- வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1
- வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2
- வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3
- வேகமாய் நின்றாய் காளி- 4
- வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5
1990 – களில், சிடி குறுந்தட்டுகள் பிரபலமாகத் தொடங்கின. MP3 வடிவில் இசையும் பிரபலமாகியது. அதுவரை, இளையராஜா ஒரு ஒலி நாடா ராஜா. இளையராஜாவால், தென்னிந்தியர்களுக்கு TDK, Sony, Maxwell போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் பரிச்சயமாகியது. இளையராஜாவின் பல்லாயிரக் கணக்கான பாடல்களை, ஒலி நாடாவிலிருந்து MP3 சிடி குறுந்தட்டுகளுக்கு மாற்றும் ஒரு வழியை நான் பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதியது பிரபலமாகியது. என்னிடம் பலர், இதைப் பற்றி ஆலோசனைக்காக அழைக்கும் பொழுது எனக்கு பெருமையாக இருந்தது உண்மை. ஆனால், நான் அந்தப் பெருமையில் ஒரு விஷயத்தைக் கவனிக்கவில்லை. சிடி குறுந்தட்டுகளுக்கு மாற்றப்பட்ட பழைய ஒலி நாடாக்கள் என்ன ஆகிறது? இது போன்ற, பல கோடி ஒலி நாடாக்கள் என்னவாகின்றன? 130 மீட்டர் நீளமுள்ள 2,500 ஒலி நாடாக்கள் (C90) நீளவட்டமாக வைத்தால், சென்னையிலிருந்து பெங்களுரை அடைந்து விடலாம். இதை இங்கு சொல்லக் காரணம், பல்லாயிரம் கோடி ஒலி நாடாக்கள் பூமியின் அடியே (landfills) புதைக்கப்பட்டுள்ளது!
விடியோ நாடாக்கள் ஒலி நாடாக்களை விட இன்னும் மோசம். ஒரு விடியோ நாடா என்பது 250 மீட்டர் நீளம். அதாவது, சென்னையில் இருந்து பெங்களூர் தூரத்தை, வெறும் 1300 விடியோ நாடாக்களை நீள வட்டமாக நிரப்ப முடியும். விடியோ நாடாக்கள், 1970 80 90 –களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. சில நூறு கோடி விடியோ நாடாக்களைப் பயன்படுத்தியிருப்போம். இவை யாவும் பயன்பாட்டிற்குப் பிறகு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளன .வெறும் ஒலி மற்றும் விடியோ நாடாக்கள் மட்டுமே பல்லாயிரம் சதுரக் கிலோமீட்டர் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இவை எரிக்கப்படுகின்றன ஆனால் பெரும்பாலும் புதைக்கப்படுகின்றன
நானறிந்து, என்னால், உருவாக்கப்பட்ட பெரிய மின் கழிவு ஒலி நாடா. எப்படி பழைய ஒலி நாடாக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன என்ற கவலை எல்லாம் எனக்கு இருக்கவில்லை. என்னுடைய புதிய தொழில்நுட்ப பெருமை மட்டுமே பெரிதாகப் பட்டது. அடுத்த 20 ஆண்டுகள், சில நூறு குறுந்தட்டுக்கள் மற்றும் டிவிடி –களில் பல வகை இசை மற்றும் வீடியோவாக சேர்க்கத் தொடங்கினேன். ஒலி சிடி –க்கள் பல முறை மீண்டும் மீண்டும் கேட்கும் பழக்கமாவது இருந்தது. ஆனால், டிவிடி –க்கள் ஒரு மிகப் பெரிய கழிவு ராஜா. மிக மிகக் குறைவான திரைப்படங்களே இரண்டாம் முறைப் பார்க்கப்படுகிறது. பல நூறு திரைப்படங்கள், பல்லாயிரம் நகல்கள், ஒரு முறை பார்க்கப்பட்டு, மறக்கப்படுகின்றன. விடியோ நாடாக்களை வாடகைக்கு விடும் மையங்கள், நாடாக்களை மறுபயன்பாடு செய்தது உண்மை. ஆனாலும், ஒரு நூறு முறைக்கு மேல், இந்த நாடாக்களில் உள்ள காந்தத்தன்மை குறைந்து விடுகிறது. அதற்குப் பின் இவை குப்பைதான். இவை என்னவாகின்றன என்று யாரும் கவலைப்படுவதில்லை. பெரும்பாலும் ப்ளாஸ்டிக்கில் சிலபல ரசாயனங்கள் தடவி ஒரு மிக மோசமான கழிவுப் பொருள் என்று யாரும் நம்மிடம் சொல்லவில்லை. அதைப் பற்றி நாமும் பெரிது படுத்தவில்லை.
சமீபத்தில், என்னுடைய நூற்றுக்கணக்கான டிவிடிக்கள் மற்றும் ஒலிக் குறுந்தட்டுக்களை எங்கள் நகரத்தில் உள்ள கழிவு கையாளும் மையத்திற்கு எடுத்துச் சென்றேன். அங்குள்ள ஊழியர், இவை யாவும் மண்ணுக்குள் புதைப்பதைத் (landfills) தவிர வேறு வழியில்லை என்றவுடன், குற்ற உணர்வு மேலோங்கியது. பாவம் இந்த பூமி!
சிடி மற்றும் டிவிடி –க்கள், விடியோ நாடாவை விட ஒரு விதத்தில் மோசமானது. இவற்றை மறுபயன்பாடு செய்ய முடியாது. பெரும்பாலும், ஒரு முறையே பதிவு செய்யும் தன்மை கொண்டவை இந்தத் தட்டுக்கள்.
இந்த டிவிடிக்களை அப்புறப்படுத்துவதற்கு முன் பல மாதங்களாய், அதிலுள்ள பாடல்களை யுஎஸ்பி -யில் இயங்கும் வன்தட்டுகளுக்கு (USB hard drives) மெதுவாக மாற்றி வந்தேன். இப்படிச் செய்வதனால் எந்தப் பாடலையும் எளிதில் வன்தட்டில் தேடி விடலாம். இது, டிவிடியில் அவ்வளவு எளிதல்ல. அத்துடன் பல நூறு டிவிடிக்கள் ஒரு வன்தட்டில் மேலேற்றி விடலாம் (terabyte hard drives). வேகமான வாழ்க்கையில் நம்மை அமைதிப்படுத்தும் இசையும், நமக்கு அவசரமாக வேண்டியிருக்கிறதே!
நாம் இதுவரை ஒலிநாடாக்கள் மற்றும் விடியோ நாடாக்கள் பற்றிப் பார்த்தோம். இவற்றை இயக்கும் டேப் எந்திரம் மற்றும் விடியோ எந்திரம் இரண்டும் தேவை இல்லாமல் போய்விட்டது. உலகில் பல நூறு ஆயிரம் டேப் ரெக்கார்டர்கள் மற்றும் விடியோ எந்திரங்கள் கழிவுப்பொருள்களாய் நம்மால் நிராகரிக்கப்பட்டது. இது ஒரு ஆரம்பகால மின்னணு கழிவு என்று சொல்லலாம். ஏனென்றால் இதைவிட மோசமான கழிவு பிரச்சனைகள் பிறகு உருவாகத் தொடங்கியது. நாம் இதுவரை பார்த்தது, பெரும்பாலும் மேற்குலகின் மின்னணுக் கழிவுப் பிரச்சினை என்று சொல்லலாம். 2000 ஆண்டுக்குப் பிறகு இந்தப் பிரச்சனை திடீரென்று உலகளாவிய பிரச்சனையாக மாறியது.
2000 ஆண்டுக்குப் பிறகு செல்பேசிகள், பிரபலமாகத் தொடங்கின. அதுவும் ஆசிய நாடுகளான இந்தியா, சைனா போன்ற நாடுகளில் இவை ஒரு காட்டுத் தீ போலப் பரவத் தொடங்கியது. உதாரணத்திற்கு, இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதத்திற்கும் 20 லட்சம் அல்லது இரண்டு மில்லியன் இணைப்புகள் விற்கப்படுகின்றன இதில் 5 லட்சம் இணைப்புகள் ஒரு செல் கம்பெனியிலிருந்து இன்னொரு செல் கம்பெனி தாவும் நுகர்வோர் என்று வைத்துக் கொண்டால், பாக்கி 15 லட்சம் இணைப்புகளில், தலா ஒரு செல்பேசி அடங்கும். இதை வருடத்திற்கு பார்த்தால், ஒரு கோடியே 80 லட்சம் அல்லது 18 மில்லியன் செல்பேசிகள் விற்கப்படுகின்றன. சைனாவில் இது மாதத்திற்கும் இரண்டரை மில்லியன் செல்பேசிகள் அல்லது திறன்பேசிகள் என்று கொள்ளலாம். அதாவது வருடத்திற்கு 25 முதல் 30 மில்லியன் செல்பேசி இணைப்புகள் விற்கப்படுகின்றன.
செல்பேசிகள், சராசரியாக, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. முதலில் நாம் 2ஜி அலைவரிசையில் பேசி, மற்றும் எழுதி வந்தோம். பிறகு, இதுவே 3ஜி ஆகி, அதன்பின் 4ஜி யாகி, இன்று 5ஜி ஆகி உள்ளது. இந்த ஐந்து தலைமுறை மாற்றங்களும் கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்த மாற்றங்கள். வருடத்திற்கு. ஏறக்குறைய 18 மில்லியன் இணைப்புகள் என்று கொண்டால், இதுவரை 360 மில்லியன் செல்பேசிகள் அல்லது திறன்பேசிகள் இந்தியாவில் மட்டும் விற்கப்பட்டுள்ளது. அதுவே, சைனாவில் 600 முதல் 700 மில்லியன் வரை தேரும் . இந்தக் கணக்கில் பார்த்தால் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் 1,000 மில்லியன் செல்பேசிகள் புழங்குகின்றன. நிச்சயமாக, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு பில்லியன் செல்பேசிகள் இன்று கிடையாது. முக்கால்வாசி செல்பேசிகள் எங்கு போயின? இதிலிருந்து தெரிய வந்திருக்கும் எப்படி ஒரு மேற்கத்திய மின்னணுக் கழிவுப் பிரச்சனை பூதாகாரமாக வளர்ந்து ஒரு உலக பிரச்சனையாக மாறியது என்று.
இந்தியா மற்றும் சீனாவில் ஏறக்குறைய இரண்டரை பில்லியன் மனிதர்கள் வசிக்கிறார்கள். இவர்களிடம் ஒரு பில்லியன் செல்பேசிகள் இருக்க நியாயமில்லை. சொல்லப் போனால், இந்த இரு நாடுகளிடம் 500 முதல் 600 மில்லியன் செல்பேசிகள் மற்றும் திறன்பேசிகள் இருக்கலாம். மற்ற 500 மில்லியன் அல்லது 400 மில்லியன் செல்பேசிகள் என்னவாயிற்று? இவை எப்படி அப்புறப்படுத்தப்பட்டது என்ற கேள்வி எல்லாம் நாம் கேட்பதே இல்லை! ஏனென்றால், புதிய மாடல், புதிய அம்சங்கள், புதிய வசதிகள் – இதுவே, நமக்கு குறியாக உள்ளது. தயாரிப்பாளர்களும், நுகர்வோரின், இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திப், புதிய மாடல்கள், வசதிகள், அம்சங்கள் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் , இவர்களின் விற்பனை மற்றும் லாபம் வளர்ந்துகொண்டே போகிறது. ஆனால் பழைய செல்பேசிகளை என்ன செய்வது என்பது இவர்களது பிரச்சனை இல்லை. உள்ளூர் அரசாங்கம் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். உள்ளூர் அரசாங்கங்கள், இந்த அளவிற்கு மின்னணு கழிவு உருவாகும் என்று கனவுகூட காணவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக எல்லா உள்ளூர் அரசாங்கங்களும் திக்குமுக்காடிப் போய் விட்டார்கள். வரிப்பணத்தில் எப்படியாவது இந்த கழிவை அப்புறப்படுத்த புதிய வழிகளை தேடிய வண்ணம் இருக்கிறார்கள். இதில் நடக்கும் பல தில்லாலங்கடிகளைப் பிறகு விரிவாகப் பார்ப்போம். உள்ளூர் அரசாங்கங்கள், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பல வகை பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தவே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள்.
வருடம் ஒரு செல்பேசி வாங்குவதை நாம் பெருமையாக நினைக்கிறோம். புதிய மாடலின் அதிவேக செயல்பாடு மற்றும் புதிய காமிரா போன்ற அம்சங்கள், நம்மை பழைய மாடலை தூக்கி எறியச் செய்கிறது. வேகம் மீது கொண்ட மோகத்தால் நாம் சகட்டுமேனிக்கு மின் கழிவை பொருப்பில்லாமல் உருவாக்கிக் கொண்டே போகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக, வளரும் நாடுகளில் கூட, எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் நாம் பழுது பார்ப்பதை நிறுத்தி விட்டோம். முன்னர் ஒரு ரேடியோவை அல்லது ஒலிநாடா எந்திரம் வாங்கினால், அதைப் பல ஆண்டுகள் பழுது பார்த்துப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று, புதிய மாடல்களைக் கண்டவுடன், பழைய மின்னணு சாதனங்களை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.
நுகர்வோர் மின்னணு சாதனங்களில், மிக முக்கியமான இன்னொரு சாதனம், தொலைக்காட்சி என்ற டிவி. டிவிக்கள் ஆரம்ப காலத்தில், பெரிதாக படங்களை காட்ட ஒரு குழாய் வடிவ அமைப்பு மூலம் இயங்கியது. இதை சிஆர்டி (CRT – Cathode Ray tube) என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் மட்டுமே இயங்கக் கூடிய இந்த டிவிக்கள் அதிக விலை விற்றதால் நாம் பெரும்பாலும் இந்தச் சாதனங்களைப் பழுது பார்த்து, அதன் பயனுள்ள வாழ்க்கையை நீட்டிக்க முயற்சி செய்தோம்.
படிப்படியாக எல்சிடி என்ற தொழில்நுட்பம் மூலம், இந்த டிவிகளின் பருமன் சற்றுக் குறையத் தொடங்கியது. எல்சிடி தொழில்நுட்பம் (LCD – Liquid Crystal Display, TVs) பயன்படுத்தும் டிவிகள், 15 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்யும். ஆனால், தயாரிப்பாளர்கள், புதிய தொழில்நுட்பமாகிய, எல்இடி (LED – Light Emitting Diode, TVs) டிவி -க்களை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் புதிய எல்இடி டிவிகள் துல்லியமாக இருந்ததோடு இவற்றின் பருமன் மேலும் குறைந்தது. இதனால் கவரப்பட்டு இம்முறை நுகர்வோர் 15 முதல் 20 ஆண்டுகள் வரைக் காத்திருக்கவில்லை. பழைய எல்சிடி டிவிக்களை தூக்கி எறிந்துவிட்டு புதிய எல்இடி டிவிக்களை வாங்கத் தொடங்கினர். ’பழைய குருடி கதவை திறடி’ என்று சொல்வது போல், மலைபோல மின்னணு கழிவுதான்! இந்தப் பிரச்சினையில் மேற்குலகின் பங்கு வளரும் நாடுகளை விட மிக அதிகம். ஏனென்றால் மேற்குலக வீடுகளில், அறை ஒன்றுக்கு ஒரு டிவி என்று இருப்பதனால், இந்த மின் கழிவு ஏராளமாக மேற்குலகில் உருவாக்கப்பட்டது
மூர் விதியை நமக்கு அளித்தது கணினி தொழில். இந்தப் பகுதியில் நாம் நுகர்வோர் கணினி பற்றி சற்று அலசுவோம். உதாரணத்திற்கு, கடந்த 30 ஆண்டுகளாக, நான் ஒரு டஜன் கணினிகள் வாங்கிப் பயன்படுத்தி இருப்பேன். இதில் மேஜை, மடி மற்றும் வில்லை கணினிகள் அடக்கம். கடந்த இரு ஆண்டுகள் வரை, பழைய கணினிகளை, விற்று விடுவேன். அவை என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியாது. கடந்த இரு ஆண்டுகளாக, பழைய கணினிகளை நான் தர்ம அமைப்புகளுக்கு (charities) அன்பளிப்பாக வழங்கி விடுகிறேன். இவை என்ன ஆயிற்று என்றும் எனக்குத் தெரியாது. இங்கு இதைச் சொல்லக் காரணம், என்னைப் போல, உலகில் பலகோடி பேர்கள் இதேபோல 30 ஆண்டுகளில் தலா ஒரு டஜன் கணினிகளைப் பயன்படுத்திவிட்டு ,விற்றிருக்கலாம், அல்லது அன்பளிப்பாகப் பிறருக்குக் கொடுத்திருக்கலாம். என்னைப்போல் ஏறக்குறைய ஒரு ஐம்பது கோடி மக்கள் இதைச் செய்திருந்தால், ஒரு 600 கோடி கணினிகள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கும். ஒரு பேச்சுக்கு இந்த 600 கோடி கணினிகளில், 100 கோடி கணினிகள், இன்னும் பயனில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பாக்கி 500 கோடி கணினிகள் எங்கு போயின?
மேலும், கணினி வைத்திருக்கும் நுகர்வோர், அடிக்கடி பல பாகங்களை மட்டுமே புதுப்பிகிறார்கள். இதை நாம் கணக்கு பார்க்க வேண்டாம். நிச்சயமாகத் தலை சுற்றும்! உதாரணத்திற்கு, கணினி மவுசை (mouse) நாம் அடிக்கடி மாற்றுகிறோம். சில தேவைகளுக்காக புதிய அச்சு எந்திரங்களை (computer printer) வாங்குகிறோம். சில சமயம் புதிய மானிட்டர்களையும் வாங்குகிறோம். இந்தப் பழைய பாகங்களை விற்பது சற்று கடினம். பெரும்பாலும் இவை தூக்கி எறியப்படுகின்றன. கணினிகளை வியாபாரங்களே அதிகமாக பயன்படுத்துகின்றன. நுகர்வோரை விட, வியாபாரங்கள் கணினிகளை அடிக்கடி மாற்றுகின்றன. மின் கழிவு எப்படி வியாபாரங்களில் இன்று பெருகிவிட்டது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்