
நேற்று கண்ட நிஜம் போல
என் கண்களில் நிழலாடுகின்றன
நினைவுகள்
ஆளுக்கு பாதியாய் பிரித்து
அம்மா தந்த பத்தல்கள்
நேற்று சுவைத்ததாய்தான்
எனக்கு ஞாபகம் இருக்கிறது..
விவரமறியா பருவத்தில் வாங்கிய
என் பங்கு அடிகளுக்கு
இதுதானா உன் தண்டனை?
பள்ளி நாட்களில் நீ
என் உடன் இருந்தாய்..
கல்லூரிச் சென்றாய்
உன்னை பற்றிய பேச்சுக்கள்
என் உடன் இருந்தது.
நீ வீடு வரும் நாட்களெல்லாம்
திருவிழாக்களின் முதல் நாட்களே..
உனக்கு பிடித்த சாப்பாடு
எனக்கும் பிடித்ததாய் இருக்கும்
உனக்கு பிடித்த பாடல்கள்
எனக்கும் பிடித்ததாய் இருக்கும்
இருந்ததும் பிறந்ததும்
ஓரிடத்தில் தானே..
கைபேசியும் கலர்கணினியும்
கண்ணாடி வச்ச தனியறையும்..
அண்ணனின் அனைத்தும்
அழகான அதிசயம்..
சிறு வயது புகைப்படங்களுள்
என் பிள்ளையாய் எண்ணியுன்னை
அள்ளிக்கொஞ்சியதை நீ அறிவாயா?
கண்ணாடியனிந்த யாரோ ஒருவன்
என்னை கடந்து போகும் போதெல்லாம்
அவனுள் நான் உன்னை தேடியதை
நீ அறிவாயா?
சிறியதொரு விசாரிப்புமின்றி
துண்டிக்கப்படும் உன் கைப்பேசி அழைப்புகள்..
என்னை அழவைக்கும் ஆற்றலுடையதென்று
உனக்கு தெரியாதா?
உயரமும் அறிவும் வளர்ந்து
வீடு பெயரும் குருவிகள் என்றும்
கூடுகள் கலைவதை பார்த்திராது..
வார்த்தைகளாய் உருமாறும் அன்பு
சாகாவரம் பெற காகிதம் சேர்கிறது..
உரித்த நபர்சேரா உருக்கொண்ட அன்பு
உடலில்லா உயிர்க்கு சாகாவரமெனும் கிரீடம்.