ஒரு தூரிகை

ஜான் பெர்ஜர்

இந்த ‘ஷோ’ ஜப்பானியத் தூரிகையை நான் எவ்வாறு அன்பளிப்பாகத் தந்தேன் என்ற கதையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது எங்கே நடந்தது, எப்படி என்று.

எனக்கு இது நடிகரான நண்பர் ஒருவரால் கொடுக்கப்பட்டது, அவர் ஜப்பானில் ’நோ’ நாடகக் குழுவினரோடு பணி புரியச் சில வருடங்கள் அங்கே போயிருந்தார்.

நான் அதை வைத்து அடிக்கடி வரைந்தேன். குதிரை மற்றும் ஆட்டு முடிகளால் செய்யப்பட்டிருந்தது அது. அந்த முடிகள் ஒரு தோலிலிருந்து வளர்ந்தவை. ஒருக்கால் அதனால்தான், அந்த முடிகள் ஒரு மூங்கில் கைப்பிடியினில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு பொருத்தப்பட்டு ஒரு தூரிகையாக்கப்பட்டபோது, அவை உணர்வுகளை அத்தனை தீவிரமாகக் கடத்தினவோ. அதை வைத்து வரையும்போது, அதுவும், அதைத் தளர்வாகப் பிடிக்கிற என் விரல்களும் காகிதத்தைத் தொடவில்லை, மாறாகத் தோலைத் தொடுகின்றன என்று எனக்குத் தோன்றும். அப்படி வரையப்படும் காகிதம் தோலை ஒத்திருக்கிறது என்ற எண்ணம், அந்தச் சொல்லிலேயே இருக்கிறது: ப்ரஷ் ஸ்ட்ரோக் (தூரிகைத் தொடுதல்). தூரிகையின் ஒரே ஒரு தொடுகை! பிரமாதமான வரைவாளரான ஷிடாவ் அப்படித்தான் அதை வர்ணித்திருந்தார்.

இந்தக் கதையின் புலம், பாரீ நகரில் அதிகம் புழக்கம் உள்ள, ஆனால் நாசுக்கானதாகக் கருதப்படாத புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு முனிஸிபல் நீச்சல் குளம். அங்கு அவ்வப்போது நான் நிறைய நேரம் செலவழிப்பது உண்டு. ஒவ்வொரு நாளும் மதியம் ஒரு மணிக்கு அங்கே நான் போவேன், அந்த நேரத்தில் அநேகரும் உணவு உண்ணப் போயிருப்பார்கள், எனவே குளத்தில் கூட்டமிராது.

அந்தக் கட்டடம் நீளமாக, சப்பட்டையாக இருந்தது, அதன் சுவர்கள் கண்ணாடியாலும், செங்கல்லாலும் ஆனவை. 1960களின் பிற்பகுதியில் கட்டப்பட்டிருந்தது, 1971 இல் திறக்கப்பட்டது. சில வெண் பூர்ச்ச மரங்களும், ஆற்றுப் பாலை மரங்களும் இருந்த சிறு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்தது.

குளத்தில் நீந்தும்போது, கண்ணாடிச் சுவர்கள் வழியே உயரத்தில் ஆற்றுப் பாலை மரங்களை நாம் பார்க்க முடியும். குளத்தின் மேல் கூரை உள்புறம் தகடுகளால் மூடப்பட்டிருந்தது, இன்று, நாற்பது வருடங்களுக்குப் பிறகு, பல தகடுகளைக் காணவில்லை.  முதுகின் மீது படுத்தபடி நீந்தும்போது எத்தனை முறை இதைக் கவனித்திருக்கிறேன், அதே நேரம் கீழே தண்ணீர் என்னையும், நான் குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருக்கும் கதைகளையும் தாங்கி இருப்பதையும் எத்தனை தடவைகள் நான் உணர்ந்தபடி இருந்திருக்கிறேன்?

ஹுவாங் ஷேன் -னின் கோட்டுச் சித்திரம் ஒன்று, பதினெட்டாம் நூற்றாண்டுடையது, ஆற்றுப் பாலை மரத்தின் மீதமர்ந்து பாடும் சிள்வண்டு ஒன்றைச் சித்திரிக்கும். அதில் ஒவ்வொரு இலையும் ஒரே ஒரு தூரிகைத் தொடுகை.

வெளியிலிருந்து பார்க்கையில், அது ஒரு நகரத்துக் கட்டடம், கிராமப்புறக் கட்டடம் இல்லை, அது நீச்சல் குளத்தைக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த மரங்களை நீங்கள் மறக்க முடிந்தால், அது ஒரு ரயில்வே கட்டடம் என்று நினைப்பீர்கள், ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிமனை என்றோ, சரக்குகளை ஏற்றும் மேடைக் கட்டடம் என்றோ நினைப்பீர்கள்.

நுழைவாயிலுக்கு மேலே ஏதும் எழுதப்பட்டிராது, மூன்று நிறங்கள் கொண்ட ஒரு சிறு கொடியின் உரு மட்டும் இருக்கும். குடியரசின் சின்னம். நுழைவாயிலில் கண்ணாடிக் கதவுகளில் Poussez (தள்ளு) என்ற சுட்டுச் சொல் ஒட்டப்பட்டிருந்தது.

அந்தக் கதவுகளில் ஒன்றைத் தள்ளித் திறந்து, உள்ளே காலடி எடுத்து வைத்தீர்களானால், வெளியே உள்ள தெருக்களோடு, அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கார்களோடு, கடை வீதியோடு சிறிதும் சம்பந்தமில்லாத ஓர் உலகுக்குள் நீங்கள் இருப்பீர்கள்.

உள்ளே காற்றில் க்ளோரின் வாசம் இலேசாக இருக்கிறது. இரண்டு குளங்களில் ஒளி பிரதிபலிப்பதால் எல்லாம் மேலிருந்து அல்லாமல், கீழிருந்து ஒளியூட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஒலி பரவுவது தனி விதமாக உள்ளது: ஒவ்வொரு ஒலிக்கும் கொஞ்சம் எதிரொலி இருக்கிறது. நீளவாக்கே எங்கும், உயரவாக்கு அன்று, ஆட்சி செய்கிறது. அநேகரும் நீந்துகிறார்கள், குளத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு நீந்துகிறார்கள், மறுபடி மறுபடி. நின்றிருப்பவர்கள் அப்போதுதான் தங்கள் உடைகளை நீக்கி இருக்கிறார்கள், அல்லது அவற்றிலிருந்து வெளியே வருகிறார்கள், அதனால் அங்கு அந்தஸ்து, அடுக்கு முறை ஆகியவற்றுக்கு அர்த்தம் இல்லை. மாறாக, எங்கும், வினோதமான நீளவாக்குச் சமத்துவம் நிலவுகிறது.

அங்கு பல அச்சடித்த அறிக்கைகள் இருக்கின்றன, எல்லாவற்றிலும் தனியான நிர்வாக அடுக்கமைப்பின் சொற்பிரயோகங்களும், உரைநடையும் பயன்பட்டிருக்கிறன.

தலையை உலர வைக்கும் எந்திரம் மூடும் நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் முன்பு நிறுத்தப்படும்.

தலைக்குக் குல்லாய் அவசியம். அலுவல் குழு ஆணை, ஜன 5, 1981, திங்கள்கிழமை அன்று துவங்கி.

ஊழியர்கள் அல்லாதார் இந்த வாயில் வழியே நுழைவது தடை செய்யப்பட்டிருக்கிறது. நன்றி.

இந்த அறிவிப்புகளில் பொதிந்திருக்கிற குரல், மூன்றாவது குடியரசு காலத்தில் குடிமக்கள் உரிமைகளையும், கடமைகளையும் அங்கீகரிப்பதற்கு நடந்த நெடிய அரசியல் போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அளவான, தனிநபர் எவரோடும் பொருத்தப்பட முடியாத, ஆணைக் குழுவின் குரல் – தூரத்தில் எங்கோ ஒரு குழந்தையின் சிரிப்பும் கேட்கிறது.

1945 வாக்கில் ஃபெஹ்னௌ லீஜே (Fernand Léger) நீச்சல் குளத்தில் தலைகீழாகப் பாய்வோரைப் பற்றி – ப்ளொஞ்ஜே(ர்)ஸ்- சில ஓவியங்களை வரைந்திருந்தார். அவற்றின் அடிப்படை வண்ணங்களாலும், எளிமையான அமைதியான கோட்டுருக்களாலும் இந்த ஓவியங்கள் ஓய்வு நேரத்தை மகிழ்வோடு அனுபவிப்பது பற்றிய தொழிலாளர்களின் கனவுகள், மேலும் திட்டங்களைக் கொண்டாடுவனவாக இருந்தன, அவர்கள் தொழிலாளர்கள் என்பதால், ஓய்வு என்பதை இன்னும் பெயர் கொடுக்கப்படாத, அடையாளப்படுத்தப்படாத ஏதோ ஒன்றாக உருமாற்றி இருந்தன.

இன்று அந்தக் கனவை அடைவது என்பது முன்னெப்போதையும் விட மேலும் தூரத்திலேயே உள்ளது. ஆனாலும் என் துணிகளை ஆண்கள் உடை மாற்றும் அறையில் உள்ள பாதுகாப்புப் பெட்டிகளில் வைக்கும்போது, அந்தச் சாவியை என் மணிக்கட்டில் இணைத்துக் கொள்ளும்போதும், கால்களைக் கழுவும் இடத்தூடே நடக்குமுன் கட்டாயமான சூடான நீர்ச்சொரிவில் குளிக்கும்போதும், பெரிய குளத்தின் விளிம்புக்குப் போய் நீருக்குள் தலைகீழாகப் பாயுமுன்னரும், சில நேரம் நான் இந்த ஓவியங்களை நினைவு கூர்கிறேன்.

பெரும்பாலான நீச்சல்காரர்கள், வழக்கமான கட்டாயத் தலைக்குல்லாயைத் தவிர, க்ளோரினிலிருந்து கண்களைப் பாதுகாக்க கருமையான நீச்சல் கண்ணாடிகளை அணிகிறார்கள். எங்களிடையே பார்வைப் பரிமாற்றம் மிக அரிதாகவே நடக்கும். ஒரு நீச்சல்காரரின் கால் இன்னொருவருடைய காலில் அகஸ்மாத்தாகப் பட்டால், அவர் உடனே மன்னிப்புக் கோருகிறார். இங்கு உள்ள சூழ்நிலை கோட் டஸ்யூ பகுதியில் உள்ள சூழல் இல்லை! இங்கு ஒவ்வொருவரும் தத்தமது சொந்த இலக்குகளையே தேடிச் செல்கின்றனர்.

அவளை (அவரை) நான் முதலில் கவனிக்கக் காரணம், அவர் வித்தியாசமாக நீந்தினார் என்பது. அவருடைய கைகளும், கால்களும் அசைந்த விதம் வினோதமான முறையில் மெதுவாக இருந்தது, ஒரு தவளையின் நகர்வு போல, அதே நேரம் அவருடைய வேகம் கவனிக்கும்படி அத்தனை குறைந்து விடவில்லை. அவர் தண்ணீர் என்னும் இயற்கை அம்சத்தோடு கொண்டிருந்த உறவு வேறு விதமானதாக இருந்தது.

ஷி பைஷுர் (1863-1957 ) [1] என்ற சீன சைத்ரிகர் தவளைகளை வரைவதை விரும்பினார், ஏதோ அவை குளிப்பதற்கான குல்லாய்களை அணிந்திருக்கின்றன என்பது போல, அவற்றின் தலைகளை மிகக் கருப்பாக வரைந்தார். தூரக் கிழக்கில் தவளை என்பது சுதந்திரத்தின் குறியீடு.

அவளுடைய நீச்சல் குல்லாய் இஞ்சிச் சிவப்பு நிறத்திலிருந்தது, பூக்களின் படங்கள் கொண்ட உடுப்பு அணிந்திருந்தாள், கொஞ்சம் இங்கிலிஷ் சிண்ட்ஸ் துணி போலிருந்தது. [2]அவள் ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்தாள், வியத்நாமியர் என்று நான் நினைத்தேன். பிறகு என் தவறைக் கண்டு பிடித்தேன் அவள் கம்போடிய நாட்டினள்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்துக்கு, முழு நீளமும், திரும்பத் திரும்ப அவர் நீந்தினார். நானும் அதையேதான் செய்வேன். குளத்தை விட்டுப் போக, ஒரு மூலையில் இருந்த ஏணிகளில் ஏறிக் கரை சேரும் நேரம் வந்தது என்று அவர் தீர்மானிக்கும்போது, ஒரு ஆண், பல வரிசைகள் தள்ளி நீந்திக் கொண்டிருப்பவர், இவருக்கு உதவ வருவார். அவரும் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்தான், இந்தப் பெண்ணை விடச் சிறிது ஒல்லியாகவும், குள்ளமாகவும் இருந்தார், இவரை விட அந்த ஆணின் முகம் இன்னும் செதுக்கப்பட்டாற்போல இருந்தது; இவருடைய முகம் சந்திரன் போல இருந்தது.

அவர் நீரில் அவளுக்குப் பின்னால் வந்தார், கைகளை அவளது புட்டத்தில் பதித்தார், அப்போது அவள் குளத்தின் கரையைப் பார்க்க நின்றவள், அக்கைகளில் அமர்ந்தாள், அவர் அவளுடைய பளுவைச் சிறிது சுமந்தபடி அவளோடு சேர்ந்து கரையேறினார்.

திடமான தரையில் சேர்ந்ததும், அவள் குளத்தின் ஒரு மூலையிலிருந்த நடைபாதையை நோக்கி நடந்தாள், அங்கு பெண்கள் ஆடை மாற்றும் இடத்துக்கான நுழைவாயில் இருந்தது, அங்கு தனியாகப் போகையில் அவள் நடையில் கவனிக்கக் கூடிய நொண்டல் இல்லை. இந்தச் சடங்கு போன்ற நிகழ்வைப் பல முறை கவனித்த பிறகே, என்னால் அவள் நடக்கும்போது அவளுடைய உடல் முள் மேல் இழுத்துக் கட்டப்பட்டது போல இறுக்கமாக இருந்ததைப் பார்த்தேன்.

செதுக்கப்பட்ட தைரியமான முகம் கொண்ட ஆண் அவளுடைய கணவனாக இருந்திருக்க வேண்டும். எனக்கு இதில் சிறிது ஐயம் இருந்தது ஏன் என்று எனக்குத் தெரியாது. அந்த ஆண் அவள்பால் காட்டிய மரியாதையா, அல்லது விலகி நின்றவளாக அவள் தெரிந்ததா?

அவள் முதலில் குளத்துக்கு வந்து, நீரில் இறங்க விரும்பும்போது, அந்த ஆண் ஏணியில் பாதி வழி கீழிறங்குவார், அவள் அவருடைய தோள்களில் ஒன்றின் மீது அமர்ந்து கொள்வாள், பிறகு அவர் கவனமாகக் கீழிறங்குவார், அவருடைய இடுப்பு வரை தண்ணீர் வரும்வரை இறங்குவார், அப்போது அவள் நீருக்குள் சரிந்து நீந்திப் போவாள்.

இருவருக்கும் இந்த அமிழ்தலும், நீரிலிருந்து கரையேறுவதுமான சடங்குகள் முழுதும் பாடமாகி இருந்தன, ஒருக்கால் இந்த நீர் சார்ந்த சடங்குகள் அவர்கள் இருவரும் வகித்த பாத்திரங்களை விட முக்கியமான பங்கு எதையோ நிறைவேற்றின என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ, அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதை விட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு சகர்கள் என்பது போலத் தெரிய வந்திருந்தனர்.

காலம் கழிந்தது. நாட்கள் திரும்பத் திரும்ப ஒரே போலக் கடந்து போயின. அப்படியே ஒரு நாள், எங்கள் வழக்கமான நீச்சல் சுற்றுகளை நானும் அவளும் நீந்துகையில், முதல் முறையாக எதிரெதிரே கடந்து போனோம். இடையில் ஒன்றிரண்டு மீட்டர்கள்தான் இடைவெளியாக இருந்தன, தலையை உயர்த்திய நாங்கள் இருவரும் தலையை அசைத்து மற்றவரை அங்கீகரித்தோம். குளத்தை விட்டு நீங்குகையில், அன்று கடைசி தடவையாக எதிரில் கடந்து போனபோது, மறுபடி சந்திப்போம் என்று சைகை செய்தோம்.

அந்தச் சைகையை எப்படி வருணிப்பது? அதில் இரு புருவங்கள் உயர்த்தப்படுகின்றன, தலை முடியைப் பின்புறம் தூக்கிப் போடுவது போலத் தலை பின்னோக்கிச் சுண்டப்படுகிறது,  பின் சிரிப்பின் போது ஆகிற மாதிரி கண்கள் இடுங்குகின்றன. மிக நுண்மையாக, அடக்கமாக. நீச்சல் கண்ணாடிகள் மேலே தள்ளித் தலைக் குல்லாயின்மீது பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஒரு நாள் நீந்தி முடிந்த பின் சுடுநீரில் நான் குளித்துக் கொண்டிருந்தேன்- அங்கு ஆண்களுக்கு எட்டு தெளிப்புக் குழாய்கள்  (ஷவர்) உண்டு, ஒன்றை மட்டும் திறப்பதற்குத் தனிதனிக் குழாய்ப் பிடி ஏதும் இல்லை, வாயிற் கதவருகே (உள்ளிருப்போரை அழைக்க) அழுத்தும் பித்தானைப் போல பழைய காலத்துப் பித்தான் ஒன்று இருக்கும், அதை அழுத்த வேண்டும், அதில் தந்திரம் என்னவென்றால், ஒவ்வொரு குழாயும் சூடான நீரைக் கொடுப்பதில் வேறுபாடுகள் இருந்தன, சூடான நீர் நின்று போனால் மறுபடி பித்தானை அழுத்த வேண்டி வரும், எனவே இத்தனை நாள் அனுபவத்தால் எந்தக் குழாயில் சூடான நீர் நிறைய நேரம் வரும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது, அது யாராலும் பிடித்துக் கொள்ளப்படவில்லை என்றால் நான் அதையே எப்போதும் தேர்ந்தெடுப்பேன் – அன்று தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த அந்த மனிதர் நான் குளித்த குழாய்க்கு அடுத்த தெளிப்புக் குழாயடியே நிற்க வந்தார், நாங்கள் கை குலுக்கினோம்.

பிறகு நாங்கள் சில வார்த்தைகள் பேசினோம், ஆடை மாற்றிய பிறகு வெளியே உள்ள ஒரு சிறு பூங்காவில் சந்திக்கலாம் என்று ஏற்பாடு செய்தோம். அதையே நாங்கள் செய்தோம், அவருடைய மனைவி எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்.

அப்போதுதான் அவர்கள் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். அவள் பிரபலமான இளவரசர் ஸியனூக்கின் குடும்பத்துடைய தூரத்து உறவினர். 1970களில், இருபது வயதிருக்கையில், அவள் யூரோப்பிற்குத் தப்பித்து வந்து விட்டாள். அதற்கு முன் பெனோம் பென் நகரில் அவள் ஓவியக் கலையைப் படித்து வந்திருக்கிறாள்.

அவள்தான் பேசினாள், நானே கேள்விகள் கேட்டவனாக இருந்தேன். மறுபடி அந்த ஆண் அவளுடைய மெய்காப்பாளரோ அல்லது உதவியாளரோ என்றுதான் நான் உணர்ந்தேன். பூர்ச்ச மரங்களருகே நாங்கள் நின்றிருந்தோம், அருகில் அவர்களுடைய இரண்டு இருக்கைகள் கொண்ட ஸீதோயென் ஸி15 கார் இருந்தது, அதில் பின்னால் இருந்த இடம் இருக்கை இல்லாமல் காலியாக விடப்பட்டிருந்தது. அது நிறையப் பயன்படுத்தப்பட்டதால் பழையதாக ஆகி இருந்தது. நீங்கள் இன்னும் வரைகிறீர்களா? என்று நான் கேட்டேன். அவள் தன் இடது கையை காற்றில் உயர்த்தி, ஒரு பறவையை விடுவிப்பது போன்ற சைகை செய்தாள், தலையை அசைத்து ஆமோதித்தாள். அடிக்கடி அவர் வலியால் அவதிப்படுவார், என்று அந்த ஆண் சொன்னார். நான் நிறைய படிப்பதையும் செய்கிறேன், என்றாள் அவள், கமாய் மொழியிலும், சீன மொழியிலும் என்று சேர்த்துக் கொண்டாள். அப்போது அந்த மனிதன் அவர்கள் ஸி 15 வண்டிக்குள் ஏறிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பது போலச் சுட்டினார். பின்னே நோக்க உதவும் சிறு கண்ணாடியிலிருந்து ஒரு சிறு தர்மச் சக்கரம் தொங்கியதை நான் பார்த்தேன், அது ஸ்டியரிங் சக்கரம் ஒன்றின் சிறு உரு போலத் தெரிந்தது.

அவர்கள் காரைச் செலுத்திக் கொண்டு சென்றபின், நான் அங்கே புல்தரையில்– அது மே மாதம்- ஆற்றுப் பாலை மரங்களின் கீழே படுத்துக் கொண்ட போது, வலி என்பதைப் பற்றி நான் யோசிக்கிறேன் என்று அறிந்து கொண்டேன். ஸியனூக் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டபோது, அவள் கம்போடியாவை விட்டு நீங்கியிருக்கிறாள், ஒருக்கால் ஸிஐஏ உதவியோடு வெளியேறி இருக்கலாம். அப்போது பௌல் பாட்டின் தலைமையில் கமேயர் ரூ(ஸ்)ஜ் தலைநகரைக் கைப்பற்றி, அதன் இருபது லட்சம் குடிமக்களைக் கிராமப்புறங்களில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பத் துவங்கியபோது, அங்கே தனிச் சொத்து இல்லாத கூட்டுச் சமூகங்களில் ‘புது கமேர்களாக’ ஆக அவர்கள் பயிற்சி பெற வேண்டி இருந்தது! சுமார் பத்து லட்சம் பேர்கள் இதில் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடங்களில் பெனாம் பென் நகரும், அதைச் சூழ்ந்திருந்த கிராமங்களும், அமெரிக்க பி-52 விமானங்களால் திட்டமிட்டுக் குண்டு வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர்.

பெருமை வாய்ந்த ஆங்கோர் வாட் (கோவில்களும்), அவற்றின் பிரும்மாண்டமான, உணர்ச்சி அடங்கிய கற்சிலைகளும் கொண்ட புராதனப் பாரம்பரியம் உள்ள கமேர் மக்கள் அவற்றைப் பிற்பாடு கைவிட்டு விட்டனர், சேதமாக்கினர், கொள்ளையடித்தனர், இவற்றால் பெருந்துன்பம் அடைந்த தோற்றத்தையும் பெற்றனர். அவள் தன் நாட்டை விட்டு நீங்கியபோது, கமேர்கள் சூழலில் எங்கும் எதிரிகளையே கொண்டிருந்தனர்- வியத்நாமியர், லாவோசியர்கள், தாய் மக்கள்- அதோடு தம்முடைய அரசியல் போராளிகளாலேயே கொடுமைப்படுத்தப்பட்டு, பெரும் கொலைகளுக்கும் ஆட்படவிருந்தனர். அந்தப் போராளிகள் தங்களை கடும் வெறியர்களாக ஆக்கிக் கொண்டிருந்தனர், எதார்த்தத்தின் மீதே பழி தீர்க்கும் வெறி பீடித்திருந்தது அவர்களை, மொத்த எதார்த்தத்தையும் ஒற்றைப் பரிமாணமானதாக்கி விடும் வெறி. இதயத்தில் எத்தனை திசுக்கள் உண்டோ அத்தனை வலியையும் இப்படிக் குறுக்கும் வெறி விளைவிக்கும்.

ஆற்றுப் பாலை மரங்களைப் பார்த்திருக்கையில், காற்றில் அவற்றின் இலைகள் வீசி ஆடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

இன்று தென்கிழக்கு ஆசியாவின் மிக ஏழ்மையான நாடுகளில் கம்போடியா ஒன்று, அதன் ஏற்றுமதிகளில் 75 சதவீதம் கொத்தடிமைகள் போல வேலையாட்களை வைத்து உற்பத்தி செய்யப்படும் உடைகள், அவை உலகச் சந்தையில் புகழ் பெற்ற முத்திரைகளைக் கொண்ட மேற்கத்திப் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படுவன.

நான்கு வயதுச் சிறுவர்களின் கூட்டம் ஒன்று என்னைக் கடந்து ஓடிப் படிகளில் ஏறி நீச்சல் குளத்துடைய நுழைவாயில் கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி உள்ளே போனது. அவர்கள் நீச்சல் வகுப்புகளுக்குப் போகிறார்கள்.

அவளையும் அவளுடைய கணவரையும் அடுத்த முறை குளத்தில் பார்த்த போது, அவள் தன் வழக்கமான நீச்சல் சுற்று ஒன்றை முடித்த பின் அவளிடம் சென்று நான் கேட்டேன், அவளுக்கு எது வலியைக் கொடுக்கிறது? ஏதோ ஓர் இடத்தைச் சொல்வது போல அவள் உடனே பதில் சொன்னாள்: பல மூட்டு அழற்சி (பாலி ஆர்த்ரைடிஸ்). நான் இளம் பெண்ணாக இருக்கையிலேயே அது வந்து விட்டது, அப்போதுதான் நான் உடனே நாட்டை விட்டுச் செல்ல வேண்டுமென்று நான் புரிந்து கொண்டேன். இதைக் கேட்க வேண்டும் என்று நினைத்த உங்களுடைய அன்பிற்கு நன்றி.

அவளுடைய முன் நெற்றியின் இடது பகுதி நிறம் மாறி இருந்தது, மற்றப் பகுதிகளை விடப் பழுப்பாக இருந்தது, ஏதோ ஓர் விசிறி வாழையின் இலை அவளுடைய தோலில் அங்கு வைக்கப்பட்டபோது, அந்த இடத்தைக் கறைப்படுத்தியது போல இருந்தது. நீரில் தலையைப் பின்னோக்கித் தாழ்த்தியபடி அவள் மிதக்கும்போது, அவளுடைய முகம் நிலவைப் போல இருக்கும், இந்த தோல் நிறமாறுதலை அப்போது நிலவின் மீதுள்ள கடல்கள் என்று சொல்லப்படுகின்றனவே அவற்றோடு ஒப்பிடலாம்.

நாங்கள் இருவரும் நீரில் கால்களை உதைத்தபடி மிதந்தோம், அவள் புன்னகைத்தாள். நான் நீரில் இருக்கும்போது, என் எடை குறைகிறது, கொஞ்ச நேரம் கழித்து என் மூட்டுகளில் வலியும் குறைகிறது என்றாள்.

நான் தலையசைத்து ஆமோதித்தேன். பிறகு நாங்கள் நீச்சலடிக்கப் போனோம். தன் முன்புறத்தை நீரில் ஆழ்த்தி அவள் நீந்தும்போது, சில நேரம் தவளையைப் போல கால்களையும், கைகளையும் மெதுவாக அவள் அசைப்பாள். தன் முதுகில் நீந்தும்போது, நீர்நாய் (ஆட்டர்) போல நீந்துகிறாள்.

கம்போடியா நன்னீரோடு தனி விதமான ஊடுபரவல் உறவு கொண்ட நிலப்பரப்பு. கமேர் மொழிச் சொல்லில் இந்தத் தாய்நாடு ’எங்கள் நிலம்’ (Teuk Dey) என்றாகும். இதன் இன்னொரு பொருள் நீர்-நிலம். மலைகளால் சூழப்பட்ட இதன் சமதளமான படுக்கை வாட்டில் இருக்கும் வண்டல் மண் சமவெளி- ஃப்ரான்ஸின் நிலப்பரப்பில் கால் பங்கு இருக்கும் நிலம்- பிரும்மாண்டமான மீகாங் ஆற்றையும் சேர்த்து ஆறு பெரும் ஆறுகள் இதைக் கடக்கின்றன. கோடைக்காலத்துப் பருவ மழையின் போதும், பிறகும்  இந்த ஆற்றில் நீர்ப்பெருக்கு ஐம்பது மடங்கு பெருகி விடும். பெனாம் பென் நகரில், இந்த ஆற்றின் நீர் உயரம் திட்டமிட்டது போல எட்டு மீட்டர் அளவுக்கு ஏறும். அதே நேரம், வடக்கில் டோன்லெ ஸாப் ஏரி ஒவ்வொரு கோடையிலும் அதன் ‘குளிர்’ காலத்து அளவைப் போல ஐந்து மடங்கு கரை தாண்டிப் பெருகி பிரும்மாண்டமான நீர்த் தேக்கமாகி விடும். டோன்லெ ஸாப் ஆறு எதிர் திசையில் திரும்பி ஓடத் துவங்கும். அதன் கீழ் நீரோட்டம் இப்போது எதிரில் திரும்பி மேல் நீரோட்டமாகும். இந்தச் சமவெளி உலகிலேயே மிக வளமான, பல வகைத்தான நன்னீர் மீன் பிடிப்புக்குத் தோதான இடமாக இருப்பதிலும், பல நூறாண்டுகளாக கிராமத்தினர் இந்த நீர்வளத்தை நம்பியிருக்கும் அரிசியையும், மீன் வளத்தையும் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதிலும் என்ன ஆச்சரியம்?

நண்பகல் உணவு இடைவேளையின் போது முனிஸிபல் நீச்சல் குளத்தில் நீந்துகையில், அவள் பல மூட்டு அழற்சி (பாலிஆர்த்ரைடிஸ்) என்ற சொல்லை அது ஏதோ ஓர் இடத்தின் பெயர் போல அவள் சொன்ன பிறகு, அவளுக்கு ’ஷோ ‘ தூரிகையைக் கொடுக்கலாம் என்ற யோசனை எனக்கு வந்தது.

அன்று மாலையே அதை ஒரு பெட்டியில் வைத்து பெட்டியை காகிதத்தில் சுற்றி ஒட்டினேன். ஒவ்வொரு முறை நீச்சல் குளத்துக்கு நான் போன போதும் அதை எடுத்துப் போனேன், அவர்கள் மறுபடி வருவதற்காகக் காத்தேன். (வந்த அன்று) அந்தச் சிறு பெட்டியை, தாவிக் குதிப்பதற்காக உள்ள பலகைகளிற்குப் பின்னே உள்ள ஒரு பெஞ்சில் வைத்தேன், அவளுடைய கணவனிடம், அவர்கள் நீந்தி முடித்து விட்டு திரும்பிச் செல்லும்போது அதை எடுத்துக் கொள்ளுமாறு சொன்னேன்.

நான் வேறெங்கோ போயிருந்ததால், அவர்களை மறுபடி பார்ப்பதற்குப் பல மாதங்கள் ஆயின. நான் குளத்துக்குத் திரும்பிப் போன போது, அவர்கள் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன், ஆனால் பார்க்கவில்லை. என் நீச்சல் கண்ணாடிகளைச் சரிவர அணிந்து கொண்டு தாவி நீருள் குதித்தேன். பல சிறுவர்கள் தமது மூக்கைப் பிடித்துக் கொண்டு நீருக்குள் நெட்டுக் குத்தாகக் குதித்தனர். குளத்தின் பக்க வாட்டில் அமர்ந்து வேறு சிலர் காலில் ஃப்ளிப்பர்களைப் பொருத்திக் கொண்டிருந்தனர். வழக்கமாக இருப்பதை விட அதிக சத்தமாகவும், உற்சாகம் நிரம்பியும் குளம் காணப்பட்டது, ஏனெனில் அது ஜூலைமாதம், பள்ளிக்கூடங்கள் மூடி விட்டிருந்தன, பாரீ நகரத்தை விட்டுப் பயணங்களில் போக வசதி இல்லாத குடும்பங்களின் சிறார், குளத்தில் மணிக்கணக்காக நீரில் விளையாட வந்திருந்தார்கள். அவர்களுக்கான தனிச் சலுகைக் கட்டணம் மிகக் குறைவாக இருந்தது, உயிர் காக்க இருந்த காவலர்கள் அதிகக் கடுமை காட்டாமல் சுலபமாக வழி விட்டிருந்தனர். சில வாடிக்கையாளர்கள், அவரவரின் இறுகலான வழக்கங்களுடனும், இலக்குகளுடனும் உள்ளவர்களும் வந்திருந்தனர்.

நான் ஏற்கனவே இருபது தடவைகள் குளத்தில் நெடுக்காகத் திரும்பத் திரும்ப நீந்தி இருந்தேன். இன்னொரு முறை நீந்தத் துவங்கவிருக்கையில்-எனக்கு வியப்பூட்டும் வகையில்- என் வலது தோளின் மீது ஒரு கை அழுத்தமாகப் பதிந்ததை உணர்ந்தேன். தலையைத் திருப்பிப் பார்த்தபோது, பெனாம் பென்னிலிருந்து வந்திருந்த முன்னாள் ஓவிய மாணவியின் நிறம் சிறிது மாறிய பகுதி கொண்ட நிலவு முகத்தைக் கண்டேன். அவள் அதே இஞ்சிச் சிவப்பு நிறக் குல்லாய் அணிந்திருந்தாள், முகத்தில் அகன்ற பெரிய சிரிப்பு இருந்தது.

நீங்க இங்கே இருக்கீங்களா! (என்றேன்).

அவள் தலையசைத்தாள், நாங்கள் நீரில் ஒரே இடத்தில் நிற்கக் கால்களை உதைத்தபடி இருக்க, அவள் என்னருகே வந்து என் இரண்டு கன்னங்களிலும் முத்தம் பதித்தாள்.

பிறகு அவள் கேட்கிறாள்: பறவையா பூவா?

பறவை! (என்கிறேன்)

அதற்கு அவள் தன் தலையை நீரில் பின்னோக்கிச் சாய்த்து, உரக்கச் சிரிக்கிறாள். அவளுடைய சிரிப்பை நீங்கள் கேட்கும்படி செய்ய வேண்டுமென்று நான் எத்தனை விரும்புகிறேன். சுற்றிலும் இருந்த சிறுவர்களின் கூவல்களோடும், நீர்ச் சிதறல்களோடும் ஒப்பிட்டால் அந்தச் சிரிப்பு அடங்கிய ஒலியோடு, நிதானமானதாக ஆனால் தடைப்படாது தொடர்ந்து ஒலித்தது. அவளுடைய முகம் முன்னெப்போதையும் விட நிலவைப் போல இருந்தது, நிலவு போலவும், காலக் கணக்கற்றதாகவும் இருந்தது. அறுபது வயதாகப் போகிற இந்தப் பெண்ணின் சிரிப்பு தொடர்கிறது. விளக்கத்துக்கு அடங்காததாக அது ஒரு சிறு குழந்தையின் சிரிப்பு போல இருக்கிறது- முதலில் சொன்னேனே, நிர்வாக ஆலோசனைக் குழுவின் குரல்களுக்குப் பின்னே எங்கோ ஒரு குழந்தை சிரிப்பதாக நான் கற்பனை செய்தேன் என்று, அதே குழந்தையின் குரல்.

சில நாட்கள் கழித்து, அவளுடைய கணவன் என்னை நோக்கி நீந்தி வந்தார், என் தேக நலன் பற்றி விசாரித்தார், பிறகு ரகசியமாகச் சொன்னார்: தாவிக் குதிக்கவிருக்கும் பலகைகளின் பின்னே உள்ள பெஞ்சில். பிறகு அவர்கள் குளத்தை விட்டு நீங்குகிறார்கள். அவர் அவளுக்குப் பின் வருகிறார், கைகளை அவளுடைய புட்டத்தின் கீழே பொருத்துகிறார், அவளும் குளத்தின் சுவரை நோக்கி நிற்கிறாள், கைகளின் மேல் அமர்கிறாள், அவர் அவளுடைய எடையைச் சிறிது சுமந்தபடி, அவர்கள் இருவரும் குளத்தை விட்டுக் கரை மேல் ஏறுகிறார்கள்.

இருவருமே மற்ற நேரங்களில் செய்தது போல இந்த முறை என்னை நோக்கி கையசைக்கவில்லை. அடக்கம் காரணம். அடக்கத்துக்கான சைகை அது. எந்த அன்பளிப்பும் ஒரு எதிர்பார்ப்போடு கூடச் சேர்க்கப்படக் கூடாது.

பெஞ்சின் மீது ஒரு பெரிய உறை இருக்கிறது, அதை நான் எடுத்துக் கொள்கிறேன். உள்ளே அரிசித் தாளில் வரையப்பட்ட ஓர் ஓவியம் இருக்கிறது. எனக்கு என்ன வேண்டும் என்று அவள் கேட்டபோது, நான் தேர்ந்தெடுத்த அந்தப் பறவையின் ஓவியம் அது. ஓவியம் ஒரு மூங்கிலையும், அதன் ஒரு கிளை மீது அமர்ந்திருக்கும் நீலக் குருவியையும் காட்டுகிறது. ஓவியக் கலையின் எல்லா விதிகளுக்கும் ஏற்ப அந்த மூங்கில் வரையப்பட்டிருக்கிறது. தண்டின் உச்சியில் துவங்கி, ஒவ்வொரு கணுவிலும் தயங்கி, கீழிறங்கி, சற்றே விரிவடையும் ஒரே ஒரு தூரிகைத் தீட்டல். நெருப்புக் குச்சி போல மெல்லிய கிளைகள், தூரிகையின் நுனியால் வரையப்பட்டிருக்கின்றன. துள்ளும் மீனைப் போல ஒரே தீட்டல்களில் உண்டான கருத்த இலைகள். வெறுமையான தண்டுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில், கடைசியாக படுக்கை வாக்கில் கணுக்கள், இடப்புறமிருந்து வலதுக்குத் தூரிகையால் பூசப்பட்டவை.

நீலக் கொண்டை கொண்ட அந்தப் பறவை, அதன் மஞ்சள் நெஞ்சு, சாம்பல் நிற வால், மேலும் அதன் கால் நகங்கள் W என்ற எழுத்தைப் போல இருந்தன, அவற்றைக் கொண்டு அது கிளையில் தலைகீழாகத் தொங்க முடியும், வேறு மாதிரி அதைச் சித்திரிப்பதானால். அந்த மூங்கில் திரவம் போல இருக்கையில், பறவை பின்னப்பட்டது போல இருக்கிறது, அதன் நிறங்கள் ஊசிமுனை போன்ற கூரிய தூரிகையால் இடப்பட்டது போல இருக்கின்றன.

அந்த அரிசித் தாளில், மூங்கிலும், பறவையும் சேர்ந்து ஒற்றை பிம்பத்தின் நளின நயத்துடன் இருக்கின்றன, சித்திரத்தின் கர்த்தாவின் பெயர் கீழே பறவைக்கு இடப்புறம், செதுக்கினாற்போல இருக்கிறது.

இருந்தாலும், நாம் இந்தப் படத்தினுள் நுழையும்போது, அதன் காற்று நம் தலையின் பின்புறத்தைத் தொட விடும்போது, இந்தப் பறவை வீடற்றது என்பதை நாம் உணர்கிறோம். விளக்க முடியாதபடி வீடற்ற நிலை.

பிரி சுருள் போல இந்த ஓவியத்திற்கு சட்டகமிட்டேன், பின்னே இதைத் தாங்கும் எதுவும் இருக்கவில்லை, மிக்க மகிழ்ச்சியோடு இதைத் தொங்க விட ஓர் இடத்தைத் தேர்வு செய்தேன். பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள், லாஹுஸ் சித்திர பல்பொருளகராதியில் எதையோ தேடிப் பிடிக்க வேண்டி இருந்தது. பக்கங்களைத் திருப்புகையில், நீலக் குருவியின் ஒரு சிறு படத்தைத் தற்செயலாகக் கண்டேன். எனக்குச் சிறிது குழப்பம். அது ஏதோவிதத்தில் பழக்கமானதாகத் தெரிந்தது. அப்போது எனக்குப் புரிந்தது, இந்த பல்பொருள் அகராதியில் நான் ஒரு முன்மாதிரியைப் பார்க்கிறேன் – உதாரணமாக, நீலக் குருவியின் கால் நகங்கள், இரண்டு W எழுத்துகள் போல, அதே கோணத்தில் கச்சிதமாக இருந்தன, அதே போலத் தலையும், கழுத்தும் இருந்தன – இதுதான் ல- மூங்கில் மீது அமர்ந்த குருவிக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

மறுபடியும் நான் வீடற்ற நிலை என்னதென்று மேலும் சிறிது கூடுதலாகத் தெரிந்து கொண்டேன்.

*** இங்கிலிஷ் மூலம்: ஜான் பெர்ஜர்; தமிழாக்கம்: மைத்ரேயன்

இந்தக் கதை ‘த பென்/ஓ. ஹென்ரி ப்ரைஸ் ஸ்டோரீஸ்- த பெஸ்ட் ஸ்டோரீஸ் ஆஃப் த இயர் 2012’ என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. ) ‘A Brush’ என்ற இக்கதையைப் பற்றி ஜான் பெர்ஜர் சொல்வது இது. ‘இந்தக் கதை உரக்கப் படிக்கப்படும்போது அதன் முழுமையில் பெரும்பகுதியைக் காட்டும் என்று எதிர்பார்க்கிறேன். இதை ‘வாசிப்பவரின்’ தலைமுடி அந்த நீச்சல் குளத்தின் நீரால் இன்னமும் சிறிது ஈரமாகவே இருக்கிறது.’

ஜான் பெர்ஜர் 1926 இல் லண்டன் நகரில் பிறந்தவர். நாவல்கள், இதர புனைவுகளோடு, அ-புனைவுகளையும், பல ஓவியக் கலை விமர்சன நூல்களையும் எழுதியவர். 1958 இல் ‘அ பெயிண்டர் ஆஃப் அவர் டைம்’ என்ற முதல் நாவலை எழுதினார். பிறகு ‘ஜி’ (1972- புக்கர் பரிசை வென்றது) என்ற நாவல். 1962 இலிருந்து ஃப்ரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கிறார். _______________

[1] என்று மரபுச் சீனமொழியில் எழுதப்படும் பெயர். இங்கிலிஷில் Qi Baishe என்று எழுதுகிறார்கள்.

[2] இங்கிலிஷ் சின்ட்ஸ் என்பது பூக்களின் படங்கள் கொண்ட பருத்தியாடை, சிறிது பளபளப்பாக இருக்கும் என்று அகராதி தெரிவிக்கிறது.

[3] Teuk-Dey என்று இங்கிலிஷ் மூலத்தில் கொடுக்கப்பட்ட சொல் ஒரு கூட்டுச் சொல். Teuk என்பது நீர், Dey என்பது நிலம். ஆனால் இணைத்த சொல்லாகும்போது இவை நீரும் நிலமும் என்று ஆகாதவை. சரியான பொருள் ’எங்கள் நாடு’ என்றாகும். இது குறித்து ஒரு ஃப்ரெஞ்சு-கம்போடிய ஓவிய நாவலாசிரியர் ஸோஹா (Ing Phouséra) சொல்வதை இங்கு மேற்கோளாகக் கொடுக்கிறேன்.

L’Eau et Terre. I don’t care about land and water. In this country [Cambodia], when people talk about Cambodia, they say teuk dey. Two words. Teuk is water, dey is land. The meaning of these words together is the territory, and by extension the country; words to talk about this country, Cambodia. People used to say Kampuchea, because they are educated. But their grandfathers, when they used to talk about this country, they used to say teuk dey. So this is the meaning of the title in French, and if this book is translated one of these days into English, it could not be Water and Land, it would be something like Our Land.

அவரது பேட்டியை இங்கே காணலாம்: https://www.berfrois.com/2012/08/when-dittmer-met-sera/

One Reply to “ஒரு தூரிகை”

  1. மனதை உருக்கிய தூரிகை.பிடுங்கி எறியப்பட்டு காற்றில் அலைபாய்ந்து எதிலோ இறங்கி வாழும் மரக்கிளை தன் வேரை நினைத்து வலி அடைகிறது.W வால் அது அந்த மூங்கிலைப் பற்றிக்கொண்டிருக்கிறது.அது உண்மையில் டபிள் ‘வி’ அல்லவா?இருப்பு இருக்கிறது,இருப்பாக இருக்கிறதா?கதையின் நீச்சல் குளம்,அதுவும் நீள வாட்டில அமைந்துள்ள குளம், நன்னீர் நீறைந்த கம்போடியா சரியான பின்புலம்.நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.