நாகரிகம்
1
’’எப்படி உன்னால இது இன்ன வாசனைன்னு ரொம்ப சரியா உடனே சொல்ல முடியுது?’’ கார்த்தியிடம் எப்போதும் ஆச்சர்யமாகக் கேட்கப்படும் கேள்வி. இம்முறை அவன் சாரணர் கேம்பில் நுகர்தல் திறன் போட்டியில் வாங்கிய சர்டிஃபிகேட்டைக் காட்டிக் கொண்டிருந்த போது ஒன்பதாம் வகுப்புக்கு வேறு ஸ்கூலிலிருந்து புதிதாக வந்து அட்மிஷன் ஆகியிருந்த சிவராமன் கேட்டான்.
‘’ஒரு புது வாசனை மனசுல பதிஞ்சுடுது. அதே மாதிரி வாசனையை ரொம்ப நாள் கழிச்சு உணரும் போது மனசு அதுக்கு முன்னாடி அந்த வாசனையை உணர்ந்த சூழ்நிலையை கொண்டு வந்துடுது. அதனால அது என்னன்னு சொல்லிட முடியுது.’’ கார்த்தி யோசித்து யோசித்து வார்த்தை வார்த்தையாகச் சொன்னான்.
‘’நாய் நிறைய வாசனைகளை ஞாபகம் வச்சுக்கும்னு சொல்வாங்க’’ சிவராமன் எங்கோ படித்ததை நினைவு கூர்ந்தான்
‘’அது ரொம்ப சென்சிடிவான பிராணியும் கூட’’ கார்த்தி அவன் நண்பர் வளர்த்த நாயை நினைவுகூர்ந்து சொன்னான். அந்நினைவுடன் அதன் வாசனையும் சேர்ந்து கொண்டது.
2
தூரத்தில் இருந்த நெடுஞ்சாலையில் லாரி டிரைவர் அடித்த ஹாரனில் அவரது அவசரமும் சேர்ந்து கேட்டது. உச்சி வெயில் நேரம். மேயும் ஆடுகளின் புளுக்கைகள் காய்ந்து கொண்டிருக்கும் மணம். கோரை மட்டும் மண்டியிருந்தது. ஆடுகள் காய்ந்த புல்லை முகர்ந்து கொண்டிருந்தன. தண்ணீர் பாய்ந்து பல ஆண்டுகள் ஆன வாய்க்கால் தடம் மண்பாதை போல கெட்டித்துக் கிடந்தது. அதில் டூ-வீலரும் காரும் வந்து செல்வதன் தடங்கள்.
கார்த்தி தள்ளி நின்று கொண்டிருந்தான். பணம் கொடுக்கச் சொல்லி ராஜ் கேட்கிறான். ஒரு கோடி ரூபாய் முழுதும் வேண்டும் என்கிறான். ஒரு விபத்து. கார்த்தியின் அம்மாவும் அப்பாவும் போன வருஷம் திருப்பதி போய் விட்டு திரும்பி வரும் போது. வேலூருக்குப் பக்கத்தில். விபத்து நடந்த சில நிமிடங்களில் மரணம். ராஜ் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டான். அவர்கள் போஸ்ட் மார்ட்டத்திலிருந்து சுடுகாடு வரை. கார்த்தி வந்து சேர மூன்று நாளானது. பிறகு அமெரிக்கா செல்ல விருப்பமில்லை. சம்பாத்தியம் முழுதையும் கையில் வைத்திருந்தான். எல்லாம் போதும் என்று ஆகி விட்டது. உறவினர்கள் பெண் பார்த்து வைக்கிறோம்; திருமணம் செய்து கொள் என்கிறார்கள். நினைவுகள் அகல மறுக்கின்றன. எதிலும் ஆர்வம் இல்லை. எதிலும் பிடிப்பு இல்லை. ராஜ் ஏதாவது பணியில் மனத்தை ஈடுபடுத்திக் கொள் என்கிறான். அவன் செல்லக் கூடிய இடங்களுக்கெல்லாம் அழைத்துக் கொண்டு திரிகிறான். லே அவுட், அப்ரூவல், ஃபைவ் சி, சிக்ஸ் சி. சலிக்காமல் கனவு காண்கிறார்கள்.
’’கார்த்தி! எல்லாம் நான் பாத்துக்கறன். 1 சி கொடு. ஆறு மாசம் வெயிட் பண்ணு. உனக்கு நான் 2 சி கொடுக்கறன். நல்ல இடம். கண்ண மூடிட்டு வாங்குவாங்க. நானும் 1 சி இன்வெஸ்ட் செய்யறன்.’’
‘’ராஜ் நீ எனக்கு நல்ல ஃபிரண்டு. என்னோட வாழ்க்கையில எனக்கு ரொம்ப முக்கியமானவங்கள்ல நீயும் ஒருத்தன். எனக்கு பிஸினஸ் புதுசு. நான் அதுக்குப் பழகாதவன். என்னால உனக்கு எந்த இடைஞ்சலும் வந்திடக் கூடாது. அமெரிக்காவில இருக்கறவங்க பெர்சனல் ஃபிரண்ட்ஷிப்பையும் பிஸினஸையும் எக்காரணம் கொண்டும் ஒன்னா வச்சுக்க மாட்டாங்க’’
‘’நீ 1 சி கொடுத்துட்டு ஆறு மாசம் அமெரிக்கான்னாலும் போய்ட்டு வா. நீ வந்ததும் உன் கையில 2 சி தர்ரேன். அதுக்கு அப்புறம் ஒன்லி ஃபிரண்ட்ஷிப்பா அல்லது பிஸினஸ் பார்ட்னர்ஷிப்பான்னும் முடிவு செஞ்சுப்போம்’’
கார்த்தி தன்னிடம் இருந்த பணத்தை மொத்தமாகக் கொடுத்தான். அமெரிக்கா செல்லவில்லை. எதிலாவது மனத்தை ஈடுபடுத்திக் கொள்ள தடயவியல் துறையில் ஒரு டிப்ளமா கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் சேர்ந்தான்.
*
இங்கும் மனிதர்கள்தான். மனிதர்களுக்குரிய எல்லா மேன்மைகளும் பலவீனங்களும் இங்குள்ளவர்களுக்கும் இருக்கின்றன. கார்த்தி ராஜுடன் சேர்ந்து அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தான். நாள் பொழுதில் பல சந்திப்புகள். பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது.
ராஜ் அந்த இடத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு அக்ரிமெண்ட் போட்டான். அக்ரிமெண்டில் கார்த்தியும் கையெழுத்து போட்டிருந்தான். அந்த இடத்திற்கு மெயின் ரோட்டிலிருந்து ஒரு மண் சாலை. மண் சாலையின் கடைசியில் அவர்கள் வாங்க இருந்த இடம் இருந்தது. தினமும் இரண்டு மூன்று தடவையாவது காரை எடுத்துக் கொண்டு போய் கார்த்தி அங்கே சென்று நின்று கொண்டிருந்தான்.
ஆடு மேய்ப்பவர்கள் சிலர் வருவார்கள்.
‘’சார்! நீங்க இந்த இடத்தை வாங்கியிருக்கீங்களா?’’
‘’ஆமாம்.’’
‘’மொத்தம் எவ்வளவு ரூபாய் சார்’’
‘’2 கோடி’’
‘’ஃபேக்டரி கட்ட போறீங்களா?’’
‘’பிளாட் போட்டு விக்கப் போறோம்’’
*
கார்த்தி உத்தேச லே அவுட் வரைபடத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வருவான். லே அவுட் ஸ்கெட்சில் கார் கடந்து வரும் வாய்க்கால் காட்டப்படவே இல்லை.
‘’ராஜ்! நம்ம லே அவுட் பக்கத்துல ஒரு வாய்க்கால் இருக்கே. அது டிராயிங்ல இல்லையே’’
‘’அந்த வாய்க்கால் தூர்ந்து போய் இருபது வருஷமாச்சு’’
*
ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு கார்த்தி சாக்லேட் வாங்கிக் கொண்டு வருவான். அமெரிக்கப் பழக்கம். சிறுவர்கள் அனைவரும் இப்போது கார்த்தியின் நண்பர்கள்.
‘’சார் எங்க அப்பா சொன்னாரு. நீங்க வாங்கியிருக்கிற இடத்துக்கு கிழக்கயும் மேற்கயும் இருக்கற இடத்தை ராஜ் சார் வாங்கியிருக்காருன்னு.’’
‘’அப்படியா’’ கார்த்தி மையமாக கேட்டுக் கொண்டான்.
*
‘’மானுட மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களையே தடயவியல் பின் தொடர்ந்து செல்கிறது. நாம் நம் அகத்தில் அறியாத தீமை இல்லை. புற உலகில் நீங்கள் ஒன்றைக் காணும் போது அது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என அறிய தடயவியலாளனுக்கு அவனது புலன்கள் தான் முதலில் உதவ வேண்டும். அதன் பின்னரே நிரூபணங்கள். தடயவியலில் வெற்றிகரம் என்பது நிகழ்ந்ததைக் கண்டதுமே என்ன நடந்திருக்கும் என மிகச் சரியாக யூகிப்பது. நமக்கு மிகக் குறுகிய காலம் மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் காலம் எல்லாவற்றையும் அழித்து அழித்து மாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்குள் நாம் உண்மையைச் சென்றடைய வேண்டும்.’’ . தடயவியல் வகுப்பில் பேராசிரியர் வெங்கட்ரமணன் வேகமாகச் சொல்லிக் கொண்டு சென்றார். அன்றைய தினத்தின் நடைமுறை வகுப்பில் நஞ்சூட்டிக் கொல்ல பயன்படும் மெல்லிய மணம் கொண்ட வேதிப் பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
*
ஒரு காக்கி கவரில் கார்த்திக்கும் ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்திருந்தது. ராஜும் கார்த்தியும் அவர்கள் நிலத்தில் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வாய்க்கால் ஒன்றை ஆக்கிரமிப்பதாகவும்.
விஷயம் நீதிமன்றத்துக்குப் போனது.
ராஜ் பலவிதமாக சுழன்று கொண்டிருந்தான். கார்த்தி எதுவும் கேட்கவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் இவை சகஜம். சமாளித்துக் கொள்ளலாம் என கார்த்தியிடம் ராஜ் சொன்னான்.
சர்வேயரை அழைத்து வந்து அளந்து வாய்க்கால் தடத்தை ராஜ் கண்டுபிடித்தான். ஒரு ஜே.சி.பி வைத்து வாய்க்காலைத் தோண்டி விட்டான். நோட்டிஸ் கொடுத்தவர் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டார்.
*
கார்த்தி விபரம் சேகரித்துக் கொண்டான். ராஜும் கார்த்தியும் சேர்ந்து வாங்கியிருக்கும் இடம் இரண்டு ஏக்கர். அதற்கு கிழக்கே இரண்டு ஏக்கர் இடத்தையும் மேற்கே இரண்டு ஏக்கர் இடத்தையும் ராஜ் வாங்குவதற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறான். பாதை இருவரும் சேர்ந்து வாங்கிய இடத்தின் வழியாகவே கிடைக்கும். இல்லையென்றால் அவற்றுக்குப் பாதை கிடையாது. அது அந்த இடத்தின் ஓனர்களுக்கும் தெரியும். இவர்கள் வாங்கிய விலைக்குப் பாதியில் அந்த நான்கு ஏக்கரை முடித்திருந்தான் ராஜ். இங்கே நூறு சதவீதம் லாபம் என்றால் அவற்றில் முன்னூறு சதவீதம் லாபம்.
ராஜ் சொல்லி விட்டு செய்திருக்கலாம் என்று கார்த்தி நினைத்தான்.
*
வாய்க்காலுக்கு அந்தப் பக்கம் மனை. இந்த பக்கம் சாலை. கார்த்தி நின்று கொண்டிருந்தான். கண்ணாடி போட்டிருந்த ஒரு முதியவர் மெல்ல நடந்து வந்தார்.
‘’என்ன தம்பி! ராஜ் ஒரு வழியா எல்லாத்தையும் சுமுகமா முடிச்சுட்டார் போல இருக்கே. அவரோட ஜாதக விசேஷம் அப்படி. ஒரு இடத்துல அவர் நுழைஞ்சா அந்த இடம் அவருக்கு முழுக்க கட்டுப்பட்டுடும். நான் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்ல வேலை பார்த்தவன். மத்தவங்களுக்குன்னா இந்த பிரச்சனையை தீர்க்க வருஷக்கணக்கா ஆகியிருக்கும். நீங்க ஃபீல்டுக்குப் புதுசு போல இருக்கே. கொஞ்சம் கவனமாவே இருங்க. நீங்க வந்திருக்க ஃபீல்டோட ராசி அப்படி’’
3
எங்கெங்கிருந்தோ டூ வீலர்களும் டாக்ஸிகளும் வந்து கொண்டிருந்தன. ஒரு நாளைக்கு மூன்று நான்கு பத்திரப் பதிவு கூட சமயத்தில் நடந்தது. எல்லா மனைகளும் விற்று தீர்ந்தன. ராஜ் அவன் வாங்கியிருந்த இடத்தில் சாலை போடத் துவங்கியிருந்தான்.
கார்த்தி அதைப் பற்றி ஒரு வார்த்தையும் ராஜிடம் கேட்கவில்லை. ராஜும் சொல்லவில்லை.
*
‘’கார்த்தி! வீட்டுக்கு இன்னைக்கு மதியம் வந்துடு. வீட்டுல விருந்து. அப்புறம் உன்னோட செட்டில்மெண்ட்’’ உற்சாகமாக ராஜ் ஃபோனில் சொன்னான்.
ராஜ் வீட்டில் யாரும் இல்லை. மனைவியும் குழந்தைகளும் ஊருக்குச் சென்றிருப்பதாகச் சொன்னான். என்றாலும் தடபுடலான விருந்து. ஹாட் பேக்கிலிருந்து சோறை அன்னவெட்டியால் எடுத்து கார்த்தி தட்டில் வைத்தான் ராஜ்.
கார்த்திக்கு பேராசிரியர் வெங்கட்ரமணனின் ஞாபகம் வந்தது. திடீரென அவன் அப்பாவின் குரல். அம்மாவின் முகம். சூடான சோற்றின் ஆவி பறந்து கொண்டிருந்தது.
ஒரு அலைபேசி அழைப்பை ஏற்க ராஜ் ரூமுக்குச் சென்றான்.
இன்னும் உணவில் கை வைக்கவில்லை.
கார்த்தி எழுந்து சென்று ஒரு பேப்பரை எடுத்தான்.
‘’ராஜ்! உனது விருந்தை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன். நான் அமெரிக்கா செல்ல உள்ளேன். என் பணம் உன்னிடமே இருக்கட்டும்.’’ என்று எழுதினான். கையெழுத்திட்டான்.
*
வீட்டுக்கு வந்து லேப்-டாப்பைத் திறந்தான்.
வாயில் மணி ஒலித்தது.
ராஜின் எல்லா நடவடிக்கைகளிலும் உடனிருக்கும் செல்வம் கையில் ஒரு துணி சாக்குப்பையுடன் வந்திருந்தான்.
’’ராஜ் அண்ணன் இந்த அமௌண்டை உங்ககிட்ட தரச் சொல்லிட்டு வர்ரச் சொன்னாரு. 2 சி இருக்கு. எண்ணிப் பார்த்துடுங்க’’
4
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
– திருக்குறள்.