உயிராயுதம்

உயிராயுதம்

சமரைத் தன்னுள்ளே, உடலில், மனதில் உணர்ந்து அலகிலா சமரை ஞானப் பாதையாகக் கொண்டவர் ததீசி முனிவர்.  

சமரில்லா காலத்தில் ஆயுதங்கள் கணம் தோறும் சமன் குலைப்பிற்கான அழைப்பு என்று இந்திர ஆயுதங்கள், சமரைத் தன்வழியாகக் கொண்ட ததீசி முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பருப்பொருளுக்கு காலமுண்டு, சொல்லுக்கு அது இல்லை என்ற முன்னோர் வாக்குப்படி அவர் செய்உக்தியை  மந்திரங்களென மாற்றினார். அந்த மந்திரங்களை ஆயுதங்களை ஆளும் உணர்வு நிலையின் மையத்தில் பொத்திவைத்தார்.

ஆயுதங்களை எடுத்தவன் அதை கையிறக்கப் போராடுகிறான். ஆனால் வைக்கப்பட்ட ஆயுதங்கள் தன்னை ஆயுதங்களென நிறுத்திய சக்திகள் மீது எப்போதும் வஞ்சம் கொண்டு காத்திருக்கத் தொடங்குகின்றன. ஒரு பெருஞ்சமரை நிறுத்திய ஆயுதம் தொழப்படும். அழிப்பவன் கைகளில் வஞ்சமென்றும் காப்பவன் கைகளில் கருணையென்றும் இருப்பது அந்த ஒன்றே.

வெயிலும் மழையும் சரிக்குச் சமமாகச் சமரிடும் காடு அது. அந்த முடிவிலாச் சமரில் அவை ஒன்றை ஒன்று நிரப்பிய வேளைகளில் விதைகள் சிலிர்த்து நிலத்தைக் கிழித்து எழுந்தன. எழுகிறேன் எழுகிறேன் என்று வெகுண்டு விருட்சங்கள், மரங்கள், கொடிகள், செடிகள், புற்கள் என எழுந்து நிலத்தை மறைத்தன.

சமர் நிற்காத அந்தக் காட்டினுள் ததீசி நுழைந்தார். கனத்த முதுகுடன் மெல்லக் காலடியெடுத்து வைத்து நடந்தார். வாய் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது. தன் சமனைக் காக்க அப்பெருங்காட்டைத் தன் இருபாதங்களால் அளந்துவிடுபவர் போல நடந்து கொண்டேயிருந்தார்.

கனிகளும், கிழங்குகளும், நீரும் எங்கும் இருந்தன. அவரின் காலடியோசை கேட்டு விலங்குகள் விலகிச் சென்றன. அவர் உச்சரித்த மந்திரங்களின் ஓசைகள் சிலநேரம் எதிரிலிருப்பவைகளை கிழித்தன, குத்தி எடுத்தன, வகிர்ந்து சென்றன, உடைத்தெறிந்தன. அச்சொற்கள் விசைகொண்டபடி இருந்தன.

சொற்கள் விசை கொள்ளக் கொள்ள அவர் உடலும் விசைகொண்டது. காற்றுக்கும், வெயிலிற்கும், பனிக்கும், மழைக்கும் எதிர் நின்று உயிர்த்தது. அவர் உடலெங்கும் காட்டின் சுவடுகள் வடுக்களாக இருந்தன.

நீரையும் உணவையும் அவர் உடல் அதுவே கண்டு கொண்டு நின்றது. கால்கள் ஓயந்த அன்று அவ்விடத்திலேயே நின்றார். இனி எங்கும் செல்வதில்லை என மரப் பொந்தில் தனக்கான இடத்தை அமைத்துக்கொண்டார். உறக்கம் எங்கிருந்தோ பறந்து வந்து அமர்ந்தது.

காடு அனலுடன் சமரிடும் காலத்தில் தன் நீளுறக்கம் கலைந்தெழுந்தார். அனல் கடந்த உடல் புடமிட்ட செம்பொன் எனத் தழலொளி கொண்டது. பூரணமான ஆயுதத்தின் பேரழகது.

பின்னர் அவர் தன் தினப்பாடுகளுக்கு வந்து சேர்ந்தார். என்றாலும் ஆயுதங்களைத் தீட்டி வைப்பதைப் போல தன் மந்திரங்களை, உடலை உருவேற்றிக் கொண்டிருந்தார். மீண்டும் காட்டினுள் ஓயாது நடந்தார். குன்றேறி மந்திரங்களுடன் அமர்ந்து திரும்பி வந்தார்.

ஆற்றோடு மந்திரங்களுடன் நீந்திக் குளிரேற்றினார். வெயிலோடு மந்திரங்கள் ஒளி கொண்டன. எதிர் காற்றில் கூர்கொண்டன. வெளியைக் கண்டு நின்று மந்திரங்களை அமைதியாக்கினார். பின் மீண்டும் ஓய்ந்தமர்ந்தார்.

எடையிழந்த  உடலில் விசை மட்டும் மிஞ்சியது. காற்றெனத் தன்னை உணர்ந்தார். உள்ளுக்குள் நாதமென, ஒருசொல்லென அவ்விசை குடியேறியது. உடலே அதுவானது. கிளையிலே தங்கிக் கனிந்த கனியின் இனிமை அது. உள்ளிருக்கும் விதைக்கு உயிர்பொருளாகும் இனிமை. தன்னைத் தருவதில் மட்டும் கிட்டும் நிகரில்லாச் சுவை. இனிது இனிது.  இனி எது?

தேவ அசுரர் சமருக்கென மந்திரங்களைத் திருப்பியளித்தார். மீண்டும் இறுதியாக மண்ணின் மடியில் மந்திரங்களை உறக்கக்கூறி மூடி நினைப்பொழிந்தார். உதிர்க்கும் காற்றிற்காகத் தவமிருக்கும் கனிந்த மரத்தினடியில் சென்றமர்ந்தார்.

அது காற்றுடன் தூரலும் இணைந்து மழைஎழும் மழையின் மாதம். அந்த செறுங்காட்டை சுற்றிச் சுற்றி வந்த காற்று அதன் எண்ணிலா இடைவெளிகளில் புகுந்து விளையாடியது. இழைகளாகப் பிரிந்த காற்று பின்னிப்பின்னி காட்டை வளைத்தது.

வளைக் கண்ணியில் அகப்பட்ட அன்னைப் பன்றியென உறுமியது காடு. காட்டின் உறுமலில் அதிர்ந்தது வானம். ஔிக்கிளை விரித்த பெருமரத்தைக் கைகளில் ஏந்தி, ஐராவதம் பிளிற காற்றிலேறி வந்தான் மழையன்.

அவன் அகம் கொண்ட சீற்றம் வான்மறைக்கும் திரையெனக் கருவண்ணம் கொண்டது. அது முழக்கமென, வான் கிழிக்கும் ஔியென, மண்ணில் உயிர்பெருக்கும் நீரென உருமாறியது. வான் கரந்த தன்னை, தானே பொழிந்து பொழிந்து கரைந்தன மேகங்கள்.

தரையிறங்கிய இந்திரன் தன் ஆயிரம் கால்களால் ததீசியை தேடி ஓடினான். உதிர்ந்த கனிகள் குழைந்த மரத்தினடியில், ததீசி முனிவரைக்கண்டு உடல் நிலம்தொட விழுந்தான்.

உடல் முழுதும் மழையில் நனைந்து பொழிந்து கொண்டிருக்க அவர் கண்களைத் திறந்து புன்னகைத்தார். வாளென அவர் பார்வை அவன் மேல் பாய்ந்தது.

“பணிகிறேன் ஐயனே. . ”

“உங்கள் எந்த ஆயுதமும் இலக்கு முடிக்கவில்லை . . ”என்றார்.

சொற்களற்றவனாக நின்றான்.

“சொல்ல வேண்டியதென்ன. . ”

“கேட்டுப் பெறக்கூடாததைக் கேட்க வந்தேன். . ”

“இவ்வுலகில் சொல்லின் மதிப்பு எதற்குமில்லை. சொற்களால் நிகழாத எதுவும் இங்கு நிலைப்பதில்லை.”

“ஆம் ஐயனே. . அதுபோல மதிப்பிழந்ததும் எதுவுமில்லை. . ”

“நீ சொல்ல வேண்டியதன் மதிப்பறிந்து சொல். . ”

“ஜடப்பொருளால் ஆன ஆயுதங்களெல்லாம் விருத்தாசுரன் முன் பணிந்தன. . அவன் முன் பணியாதிருக்க உயிர்ப் பொருளால் ஆன ஆயுதம் வேண்டும், ”

“அது நான்தான். . நாளெல்லாம் சமரை எண்ணியே வாழ்ந்தவன் தன்னையே ஆயுதமாக்கி எழாமல் போவதில்லை, ”

“மந்திங்களை ஆயுதங்களாய், ஆயுதங்களை மந்திரங்களாக மாற்றிக் காத்த பேராயுதம்,”

“மைந்தர்களுக்குரியது தந்தையின் உடல். . ”

“செய்ய வேண்டுவதை ஆணையிடுக…”

“மனம் உவந்து ஒருமுறை அழை…சொல்லுக்கில்லாதது எதற்குமில்லை, ”

அவன் இடிக்குரலில், மின்னல் வேகத்தில், மழையின் தண்மையில், ஏழு வண்ணங்களின் மிளிர்வைக் குரலாக்கி, “தந்தையே. . ” என்றான்.

அந்த சொல் உயிர்தொட்ட கணத்தில் ததீசி, “மைந்தனுக்கில்லாதது எனத் தந்தையிடம் எதுவுமில்லை, ”என்றார்.

மழை ஓய்ந்த பேரமைதியில் ஆழ்ந்திருந்தன மரங்கள். புள்ளினங்கள் சிறகுலர்த்த சிலிர்த்தது கானகம். மெல்லிய ஔி எழும் நேரத்தில் ததீசி முனிவர் அந்தக் குகையின் வெளியில் இந்திரனைக் காக்கவைத்து உள்நுழைந்தார்.

பசி தாகம் ஒடுங்குகையில் புலன்கள் ஒடுங்கின. புலன்கள் தங்களை மறந்த வேளையில் உணர்வுகள் மறந்தன. உணர்வுகள் மறைந்த பொழுதில் உள்ளியக்கங்கள் மெதுமெதுவாக நின்றன. நிமிர்ந்தமர்ந்திருந்த முனிவரின் உடல் இந்திரன் வரும்வரையில் அவ்வாறே இருந்தது.

சுட்டெரித்த சுடலையின் வெப்பம் தணிந்தபின் சாம்பல் தரித்த கங்குகளென என்புகள் கிடந்தன. இந்திரன் முனிவருக்குரியவைகளைச் செய்து என்புகளைப் பாதுகாத்தான். விஸ்வகர்மாவை அழைத்தான்.

அவர் என்புகளை கங்கையின் நீரில் முழுக்கி எடுத்தபின் அவை வைரம் என, மின்னலின் பருவடிவென ஔிகொண்டிருந்தன. ’என்பினாலான மானுட உயிர்ப்பொருள் இத்தகைய ஒன்றாகுமா!’ என்று அவரின் மனம் பதைத்துக்கொண்டிருந்தது.

உயிர்ப் பொருளுக்குரிய மென்மையும், ஜடப் பொருளுக்குரிய திண்மையும் இதன் ஒப்பிலா வலிமை என, செய்து தீர்க்கப் படைக்கப்பட்ட அவரின் கரங்கள் எப்போதோ கண்டு கொண்டிருப்பதை, அவர் மனம் உணரத் தொடங்கியதும், வடிவமும் செய்தொழிலும் உதித்தெழுந்தன.

தன் படைப்பில் இனியோர் ஆயுதத்தை இதை மீறிச் செய்யப்போவதில்லை என்று நினைத்த விஸ்வகர்மா விசும்பை நோக்கி நின்றார். இதற்காகத்தானா இத்தனை தொலைவு. . என்று அவரின் மனம் அரற்றியது.

தொழில்களத்தில் நிச்சிந்தையாக அவரின் கரங்களே அவராகியிருந்தார். முதுகென்பு அச்சை நிறுத்தி மற்ற என்புகளை அதன் துருவங்களில் பொருத்தினார். சமச்சீர் அச்சிலிருந்தவை துருவங்களுக்கு இடம் மாறிய போது ஆற்றல் குவிந்தது. இரு புறமும் அலகின் விசை கொண்ட பருந்தின் இரு சிறகுகளின் வேகம் என்ற எண்ணம்தான் அவருக்கு இருந்து கொண்டேயிருந்தது.

சரியான மூலப்பொருள் தனக்குரிய வடிவை தன்னுள்ளேயே வைத்திருப்பதை உணர்ந்திருந்த கருமத்தின் தலைவன் அது எழுந்து வருவதைக் கண்டுகொண்டிருந்தார்.

ஒலி, ஔி, காற்று, தண்மை, வெம்மை கொண்டு உயிராயுதம் அவர் கைகளில் இருநிலைகளில் மாயம் காட்டியது. இருக்கிறேன் எனவும், இல்லை எனவும். ஆயுதம் எனவும் சொப்புச் சாமான் எனவும்.

செய்தவன் நிறைந்து வழிந்து அமர்ந்தான். கையிலெடுத்தவன் வான் நோக்கிப் பறந்தான். வருயுகங்களில் உயிரானதும், ஔி எனப் பரவுவதும், காற்றென விரைவதும், கண்கள் அறியாததுமான சூட்சுமவ்வஜ்ராயுதத்தை ஏந்தி வருபவன் இம் மண்மேல் இதே போலொரு தலைவனாவான் என்ற அசரீரி ஒலித்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.