தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்

மலையகப் பெண்ணொருத்தி 
மஞ்சள் வயல்வெளியில் 
தனியளாய் நிற்பது காண்.
பாடலே துணையாய் 
கதிரறுக்கும் அவள்
குரல் கேட்காதோர்
பையவே சென்றிடுக. 
தனியே கதிரறுத்துக் கட்டுமவள்
இசைக்கும் அழுத்தமிகு 
சோக கீதம்  
வெளியெங்கும் ததும்பி வழிகின்றதே 
கேட்டீர்களா? 

பாலை நிலங்களில் 
களைத்துப் போன 
தேசாந்திரிகளுக்கு
உற்சாகமூட்டும் 
குளிர் சோலைக் குயில்கள்
தோற்குமவள் குரலில்.
நெடுந்தொலைவுத் தீவுகளின் 
கடலலைகளின் நிசப்தத்தைக் 
கலைக்கும் 
வசந்த காலக் குயிலோசை போல்   
கிறுகிறுக்கும் இவள் வாய்மொழி.   
 
அவள் பாடு பொருள்தான் என்ன?
பழங்கால துயருறு 
போர்க்கள நினைவுகளின்
எளிய சந்தமோ?
அல்ல அன்றாட 
வாழ்வின் அவசங்களோ?
வருத்தங்கள்,வலிகள்,இழப்புகள்
கடந்து போனதும் 
கடக்கப் போவதுமோ? 

கருப்பொருள் காண்கிலை.  
ஆயின் முடிவற்றதுபோல்
நீள்கிறதவள் பாடல் .  
க ருக்கரிவாள் கைக்கொண்டு 
காரியத்தில் மெய் கொண்டு 
இசைக்கும் கானம்
கற்சிலையாய் செவி மடுப்பேன். .
மலை மீதேறிச் செல்லும்போது
மறைந்திடும் பாடல்
நிறைந்திடும் என் நெஞ்சில்.  


இங்கிலிஷ் மூலக் கவிதை: வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் ‘The Solitary Reaper’.

தமிழாக்கம்: இரா. இரமணன்