நிஜமான வேலை

This entry is part 9 of 17 in the series 20xx கதைகள்

2017-2

அமர்நாத்

சரளா சர்காரின் நினைவு அவனுக்கு அன்று திரும்பத்திரும்ப வந்தது. முதன்முதலில் வந்தபிறகு மறுபடி வருவதில் அதிசயம் இல்லை. நாளின் ஆரம்பத்தில் எப்படி வந்தது? 

கண்விழித்ததும் பக்கத்தில் இருந்த அலைபேசியைக் கைநீட்டித்தொட்டு எழுப்புவது பார்த்தனின் வழக்கம். திரையில் ஒளிவிரவி அன்றைய தேதியைப் (4/13) பார்த்ததும் மூளையில் ஒரு பொறி. அவன் முந்தைய பெண்தோழி பியாங்க்காவின் பிறந்தநாள். அவளை மறந்தாலும் அவள் பிறந்த தேதி மறக்காது. அவன் பிறந்தநாளின் (8/26) சரிபாதி.    

கல்லூரிப்படிப்பின் மூன்றாம் ஆண்டு. இளவேனில் செமிஸ்டர். பியாங்க்கா வற்பறுத்தியதால் தான் சரளா சர்காரின் ‘சொஸைடி அன்ட் எதிக்ஸ்’ வகுப்பில் அவன் சேர்ந்தான். பட்டத்துக்கு அவசியமான நான்கு மானுடவியல் வகுப்புகளில் அது ஒன்று. 

“சென்ற செமிஸ்டர் அதற்கு மாணவர்கள் கொடுத்த மதிப்பீடு (ஐந்துக்கு) 4.75.” 

பார்த்தன் தன் அலைபேசியில் பார்த்து,  

“சரலா போன ஆண்டுதான் தத்துவத்தில் பிஎச்.டி. முடித்து வேலையில் சேர்ந்து இருக்கிறாள்.” 

(இந்தியாவில் பிறந்து சிலகாலம் வளர்ந்த அக்கா அண்ணனிடம் இருந்து பேசக்கற்றுக்கொண்ட அவனால் சரளா என உச்சரிக்கமுடியும். யூ.எஸ்.ஸின் இயற்கையான குடிமகன் எனக்காட்டிக்கொள்ள ‘சரலா’.)

“அதனால் தான் சொல்லித்தருவதில் அவளுக்கு அக்கறை ஆர்வம்.” 

அப்படிப்பட்ட ஒருத்தி நிறைய வேலைவைப்பாள் என்பதால்,  

“சுலபமாக திரைப்படக்கலை. நான்கு ஹாலிவுட் படங்களுக்கு விமர்சனம் எழுதினால் ‘ஏ’.” 

“நோ! நோ! அறிவியல் துறையில் சாதிக்கப்போகும் நமக்கு எது நியாயம் எனத் தெரிந்திருக்க வேண்டும்.” 

அவனுக்கும் சேர்த்து தீர்மானித்துவிட்டாள். 

அன்றைய வேலையின் பொறுப்பு அழைக்க பார்த்தன் போர்வையை உதறித்தள்ளி எழுந்தான். அவனுடைய வாழ்க்கைப்பாதையை நிர்ணயித்த ஒருசிலரில் சரளாவும் ஒருத்தி. ஆனாலும், அவன் நினைவில் அவள் ஒரு மேடையில் வீற்றிருக்க அவளுக்கு முன் அவன் கூனிக்குறுகி நிற்பது போன்ற தோற்றம். அதனால் அவள் நினைவு ஆழ்மனதில் இருந்து எப்போதாவது தான் மேலே வரும். 

“ஐ ஹேட் சரலா.”  

பியாங்க்காவுக்கு காரணம் தெரியும். எந்தப் பாடத்திலும் பி-ப்ளஸ் கூட வாங்கியது இல்லையெனப் பலமுறை பார்த்தன் அவளிடம் பெருமை அடித்திருக்கிறான். சரளா அவனை இன்னொரு படி இறக்கிவிட்டாள். 

‘இருபத்தியோராம் நூற்றாண்டில் சமுதாய ஏற்றதாழ்வுகள்’ இறுதித்தேர்வின் தலைப்பு. தாமஸ் பிகெட்டி ஃப்ரெஞ்ச்சில் எழுதி சமீபத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கனமான நூலின் திறனாய்வு. 

“செல்வம் பெருகும்போது ஏற்றதாழ்வுகள் ஏற்பட்டாலும் எல்லாருடைய வாங்கும்சக்தியும் அதிகரிக்கிறது. பிகெட்டி சொல்வதுபோல் பணக்காரர்களிடம் பிடுங்கி ஏன் ஏழைகளுக்குத் தரவேண்டும்? சரலா சரியான சோஷலிஸ்ட். அதனால் தான் என் பதில் அவளுக்குப் பிடிக்கவில்லை.”  

பியாங்க்கா மறுத்து ஒன்றும் சொல்லவில்லை.  

“லோரியல் காஸ்மெடிக்ஸின் வாரிசு லிலியன் ஒருநாள் கூட உழைக்காமல் பெற்றோரின் திரண்ட சொத்துக்களை அனுபவிப்பது பிகெட்டிக்கு பொறுக்கவில்லை. சந்ததிகளுக்கு பணம் சேர்ப்பது மனித இயற்கை.”  

சமுதாயத்தில் சமத்துவம் கொண்டுவருவது பற்றி அவன் யோசிக்கவில்லை. அதனால் சரளா க்ரேடைக் குறைத்துவிட்டாள். 

“பிகெட்டியின் வாதத்துடன் ஒத்துப்போய் நீ எழுதியதற்கு ‘ஏ’.” 

மௌனத்தை இனியும் அவள் நீட்டிக்க முடியாது. 

“மூலதன வருமானத்தின் பெருக்கத்திற்கு பொருளாதார வளர்ச்சி ஈடுகொடுக்க முடியாது என்று அவர் சொல்வது சமீபத்திய வரலாற்றின்படி சரி. அதனால் ‘கூப்பான்கள் வெட்டும்’ ஏழைகள் ஏழைகளாகவே இருக்க, பணக்காரர்களிடம் இன்னும் பணம் சேர்கிறது என்பதும் ஓரளவுக்கு உண்மை. ஆனால், உலகமுழுவதுக்குமான மூலதன வரி பிரச்சினையைத் தீர்க்கும் எனத்தோன்றவில்லை.” 

“உன் புத்திசாலித்தனமான வழி…”  

“சொத்து இல்லாதவர்கள் அவசியமான பொருட்களில் கவனம்செலுத்தி தங்கள் விருப்பங்களைக் குறைக்க வேண்டும். அப்போது கடன்வாங்கவோ அரசாங்கத்தின் கையை எதிர்பார்க்கவோ அவசியம் இராது. விளம்பரங்கள் வழியாக ஆடம்பரப்பொருட்களை நமக்கு விற்பதால் தான் பணம் ஒருசிலரிடம் குமிந்துவிடுகிறது.”  

“உதாரணமாக…”   

“லோரியல் விற்பது எதுவும் அவசியம் இல்லை.”  

“நீ அப்படி நினைக்கலாம். லோரியல் ஒப்பனைப்பொருட்கள் சமூகவட்டத்திலும், பதவிமட்டத்திலும் ஒருத்தி உயர்வதற்கு உதவும்போது அவளுக்கு அவற்றின் விலை நல்ல முதலீடு.”  

‘உன்னைப்போன்ற ஆண்கள் அமைத்த உலகில் தான் அப்படி.’ 

வாதம் போகக்கூடாத இடம்நோக்கிச் செல்வதைத்தடுக்க வார்த்தைகள் மனதிலேயே நின்றன. 

அந்தக் கோடையின் மூன்று மாதங்களை ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர் ஒருவரின் மேற்பார்வையில் செலவழிப்பது பார்த்தனின் ஒரு திட்டம். சரளாவும் அவளால் வந்த மனவேற்றுமையும் அவர்கள் நினைவில் பின்னுக்குப்போனதும்,    

“எப்போது கிளம்பவேண்டும்? ஐ’ல் மிஸ் யூ!” என்றாள் பியாங்க்கா சோகமாக. 

“கவலைப்படாதே! போவதாக இன்னும் முடிவுசெய்யவில்லை.”  

அதில் மகிழ்ச்சி என்றாலும், 

“ஏன்?”  

“என்னை அவள் அலட்சியப்படுத்தி விட்டாள்.” 

பியாங்க்கா புருவத்தை உயர்த்தினாள். எப்படி?

“என் எதிர்காலத்திட்டம் பற்றி ஒரு நீண்ட கட்டுரை வேண்டுமாம்.”  

“பொதுவாக எல்லாரும் கேட்பது தானே.”  

“அது போகட்டும்! நம்பர் தியரியில் ஒரு கணக்கு கொடுத்து அதற்கு தீர்வு கேட்டு இருக்கிறாள். ஒரு வாரமாவது நான் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும். கேவலம் எட்டாயிரம் டாலருக்கு. போகவர செலவு, கலிஃபோர்னியாவின் விலைவாசி. ஒரு டாலர் கூட மிஞ்சாது.”  

“அவளுக்கு ஃபீல்ட்ஸ் மெடல் கிடைத்திருக்கிறது. அது நோபல் பரிசுக்கு சமானம். அப்பேர்ப்பட்ட ஒரு மேதை தன் நேரத்தை செலவிட்டு உனக்கு வழிகாட்டப்போகிறாள். அது உனக்குப் பயனுள்ளதாக இருக்க உன்னைப் பரீட்சிக்கிறாள். டாலர் கொடுத்தாலும் இம்மாதிரி வாய்ப்பு கிடைக்காது.”   

பியாங்க்கா அவன் பக்கமா, இல்லை அந்த கர்வக்காரி பக்கமா? 

“நானும் தான் என் நேரத்தை அவளுக்குக் கொடுக்கிறேன். அது என்ன கணக்கு.” 

அவன் கலிஃபோர்னியா போகும் திட்டத்தைக் கைவிட்டதாகத் தோன்றியதால்,  

“ஸ்டான்ஃபோர்டுப் பதில்…” 

“ஸ்டாம்ஃபோர்ட். ‘ஜிஎம்பிகே’யின் வருமானவரிப் பிரிவில் மூன்றுமாத பயிற்சி. வீட்டிற்குப் பக்கத்திலேயே. பதினைந்தாயிரம் டாலர். அத்தனையும் என் சேமிப்பில்.” 

பியாங்க்கா அதை எதிர்பார்க்கவில்லை. அவள் அறிந்திராத புது பார்த்தன்.  

“உண்மையிலேயே ‘ஜிஎம்பிகே’க்கு பணிசெய்ய ஆசையா?”  

மூன்றுமாதப் பிரிவு இல்லையென்பதால் ‘ஜிஎம்பிகே’ அவளுக்குப் பிடிக்கும் என எதிர்பார்த்த அவனுக்கு அவள் கேள்வி புரியவில்லை. 

“ஏன் கேட்கிறாய்?”  

“இந்நாட்டிலும் சரி, பிற நாடுகளிலும் சரி, ‘ஜிஎம்பிகே’யின் நடவடிக்கைகள் நியாயமானவை  என சொல்வதற்கு இல்லை.” 

“நீயும் சரலா கட்சி. உண்மையில், அவள் தான் என் தீர்மானத்துக்குக் காரணம்.”  

எப்படி என்ற ஆச்சரியப்பார்வை.  

“இதைப்பார்!”  

அலைபேசியில் சரளாவின் ப்ளாகில் இருந்து ஒரு பகுதி… 

செல்வந்தர்கள் ஏழைகளுக்குச் செய்யும் உண்மையான உதவி வரிசெலுத்துதல், சில்லறைக் காசுகளை விசிறி எறிவது அல்ல.                  – க்ளெமென்ட் ஆட்லி

வாடிக்கையாளர்களின் வரிச்சுமையைக் குறைப்பது ‘ஜிஎம்பிகே’யின் ஒரு தொழில் (மில்லியன் கணக்கில் சம்பாதித்த ஒருவர் அதில் ஒரு சிறுபங்கை சமுதாயத்துடன் பகிர்ந்துகொள்வது எப்படிப்பட்ட கொடுமை!). அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய வரியை சட்டங்களின் ஓட்டைகள் வழியாக திரும்ப இழுத்துவர அபார மூளை வேண்டும். அதற்கேற்ற சன்மானம். அவர்களுக்கு வேண்டிய வரிக்கணக்கர்களைத் தயாரிக்க நாட்டின் உயர்மட்ட வணிகக்கல்லூரிகள். 

“அவள் தவறு என ஒன்றைச் சொன்னால் அது நிச்சயம் என் வரையில் சரியாக இருக்கும்.” 

பியாங்க்காவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. சரளா சொன்னதில் உண்மை அடங்கியிருக்கிறது என எப்படி அவனுடன் வாதிடுவது? வாதிட்டாலும் அவன் தீர்மானத்தை மாற்றமுடியுமா? 

“கோடையில் நீ?”  

“பட்ட மேல்படிப்புக்குத் தயார்செய்வதாக இருக்கிறேன்.”  

“எங்கே?”  

“யேல், இல்லை ப்ரின்ஸ்டன்.”  

“கல்லூரியின் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்த நான் வெளியே போகவேண்டும். ‘ஜிஎம்பிகே’யில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.”  

அதில் அவளுக்கு சந்தேகமே இல்லை. 

“அதனால்… நான் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன். உனக்கு நேரம் கிடைக்கும்போது என்னைக் கூப்பிட்டால் போதும்.”  

வேலையில் ஆழ்ந்துபோன பார்த்தனுக்கு நேரம் கிடைக்கவில்லை. 

வீட்டில் இருந்து இரண்டு ப்ளாக் நடந்தால் பஸ் நிறுத்தம். அகநகரில் அலுவலகத்தின் வாசல்வரை ஏறிப்போகலாம். ஆனால், கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அவனுடைய ஊர்திக்காகவே அவன் பெயர் எழுதிய பலகையுடன் ஓர் இடம். அது காலியாக இருந்தால் அவன் வேலைக்கு வரவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பும். பார்த்தன் டெஸ்லாவைக் கிளப்பினான். 

அவன் அக்காவும் அண்ணனும் சென்னையில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, யூஎஸ் வந்து, ஸ்டாம்ஃபோர்டில் பள்ளிப்படிப்பை முடித்து ஷிகாகோ, ஹியூஸ்டன், பாஸ்டன் என்று பல நகரங்களைப் பார்த்தவர்கள். பார்த்தனின் நிலப்பரப்பு மிகக்குறுகியது. பி.எஸ்.ஸுக்கு மட்டும் நூறுமைல் தள்ளி கனெக்டிகட்டின் கிழக்குப்பகுதி. மற்றபடி ஸ்டாம்ஃபோர்ட் நகரம் அவன் எல்லை. பழகிய சாலைகளில் டெஸ்லா சொகுசாக ஓடியது. 

‘ஜிஎம்பிகே’யின் கட்டடத்தைப் பார்த்ததும் அங்கே செலவழித்த கோடை பயிற்சிக்காலம் நினைவில் நிழலாடியது. 

மே மாதத்தின் கடைசி திங்கள்கிழமை. காலை இன்னும் சூடாகவில்லை. 

அம்மாவிடம் இருந்து கடன்வாங்கிய காரை ஜாக்கிரதையாக ஓட்டிவந்தான். நிதி நிர்வாக அலுவலகங்கள் வரிசையாக அழகுசெய்த சாலையில் நுழைந்ததுமே அவன் உடலில் புது உத்வேகம். வரவேற்புப்பெண் அவன் யார் எனத்தெரிந்ததும் அவனைப் பாதுகாப்பு அதிகாரியிடம் அழைத்துப்போனாள். ரகசியங்களைக் காப்பாற்றுவேன், விசுவாசமாகப் பணிசெய்வேன் என்று கையெழுத்திட்டபோது ஒரு போர்வீரனின் பெருமிதம். அவனை மூலையில் ஒதுக்காமல் இடைமட்ட நிர்வாகி ஒரு பிரச்சினையை அவன் முன்னால் வைத்தார். அவனைவிட பதினோரு வயது மூத்த அக்காவின் கெடுபிடியில் வளர்ந்த அவனுக்கு அவருடைய அதிகார தோரணையும் வரையறுக்கப்பட்ட வேலையும் இனித்தன. 

முதல் ஒருவாரத்திலேயே அவனுக்கு ‘ஜிஎம்பிகே’ பிடித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டமாக அவன் முன்னேறினான். கொடுத்த காரியத்தை நேரத்துக்கு முடித்ததைப் பார்த்து மேற்பார்வையாளருக்கு அதிசயம். 

“எப்படி இவ்வளவு கச்சிதமாகச் செய்கிறாய்?” 

‘செய்தித்தாளில் ‘ஜிஎம்பிகே’ தென் ஆஃப்ரிக வர்த்தகத்தை விரிவாக்கப்போவதாக படித்தேன். ஒருவித எதிர்பார்ப்புடன் அந்நாட்டின் வரிச்சட்டங்களை மேலோட்டமாகப் பார்த்தேன்’ என்ற ரகசியத்தை மறைத்து, 

“எனக்குத் தரப்பட்ட புதிர் – இந்த சட்டங்களுக்குள் (அடையாளம் மறைக்கப்பட்ட) இந்த குடும்பத்தின் (எங்கிருந்து என்று தெரிவிக்காத) இத்தனை வருமானத்துக்கும் மிகக்குறைவான வரி எவ்வளவு? அதை ‘கன்ஸ்ட்ரெய்ன்ட் சாடிஸ்ஃபாக்ஷன்’ வழியாகப் பார்த்தேன். வழி கண்டுபிடித்தபின் விவரமாகக் கணக்கிட நிறைய நேரம். தினம் மாலை ஏழுமணி வரை வேலைசெய்த என் நேரம், சக்திவாய்ந்த கணினியின் நேரம்.”  

“க்ரேட்!” 

“கற்றுக்குட்டியான நான் கணக்கிட்ட எண்களை அனுபவசாலிகள் நிச்சயம் சரிபார்ப்பார்கள். என் வழிமுறையில் தவறு இருந்தால் திருத்திக்கொள்வேன்.”   

“நீ உருப்பட மாட்டாய்!” வசவு ஆசீர்வாதமாக அவன்மேல் விழுந்தது. 

முதல் வாரச்சம்பளம் ஆயிரத்துக்குமேல். செக்கை மகிழ்ச்சியுடன் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் சரளா… அவளுக்கு அங்கே என்ன வேலை? 

“மிஸ்டர் பார்த்தன் பூண்டி! நீ செய்வது உனக்கே சரியாகப்படுகிறதா?”  

“நான் எந்த சட்டத்தையும் மீறவில்லை. ஒரு மருத்துவர் தனக்குத்தெரிந்த வித்தைகளைப் பயன்படுத்தி, தன் வசமுள்ள உபகரணங்களையும் மருந்துகளையும் வைத்து நோயாளியைக் குணப்படுத்துவது போல நான். என்னால் என் நிறுவனத்துக்கு ஆரோக்கியமான நிதிநிலைமை. அதில் எனக்கு உரிய பங்கு.”   

“நான் சொல்லிக்கொடுத்த நீதிநெறி உனக்கு மறந்துவிட்டதாகத் தெரிகிறது. நீ செய்வது ‘யுடிலிடேரியனிஸ்ம்’ (பெரும்பாலான பேருக்கு பெருநன்மை உண்டாக்குதல்) நோக்கில் சரியில்லை. சிறுபான்மையினருக்கு, அதிலும் மெத்தப்பணக்காரக் குடும்பத்துக்கு பயன் கொடுக்கும் வேலை. உன் நிறுவனமும் பண்பு விதிகளை (நேர்மை, துணிவு, நேயம், நீதி) பின்பற்றி நடப்பதில்லை.”  

“நிறுத்து! நான் உன் மாணவன் இல்லை. நீ கொடுத்த ‘பி‘யுடன் நம் உறவு முடிந்துவிட்டது. உன் அறிவுரைகளை உன் சிஷ்யை பியாங்க்காவுக்கு சொல்! அவள் கேட்பாள்.” 

அதற்குப்பிறகு சரளா அவன் வழிக்குவரவில்லை.  

நான்காவது ஆண்டில் உயர்மட்ட அக்கௌன்ட்டிங் வகுப்புகள் முடித்து பட்டம் பெற்றதும் மறுபடி ஸ்டாம்ஃபோர்ட். ‘ஜிஎம்பிகே’க்கு அடுத்ததே ‘க்ரோயிங் சர்க்லி’ன் கட்டடம். மூன்றுமாதத்திற்குள் முன்னதில் அவன் சாதித்தது பின்னதின் கதவுகளைத் திறந்துவைத்தது. 

பார்த்தன் வருவதைப் பார்த்து மின்தூக்கியின் கதவுகள் நெருங்காமல் நின்றன. அவன் ஓடிவந்து நுழைந்தான். உள்ளே கதவுகளைப் பிடித்துவைத்த விஷ் வைத்யா.  

“குட் மார்னிங்! பார்த்தா! என்ன இவ்வளவு சீக்கிரம்?” 

பங்குச்சந்தை ஆரம்பிக்குமுன் தகவல் சேகரிக்க அவன் ஏழுமணிக்கும் முன்னதாக வருவது வழக்கம்.  

“குட் மார்னிங்! விஷ்! எனக்கும் போன ஆண்டின் வரிக்கணக்கை முடிக்க வேண்டும்.” 

“நான் உனக்கு நிறைய வேலை வைத்தேன்.” 

வார்த்தைகளில் மன்னிப்புக்குப்பதில் பெருமிதம். 

“அதனால் ‘க்ரோயிங் சர்க்லு’க்குக் கொள்ளை வருமானம்.” 

அத்துடன், நுழைவுமட்டத்தில் இருந்த பார்த்தனுக்கு வரிப்பிரிவின் உதவித்தலைவர் பதவி. 

‘நாள் நன்றாக இருக்கட்டும்!’ என வாழ்த்திவிட்டு, இருவரும் தங்கள் அலுவலக அறைகளுக்குள் புகுந்தார்கள். 

நாஷ்வில்லில் தன் மணவிருந்தை முடித்துத் திரும்பிவந்த விஷ் வைத்யா முதல்காரியமாக பார்த்தனின் குட்டி அலுவலகம் தேடிவந்து அதன் கதவைச் சாத்திவிட்டு அவன்முன் அமர்ந்தான். 

“பார்த்தா! ஓர் உதவி…”  

“சொல்!”  

ப்ளாக்வெல் ஃபார்மா பங்குகள் அனைத்தையும் உடனே விற்றாக வேண்டும்.” 

அதில் வரப்போகும் வருமானத்தின் வரியைக் குறைப்பது பார்த்தனின் பொறுப்பு.  

“எப்போது வாங்கியவை?”  

“ஒரு வருஷத்துக்கு முன்னால். இருவார காலத்தில்.”  

“அதற்குள் புளித்துவிட்டதா?”  

விஷ் அடங்கிய குரலில், 

“அந்த கம்பெனியில் க்ரிஸ் என்பவனுடன் எனக்குத் தொடர்பு. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் புதிய மருந்தின் (என்.ஓ.ஈ.டி.-8; நைட்ரிக் ஆக்ஸைட் என்ஹான்ஸிங் ட்ரக், அடையாள எண் எட்டு) இரண்டாம் கட்ட சோதனை எப்படிப்போனது  என்று கேட்க அவனை அழைத்தால், அவன் அகப்படவில்லை. யாருக்கும் அவன் இப்போது எங்கே என்று தெரியாது.”  

“அதனால் ஏதோ சரியில்லை என உனக்கு சந்தேகம்.”  

“கரெக்ட்.” 

“சோதனை எங்கே நடக்கிறது?” 

“வாஷிங்டன் பல்கலைக்கழகம்.”   

“அங்கே யாரையாவது…”  

“அது மகா ஆபத்து! வெளியே தெரிந்தால் என்னை ஐந்து வருஷம் உள்ளே தள்ளிவிடுவார்கள், நிறுவனத்துக்கும் கெட்ட பெயர். வலைத்தளத்தில் தேடியபோது எனக்கு சிறுவயதில் தெரிந்த ஒருவர். இதுபற்றி எல்லாம் அறிந்த அவர் இப்போது வான்டர்பில்ட்டில். அவரை நேரில்பிடிக்க என் மணவிருந்தை நாஷ்வில்லில் வைத்துக்கொண்டேன்.”  

விருந்தை முன்பின் தெரியாத ஊரில் விஷ் வைத்துக்கொண்டதன் காரணம் பார்த்தனுக்குப் புரிந்தது. என்ன சாமர்த்தியம்! 

“அவருடன் நைசாகப்பேசியதில்…” என்றான் புன்னகையுடன். 

“பங்குகளின் விலை விரைவில் சரியப்போகிறது.” 

“சரி, எந்தெந்த தினத்தில் வாங்கியது என்று எனக்கு விவரங்கள் அனுப்பு! எந்த தேதிகளில் எவ்வளவு விற்க வேண்டும் என்று ‘எக்செல்’லில் உனக்கு பதில் வரும்.”  

“இதன் விவரம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது.”  

“அப்படியே, அண்ணா!”  

வரியைக்குறைக்க, ஒவ்வொரு ஆண்டும் பங்குகளை விற்றுவரும் நிகர வருமானத்தில் ஒரு சதம் ‘க்ரோயிங் சர்க்கிலை’த் தொடங்கி நடத்திய ஸ்டீவ் மாடிஸ்ஸின் சொந்த சேவை நிலையத்துக்குப் போகும். அதன்படி முந்தைய ஆண்டின் கணக்கு ஆறரை மில்லியன் டாலர் என்று மாடிஸ்ஸின் செயலருக்கு மின்னஞ்சலில் தெரிவித்தான். அப்பணத்தை அவன் விருப்பப்படி அவனே வரிசெலுத்தாத நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்ற பதில் உடனே வந்தது. ஏழெட்டு ஏன் ஒன்பது இலக்க எண்கள் பார்த்தனின் கணினித்திரையில் நகர்ந்து இருந்தன. இத்தனை பெரிய நிஜமான தொகை அவன் கைகள் வழியாக பயணிக்கப் போகிறது. அவற்றுக்கு எவ்வளவு வலிமை! 

கூக்கிலின் உதவியில்…

இராணுவம் காவல்படை சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்களை ஒதுக்கினான். 

வேலைசெய்யாத சோம்பேறிகளும், குழந்தைகளாகப் பெற்றுத்தள்ளும் முட்டாள்களும் அவன் பார்வையில் நிலைக்கவில்லை.  

சிறுத்தைகளையும் பனிக்கரடிகளையும் அழிவில் இருந்து காப்பாற்ற அவன் தீர்மானித்தபோது…    

‘கனெக்டிகட் டெக்’கின் முந்தைய மாணவன் என பார்த்தனுக்கு, தற்போதைய மாணவன் ஒருவனின் விண்ணப்பம், மின்னஞ்சலில்.  

என் ஒரு கால் அறிவியலில், இன்னொரு கால் மானுடவியலில். நடுநிலைமையில் நின்று இதைச்சொல்கிறேன். வருமானம் குறைந்ததால் கனெக்டிகட் மாநில அரசு கல்விக்கூடங்களுக்கு வழங்கும் நிதியை வரும் கல்வியாண்டில் இருபது சதம் வெட்டப்போகிறது. அது வணிகம், பொருளாதாரம், அறிவியல் துறைகளை அதிகம் பாதிக்காது. அத்துடன், அவற்றுக்கு கேட்ஸ் ஃபவுன்டேஷன் போன்ற அமைப்புகளின் பின்பலம். வர்த்தக நோக்கம் இல்லாத மானுடவியல் துறைகளில் பல வகுப்புகளும் அவற்றை நடத்தும் ஆசிரியர்களின் பதவிகளும் வெட்டப்படுவது நிச்சயம். அதைத்தவிர்க்க தங்கள் ஆதரவைப் பணிவுடன்  வேண்டுகிறேன். 

‘கனெக்டிகட் டெக்’கின் மானுடவியலின் எதிர்காலம் அவன் சாவிப்பலகையில். மனம் துள்ளியது. 

சரளா இன்னும் அங்கே தான் இருப்பாளோ? 

கல்லூரி வலைத்தளத்தில் தேடினான். டாக்டர் சரளா சர்காரைக் கண்டுபிடித்த செயற்கை மூளை அவனுக்கு ஒரு தப்படி முன்னால் வைத்து அவள் பக்கத்துக்கே அவனை இட்டுச்சென்றது. அதில் சமீபத்திய பட்டதாரிகளுக்காக ஒரு கட்டுரை. புதிதாக என்ன சொல்லப்போகிறாள் என்ற அலட்சியத்துடன்… 

நிஜமான வேலை

கவலையற்ற மாணவப்பருவம் முடிந்து நிலையான வருமானம் தேடும் உங்களுக்கு எது நிஜமான வேலை… தெரியுமா? 

கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுத்தல், அரசாங்க மற்றும் லாபநோக்கம் இல்லாத நிறுவனங்களில் பணிபுரிதல், சொந்தமாக மக்களுக்குப் பயன்படும் சிறுதொழில் தொடங்குதல் – இவையெல்லாம் வெறும் பாவனை. வேலை நடக்கும் இடங்களும் டிஸ்னிஉலகம் போல நம்மை நம்பவைக்கும் மாயலோகம். 

நிஜமான வேலை கார்பொரேட் அலுவலகத்தில். அங்கே ஒரு பாஸ், குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவேண்டிய காரியங்கள், ஏறுவதற்கு அதிகாரப்படிகள். இது தான் நிஜமான உலகம். இங்கே இளம்வயதின் இலட்சியங்களுக்கும் கனவுகளுக்கும் இடம் கிடையாது. இதில் நுழைவதற்குமுன் – கோவிலின் வாசலில் காலணிகளைக் கழற்றிவைப்பதுபோல – நீதி, நேர்மை, நல்லெண்ணம், நட்பு, கலையுணர்வு போன்ற தூசிதும்புகளை உதறிவிட வேண்டும். அங்கே செயல்படத்தேவை – நேரம் தவறாமை, காலத்திட்டத்தைப் பின்பற்றல், கடும் உழைப்பு, நிர்வாகத்திடம் விசுவாசம், ஏழைகளிடம் அலட்சியம். 

அந்த நிஜமான வேலைக்குப் பரிசு மதிப்பு இறங்கிக்கொண்டே போகும் பணம்…    

சில சமயங்களில் நையாண்டி கேலியாக இல்லாமல் உண்மையாக அமைவது உண்டு. இதுவும் அப்படித்தான். விஷ் வைத்யா மற்றும் பார்த்தன் செய்த வேலைகளும் அவற்றில் கிடைத்த வருமானமும் தான் சரளா சொல்வது போல நிஜம். அவளுடைய தாற்காலிக உதவிப்பேராசிரியர் பதவி அவர்களைப் போன்றவர்கள் மனமிரங்கித் தரும் அன்பளிப்பில் விளைந்த கற்பனை. அந்தக்கனவு உலகம் எப்போது வேண்டுமானாலும் கலைந்துவிடலாம். அதை அவளுக்கு உணரவைக்க…  

‘கனெக்டிகட் டெக்’ மானுடவியல் துறைகள் மூழ்காமல் இருப்பதற்காக ‘க்ரோயிங் சர்க்ல்’ கணக்கில் இருந்து பார்த்தன் பூண்டி அனுப்பிய ஆறரை மில்லியன் டாலரின் மின்பிரதி ‘சரளா.சர்கார்@கான்டெக்.ஈடியு’வைத் தேடிப்போனது.  

***

Series Navigation<< பிரகாசமான எதிர்காலம்அவர் வழியே ஒரு தினுசு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.