- 20xx- கதைகள்: முன்னுரை
- இருவேறு உலகங்கள்
- 2084: 1984+100
- 2015: சட்டமும் நியாயமும்
- 2010- மீண்டும் மால்தஸ்
- 2019- ஒரேயொரு டாலர்
- 2016 – எண்கள்
- பிரகாசமான எதிர்காலம்
- நிஜமான வேலை
- அவர் வழியே ஒரு தினுசு
- என்ன பொருத்தம்!
- மிகப்பெரிய அதிசயம்
- அன்புள்ள அன்னைக்கு
- வேலைக்கு ஆள் தேவை
- கோழிக் குஞ்சுகள்
- விலைக்குமேல் விலை
- எதிர்வளர்ச்சி
தொட்டுத் தடவுவதற்கு இனிய உறைமேல் திருமண அழைப்பிதழுக்கான அலங்காரம். மங்கலமான செந்தாமரை நிறம், இடப்பக்கத்தில் வெள்ளை ஜோடிப் புறாக்கள், ஓரங்களில் பூவும் இலைகளும். கைகொள்ளாத அதன் கனத்திற்கு இரண்டு டாலர் தபால் தலை. அதைத் தயாரிக்க இருபது டாலராவது ஆகியிருக்கும், தபால் செலவு அதிகமாகப் படவில்லை.

தங்க எழுத்துக்களில்…
மணமகன்: விஷ் வைத்யா.
மணமகள்: க்ளோரி குப்தா.
உறைக்குக் காயம்படாமல் அதை ஒட்டியிருந்த வட்டக் காகிதத்தை சாமி ஜாக்கிரதையாக உரித்து எடுத்தான்.
உள்ளே அழைப்பிதழ், திருமணத்துக்கு அல்ல, அதற்கு முந்தைய விருந்துக்கு. நடுநகரில் ஐந்து நட்சத்திர ஹெர்மிடேஜ் ஹோடலில். இதுவே இப்படியென்றால் நிஜமான திருமண வைபவம் எவ்வளவு ஆடம்பரத்துடன் இருக்கும்?
க்ளோரி குப்தா கேள்விப்பட்ட பெயராக இல்லை.
“விஷ் வைத்யானு யாரையாவது நமக்குத் தெரியுமா?”
சரவணப்ரியா அழைப்பிதழை வாங்கிப் பார்த்தாள். அவளுடைய நினைவுத்திறன் அதிகம்.
“இது விஷாந்த். வீணை வைத்தியநாதரின் பையன்.”
அவள் சொன்னதும் சாமிக்கு ஞாபகம் வந்தது. அவர் குடும்பத்துடன் நெருங்கிய பழக்கம் என்று சொல்வதற்கு இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவரையும் அவர் மனைவி அபிராமியையும் ராலே கோவிலில் எப்போதாவது பார்த்துப் பேசியது உண்டு. ஓர் எதேச்சையான சந்திப்பு நெடுஞ்சாலையை ஒட்டிய மலிவு விடுதியில். அதையெல்லாம் ஞாபகம் வைத்து மனிதர் பத்திரிகை அனுப்பியிருக்கிறார். கட்டாயம் போக வேண்டியதுதான்.
உறையில் ஸ்டாம்ஃபோர்ட், கன்னெக்டிகட்டின் முத்திரை. தற்போது அங்கே வசிப்பார்களாக இருக்கும்.
“ஏன் நாஷ்வில்லில் வந்து கொண்டாடணும்?”
“ஆயிரக்கணக்கில பணம் செலவழிச்சிண்டு நிஷாந்த் நியுஸிலன்ட்ல டெஸ்டினேஷன் வெட்டிங் வச்சிண்ட மாதிரி… விஷாந்த் டெஸ்டினேஷன் ப்ரீ-வெட்டிங் பார்ட்டி வச்சிண்டிருக்கான், நம்ம ஊர்ல.”
“சரி, போய் தலைகாட்டிட்டு வந்துடுவோம்.”
“வெறும் விருந்து தான். என்ன பரிசு எடுத்துட்டுப்போறது என்கிற சங்கடம் இல்லை.”
விஷாந்த்தை சாமி கடைசியாகப் பார்த்தபோது அவன் ஒன்பது வயதுச் சிறுவன்.
நெடுஞ்சாலையில் அரை மணிக்கு எந்த விடுதியும் கண்ணில் படவில்லை. சாமிக்கு அசதி. சூரனும் அம்மா மடியில் தலை சாய்த்துத் தூங்கிவிட்டான். தொலைவில் ‘ஃபோர் லீஃப் இன்’ கண்ணில் பட்டதும் சாலையில் இருந்து சாமி வெளியேறினான். நெருங்கிப் பார்த்தபோது நான்கு இலைகள் வரவேற்புத் தருவதாக இல்லை. பழைய மூன்று மாடிக் கட்டடம். ‘இன்’னில் ஒரு ‘என்’ காணவில்லை.
“படேல் மொடேல் மாதிரி இல்ல?”
“என்ன, ஒரு ராத்ரி தானே. காலையில எழுந்ததும் கிளம்பிடுவோம்.”
சாமிக்கும் இருட்டில் இன்னொரு விடுதி தேடி அலைவதில் விருப்பம் இல்லை.
சிறிதானாலும் அறை சுத்தமாக இருந்தது. தூக்கத்தை வரவழைக்கும் குளிர்சாதனத்தின் காற்று. தொலைக்காட்சி, மேஜை நாற்காலிகள் பழம்பழசு. அவற்றைப் பயன்படுத்துவதாக இல்லை. குளியலறையின் மூன்று விளக்குகளில் ஒன்றுதான் எரிந்தது.
அறுபது டாலருக்கு அதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்?
கையுடன் எடுத்து வந்திருந்த போர்வைகளில் ஒன்றை சரவணப்ரியா படுக்கைமேல் பரக்க விரித்தாள். இன்னொன்று மூவரும் போர்த்திக் கொள்ள. நிம்மதியான உறக்கம்.
மறுநாள்.
அறைக்குப் பதிவு செய்தபோது இலவசக் காலைச் சாப்பாடு என்று மேனேஜர் பெருமையுடன் சொல்லியிருந்தான். முதலில் எழுந்த சாமி நுழைவிடத்தை அடுத்த கூடத்தில் உணவு வரிசையைப் பார்வையிட்டான். அதிகம் எதிர்பார்க்காத அவனுக்கு அது ஏமாற்றம் தரவில்லை.
முந்தைய தினம் ‘க்ரிஸ்ப்பி க்ரீம்’ கடையில் விற்காமல் போன டோநட் வகைகள். பார்க்க சுமாரான டேனிஷ் இனிப்புகள். நீர்த்த காப்பி. அதை வெளுப்பாக்க செயற்கைப் பால்பொடி. ஆரஞ்சு ரசம் பரவாயில்லை.
ஓரத்தில் நின்றிருந்த இளம் இந்திய மங்கை, மேனேஜரின் மனைவியாக இருக்க வேண்டும்.
“வெரி குட் ஜூஸ்!” என்று அவளிடம் சொன்னான்.
அதைக் கோப்பையில் நிரப்பித் திரும்பியபோது, சதுர மேஜையில் எதிரும் புதிருமாக அந்த சாப்பாட்டையும் ரசித்த ஒரு தந்தையும் அவர் மகனும்.
“என்ன ஆச்சரியம்! உக்காருங்கோ!”
வீணை வைத்தியநாதன் உபசாரம் செய்தார்.
அதைச் செய்து அவர்களுக்காக பழரசத்தை அனுபவித்துக் குடித்தான்.
“எங்கே இப்படி?” என்றார்.
“பிட்ஸ்பர்க்கை சுற்றிப்பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிப் போறோம்.”
“நாங்க பெருமாளை தரிசிக்கப் போகிறோம்.”
அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவருடன் மேலே என்ன பேசுவது?
விஷாந்த் உதவிக்கு வந்தான்.
“அப்பா! ஹொடேல் மேனேஜருக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும்?”
புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் பிரகாசமான கண்களில்.
“நான் என்னத்தைக் கண்டேன்? மாமா ரொம்ப வருஷமா அமெரிக்கால இருக்கார். அவருக்கு தெரிஞ்சிருக்கும்.”
விடுதி படேல் மோடெல் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால்,
“மேனேஜர் கட்டடத்தின் சொந்தக்காரனாகவும் இருக்கலாம்.”
“அப்போ…”
“அவன் வருமானத்தை கணக்குப் போட்டுப் பார்க்கலாம்.”
“நமக்கு வேண்டிய எல்லா எண்களும் சரியாகத் தெரியாதே.”
“அவசியம் இல்லை. தோராயமான விடையே பெரும்பாலும் நாம் தேடும் பதிலைக் கொடுக்கும்.”
வைத்தியநாதன் அலுவலம் சென்று ஒரு காகிதமும் பென்சிலும் கொண்டுவந்து பையன் முன்னால் வைத்துவிட்டு அவர்கள் எண்களுடன் உறவாடுவதை வேடிக்கை பார்த்தார்.
“ஒரு தளத்தில் எத்தனை அறைகள்?”
“எங்கள் அறை கோடியில். அது நூற்றிமுப்பத்தியாறு.”
“மூன்று மாடிகள். முதல்தளத்தின் சில அறைகள் விடுதியின் உபயோகத்துக்கு. அதனால், மொத்தம் நூறு அறைகள் என வைத்துக்கொள்வோம். ஒரு அறைக்கு கணக்கிட்டு நூறால் பெருக்கிவிடலாம். அறையின் வாடகை…”
“ஒரு இரவுக்கு அறுபது டாலர்.”
அப்பா கொடுத்ததை பையன் கவனித்திருக்கிறான்.
“பாதி நேரம் தங்குவதற்கு வேறு யாராவது இங்கே அனுப்பி வைப்பார்கள். அவர்களுக்கு பத்துசதம் கமிஷன்.”
“சரி, சராசரியாக ஐம்பத்தியேழு.”
“பொதுவாக, மாதத்தில் பதினாறு நாள் அறை நிரம்பியிருக்கும் என எதிர்பார்க்கலாம். வெள்ளி, சனி, ஞாயிறு இரவுகள், அப்புறம் வாரத்தின் நடுவில் ஒரு நாள்.”
கட்டடத்தின் பேரில் வாங்கிய கடனுக்கு வட்டி, சொத்துக்கான வரி, இடத்தைச் சீராக வைத்துக் கொள்ளும் செலவுகள், மின்சாரம், தண்ணீர், சலவை சாமான்கள், சுத்தம் செய்யும் ஆட்களின் சம்பளம், (சுமாரான) காலை உணவு…
சாமி சொல்லச்சொல்ல விஷாந்த் எண்களை எழுதிக் கூட்டிக் கழித்து…
“நிகர லாபம் நாற்பது டாலரும் சில்லறையும்.”
“கட்டடம் மொத்தத்துக்கும் மாத வருமானம் ஏறக்குறைய நாலாயிரம் டாலர். அதற்கு மிஸ்டர் படேலும் அவன் மனைவியும் வாரத்துக்கு ஏழுநாள், ஒருநாளைக்கு பத்து மணி உழைக்க வேண்டி இருக்கும்.”
“உழைச்சுத்தான் பணம் சம்பாதிக்கணும், அப்பத்தான் அது ஜீரணம் ஆகும்” என்ற தந்தையின் சமயோஜித அறிவுரை.
அத்துடன் கணக்கு முடியவில்லை.
“குடும்பம் நடத்த அவர்களுக்கு அது போதுமா? இரண்டு சின்னக் குழந்தைகள். சாப்பாடு, கார்…” என்ற கவலை விஷாந்த்துக்கு.
“ராலே, பிட்ஸ்பர்க் மாதிரி பெரிய நகரத்தில் சந்தேகம். வெஸ்ட் வர்ஜினியாவின் இந்த சின்ன ஊருக்கு போதும்.”
பையன் இன்னொரு டோநட் எடுத்துவரப் போனான்.
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருக்கும். எல்லாருடைய வீட்டிலும் டிவிக்கு கேபிள் இருக்கு, நாமும் வச்சுண்டா என்னன்னு கேட்டான். நமக்கு கட்டுப்படியாகாதுன்னு சொல்றதுக்குப் பதிலா அவனையே வீட்டுக் கணக்கு போடச் சொன்னேன். நான் வீணை சொல்லித்தரேன், அவ பாட்டு க்ளாஸ் நடத்தறா. அதில வரும்படி இவ்வளவு. வீட்டு வாடகை, எலெக்ட்ரிக் பில், சாப்பாட்டுச் செலவு… எல்லாம் கணக்குப்போட்டு கடைசியில அறுபது டாலர்தான் மிச்சம்னு கண்டுபிடிச்சான். அதில ஐம்பது டாலரைத் தூக்கி கேபிளுக்கு கொடுக்கறது அனாவசியம்னு அவனுக்கே தோணிடுத்து.”
“நீங்க செஞ்சது புத்திசாலித்தனமான காரியம். முடியாதுடான்னு ஆரம்பத்திலயே பட்னு சொல்லியிருந்தா அவனுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.”
“அதுலேர்ந்து அவன் படிக்கிற ஸ்கூல் டீச்சரின் மாத சம்பளம் எவ்வளவு, சூபர் மார்க்கெட்ல வேலை செய்யறவளோட மணிக்கணக்கு வருமானம் எவ்வளவு, அது அவா ஜீவனம் பண்ணறதுக்குப் போருமா. இப்படி கேக்க ஆரம்பிச்சிருக்கான். அந்த பழக்கத்தில இங்கேயும்…”
மற்றவர்கள் நிலையில் தன்னை வைத்து அவர்கள் கஷ்டங்களையும் யோசிக்கும் குழுந்தைப் பருவத்தின் இரக்க சிந்தனை! சாமியின் மனம் நெகிழ்ந்தது. நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
“பையனுக்கு என்ன தயாள குணம்! ஆத்துக்குப் போனதும் சுத்திப் போடுங்கோ!”
காரை ஹெர்மிடேஜ் ஹோடலின் முகப்பில் நிறுத்தியதும் ஒரு இளவல் பாய்ந்து வந்தான். சாமியையும் சரவணப்ரியாவையும் இறக்கினான். எண் பொறித்த வெள்ளி டாலர் ஒன்றைக் கையில் திணித்துவிட்டு காரை வேகமாக ஓட்டிச்சென்றான்.
நுழைவிடத்தைத் தாண்டியதும் வலப்பக்கம் ஆடம்பர அலங்காரக் கூடம். மேடையில் இசைக்குழு. நாஷ்வில்லில் சங்கீதத்துக்கு என்ன பஞ்சம்?
வைத்தியநாதனைத் தவிர வேறு தெரிந்த முகம் தெரிகிறதா என்று சாமி தேடுவதற்குள்…
மணமகனே ஓடிவந்தான், அலங்கார குர்தா சட்டையில். சாமியின் நினைவில் நின்ற சிறுவனைப்போல எல்லாப் பக்கங்களிலும் அலட்சியமாகத் தொங்கிய தலைமயிர். சிநேக பாவத்தைக் கொடுத்தது.
“வாங்கோ! வாங்கோ! ஹாப்பி டு ஸீ யூ!”
“யூ லுக் க்ரேட்! விஷ்!” என்றாள் சரவணப்ரியா.
“தாங்க்ஸ், ஆன்ட்டி! நீங்க ரெண்டுபேரும் பிரமாதம்.”
“உனக்காக நான் முழுக்கை சட்டையின் கையை மடிக்காமல் வந்து இருக்கிறேன்.”
“சாமிக்கு ‘ட்டை’ கட்டிக்கறதே மறந்துவிட்டது.”
“நீங்க வந்ததே போதும். சூரன் எப்படி இருக்கிறான்?”
“நல்லபடியாக.”
“குடிக்க…”
அவன் காட்டிய திசையில் பான வகைகளை கேட்போருக்கெல்லாம் கலந்து வழங்கிய பரிசாரகன்.
“ஆரஞ்சு ஜுஸ்…”
“ஆர் யூ ஷுர்?”
அப்போதே பிழிந்து ஒரேயொரு பனிக்கட்டி மிதக்கவிட்ட ரசம். சரவணப்ரியாவுக்கும் சாமிக்கும் இரண்டு உயரமான தம்ளர்களை விஷ் வாங்கிவந்தான்.
அவள் பெண்கள் பக்கம் போக, அவன் வைத்தியநாதனைக் கண்களால் தேடினான்.
“அப்பாவை பார்ப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒரு சின்ன விஷயம்…”
“என்ன, சொல்!”
இசையின் ஒலி (ஓசை?)யில் இருந்து விலகி ஒரு மூலையின் வட்ட மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். ஆரஞ்சு ரசத்தைச் சுவைத்தபோது சாமிக்கு படேல் மொடேலின் சாதா ஜூஸ் நினைவுக்கு வந்தது.
“ப்ளாக்வெல் ஃபார்மாவின் என்.ஓ.ஈ.டி.-8 (நைட்ரிக் ஆக்ஸைட் என்ஹான்ஸிங் ட்ரக், அடையாள எண் எட்டு) பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
அந்த இடத்துக்குப் பொருந்தாத கேள்வி. அதை நியாயப்படுத்த அவன், “எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் உண்டு. யூ.எஸ்.ஸில் மூன்று பேரில் ஒருவருக்கு மிகையான இரத்த அழுத்தம். அழுத்தத்தை மட்டுப்படுத்தும் மருந்தை பலர் தவறாமல் சாப்பிடுவது இல்லை. என் அப்பாவைப் போல சில பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைக் கலந்து தரவேண்டி இருக்கிறது. புதிய மருந்து கண்டுபிடிப்பது மிக அவசியம்.”
எந்த உடற்குறையை எடுத்துக்கொண்டாலும் யூ.எஸ். மருத்துவர்கள் வழக்கமாகப் பாடும் பல்லவி. மருத்துவம் இல்லை ஃபார்மா படித்தவனோ?
“அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க என்.ஓ.ஈ.டி.-8 பயன்படுமா?”
நீண்ட யோசனைக்குப்பின் சாமி,
“சுண்டெலிகளின் இரத்த அழுத்தத்தை செயற்கையாக உயர்த்தி, என்.ஓ.ஈ.டி.-8 கொடுத்ததும் அழுத்தம் சிறிது குறைந்ததால் ஃஎப்.டி.ஏ.யின் அனுமதியுடன் முதல்கட்ட மருத்துவ சோதனைகள் நடந்தன.”
“பத்து மாதங்களுக்கு முன்னால்.”
“கரெக்ட். அவற்றில் நம்பிக்கை தரும் முடிவுகள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அந்த மருந்துக்கு பெரிய அளவில் நீண்டகால சோதனை. அது தனியார் (ப்ளாக்வெல் ஃபார்மா) நிறுவனத்தின் நிதியுதவில் செய்யப்படுகிறது. அதனால், சோதனைகள் முழுக்க முடிந்த பிறகுதான் முடிவுகள் வெளியிடப்படும். அவற்றைப் பார்த்துவிட்டு உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.”
“உங்கள் எண்ணத்தில்…”
சிறு தயக்கத்துக்குப்பிறகு, அடங்கிய குரலில்,
“இரண்டாம் கட்டத்தில் எதிர்பார்த்த பலன் இராது, இது என் சொந்த அபிப்ராயம்.”
“ஏன்?”
“எல்லா பூச்சி வகைகளையும் ஒரே சமயத்தில் சாக அடிக்கும் டி.டி.டி. போன்ற சக்தி வாய்ந்த கொல்லிகளுக்குத் தீய விளைவுகள் அதிகம். மலேரியாவைத் தடுக்கக் கொசுவின் ஃபெரோமோன் அடிப்படையில் தயாரித்த வேதிப் பொருளால் அதை கட்டுக்குள் வைப்பதுதான் சிறந்த வழி. உடலில் பல மாற்றங்களுக்குக் காரணமான நைட்ரிக் ஆக்ஸைடை அதிகப்படுத்துவது நீண்ட காலப் பயன் தராது, எதிர்பாராத விளைவுகளையும் உண்டாக்கும். மிகையான இரத்த அழுத்தத்தைக் குறைக்க அதற்கென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட…”
“அதாவது… உங்களையும் சேர்த்து ஏகப்பட்ட மருத்துவர்கள் எழுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் விவரித்தது போல…”
“உனக்கு இதைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறதே.”
“தாங்க்ஸ். அதில் குறிப்பிடப்பட்ட மருந்து தற்போது எந்த அளவில்…”
“உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்ற கட்டத்தைத் தாண்டியாகிவிட்டது. விரைவில் அதிக இரத்த அழுத்தமுள்ளவர்களுக்கு சோதனைமுறையில் அதைக் கொடுத்து அவர்களின் முன்னேற்றம் கணிக்கப்படும்.”
“தாங்க்ஸ், டாக்டர்! உங்களைத் தனிப்பட்ட முறையில் கவனிக்க, இதோ என் அப்பா.”
பட்டு வேஷ்டியும், பட்டுச் சட்டையும் பளபளக்க… கையில் ஒரு ஒயின் கோப்பையுடன்…
விஷ் வைத்யாவையும் ப்ளாக்வெல்லையும் சாமி கிட்டத்தட்ட மறந்து போனபோது தபாலில் வந்த நிஜமான திருமண அழைப்பிதழ். அத்துடன் அழைப்பை ஏற்கவும் மறுக்கவும் இரண்டு குட்டி அட்டைகள். கடைசியில் ஒரு வெள்ளைக் காகிதம். காகிதத்தில் இருவருக்கான பயணநிரல். வணிக வகுப்பில் நாஷ்வில்லில் இருந்து ஸ்டாம்ஃபோர்ட், கன்னெக்டிகட் போய்வர. ஒரு சொகுசு ஊர்திக்கு நான்கு நாள் வாடகை. திருமணம் நடக்கப்போகும் உயர்மட்ட விடுதியில் தங்குவதற்கு மூன்று இரவுகள். கடைசியில் அந்த நாள்களுக்கான சாப்பாடும் பானங்களும். எல்லா செலவுகளும் மணமக்கள் கணக்கில்.
காகிதத்தின் விவரங்களையும் கன்னெக்டிகட்டில் இருந்து நாஷ்வில்லுக்கு வந்து மணவிருந்து கொண்டாடியதையும் சாமி சேர்த்துப் பார்த்தான். ஏதோ ஒளிந்திருக்கிறது.
வலைத்தளத்தில் தேடினான்.
விஷ் வைத்யா மற்றும் ப்ளாக்வெல் ஃபார்மா. கடந்த மூன்று மாத காலத்தில்.
அவன் ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ என்கிற நிதி நிறுவனத்தில் பணத்தை வளர்ப்பவன் என்பது தெரியவந்தது.
மண விருந்துக்கு அடுத்த இரண்டு வாரங்களில் காதும் காதும் வைத்தாற்போல் தன்னிடம் இருந்த ப்ளாக்வெல் ஃபார்மாவின் எல்லா பங்குகளையும் ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ உயர்விலைக்கு விற்றுவிட்டது. அவை என்.ஓ.ஈ.டி.-8-இன் முதல் கட்ட சோதனைகள் நடந்தபோது குறைந்த விலைக்கு வாங்கியவை. அதனால் அந்த நிறுவனத்துக்கு இருநூற்றியைம்பது மில்லியன் டாலர் வருமானம். விற்பனைக்கு முக்கிய காரணமாக இருந்த விஷ் வைத்யாவுக்கு போனஸ், மில்லியன் டாலர் கணக்கில், கிடைத்திருக்கும். எல்லாம் ஓய்ந்த பிறகு இரண்டாம் கட்ட சோதனைகளின் ஏமாற்றமான முடிவுகளும், ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ பங்குகளை பெரும் அளவில் விற்றுவிட்ட தகவலும் சந்தையில் வேகமாகப்பரவ, ப்ளாக்வெல் பங்குகளின் மதிப்பு நாற்பது சதவீதம் சரிந்தது. சரிவு நிகழ்வதற்கு முன்பே அதை எதிர்பார்த்துப் பங்குகளை விற்க வேண்டும் என விஷுக்கு எப்படித் தெரிந்தது? “எல்லாம் ஓர் அதிருஷ்ட ஊகம்.”
அதையொட்டி இன்னொரு தகவல்…
பீட்மான்ட் பென்ஷன் ஃபன்ட் உள்பட ஆறு ஓய்வுக்கால நிதி அமைப்புகள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தை ப்ளாக்வெல் ஃபார்மா விற்பனைக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன், அந்த நிறுவனத்தில் பத்து சதம் ஈடுபடுத்தியிருந்தன. அவற்றுக்கு ஒரு பில்லியன் டாலர் இழப்பு.
முன்பின் தெரியாத, ஓர் இரவு மட்டும் தங்கிய விடுதியை நடத்தியவரின் நிதி நிலமையில் அக்கறை காட்டிய ஒன்பது வயதுப் பையன், ஒருகாலத்தில்… தன் போனஸ் பணம் யாருடைய வயிற்றில் அடித்ததால் வந்தது என்று கவலைப்படாத முப்பத்தி மூன்று வயது மாப்பிள்ளை.
திருமணத்துக்கு வர இயலாது என்பதை அறிவிக்கும் அட்டை சாமியின் கையில்.