செந்திலின் சங்கீதம்

வாழ்வின் திருப்பு முனைகள் எதிர்பாராத தருணங்களில் அமையும். செந்திலுக்கு ஒரு டிசம்பர் சனிக்கிழமையன்று, கடல் காற்றுடன் மனோகரமான மாலை நேரத்தில் ஹோட்டல் மாரீசில் அமைந்தது. அம்மாவுக்கு திடீரென்று அன்று மியூசிக் அகாடமியில் சுதா ரகுநாதன் கச்சேரி கேட்க வேண்டும் என்று ஆசை. சென்ற வாரம்தான், சுதா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக வந்து, ‘சின்னஞ்சிறு கிளியே!’ என்று அருமையாகப் பாடிய போது, வந்த எண்ணம். இரவு திரும்பி வர நேரமாகும், என்று துணைக்கு வரச் சொல்லி செந்திலைக் கெஞ்சினாள். கச்சேரியில் மொபைல் ஃபோனில் விளையாடலாம், சாட் செய்யலாம் என்ற ஒப்பந்தத்துக்குப் பிறகு சம்மதித்தான். இசை விழாவில் வெளியூர், நாடுகளிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து, காலை நான்கு மணிக்கு டிக்கெட்டுக்கு வரிசையில் நிற்கும் சென்னை மாநகரில், மாலை ஆறு மணிக்கு போனால், வெளியே ஹாலில் டீ.வி டிக்கெட் கூட கிடைக்கவில்லை. டிக்கெட் கிடைக்காத இன்னொருவர் “இங்க தான் பக்கத்துல ஹோட்டல் மாரீசுல இன்னைக்கு ராஜேஷ் வைத்யா வீணை”என்ற போது, சரி பார்க்கலாம் என்று அங்கே சென்றார்கள்.

கூட்டம்தான், இருந்தாலும் இடம் கிடைத்தது. ராஜேஷ் வைத்யா அசத்தலாக வீணை வாசிப்பதை அன்றுதான் முதன்முதலாக கவனித்தான். அவர் வாசித்த சங்கீதம், தலை முடி நெற்றியில் புரள ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு ஸ்டைலாக, அவ்வப்போது பெரிய புன்னகை, கைதட்டல்களை பணிவாகப் பெற்றுகொண்டு வாசித்த விதம் எல்லாமே செந்திலுக்கு மிகவும் பிடித்தது. கச்சேரி முடியும் வரை மொபைலை எடுக்கவே இல்லை. அன்றைய நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அக்கா செல்வியிடம்தான் முதலில் சொன்னான் “அக்கா, எனக்கு வீணை வாசிக்கணும்”செல்வி மூக்கு நுனியில் கண்ணாடியைத் தள்ளிக்கொண்டு, “என்ன வாசிக்கணும்? போடா, நீ ஒழுங்காப் படிக்கற வழியப் பாரு , எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் கேம், மொபைல் ஃபோன், நீ எப்பதான் உருப்படுவயோ?”செந்திலுக்கு அவள் முகம் அப்போது ஆந்தை மாதிரி தோன்றியது. அதுவும் கண்ணாடி அணிந்த ஆந்தை.

செந்தில் காலை எழுந்தவுடன், அம்மா சமையல் அறையில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து தண்ணீர் குடித்தபடி முகத்தைப்  பார்த்தான். 

 “அம்மா நான் ராஜேஷ் வைத்யா மாதிரி வீணை வாசிக்கணும்,”என்றான். அம்மா அடுப்பைச் சின்னதாக வைத்து விட்டு திரும்பிப் பார்த்தாள். செந்திலின் முகம் தீவிரமாக இருந்தது. அவள் வேறு எதுவும் சொல்வதற்குள்  “அம்மா, நான் தினமும் ப்ராக்டீஸ் செய்வேன், ப்ராமிஸ்!”அம்மாவின் புன்னகை விரிந்தது.

 “இதுவும் ஃபுட்பால், செஸ் , கராத்தே மாதிரி ஆரம்பிச்சு ரெண்டு மாசத்துல விட மாட்டயே?”

“இல்லம்மா, நான் ராஜேஷ் வைத்யா மாதிரியே வாசிப்பேன், சூப்பர் சிங்கர்ல என்ன நடு மேடையில வெச்சு, கலர் லைட்டெல்லாம் போட்டு, மேல ஷவர் கொட்டுவாங்க, நீ ஆடியன்ஸ்ல உட்கார்ந்து கண்ண தொடச்சுப்ப,”செந்தில் தரையில் அமர்ந்து, ஒரு பக்கம் தலை சாய்த்து புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டு தீவிரமாக வாசிப்பது போல செய்தான். 

  “செந்தில் கண்ணு, நீ இப்படி தானாக வந்து சொல்வதே போதும்டா,”என்று கட்டிக் கொண்டாள். 

அம்மா வெள்ளிக் கிழமை அபிராமி அந்தாதி வகுப்பில், பக்கத்திலேயே வீணை டீச்சர் இருக்கிறார்களா என்று விசாரித்தாள். விஜி “உன் பெண் செல்விக்கா?”என்று கேட்டாள். 

  “இல்ல விஜி, செந்திலுக்குத்தான் கத்துக்கணுமாம், யாராவது நல்ல டீச்சர் இருந்தா சொல்லேன்.”

“செந்திலுக்கா, அவனுக்கு எதுக்கு வீணை, இங்க இளங்கோ நகர் மஞ்சுளா ஸ்டோர்ஸ் மாடில பீட்டர்னு ஒருத்தர் கீ போர்டு க்லாஸ் நடத்தறாரு நிறைய பசங்க வருவாங்க, ஒரே மாசத்துல சினிமாப் பாட்டு வாசிக்கறாங்க.”

“ராஜேஷ் வைத்யா மாதிரி வாசிக்கணுமாம், அவனே ஆர்வமா சொல்றான், அதனாலதான்.”

“வீணை எல்லாம் கொஞ்சம் கஷ்டம், நான் கல்யாணத்துக்கு முன்னால ஏழு வருஷம் கத்துண்டேன், அப்புறம் எல்லாம் போச்சு. விடாம டச்ல இருக்கணும். உங்க வீட்டுல க்லாசிகல் கேட்பீங்களா?”

குரல் சற்று ஏறியது, “அவனே வந்து ஆர்வமா சொல்றான், உனக்கு யாராவது தெரிஞ்சா சொல்லு, இல்லனா விடு.”

விஜி, “இங்க பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல மீனாட்சி மாமின்னு இருக்காங்க, வீட்டு வாசல்ல பெரிய வாதா மரம் இருக்குமே அந்த வீடுதான், அவங்களுக்கு கொஞ்சம் வயசாயிடுச்சு, சின்னப் பசங்களுக்கு சொல்லித் தருவாங்களான்னு தெரியல, கேட்டுப் பாரு.”

செந்திலுக்கு, அப்பா ஞாயிற்றுக்கிழமை வரும் வரை  பொறுமை இல்லை. அம்மாதான் அவனை அழைத்துக் கொண்டு  போக வேண்டியதாயிற்று. இரும்பு கேட்டின் கிறீச்சுக்கு வாசல் வெராண்டா பிரம்பு நாற்காலியில், அழுக்கு வேட்டியில் இருந்தவர் ந்யூஸ் பேப்பருக்குப் பின்னிருந்து எட்டிப் பார்த்தார். வழுக்கைத் தலையும் பெரிய சோடா புட்டி கண்ணாடியுமாக, நெற்றியைச் சுருக்கி கண்களாலேயே யாரு என்றார்.

“இங்க மீனாட்சின்னு வீணை சொல்லித் தராங்களாமே, அவங்களைப் பார்க்கணும் “

“மீனாட்சி, யாரோ வந்திருக்கா பாரு,”மறுபடியும் ந்யூஸ் பேப்பரில் மூழ்கினார்.

ஈரக் கையை துடைத்துக் கொண்டு மீனாட்சி மாமி வந்தார். சற்று உயரம்,நெற்றியில் குங்குமப் பொட்டுடன் பெரிய புன்னகை. அழகாக நரைத்த தலை. முகம் அசையும் போது வைரத்தோடு மின்னியது. காட்டன் சேலை நளினமாக இருந்தது. எல்லாம் விவரமாக கேட்டுக் கொண்டார். செந்திலிடமே நேராகப் பேசினார்.

“இதோ பாருப்பா செந்தில், இந்த வாத்யம் அவ்வளவு சுலபமில்ல, சிரத்தையா கத்துக்கணும், தினமும் வாசிக்கணும், நிறைய பாடு படணும். டீவில வாசிக்கற அளவு வர வருஷக் கணக்கா ஆகும், அதுக்கு பொறுமை வேணும்.”

செந்தில் ஒரு பாய் மேல் வைக்கப் பட்டிருந்த வீணையையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அம்மா, “இல்ல செந்தில் ஒண்ணு முடிவு செய்தா அவ்வளவுதான், முழுக் கவனமா செய்வான், ரொம்ப ஆசைப் படறான், நீங்கதான் மாட்டேன்னு சொல்லாம ஒத்துக்கணும்.”

அதற்குள் செந்தில் வீணையின் அருகே போய், தந்திகளைச் சுண்டினான். அந்த ஓசை அவனை மயக்கியது. தன்னை மறந்து இன்னும் மீட்டினான். மீனாட்சி மாமி ஒரு கணம் தயங்கினார். 

“இவ்வளவு ஆர்வமா குழந்தை கத்துக்க ஆசைப் படும்போது மாட்டேன்னு சொல்ல முடியல,” காலண்டரை எடுத்துப் பார்த்து விட்டு, “வெள்ளிக் கிழமை நல்ல நாள், சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வாங்க, ஆரம்பிக்கலாம்.”

இப்படியாக செந்திலின் சங்கீதப் பாடம் ஆரம்பித்தது. முதல் நாளே அவன் தந்தியை மீட்டி, புள்ளி வைத்த மெட்டுகளில் விரலை சரியாகப் பதித்து சரளி வரிசைக்கு வந்து விட்டான். வீட்டில் வாசிக்க என்று தன்னுடைய வீணைகளில் ஒன்றை கொடுத்து அனுப்பினாள். அது என்ன வேகம், விட்ட குறை தொட்ட குறை என்று மீனாட்சி மாமி ஒரே மாதத்தில் சொல்லி விட்டாள். 

முன்பெல்லாம் செந்தில் மாலை வீட்டுக்கு வந்தவுடன் விளையாடப் போய் விடுவான். பிறகு கம்ப்யுட்டரில் கேம், சற்று நேரம் வாட்சப், பிறகு இரவுச் சாப்பாடு ஆன பிறகு டிவி பார்த்துக் கொண்டே ஹோம்வொர்க். இப்போது எல்லாம் மாறி விட்டது. வந்தவுடன் நேரே வீணைதான். செல்வி பொறுக்க முடியாமல் “இது என்ன டொய்ங் டொய்ங்னு எப்ப பாத்தாலும், எனக்கு படிக்கவே முடியல,”என்றாள்.

மாடியில் ஒரு தனி அறை இருந்தது, பழைய சாமான்கள் புத்தகங்கள் எல்லாம் அடைத்து, எப்போதாவது இன்னும் ஏதாவது நிரப்ப மட்டும் திறக்கப் படும். அம்மாதான் அந்த அறையை சற்று ஒழித்து, தூசு எல்லாம் தட்டி, வீணை வைத்துக் கொண்டு தரையில் உட்காரும்படி இடம் செய்து கொடுத்தாள். “ஜன்னல் கதவைத் திறந்து வைக்காதே, பூனை உள்ள வந்துரும்,”என்ற எச்சரிக்கையுடன்.

செந்தில் மாலை வந்த உடன் மாடிக்குப் போய் விடுவான். குறைந்தது இரண்டு மணி நேரம், அறைக் கதவை மூடிக் கொண்டு வாசிப்பு. ஆரம்பத்தில் செல்வி அவன் என்ன செய்கிறான் என்று அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்தாள். பிறகு அவளுக்கும் சலித்துப் போய் விட்டது. நடுவில் அம்மா மீனாட்சி மாமியை ஒரு முறை கோவிலில் பார்த்தாள், தானே விரைந்து வந்து, “என்ன உங்க பையன் அசுர சாதகம், விறு விறுன்னு மேல போயிட்டிருக்கான், நீங்க அவன் வாசிச்சு கேட்டீங்களா?”

“நீங்க நல்லா சொல்லிக் குடுக்கறீங்கன்னு தினமும் சொல்லுவான்,   நாளைக்கே கேட்கறேன்.”

மூன்றே மாதத்தில் செந்தில் ஆரம்ப பாட வரிசைகளை முடித்து விட்டான். மீனாட்சி மாமி ஒரு நல்ல நாளில் “ஸ்ரீ கண நாத”என்று முதல் கீதம் ஆரம்பித்தார்.  விரைவில் செந்தில் மோஹன ராகத்தில் அமைந்த “வர வீணா”வுக்கு வந்து விட்டான். அதுவரை ஒரே ராகத்தில் வாசித்து வந்து விட்டு, இந்த கீதம் மாறுதலாக, மிக அழகாகத் தோன்றியது. தொடக்கத்தில் எளிதாக இருந்தது. ஆனால் ஒரு வரியில் தாவுவது போல மேலே போகும் இடம் வரவில்லை. பல முறை முயன்ற பிறகும் கை தடுக்கியது. ஆரம்பித்ததிலிருந்து ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை. செந்திலுக்கு கோபம் வந்தது. மீனாட்சி மாமிதான், “நான் முதல்லயே சொன்னேனே, பொறுமை வேணும், வீட்டுக்குப் போய் நூறுதரம் வாசி, தானாக வரும்,”என்றார். 

செந்தில் “நூறுதரமா?”என்றான் ஆச்சரியமாக,  “ஆமாம், பத்து தரம் வாசிச்சா சரியா வர மாதிரி இருக்கும். அடுத்த நாள் தடுக்கும். தப்பே வரக்கூடாதுன்னா அதுக்கு நூறுதரம் வாசிக்கணும்,”என்று சாதாரணமாகச் சொன்னார். வீட்டுக்கு வந்ததும் மாடிக்குப் போய் வாசிக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் அந்த இடம் தடுக்கியது. போகப் போக சரியாக வந்த மாதிரி இருந்தது. ஆனாலும், அவனுடைய குரு வாசிப்பது மாதிரி வரவில்லை. அன்று இரவு சாப்பாட்டுக்குப் பிறகு டீவிக்குப் போகவில்லை, தொடர்ந்தான். “வர வீணா ம்ருது பாணி’ மறுபடி மறுபடி அந்த எட்டு வரிகளை வாசித்துக் கொண்டே இருந்தான். கை விரல்களில் தந்தி அழுத்தி கோடு விழுந்தது. எத்தனை நேரம் போனதோ, அம்மா வந்து கதவைத் தட்டி “என்னடா ஹோம்வொர்க் செய்யல, இதையே வெச்சுட்டு உட்கார்ந்துட்ட? தூங்கப் போகல?”

“இல்லம்மா, தப்பு இல்லாம வாசிக்கணும்னா நூறுதரம் வாசிக்கணும்னு சொன்னாங்க, நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் வாசிச்சுட்டு தூங்கறேன், நாளைக்கு லீவுதானே. நான் இப்ப வாசிக்கறேன் கேட்கறீங்களா?”

“பிறகு கேட்கறேண்டா கண்ணு, நாளைக்கு உங்க மாமா ஊருலிருந்து வராரு, நேரத்துக்கு எழுந்திருக்கணும், நீயும்தான், சோம்பேறி மாதிரி தூங்கிட்டிருக்காத, சீக்கிரமா முடிச்சுட்டு படுத்துக்க.”

செந்தில் தொடர்ந்தான். அந்த எளிய இசையை திரும்பத் திரும்ப வாசிப்பதில் தானே ஆழ்ந்தான். எத்தனை முறை வாசித்தான் என்று அவனுக்கே தெரியாது. காலையில் அம்மாதான் வந்து தட்டி எழுப்பினாள். “என்ன செந்தில், இங்கயே தூங்கிட்ட, ராத்திரி படுக்கப் போகலியா?” அவன் வீணை மேலேயே சாய்ந்து தூங்கிப் போயிருந்தான். திடுக்கிட்டு எழுந்தவன், வீணையைப் பார்த்தான். உற்சாகத்துடன். “அம்மா, நான் நூறுதடவைக்கு மேலேயே வாசிச்சுட்டேன், இப்ப நல்லா வாசிக்க வருது, கேட்கறீங்களா?”

“முதல்ல பல்ல வெளக்கிட்டு கீழ வா, அண்ணா வந்திடுவாரு, உங்கப்பா வேற டூர் போயிருக்காரு, இன்னும் பலகாரம் செய்யணும்,” அம்மா அவசரமாக சமையலுக்கு நகர்ந்தாள். மாமா வந்தால் விருந்துதான், அம்மாவுக்கு நிறைய வேலை இருந்தது. செந்தில் ஒரு முறை வாசித்துப் பார்த்தான். அவனுக்கே அருமையாக வந்திருப்பதாகத் தோன்றியது. அதற்குள் அம்மா மறுபடியும் கூப்பிட்டாள். மனமில்லாமல் செந்தில் இறங்கிப் போனான். மாமா ஆட்டோவில் வந்து இறங்கினார். 

வரும்போதே “என்ன செந்தில், இன்னிக்கு ஐ பி எல் மாட்ச் போகலாமா?”வழக்கமாக உற்சாகமாக கிளம்பி விடுவான். இன்று அப்படித் தோன்றவில்லை. தப்பாமல் வாசிக்க வந்து விட்டதா என்று சந்தேகம். 

“இல்ல மாமா, எனக்கு வேல இருக்குது,”என்று தயங்கினான்.

“ஆமாம், பெரிய வேலை, சாயங்காலம் அப்படியே பீட்ஸா, என்ன சொல்ற?”

அதற்குள் அம்மா “அண்ணா, செந்தில் இப்ப வீணை கத்துக்கறான் , அவன் வாசிச்சி  நீங்க கேட்கணும்.”

மாமா “இது என்னடா புதுசா இருக்குது, கீ போர்டு ஏதாவது கத்துக்கல? வீணையா?”என்றார்.

“மாமா நான் வாசிச்சுக் காமிக்கட்டுமா? நான் ஒரு பாட்டு நூறுதரம் வாசிச்சி ப்ராக்டீஸ் செஞ்சிருக்கேன்.”

மாமா சந்தேகமாகப் பார்த்தார், அம்மா உடனே “அவரு சாப்பிடட்டும் அப்புறம் பார்க்கலாம்,”என்றாள்.

கேசரி, வடை, தோசை எல்லாம் சாப்பிட்டு காபியும் ஆன பிறகு, மாமா ந்யூஸ் பேப்பரை எடுத்தார். செந்தில் பக்கத்திலேயே காத்திருந்தான்.

“மாமா இப்ப வாசிக்கட்டுமா?”

“ராத்திரியெல்லாம் ரயில்ல சரியாத் தூங்கலப்பா, ஒரு பத்து நிமிஷம் இப்படியே படுத்துட்டு வரட்டுமா?”மாமா கட்டிலுக்குப் போய் விட்டார்.

செந்தில் மொபைலில் ஆழ்ந்திருந்த செல்வியிடம் போனான். “அக்கா, நான் ஒரு பாட்ட நல்லா வாசிக்க கத்துக்கிட்டிருக்கேன், மாடிக்கு வரயா, வாசிக்கறேன்.”

“போடா, நீயும் டொய்ங் டொய்ங்கும் நான் இங்க சாட்டிலே இருக்கேன்.”சமையல் அறையை எட்டிப் பார்த்தான், அம்மா அடுப்பில் ஏதோ கிளறிக் கொண்டே, பக்கத்தில் மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா, நீயாவது வந்து கேளும்மா, எனக்கு அந்தப் பாட்டு நல்லா வாசிக்க வருது.”

“ஏண்டா உனக்கு நேரம் காலமே இல்லயா, பார்த்தா தெரியல, நானே இங்க தலையப் பிச்சிட்டிருக்கேன், அவ மகாராணி மொபைலை கீழ வைக்க மாட்டாள், இந்தா இந்தத் தேங்காய உடச்சிட்டு வா.”

தேங்காயை உடைத்துக் கொடுத்து விட்டு செந்தில், அறைக்கு வந்து மாமாவைப் பார்த்தான். மெல்லிய குறட்டையுடன் அவர் தளர்ந்திருந்தார்.

செந்தில் ஒரு முடிவுடன் மாடிக்குப் போனான். அறைக் கதவை மூடினான். காலை வெயில் சற்று அதிகம். காற்றுக்கு ஒரு ஜன்னலை மட்டும் திறந்தான். வீணையை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தான். பாட்டு சரளமாக எழும்பியது. ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது, ஜன்னலில் “மியாவ்”என்று சத்தம். வழக்கமாக வரும் தேன் நிற பூனைதான். செந்தில் வாசிப்பதை நிறுத்தினான்.

“ஹை புஸ்ஸீ, வா வா, எனக்கு  ‘வரவீணா’ நல்லா வாசிக்க வந்திடுச்சு, கேக்கறயா?”

மியாவ் என்று அரைக் குரல் கொடுத்து அந்தப் பூனை உள்ளே குதித்தது. வாலை உயர்த்தி முதுகை வளைத்து ஒரு தரம் சுற்றி வந்து, அவன் மடியில் சுகமாய்ப் படுத்துக் கொண்டது.

செந்தில் கண்களை மூடி, வாசிக்க ஆரம்பித்தான். ஆனந்தமான சங்கீதம் உலகைச் சூழ்ந்தது.                                                                                                                        ***

9 Replies to “செந்திலின் சங்கீதம்”

 1. இந்த கதையில் இரு அம்சங்களை வெகு நயமாக பின்னியிருக்கிறார் தருணாதித்தன். முதலாவது, கலைத்துறையில், அதுவும் குறிப்பாக கர்நாடக இசை பின்னணி யற்ற சூழ்நிலையிலிருந்து புறப்படும் அபூர்வமான திறமைகள் உள்வட்ட அறியாமை மற்றும் அலட்சியத்தால் வெளியுலகத்துக்கு அடையாளம் காணப்படாமலே போவது.
  இரண்டாவது இன்னும் நுட்பமானது. கலைஞனின் பயணம் கலையின் பால் ஆர்வத்திலிருந்து தொடங்கி அங்கீகார வேட்கையில் மையம் கொண்டு ஆன்ம நிறையில் முழுமை பெறுகிறது. இது ஒரு பயணம் மட்டுமன்றி அங்கீகாரத்துக்கும் ஆன்மாவுக்கும் ஆன ஒரு போட்டியும் கூட. அருமை!

 2. Dear Krishnan,

  There is a high possibility, it will be placed at the top three if this story finds itself in a competition.

  When I started reading கல்கியின் பொன்னியின் செல்வன் in late 198xs (when we were in ISRO), I hardly slept an hour during the week end and did not move an inch… had a banana for breakfast, skipped lunch and ate just a dosa in a nearby mess in Harris complex.

  Once our mind is in synch with our soul, then passion is born. Nothing can stop if we start doing anything with passion. And one is ready to giveup everything.

  As usual, your story moved on so naturally like a river….and I could not find a bit of exaggeration anywhere.

  Keep it up my dear friend and keep writing. God bless you and your family abundantly.

  அன்புடன்,
  அ வைரமுத்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.