குளக்கரை

உலக நடப்புகள் பற்றிய குறிப்புகள்

நேற்றைய விடை, இன்றைய தடை

நெதர்லாந்து  வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு . அதன் அதிகாரபூர்வமான பெயர் நெதர்லாந்து ராஜ்யம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இது ஹாலந்து நாடு என்றே  ஜனரஞ்சகமாக அழைக்கப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் , நெதர்லாந்து நாட்டின் 12 மாகாணங்களில் இரண்டு மாகாணங்களில் மட்டுமே ஹாலந்து என்ற பெயர் வருகிறது (வட ஹாலந்து ,தென் ஹாலந்து என்று ). நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு, ஹாலந்து மாகாணங்கள் இரண்டும் நெதர்லாந்தின் பொருளாதார வளர்ச்சியிலும்  செல்வச் செழிப்பிலும் மாபெரும் பங்களிப்பு ஏற்றதால் , ஹாலந்து என்ற பெயரிலேயே இந்த நாடு பொதுவாக அழைக்கப் படுவதாகக் கூறுகிறார்கள். நாட்டு மக்களை ஹாலந்தர் என்று குறிப்பிடுவதும் உண்டு. எனினும் பிற மாகாணத்தோர் நெதர்லாந்தர் என்ற பெயரையே விரும்புகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறவில்லை. மாறாக கீழ்க்கண்ட காரணங்களால்  டச்சுக்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

நெதர்லாந்து நாட்டின் மொழி நெதர்லாந்திஷ் அன்று . 24 மில்லியன் நெதர்லாந்தர் பேசும் டச்சு மொழி. அதுவே ராஜ்யத்தின் அதிகார பூர்வமான மொழி. மேற்கு ஜெர்மானிய மொழி. பழைய ஆங்கிலத்தில் dutch  என்றால் மனிதரையும் நாட்டையும் குறிக்கும். நெதர்லாந்து மற்றும் ஜெர்மானிய மக்களை ஒன்றாகவே கருதிய ஆங்கிலேயர் பன்னெடுங்காலமாக அவர்களை டச்சுக்கள் என்றே அழைத்த வந்தார்கள். பின்னாளில் ஜெர்மனி -ஜெர்மன் அடையாளங்கள் தெளிவானதால், நெதர்லாந்து மக்கள் மட்டுமே டச்சுக்கள் என்ற அடையாளம் பெற்றார்கள். நாமும் இந்த விஷயத்தில் ஆங்கிலேயரைப் பின்பற்றி டச்சுக்காரர் என்கிறோம். சுதந்திரத்திற்கு முற்பட்ட இந்தியாவுக்கு கி.பி. 1602-ல் வந்த டச்சுக்காரர்கள், பின்னாளில் ஆங்கிலேய, பிரெஞ்ச் சக்திகளிடம் போட்டியிட முடியாமல் வெளியேறி விட்டார்கள். கி.பி .1610-ல் புலிகட்டில் (இன்றைய பழவேற்காடு ) ஒரு தொழிற்சாலை நிறுவினார்கள். 

புவியியல் அடிப்படையில் நெதர்லாந்து  ஒரு தாழ்நிலைப் பகுதி. நெதர்லாந்து என்றாலே தாழ் நிலம் என்று அர்த்தம். அதுவும் குழைச்சேற்று நிலம். (soft peat land.) இந்நாட்டின் பரப்பளவில் கால் பங்குக்கும் மேல் கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது. இதனால் இயற்கையில் உருவான   மணற்குன்றுகள் மற்றும் மனிதர்கள் உண்டாக்கிய கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள், அகழிகள், தடுப்பணைகள் போன்ற கட்டுமான அமைப்புகள் மூலம் கடல் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து  மீட்ட நிலத்தை விளை நிலங்களாகவும் கால்நடைகள் மேய்ப்பு புல்வெளிகளாகவும் பயன்படுத்தி வந்தார்கள் . இவ்வாறாக நதிகளின் கழிமுகத்தில் மீட்கப்பட்ட விளைநிலங்களின் மொத்த பரப்பளவு 8000 சதுர கிமீ.  விளை நிலங்களில் தண்ணீர் அடிக்கடி தங்கிப் பயிர்கள் அழுகி விடுவதைத் தவிர்க்க நீரை வெளியேற்றும் காற்றாடி இயந்திரங்களை பெருமளவில் நிறுவிக் கொண்டார்கள். இவை 11-ஆம் நூற்றாண்டிலிருந்தே உபயோகத்துக்கு வந்துவிட்டன . டச்சு நாட்டில் முன்பெல்லாம் 10000 க்கும்   மேற்பட்ட காற்றாடி இயந்திரங்கள் பயனில் இருந்தன. தற்போதும் சுமார் 1000 செயல்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலும் நீர் வடிக்கும் வேலையை நீர் இறைக்கும் நிலையங்கள் செய்துவருகின்றன. இப்படி நிலத்தடி நீரைத் தொடர்ந்து இறைப்பதன் மூலம் நிலத்தின் அடித்தளத்தில் அழுத்தம் குறையவும், நிலம் படிப்படியாகத் தாழ்வது நடக்கத் துவங்கி இருக்கிறது.

இவ்வாறு  பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து  வேளாண்மைக்கும் , கால்நடைகள் மேய்ச்சலுக்கும் பயன்பட்டு வந்த சேற்று நிலம், வேகமாகக்  குழிந்து கொண்டுவருகிறது. கடல் உயர்ந்தும் , நிலம் அமிழ்ந்தும் வரும் சவாலான இன்றைய காலகட்டத்தில் , கட்டடங்களின் அஸ்திவாரங்களில் வெடிப்பும் , சாலைகளின் சீர்குலைவும் , வெள்ள அபாயங்களும் தவிர்க்க முடியாதவை . இவற்றை சரிசெய்ய மேற்கொள்ளும்  கட்டுமான வேலைகளும் , மேலதிக நில அமிழ்வையே ஏற்படுத்தும். 2050-ஆம் ஆண்டுவரைக்கும் நில அமிழ்வால் கட்டடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதமும் , புதுப்பிக்கும் செலவும் , $22பில்லியன் ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

மொத்த நாட்டிலும் நிலப்பரப்பு வருடா வருடம்  கீழே அழுந்தி, மேல் பரப்பும் இறங்கிக் கொண்டே போனால் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதைக் கீழ் வரும் கட்டுரை விரித்துப் பேசுகிறது. 

இயற்கையில் தலையிட முனையும் மனித எத்தனங்களுக்குத் தொலைநோக்கு என்பது அனேகமாகக் கிட்டுவதில்லை. இது மனிதரின் குறைபாட்டால் எழுவது என்று நோக்காமல், இயற்கையின் சூட்சுமங்களை மனிதர் அறிந்திருப்பது மிகக் குறைவாகவே என்று நாம் புரிந்து கொள்ளலாம்.  பூமியின் இயற்கையை நாம் நன்கு அறிய இன்னும் எத்தனை காலம் ஆகுமோ, அதுவரை நம் இடையீடுகள் தற்காலிக விடைகளாகவும், நீண்ட காலத்துத் தடைகளாகவுமே ஆவதை நம்மால் தவிர்க்கவியலாது என்று தோன்றுகிறது. 

https://www.salon.com/2020/01/18/blowing-in-the-wind-why-the-netherlands-is-sinking_partner/ ***

தாவும் மண்புழு

‘மண்புழு குடியானவர்களின் நண்பன்’ என்பது பழைய தொடக்கப் பள்ளிகளில் ‘இயற்கைப் பாடமும் தோட்ட வேலையும்’ என்ற பாடப்பிரிவின் பாடப் புத்தகத்தில் நான் படித்த வாசகம்.  அதை விவசாயியான என் தாத்தாவிடம் காட்டி விளக்கம் கேட்டேன்.  அவர் ‘‘நாக்குப்பூச்சி தானே ? ஒரு பிரயோசனமும் இல்லை .  அது நெல்வயலில் மண்டிப் போனால்,  வயல் நிறைய நீர் உறிஞ்சும். அதனால் நீர் இறைப்பு சிரமமாகி விடும்’ என்றார்.  வளம் நிறைந்த வயல்களில் அவை காணப் படுவதாலேயே, நிலத்துக்கு வளம் சேர்ப்பவை எனக் கூறி விடமுடியாது.  கெட்டியானமண்ணை உடைத்து விடுவதும்,  மண்ணிலுள்ள கரிம வஸ்துகளை விளைச்சலுக்கு உகந்ததாக மாற்றுவதும் அவை செய்யும் நற்செயலாக இருந்தாலும்,  விவசாயிகள் நிலத்தில் இடும் ஊட்டச்சத்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்  வீணாக,  மண்புழுக்கள் தோண்டும் வளைகள் மூலம் அண்டை நீர்வழிகளுக்கு சென்று விடுகின்றன.  

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் மூன்றில் ஒரு பங்கை பனிப்பாறைகள் மூடியிருந்தன.  அதனால அங்கிருந்த மண்புழு இனம் முழுதாக அழிந்து விட்டதாக விஞ்ஞானிகள் நம்பியிருந்தார்கள்.

அப்படிப் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. அவை தமக்குள்ள பூமியைத் துளையிடும் திறத்தாலும் மற்றும் பிற வழிகளிலும் உலகெங்கும் பரவி வாழ்கின்றன. ஆனால் ஜப்பான், கொரிய நிலத்தைச் சார்ந்த தாவும் மண்புழு (பாம்பு மண்புழு,  வெறிகொண்ட மண்புழு என்ற வேறு பெயர்களும் உண்டு ) வகை மண்புழுக்கள் வட அமெரிக்காவில் குடியேறி இருப்பதுதான்  கவலை அளிக்கும் செய்தி.  

தாவும்  மண்புழுக்கள் குடியேறியிராத  காலங்களில் வட அமெரிக்க வன்மரக்காடுகளில் உதிர்ந்த இலைகள்  மெதுவாய் மக்கிக் கனத்த கரிமச் சிதைவடுக்குப் போர்வை உருவாகும். இதுவே  பூச்சிகள் (நீரிலும் நிலத்திலும் வாழ்வன),  பறவைகள் மற்றும் காட்டு மலர்களின் வாழ்விடமாக இருந்தது.  தாவும் மண்புழுக்கள் வருகைக்குப்  பின்னர் பலவாண்டு கால மக்கிய  குப்பை சில ஆண்டுகளில் கபளீகரம் செய்யப் பட்டு விடுகிறது.  குப்பை தரும் பாதுகாப்பு விரைவில் விலகுவதால், முதுகெலும்பில்லா  உயிரினங்கள் அருகிப் போய்விடுகின்றன.  தாவரங்களுக்கும் ஊட்டச்சத்து யானைக்கவளம் போல் ஒரேமுட்டாய்க் கிடைப்பதால் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.  முன்பு மரவட்டைகளும் மிகச்சிறு பூச்சிகளும் இருந்த இடத்தில் எஞ்சி இருப்பது தாவும்  மண்புழுக்கள் மட்டுமே. அவற்றின் வருகையால் மரங்களின் புதுப்பித்தல் தடையுறும் என முதற்கட்டஆய்வுகள்கூறுகின்றன.  இது கவலை தரும் விஷயம்.  

தாவும் மண்புழுக்கள் பெரிதாக வளர்வதும்,  அடர்ந்த காலனிகளாய் வாழ்வதும், அவற்றை சாதாரண மண் புழுக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. மேலும் அவை தம் வாழ்விடத்தை தரையின் முதல் ஆறு அங்குலத்திற்குள் குறுக்கிக் கொண்டு இரக்கமின்றி மேல் மண்ணைத் துகளாக்கி வைக்கின்றன .  அவ்வாறு குலைவுற்ற மண் விரைவில் உலர்ந்து மண்ணரிப்புக்கு உள்ளாகி தாவரங்கள் வசிக்க இயலாத இடமாக மாறுகிறது.  மேலும் தகவல்களுக்கு இந்தக் கட்டுரையைப் பாருங்கள்-

https://www. theatlantic. com/science/archive/2020/01/jumping-worms-are-taking-over-north-american-forests/605257/  ***

குறிப்புகள்: கோரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.