தொகுப்பும் குறிப்புகளும்: கோரா

வெளிப்பாட்டில் (emergence) நம்பிக்கை வைப்பது emergentism (வெளிப்பாட்டியம் ) என்றும், அவ்வாறு நம்பிக்கை வைப்பவர்களை emergentist (வெளிப்பாட்டியலர்) என்றும் தத்துவவியலில் குறிப்பிடுகிறது .ஓர் அமைப்பின் சில பண்புகள், அமைப்புக் கூறுகளின் மொத்த பண்புகளையும் மீறி இருப்பதான உணர்வு எழுப்புமானால், அத்தகைய அமைப்புகள் “வெளிப்படும்” (emergent ) பண்பு கொண்டதாகக் கருதப்படும்.பௌதிக மூளையின் கடுஞ்சிக்கல்களிலிருந்தே மனம் / புத்தி வெளிப்படுகிறது என்பதே வெளிப்பாட்டியலரின் தத்துவ நிலைப்பாடு. இது குறித்து ஒருமித்த கருத்து ஏதும் உருவாகவில்லை.
தேனீக்கள், காலனி அமைத்துக் கூடி வாழும் பூச்சி இனத்தவை. தேனீக்களின் காலனியில் உறுப்பினர்கள் ஒரு ராணி, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் 20000 முதல் 80000 வரையான பெண் உழைப்பாளர் தேனீக்கள். மது சேகரிப்பு, தேன் கூடு இடமாற்றம் போன்ற அறிவார்ந்த வேலைகளையும், முட்டை, லார்வா, பியூப்பா வளர்ப்பு, கூடு கட்டுதல், கழிவகற்றம், பாதுகாப்பு, உள்ளக நிர்வாகம் / பராமரிப்பு போன்ற இதர வேலைகளையும் பாகுபாடு கருதாமல் உழைப்பாளி தேனீக்கள் மட்டுமே தனித்தோ, இணைந்தோ செய்து முடிக்கின்றன இவற்றுள் தீவனத் தேட்டை (forage) மற்றும் சாரணர் (scout ) பணியாற்ற நுண்ணறிவும், உகந்த முடிவெடுக்கும் திறனும் தேவை. முதிர்ந்த தேனீக்களுக்கு அவ்விதச் சிறப்பு பண்புகள் இருப்பதை அவற்றின் செயல்பாட்டுகள் உறுதி செய்கின்றன. தேனீக்கள் ஒவ்வொன்றும் ஒரு செல் எனக் கருதினால், அக /புற வேலைகளில் தேர்ந்த, அறிவார்ந்த, ஆயிரக்கணக்கான உழைப்பாளி தேனீக்களை செல்களாகக் கொண்ட சூப்பர் உயிரினமாக தேனீக்கள் காலனியை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் பாலூட்டியின் செல்கள் குறிப்பிட்ட இடத்தில இருந்துகொண்டு ஒற்றைச் செயல் மட்டுமே செய்கின்றன. எனவே காலனிக்குள் பல பணி /இட மாற்றங்களை ஏற்று, கடின உழைப்பைத் தந்து, ஆறு வாரங்களில் மடிந்து, மாற்றீடுக்கு (replacement ) காலிஇடம் வைக்கும், தேனீக்களைத் தனித்த வகை செல்களாகக் கருதவேண்டும்.
தேனிக் காலனியை சூப்பர் உயிரினமாகக் கருதி அவை வெளிப்படுத்தும் நுண்ணறிவு மாடலை ஏற்று, மனித மூளையில் நியூரான்களால் வெளிப்படும் நுண்ணறிவை ஆராயலாம் என்பது சில உயிரியலாளர்களின்கருத்து. ஆனால் இது மிக எளிமையான வாதம். மூளையின் செயல்பாட்டை அறிய பல்துறை /பன்முக அணுகுமுறை தேவைப்படும். மது எடுக்க உகந்த இடம் /பூக்கள், தேன் கூடு எங்கே அமைப்பது என்ற கடினமான தேடல் ஆகியவற்றில் தேனீக்கள் கூட்டாக முடிவெடுத்தலின் நுட்பத்தை ஆய்வதையே விஞ்ஞானிகள் தற்போது கையிலெடுத்துள்ளார்கள்.
எறும்பு, கரையான், தேனீ போன்ற பூச்சியின சமூகங்கள் வெளிப்படுத்தும் அறிவார்ந்த பண்புகள் தேன்கூடு/ திரள் நுண்ணறிவு ( hive intelligence/swarm intelligence ) எனப்படுகிறது. கணிப்பிய நுண்ணறிவு (computational intelligence) என்னும் கணினித் துறையின் உட்புலமாக விளங்கும் திரள் நுண்ணறிவுத் துறையில், உயிரிய அமைப்புகளின் கணித மாடல்களைப் பரிசோதிக்க ரோபோட் திரள்களைப்(swarm of robots ) பயன் படுத்திப் பல நுண்ணறிவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
Bumble Bees எனப்படும் பெரிய வகை தேனீக்கள் பூமிக் கோளத்தின் வடக்குப் பகுதியில் காணப்படுகின்றன. கனடா, வட அமெரிக்க பகுதிகளின் மித வெப்ப பிரதேசங்களிலும் மலைப்பாங்கான பகுதிகளிலும் முக்கிய மகரந்த சேர்ப்பிகளாகச் செயல்பட்டு சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் திறமை மிக்க தீவனத் தேடல் (foraging ) செயல்பாட்டைக் கீழ்க்கண்ட சுட்டியைத் தட்டி விளங்கிக் கொள்ளலாம்.அளவு கடந்த பூச்சிக்கொல்லி பயன்பாடு, இயற்கை வாழ்விட இழப்பு மற்றும் புவி வெப்பமாதல் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலை போன்றவற்றால் வெகு வேகமாக அழிவின் எல்லைக்கு வந்து விட்டன.
சுட்டி:
oOo
வரலாற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

“இருட்டினுடை ஆத்மாவாய்,
எரிகரியின் சொப்பனமாய்,
இதழ் கருத்த புன்னகையாய்.
இருக்குமொரு கறுப்புமலர்”
மேற்காணும் வரிகள் கறுப்பின மக்களின் படிமங்களாய் கறுப்பு மலர்கள் என்ற புதுக் கவிதையில் வருகின்றன . எழுபதுகளில் இதை எழுதிய நா. காமராசன் , “கறுப்பு மலர்கள்” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு விளிம்பு நிலை மக்களிடம் அனுதாபம் கொண்ட ஒரு புதுக் கவிஞனாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் . இந்த படிமங்கள் ஆப்பிரிக்க கறுப்பினத்தவரை நம் இரக்கத்துக்கு உரிய பிறவிகளாகக் காட்டுகின்றன. உண்மையில் அவர்கள் சுரண்டப் பட்டவர்கள் .17-18-ஆம் நூற்றாண்டு முழுதும், கறுப்பின மக்கள் ஆஃப்ரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டு , அங்குள்ள காலனிகளில் பருத்தி,புகையிலை விளை நிலங்களில் உழைக்கும் கொத்தடிமைகள் ஆகி உச்சகட்டக் கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களின் இலவச உழைப்பால் அமெரிக்காவின் பருத்தி புகையிலை மற்றும் சர்க்கரைத் துறைகள் செழித்தன . இருப்பினும் , அமெரிக்க சுதந்திரத்தின் பின்னரும்கூட , 1865-ல் அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தம் நிறைவேறும் வரை, சட்டப்படி அடிமையாக்கப்பட்டவனை ஒரு சொத்தாகக் கருதி விற்க வாங்க முடிகிற அவல நிலைதான் நீடித்தது .முதன் முதலாக அடிமைகளாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்கள் விர்ஜினியாவுக்கு வந்திறங்கி 400 ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்றைய அமெரிக்கர்கள் அடிமைத்தனத்தின் முழுக் கதையும் அறிந்தவர்களல்லர் .ஜார்ஜியா மலைகளில் கூட்டமைப்பு நாயகர்களின் நினைவுச் சின்னங்களாக விளங்கும் மார்பளவு பாறைச் செதுக்கல்கள் அமைந்த இடத் தேர்வு, நாள்தோறும் அவை பெரும்பான்மைக் கறுப்பின மக்களின் கண்ணில் பட்டு அவர்களின் கடந்த கால அடிமை வாழ்வை நினைவூட்டுவதற்காகவென நினைக்கத் தோன்றுகிறது .
சுட்டியில் காணக்கிடைக்கும் கட்டுரையை எழுதியவர் ஸேடி ஸ்மித் என்னும் ஆங்கிலப் பெண் எழுத்தாளர் . இங்கிலிஷ் தந்தைக்கும் ஜமைக்கா தாய்க்கும் 1975-ல் வடக்கு லண்டனில் பிறந்தவர் . புதினம்,கட்டுரை ,சிறுகதை எழுதுவதுடன் நியூயார்க் பல்கலையின் படைப்பிலக்கிய கல்விப் பிரிவின் பேராசிரியராக இருந்து வருகிறார் . இனம்,மதம் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றை கையாளுதலில் தேர்ந்தவராகக் கருதப்படுகிறார் . வரலாறு நமக்கு என்ன செய்யவேண்டும் என விரும்புகிறோம்? என்ற கேள்வியைத் தலைப்பாகக் கொண்ட காரா வாள்கெர் (Kara Walker ) என்ற ஆப்பிரிக்க -அமெரிக்க ஓவியரின் படைப்பை அவர் இங்கே அலசி ஆராய்கிறார்.
சுட்டி: https://www.nybooks.com/articles/2020/02/27/kara-walker-what-do-we-want-history-to-do-to-us/
காரா வாள்கெர் கலிபோர்னியா மாகாணத்தின் ஸ்டாக்டன் நகரில் 1969-ல் பிறந்தவர். படிப்புப் பின்புலமும், ஓவியக் கலை ஆர்வமும் கொண்ட ஆப்பிரிக்க -அமெரிக்கப் பெற்றோரின் மகள். மூன்று வயதிலேயே ஓவியக் கலையில் ஆர்வம் காட்டினார். அவர் 13 வயது அடைந்தபோது, தந்தைக்கு ஜார்ஜியா மாநில பல்கலையில் வேலை கிடைத்ததால், குடும்பம் ஜார்ஜியாவுக்கு இடம் பெயர்ந்தது. இனவெறி தலை விரித்தாடிய ஜார்ஜியா பள்ளியில், பலவித அவமதிப்புக்கு உள்ளானார். எங்கும் வேண்டப்படாதவராகி விட்டதை உணர்ந்து, நூலகம், புத்தக வாசிப்பு என்ற எல்லைக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். ஜார்ஜியா வாழ்க்கை அவருக்கு இனவெறியின் எல்லாப் பரிமாணங்களையும் அறிமுகப் படுத்தியது . அங்கு அருங்கலை பயின்று, அட்லாண்டா கலைக் கல்லூரியில் BFA பட்டமும் ரோடு, Rhode island வடிவமைப்புக் கல்லூரியில் MFA பட்டமும் பெற்றார். காரா வாள்கெரின் படைப்புகள் அனைத்தும் அகண்ட வெண்ணிற பின்புலத்தில் பதித்த கரிய பேப்பர் கத்திரிப்புகள். அவை உக்கிரமான, மனசாட்சியை உலுக்கும் படிமங்களால் அமெரிக்க வரலாற்றுப் பிழைகளான இனவெறி மற்றும் அடிமைத்தன ஆதரிப்பு போன்றவற்றை விமர்சிப்பவை. மேலே குறிப்பிட்ட “வரலாறு நமக்கு என்ன செய்யவேண்டும் என விரும்புகிறோம்?” என்ற கறுப்பு–வெள்ளை பேப்பர் கத்தரிப்பு ஓவியம், ஓவியர் தன் 24-ஆம் வயதில் உருவாக்கியது. அதன் வெற்றியே அவரை வெகுக் கலைப் (public Art ) பக்கம் போக வைத்தது . 1990-ல் சுவர் அளவு பேப்பர் கத்தரிப்பு நிழல் ஓவியங்களை உருவாக்கிக் கலை உலகைத் திகைக்க வைத்தார்.