுகிட்டிருந்தா. அவள் கீழே வச்சதும் கென் கேட்டான், “அது யாரு?” கோக்கோ சின்னதா சிரிச்சா, “ஓ, யாரோ ஒர்த்தன். அவனை ஜிம்லெ சந்திச்சேன்.”
*
“அம்மா எனக்கு ரொம்பப் பிடிச்ச சினிமாப் படத்தை கேவலமாக்கினா,” ஸாலியிடம் நான் சொன்னேன். “த ஸாங் ஆஃப் பெர்னாடெட் –தான் அந்தப் படம். நான் அப்போ செஞ்ஜோஸஃப் பள்ளிக்கூடத்தில் படிச்சேன், ஒரு கன்னித் துறவியாகப் போகணும்னு திட்டம், இன்னும் சொன்னால், புனித மங்கையாகணும்னு ஆசைப் பட்டேன். உனக்கு அப்போ மூணு வயசு இருக்கும். நான் அந்தப் படத்தை மூணு தடவை பார்த்தேன். கடேசில அவள் என்னோடு வர ஒத்துகிட்டாள். படம் பூராவும் அவள் சிரிச்சுக்கிட்டே இருந்தாள். அந்த சௌந்தர்யமான பெண் கன்னி மேரி இல்லை என்றாள், ‘அது டாரதி லாமூ(ர்), தெரியல்லியா உனக்கு, கடவுளே.’ பல வாரங்களுக்கு அமல உற்பவம் என்பதைக் கேலி செய்து கொண்டிருந்தாள். ‘ஒரு கப் காஃபி கொண்டு வரியா எனக்கு? என்னால எழுந்திருக்க முடியல்லை. நான் தான் மாசற்ற சூல்.’ அல்லது அவளோட தோழி ஆலிஸ் பொமெராய் கிட்டே ஃபோன்ல பேசும்போது சொல்வாள், ‘ஹை, நான் தான், வேர்த்துக் கொட்டி இருக்கற கர்ப்பம்.’ அல்லது, ‘ஹை, இது ரெண்டு வினாடி கர்ப்பம்.’
“அவள் நகைச்சுவைல திறமைசாலி. அதை நாம ஒத்துக்கணும். தெருல பிச்சை கேக்கறவங்க கிட்டே அஞ்சு சென்ட் காசைக் கொடுத்துட்டு, அவங்க கிட்டே கேட்பாள், ‘நான் கேள்வி கேட்கறதைப் பொறுத்துக்கப்பா, ஆனா பதில் சொல்லு, உன்னோட கனவுகளோ இல்ல எதிர்பார்ப்புகளோதான் என்ன?’ அல்லது ஒரு டாக்ஸி கார் ஓட்றவர் ரொம்ப சிடுமூஞ்சியா இருந்தா, ‘இன்னிக்கி நீங்க கொஞ்சம் அதிகமா சிந்தனைல மூழ்கி இருக்கற மாதிரியும், சுய சோதனை செய்யறாப்லயும் தெரியுதே.’
“இல்லே, அவளோட நகைச்சுவை கூட பயங்கரமாத்தான் இருந்தது. இத்தனை வருசங்கள்லேயும் அவ எழுதின தற்கொலை அறிவிப்புகள் எல்லாம், அதை எல்லாம் எனக்குத்தான் எழுதினா, வழக்கமா அதெல்லாம் ஜோக் போலத்தான் இருந்தது. தன் மணிக்கட்டுங்களை அறுத்துகிட்டாளே, அவ அந்தக் குறிப்பில ‘ப்ளடி மேரி’ன்னு கையெழுத்திட்டிருந்தா. அதிகமா தூக்க மாத்திரை சாப்பிட்டாளே அப்ப எழுதினா, அவள் தூக்கு போட்டுகிடத்தான் பார்த்தாளாம், ஆனா அப்டி தொங்கல்லெ விடறதுக்கு அவளுக்கு முடியல்லேன்னு எழுதினா. அவ எனக்கு எழுதின கடெசி கடுதாசி கொஞ்சம் கூடச் சிரிப்பே இல்லாதது. அதுல, நான் அவளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்னு அவளுக்குத் தெரியும்னு எழுதினா. என் வாழ்க்கையை நான் பாழாக்கினதுக்கு என்னை அவளால மன்னிக்கவே முடியல்லியாம்.’
“அவ எனக்கு ஒரு தற்கொலை குறிப்பு கூட எழுதினதில்லியே.”
“என்னால அதை நம்ப முடியல்லை. ஸாலி, எனக்கு எல்லா தற்கொலை குறிப்பும் வந்துதுன்னு, உனக்கு என் மேல பொறாமையா இருக்கா?”
“பின்னே, ஆமாம். நான் பொறாமைதான் படறேன்.”
எங்கள் அப்பா இறந்த போது, ஸாலி மெக்ஸிகோ நகரத்திலிருந்து கலிஃபோர்னியாவுக்கு விமானத்தில் வந்தாள். அவள் அம்மாவின் வீட்டுக்கு நேரே போனாள், கதவைத் தட்டினாள். அம்மா அவளை ஜன்னல் வழியே பார்த்தாள், ஆனால் வீட்டுக்குள்ளே விடவில்லை. அவள் ஸாலியை எத்தனையோ வருஷங்களுக்கு முன்பே உறவே இல்லை என்று உதறியிருந்தாள்.
“நான் அப்பா இல்லியேன்னு ஏங்கறேன்,” ஸாலி கண்ணாடி வழியே அவளிடம் கூவினாள். “நான் புத்து நோயால செத்துகிட்டிருக்கேன். எனக்கு நீங்க இப்ப வேணும், அம்மா!” எங்கள் அம்மா ஜன்னல் திரைக் கட்டைகளை மூடினாள், வாயிற் கதவில் கேட்ட தட தட தட்டல்களை லட்சியமே செய்யவில்லை.
ஸாலி இந்தக் காட்சியையும், இதை விட வருத்தம் தந்த இதர காட்சிகளையும் திரும்பத் திரும்ப மனதில் ஓட்டி, விம்மி அழுவாள். கடைசியாக அவள் மிகவும் நோய்ப்பட்டு, இறக்கத் தயாரான நிலை. தன் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுவதை கைவிட்டிருந்தாள். அவள் இப்போது நிதானத்திற்கு வந்திருந்தாள், அவ்வளவு அழகு, அத்தனை இனிமையானவளாகினாள். இருந்தாலும், எப்போதாவது ஒரு தடவை, ஆத்திரம் அவளைப் பீடிக்கும், விடவே விடாது, அமைதியை அவளுக்கு அது மறுக்கும்.
அதனால் ஒவ்வொரு இரவும் நான் ஸாலிக்குக் கதைகள் சொல்ல ஆரம்பித்தேன், தேவதைக் கதைகள் சொல்வதைப் போல.
எங்கள் அம்மாவைப் பற்றி வேடிக்கையான கதைகளைச் சொன்னேன். அவள் எப்படி வாத்துக் கிழவி பிராண்ட் உருளைக் கிழங்கு வறுவல் பை ஒன்றைத் திறக்க மறுபடி மறுபடி முயன்றாள், கடைசியில் விட்டு விட்டாள். “வாழ்க்கை ரொம்பவே கஷ்டமாகி விட்டது, சனியன்!’ என்றவள், அந்தப் பையைத் தோளுக்குப் பின்னே தூக்கி எறிந்து விட்டாள்.
அப்புறம் அவளிடம் (ஸாலி), அம்மா எப்படி அவளுடைய சகோதரர் ஃபார்டூனாடுஸோடு முப்பது வருஷங்கள் பேசவே இல்லை என்பதைச் சொன்னேன். கடைசியில் அவர் அவளை டாப் ஆஃப் த மார்க் ரெஸ்டராண்டில் சாப்பாட்டுக்கு அழைத்தார், வெறுப்புக் கோடரியைப் புதைக்கலாம் என்று. “அவனோட கர்வம் பிடிச்ச தலைலதான் புதைக்கணும்!” என்றாள் அம்மா. அவரைக் கடைசில ஒரு பிடி பிடிச்சு விட்டாள். அவர் அவளை கண்ணாடிக் கூண்டுல வச்சு காட்டு வான்கோழிப் பண்டம் ஒன்றை வற்புறுத்திச் சாப்பிட வைத்திருந்தார். [1] அது மேஜைக்கு வந்த போது அம்மா கொணர்ந்த வெய்ட்டரிடம் கேட்டாளாம், “ஏம்பா, உங்க கிட்டே கெட்ச்சப் இருக்கா?”[2]
எல்லாவற்றையும் விட, நான் ஸாலியிடம் அம்மா ஒரு காலத்தில் எப்படி இருந்தாள் என்பதைப் பற்றித்தான் கதைகளைச் சொன்னேன். அவள் குடிகாரியாக ஆவதற்கு முன்பு, எங்களை எல்லாம் துன்பப்படுத்தியதற்கு முன்பு இருந்ததைச் சொன்னேன். அது முன்பு ஒரு காலம்.
“அம்மா ஜூனோவுக்குப் போகிற கப்பல் தளத்தில் வெளிக் கம்பிகளுக்கு அருகே நிற்கிறாள். அவள் தன்னுடைய புதுக் கணவர், எட் ஐச் சந்திக்கப் போகிறாள். ஒரு புதுவாழ்வை நோக்கிப் போகிறாள். அது 1930 ஆம் வருடம். அவள் பெரும் பொருளாதாரச் சரிவைப் பின்னே விட்டுப் போகிறாள். தன் பாட்டனாரை விட்டுப் போகிறாள். டெக்ஸாஸின் அவலமான ஏழ்மையும், வலிகளும் எல்லாம் போய் விட்டன. கப்பல் நிலத்துக்கு அருகே வழுக்கிக் கொண்டு வருகிறது, அன்று வானம் தெளிவாக உள்ள நாள். கருநீல நிறத் தண்ணீரையும், அந்த மனிதரே இல்லாத சுத்தமான புது நிலத்தின் கரைகளில் உள்ள பசும் பைன் மரங்களையும் பார்த்து நிற்கிறாள். அங்கு பெரும் பனிப்பாறைகளும், கடல் நாரைகளும் இருக்கின்றன.
“முக்கியமா நாம நினைவு வச்சுக்கணும், உருவத்துல அவ எவ்வளவு சின்னவளா இருந்தாங்கறதை, அவள் அஞ்சடி நாலங்குலம்தான். ஆனா அவ நமக்குத் தெரிஞ்சதுலதான் பிரம்மாண்டமா இருந்திருக்கா. அவ்வளவு இளம் வயசு, பத்தொன்பது. அவ ரொம்ப அழகு, கருப்பு முடி, மெல்லிசா உடம்பு. கப்பல் மேல் தளத்துல காத்துல அவ ஆடறா. அவ பூஞ்சை. குளிர்லயும், எதிர்பார்ப்போட விறுவிறுப்புலயும் அவ உடம்பு நடுங்கறது. புகை பிடிக்கறா. இதயம் மாதிரி வடிவத்துல இருக்கற முகத்தையும், கன்னங்கரேல் முடியையும் மூடற மாதிரி அந்த உரோமக் காலர் இழுத்துக் கட்டி இருக்கு.
“கைலர் மாமனும், ஜான் மாமனும் அம்மாவுக்கு அந்த மேலங்கியை கல்யாணப் பரிசா வாங்கி இருந்தாங்க. ஆறு வருஷத்துக்கு அப்புறம் அவ அதை இன்னும் போட்டுகிட்டு இருந்தா, அதனாலதான் எனக்கு அதைப் பத்தித் தெரியறது. அந்த சடை பிடிச்சு, நிகடின் வாடை அடிக்கற உரோமத்தில என் முகத்தைப் புதைச்சுப்பேன். அவ போட்டுகிட்டிருக்கறத்தே செய்ய முடியாது. நாம அவ கிட்டே நெருங்கினாலே, அவ ஏதோ அடிக்க வர்றதைத் தடுக்கற மாதிரி கையை உசத்தித் தடுப்பா.
“கப்பலோட மேல் தளத்துல, தான் ரொம்ப வளர்ந்தவளா ஆன மாதிரியும், அழகா ஆயிட்ட மாதிரியும்அவ உணரறா. பயணத்துல அவளுக்கு நண்பர்கள் கிடைச்சாங்க. அவள் சாமர்த்தியமாவும், வசீகரமாகவும் இருந்திருந்தா. கப்பல் காப்டன் அவளைச் சீண்டிகிட்டு இருந்தார். அவளுக்கு அதிகமா ஜின்னை ஊத்திக் கொடுத்தார், அவளுக்குத் தலை சுற்றல் வரும், அவ கிட்டே அவர் ரகசியக் குரல்லே சொல்வாரா, ‘என் இதயத்தை உடைக்கிறியே நீ, கருப்பழகி!’ அப்படின்னு, அது அவளை ரொம்ப உரக்கச் சிரிக்க வைக்கும்.
“அவளுக்கு எட் நல்ல மனுசன்னு தெரியும், நம்பகமானவர், அன்பானவர்னும் தெரியும். முதல் தடவையா அவர் அவளை வீட்டுல கொண்டு விட அவள் ஒத்துகிட்ட போது, அந்த வீடு அப்ஸன் அவென்யுல இருந்தது, அவளுக்கு அப்பொ ரொம்ப அவமானமா இருந்தது. அது அசிங்கமான வீடு; ஜான் மாமனும், தாத்தாவும் குடிச்சிருந்தாங்க. எட் தன்னை மறுபடி கூப்பிட்டுப் போக வரமாட்டார்னு அவ நினைச்சா. ஆனா, அவர் அவளை அணைச்சுகிட்டு அவர் சொன்னார், ‘நான் உன்னைப் பத்திரமா வைச்சுப்பேன்.’
“அலாஸ்கா அவ கற்பனை செய்த மாதிரியே அதிசயமாகவே இருந்தது. அவங்க சறுக்குக் கட்டை விமானங்கள்லே வனாந்திரங்களுக்குள்ளே போனாங்க, உறைஞ்சு போன ஏரிகள்லே இறங்கினாங்க, முழு நிசப்தத்துல பனிச் சறுக்கல் செய்தாங்க, எல்க், துருவக் கரடிங்க, ஓநாய்களை எல்லாம் பார்த்தாங்க. கோடைக் காலத்துல சிறு வனங்கள்லே முகாமடிச்சுத் தங்கினாங்க, சாமென் மீன் பிடிச்சாங்க, க்ரிஸ்லி கரடிங்களையும், மலையாடுகளையும் பார்த்தாங்க! நண்பர்களைப் பிடிச்சாங்க; அவ ஒரு நாடகக் குழுல சேர்ந்தா, ப்ளைத் ஸ்பிரிட்ங்கற நாடகத்துல நடிச்சா. அப்ப நடிகர்களுக்கான விருந்துகள் இருந்தன, கூடிப் பகிரும் விருந்துகள் இருந்தன, அப்ப எட் அவ கிட்டே சொல்றார், இனிமே அவ நடிக்கப் போகக் கூடாதுன்னுட்டு, ஏன்னா அவ ரொம்ப குடிக்க ஆரம்பிச்சிருந்தா, தன்னையே இழிவு செய்கிற மாதிரி நடந்துக்கிட ஆரம்பிச்சிருந்தாள். அப்ப நா பொறந்தேன். அவர் சில மாதங்களுக்கு நோம் நகருக்குப் போக வேண்டி இருந்தது. அவ அப்ப பொறந்திருந்த குழந்தையோட தனியா இருக்க வேண்டி வந்தது. அவர் திரும்பி வந்த போது, அவ குடிபோதையில இருந்தா, குழந்தையைக் கையில வச்சுகிட்டுத் தடுமாறி சுத்திக்கிட்டிருந்தா. ‘அவர் உன்னை என் தோள்லேருந்து பிச்சு எடுத்தார்,’ அவள் என்னிடம் சொன்னாள். குழந்தைப் பராமரிப்பை முழுதும் தானே எடுத்துக் கொண்டார், பாட்டில்லெ பாலூட்டினார். அவர் வேலைக்குப் போயிருக்கைல ஒரு எஸ்கிமோ பெண் வந்து என்னைப் பார்த்துகிட்டாள். எல்லா மோய்னிஹான்களையும் போல அவளும் திராணியில்லாதவ, மோசமானவள்னு அம்மா கிட்டே அவர் சொன்னார். அவளை அவ கிட்டேருந்தே காப்பாத்தினார், அவளைக் கார் ஓட்ட விடல்லே, பணமே இல்லாம வச்சிருந்தார். அவளால செய்ய முடிஞ்சதெல்லாம் நூல்நிலையத்துக்கு நடந்து போகலாம், நாடகங்களைப் படிக்கலாம், ஜேன் க்ரேயோட வெஸ்டர்ன் நாவல்களைப் படிக்கலாம், அவ்வளவுதான்.
“போர் வந்த போது, நீ பொறந்தே, நாம எல்லாரும் டெக்ஸஸுக்குப் போனோம். அப்பா ஜப்பான் கிட்டே ஒரு வெடிமருந்துக் கப்பல்லெ லெஃப்டினெண்டா இருந்தார். அம்மாவோ திரும்ப சொந்த ஊருக்கே வந்ததை முழுசா வெறுத்தாள். உன்னைப் பார்த்துக்கணும்னு, தாத்தாவோட ஆஃபிஸ்ல் வேலை பார்க்கறதை விட்டு விட்டாள். உன்னோட தொட்டிலை தன்னோட அறைக்குக் கொண்டு போனாள்; உன்னோட விளையாடினா, உனக்குப் பாட்டுப் பாடினா, தாலாட்டித் தூங்க வச்சா. யாரையும் உன் கிட்டேயே விடல்லே, என்னைக் கூட.
“எனக்கு அம்மா, தாத்தா ரெண்டு பேரோடயும் ரொம்பவே மோசமான நிலைமை இருந்தது. தனியாகவும் மோசமாத்தான் இருந்தது, நான் அனேக நேரம் தனியாத்தான் இருந்தேன். ஸ்கூல்லெ நிறைய பிரச்சினைல மாட்டிகிட்டேன், ஒரு பள்ளிக்கூடத்திலேருந்து நான் ஓடிப் போயிட்டேன், வேற ரெண்டுலேர்ந்து என்னை வெளில தள்ளிட்டாங்க. ஒரு தடவை ஆறு மாசம் நான் பேசவே இல்லை. அம்மா என்னை கெட்ட விதைன்னு சொன்னாங்க. அவளோட எல்லா ஆத்திரமும் என் மேலே விடிஞ்சது. நான் வளர்ந்தப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது, அவளுக்கும், தாத்தாவுக்கும் தாங்க செஞ்சது எதுவுமே நினைவுலயே இல்லைங்கறது. கடவுள் குடிகாரர்களுக்கு முழு நினைவில்லாத நிலையைக் கொடுத்துடறார், அவங்களுக்கு தாம் என்ன செய்தோம்னு நினைவிருந்தா வெட்கத்துல செத்துப் போயிடுவாங்கங்கறதுதான் காரணமா இருக்கும்.
“அப்பா போர்லேர்ந்து திரும்பி வந்தப்புறம், நாம அரிஜோனாவுல வாழ்ந்தோம். அப்ப சந்தோஷமா சேர்ந்து இருந்தோம். அவங்க நிறைய ரோஜாச் செடிங்களை நட்டாங்க, உனக்கு ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்தாங்க, அதோட பேர் ஸாம். அவ குடிக்காம தெளிவா இருந்தாள். ஆனால் அவளுக்கு அப்பவே உன்னோடவோ, என்னோடவோ எப்படிப் பழகறதுங்கறதே தெரியாமப் போயிருந்தது. நாம நினைச்சோம் அவள் நம்மை வெறுக்கறாள்னு, ஆனா அவள் நம்மைப் பார்த்துப் பயப்படத்தான் செய்தாள். நாமதான் அவளைக் கை விட்டுட்டோம்னு, நாம அவளை வெறுக்கறோம்னு அவ நினைச்சிருக்கா. நம்மை ஏளனம் செய்றதால, பரிகாசம் பண்ணறதால தன்னைத்தான் அவ பாதுகாத்துக் கொண்டிருந்தா, நம்மளை வருந்தச் செய்றதால நாம அவளை வருந்த வைக்கறதைத் தடுத்தாள்.
“சிலே நாட்டுக்குப் போகறதுங்கறது கனவு ஒண்ணு நிறைவேறர மாதிரி இருந்திருக்கு அம்மாவுக்கு. அவளுக்கு நேர்த்தியும், அழகும் கொண்ட பொருட்களை ரொம்பப் பிடிக்கும், ‘சரியான மனிதர்களை’த் தெரிஞ்சிருக்கணும்னு எப்பவுமே விரும்பினவள். அப்பாவுக்கு பெருமையான வேலை. நாம இப்போ பணக்காரங்களா ஆகி இருந்தோம், அழகான வீடும், பல வேலைக்காரங்களும் இருந்தாங்க. அங்கே விருந்துகளும், கொண்டாட்டங்களும் சரியான மனிதர்களோட பங்கெடுப்போட நடந்தன. அவள் முதல்லே வெளில எல்லாம் போனாள், ஆனால் அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. அவளுடைய தலைமுடி, ஆடைகள் எல்லாமே தவறானவை. அவள் விலையுயர்ந்த போலிப் புராதன மரச் சாமான்களை, மோசமான ஓவியங்களை வாங்கினாள். வேலைக்காரர்களைப் பார்த்து அவளுக்கு அச்சமாக இருந்தது. நம்பத்தக்க நண்பர்களென்று அவளுக்கு மிகக் கொஞ்சமானவர்களே இருந்தனர்; நகைப்புக்குரிய வகையில் அவள் ஜெஸூட் பாதிரிகளோடு போக்கர் சீட்டு விளையாட்டு விளையாடினாள், ஆனால் அனேக நேரம் அவள் தன் அறையிலேயேதான் இருந்தாள். அப்பா அவளை அங்கேதான் வைத்திருந்தார்.
“முதல்லெ அவர் என்னைப் பாதுகாத்தார், பிறகு அவர் என்னொட ஜெயிலராய் ஆகி இருந்தார்,” என்றாள் அவள். அவர் அவளுக்கு உதவுவதாக நினைத்தார், ஆனால் வருஷா வருஷம் அவளுடைய மதுபானங்களைக் கட்டுப்படுத்திக் கொடுத்தார், அவளுக்கு வேறு எந்த உதவியையும் அவர் பெற்றுத் தரவில்லை. நாம் அவளருகே போகவே இல்லை, வேறு யாருமே போகவில்லை. அவள் கடும் கோபம் அடைவாள், குரூரமாகவும், அறிவில்லாமலும் நடந்து கொள்வாள். நாம் செய்தது எதுவும் அவளுக்கு நல்லதாகவே படவில்லை என்று நினைத்தோம். நாம் வளர்ந்து, ஏதாவது சாதித்து நல்லபடியாக இருப்பதை அவள் வெறுக்கவே செய்தாள். நாம் இளமையாக இருந்தோம், அழகாக இருந்தோம், நமக்கு ஒரு எதிர்காலம் இருந்தது. இது உனக்குத் தெரியறதா ஸாலி, அவளுக்கு இதெல்லாம் எத்தனை கஷ்டமாக இருந்ததுன்னு?
“ஆமா, அதெல்லாம் அப்படித்தான் இருந்தது. பாவம், அபலையான அம்மா. உனக்குத் தெரியுமா, நான் இப்ப அவளை மாதிரித்தான் இருக்கேன். எல்லார் மேலயும் எனக்கு ஆத்திரம் வர்றது, அவங்கள்லாம் வேலை செய்றாங்க, வாழறாங்கன்னுதான் ஆத்திரம். சில சமயம் உன்னை நான் வெறுக்கறேன், ஏன்னா நீ செத்துகிட்டிருக்கல்லியே. இது எத்தனை மோசமா இருக்கு இல்லியா?”
“இல்லை, ஏன்னா உன்னால இதை என் கிட்டே சொல்ல முடியறதே. நானும் உன் கிட்டே சொல்ல முடியும், நான் இன்னும் சாகல்லைங்கறது எனக்கு மகிழ்ச்சியா இருக்குன்னு. ஆனா அம்மாவுக்கு ஒருபோதும் சொல்லிக்கறத்துக்கு யாரும் இல்லை. அன்னிக்கி, கப்பல்லே, துறைமுகத்துக்கு அது வந்து சேரும்போது, அவளுக்கு அப்படி ஒருத்தர் கிடைச்சார்னு அவ நினைச்சிருந்தா. அம்மா நினைச்சா, எட் எப்போவும் அவளுக்குன்னு இருப்பார்னு. அவ, தான் வீட்டுக்கு வர்றதா அன்னிக்கி நினைச்சா.
“அவளைப் பத்தி எனக்கு மறுபடி சொல்லு. கப்பல்லே இருந்ததைப் பத்தி. அவ கண்ணுல கண்ணீர் நிரம்பி இருந்ததைப் பத்தி.”
“சரி சொல்றேன். அவ தண்ணில சிகரெட்டை எறியறா. அது ஸ்ஸ்னு அணையறதை நீ கேட்க முடியறது, கரை கிட்டே அலைகள் கொஞ்சம் அடங்கி இருக்கு. கப்பலோட எஞ்சினெல்லாம் நிற்கறபோது அதிரறது. அப்புறம் மௌனமா, கடல்லே இருக்கற மிதவைகள், கடல் நாரைகளோட சத்தங்களும், துறைமுகத்துல சேரப் போகிற பெர்த்தை நோக்கிக் கப்பல் வழுக்கிகிட்டு போறதும், கரையில இருக்கற ரப்பர் டயர்ல அது இடிக்கற சத்தமும்தான் கேட்கறது. அம்மா தன்னோட காலர்லே இருக்கற ரோமங்களை நீவி விட்டுக்கறா, முடியைச் சரி செய்றா. சிரித்தபடி, கூட்டத்துக்குள்ளே பார்க்கறா, தன்னோட கணவர் எங்கேன்னு தேடறா. அத்தனை சந்தோஷத்தை அவ அதுக்கு முன்னாடி அனுபவிச்சதே இல்லை.
ஸாலி இப்போது மெல்ல அழுது கொண்டிருக்கிறாள். “பொப்ரெஸீடா. பொப்ரெஸீடா,”[3] என்கிறாள். “அந்த நேரத்துல அவ கிட்டே நான் மட்டும் பேச முடிஞ்சிருந்தா. நான் அவ மேல எத்தனை ஆசை வச்சிருந்தேன்னு அவளுக்கு நான் சொல்ல முடிஞ்சிருந்தா.”
நானோ… என்னிடம் சிறிதும் கருணை இல்லை.
***

தமிழாக்கம்: மைத்ரேயன் / ஃபிப்ரவரி 2020
இங்கிலிஷில் புனைந்தவர் லூஸியா பெர்லின். மூலக் கதையின் பெயர்: Mama.
அது பெர்லினின் ‘A Manual for Cleaning Women’ என்கிற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதை. 2015 ஆம் வருடப் பதிப்பை எடிட் செய்தவர் ஸ்டீஃபன் எமெர்ஸன்.
பதிப்பாளர்கள்: ஃபாரார், ஸ்ட்ரௌஸ் அண்ட் கிரோ, நியூயார்க்.
[1] Phesant under glass- கண்ணாடிக் கூண்டில் வைத்துப் பரிமாறப்படும் காட்டு வான்கோழி மாமிசம், யூரோப்பில் இப்போது அதிகம் காணப்படுவதில்லை. ஆனால் சென்ற நூற்றாண்டின் மத்திய வருடங்களிலெல்லாம் அது மிக விலையுயர்ந்த, மிகக் கொண்டாடப்பட்ட உணவுப் பண்டமாகக் கருதப்பட்டது. இங்கு அம்மாவின் சகோதரர் நிறைய செலவு செய்து அந்த உணவை வாங்கி அம்மாவுக்குப் பரிமாறச் சொல்லி இருக்கிறார். அதை அம்மா எப்படி இகழ்ந்தாள் என்பதை இந்தப் பத்தி சொல்கிறது.
[2] அத்தனை விலையுயர்ந்த, பெருமிதம் மிக்க பண்டத்தைச் சாப்பிடுவதே ஒரு கலை. ஆனால் அதன் மீது இருப்பதில் மிகச் சாதாரணமான கெட்ச்சப்பைக் கொட்டிச் சாப்பிடுவது என்பது அந்த உணவுப்பண்டத்தை அவமதிப்பதாகும்.
[3] பொப்ரெஸீடா = ஸ்பானிய மொழிச் சொல். Pitiful thing என்று இங்கிலிஷில் பொருள். தமிழில் பரிதாபமானவள், பரிதாபமானவன், பரிதாபமானது என்று அர்த்தமாகும்.