களியோடை

சிவா கிருஷ்ணமூர்த்தி

இச்சா– நாவல் ஷோபா சக்தி / 2019/ கருப்புப் பிரதிகள்/ ரூ 290/-

சில மாதங்களுக்கு முன்னர் பிபிஸியின் வியட்நாம் போரைப் பற்றிய விவரமான 10 பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

அதில் பல்வேறு பேட்டிகள் – அமெரிக்கர்கள், வடவியட்நாம் வீரர்கள், தென் வியட்நாம் வீரர்கள் என்று பலருடைய பேட்டிகள் இருக்கின்றன.

ஒரு அமெரிக்க வீரர் – இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய குடும்பத்திலிருந்து வந்தவர், ஜாப்பானிய ஜாடையுடன் – ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.

வியட்நாம் காடுகளில் கொரில்லாக்களைத் தேடி அலையும் பணியில் ஒரு கிராமத்தின் எல்லைக்கு வருகிறார்கள். ஒரு குடிசையிலிருந்து அரிசி சோறு மணக்கும் வாசனை வருகிறது. 

நம் அமெரிக்க/ஜப்பானிய வீரர், தன் வாழ்நாளில் எப்போதும் தனது உணவில் பகுதியாக சோற்றை உண்டு வந்தவர், தற்போது வியட்நாமில் போர் சூழ்நிலையில் சோற்றை சாப்பிட்டு வெகு நாளாகிய நிலையில், இந்த வாசனை அமிர்தமாக இருக்கிறது.

அந்த குடிசைக்குள் போய் பார்க்கிறார்கள் – இரு வயதான பெண்கள், ஓரிரு குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள், சமைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழி பெயர்ப்பாளரிடம் சொல்கிறார் – என்னுடைய ராணுவ பங்கீட்டில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் உணவையும் இவர்களிடம் கொடுத்து விடுகிறேன் – அந்த சோறையும், காய்கறிகளையும் எனக்கு தந்துவிடச்சொல் என்று.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சக போர் வீரர் சொல்கிறார் – அவர்களைது உணவை உனக்குத் தந்துவிட்டால் அவர்கள் எங்கு போவார்கள்?

“கிட்டதட்ட ஒரு டஜன் நபர்களுக்கான உணவு செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு இது போதாதா?”

சட்டென அவர்கள் உணர்கிறார்கள் – அங்கு இருப்பது அந்த பாட்டிகளும் குழந்தைகளும் மட்டுமில்லை…

உடனடிச் சோதனையில் குடிசைப் பின்புறம் பதுங்கு குழியைக் கண்டுப்பிடிக்கிறார்கள்.

பிறகென்ன, வழக்கமாக என்ன செய்வார்களோ அதைச் செய்கிறார்கள் – குழியில் குண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து உடல்களை வெளியே எடுத்து ஊர் மத்தியில் போடுகிறார்கள்.

யார் யாரெல்லாம் உடல்கள் மேல் விழுந்து அழுகிறார்களோ அவர்களை விசாரிப்பதாக (உறவினர்கள்) திட்டம்.

பயந்தது போலவே அவர்களுக்கு அரிசிச் சோறு கொடுத்த பெண்களின் குடும்ப ஆண்கள்…

இதைச் சொல்லும் போது அந்த அமெரிக்க/ஜாப்பனியருக்கு சற்றே, சற்றேதான் குரல் கம்முகிறது…

மொத்த வியட்நாம் போரும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாம், இரண்டாம் உலகப்போர்கள், இன்றுவரை பல்வேறு வடிவங்களில் – புனைவு, அபுனைவு, கவிதை, இசை – ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் இத்தனை அருகில் இருக்கும் இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாறு இன்னமும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

“இச்சா” நாவல், ஆலா என்ற புனை பெயர் கொண்ட பெண் கரும்புலியை மையப்படுத்திய நாவல். பல்வேறு நாட்டுப்புற கதைகள், பேய்க்கதைகள், கண்ட, கேட்ட பல்வேறு ஊர் மனிதர்கள், உறவினர்கள் என்று பல்வேறு கிளைகளுடன் விரிகின்ற புதினம்.

அப்படி விரியும் போதே எப்படி தமிழ், சிங்களம் என்ற பிரிவினை குடியிருக்கும் ஊரில், ஆற்றில், பரம்பரையில் அழுந்திப் படிகிறது என்பதும் சொல்லப்படுகிறது.

கதை, கொஞ்சம் கொஞ்சமாக சிங்களத்தை நன்கு படித்து, சிங்களத்தி என்றே அழைக்கப்படுகின்ற கதை நாயகி புலிகளின் படைகளில் சேர்ந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறார் என்று நகர்கிறது.

தன்னைச் சுற்றி நடக்கும் தற்கொலைகளை கண்டு வெறுத்து, தனது சாவிற்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்ஆலா. 

“இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலை திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பது போல் சாவு குடித்துவிடக்கூடாது”

அதனாலேயே தனக்கு கொடுக்கப்பட்ட “கட்டளையை” – மனித வெடிகுண்டாக, வெடிக்க வைக்கும் போது தலையை மார்பினை நோக்கி குனிந்து – அப்போதுதான் முகம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது – பெருமையாக முன்னெடுத்துப் போகிறார்.

ஆனால் ஊழ் வேறு மாதிரியாக இருக்கிறது…வேறு யாருக்கும் சேதமாகாமல் ஒரு “எச்சரிக்கை” வெடியாக, சுவரை மட்டும் தகர்க்க, தன்னைத் தர அவருக்கு மனம் ஒப்பவில்லை…

ஆலாவின் தகப்பனார் ஊர் கூத்தில் ஆடுகின்ற பாத்திரங்கள் அனைத்தும் மனம் கனப்பவை.

கண்டி மந்திரியின் மனைவியை – ராஜ குற்றத்திற்காக அரசன், அவளது பச்சிளங்குழந்தையை உரலில் போட்டு இடிக்குமாறு பணிக்கிறான். அந்த உரலை இடித்துக்கொண்டே அப்பா/மந்திரியின் மனைவி பாடுகிறார்.

“அமிர்த சுகிர்த அழகொளிர் விளக்கே

அகக்கடலில் சுமந்த அருமைப் பாலகியே

பொன்னின் மேனிதன்னை உரலில்

பூணின் உலக்கை கொண்டு

ஊணும் பாதி தந்த பாலும் வாயிலோட

அம்மா குத்தி இடித்தாளோ உரல்”

நல்ல தங்காளில் நல்ல தங்காள்… தன் கைகளில் சிக்கி விடாமல் ஓடுகின்ற பிள்ளைகளை துரத்திப்பிடித்து ஒவ்வொருவரையாக கிணற்றில் போடுகிறார்…கிட்டதட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பாதிக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே இப்படி உரலில் இடிபட்ட, கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகளாக தோன்றுகிறது…

அக நானூறு பாடல் தொகுப்பில் உவகை பெய்தற்றே என்ற  பாடலை சில வாரங்களுக்கு வாசிக்க நேர்ந்தது.

தலைவன் தலைவியை மணம் செய்து கொள்ளப்போகும் செய்தியை தலைவிக்கு தோழி சொல்கிறாள்.

அந்த உவகையை பற்றி விவரிக்கும் போது,

கொடிய கோடையில், ஏரிகள் நீரின்றி வரள, பறவைகள் தங்க இடமின்றிச் செல்ல, இந்த வெப்பம் மிகுதியான சூழ்நிலையில், குளங்கள் நிறையுமாறு ஓர் அதிகாலையில் பெய்த மழையால் ஊர் மக்களுக்குள்ளும் பெய்த உவகை எல்லாம் ஒரு சேர என்னுள் பெய்ததது போலிருந்தது என்று அந்த பாடல் சொல்கிறது.

ஆலா என்கிற வெள்ளிப்பாவையைப் பற்றி படிக்கும் போது, அவளது களியோடை ஆற்றுக் கரை கிராமத்தை, சுற்றத்தை, மொழி சாதி பாகுபாட்டினால் சந்திக்க நேரிட அவலங்களை அறிய அறிய அவர்கள் அனைவரின் அழுகை, சோகம் எல்லாம் வாசிக்கிறவர்களுக்குள்  ஒரு சேர பெய்தது போல் இருக்கிறது…

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.