எவ்வழி நல்லவர் ஆடவர்

பானுமதி ந.

ஜுனாத் அக்தர் பாகிஸ்தானில் உள்ள காரகோரம் மலைத் தொகுதிகளின் பள்ளத்தாக்கில் பாயும் அந்தப் பெரிய நதியின் பனிப்பாறைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘பதூரா பனிப்பாறைகள் சற்றுத் தள்ளி இருந்ததை நான் நினைக்கிறேன்.உலகின் மிக நீண்ட பதூரா பனிப்பாறைகள்,அவை இன்னமும் பின்னே சென்று கொண்டேயிருக்கின்றன.

23000 அடிகளுக்கும் மேம்பட்ட உயரப் பாறைகள்,சிறுவயதிலிருந்து வருகிறேன்.வட பாகிஸ்தானின் கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் மலையேற்றத்திற்கான வழிகாட்டியான நான்,ஒரு மாணவனும் கூட.என் பாஸு கிராமம் பதூராவின் பனிப்பாறைகள் உருகிப் பெருக்கும் நதியின் நீரை நம்பி இருக்கிறது.கோடைக் காலங்களில் அதை ஒட்டியே இன்னமும் மலையின் மேற்புறம் சென்று எங்கள் கால்நடைகளுக்கான உணவைப் பெறுவோம்;அது அந்தப் பனிப்பாறைகள் உருகிக் கொடுக்கும் நீரால் தான் இயல்கிறது.என் கிராமம் பாலையாக ஆகாமல் இருப்பதற்கும் அது கொடுக்கும் நீரே ஆதாரம்.

ஆனால் பாஸுவில் தட்ப வெப்பம் மாறுகிறது;எங்கள் வாழ்வின் ஆதாரமான பனிப்பாறை ஆபத்தில் உள்ளது.எங்கள் கிராமத்தின் வடக்குப் பகுதியில் பாறையிலிருந்து உருகிப் பெருகி வரும் வெள்ளத்தால் பல பகுதிகள் மூழ்கும் அபாயம் நேரிட்டது.இந்த அரிப்பினால் நதிப் படுகையில் மொத்தமாக ஒரு தங்குமிடமே மூழ்கிப்போயிற்று.

இதே நேரம் கிராமத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு மிக வேகமாக பனிப்பாறை வருகிறது.இந்தக்கிராமத்தின் ஒரே பெரு வழிச் சாலையை அது ஆக்ரமிக்கும் அபாயத்தைப் பற்றி  இங்கே வசிப்போர் ‘நகரும் பனிப் பாறைகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளிடம்’ அச்சம் தெரிவிக்கின்றனர். மனிதர்கள் வாழக்கூடிய பல பள்ளத்தாக்குகளின் நீர்ப்பாதையை இந்த நகரும் பனிப்பாறைகள் தகர்த்து விடுகின்றன.’

துருவப் பகுதிகள் தவிர்த்து மிகப் பெரும் பனி காணக்கிடைக்கும் இடம் இந்துகுஷ் இமாலயத் தொடர். அது ஆப்கானிலிருந்து பர்மா வரைத் தொடரும் ஒன்று. புவியின் வெப்பமயமாதலும், மாசுகளும் சூழியல் கேடுகளால் பனியை அதி வேகமாக உருக வைக்கின்றன.அதன் திசைப்போக்குகளும் மாறுகின்றன.அதைக் கட்டுப்படுத்தாவிட்டால்அடுத்த நூற்றாண்டில் மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறைகள் உருகி இந்தியா,சீனா பாக், ஆஃப்கான் உள்ளிட்ட மக்கள் பெருக்கம் உள்ள நாடுகளின் நிலை கவலைக்கிடமாகும் என்று இந்து குஷ் இமாலயாவின் சுற்றுச் சூழல் குறித்து ஆய்வு செய்து அறிவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டுக்குள் வராத சூழியல் கேட்டினால், அடுத்த ஐம்பது வருடங்களில் வெள்ளத்தினால் அபாயம், அதற்கடுத்த 50 ஆண்டுகளில் சிறிதாகும் பனிப்பாறைகளால் வறட்சியினாலும் அபாயம்.

பாக்கில் உள்ள காரகோரம் மலைத்தொடர்களில் மிகுந்த பனி மலைகள் உண்டு.மலைகளிலிருந்து தள்ளி இருக்கும் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் நீரால் வரும் சவால்கள் உணரப்பட சில பத்தாண்டுகள் ஆகலாம்;ஆனால்,பாகிஸ்தானின் வடக்குப் பகுதியிலுள்ள நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் வெள்ளமும், வறட்சியும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.

பனிப்பாறைகளை ஆய்வு செய்பவரும், ஐம்பது ஆண்டுகளாக அங்கே வசிப்பவரும், இயற்கைச் சீற்றங்களின் போது தன்னார்வத் தொண்டு செய்பவரும் ஆகிய அமானுல்லா கான், பாஸு கிராமத்தின் தென் பகுதியில் வசிக்கிறார்.கணிக்க முடியாத இயல்பு கொண்டவை என அவர் காரகோரம் பனிப்பாறைகளைப் பற்றிச் சொல்கிறார். ‘சில பாறைகள் உருகுகின்ற நிலையில் ஏன் சில பாறைகள் முன்னோக்கி நகருகின்றன என்பதற்கான விடை அறிவியலில் இன்னமும் இல்லை. கிட்டத்தட்ட ஓராண்டுக்குள் பாதை அடைபட்டு முக்கியமான விவசாயக் கால்வாய்கள் சிதைந்து போகும் ஆபத்து உள்ளது. சென்ற ஆண்டில் மிகப் பெரும் பனிப்பாறை பாஸு கிராமத்தின் தெற்குப்பகுதியின் பெரு வழிச் சாலையை மிக நெருங்கி வந்துள்ளது. மொத்தமாக அது பாதையை அடைத்துவிடவும் கூடும்.

நீர் வரும் கால்வாய்கள் அடைபட்டால் வாழ்வே கேள்விக்குரியதாகிவிடும். அரசோ,அரசு சாரா நிறுவனங்களோ களம் வரும் முன்னரே எங்கள் பகுதியினர்,தங்கள் நிலத்தைக் காக்க முடிந்தவற்றை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.’

ஹூன்சா பள்ளத்தாக்கு பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ளது. ‘High Altitude Sustainability’ நிறுவனத் தலைவரான ஹன்நயா தாரிக் சொல்கிறார்’போன கோடையில் மூன்று வாரங்களுக்குக்  கால்வாய்களில் நீர் வரத்து இல்லை; நகரும் பனிப்பாறைகளும், சிறுபாறைச் சரிவுகளும் கட்டுமானங்களைத் தகர்த்தன. குறைந்து வரும் பனிப்பாறைகள் இவற்றிற்கான காரணம்.’

இந்த நகரங்களில் 65000 பேர் வசிக்கிறார்கள். வழித்தடம் மாற்றும் இரயில் பாதை அமைப்புகளைப் போல் சிக்கலான மதகுத் திறப்புகளைக் கொண்ட நீர்க் கால்வாய்கள் இவர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வாழ்விடத்தின் கசப்புச் சிரிப்பு என்றே உள்ளூர் நீதி மன்றங்களில் நடை பெறும் வழக்குகளைச் சொல்லலாம்-நில உடைமையாளர்களின் தண்ணீர் தகராறுகள் அவை.

வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் அடையும் தட்பவெப்ப இடர்களைப் பற்றி பாகிஸ்தானின் மற்ற பகுதி மக்களுக்குப் புரிதல் இல்லை. மீண்டும் தாக்கும் போலியோவும், காஷ்மீரமும் ஆளுவோரின் மிகப் பெரும் சிந்தனையாக(!) இருக்கிறது.வரும் பத்தாண்டுகளில் நீர்ப் பற்றாக்குறை என்பது நகரங்களில் வாழும் மக்களைப் பாதிக்கும் என்ற உணர்தல் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்.

தாரிக் சொல்கிறார்’இந்தப் பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்லத் தேவையான நிதி திரட்டும் இடங்களில் கூட “எதைப் பற்றி நீங்கள் இவ்வளவு கவலை கொண்டு- ஹூம்.. குழைந்தைகள் ‘தட்டாவில்’ செத்துக்கொண்டிருக்கிறார்கள்,நகரும் பனிப்பாறைகளாம்,அழியும் நீர் ஆதாரங்களாம்!”

நாட்டின் தெற்குக்கடற்கரையை ஒட்டியுள்ள கராச்சியில் வாழும் 14 மில்லியன் மக்களும் உருகும் பனியின் விளைவுகளை சந்திக்கும் ஆபத்தில் தான் இருக்கிறார்கள். அரபிக்கடலில் கலக்கும் முன்னர் சிந்து நதி இந்த நகரின் வழியாகத்தான் செல்கிறது.அந்த நதிக்கே பனிப்பாறைகள் பாதிப் பங்கு நீரைக் கொடுக்கின்றன.

மொகம்மது ஃபரூக் ஆசாம் இந்திய தொழில்நுட்பக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணி புரிகிறார். இமாலயத்தின் பனிப்பாறைகள் பற்றி பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்பவர். ‘சிந்து நதியின் ஆதாரமே இந்தப் பனிப் பாறைகள் தான்; பனி உருகும் பருவங்களில் இமாலயாவிலிருந்தும், காரகோரம் தொடரிலிருந்தும் 50% நீரினை சிந்து பெறுகிறாள். இந்த மலைத்தொடர்களிலிருந்து உற்பத்தி ஆகும் நதிகளில், வரும் 50 ஆண்டுகளில் அதிக நீரால் வெள்ள அபாயமும், குறைந்து வரும் பனிப்பாறைகளால் வறட்சியும் ஏற்படலாம்,’ என அவர் சொல்கிறார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சொல்கிறது’அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகை அளவில் சிந்து நதியின் படுகையில் மக்கள் வசிக்கிறார்கள்.’இந்து குஷ் இமாலயா அமைப்பினர் சொல்கிறார்கள், ‘ஆசியாவின் 10 நதிகளில் ஒன்றான இந்த சிந்து நதியில் உருகும் நீர் வரத்து இல்லையெனில் மூன்று பில்லியன் மக்கள் வறட்சியால் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.’

இந்தியாவின் கட்டுபாட்டில் இருக்கும் லடாக்-அது இந்திய –பாகிஸ்தானின் வடக்கு எல்லையில் உள்ளது.அங்கே பனிப்பாறைகள் சிறியவை, உருகிக் கரைந்தவை.பின் வரும் காலங்களில் மற்ற இடங்களில் மக்கள் எதிர் கொள்ள இருக்கும் சூழலை லடாக்கியர்கள் இப்பொழுதே எதிர் கொள்கிறார்கள். கோடைக்கு முந்தைய பருவத்தில் அங்கே நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது.இரு போக சாகுபடி போய் ஒரு போகமாக மாறியுள்ளது. இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளில் இதையும் கைவிட நேரிடலாம்.

ஆசாம் சொல்கிறார்’ நீர்ப் பிரச்னைகளைப் பற்றி அறிய மக்கள் விரும்புவதில்லை.பாஸு கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையாவது ஒன்றாவது? என்கிறார்கள் அவர்கள்’.ஆனால் சூழியல் கேடுகள் புலப்படுகின்றன.நகரும் பனிப்பாறைகள், அவைகளால் உருண்டோடிவரும் சிறு பாறைச் சிதறல்கள்,அதில் சிக்குண்டு  உயிரிழக்கும் விவசாயிகள் எனப் பார்க்கிறோம் என கான், தன்னார்வலர் சொல்கிறார்.பலத்த மழைக்குப் பிறகு பாறைச் சரிவுகள் நிகழும்.சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிலச் சரிவினால், நூற்றாண்டுகளுக்கும் மேலான பயிர் செய்த இடமான வரலாற்று முக்கியம் வாய்ந்த அந்தப்பகுதி அந்த மலையேற்றப் பாதை முற்றிலுமாக கரிமாபாத்தில் அழிந்தது; அத்துடன் அங்கு அதுவரை நடை பெற்ற விவசாயமும் கூடத்தான்.

மாறுகின்ற தட்ப வெப்பச் சூழலால் ஏற்படும் விளைவுகளை  பாஸுவின் விவசாயிகள் இந்த ஆண்டு சந்திக்க நேர்ந்தது.பழங்கள் வெளியிலிருந்து பார்ப்பதற்கு நன்றாகவும், உள்ளே கறுப்பாகவும், அழுகியும் போயிருந்தன. கோடையின் அராஜக வெப்பமும், மழையுமே இதற்கான காரணம் என்று கான் சொல்கிறார்.

நிலச்சரிவுகளும்,நீர் ஆதாரக் கால்வாய்களின் சிதைவும், மாறிவரும்  தட்ப வெப்பச் சூழலும் பல கிராம மக்களைப் புலம் பெயரச் செய்கிறது.கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் மிகப் பெரும் அழிவைச் சந்தித்ததால் நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராமமே  கைவிடப்பட்டுள்ளது.

24 வயதான் அக்தர் போன்றவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் தொடர்ந்து வாழ்வதன் சாத்தியங்களைச் சிந்திக்கும் நிலையில் இருக்கிறார்கள்.’நகரங்களை நோக்கி மனிதர்கள் செல்ல நேரிடும்;ஒவ்வொரு வருடமும் கிராமத்தின் ஒரு பகுதி மறைகிறது.’

சூழியல் கேடுகள் விளைவிக்கும் தீங்கினை நாம் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.சங்ககாலப் புலவர் விற்றூற்று மூ தெயின்னார் ஒரு பாடலில் இயற்கைச் சீற்றம் குறித்து சொல்கிறார். ’கடுவளி(பேய்க்காற்று)பனை மரத்து மடல்களை குருத்தோடு அடித்துச் சென்ற குப்பை மலை உச்சியில் காயும்;அதில் பற்றிப்படரும் பெரும் தீ ஆழித்தலை வீசிய அயிர் சேற்று அருவி-கடல் மணல்கள் தூக்கி வீசப்பட்டு மண் அருவியெனப்பொழியும்’

ஆஸ்திரேலியாவின் பற்றிப்படரும் தீ, இயற்கையின் சீற்றம் மட்டுமல்ல,அதில் நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்களின் பெரும் பேராசையும் பேரோசையுடன் எரிகிறது.அதை அணைக்க இப்போது தூவப்படும் இராசயனப் பொருட்கள் இன்னமும் அறியவியலா கேட்டைக் கொண்டு வருவதற்கான சாத்தியங்களை மறுக்க இயலாது.’தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது, தென்னை தனைச் சாய்த்துவிடும் புயலாக வரும் பொழுது.’

மனிதன் இயற்கையின் ஒரு அங்கம். தமிழில் அழகான ஒரு வார்த்தை-காடு திருத்துதல்- ஏறு தழுவுதல் போல.இதில் அழிப்பு இல்லை- வளம் உள்ளது. என்ன ஒன்று-நமக்குப் புரிவதில்லை.

பள்ளுப்பாடல் ஒன்று- இயற்கை நிமித்தங்களைக் கொண்டே தென் மேற்கு பருவ மழையைச் சொன்ன பாடல்

‘ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி;

மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே;

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே;

கேணி நீர்ப்படும் சொறித்தவளை கூப்பிடுகுதே;

சேற்றில் நண்டு சேற்றைக் கிள்ளி ஏற்றடிக்குதே;

மழை தேடியொரு கோடி வானம்பாடி ஆடுதே’

இயற்கை சொல்லாத சேதியா?

வேலூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக இறந்து போயிருந்த நாகநதி என்ற ஆற்றை நான்கு வருடங்கள் பாடுபட்டு மகளிர் சுய உதவிக்குழு ‘மகாத்மா ஊரக வளர்ச்சித் திட்டத்தின்’ கீழ் உயிர்ப்பித்திருக்கிறது. இதில் செயற்கைக்கோள்புகைப்படங்களும், ஜி.யை.எஸ்ஸும் பயன்படுத்தப்பட்டு அனைத்து வேலைகளும் (உறை அமைப்பது, கிணறு தோண்டுவது முதற்கொண்டு) பெண்களாலேயே செய்யப்பட்டுள்ளன. இப்போது 9000 ஏக்கருக்கும் மேல் இதனால் பாசன வசதி ஏற்பட்டுள்ளது.மிகவும் போற்றத்தக்க செயல் இது. (https://youtu.be/JOsSDOB89hnk)

ஔவை அழகாகச் சொன்னார்:

‘நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே!’

https://theoutline.com/post/7823/the-slow-erosion-of-northern-pakistan-batura-glacier-gilgit-baltistan-passu?zd=2&zi=545wm3mn

[கட்டுரையாளர்: பானுமதி ந. ]

ஆகஸ்ட்,21,2019 தேதியில் வெளியான சல்மான் ஃபரூக்கின் கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.