மகரந்தம்

புகழ் மறுக்கப்பட்ட கடவுள்

நான் அந்தக் கிளையின் கடன் துறை அதிகாரியாக வந்து சேர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். வங்கியின் இரு விழிகளான சேமிப்பும், கடன் வழங்கலும் அவரைப் பெரும்பாலும் சார்ந்திருந்தன. பல ‘அஸோஸியேட்’ மற்றும் ‘அலைய்ட்’ நிறுவனங்கள் அவர் பெயரில் இருந்ததால் வங்கி நிர்ணயித்த கடன் வரம்பினை மீறி அவர் கடன் பெற்று வருகிறார் என என் சிந்தனை சென்றது. அது ஓர் இடியாப்பச் சிக்கல். பல கோப்புகளைப் படித்துத்தான் அந்த உள் ஊகத்தை நான் உறுதி செய்ய முடியும். ஆனால், ப்யூன் பழைய கோப்புகளை எனக்காக ஆவணக் காப்பிலிருந்து எடுத்துக் கொண்டுதர மறுத்தார் – காரணம் அவர் ஒரு  குறிப்பிட்ட அதிகாரியின் ஆணையை மட்டும்தான் ஏற்பாராம். அப்படி ஒரு செயல்முறை அங்கிருந்ததா எனப் பார்க்கையில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, என் தோற்றமோ, வேறு ஏதாவதோ அவருக்கு ஒவ்வவில்லை எனத் தெரிய வந்தது. இந்தப் ப்யூன் அந்த வாடிக்கையாளரின் கையாள் அல்லர் எனவும் சொல்லிவிடுகிறேன். இருபது, முப்பது பேர் பணியாற்றும் கிளைக்குள்ளே வேண்டுதல், வேண்டாமை இருந்தால், நோபல் பரிசுக் கமிட்டியில் வெள்ளையர் பெரும்பாலும் வெற்றியடையக் கேட்பானேன்?

2012-ல் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சோதனையில் கண்டறிப்பட்ட ஹிக்ஸ்-போசான் துகளுக்குக் ‘கடவுள்-துகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹிக்ஸ் என்பது பீடர் ஹிக்ஸ் என்பவரையும், போசான் என்பது நமது சத்யேந்த்ர நாத் போஸையும் குறிக்கும். போசான்களைப் பற்றி மிகத் தெளிவாக மிகவும் முன்னதாக ஆய்வு செய்து அடிப்படைகளை அமைத்தவரின் பெயர் பின்னர் வருகிறது – மேலும் குவாண்டம் துறையில் நடைபெற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசுகள் பலருக்குக் கிடைத்துள்ளன -ஆனால், இவருக்குக் கிடைக்கவில்லை. ஜெயந்த் நர்லிகர் சொல்கிறார் “இருபதாம் நூற்றாண்டின் பத்து மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் போஸின் துகள் புள்ளியியல்  ஒன்று. அது ஃபோடான்களின் செயல்பாட்டு முறையை விளக்கியது; அதுதான் மிகச் சிறு அமைப்பியலில் குவாண்டம் கோட்பாடுகளின் கட்டளைகள் செயல்படும் விதத்தை புள்ளியியல் மூலம் அறிய உதவியது.”

01/01/1894-ல் வங்கத்தில் பிறந்த போஸுக்கு ஆறு சகோதரிகள். கணித இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலையில் இவருடன் ஜகதீஷ் சந்த்ர போஸ், ப்ரஃபுல்ல சந்த ராய், மேக்னாத் சாஹா பிரஸிடென்சி கல்லூரியிலும், கல்கத்தா பல்கலையிலும்  படித்தவர்கள். இன்று வரை படிப்பில் முதன்மையாக இவர் செய்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லையாம்!

தனது இருபதாம் வயதில் உஷா தேவியை மணந்தார். கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் இயற்பியல் கற்பித்தார். சாஹாவும் இவரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பு மற்றும் சிறப்புச் சார்பு கோட்பாடுகளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள். அதற்காகவே ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொண்டவர்கள். போஸ் ஆறு மொழிகள் அறிந்திருந்தார் – வங்கம், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச். ஆனால், பள்ளிக் கல்வி வரையாவது அவரவர் தாய்மொழியில் பயில வேண்டும் என்றும், அதுதான் சரியான அடித்தளம் என்றும் சொன்னார். கடினமான கோட்பாடுகளையும் கூட அவர் கல்லூரி நிலை மாணவர்களுக்கு வங்க மொழியிலும் போதித்தார். அதற்கு எதிர்ப்பும், கேலியும் இருந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவரது ஜப்பானியப் பயணங்களின் போது அங்கே உயர் கல்வியும்கூட அவர்கள் மொழியிலேயே சொல்லித்தரப்பட்டு, அவர்கள் அறிவில் சிறந்து விளங்குவதைப் பார்த்த அவர், தன் எண்ணம் சரியெனக் கண்டு கொண்டார். கல்கத்தா பல்கலையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1921-ல் வெறும் 160 ஆக இருந்த முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 1941-ல் 600 ஆக உயர்ந்தது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார். நூலகங்களையும், சோதனைக் கூடங்களையும் திறமை மிக்க களங்களாக உருவாக்கினார்; அவைகளை மேம்படுத்திக்கொண்டே இருந்தார்.

ப்ளேங்கின் குவாண்டம் கதிரியக்கக் கோட்பாடு தவறென்று நிரூபித்தார். ஒரு கறுப்பு இந்தியனின் கூற்றாக அது நிராகரிக்கப்பட்டது;பின்னர், ஐன்ஸ்டைன் அதை ஏற்றுச் சிபாரிசு செய்ததன் பேரில் புகழ் பெற்ற  போஸ் – ஐன்ஸ்டைன் செறிபொருள் புள்ளியியல் (condensate) zeitschriftfur Physik  என்ற அகில உலக அறிவியல் இதழில் வெளியாகி ஏற்கப்பட்டது. ஐன்ஸ்டைன் இந்தக் கோட்பாடை விரித்து அணுக்களின் ஆய்வில் பயன்படுத்தினார்.

1921 முதல் டாக்கா பல்கலையில் பணியாற்றிய நிலையில் ஊடு கதிர் மற்றும் படிகங்கள் பற்றி மேற் கொண்டு ஆய்வினை ஐரோப்பாவில் தொடர அவருக்கு இரு ஆண்டுகள் விடுமுறை அளிக்கப்பட்டது. டாக்டரேட் பெறத் தேவையான கால அவகாசம் கிட்டாவிட்டாலும், ஐன்ஸ்டைன் அளித்த சான்றிதழால் அவர் டாக்கா இயற்பியல் துறையில் மீண்டும் தலைமைப் பேராசிரியர் ஆனார். தத்துவம், சங்கீதம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

டாக்காவிலிருந்து கல்கத்தாவிற்கு 1945-ல் வந்தார். 1950-ல் ஒருமித்த புலங்களின் தேற்றத்தை வெளியிட்டார். 1954-ல் இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. 1959-ல் அரசு அவரை தேசீயப் பேராசிரியராக நியமித்து அறிவியல் வளர்ச்சிக்குப் பெரிய வித்திட்டது. பதினைந்து ஆண்டு காலம் அவர் அறிவியல் வேட்கை, அதற்கான களன், வாய்ப்புகள், கருத்தரங்கங்கள், கூடுகைகள் என ஏற்படுத்தி அயராது உழைத்தார். இந்திய இயற்பியலாளர்கள் குழுவின் தலைவர், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். 1958-ல் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி அவருக்குத் தாமதமாகக் கிடைத்த கௌரவம்.

கல்கத்தாவில் ‘Bangiya Binjan Parsishad’  என்ற அறிவியல் இதழை 1948-ல் தொடங்கினார். அறிவும் அறிவியலும் எனப் பெயரிடப்பட்ட மாத இதழ் சாதாரண மனிதர்களையும் தன்பால் ஈர்த்தது. ஒரு சுவையான நிகழ்ச்சி; மேடம் க்யூரியின் அறிவியல் கூடத்தில் இணைந்து பணியாற்ற அவர் அணுகியபோது (தகுந்த பரிந்துரையுடன்தான்) ஃப்ரெஞ்ச் கற்றுப் பின்னர் வருமாறு சொல்லிவிட்டார் க்யூரி. இவருக்கு அப்போதே தெரிந்திருந்த மொழிதான் அது. எனினும் இவர் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் அந்தக் கூடத்தில் இரண்டு ஆண்டுகள் பணி செய்தபோதும் அவர் க்யூரியைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

மீன்டும் போசான்களிடத்தில் வருவோம். ஒரு துகளின் இரண்டு வகுப்புகளில் ஒன்று போசான், மற்றொன்று ஃபெர்மியான். போசான்கள் ஒரே குவாண்டம் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட துகள்கள் இருக்கலாம் என்ற பண்பு வகையைச் சேர்ந்தவை. நீலம், சிவப்பு போன்ற நன்கு அறியப்படும் ஒளியலைகளைக் குறிக்கும் ஒளியன்கள் போசான் வகையாகும். இவை ஆற்றலின் திரட்சி. ஃபெர்மியான் அப்படியன்று; அதில் இருப்பது ஒரே துகள். ஆய்வுகள் இன்றளவும் தொடர்கின்றன.

பழகுவதற்கு எளிமையானவர், மாற்றுக் கருத்துகளையும் ஆணவமின்றிச் சொன்னவர், நோபல் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு ”எனக்குப் பல அங்கீகாரங்களும், பரிசுகளும் கிடைத்துள்ளன – அதுவே மனநிறைவு” என்று சொன்னவர், பல ஆய்வுகளை ஊக்குவித்தவர், பன்மொழிகள் தெரிந்தவர், 01/01/1894-ல் பிறந்த அவர் 04/02/1974-ல் இறந்தார். போஸ்கள் பிறந்து கொண்டு இருப்பார்கள்; இந்தியாவின் புகழை நிறுவிக்கொண்டும் இருப்பார்கள்.

வெற்றி என்பது பார்க்கும் கோணத்தையும் சார்ந்தது; நோபல் பரிசு மட்டுமே அளவுகோல் என்றால் ”புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” என்ற சந்திரபாபு நினைவுக்கு வருகிறார் அல்லவா?

***

பூஜ்ஜியத்துக்குள்ளிருந்து. . . . . .

உலகம் பிறந்தது எனக்காக; உலகில் நான் பிறந்தது அதன் முன்னேற்றத்திற்காக; உலகை அறிந்தோர் யாருமில்லை; அதை உணராதோர் எவருமில்லை. நான் இருக்கிறேன், அதனால் உலகம் உள்ளது; உலகம் உள்ளதால்தான் என் இருப்பு உணரப்படுகிறது. எத்தனையோ வாதப் பிரதிவாதங்கள்.

நம் தசாவதாரங்கள்- மச்ச, கூர்ம முதலானவைகள்,  பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதாகச் சொல்பவர்கள் உள்ளனர். அது நம்பிக்கையே தவிர நிரூபணங்கள் அற்றது எனச் சொல்வோர் இருக்கிறார்கள். பிறப்பும்,  இறப்பும் அற்றது ஒன்று-அதன் பெயர் ப்ரும்மம், அது அலகிலா விளையாட்டுடையது என்பது சிலர் கருத்து.  மாணிக்க வாசகர், “புல் ஆகி,  பூடாய், புழுவாய்,  மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய்,  மனிதராய், பேயாய்,  கணங்களாய்,  வல் அசுரர் ஆகி, முனிவராய்,  தேவராய்,  செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,” என்று பட்டியல் போடுகிறார்.

மெய்ஞானியோ, விஞ்ஞானியோ அவர்கள் இந்த அகிலம் எப்படித்தான் வந்திருக்கும்,  இதில் உயிர்கள் எப்படித் தோன்றியது  என்று வியக்கிறார்கள். நாம் விண்மீன்களையும்,  நக்ஷத்ரக் கூட்டங்களையும்,  கிரகங்களையும் பார்த்து இவை எப்படி நிலை பெறுகின்றன,  அவை ஓர் இடத்தில் தோன்றுவதற்கான காரணங்கள் தான் என்ன, அவைகளுக்கிடையேயான வெளியின் மர்மமென்ன என அதிசயப்படுகிறோம். வெளியின் வெற்றிடம் என்பது எதனால்தான் ஏற்பட்டிருக்கக்கூடும்?

சூன்யத்திலிருந்து இந்த அகிலக் கட்டுமானம் முதலாக உருவாகி வந்திருக்கும் என்று ‘வெரிடாசிய உரைகள்’ சொல்கின்றன; ஆனால்,  ஒன்றுமில்லை என்பது இல்லை என மேலும் சொல்லி அவை தெளிவாகக் குழுப்புகின்றன. ’பெரு வெடிப்பு’ பற்றி நாம் புரிந்து வைத்துள்ளது என்னவென்றால் ஒரு சிறு புள்ளியிலிருந்து சமமான முறையில் உலகம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதுதான்-ஆனால்,  அது அப்படியல்ல ; ஒரு நொடியின் சில கூற்றுக்குள் சீராகத் தொடங்கி 10^26 மடங்கு அகிலம்பெருகியது, அதுவும் சிறு கால அவகாசத்தில். அதை ‘வீக்கம்’ என்கிறார்கள். டெரிக் முல்லர் சொல்கிறார்-எப்படி வகைதொகையில்லாமல் திடீரெனத் தொடங்கியதோ அப்படியேதான் இந்த விரியும் வேகம் மட்டுப்பட்டதும் நடந்தது.

பின்னர் ஐந்து முதல் ஆறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ‘கரும் சக்தி’ இடைபுகுந்து அகிலத்தின் வளர்ச்சியை இன்று நாம் காணும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

இதற்கும் ‘விண்மீன் திரள்களுக்கும்’ என்ன சம்பந்தம்?இதற்கான விடை’ஒன்றுமில்லாததில்’ இருக்கிறது!

நம்மைச் சுற்றி இருப்பவைகளெல்லாம் அணுக்களால் ஆனவை என்று நினைக்கிறோம். இயற்பியல் (ஃபீல்ட் தேற்றங்கள்’) புலக்கோட்பாடு என்ற ஒன்றைச் சொல்கிறது. அவைதான் இன்றைய ‘குவாண்டத்தின்’ மிகக் கொண்டாடப்படும் துறை.  ‘தூண்டப்பட்ட புலன்கள்  ‘துகள்கள்’ எனப்படுகின்றன,’ என்கிறார் முல்லர். ஒவ்வொரு துணை அணுத் துகளும் வெளியின் இடைவெளிகளில்      (‘ந்யூட்ரினோ ஃபீல்ட்) ‘நுண்நொதுமிப் புலன், ’ ‘குவார்க் ஃபீல்ட்’  போன்றவற்றால் சூழப்பட்டுள்ளன.  ‘சக்திச் சிதறலோ,  தூண்டுதலோ’ஏற்படுகையில் அவை துகள்களாய்த் தென்படுகின்றன என்கிறார் அவர்.

இந்த ‘அனிமேஷனில்’ இதைப் பாருங்கள்-துணை அணுத்துகளின் புலன், அதில் குமிழ்கள் எனச் செல்லும் சக்தி, ஃபீல்ட் அதனால் எழும்புதல், தட்டையான புலன் வெறும் வெளியெனத் தெரிதல் ஆகியவை புலனாகிறதா?

ஆகவே வெளியின் வெற்றிடம் என்பது காலியாக இல்லை; அது தூண்டப்படாத துணை அணுத்துகள்களால் அமையப் பெற்றுள்ளது. ஆனால்,  உண்மையில்  மிகத்தட்டையாக,  சக்தியே இல்லாமல் அந்தத் துணை அணுத்துகள்கள் இருப்பது இயலாது.

அகிலம் விரிவடைய விரிவடைய,  இந்த ‘அலைபாயல்கள்’ ஊதிப் பெரிதாகி, பொருள்களின் பரவல்களில் மிகப் பெரிய ராக்ஷசக் காற்று மேகங்களாகி,  இணைந்து விண்மீன்களாய் கிரகங்களாய்,  ‘கேலக்ஸி’களாய்,  பூமியாய்,  நாமாய் வந்திருக்கிறது.

‘பெரு வெடிப்பு’ விட்டுச் சென்ற கதிரியக்கங்களில் இன்றும் கூட இந்தச் சிறு குவாண்டம் அலைபாயல்களின் சுவடுகளைக் காண முடிகிறது என்பதும் ஒரு விந்தை. வெளியின் வெற்றிடத்தில் நிகழும் இந்த அலைபாயல்கள் தான் நம்மை வாழ்விக்கிறது.

தோற்றமென்றிருந்தால் மறைவு என உண்டல்லவா? நம் ‘பாகவத புராணமும்,‘  ‘விஷ்ணு புராணமும்’ சொல்வதன் படி நாம் கலியுகத்தின் முதல் கால் பாகத்தில் இருக்கிறோம். கலியுகம் மொத்தம் 4, 32, 000 ஆண்டுகள். இதன் முடிவில் சத்ய யுகம் ஆரம்பிக்கும்; எனவே கலி முடிந்தால் பிரளயம் என்பது இல்லை. 4. 32 மில்லியன் மனித ஆண்டுகள் ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது. கல்பம் என்பது 4. 32 பில்லியன் மனித ஆண்டுகள். இது ப்ரும்மாவின் ஒரு நாள் எனப்படுகிறது; அவரது இரவும் அப்படியே; எனவே மஹா ப்ரளயம் என்பது 311 ட்ரில்லியன் மனித ஆண்டுகள் கழித்து எனக் கணக்கிடப்படுகிறது. நாம் ஆழமாக மூச்சிழுத்து சந்தோஷப்படலாம்.

https://www. sciencealert. com/watch-here-s-why-galaxies-and-planets-might-only-exist-thanks-to-nothingness by Fiano Macdonald 07-10-2016

வெற்றிடத்தின் அலைபாயுதலை எவ்வாறு அளப்பது?  ‘ஒன்றுமேயில்லாததை’ அளப்பதற்கு இரு லேசர் கற்றைகளை உபயோகித்து ஜூரிச்சில் அறிவியலாளர்கள் ஒரு பரிசோதனையின் மூலம் அதைக் கண்டறியப் பார்த்தார்கள். முக்கியமாக ஒரு துகள் குறிப்பிட்ட இடத்தில் சலனத்தன்மை அற்றிருந்தால் ‘நிலையாத் தன்மை’ கொண்டுள்ளது; ஏனெனில் அது அலையாகவும்,  ஒளியாகவும் இருக்கும். இது இருந்தால் அதனை அறிய முடிவதில்லை, அது இருந்தால் இதை அறியமுடிவதில்லை. இது துகளுக்கு மட்டும் பொருந்துவது அன்று. வெற்றுப் புலன்களுக்குமே உறுதியாகக் கூற முடியா இரு நிலைகள் உள்ளன.  வெற்றிடத்தின் அலைபாய்தலில் மின் காந்தப் புலங்களுக்கு குறிப்பிட்ட தொடர்ச்சிகளுண்டு. அணு வெளிவிடும் ஒளியில் இவையும் பங்காற்றுகின்றன என்று ஜூரிச் ஆய்வாளர் இலியானா கிரிஸ்டினா சொல்கிறார்.  மிகக் குளிரான படிகத்தின் வழியே  இரு லேசர் கற்றைகளை  ட்ரில்லியனின் ஒரு வினாடி நீளத்திற்கு  வெவ்வேறு இடங்களிலும் நேரங்களிலும் செலுத்தி ஆய்ந்தார்கள். அந்தப் படிமத்தின் அணுக்கள் இடையே உள்ள வெற்றிடத்தை அவை எப்படி பாதித்தன எனப் பதிந்தார்கள். ஆனால் சமிக்ஞை மிக மிக மிகச் சிறியது. இதன் முலம் ஒரு மின் காந்தப்புலன்  அந்த ஜீரோ புலன்களில் கண்டறியப்பட்டது.  இந்த ஆய்வுகள் தொடர்கின்றன. குவாண்டத்தில் இருக்கிறது விடை என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது என்கிறோம் நாம். மருத்துவ அறிவும்,  குவாண்டம் இயற்பியலும் கை கோர்த்தால் மேலும் தெளிவு பிறக்கலாம்.  

https:// www. science alert. com/researchers-manage-to-measura-a-spectrum-of- absolutely-nothing-for-the-first-time by Mike Mcrae 12-04-2019.

(மேற்கண்ட இரு குறிப்புகளையும் எழுதியவர்: பானுமதி ந. )

***

வரலாற்றுப் புதினங்கள்…

தமிழில் வரலாற்றுப் புதினங்கள் பத்தொன்பதாம் நுற்றாண்டில் தான் வரத் தொடங்கின.  சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களுக்கு நாட்டுப் பற்றை உண்டாக்க வேண்டி, கல்கி, வரலாற்றுப் புதினம்  என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தார். அவர் எழுதிய பொன்னியின் செல்வனில் தமிழ் மாமன்னர் ராஜராஜ சோழரின் ஆளுமையும் நல்லாட்சியும் வெளிப்பட்டது. தமிழ் வாசகரின் தொடர்ந்த பாராட்டு அந்த புதினத்துக்கு கிட்டியதால் அது அமரத்துவம் பெற்றது .சுமார் 50 பாத்திரங்களை வைத்து  நேர்த்தியான உரையாடலும் வர்ணனையுமாய் 3600 பக்கம் கொண்ட புதினம் அது. அவரைப் பின்பற்றிப் பலரும் வரலாற்றுப் புதினங்கள் எழுத ஆரம்பித்தார்கள். கொஞ்ச வரலாறும், அதிகப் புனைவுமாக நிறைய எழுதினார்கள் . போரும் அரியணை ஏறுதலும் அவற்றின் கருப்பொருட்கள். படையெடுப்பு, தற்காப்பு, பேரரசு விரிவாக்கம்,பழிவாங்கல் அவற்றின் மைய நிகழ்ச்சிகள். அவை பெரும்பாலும் வாசகர் கவனம் பெறவில்லை.  தமிழகத்தில் பதினான்காம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அந்நியர் ஆட்சியே நடந்ததால் , வரலாற்று நாயகர்கள் அருகிப் போயினர். அதனால் வரலாற்றுப் புதினங்களும் அருகிவிட்டன. 

இங்கே கொடுக்கப்படும் சுட்டி,மேலை நாடுகளில் புதினங்கள் வரலாற்றுக் கதைகளை மட்டும்  நம்பியிருக்காமல் அகழ்வாராய்ச்சித் தரவுகளையும் ஏற்று, குறைகாண முடியாத நேர்த்தியுடன் வெளிவருகின்றன என்கிறது. https://www.the-tls.co.uk/articles/the-dead-have-no-names/

அத்தனை தரக் கட்டுப்பாடு இருந்த போதும், பழம் பண்பாட்டின் அனைத்துப் பரிமாணங்களையும் நாம் கைப்பற்ற முடிவதில்லை, ஒவ்வொரு சான்றுக்கும் பின்னே பற்பல பின்னணிகளின் சாத்தியக் கூறுகள் பொதிந்திருக்கின்றன. பண்டை வாழ்வைப் பற்றி அகழ்வாராய்ச்சி மூலம் முடிவுகளுக்கு வருமுன் மிக்க கவனமும், சான்றுகளின் போதாமை குறித்த எச்சரிக்கை உணர்வும் இருப்பது அவசியம். அப்படி இல்லாது இன்றைய அரசியலுக்கு வணங்கி அதைத் திருப்தி செய்யவென அவசர முடிவுகளை அடைந்து புத்தகங்கள் எழுதுவது அறிவுத் துலக்கத்துக்கு இட்டுச் செல்லாது என்றும் நம்மை எச்சரிக்கை செய்கிறது இந்தக் கட்டுரை. தரக் கட்டுப்பாடு குறித்த கவனம் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் மேலை அகழ்வாராய்ச்சியில் நிறைய அரசியல் உள்ளது என்பதோடு, நிகழ் காலத்துப் பண்பாட்டு அரசியலாளர்கள் பண்டை நாகரீகங்களைத் தம் விருப்பத்துக்குச் சித்திரிக்க முயல்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம் என்று புரிகிறது.

(குறிப்பை எழுதியவர்: கோரா )

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.