டிமதி டெய்லர்

ஆம், நாம் ஆத்திரப்படச் செய்யும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் நாம் வாழும் காலத்தில்தான் மிகையாய் ஆத்திரப்படுபவர்களுக்கு மதிப்பு கூடுகிறது, அதிகம் கோபப்படுவர்களுக்கும் அதிகம் புண்படுபவர்களுக்கும் பாராட்டு கிடைக்கிறது, பிற எவரையும்விட அதிகம் அதிர்ச்சியடைபவர்களும் திகைப்பவர்களும் பேராளுமைகளாகின்றனர். உணர்ச்சிகளின் வேகத்தை உயர்த்தும்போது சன்மானம் கூடுமென்றால் பிற சொல்லாடல்கள் மூழ்கிப் போகின்றன. இந்த இணையதளம், தனக்கேயுரிய சிறிய வகையில், பண்பட்ட சொல்லாடலின் சிறப்புகளைத் தன் முன்மாதிரியாய்க் கொள்கிறது.
புகழ்பெற்ற இலக்கிய விமரிசகர் லயனல் ட்ரில்லிங் 1951-ல் தன் முன்னாள் மாணவர் நார்மன் போடரெட்ஸ்சுக்கு எழுதிய கடிதத்தில் இருந்த ஒரு குறிப்பு அண்மையில் எதிர்பட்டபோது இது விஷயமாய் யோசித்துப் பார்க்க நேர்ந்தது. ட்ரில்லிங் எழுதிய ஒரு புத்தகம் குறித்து போடரெட்ஸ் மதிப்பீடு செய்திருந்தார். பெரும்பாலும் நேர்மறையாகவே இருந்த அந்த மதிப்பீட்டின் இடையே அவர், ட்ரில்லிங் அளிக்கும் விளக்கவுரைகள் போதுமான அளவு சமரிடும் வகையில் இல்லையோ என்று விசனப்பட்டிருந்தார். ட்ரில்லிங்கின் எதிர்வினை இப்படி இருந்தது (ஆடம் கிர்ஷ் தொகுத்த “லைப் இன் கல்ச்சர்: செலக்டட் லெட்டர்ஸ் ஆப் லயனல் ட்ரில்லிங்,” 2018, பக்கம் 193-ல் உள்ள மேற்கோள்):
“நம் கருத்துக்களை ஏற்கத்தக்க வகையிலும் நாம் சொல்ல வருவதைச் செய்து காட்டும் வகையிலும் உரையாடும் தொனிக்கு ஓர் அவசியம் உண்டு என்றும், பண்பட்ட வாழ்வின் தொனிக்கு அதற்கேயுரிய அவசியம் உண்டு, ஏன், அதற்கென்று ஒரு நாயகத்தன்மையும் இருக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள நாம் கற்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், நவீன இலக்கியத்தின் சீற்றமிகு பாவனையால் பொருள்படுவது அனைத்தும் சிறிது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும்தான் என் உரைநடை குறித்து நான் சொல்லியிருக்கக்கூடியது.”
எனினும், கண்ணியமாக நடந்து கொள்ள முயற்சி செய்யும் நம் அனைவர் உள்ளத்திலும் எழும் அச்சத்தை ட்ரில்லிங்கும் வெளிப்படுத்தினார்- ஒரு வகை தெளிவையும் கண்ணியத்தையும் அடைய முயற்சிப்பதால், நாம் எப்போது அல்லது எவ்வாறு பிறரிடம் முரண்படுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியாமல் போகலாம். ட்ரில்லிங் தொடர்ந்து எழுதுகிறார்:
“இப்போதும் நான் இதைத்தான் நினைக்கிறேன்… ஆனால் என் புத்தகம் குறித்த இங்கிலீஷ் மதிப்பீடுகள் சில சிறிது நாட்களுக்கு முன் வரப்பெற்றதும், நான் என்ன நினைத்தேனோ அல்லது என்ன விழைந்தேனோ அப்படிப்பட்டது அல்ல என் தொனி, என்பதை உணரத் துவங்கியிருக்கிறேன். இங்கிலீஷ்காரர்கள் காண்பதைக் காட்டிலும் அதிக உக்கிரம், நகைமுரண், கூர்மை என் எழுத்தில் இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் அதன் ‘மென்மை’ பற்றிய சில குறிப்புகள் என்னை அமைதியிழக்கச் செய்திருக்கின்றன. ஏனென்றால், அறிவு சார்ந்த தீர்ப்புகளில் நான் மென்மையானவன் அல்ல என்று நினைக்கிறேன், அப்படி இருக்கும் விருப்பமும் எனக்கில்லை. கருத்தை நிராகரிக்கையிலும் எழுத்தாளனை மன்னிக்க நான் தயாராக இருப்பது பிரிட்டிஷ் எதிர்வினைக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அதே நேரம், என் நடையிலும்கூட இப்படி நினைக்கச் செய்வதாய் ஏதோவொன்று இருக்கலாம் – நான் நினைக்காத ஏதோவொன்று அதில் இருக்கலாம், அல்லது நான் நினைத்தவொன்று அதில் இல்லாது போகலாம்.”
தெளிவாய்ச் சொல்வதானால், கண்ணியமான தொனி என்றால் கருத்து வேறுபாட்டை தவிர்ப்பது என்று பொருளல்ல. ஒத்துப் போக ஏற்றுக் கொள், என்று பொருளல்ல. விட்டுக் கொடுப்பது என்று பொருளல்ல. எல்லா விவாதங்களும் எந்திரத்தன்மை கொண்டவையாய், அல்லது, “தகவல்களை மட்டும் அளிப்பதாய்,” இருக்க வேண்டுமென நம்புவது என்று பொருளல்ல. ஒருவன் தன் நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்வதில் சிறிது நேர்மை இருக்க வேண்டும் என்று பொருள், நமது நம்பிக்கைகளுடன் முரண்படுபவர்களை எதிர்கொள்ளும்போது சிறிது வினயம் இருக்க வேண்டும் என்று பொருள்.
கோபம், ஆத்திரம் என்ற சுலப தூண்டில்கள் நீட்டப்படும்போது அவற்றைத் தாவிப் பற்றக் கூடாது என்று பொருள். மிகையுணர்ச்சிகளால் பலி கொள்ளப்படுபவர்களுக்கு சலுகை கொடுக்க முயற்சி செய்வது என்று பொருள்- ஏனெனில், நம்மில் யாரும் குறையற்றவர்கள் அல்ல. அதே சமயம், நாம் அந்த மிகைகளுக்கு தீனியிடவும் கூடாது, அவற்றை ஊதிப் பெருக்கவும் கூடாது. ஆம், அவற்றை மட்டுப்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும். அப்படியானால், கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது நம் முதல், இரண்டாம், ஏன், மூன்றாம் எதிர்வினை கண்ணியமான வகையில் இருக்க வேண்டும் என்று பொருள். கண்ணியத்தைக் கைவிட வேண்டிய நெருக்கடி ஏற்படும் சமயங்களில்கூட, கடுமையாக, வெளிப்படையாக, கோபமாக கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியபின், கருத்து வேறுபாட்டு நெருப்பில் தீ வளர்க்கும் ஒற்றை நோக்கில் தூபம் போடுவதற்கு மாறாய், நாம் விலகி விட முடியும்.
பின்னொரு நாளில், நிதானமாய் சிந்திக்கச் வேண்டும், கவனமாய் யோசிக்க வேண்டும் என்று பிறரிடம் வேண்டுகோள் விடுக்க விரும்பும் காலத்தில், இணக்கமான தொனியைக் கைவிடுபவர்கள், அவ்வகைப்பட்ட சொல்லாடலை தாம் பழுதுபடுத்தி விட்டதைப் புரிந்து கொள்ளும் நிலை வரும். இணக்கமான உரையாடலை வலியுறுத்தி கோரிக்கை விடுக்க விரும்பும் காலத்தில் அதற்கான சாத்தியம் அவர்களுக்கு இல்லாது போயிருக்கும். உங்கள் கருத்து வேறுபாட்டை கண்ணியமான வகையில் வெளிப்படுத்தும் சாத்தியம் குறிப்பிட்ட சில விஷயங்களில் இல்லை என்று சொல்லும் உந்துதல் உங்களுக்கு இருந்தால், உங்களை நோக்கி நீங்களே இப்படி கேட்டுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்: யார் மிகச் சத்தமாக, மிக நீண்ட நேரம், மிகக் கடுமையான வகையில் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் மட்டுமே உரையாடல்களை வழிநடத்தச் செய்யும் வகையில் அமைந்த சமூகத்தை நீங்கள் ஊக்குவிக்க விரும்புகிறீர்களா?
தம் வாழ்வின் வெவ்வேறு வட்டங்களில் கருத்து வேறுபாட்டை கண்ணியமான வகையில் வெளிப்படுத்தும் ஆற்றல் தமக்குண்டு என்பதைப் பலரும் காட்டுகிறோம்: குடும்பம், நண்பர்கள், பணியிடம், வழிபாட்டுத் தலங்கள், கிளப்கள், உள்ளாட்சி மன்றங்கள், பிற இடங்கள். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணியமில்லாமல் நடந்து கொள்ளுமளவு உரையாடல்கள் சீரழியும்போது அங்கு ஒரு வகை நிகழ்த்துதன்மை கொண்ட நேர்மையின்மையும் தம் குழுவைச் சார்ந்தவர்களை நோக்கி சமிக்ஞை செய்யும் பாங்கும் இருப்பதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். நான் இங்கு சொல்ல வருவது, ஜேம்ஸ் மாடிசன் தன் பெடரலிஸ்ட் #50 கட்டுரையில் வெளிப்படுத்தும் கருத்துக்கு இணையானது:
“கவுன்சில் இருந்த காலந்தோறும் அது உறுதியான, தீவிரமான இரு தரப்புகளாய் பிரிந்திருந்தது. இந்த உண்மையை அவர்களே ஒப்புக் கொண்டார்கள், அது குறித்து வருந்தவும் செய்தார்கள். இப்படி இல்லை என்று சொன்னால், அவர்கள் விவாதங்களை நடத்திய விதத்தைப் பார்க்கும்போதே, இதற்கு இணையான சான்று கிடைக்கிறது. எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதனளவில் எவ்வளவு அற்பமான கேள்வியாக இருந்தாலும், அல்லது, ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாய் இருந்தாலும், எதிரெதிர் பட்டியல்களில் அதே பெயர்கள் எப்போதும் முரண்பட்டு நிற்கின்றன. மனச்சாய்வு இல்லாத எந்த ஒரு பார்வையாளரும், பிழையாக இருக்கும் என்ற அச்சம் இல்லாமல், அதே சமயம், இரு தரப்புகள் மீதோ அல்லது இரு தரப்புகளின் தனிப்பட்ட உறுப்பினர்கள் மீதோ எந்த குற்றச்சாட்டும் சொல்வதாக இல்லாமல், தூரதிருஷ்டவசமாய், அறிவல்ல, உணர்ச்சிகளே அவர்கள் எடுத்த முடிவுகளை வழி நடத்தியிருக்கும் என்று கூறிவிட முடியும். தனித்தன்மை கொண்ட பல்வேறு கேள்விகள் மீது மனிதர்கள் தம் அறிவை உணர்ச்சிவசப்படாமல், சுதந்திரமாய் பிரயோகிக்கும்போது, அவற்றில் ஒரு சில குறித்தேனும் வெவ்வேறு முடிவுகளுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே பொது உணர்ச்சியால் ஆட்டுவிக்கப்படும்போது, அவர்களுடைய கருத்துக்கள், அவற்றை அவ்வாறு அழைக்க முடியுமென்றால், ஒருமித்தே இருக்கும்.”
ஒருவனது உணர்ச்சிகள் அவர்களை எப்போதும் ஒரே குழுவுடன் ஒருமித்தவர்களாய் நிறுத்துகிறது என்றால், அது எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என ஒரு சமிக்ஞை செய்கிறது: குழு உறுப்பினர்களாய் இருப்பது அவர்களுக்கு மிக முக்கியமாக இருப்பதால், தாம் சுயமாய்ச் சிந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தைவிட குழுவினருக்கு எதிராய் மாற்றுக் கருத்து கொண்டவர்களென அறியப்படக்கூடாது என்று அஞ்சுகிறார்கள். அந்த வகையில், கண்ணியம் என்னும் ஒழுக்கம், ஒரு வகை அந்தரங்கச் சுதந்திரத்தை நமக்கும் பிறருக்கும் அளிக்கிறது.
நன்றி: https://conversableeconomist.blogspot.com/2020/01/the-tone-of-civil-life-has-its.html
தமிழாக்கம்: செமிகோலன்
Excellent translation of Lionel Trilling’s letter. Wish to see more of his works translated by Semicolon.