அலகுடைய விளையாட்டு

“ஆர்ஸ் இல்லை, ஆர்சனல்!” குளியலறைக் கூடத்தில், சிதறும் தண்ணீர் துளிகளினுடே பெருத்த சிரிப்பு சத்தம் எதிரொலித்தது. மறைப்பில்லா பதினைந்து ஷவர்கள் கொண்ட அந்த பெரிய கூடத்தை எங்கள் பாட்மின்ட்டன் சங்கத்தின் அங்கத்தினர்களே பெரும்பாலும் நிறைத்திருந்தாலும் கால்பந்து கிளப்புகள் பற்றிய பேச்சுகள்தான் எப்போதுமே அதிகமாக இருக்கும்.

இதற்கு முன், பிரிட்டனிற்கு வந்த புதிதில், முதன்முறையாக இப்படிக் கொத்துத் கொத்தான வெளிறிய நிர்வாணங்களைக் கண்டு அதிர்ந்தேன்.

வடக்கே ஹாலிபாக்ஸ் என்ற ஊரில், வந்து மூன்றே வாரங்களில் உள்ளூர் பாட்மிண்ட்டன் சங்கத்தைக் கண்டுபிடித்து, அன்றைய இரவு ஆட்டம் முடிந்த பின், ஆட்டக்காரர்கள் உடை மாற்றுவதற்கான பகுதியில் உடைகளை இயல்பாக களைந்துவிட்டு மறக்காமல் அவரவர் ஷவர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள எந்த மறை கதவுகள் இல்லாத, பொது ஷவர்களின் அடியில் நிற்பதைப் பார்த்தும் பார்க்காமலும் நின்றேன்.

உள்ளாடையை கழற்றாமல் ஷவரின் அடியில் போய் நிற்கலாமா என்று தயங்கினேன். அதற்கு வேறதோர் அர்த்தம் கண்டுபிடிப்பார்களே என்ற நினைவு வந்ததும் தயக்கமாக உருவிவிட்டு ஷவர் குப்பியை சற்றே இயல்பாய் தொங்கும் இரு கைகளால் பிடித்துக்கொண்டே ஷவர் அடியில் பதட்டமாக நின்றேன்.

அதைக் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல் நடிக்கச் சில வாரங்கள் தேவைப்பட்டது. பின்னர் பழகிவிட்டது.

அதன்பின் என் வாடிக்கையாளர்களைப் பொறுத்து இத்தனை வருடங்களில் நாலைந்து நகரங்கள் மாறி இருக்கிறேன். எந்த நகரத்திற்கு மாற்றல் ஆகிப் போனாலும் சாரதாவிற்கு உள்ளூர் மருத்துவனையில் தாதி வேலை கிடைக்கச் சில வாரங்களிலிருந்து சில மாதங்கள்கூட ஆகலாம். ஆனால், நான் முதல் இரு வாரங்களுக்குள் உள்ளூர் பாட்மின்ட்டன் சங்கத்தைக் கண்டுபிடித்துச் சேர்ந்து விடுவேன். சில சங்கங்களில் சற்றுத் தயங்குவார்கள். சில வாரங்கள் வந்து ஆடு, பின்னர் நிரந்தர உறுப்பினர் ஆவது குறித்துப் பார்க்கலாம் என்பார்கள். எனக்குத் தயக்கமே இருக்காது. என் முதல் இரு ஆட்டங்களிலேயே அவர்களது தயக்கம் அகன்றுவிடும் என்று தெரியும்.

எத்தனை வருடங்களாக பாட்மிட்டன் ஆடி வருகிறேன்… பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் காருண்யா கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அணிகளுக்கான அந்த அரையிறுதிப் போட்டியில் ஜெயித்தது இன்றும் இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறது…

சென்ற வருடம் லண்டனுக்குக் கிழக்கில் இருக்கும் இந்த ரேலி நகரத்தில் வீடு பார்க்கும் போதே உள்ளூர் பாட்மின்ட்டன் சங்கங்களைப் பற்றியும் இணையத்தில் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இந்த ரேலி சங்கத்தின் இணைய தளத்தில், சங்கம் ஆரம்பித்து கிட்டதட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்ற விஷயத்தை விட, மாவட்ட லீக்கின் அனைத்து டிவிஷன்களிலும் விளையாடுகிறார்கள் என்றவுடனேயே இங்கு சேர்ந்துகொள்வது என்று முடிவு செய்துவிட்டேன்.

வாரத்தில் இரு நாள்களில் விளையாடுகிறார்கள் என்று தெரிந்தவுடன் இன்னும் திருப்தி…

…குனிந்து சோப்புக் குப்பியை எடுக்கக் குனிந்த போது இன்னொரு பக்கத்து ஷவரில் வந்து நின்ற நரை முடிகள் பூத்த கால்கள் தெரிந்தன. அகலமான, தரையை உறுதியாக அழுத்திய கால்கள் அவை. மாபெரும் கோட்டைச் சுவர்கள் போல உணர்ந்தேன். மெல்ல நிமிர்ந்து ஷவர் நீர் முகத்தில் வழிய வழிய டோடியாவைப் பார்க்க முயற்சித்து கண்களை மூடிக்கொண்டேன்.

இன்று வழக்கமான மற்றொரு நவம்பர் மாத வியாழக்கிழமை, அவ்வளவுதான். காலை, M25 மோட்டார் பாதையில் சரியாக இருபத்தெட்டாம் சந்திப்பிற்குச் சற்று முன் அதிகப் போக்குவரத்தினால் சிவப்புக் கண்கள் பூத்த கார்களின் வரிசையைக் கண்டு சலித்து, காரை மெல்ல இரு சந்திப்புகள் வரை உருட்டிக்கொண்டே போய், ஒன்பது மணி கூட்டத்திற்கு ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போனதிலிருந்து, மதிய உணவு உண்ண நேரமின்மையால் ஓர் அலுவலகக் கூட்டத்திலிருந்து இன்னொரு கூட்டத்திற்குப் போகும் வழியில் சாண்ட்விச் கடித்துக்கொண்டே ஓடி…இரவு எட்டு மணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பே பாட்மின்ட்டன் கோர்ட்டிற்குள் நுழைந்த பத்து நபர்களில் நானும் ஒருவன்…

இன்றைய இரு மணி நேர ஆட்டத்தில் டோடியாவிற்கு எதிராக 4 ஆட்டங்களாவது ஆடியிருப்பேன். அதில் மூன்றில் மிக நெருக்கமாக வந்து கடைசியில் தோற்றேன். நான்காவதில் படுதோல்வி…இன்னொரு வழக்கமான வியாழக்கிழமை…

ஷவரை நோக்கி நிமிர்ந்து என் வியர்வை, எரிச்சல்கள் எல்லாம் சோப் குமிழிகளோடு செல்ல, மூடிய கண்களோடு ஆயாசமாக நின்றேன்…

நான் இந்த சங்கத்தில் சேர்ந்த ஓர் ஏப்ரல் வார வியாழன் மாலையில், ஐந்து கோர்ட்களிலும் ஆட்டக்காரர்கள் ஆடிக்கொண்டிருக்க, அதற்கு இணையான எண்ணிக்கையில் அரங்க ஓரங்களில் போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளிலும், முதல் தள பார்வையாளர் அரங்கத்தில் ஆட்டக்காரர்கள் காத்திருக்க, அந்த சங்கமே ஓர் பரபரப்பான மாலை வேளை உள்ளரங்க அங்காடி போன்று ஜொலித்தது.

அங்கிருந்த கிட்டதட்ட முப்பது பேர்களில் நான் மட்டுமே பழுப்பு நிறத்தவன். அதனால்தான் அடுத்த வாரத்தில் பரத் டோடியா உள்ளே வந்த போது சட்டென கண்ணில் பட்டார். இன்னொரு காரணம் அவரது உயரமும், அதனால் சற்றே கூனலான முதுகும் கூட இருக்கலாம். அல்லது அவரது தளர்வான, அவருக்கு மட்டும் மெதுவாக நகரும் கடிகார முட்கள் போன்ற நடை…மெதுவாக ஒரு காலை அடி எடுத்து திரும்ப வைக்கும் வரை அடுத்த காலை தரையில் நிமிர்த்தாத நடை.

நான் எனக்கான அழைப்பிற்காக காத்திருக்கும் போது, எதிர் கோர்ட்டிற்குள் டோடியா ஆட வந்தார். கூட வந்த பார்டனருடன் மெல்லிய புன்னகையுடன் பேசிக்கொண்டு மிக இயல்பாக வார்ம் அப் செய்ய ஆரம்பித்தார். அவரது பார்டனர், நீல், சற்றே குள்ளமாக, கோர்ட் விளக்குகளின் வெளிச்சம் முடியில்லாத தலையில் ஒளிர வார்ம் அப் ஷாட்டுகளை ஆடிக்கொண்டிருந்தார். அவரது உருண்டு திரண்ட கைகளில் வரையப்பட்டிருந்த ஏதோ ஒரு சிக்கலான சித்திரமும் அவருடன் அசைந்துகொண்டிருந்தது. அரங்கில் சக ஆட்டக்காரர்களின் வயதை கண்டுபிடிக்க முயல்வதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆட்டம் ஆரம்பித்தவுடன் இறகுப்பந்தின் சத்தங்கள் மட்டுமே கேட்டன. ஆட்டப்புள்ளிகளைக் கூட யாரும் சொல்லவில்லை. இதுவும் எனக்கு பழகிவிட்டிருந்தது.

எனக்கான அழைப்பு வரும் வரை டோடியாவின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த சங்கத்தில் பெரும்பாலானோர் லீக் ஆட்டங்கள் ஆடக்கூடிய தரத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்ததால் எதுவும் வித்தியாசமாகப் படவில்லை. டோடியாவும் அப்படித்தான். கோர்ட்டிற்குள் ஓடுவதென்பதே கிடையாது. மொத்த கோர்ட்டையும் மூன்று அடிகளில் கால்களை முன் வைத்துக் கவர்ந்தார். அதே போல், பின்னால் மூன்றே முறையில்/அடியில் நகர்ந்து பேஸ் லைனைக் கவர்ந்துவிட்டார். இடம் வலமாகவோ முன் பின்னோ நகருவதும் சாதாரணமாகத்தான் தெரிந்தது, வெளியே இருந்து பார்ப்பதற்கு.

என்னை அடுத்த ஆட்டத்தில் ஆடும்படி  சங்க செயலாளர், மைக், பணித்தார். அதுதான் அவர் வேலை. ஒரு மூலையில், விளையாட வரும் ஆட்டக்காரர்கள் அவர்கள் பெயர் பொறித்த சிறு காந்த அட்டையைச் சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிய வெண்பலகையில் வைத்துவிட வேண்டும். மைக், ஆட்டக்காரர்களின் தரத்தைப் பொறுத்து அணிகளைத் தீர்மானித்து பெயர்களைக் கூவுவார். முதல் இரு கோர்ட்களும் ப்ரிமியர் ஆட்டக்காரர்களுக்கானது. மற்ற மூன்று கோர்ட்டுகளும் அடுத்த கட்ட ஆட்டக்காரர்களுக்கு.

சங்கத்திற்கு முதல் முறை ஆட வருபவர்களை முதலிரண்டு கோர்ட்களில் சங்கத்தின் முதன்மை ஆட்டக்காரர்களுடன் சில ஆட்டங்கள் ஆட விடுவார்.

அவர்கள் அலைகழிக்கப்படுவதை சற்று அலட்சியமாக, புன்னைகையால் மறைத்துப் பார்த்துவிட்டு அடுத்த கோர்ட்களுக்கு அவர்களை நகர்த்துவார். பெரும்பாலான முதன்முறையினர் அடுத்த முறை வரமாட்டார்கள்.

என்னையும் அப்படித்தான் ஆடவைத்தார். ஆனால் நான் முதல் ஆட்டத்தில் வென்றது மைக்கையும் அங்கிருப்பவர்களையும் நிச்சயம் கவனிக்க வைத்திருக்க வேண்டும்.

அடுத்த ஆட்டத்தில் டோடியாவையும் அவரது சகாவையும் எதிர்கொண்டேன். உண்மையில் நான் கவனிக்கத்தக்க வகையில் அவரின் ஆட்டம் இல்லவே இல்லை. ஆக்ரோஷமாக எழும்பி, தரையில் இறங்கும் முன் ராக்கெட்டை சுழற்றி அடிக்கவில்லை. சர்வீசை அதிவேகமாக எதிர்கொள்ளவில்லை. சாவி கொடுத்த பொம்மை போல் எப்போது வலைக்கு முன் வரவேண்டுமோ அப்போது வந்து, நடுவில் செல்லவேண்டிய போதெல்லாம் பதட்டம் இல்லாமல் சென்று இறகு பந்தை எங்கள் பகுதிக்கு செலுத்திக்கொண்டே இருந்தார். அவரது பார்டனருடன் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் பல வருடங்கள் சேர்ந்து விளையாடுகிறார்கள் என்பது அவர்களுக்குள்ள புரிதல், எனக்கு முதல் ஐந்து நிமிடத்திலேயே புரிந்துபோனது. முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் தோற்றுவிட்டோம்.

ஆட்டம் முடிந்தவுடன் இரு அணியினரும் வலையை நெருங்கி கை குலுக்கிக் கொண்டோம். வலைக்கு மேலிருந்து நரை முடிகள் மூடிய, வியர்வை மினுமினுத்த கரமும் உருண்டு திரண்ட விரல்களும் என்னை நோக்கி தாழ வந்தன.

“…ஆ, உன் கை இன்னும் சில்லிடுகிறது. நீ இன்னமும் வார்மப் ஆகவில்லை போல” என்று ஒழுங்கற்ற, வெளுத்த பற்களுக்கு இடையில் புன்னகைத்தார். சூடான அவரது உள்ளங்கையில் எனது மொத்த கரமும் அடங்கிவிட்டது. அவரது மூச்சு சத்தம் மேலிருந்து குகையிலிருந்து வருவது போல் பெரிதாக இருந்தது.

அன்றைய இரவில் அவரை கிட்டதட்ட மூன்று அல்லது நான்கு போட்டிகளில் எதிர்கொண்டேன். அனைத்து ஆட்டங்களிலும் அவருக்கு நீல் பார்டனர், என்னுடைய பார்ட்னர் மாறிக்கொண்டே இருந்தார்.

நாங்கள் ஒரு முறைகூட வெற்றி பெறவில்லை என்பதைவிட ஒரு முறைகூட எங்கள் எண்ணிக்கை பன்னிரண்டைத் தாண்டவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.

நான் சங்கத்திற்கு புதிது ஆகையால் எனக்கும் என் பார்ட்னருடான புரிதல் ஏற்பட இன்னும் கொஞ்ச நாள்கள் ஆகும் என்று நானே சமாளித்துக் கொண்டேன்.

ஒரு ஆட்டத்திற்கும் அடுத்த ஆட்டத்திற்கும் இடையில் குறைந்தது மூன்று நிமிடங்களாகவாவது பெஞ்சில் காத்திருக்க நேர்ந்தது. ஒரு முறை அவரது அருகில் அமரும்போது, முதியோர் இலவச பஸ் பாஸ் விண்ணப்பத்தைப் பற்றிய சில விளக்க வாக்கியங்கள் மட்டும் அவர் பக்கத்திலிருந்து கேட்டது. நான் தலையைத் திருப்பவில்லை.

சரியாக பத்து மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது மைக் “நேரம், இளைஞர்களே” என்று சிறு, முற்று பெறாத ஒற்றை வாக்கியத்தில் அனைத்து ஆட்டங்களையும் நிறுத்தினார். நான் என்னுடைய பாட்மின்ட்டன் பையை சேகரித்துகொண்டு களைப்பாக கோர்ட்டை விட்டு வெளியேறித் தயங்கி நின்றபோது “குளியல் அறைக்கு போக வேண்டுமானால் என்னைத் தொடர்ந்து வா” என் தலைக்கு மேல் அசரீரி வேர்வையாகக் கொட்டியது. களைப்பாக அவரைத் தொடர்ந்தேன். நீண்ட தாழ்வாரத்தில் கூனலுடன் கால்களை மெதுவாக எடுத்து எடுத்து வைத்துப் போனார்.

பின்னர் அதைவிட மெதுவாக நடந்து வந்த அவரைக் கார் நிறுத்தத்தில் என் காரின் அருகில் சந்தித்தேன்.

திறந்திருந்த அவர் காரில் ஒரு காலை மட்டும் வைத்துவிட்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

தயக்கமாக, “மன்னிக்கவும்” என்றேன்.

“ஓ, மன்னிக்கவும், உன் காரின் வழியில் நிற்கிறேன்…இன்றைக்கு மேகமில்லா வானம். என்னுடைய பிரியமான மூன்று நேர்கோட்டு சகோதரிகள் இன்று வந்திருக்கிறார்கள்…” என்று சிரித்துக் கொண்டே தளர்வாக உள்ளமர்ந்து கதவைச் சாத்திவிட்டார். உடனேயே சட்டென திறக்கப்பட்ட கதவின் பின்னிருந்து, “சரவணன், உன்னுடைய பாட்மிட்டன் reflex அருமையாக இருக்கிறது, இயல்பாகவே இருக்கிறது.”

வந்த குரலை நோக்கிப் புன்னகைத்தேன்.

கல்லூரிக் காலங்களிலிருந்து பல பயிற்சியாளர்கள் என்னிடம் சொன்னதுதான். அனிச்சை என்பது பாட்மிட்டனில் மட்டுமல்ல, கல்லூரிக் கிரிக்கெட் அணியில் இருந்தபோது நான் நிரந்தர ஸ்லிப் வாசி. ஈரோடு எம்ஜியார் சிலையருகில், நள்ளிரவில் மேட்டூர் சாலையில் வலதுபுறம், ஹோண்டாவில் திரும்பியபோது எதிரில் நெடிதுயர்ந்த லாரி தடதடத்துவெகு அருகில் வந்தும்கூட, ஒரே ஆக்ஸிலேட்டர் முறுக்கில் அதனைத் தவிர்த்து விலகி ஒன்றும் நடக்காதது போல் விரைந்த போது சாரதாவின் நடுங்கிய ஆச்சரிய கேள்விக்கும் இப்படித்தான் புன்னகைத்தேன்…

ஆனால் அடுத்த வாரத்திலும் அவருக்கு எதிரான ஆட்டங்களில் ஒன்றில் கூட என்னால் வெற்றி முடியவில்லை. அடுத்த வாரம்…அதற்கு அடுத்த வாரம்…இதோ, இந்த நவம்பர் மாதம் வரை…ம்ஹூம்…

ஆனால் முதல் சில வாரங்களுக்குப் பின்னர் நான் ஆச்சரியப்படுவதை விட்டுவிட்டேன். அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவர் ராக்கெட்டைச் சுழற்றி இறகுப்பந்தை எதிர்கொள்ளும் விதம் சுவாரசியமானது. அவர் அதை அடிக்கப் போகிறாரா அல்லது ட்ராப் செய்யப் போகிறாரா என்பது ராக்கெட்டின் மெல்லிய கயிறு இறகுப் பந்தைத் தொடும் அரைக்கணம் வரை தெரியாது. இரு விதமான ஷாட்டுகளுக்கும் அவரது உடலசைவு, இடது கை ஒன்றாகவே இருக்கும்.

ஒரு தங்கக் கணத்தில் இறகுப்பந்து வலையை ஒட்டி இறகாகவே இறங்கும். இன்னொரு கணத்தில் கடுமையான வேகத்தில், எதிர் ஆட்டக்காரரின் நெஞ்சு அல்லது நெற்றி, அவரது உயரத்தைப் பொறுத்து, அடைந்துவிடும். சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றே தோன்றும். நான் ஆரம்பத்தில் அப்படித்தான் எதிர்கொண்டேன். ராக்கெட் வைத்திருக்கும் என் கை அதை எதிர்கொள்ளுவதற்கு முன் இறகுப்பந்து என் மார்பிற்கு மிக அருகில் வந்திருக்கும். அல்லது நெற்றிக்கு.

அவரின் ஒவ்வொரு முக்கிய பலத்தைக் கண்டு கொள்ளும் போதும் எனக்குச் சற்று ஆசுவாசமாக இருக்கும். எதிராளியின் பலம் தெரிவதுவரைதான் பதட்டம். தெரிந்த பின் எப்படியும் கையாண்டுவிடுவது என்பது எனக்குத் தெரியும். அடுத்த வாரத்தில் அதைப் பரிசோதிப்பேன். ஒன்று அல்லது இரண்டாவது ஷாட்கள் பதிலடி தருவேன். தந்தபின் இறகுப்பந்தை தரையில் இருந்து ராக்கெட்டைக்கொண்டு கவரும் போது தற்செயலாக அவர் கண்களை உற்று நோக்குவேன். மாற்றமே இருக்காது.

ஆனால் அடுத்த ஆட்டத்தில் அவர் என்னுடைய பதில்களைச் சுலபமாகக் கையாண்டுவிடுவார். நான் மிகக் கவனத்துடன் அவரது பேக் ஹாண்ட்டிற்கு இறகுப்பந்தை பின் தள்ளுவேன். பதில் எப்போதுமே பலகீனமாகத்தான் நம்மிடம் வரும். இறகுப் பந்து பாதி கோர்ட்டைத் தாண்டாது.

ஆனால், டோடியாவிடம் இருந்த பதில் இன்னும் எளிமையானது. அவரது பின் கை ஷாட், forehand (முன் கை) ஷாட்டிற்கு இணையானது அல்லது அதைவிட வலிமையானது. இறகுப்பந்து நம் கோர்ட்டின் பின் பெட்டியின் விளிம்பிற்கு சற்று முன் துல்லியமாக இறங்கும்…

டோடியா விளையாட்டில் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருந்தார்…


டோடியாவின் கோட்டைக்குள் சற்று உள் செல்ல வாய்ப்பு கிடைத்தது அவருடன் பார்ட்னராக விளையாட சந்தர்ப்பம் கிடைத்த போதுதான் என்று நினைக்கிறேன்.

ஓர் ஜூலை வியாழனில் வழக்கம் போல் உடை மாற்றும் அறையிலிருந்து வெளி வந்து மைக்கிடம் நான் வந்திருக்கிறேன் என்று அறிவித்துவிட்டு பெஞ்ச்சில் உட்கார்ந்து வாயிலை நோக்கினேன்.

“அட, யார் வந்திருக்கிறார் பார்!” என்று மெல்ல விசிலடித்தேன். அருகில் அமர்ந்திருந்த நீல் மற்றும் சிலரும் வாயிலை நோக்கி மெல்ல பரத் டோடியா நடந்து வருவதை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

“என்ன, அதற்குள் வந்துவிட்டீர்கள்” என்று நான் கேட்டதை டோடியாவின் உருண்டை முகம் கண நேரத்தில் மின்னி உள்வாங்கிக்கொண்டது.

“காட்ராக்ட் சிகிச்சை, என்ன இரு நிமிடங்கள் கூட இல்லை” என்று பாட்மிட்டன் பையை சுவரை ஒட்டி வைத்தவாறே முணுமுணுத்தார்.

“இருந்தாலும், வெளிச்சம் அதிகம் படாமல் இன்னும் இரு வாரங்கள் இருக்கலாம் இல்லையா?” என்றேன்.

“இது என்ன பெரிய சமாச்சாரம்” சொல்லிக்கொண்டே வார்ம் அப் செய்ய ஆரம்பித்துவிட்டார். குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் நிதானமாக வார்ம் அப்பை செய்து முடித்துவிட்டுதான் கோர்ட்டிற்குள் இறங்கினார்.

பனிக் காலத்தில் இன்னொரு பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்வாராம்.

முதலிரண்டு ஆட்டங்களில் சற்று நிதானித்தார். தலையை தூக்கி இறகு பந்தை எதிர்கொள்ளும் போது விளக்கு வெளிச்சத்தை சற்று குனிந்து தவிர்த்தது போலத்தான் இருந்தது. பாதி ஆட்டத்தில், கோர்ட்டிலிருந்து வெளிவந்து தனது பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டார். விளையாட்டு முடிவுகளில் எந்த வித்தியாசமும் இல்லை.

அடுத்த விளையாட்டு அழைப்பிற்காக நான் பெஞ்சில் அமர்ந்து பின் சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருந்தேன். “அ..ரே..” என்ற பெரும் ஆயாச குரலுடன் என் இடது பக்கத்தில் இரு பெஞ்சுகள் தாண்டி டோடியா அமருவதை கவனித்தேன்.

என் வலது பக்கத்தில் மூன்று நீள பெஞ்சுகள் தள்ளி காத்திருந்தவர்களிலிருந்து ஒரு தலை முன் நகர்ந்து “ என்ன அவசரம் டோடியா, இன்னும் இரு வாரங்கள் கழித்து வந்திருக்கலாமே? அரங்கின் வெளிச்சங்கள் சிரமமாக இல்லையா?” என்றது.

டோடியா மெல்லத் தலையை முன் நகர்த்தி, குரல் வந்த திசையை நோக்கித் திருப்பி, “இன்னும் எத்தனை நாள்கள் எனக்கு இருக்கின்றன ஜார்ஜ்? இருக்கும் வரை தவற விட மாட்டேன்” என்று உயராத குரலில் மெல்லிய எஸ்ஸேக்ஸ் உச்சரிப்பில் உச்சரித்தார். பின் மெல்ல தலையை ஆமை தலை போல் ஓட்டிற்குள் உள்ளிழுத்து கொண்டார். எந்த சூழலிலும் குரலில் ஒரு டெசிபல் கூட குறையாது என்று தோன்றியது. “டோடியாவிற்கு ஒரு கண்ணே போதுமானது” என்று இன்னொரு மூலையில் ஒலித்த குரலை ஒட்டிச் சிரிப்பொலிகள் எழுந்தன.

வழக்கமான இன்னொரு டோடியாவின் வெற்றி வியாழக் கிழமையாக இருந்திருக்க வேண்டிய அன்றைய கடைசி அரை மணி நேரத்தில் அவரது பார்ட்னர், நீல், ஒரு ட்ராப் ஷாட்டை எடுக்க வலையின் வலது மூலையிலிருந்து இடது மூலைக்கு செல்ல முயன்றபோது ‘ஓ’ என்றவாறே அமர்ந்துவிட்டார்.

எல்லா கோர்ட்களிலும் ஆட்டங்கள் நின்றுவிட்டன. ஒவ்வொருவராக நீலை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். அனேகமாய் நீலின் வலது கணுக்கால் பிசகியிருக்க வேண்டும். அவரை மெல்ல நானும் மார்ட்டினும் தோளில் தாங்கியவாறே கோர்ட்டுகளின் எல்லைக்கு அப்பாற் இருந்த மர பெஞ்சின் மேல் அமர வைத்தோம்.

நீலின் முகத்தை கவனித்தேன். வலிக்கிறதா என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்குள் மைக் முதலுதவிப் பெட்டியிலிருந்து எடுத்து வந்த பனிக்கட்டி பொதிந்திருந்த பொட்டலத்தை நீலின் கையில் திணித்தார்.

குளியலறைக் கூடத்தில் டோடியா, மார்ட்டினிடம் நாளை மறுநாள் நடக்கவேண்டிய முக்கிய லீக் ஆட்டத்தில் நீலிற்கு பதில் ஆட முடியுமா என்று பேசிக்கொண்டிருந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது.

அந்த வார இறுதியில் லீக் இணையத்தளத்தில் அந்த மாட்ச் முடிவுகளைப் பார்த்தேன், திருப்தியாக இருந்தது. அடுத்த வியாழனில் குளியல் கூடத்தில் அவர் என்னை பார்ட்னராக ஆட முடியுமா என்று கேட்டபோது ஆச்சரியம் இல்லாமல் சம்மதம் சொன்னேன்.

அன்றிரவு ஷவரில் வழக்கத்திற்கு மேல் அதிகமாக நின்றேன். “ஹேய்…உனக்கு நல்ல குரல் வளம்!” என்று பக்கத்து ஷவர்களிலிருந்து சிரிப்புச் சத்தங்கள் கேட்டன.

அந்த லீக் ஆட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே நான் பதட்டத்தை உணர்ந்தேன். அந்த வார நாட்களில் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து இருபது நிமிடங்கள் ஓடிவிட்டுத் திரும்பினேன். அந்த வார வெள்ளியன்று முப்பத்தைந்து நிமிடங்கள் ஓடினேன். அன்று மாலையில் டோடியாவிடமிருந்து அடுத்த நாள் மாலை 7 மணிக்கு என்னை ஆட்டம் நடக்கவிருக்கும் மால்டனிற்கு அழைத்துச்செல்வதாக கைப்பேசியில் செய்தி வந்தது.

எதிர்பார்த்துத் தயாராக இருந்தது போலவே மாலை 6:55 க்கெல்லாம் டோடியாவின் சிவப்பு சாப் வாசலில் வந்து நின்றது.

“இருபது நிமிடங்கள்தான் ஆகும், மால்டனிற்கு போக. இருந்தாலும் வழியில் போக்குவரத்து எப்படியிருக்குமோ என்னவோ?” என்றார்.

பத்து நிமிடங்களில் மால்டன் சங்கத்தின் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தியாகி விட்டது. டோடியா, நிதானமாகத் தனது வார்ம் அப்பைத் தொடங்கினார். அந்த கிளப் அங்கத்தினர்கள் பெரும்பாலானோர் டோடியாவிடம் வந்து ஓரிரு வார்த்தைகள் பேசிச் சென்றார்கள்.

“என்ன டோடியா, இங்கயும் நீங்க ரொம்ப பிரபலம் போல?” என்றேன், பாட்மிட்டன் ஷூவை மாற்றிக்கொண்டே.

“பின்ன? எத்தனை வருடங்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறேன்?”
“இன்றைய ஸ்பெஷல், புது ஆளான நீதான். எப்படி ஆடப்போகிறாய்? எல்லாரும் கவனிப்பார்கள்.”

எதிராக ஆடும்போது சட்டெனப் பிடிபடாத விஷயங்கள் கூட ஆடும்போது பட்டன.

எங்கள் முதல் இரு ஆட்டங்களில் பெரிதாய் சுவாரசியம் இல்லை. வழக்கம் போல் டோடியாவின் பிசகில்லாத ஆட்டங்கள் எதிரணிகளைப் பிசகு செய்யத் தூண்டின. சற்று நேர ராலிகளுக்குப்பின் முதல் தவறை அவர்கள் செய்வார்கள். டோடியா என்னருகில் வரும் போது “they blink first!”என்ற உற்சாக முணுமுணுப்பு கேட்கும்.

அவர்கள் பதட்டத்துடன் எகிறி அடிப்பார்கள். டோடியா நிதானமாக வலையை ஒட்டி ட்ராப் போடுவார். அல்லது இறகு பந்தை வந்த வேகத்தை விட அதிகமாக அவர்களின் பேஸ் லைனிற்கு திரும்பத் தருவார். பல சமயங்களில் அவர்களிடமிருந்து இறகுப்பந்து வராது. அப்படியே வந்தாலும் பலகீனமாய் எங்கள் நடு கோர்ட்டிற்கு வரும். என் வேலை சுளுவாய், ஒரே அடியில் போய்விடும். அவர்களது ஒவ்வொரு எதிர்கால அசைவும் டோடியாவிற்குத் தெரிந்திருந்தது.

மூன்றாவது மாட்ச்சில் ஒன்றைக் கவனித்தேன். இந்த எதிரணியில் இருவருமே மால்டன் சங்கத்தில் சமீபத்தில் சேர்ந்திருக்க வேண்டும். டோடியா இதற்கு முன் இவர்களைக் கண்டதில்லை என்று முணுமுணுத்தார். முப்பது வயதிற்குள்தான் இருக்க வேண்டும், அந்தத் துடிப்பு இருந்தது. மின்னலாய் அசைந்து வந்தார்கள். எங்கள் ட்ராப்களை மிக வேகமாக முன் வந்து எடுத்துவிட்டார்கள்.

17-17 வரை சென்ற இருந்த முதல் ஆட்டத்தில் எப்படியோ வென்று விட்டோம். தண்ணீ குடிக்கும் போது நான் சத்தமாக மூச்சு விட்டதைக் கேட்டும் டோடியா ஒன்றும் சொல்லவில்லை. வழக்கமான புன்னகை மட்டும் இருந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் சுலபமாக தோற்றுவிட்டோம். நான் பல தவறுகள் செய்தேன். என்னுடைய ட்ராப்கள், மிக எளியதாய் இருந்திருக்க வேண்டியவை, இருந்திருந்தவை, இன்று வலையில் இடித்தன.

பத்துப் புள்ளிகளுக்குப் பின் அவற்றைத் தவிர்த்து பேக் பாக்ஸிற்கு தூக்கி க்ளியர் செய்ய ஆரம்பித்தேன்.

ராலிகள் அதிகமாக அதிகமாகத் தவறுகள் சுலபமாக வந்தன. சர்வீஸ்கள் நெட்டில் பட்டன அல்லது உயரமாக இருந்தன. அவற்றை அவர்கள் எளிதில் நொறுக்கினார்கள். டோடியாவும் சில எளிய தவறுகள் செய்தார். ஆனால் அவை என் தவறுகளின் தொடர்விளைவுகள் இவை என்பது எங்கள் இருவருக்குமே தெரிந்திருந்தது.

மூன்றாவது ஆட்டத்திற்கான இடைவெளியில் டோடியா, தன் வழக்கமான மெல்லிய குரலில் கொஞ்சமே சொன்னார்.
“சரவணன், தயவு செய்து unforced errors தவிர்க்கப் பார்…”


சென்ற மாதம் இந்தியாவிலிருந்து சாரதா வாங்கி வந்த புது சட்டையை அவசரமாக அணியும்போது கழுத்துப் பட்டியிலிருந்து குத்திய குண்டூசி போல் உணர்ந்தேன்.

மூன்றாவது ஆட்டம் ஆரம்பிக்கும் போது மெல்ல என் தோளைத் தட்டினார். நான் நீண்ட மூச்சிழுத்து விட்டேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் இறகுப்பந்தை கூர்மையாக பார்த்தேன். அதை பார்வையால் தொடர்ந்து கொண்டே இருந்தேன். தவற விடவே இல்லை.

முந்தின ஆட்ட அளவிற்கு தவறுகள் செய்யவில்லை எனினும் சிற்சில தவறுகள் தொடரத்தான் செய்தன.இம்முறை டோடியா சுலபமாக கையாண்டார். அவருக்கு மட்டும் இறகுப்பந்தை எதிர் கொள்ள அதிக நேரம் இருந்ததைப் போன்று தோன்றியது. அவர் நிதானமாக அவற்றை என்ன செய்யலாம் என்று முடிவு செய்யும் வரை இறகுப் பந்து அவருக்காக அந்தரத்தில் காத்திருந்தது. அவருக்காக மட்டும்தான். வேறுயாருக்காவும் இல்லை.

அத்தனை கடுமையான வேகத்துடன், அடிக்கப்பட்ட இறகுப்பந்தை பொறுமையாக, சவுகரியமாக தேர்வினில் வந்திருந்த கேள்விகள் அனைத்திற்கும் தெரிந்த பதில்களால் எதிர்கொள்வது போல் எதிர்கொண்டார். திரும்ப அனுப்பினார். அவர்கள் திரும்பத் திரும்ப உயர உயர எகிறி அடித்த அனைத்து கேள்விகளுக்கும் அவருக்கு முழு பதில் தெரிந்திருந்தது. ஒரு பிசகு இல்லாமல் பதிலளித்தார்…

அந்த கிளப்பின் குளியலறைகள் சின்ன ப்ளாஸ்டிக் திரைகளின் மூலம் பிரிக்கப்பட்டிருந்தன.

ஷவர்களின் சத்தத்தினூடே தர்மசங்கட மவுனத்தை கலைக்க விரும்பி “ஸாரி டோடியா” என்றேன்.

நிச்சயம் அவர் புன்னகைத்திருக்க வேண்டும்.

அதனால் என்ன பரவாயில்லை என்று சொல்வார் என்று நான் அதிகம் எதிர்பார்க்கவில்லை. அவரும் சொல்லவில்லை.

பதிலாக, மெல்லிய சிரிப்புடன் “அவர்கள் மூன்றாவது ஆட்டத்தில் தோற்றதற்கு என்ன காரணம் என்று நீ நினைக்கிறாய்?” என்ற கேள்வி திரைக்குப்பின் வந்தது.

நான், தயக்கத்துடன், “ இளைஞர்கள்…அதிகம் யோசிக்காமல் அடித்துக்கொண்டே இருந்தார்கள்” என்றேன்.

“பாதி உண்மை…”…சில கணங்களுக்குப்பின் ஷவர் திரையைத் திறந்து நீர்த் தெறிப்புகளுக்கு இடையில், அவர், “இளைஞன் என உன்னை அவர்கள் தவிர்த்தார்கள். பெரும்பாலான ஷாட்டுகள் என்னைக் குறி வைத்தே இயங்கினார்கள்” என்றார்.

விளக்குகளின் பிரகாசமான மஞ்சள் வெளிச்சத்தில் பளபளக்க, ஷவர் நீர் அவரது வழுக்கைப் பெரும் பாறையிலிருந்து வழிய வழிய இன்னொரு டோடியா பிரமாண்டமாக காட்சியளித்தார்.

நான் அயர்ந்து போனேன்.

உடைகள் மாற்றிக்கொண்டு நான் முதலில் வெளியே வந்து அவருக்காக காரின் அருகில் காத்திருந்தேன்.

கொண்டிருந்தேன். ஏன் என்னுடைய உச்சத்தில் விளையாடவில்லை, ஏன் இப்படி எளிய எளிய தவறுகள் செய்தேன்…எங்கே போயின என் அனிச்சைகள்…எத்தனை வருட பழைய கேள்விகள்…என்றோ மறைந்து போய்விட்டன என்று நினைத்திருந்தேன்…இல்லை, இன்று மிக முக்கிய தருணங்களில் மீண்டும் மேல் வருகின்றன…ஒரு தவறு செய்த பின் அதை உடனே மனதிலிருந்து நீக்கிவிட வேண்டும். இல்லையேல் அது அடுத்த பாயிண்ட்டைத் தவற விட காரணமாகிவிடும்…

“உன்னுடைய reflex let you down today” திடுக்கிட்டுத் திரும்பினேன்.

இல்லை என்று சொல்ல விரும்பினேன். ஆனால் சொல்லவில்லை.
“என் சகோதரிகள் இன்று ஒளிந்து கொண்டார்கள்” என்றவாறே காரை முடுக்கினார்.

ஒடுங்கிய ஒற்றைச் சாலைகளில் காரிருளில் இரட்டை வெளிச்சப் புள்ளிகளாய் நாங்கள் ரேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது மவுனத்தைக் கலைத்து, “உங்கள் துல்லியம்தான் என்னைத் தவறு செய்யத் தூண்டியது என்று நினைக்கிறேன்” என்றேன்.

டோடியா சாலையையே பார்த்துக் கொண்டிருந்தார். பின், திடீரென இருட்டில் கை காட்டி “நாங்கள் உகாண்டாவிலிருந்து 70களில் பிரிட்டனுக்கு வந்து வாழ்ந்த முதல் வீடு இதோ இந்த லிட்டில் வால்தம் கிராமத்தில்தான் இருக்கிறது” என்றார்.

“மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் எப்படித்தான் நாங்கள் பதினைந்து பேர்கள் வாழ்ந்தோமோ, இப்போது நினைத்தே பார்க்க முடியாது.”

என்னால் முடியவில்லைதான். இன்று டோடியாவின் இரு சகோதரர்கள் ஸ்ட்ராட்போர்ட் அருகிலும், க்ராயிடனிலும் நகைக் கடைகள் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.

இம்மாதிரி, கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து 70களில் பிரிட்டனுக்குக் குடியேறி வந்த பல குடும்பங்களை இத்தனை வருடங்களில் சந்தித்துவிட்டேன். அவரும் என்னைப்போல் இந்திய கணிப்பொறி, தாதி குடும்பங்கள் பலவற்றைச் சந்தித்திருப்பார்.

ஒருவேளை நாங்கள் மேலே பேசியிருக்கலாம். பாட்மிட்டன் விளையாடாத நாள்களில் அவர் என்ன செய்கிறார், பாகிஸ்தானி பஞ்சாபியைத் திருமணம் செய்து கொண்டதால் தொடர்பில்லாத அவரது மகளைப் பற்றி, அவரது பள்ளி நாள்களின் இங்கிலாந்தைப் பற்றி, வாழ்க்கையில் ஒரு முறைகூட இந்தியாவில் கால் வைக்காமல் இந்தியாவைப் பற்றிய பிம்பம் பற்றி என்றெல்லாம் அவர் பேசியிருக்கலாம்.

படித்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத இன்றைய கணிணி வாழ்க்கையைப் பற்றி, பெற்றோர் பார்த்து வைத்த திருமண வேடிக்கைகளை, சாரதாவின் வினோத மருத்துவமனை அனுபவங்களைப் பற்றி நானும் பேசியிருக்கலாம்.
பேசாமல் போனதற்கு அந்தக் கடும் இருட்டில் எங்கள் கார் முன்னால் சாலையைத் தாண்டிய ஒரு பெரும் மானைத்தான் குறை சொல்லவேண்டும். ஒரு மின்னல் அழுத்தில் மானைத் தாண்டிவிட்டோம். நான் பதறி திரும்பி இருளில் உயர கொம்புகள் மறைய மறைய பார்த்தேன்.

“எனக்கும் கொஞ்சம் refex இருக்கிறது, பார்த்தாயா?!” இப்போதும் சாலையிலிருந்து கண்களை அகற்றவில்லைதான். ஆனால் சிரித்தார்…

நீல் குணமாகித் திரும்ப வருவதற்குள் நான் மேலும் சில ஆட்டங்கள் டோடியாவுடன் விளையாடிவிட்டேன். அவர் நுட்பமாகத் தடுமாறிய கணங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். அவற்றைப் பற்றி அவரிடம் பேசுவதை கவனமாகத் தவிர்த்தேன். அவர் என் விளையாட்டைப் பற்றி அதிகம் விமரிசிக்க மாட்டார். சில சமயங்களில் நானே கேட்டுப் பார்த்தேன்.

No unforced errror – இதை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார். அதன் பின் கேட்பதை விட்டுவிட்டேன்.

நீல் திரும்ப விளையாட வந்தவுடன் சற்று நிம்மதியாகக்கூட உணர்ந்தேன்.

அந்த வார வியாழக் கிழமை ஆட்டத்தில் டோடியாவை தைரியமாக எதிர்கொள்ள உற்சாகமாகவே இருந்தேன். அவர் என்னிடம் எதிர்பார்க்கக் கூடிய ஷாட்டுகளை முடிந்த வரை தவிர்த்தேன். பாதி கோர்ட்டில் மெதுவாக வந்திறங்கிய இறகுப்பந்தை எகிறி…அடிக்கவும்அடிக்கவில்லை. ட்ராப்பும் செய்யவில்லை…மாற்றாக, அவரது பின் கை பேஸ் லைனிற்கு தள்ளி போட்டேன். என் பார்ட்னரே இதை எதிர்பார்க்காமல், “what the f…?” என்று முனகியது நன்றாகக் கேட்டது. டோடியாவுமே எதிர்பார்க்காமல் சற்றுத் தடுமாறி முன் வந்தவர் சறுக்கிவிட்டார்.

என் முதல் வெற்றி!

அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு இது மட்டும் காரணமில்லைதான். நீல் முழுவதுமாய் குணமாகாமல் முன் போல சட்டென வலைக்கு முன்வருவதில்லை. மொத்த விளையாட்டிலும் அவரது கவனம் முழுவதும் கணுக்காலிலேயே இருந்தது. என் புதிய பார்ட்னர், மார்க் என்ற பதினைந்து வயது இளைஞன். உலகைச் சுற்றி வரச் சொன்னால்கூடச் சட்டெனச் சுற்றி வந்துவிடுவான் – இந்த கோர்ட், அவனுடைய வேகத்திற்கு முன் ஓர் மிகச் சிறிய தீவுப்புள்ளி. டோடியா எந்த மூலையில் இறகுப்பந்தைத் தள்ளினாலும், வலையின் வலது மற்றும் இடது மூலைகளாகட்டும், பேஸ் லைன் வலது இடது மூலைகளாட்டும், எங்கும் எப்போதும் இருந்தான்.சில சமயங்களில் என்னை நோக்கி வரும் எனக்கான இறகுப்பந்தைக்கூட சடாரென என் முன் தாவி, அவற்றை அடித்துவிட்டான். பின்னர் திரும்பி, “மன்னிக்கவும்” என்றான். அவனை ராக்கெட்டில் அடித்துவிடாமல் இருக்க நான் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.

அந்த முதல் வெற்றியை, நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே கவனித்து கொண்டிருந்த, மறக்கவே முடியாத கணங்களை அன்றிரவு வீடு திரும்பும்போது அசை போட்டேன். கை குலுக்கியபின் திரும்பிய டோடியாவின் தளர்வான நடையை, ஆட்ட எண்ணிக்கையை மைக்கிடம் சொன்ன போது அவரது வெளிர் நீல கண்களின் ஆச்சரியத்தை, அன்றிரவு வீடு திரும்பி காரை அணைத்த பின்பும் ரேடியாவை அணைக்காமல் pink-கின் million dreams பாடல் முடியும் வரை கேட்டுக்கொண்டிருந்ததை, காரிலிருந்து இறங்கிக் கடும் குளிர் காற்றிலும் வானத்தின் மூன்று நேர்கோட்டுத் தாரகைகளைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்ததை…அடுத்த நாள் அலுவலகப் பயணத்திலும் அசை போட்டேன். மாலை, இரவு என்று அந்த வாரம் முழுவதும் யோசித்ததை நினைத்துச் சிரிப்பாக வந்தது.

மறக்கவே போவதில்லை என்று அடுத்த அடுத்த வாரங்களில் தெரிந்துவிட்டது.

காரணம், மிக எளியது. அதன் பின் வெல்லவே முடியவில்லை! இரண்டு அல்லது மூன்றே உத்திகளில் மார்க் சிறு பையன் என்பதை டோடியாவின் அனுபவம் நிர்ணயித்துக் காட்டிவிட்டது. நீல் அப்படியேதான் இருந்தாலும் முடிந்தவரை டோடியாவை ஆக்ரமிக்க அனுமதித்தார்.

இவைகள் தானே காரணங்கள் என்று அடுத்த அழைப்பிற்காகக் காத்திருந்த ஒரு தருணத்தில் அவரிடம் கேட்டே விட்டேன். அவர் வழக்கம் போல் நிதானமாகப் பெஞ்சிலிருந்து முன் வந்து தலையை என் பக்கம் வளைத்து, “இவை மட்டும் காரணங்கள் இல்லை” என்றார்.

“நீயும் என் பார்டனராகக் கொஞ்ச நாள்கள் விளையாடியிருக்கிறாய். அந்நாள்களில் நீ என்னை அறிந்தது போல் நானும் உன்னை அறிந்திருப்பேன்இல்லையா?” என்றார்.

நான் வெளிறிச் சிரிக்க முயற்சித்துக்கொண்டே பெஞ்ச்சின் பின் சாய்ந்து கொண்டேன்.

அவர் “மனம் தளராதே, இன்னும் எத்தனை நாள்கள் எனக்கு இருக்கப் போகின்றன?” என்று வழக்கமான உயராத குரலில் மெல்லிய எஸ்ஸெக்ஸ் உச்சரிப்பில் உச்சரித்தார். பின் மெல்ல தலையை ஆமைத் தலை போல் ஓட்டிற்குள் உள்ளிழுத்துக் கொண்டார். குரலில் ஒரு டெசிபல் கூட குறையவில்லை…

இப்படியே இருந்திருக்கலாம்; இப்படியே விட்டிருக்கலாம். அந்த மார்ச் மாத பர்மிங்ஹாம் பயணத்தில் கலந்து கொள்ளாமலே இருந்திருக்கலாம். அந்த நள்ளிரவுப் பயணத்திற்குப்பின் பல முறைகள் நான் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்…ஏன் இன்று வரை அப்படித்தான். என்னை என்னால் மன்னிக்கவே முடியவில்லை அதன்பின்…


“அதிகபட்சம்தான் வைத்திருக்கிறேன், இதற்கு மேல் முடியாது” என்றார் நிக். இரு வைப்பர்களும் இடமும் வலமும் வேகவேகமாக காரின் முன் பக்க கண்ணாடியை முழுவதுமாக துடைத்துக்கொண்டிருக்கும் சத்தமும், வானொலி பாடலின் சத்தமும் ஒரு கணத்தில் ஒன்றை ஒன்று வென்று அடுத்த கணத்தில் தோற்றுக்கொண்டிருந்தன.

வால்வோவின் மேற்கூரையின் தகடு திறந்திருந்தது. வெளிச்சத்தை அனுமதிப்பதற்கான அந்த தகடை தண்ணீர் அருவியாக அறைந்ததைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. இருந்தேன்.

“இரு வைப்பர்களும் டோடியாவும் நீலும் போல். மொத்த கோர்ட்டையும் எப்படி ஆக்ரமிக்கிறார்கள் பாருங்கள்!” என்றார் குஞ்சன்.

பின் இருக்கையில் என் அருகில் சாய்ந்திருந்த டோடியா அந்த வாக்கியத்தை வாங்கிக்கொள்வது போல் மெல்ல முன்னுக்குத் தலையை நீட்டிப் புன்னகைத்துப் பின் சாய்ந்து கொண்டார்.

“என்ன ஒரு அருமையான நாள்” என்றார்.

நாங்கள், சில சங்க உறுப்பினர்கள் சேர்ந்து All England open badminton championships என்ற வருடாந்திரப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களைப் பார்த்துவிட்டு பர்மிஹாமிலிருந்து இரவு திரும்பிக் கொண்டிருந்தோம்.

“வழியில் வரும் முதல் சர்வீஸில் நிறுத்தலாமா? பசி கொல்கிறது” என்றேன்.“இன்னும் ஐந்து மைல்கள் பொறுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு அவரது முன்னாலிருந்த பேனலைச் சில தடவைகள் தொட்டார்.

வானொலியின் க்ளாசிக் சேனலிருந்து வேறு கற்றைக்கு மாற்றியிருக்க வேண்டும்.

Pinkன் Million Dreams பாடல் ஒலிக்க ஆரம்பித்தது

நீல், “ டோடியாவின் ஸ்பெஷல் இன்றைக்குப் போல – அவருடைய பேவரிட்டுகளில் ஒன்று” என்றார்.

எனக்கு பசி என்பதைவிட அவருக்குச் சற்று ஓய்வு வேண்டும் என்று எங்கள் அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது.

ஆனால், நிக் என்னவோ அதிகாலையில் என்னை அழைத்துக்கொள்ள வரும் போது காருக்குள்ளிருந்து காலை வணக்கம் சொல்லும் போது இருந்த அதே உற்சாக முகத்துடன், பேச்சுடன்தான் இப்போதும், இரவு பதினோரு மணிக்கும் இருந்தார்.தூக்க கலக்கத்துடன் கொடுக்கப்பட்ட மெக்டொனால்ட் ஊணும் பாலாடைக்கட்டிகளும் திணிக்கப்பட்ட ரொட்டிகளுடன் நாங்கள் உற்சாகத்துடன் அந்த பொது உணவு அரங்கின் மேசைகளில் அமர்ந்தோம்.

டோடியாவும் குஞ்சனும் கழிவறைக்குப் போய்விட்டுக் காபி கோப்பைகள் கொண்ட தட்டுகளைக் கொண்டு வரச் சற்று நேரம் ஆனது. டோடியா வழக்கம் போல் சரிந்த முதுகுடன் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து எடுத்து வைத்து அமர்ந்தார். தார் ஒட்டிய தரையில் நடந்து வந்தது போல்தான் நடந்து வந்தார்.

ஒளிரும் முகத்துடன் மறுபடியும் “என்ன ஒரு அருமையான நாள்” என்றார்.

அவருக்குப் பிடித்த ஆட்டக்காரர்கள் அனைவரும் அல்லது கிட்டதட்ட அனைவரும் இன்று வென்று நாளை இறுதியில் விளையாட இருந்தார்கள்.

மொமொட்டோ – என்ன மாதிரியான endurance இல்லையா?” என்று ஆரம்பித்தாரானால் எங்கு நிற்கும் என்று யாருக்குமே தெரியாது. உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுகூட அவர் உயரத்திற்கு என் தலைக்கு மேலேயே பார்த்துப் பேசுவது போல் இருந்தது.

கிடம்பி, சிந்து யாருமே நான்காவது ரவுண்ட்கூட வரவில்லை என்னும் என் வருத்தத்தை நான் சொல்லவில்லை. யாருக்கும் புரியப்போவதில்லை.

“மற்ற எல்லாரையும் விட அசனும் செத்தியவானும் இறுதியில்…என்ன ஒரு ஜோடி, இத்தனை வயதிலும்” கார் பார்க்கிற்கு திரும்பச் செல்லும்போது டோடியா பின்னால் சொல்லிக்கொண்டே வந்தார்.

குஞ்சன் “மொமொட்டோவின் சில பேக் ஹாண்ட் ஷாட்கள் உங்களை நினைவுபடுத்தின”.

நான் நடந்து கொண்டே திரும்பிப் பார்த்தேன். இதை இன்று நாள் முழுவதும் ஒரு பத்துத் தடவைகளாவது பல்வேறு விதங்களாகச் சொல்லியிருப்பார். ஒவ்வொரு தடவையும் டோடியாவின் முகம் பிரகாசிக்கத் தவறவில்லை.

இந்த முறையும்தான்.

“எனக்குச் செத்தியவானைத் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும், ஏன் எனத் தெரியுமா” என்றார். செத்தியவான் அவரது ப்ரஸ்டன் பள்ளி தோழன் முகச்சாயலில் இருக்கிறார் என்று குறைந்த பட்சம் இரு முறைகளாவது என்னிடம் சொல்லியிருக்கிறார்.

மழை சுத்தமாக நின்றுவிட்டது.

காரில் ஏறும் முன் நான், “டோடியா, இன்று உங்கள் தினம்…உங்கள் பேவரிட் சகோதரிகள் தெளிவாகத் தெரிகிறார்கள்” என்றேன்.
“அ!” என்ற டோடியா கார் கதவைத் திறந்து வந்து அமரச் சற்று நேரம் ஆனது. இடைவேளைக்குப் பின் காரை எழுபது மைல் வேகத்திற்கு ஆரம்பிப்பது உற்சாகமான செயல். எங்கள் நால்வருக்குமே அது இருந்தது. அவ்வப்போது வந்து மறையும் நகர எல்லைகளைத் தாண்டியவுடன் மோட்டார் பாதை இருளுக்குள் அமிழும். பின்னர் முழு நிலவும் கார்களின் உற்சாக வெளிச்சப் புள்ளிகளும் மட்டும்தான்.

நீல், மறுபடியும் கார் உச்சியின் தகடைத் திறக்க மொத்த வானமும் ஓராயிரம் நட்சத்திரங்களும் நிலவும் மொட்டை மாடியில் படுத்திருப்பவர்களைப் பார்ப்பது போல் எங்களை பார்த்துக்கொண்டே எழுபது மைல் வேகத்தில் தொடர்ந்து கொண்டிருந்தன.

வானொலியில் மறுபடியும் pink, மறுபடியும் Million Dreams.

“என்ன மாதிரியான reflex – அசனுக்கும் செத்தியவானுக்கும்” என்று டோடியாவும் மறுபடி ஆரம்பித்துவிட்டார்.

குஞ்சனும் அவர் பங்கிற்கு – “செத்தியவானின் சில ஸ்மாஷ்கள் அப்படியே உங்களுடையதுதான் டோடியா. வரும் வருட லீக் நீங்களும் நீலும்தான். சரவணனுக்கெல்லாம் இன்னும் பல வருடங்களுக்கு வாய்ப்பே இல்லை.”

சற்றே அருகில் திரும்பிப் பார்த்தேன். நிலவொளியும் நிழல்களும் அவர் முகத்தில் உற்சாகமாக விழுந்து எழுந்து பின் ஓடி மறைந்து மறுபடியும் வந்து கொண்டிருந்தன.

இம்முறை, நீல், “அடுத்த வருடம் நார்வே லீக்கிலும் விளையாடப் போகிறோம், தயாராக இருங்கள் டோடியா” என்று விஸிலடித்துக் கொண்டே சொன்னார்.

“Cause every night, I lie in bed
The brightest colors fill my head
A million dreams are keeping me awake”

பிங்க் உச்சத்தில் இருந்தார்.

டோடியா அத்தனை பிரகாசத்துடன் தலையை நீட்டிச் சற்றே முன்னகர்ந்து வந்தார்.

என்னுடைய reflex மிக வலிமையானது என்று நன்கு உணர்ந்திருந்தேன். அதனால்தான் நான் தயக்கமே இல்லாமல் தெளிவாக, அனிச்சையாக, “இன்னும் எத்தனை நாள்கள் உங்களுக்கு இருக்க போகின்றன டோடியா? இருக்கும் போதே அனுபவித்துக் கொள்ளுங்கள், என்றாவது ஒரு நாள் உங்களுக்கு முடியாமல்தானே போகப்போகிறது, அன்று பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்னபோது எனக்கு சங்கடமாக இல்லை.

டோடியா, தலையை மெல்லப் பின்னுக்கு இழுத்துப் பின்னிருக்கையில், இருளில் அமிழ்ந்துவிட்டார்.

நானும் பின் சாய்ந்தவாறே மேற்கூரையை நிமிர்ந்து பார்த்தேன்.


2 Replies to “அலகுடைய விளையாட்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.