- வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1
- வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2
- வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3
- வேகமாய் நின்றாய் காளி- 4
- வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5
ரவி நடராஜன்
சமீபத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு பேச்சாளர் பட்டம் பெறும் மாணவர்களைப் பார்த்து, இவ்வாறு கூறினார்:
“உங்கள் பாக்கெட்டில் இருக்கும் திறன்பேசி, மனிதனை சந்திரனுக்கு அழைத்துச் சென்ற அப்போலோ விண்கலத்தை விட சக்தி வாய்ந்தது. நான் சொல்வது சரிதானா என்பதை உங்களில் பலபேர் கூகிளில் தேடுவதையும் நான் அறிவேன்”

அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், தங்களது திறன்பேசியை தங்களது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்கவில்லை. அவர்களுக்கு, தங்களுடைய திறன்பேசியின் வேகம் மற்றும் டேடா பற்றிய கவலை.
அதே நகரத்தின் இன்னொரு பகுதியில் மிகவும் சீரியஸான ஒரு வண்ணப்படக் கருத்தரங்கு நடந்த வண்ணம் இருந்தது. இன்றைய திறன்பேசிகள் எப்படி டிஜிட்டல் லென்ஸ் மாற்றும் கேமிராக்களுக்கு (interchangeable lens cameras) சவால் விடுகின்றன என்பதைப் புட்டுபுட்டு வைத்தார்கள். ஒவ்வொரு புதிய தலைமுறை திறன்பேசிகளும் எப்படி புதிய சவால்களை வீசிய வண்ணம் இருக்கின்றன – அதனுடைய செயல்திறன் எப்படி வளர்ந்து வருகிற்து என்றும் அலசினர். 2008 –க்கு பிறகு (ஐஃபோன் 2007 –ல் அறிமுகப்படுத்தப்பட்டது) காமிரா விற்பனை உலகெங்கும் படுத்துவிட்டது. இன்று உலகில் பல கோடி நுகர்வோருக்கு காமிரா என்றால் திறன்பேசிதான். காமிராவுக்காகவே சிலர் தங்களது திறன்பேசியின் புதிய மாடல்களை அடிக்கடி வாங்கவும் செய்கிறார்கள்.
மறைந்த மேலாட்சித் துறை நிபுணர் சி.கே. பிரஹலாத் ஒரு மும்பாய் சேரியில் உள்ள கணினிக்கும், கலிஃபோர்னியாவில் இருக்கும் கணினிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டிலும் Intel inside தான் என்பார். வெளித் தோற்றம் என்னவோ மும்பாய் சேரியில் உள்ள கணினி அமைப்பு அழுக்காகத் தோன்றலாம். ஆனால், இரு பாலாரின் வேகத் தேவை என்னவோ ஒன்றுதான்.
தொழில்நுட்பத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்று சொல்லிவிட்டு நாம் அடுத்த வேலைக்கு எளிதாய்ப் போய்விடலாம். அப்படித்தான் இந்த உலகம் அப்போலோ விண்கலக் காலங்களிலிருந்து செய்து வந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கு எல்லா பாகங்களும் எடையில் குறைவாகவும், சிறிதாகவும் இருக்க வேண்டியத் தேவை இருந்தது. இதுவே பிற்காலத்தில் எலெக்ட்ரானிக்ஸ் ஏராளமாக முன்னேறக் காரணமாகவும் அமைந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நமது மின்னணு வேகத் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அத்துடன், மின்னணுவியல் தொழில்நுட்பமும் அதற்கேற்ப வளர்ந்த வண்ணம் இருக்கிறது.
1970 -80 –களில், மூர் விதி, ஒவ்வொரு பதினெட்டு மாதங்களிலும், கணினி செயலிகளின் செயல்திறன் இரட்டிக்கும் என்று கண்டறிந்து, இந்தத் தொழிலின் தாரக மந்திரமாக அமைந்து, இன்றுவரை அப்படியே தொடர்கிறது. ஆரம்பத்தில் செயலிகள் மற்றும் கணினிக்கு தேவைப்பட்ட மெமரி விலையுயர்ந்ததாகவும் செயல்திறனில் குறைவாகவும் இருந்தன. இதை இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 1980 –களில், பில் கேட்ஸ், ”யாருக்கு 640 கிலோபைட்டுகளுக்கு மேல் மெமரி தேவைப்படப் போகிறது?” என்று சொன்னது வரலாற்று பிரசித்தி பெற்றது. அந்த காலத்தில், இருக்கும் மெமரி மற்றும் செயலியின் திறனைப் பொருத்து, மிகவும் செயல்திறன் கொண்ட நிரல்கள் உருவாக்கப்பட்டன.

18 மாதத்தில் செயலியின் திறன் இரட்டிப்பாகி விடும் என்று தெரிந்தவுடன், மென்பொருள் வடிவமைப்பாளர்கள் தங்களது செயல்முறையை மாற்றத் தொடங்கினர். உருவாக்கும் மென்பொருளின் செயல்திறன் சற்று குறைவாக இருந்தாலும், அதனை மெருகேற்றுவது தேவையற்றது – புதிய செயலிகள் இந்த மென்பொருள் செயல்திறனை ஈடுகட்டிவிடும் என்று நம்பி வெளியிட்டு வெற்றியும் பெற்றார்கள். இது 1986 –க்கு பிறகு மிக அதிகமாகி அதுவே ஒரு மென்பொருள் துறையின் வழக்கமாகி விட்டது.
ஒரு மென்பொருளில் வேகத்தை கூட்டுவது மிகவும் மெதுவான செயல். சில சமயம், உருவாக்கிய எல்லாவற்றையும் பிரித்து, மீண்டும் புதியமுறைகளை உருவாக்க வேண்டும். இதைப் பற்றி, ‘நேரம் சரியாக’ என்ற தொடரில் விரிவாக எழுதியிருந்தேன். விற்பனையாளருக்கு, இதில் பெரிய வசீகரம் ஏதுமில்லை. நுகர்வோரும், இதன் தாக்கத்தை வாங்கும் பொழுது பெரிது படுத்துவதில்லை. இதனால், பல மென்பொருள் நிறுவனங்களில் வேகம் வன்பொருளிடம் விடப் படுகிறது. நாளடைவில், இந்த பளூ கூடிக்கொண்டே போகிறது.
நுகர்வோரிடம், விற்பனையாளர்கள், புதிய அம்சங்கள் (features), புதிய செயலி மற்றும் புதிய கணினியுடன் ஜோடி சேர்த்தார்கள். புதிய அம்சங்களால் கவரப்பட்டு, நுகர்வோர், புதிய கணினிகளை வாங்கத் தொடங்கினார்கள். இது எல்லா கணினி சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. புதிய விண்டோஸுக்காக புதிய கணினி. புதிய மென்பொருட்கள், புதிய கணினியில் மட்டுமே வேலை செய்யும் என்று எல்லோறும் லாபம் பார்த்தார்கள்.
இது ஒரு நோய் என்று ஆரம்பத்தில் யாருமே நினைக்கைவில்லை. இன்றும் உலகில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் இதை ஒரு வளர்ச்சி சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். சமிபத்தில், ஆப்பிள் நிறுவனம் செய்த தில்லாலங்கடியை யூரோப்பிய நீதிமன்றம் ஒன்று சுட்டிக்காட்டி ஆப்பிளை சரி செய்ய வைத்தது. ஆப்பிள், ஐஃபோனில் அடிப்படை நிலைபொருள் (firmware) புதுபித்தலில் வேண்டுமென்றே பழைய திறன்பேசிகளை மெதுவாக இயங்கும்படிச் செய்தது. வெறுத்து போன நுகர்வோர், புதிய ஐஃபோன்களை வாங்க வைக்க இந்த நிழல்வேலை செய்து மாட்டிக் கொண்ட்து, ஆப்பிள் நிறுவனம். இவ்வகை நிலைபொருள் மோசடிகள் மற்ற தயாரிப்பாளர்களும் செய்து வந்துள்ளார்கள்.
இந்த வேகம் மற்றும் புதிய அம்சங்களின் மேலுள்ள மோகம், டிவி, விளையாட்டு கணினிகள், காமிராக்கள் என்று எல்லா மின்னணு விஷயங்களுக்கும் பொருந்தும். மிகவும் பருமனான டிவிக்கள் இன்றைய ஒல்லியான, சன்னமான எல்.ஈ.டி. (LED TV) டிவிக்களால் பின்னே தள்ளப்பட்டுள்ளன. முன்னேற்றம் தேவை இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும், சற்று சில விஷயங்களை நிதானமாக அசை போட வேண்டும். காரை ஓட்டும் பொழுது முன்னே மட்டும் பார்ப்பது போன்றது இந்த மின்னணுவியல் வேக மோகம். சற்றும் பின்னால் என்ன நடக்கிறது என்று கண்ணாடியில் பார்த்தால்தான், இது முன்னேற்றமா அல்லது ஒரு நோயா என்று தெரிய வரும். இந்த குறும் கட்டுரைத் தொடரில் அதைத்தான் செய்யப் போகிறோம்.
இன்று வடிவமைப்பாளர்கள் (designers) செயல்திறனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. அதை ஒரு அம்சமாக அனுமதிக்கவே தயங்குகிறார்கள். என்ன இது ஒரு நுகர்வோர் சார்ந்த பிரச்னையா என்று நினைக்கத் தோன்றும். இந்த வகை நோக்கு தொழில்ரீதியாகவும் மின்னணுவியலில் பரவத் தொடங்கிவிட்டது வேதனைக்குரியது. இன்று மேகக் கணிமை (cloud computing) ஏராளமாக பரவி விட்டது. உலகின் மேகக் கணிமை தொழிலில் மிக ஏராளமான தரவுகள் (data) சேமிக்கப்படுகின்றன. இந்த சேமிப்பின் வேகத் தேவை நுகர்வோர் விஷயத்தை விட பல மடங்கு அதிகமானது.

நமக்கெல்லாம் திறன்பேசியில் விரலால் தடவினால், பல கோடி தரவுகளை ஆராய்ந்து உடனே பதில் தேவைப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? இந்த மேகக் கணிமை மையங்கள் அதி வேக சேமிப்பு முறைகளை சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. அத்துடன், பழைய தேக்கல் முறைகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய அதி வேக முறைகளை, ஒவ்வொரு நாளும் நிறுவிக் கொண்டே இருக்கிறார்கள். நுகர்வோர் பொது வார்டில் இருக்கிறார்கள் என்றால், மேகக் கணிமை ஐ.சி.யு. -வில் இருக்கும் நோயாளி!
ஒரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கணினி துறையில் பணியாற்றும் என்னைப் போன்றவர்கள், இதற்குத் துணை சென்றவர்கள். எங்களுக்கு இது, தொடர் முன்னேற்றமாகவே காட்சியளித்தது. மிக வேகமாக மாறி வரும் இத்துறையின் வல்லுனர்கள் (நோயாளி அல்ல) என்று உலகமும் எங்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் புதிதாக மின்னணுவியல் சாதனங்கள் அல்லது ஏதாவது புதிய கணினி சம்பந்த விஷயத்தையே எதிர்பார்ப்பார்கள். என்னிடம், புதிய மின்னணுவியல் சாதனங்கள் (அச்சு எந்திரங்கள், டிவிடி எந்திரம், காமிராக்கள், ஒலிப்பெருக்கி எந்திரம்) பற்றி ஆலோசனைக் கேட்பார்கள். ஆலோசனை வழங்கும் பொழுது, இவர்களையும் நோயாளியாக்கி விடுவோமோ என்று ஒரு போதும் எனக்குத் தோன்றியதில்லை.
அப்படி என்ன நோய் இது? அடுத்த பகுதியில் பார்ப்போம். ***