
கடிதம் – அலகுடைய விளையாட்டு கதை பற்றி
1980களில், என் விடலைப் பருவத்தின் பெரும் பகுதியைத் தஞ்சை மாவட்டச் சிறு நகரம் ஒன்றில் கழித்தவன் நான். பந்தை முதன்மையாகக் கொண்டு ஆடப்படும் விளையாட்டுகளை அப்போது ‘பந்தடிப்பு’ என்றே உள்ளூர் வழக்கில் குறிப்பிடுவோம். “பொளுதனைக்கும் பந்தடிச்சா எப்படி உருப்புடறதாம்?” – என்பது போன்ற வசவுகள் சகஜம்.
நானும் என் பள்ளிப் பருவத்தில், பூப்பந்து எனப்பட்ட பால் – பாட்மின்ட்டன், கூடைப் பந்து, கால் பந்து, கிரிக்கெட் போன்ற வெவ்வேறு பந்தடிப்புகளில் ஈடுபட்டவனே – தீவிரமாக இல்லை என்றாலும். அவை சுதேசித் தன்மை கொண்டவை அல்ல; காலனிய ஆட்சியின் விளைவாக இந்தியாவில் புகுந்த ஆட்டங்களே என்ற போதிலும் அப்பந்தடிப்புகளில் ஈடுபடத் தயக்கம் இருந்ததில்லை. அப்போது எனக்கு காலனியக் கடப்புவாதச் சிந்தனைகளுடன் அறிமுகம் இல்லாததும் நன்மையே. ‘புட்டு’ என உள்ளூரில் அழைக்கப்பட்ட ஏழு கல் விளையாட்டும் பந்தை முதன்மையாகக் கொண்டதே. அது இறக்குமதியான விளையாட்டா என்பது குறித்த ஆய்வில் இதுவரை நான் ஏனோ ஈடுபட்டதில்லை.
பின்னர் கல்லூரிச் சூழலில் ஏற்பட்ட ஆர்வம் அமைப்பு சார்ந்த ஒன்றாக இருந்தது, அதன் பின்னர் வேலை, வெளிநாட்டு வாசம் என்று ஆகிவிட்டதால், பந்தடிப்பில் இருந்த ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. கிரிக்கெட்டுக்குக் கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவம், வெளிவந்த ஊழல்கள் போன்றவை அதன்மீது அசூயையே ஏற்படுத்தின.
கல்லூரி நாள்கள் தொடங்கி, நவீனத் தமிழ்ப் புனைவுகளை ஓரளவுக்கேனும் தொடர்ந்து வாசித்து வருகிறேன் – கடந்த பத்தாண்டில் அது பெரிதும் இணைய எழுத்துச் சார்ந்த ஒன்றாகவே தொடர்கிறது. நான் படித்தவரைத் தமிழில் பந்தடிப்பு குறித்த முழுமையான புனைவு ஒன்றை வாசித்த நினைவு இல்லை. அது ஒரு குறையாகவும் இதுவரை பட்டதில்லை.
சொல்வனம் இதழ் 214-இல் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதியிருக்கும் ‘அலகுடைய விளையாட்டு‘ புனைகதை, தமிழில் இதுவரை எழுதப்பட்டுள்ள சிறந்த புனைவுகளுள் ஒன்று. இறகுப் பந்து எனப்படும் ஷட்டில் பாட்மின்ட்டனின் பெரும் நுணுக்கங்களை வாசகன் மீது விட்டெறிந்து அவனைத் தெறித்து ஓடச் செய்யாமலும், பந்தடிப்பிலிருந்து அதிகம் விலகிச் சென்று தனி மனித அவலங்களில் – புலம் பெயர்ந்தவர்களின் அவலங்களில் உழன்று விடாமலும் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள புனைவு.
குறிப்பாகக் காலனியாதிக்க நாடு ஒன்றுக்கே புலம் பெயர்ந்தபின், அதன் பந்தடிப்புக் கழகம் ஒன்றில் உறுப்பினராவது தொடங்கி, ஆட்டம் முடிந்ததும் நிர்வாணமாக நீராடுதல், லீக் போட்டிகளில் ஆடுவது, உலகளாவிய ஆட்டங்களைப் பார்க்க வேறு நகரத்துக்குச் சக வீரர்களுடன் காரில் பயணிக்கும் போது நிகழும் சம்பாஷணைகள் என்றும் மிகச் சுவாரசியமாகக் கதை சொல்லியிருக்கிறார் கதாசிரியர். பாராட்டுகள்.
1990கள் தொடங்கிப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அகதி வாழ்க்கையையே முதன்மைப்படுத்தி எழுதியது எனக்குப் பெரும் சலிப்பையே ஏற்படுத்தியது. அ. முத்துலிங்கம் போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு. அரசியல் சரிநிலையைப் பேண விரும்புவோர், பொதுவாகத் தாம் காப்ஃகா போன்றோரின் இருண்மைவாத எழுத்துகளை விலக்கினாலும், ஈழத் தமிழர்களின் எழுத்துகளை விரும்புவதாகச் சொல்லிக் கொள்வர். ஆனால், நான் நேர் விரோதம், காப்ஃகா போன்றோரின் இருண்மைவாத எழுத்துகளை விரும்புவன் என்றாலும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் எழுத்துகளைப் பெருமளவில் தவிர்ப்பவன்.
மாறாக, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துக்காக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த சிவா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இத்தகைய படைப்புகளைக் கொடுக்க முடிவது உலகம் தழுவிய தமிழ்ப் புனைவுச் சூழல் பற்றி ஓரளவேனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
– குரு. சாமிநாதன்
(முகாம்; சிங்கப்பூர்)