2019- ஒரேயொரு டாலர்

This entry is part 6 of 17 in the series 20xx கதைகள்

2019-3

பிரதான தமிழ்ப்புத்தகத்தின் பாடங்களே இறுதித்தேர்வு முடிந்ததும் மறந்துவிடும். உரைநடையின் முதல் பாடம் எதைப்பற்றியது என்பது கூட நினைவிராது. ஒன்பதாம் வகுப்பின் துணைப்பாடத்தில் (நானூறில் நல்ல காட்சிகள்) படித்த ஒரு பாடம் (பெயர் தெரியாத ஒரு சங்கப்புலவரின் நான்குவரி புறநானூற்றுப் பாடலை நான்குபக்க சிறுகதையாக மாற்றிய பாடம், ‘கால் கட்டு’) அரை நூற்றாண்டுக்குப் பிறகும் எனக்கு ஞாபகம் இருக்கிறது (அதன் சுருக்கத்தை தேர்வுக்காக என்னால் இப்போதும் எழுத முடியும்) என்றால், அதற்குக் காரணம் என் ஞாபகசக்தி அல்ல. அதை எழுதிய நா. பார்த்தசாரதியின் சக்திவாய்ந்த தமிழ்நடை. இக்கதையில் ஏதேனும் சிறப்பு தென்பட்டால், அது அவர் எழுதிய பாடத்திற்கே உரியது.

சைக்கிளைத் துடைத்து சக்கரத்தில் காற்று ஏற்றினான். தண்ணீர் பாட்டிலை நிரப்பினான். வண்டி ஊரைச்சுற்றி பல மைல்கள் ஓடியிருக்கிறது. இப்போது ஒரு நீண்ட பயணம். ஆன்ட்டானுக்கும் நிறம் மங்கினாலும் கிழியாத நைலான் பான்ட்ஸ் மற்றும் மேல்ஜாக்கெட். பயணத்தின் முடிவில் இரண்டு உயிரற்ற பொருட்கள். ஒன்று உடனடியாகப் பயன்படக்கூடும்.  

நிருபர் என்ற தகுதியில் செய்தி சேகரிக்க துணைசெய்வது கால்களுக்கு அடுத்தபடியாக சைக்கிள். எட்டு வருஷங்களுக்கு முன் மழை கொட்டுகொட்டு என்று கொட்டி நெடுஞ்சாலை 24-இல் ஆறுபோல வெள்ளம். அதில் தாற்காலிக பள்ளக்கூடக் கட்டடம் ஒன்று அடித்துப்போகும் அளவுக்கு வேகம். பல மைல்களுக்கு நகரமுடியாத ஊர்திகள். அவன் சைக்கிளில் அந்த இடத்துக்குப் போய் படங்கள் எடுத்தது மட்டும் அல்ல, நெடுஞ்சாலையின் ஓரமாக சைக்கிளை ஓட்டி எந்த இடத்தில் ஆழம் குறைவு என்பதைத் தொலைக்காட்சியில் அறிவித்து காரில் சிக்கியவர்கள் நீரில் மூழ்காமல் தப்புவதற்கும் உதவினான். 

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நகரின் தெற்குப்பகுதி. மெக்டானால்ட்ஸில் மதிய உணவைத் தின்றுவிட்டு வெளியேவந்தபோது நெடுஞ்சாலை 65 பக்கமாக எழுந்த கரும்புகை. அந்த இடத்தை அவன் ஐந்தே நிமிடங்களில் அடைந்து சாலையை ஒட்டிய புல்மேட்டில் ஏறி நின்று பார்த்தான். வலதுகோடித்தடத்தில் ஒரு கருகிய கார். தீப்பிழம்புகள். சுர்சுர் என்று தெறித்த தீப்பொறிகள். அவற்றுக்குப் பயந்து மற்ற ஊர்திகள் இடதுபக்கமாக ஒதுங்கிச் சென்றன. அதில் இருந்தவர்கள் வெளியே வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை. அவர்கள் எங்கே? பார்வையைச் சுழலவிட்டான். மூன்றுபேர் தலைகுனிந்து, கார் சுத்தம் செய்யும் கொட்டகைக்குள் ஓடி மறைவது தெரிந்தது. அவன் போலிஸுக்குத் தகவல் தெரிவித்து அவர்களைப் பிடிக்க வழிசெய்தான். காவலர்கள் பின்தொடர்வதை அறிந்து, வேண்டுமென்றே காருக்கு தீ வைத்து, அந்தப் பரபரப்பில் தப்பிக்கப்பார்த்த செயற்கை மார்ஃபீன் மருத்துவர்கள்.  

அதெல்லாம் பழங்கதை. 

இப்போதெல்லாம் செய்தித்தாள்களுக்கு உள்ளூர் செய்திகள் முக்கியம் இல்லை. எங்கிருந்தோ வந்த தகவல்களை அச்சிட்டு, விளம்பரங்களைப் பரப்பும் காகிதங்கள் அவை. பாஸ்டன் க்ளோப், லாஸ்ஏஞ்சலஸ் டைம்ஸ் என்று பெயர்கள் தான் வித்தியாசம், உள்ளே செய்திகள் ஒன்று தான். ஒருகாலத்தில் அமெரிக்க அரசியல் சமுதாயம் வர்த்தகம் பற்றிய விஷயங்களை அலச அவனைப்போல் முறையாக இதழியல் படித்த எழுத்தர்கள். இப்போது அதற்கும் பங்களூரிலும் ஷாங்காயிலும் இலக்கண ஆங்கிலம் தெரியாத ஆட்கள். 

வாசற்கதவைத் திறந்து வெளியே வந்தான். சில காலமாகவே சாத்தினால் அது பூட்டிக்கொள்வது இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. சூரியன் கண்ணில் படாவிட்டாலும் வானத்தின் சாம்பல் நீலம் அதன் வருகையை அறிவித்தது. தெருவுக்கு வந்ததும் நின்று வீட்டைத் திரும்பிப்பார்த்தான். அந்த வரிசையில் அதைப்போல இன்னும் பதினைந்து வீடுகள். இரண்டு உலகப்போர்களுக்கு நடுவில் ஒரே அச்சில் கட்டப்பட்டவை. அப்போது அவை ஊரின் தெற்கு எல்லையாக இருந்திருக்கும். அவற்றில் பல புதுப்பிக்கப்பட்டு, பெரிதாக்கப்பட்டு பளபளத்தன. உறவை வெட்டுவதற்குமுன் அவன் பெண்தோழி கொடுத்த பரிசு. அவளைப்போல அதையும் அவன் சரியாக வைத்துக்கொள்ளவில்லை என்கிற குற்ற உணர்வு எப்போதுமே உண்டு. வீட்டுக்கு புது வர்ணம் இருக்கட்டும், மழைபெய்தால் ஈரம் ஆகாதவை படுக்கையும் புத்தக அலமாரியும் தான். 

வீட்டிற்கு முன்புறத்தில் என்ன ரகம் என்று தெரியாத ஆப்பிள் மரம். அதன் பழங்களைச் சேகரித்து இருபது முப்பது கண்ணாடி ஜாடிகளில் ஜாம் செய்வது வழக்கம். ஒரு மாதத்திற்கு முன்னால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதை அறிந்து இந்த வருஷத்துக் காய்ப்பையும் பதப்படுத்தினான். யாருக்காவது பயன்படும். 

ஐநூறு சதுரஅடி சிமென்ட் தரை, செங்கல் சுவர்கள், என்ன கலவை என்று தெரியாத கூரை. எல்லாம் சேர்ந்த உயிரற்ற கட்டடம் அவன் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி. பிரிவது சுலபமாக இல்லை. துயரம் தீர்மானத்தை மாற்றாமல் இருக்க தலையைத் திருப்பி சைக்கிளை வேகமாக ஓட்டினான். 

செய்தித்தாளின் நிரந்தர வேலையில் இருந்து விலக்கப்பட்டபிறகும், அவ்வப்போது சில்லறை வருமானத்துக்கு கட்டுரைகள். யாருடைய மனசாட்சியையும் காயப்படுத்தாத விஷயங்கள். 

பள்ளிக்கூடங்கள் திறக்கப்போகின்றன. 

இந்திய வம்சாவளியினரின் மிகப்பெரிய பண்டிகை. 

ம்யுஸிக் சிடி மாரதானில் ஐந்து அங்கத்தினரும் பங்கெடுத்த குடும்பம்.  

சேமித்த பணத்தின் இலக்கங்கள் நான்கு, மூன்று எனத்தேய… நகரத்தின் நாற்சந்திகளில் நின்ற மனிதர்களுடன் சிலநாள் பேசிப்பழகி…  

ஒரு டாலர், ஒரேயொரு டாலர்

மற்ற எல்லாரையும்போல அமெரிக்க மக்களுக்கும் ஆதாரம் இல்லாத பல நம்பிக்கைகள். அவற்றில் அதிகத்தீமை விளைவிக்கும் பொய்… யார் வேண்டுமானாலும் மிகச்சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம். அது ஒருசிலருக்கு எவ்வளவு கடினம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதனால், பணம் இல்லாதவர்களை மற்றவர்கள் இழிவாக நடத்துவது இருக்கட்டும், ஏழைகளுக்கும் தங்கள் இழிநிலைக்கு யாரையும் குற்றம்சொல்வதற்கு இல்லை என்கிற கழிவிரக்கம். – குர்ட் வானட் 

நெடுஞ்சாலைகளில் இருந்து வெளியேறும் இடங்களிலோ, சந்தடியான நாற்சந்திகளிலோ இருபத்தைந்து சென்ட் செய்தித்தாளை ஒரு டாலருக்கு விற்கும் ஏழைகள். பொதுவாக இவர்கள் தனிமனிதர்கள். 

நாற்பது வயது ஆணுடன் ஒரு உரையாடல். 

“உன் நியதி…”  

“போக்குவரத்து சிவப்பு விளக்கு எரிய ஊர்திகள் சேரத்தொடங்கியதும், சந்திப்பில் இருந்து மெதுவாக நடக்க வேண்டும். சிலசமயங்களில் ஒரு டாலர் தான் என்று கத்துவதும் உண்டு.” 

“வெயில் மழை குளிர் என்றால்…”  

“எதற்கும் அஞ்சக்கூடாது. சொல்லப்போனால், அது குளுமையிலும் வெம்மையிலும் ஊர்திக்குள் உட்கார்ந்து இருப்பவர்களின் இரக்கத்தை சம்பாதிக்கும்.”  

“எதில் விற்பனை அதிகம்… சாலையின் இடப்பக்கமா வலப்பக்கமா?”  

“என் அனுபவத்தில் வலப்பக்கம்.”  

“ஏன்?”  

“காரை ஓட்டாத பயணிக்குத்தான் பணம் கொடுத்து வாங்குவது சுலபம்.”  

“ஒரு நாளைக்கு…”  

“நான்கு விற்றால் நான் பணக்காரன்.”  

இவர்களுக்கும் கீழே நிஜமாகவே பிச்சையெடுக்கும் வறியவர்கள். சிலருக்குப் பின்னால் அவர்களை நம்பி ஒரு குடும்பம். 

காஸ்ட்கோ நுழைவிடம். ஒருகாலத்தில் நன்றாக வாழ்ந்து நொடித்த ஒருத்தியுடன் அவள் மூன்று குழந்தைகள். ஒரு குழந்தை பிடித்த அட்டையில், 

எங்கள் குடும்பம் தவிக்கிறது 

எது கொடுத்தாலும் ஏற்பேன்

அவர்களைப் பார்த்துக்கொண்டே போய் கடையில் நின்ற பல ஊர்திகள். ஒன்றில் இருந்து இறங்கிய ஒரு நடுவயது இந்தியப்பெண் நடந்துவந்து குழந்தையின் கையில் ஐந்து டாலர் நோட்டை வைத்தாள். 

அவள் கடைக்குத் திரும்பியபோது என்னை அறிமுகம்செய்தேன்.  

“உங்களுக்கு மிக இளகிய மனம்.”  

பாராட்டை ஏற்காமல் அவள்,  

“மனதைக்கல்லாக்கி குழந்தைகளுடன் ஒருத்தி பிச்சை எடுக்கும்போது, அவளுக்கு என்னால் ஆன உதவி செய்யவில்லை என்றால் என் மனம் இன்னும் கடினம் என ஆகிறது, இல்லையா?”  

ஆயிரத்தில் ஒரு வார்த்தை. 

ஊடகத்தில்… 

கட்டுரை வெளிவந்தபிறகு அதைத்தாக்கி வாசகர் கடிதங்கள். எழுதியவன் சோம்பேறிப் பொதுவுடமைவாதி. இங்கே பிடிக்கவில்லை யென்றால் வெனிஸுவேலாவுக்குப் போகட்டும். தனிமனிதர்களின் தோல்வி முதலீட்டுப் பொருளாதாரத்தின் தோல்வி என்ற கட்டுரையின் உள்ளடங்கிய கருத்து மேல்தட்டு மக்களின் மனசாட்சியை சுட்டிருக்க வேண்டும். 

மக்களின் எதிர்ப்புக்கு பயந்து அவன் எழுத்தைத்தொட பத்திரிகையாளர்கள் பயந்தார்கள். 

அதிலிருந்து… தினத்துக்கு அவனுடைய அதிகபட்ச உணவு… வரியுடன் எண்பத்தைந்து சென்ட்டுக்கு பப்ளிக்ஸ் கடையில் முந்தைய தினம் விற்காமல் போன நான்கு பேகல்கள். அத்துடன் வீட்டில் தயாரித்த ஜாம். 

தெற்கு நோக்கிச் சிறிது தூரம், பிறகு மேற்கு திசையில் இருபது மைல்கள். சூரியன் முதுகில் வெம்மையைப் பரப்ப கால்களில் உந்துதல், மனதில் தெளிவு, விடுதலை உணர்வு.  

அரசாங்க அடிப்படை ஊதியம் பற்றி எழுத வேண்டும். எங்கே, சொர்க்கத்திலா?

முந்தைய தினம் இதேபோல ஒரு தீர்மானத்துடன் காலையில் கிளம்பினான். 

சில்லறையெல்லாம் திரட்டிப்போட்டு வாங்கிய பேகல் அவன் சம்பாதித்த கடைசி இரவுச்சாப்பாடு. இனி கையேந்துவது ஒன்றுதான் வழி. அவன் நிலைமை ஆர்த்தர் டாய்லின் ‘த மான் வித் த ட்விஸ்டட் லிப்’ கதை போல ஆகவிட்டது. ஆனால் இரண்டு வித்தியாசங்கள். பிச்சைக்காரர்களைப் பற்றி தகவல் சேர்த்து, ஷெர்லக் ஹோம்ஸை ஏமாற்றப்பார்த்த செய்தியாளன் விரும்பியே பிச்சைக்கார வேஷம் போட்டுக்கொண்டான். ஆன்ட்டானுக்கு அது ஒன்றுதான் வழி. அவனுக்கு வேஷம் கூட வேண்டாம். நரைகலந்த தாடி, தாறுமாறாக வளர்ந்த தலைமயிர், பட்டினியில் ஒட்டிய வயிறு. 

எங்கே? 

அவன் கட்டுரைக்காக அலைந்த இடங்களை யாரெல்லாமோ சொந்தம் கொண்டாடுவார்கள். அவன் போகாத புது இடம் எது?  

இது அக்டோபர் மாதத்தின் முன்பாதி. அப்படியென்றால்… ஆகா! யாருக்கும் தெரியாத இடம். அதுவும் நடக்கும் தொலைவிலேயே. 

ஒருமுறை அவன் ‘டிவாலி’ பற்றி எழுதிய கட்டுரை. அக்டோர் இறுதியிலோ நவம்பர் ஆரம்பத்திலோ கொண்டாடப்படும் விளக்குகள் பண்டிகை. ‘டிவாலி’ கிடக்கட்டும். அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே படேல் கடையில் சிறப்பு விற்பனை. கோதுமை மாவில் இருந்து வேர்க்கடலை வரை எல்லாம் கொள்ளை மலிவாக. அதற்காக கடைமுன் நிறுத்த காத்திருக்கும் கார்கள். 

பத்தரை மணிக்கு, கடை திறக்குமுன்பே ஹார்டிங் நெடுஞ்சாலையைக் கடந்து, அடுத்திருந்த வங்கியின் முன் நின்று இடத்தை நோட்டம்விட்டான். கடையில் இருந்து வெளியேறும் முனையில் ஏற்கனவே ஒருவன். அட சட்! 

இன்னொன்று தேடுவதற்கு பதில் இங்கேயே காத்திருக்க வேண்டியது தான். 

இரண்டு கோல்களை ஊன்றி நின்றவனுக்கு அன்று அதிருஷ்டதினம். முதல் வியாபாரம் செய்த ஒருவர் வாங்கிய சாமான்களைக் காரில் அடுக்கி, கடையில் இருந்து வெளியேறியபோது, அவன் நீட்டிய கையில் ஒருசில பச்சை நோட்டுகள் வைத்தார். அவர் முகத்தில், ‘நான் கொடுத்து நீ பிழைக்கவேண்டி இருக்கிறதே’ என்கிற வருத்தம். 

“காட் ப்ளெஸ் யூ!” சொன்னதும் மெக்டானால்ட்ஸ் பக்கம் டொக் டொக் போனது. 

ஆன்ட்டான் அவன் இடத்தில். 

மூன்று மணி நேரம். கால்கள் வலித்தன. 

கை நீட்டுவதற்கு பதில், ‘உங்கள் சில்லறை எனக்கு சொத்து’  ‘உணவுக்காக நான் எழுதத்தயார்’ என்ற வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் வந்திருக்கலாமோ? 

கனமான கோதுமை மாவு மூட்டைகள், பருப்பு பிளாஸ்டிக் பைகள், அரிசித் துணிப்பைகள் எண்ணற்ற முறை கடைவண்டியில் இருந்து ஊர்திகளின் பின்பக்கம் இடமாறின. அவை தெருமுனையில் காத்துநிற்க நேரிட்டாலும் அவன் இருப்பதைக் கண்டுகொள்ளாமல் சாலையில் திரும்பின. 

யாருக்கும் ஒரு டாலரைப் பிரிய மனமில்லை. 

பிற்பகல். 

எங்கிருந்தோ சக்கர நாற்காலியில் வந்த ஒருவன். 

“இடத்தைக் காலிசெய்! இரண்டு மணியில் இருந்து இது என் இடம்.”  

ஏன் என்று வாதாட மனம் வரவில்லை. 

“இரண்டு கோல்கள் வைத்திருப்பானே, அவன்…”  

“பணம் கிடைத்துப் போய்விட்டான்.”  

ஆன்ட்டானை இரக்கத்துடன் பார்த்து,  

“நீ வேண்டுமானால் பாங்க் பக்கம் போய் நில்! கும்பல் அதிகமாக இருந்தால் சில கார்கள் அந்தவழியிலும் வெளியே போகும்.”  

“பரவாயில்லை.”  

“நான் சொல்வதை சொல்லிவிட்டேன். உன் இஷ்டம்.”  

வீடு நோக்கி தள்ளாடிய நடை. வேஷம்போட்ட செய்தியாளன் கணிசமாக சம்பாதிக்கும் அளவுக்கு விக்டோரியா காலத்து லன்டன் மக்களுக்கு இரக்கம் இருந்தது. இப்போது அது இல்லை. 

வீட்டிற்கு வந்து அசதியில் படுத்ததும் ஒரு மனப்போராட்டம். சைக்கிளில் நாஷ்வில் ரெஸ்க்யு மிஷன் வரை போனால் சூடான சாப்பாடு. 

ஏன்? 

கடந்த சில வாரங்களில் அவன் எழுதிய கட்டுரைகள் மனதில் நகர்ந்தன. 

கிரியெடா டூன்பெர்ரி பரப்பும் செய்தி 

(ஆஸ்பெர்கர் குறைபாடு கொண்ட பதினாறு வயதுப்பெண் என்றுகூடப் பாராமல் அவளைப்பழித்தவர்கள் பலர் இருக்க…) 

பலரும் பங்குகொள்ளும் தேர்தல் நடத்துவது எப்படி? – இந்தியா கற்றுத்தரும் பாடம் 

(நாங்கள் ரொம்ப உசத்தி, யாரிடமும் அறிவுரை கேட்க மாட்டோம் என்கிற அரசியல் கட்சி ஆட்சிசெய்ய…)  

ஒரு மனிதனுக்கு எவ்வளவு வீடு வேண்டும்? 

(புறநகரில் எங்குபார்த்தாலும் மெக்மான்ஷன்கள்…)  

அவை எடுபடாது. அவன் எழுத்துக்கு மதிப்பு போய்விட்டது. இனி அவன் எழுதப்போவதும் இல்லை. அப்படியென்றால்… 

கவின்மிகு நாச்சேஸ் ட்ரேஸில் ஆன்ட்டான் நுழைந்தான். தெற்குநோக்கி நானூற்றிநாற்பத்திநான்கு போக்குவரத்து அதிகம் இல்லாத மைல்கள். வழியிலேயே உடல் களைத்து சக்தி இழந்து மயங்கி விழுந்துவிடலாம். அப்படி நடக்காவிட்டால் பாதை முடியும் இடத்தில் மிஸிசிப்பி ஆறு. சைக்கிள் கைப்பிடியை இறுக்கப் பிடித்து, வேகமாகப் பெடலை மிதித்து… 

சூரியன் காணாமல்போக, மேகமூட்டமும் இலேசான குளிர்காற்றும். மழைபெய்யும்போல் தோன்றவில்லை. அப்படியே பெய்தாலும் அவனுக்கு அச்சமில்லை.  

ஐந்து மைலில் இரண்டு வளைவுகள் கொண்ட அழகுப்பாலம். அதன் படம் நாச்சேஸ் சாலைபற்றிய வலைத்தளங்களைக் கட்டாயம் அழகுசெய்யும். பாலத்தில் கால்பங்கு போனதும் காற்று வேகமாக வீச, இறங்கி சைக்கிளைத் தள்ளி நடந்தான். ஏழெட்டு பந்தய சைக்கிள்கள் விர்ரென்று அவனைத் தாண்டிப் பாய்ந்தன. அவற்றின்மேல் வர்ண ஆடைகளில் இளரத்தங்கள்.  

சைக்கிளை வெள்ளைக்கோட்டில் இருந்து தள்ளி நிறுத்திவிட்டு, பாலத்தின் ஓரத்துக்கு வந்து எட்டிப்பார்த்தான். நூறு நூற்றிஐம்பது அடிக்குக்கீழே நெடுஞ்சாலை. பார்வைக்கு வந்து பிறகு ஓடிமறைந்த ஒருசில ஊர்திகள்.  

கான்க்ரீட் சுவர் முழங்காலுக்கும் கீழே. அதன்மேல் பதித்த இரும்புக்கழி இடுப்பைக்கூட எட்டவில்லை. இன்னும் சற்று எம்பினால் பாலத்தில் இருந்து சாய்ந்து விழுவான்.  

வேலை சுலபமாக முடிந்துவிடும். 

தலை கான்க்ரீட் சாலையில் மோதி அக்கணமே உயிர்போகும் என்பது நிச்சயம் இல்லை. முதுகெலும்பு உடைந்து படுத்தபடுக்கையாக… நெடுஞ்சாலையில் அந்நேரம் பார்த்து ஓடிய ஊர்தியில் அடிபட்டு… மற்றவர்களுக்கு ஏன் தொந்தரவு? 

அவனை நோக்கிவந்து வடக்கே சென்ற ஒரு பழைய உழைப்பாளி சைக்கிள். அதை ஓட்டியவனும் தெற்கில் இருந்து கட்டடத்தொழில் செய்ய வந்த வேலையாள் போலத் தோன்றியது. ஆன்ட்டானின் கவனத்தை ஈர்த்தது சைக்கிள் பின்னால் கட்டிய இரண்டு அட்டைகள். ஒன்றில் ம்ப் ட்ரம்ப்! இன்னொன்றில் இம்பீச்! 

பாலத்தின் மறுகோடிக்கு நடப்பதற்குள் அந்த சைக்கிள் அவனைத்தாண்டிச் சென்று மறுபடி அவனை நோக்கி வந்தது. 

சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பிப்பார்த்தான். பாலமும் அதைச்சுற்றிய இடங்களும் கண்கொள்ளாக் காட்சி! காசு செலவில்லாத சந்தோஷம். ம்ம்ம்… இதையெல்லாம் துறந்துவிட்டுப் போகவேண்டும். தண்ணீர் பாட்டிலில் இருந்து சில மிடறுகள். சைக்கிளின் பின்பையில் கையைவிட்டுத் துழாவினான். ஏமாற்றம் தராமல் ஒரு சுயுங் ம். காற்றில் உலர்ந்த வாய்க்கு மருந்து. தெற்குநோக்கி ஓடிய கார்களில் இருந்து அவனுக்கு ‘ஹாய்’கள்.  

கிளம்ப எத்தனித்தபோது உழைப்பாளி சைக்கிள் மூன்றாம் முறையாக வருவதைப் பார்த்தான்.

எத்தனை முறை ஒருவன் பாலத்தில் திரும்பத்திரும்ப சைக்கிள் ஓட்டுவான். அதன் அழகை ரசிப்பவனாகத் தெரியவில்லை. வேறு எதற்கு? 

எவன் என்ன செய்தால் என்ன? தெற்கே போகும் பயணத்தை அவன் பாட்டுக்குத் தொடர வேண்டியது தானே. மனம் கேட்கவில்லை. பல ஆண்டுகள் செய்திசேகரித்த அனுபவத்திலும், ஒரு நாள் பட்டினியிலும் மூளையில் உதித்த சந்தேகம். சைக்கிளை வடக்கு நோக்கி திருப்பிநிறுத்தி, அதன் பிடியில் இருந்த கோ-ப்ரோ(காமரா)வின் பார்வையைப் பாதையின்மேல் பதித்து அதை இயக்கியபோது, அந்த சைக்கிள் தெற்கு நோக்கி வந்தது. 

சில நிமிடங்களில், ஆன்ட்டான் எதிர்பார்த்ததுபோல் மறுபடி அதே சைக்கிள் தெற்கில் இருந்து பாலத்தில் நுழைந்தது. ஆன்ட்டானின் எச்சரிக்கை கையாட்டலைப் பார்த்தாலும் கவனிக்காததுபோலச் சென்றது. பின்னால் வந்த ஒரு ஜீப். அதன் முன் வலப்பக்கத்தால் சைக்கிளுக்கு ஒரு இடி. தாக்குதலால் தடுமாறிய சைக்கிளை கதவோரக் கண்ணாடியில் பார்த்து ரசித்து ஜீப் வேகமெடுக்க… 

சைக்கிள் வேகம் இழந்து திசைமாறி கான்க்ரீட் சுவரில் மோத இருந்தது. அப்படி மோதினானல் அதை ஓட்டியவன் தூக்கியெறியப்பட்டு… ஆன்ட்டான் வேகமாகப் பாய்ந்து அதன் பின் சக்கரத்திற்கு ஒரு உதை கொடுத்தான். அது சாய்ந்து விழுந்தது. அதன் அடியில் இருந்தவன் முகத்திலும் கைகளிலும் வெட்டிய சிராய்ப்புகள். அவற்றை அவன் லட்சியம்செய்யாமல், ஸ்பானிஷில் ஆன்ட்டானுக்கு அர்ச்சனை. 

ஆன்ட்டான் வசவுகளை மௌனமாக ஏற்றான். 

கோபம் குறைந்ததும், அவன் அரைகுறை ஆங்கிலத்தில், 

“உன் ஜோலியைப் பார்த்துப்போவது தானே. இந்தக் காலைநேரத்தில் ஏன் என் வம்புக்கு வந்தாய்? நான் இந்நேரம் பாலத்தின்கீழே விழுந்து கையோ காலோ ஒடிந்து, இல்லை இடுப்பில் அடிபட்டு என் குடும்பத்தின் வருவாய்க்கு ஏற்பாடு செய்திருப்பேன். உனக்கு என் நிலைமை எங்கே புரியப்போகிறது?”   

கடைசியில், 

“ஐ’ம் சாரி! கட்டடம் கட்டும் வேலைகள் கட்டோடு நின்றுபோய்விட்டன. என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை.” 

“கவலைப்படாதே! என்னால் உனக்கு உதவ முடியும்.” 

“எப்படி?” 

“சொல்கிறேன். முதலில், என் பெயர் ஆன்ட்டான்.” 

“நான் அலான்ட்ரோ.”  

தெற்கு நோக்கி வந்த ஒரு கார் நின்று, அதன் ஜன்னல்வழியாக, 

“ஈஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?”  

“யெஸ்! யெஸ்! வீ ஆர் ஃபைன். உதவி அவசியம் இல்லை. கேட்டதற்கு தாங்க்ஸ்.” 

நம்பக்கூடிய அந்த பதிலை ஏற்று அந்த ஊர்தி பறந்துபோனது.  

“முதலில் இடத்தைக் காலி செய்வோம்.”   

அலான்ட்ரோ டக்டக் என்று சத்தமிட்ட சைக்கிளைத் தள்ள, ஆன்ட்டான் கோ-ப்ரோவை நிறுத்தி தன் சைக்கிளை நகர்த்த, இருவரும் நாச்சேஸ் ட்ரேஸில் இருந்து வெளியேறி சரிவான பாதையின் ஓரத்தில் நின்றார்கள். ஆன்ட்டான் பதிவான ஒளித்தொகுப்பை ஓட்டினான். படத்தில் சைக்கிள் நுழைந்ததும் வேகத்தைக் குறைத்தான். 

 சைக்கிளைத் தொடர்ந்து ஜீப். அதன் லைசன்ஸ் தகடும் பின்னால் ஒட்டியிருந்த எம்.ஏ.ஜி.ஏ. சிவப்பு எழுத்துகளும் தெளிவாகத் தெரிந்தன. பாதையின் நடுவில் போன சைக்கிளுக்கு மரியாதைகொடுத்து மஞ்சள் கோடுகளுக்கு இடப்பக்கம் போகாமல், அதை ஜீப் வேண்டுமென்றே இடிக்கிறது. நிற்காமல் வேகமெடுக்கிறது. ஜன்னலில் இருந்து வெளிப்பட்ட அலட்சிய கையசைவு. 

“லைசன்ஸ் தகடை வைத்து ஆளைப் பிடித்துவிடலாம். நான் படம் எடுத்ததை நிச்சயம் அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். போலிஸுக்குப் போகாமல் இருக்க ஐம்பதாயிரம் டாலர்.”  

“சம்மதிப்பானா?” 

அலான்ட்ரோவுக்கு நம்பிக்கை தர,  

“இயற்கைக்காட்சிகளை ரசிக்கவும், நாற்பது ஐம்பது மைல்கள் நிம்மதியாக ஓட்டவும் நாச்சேஸ் ட்ரேஸில் நிறைய இருசக்கர ஊர்திகள். அவற்றுக்கு மோட்டார் வாகனங்கள் முழுப்பாதையும் கொடுத்து இடப்பக்கம் ஒதுங்கிப்போக வேண்டும் என்பது சட்டம். அதை அவன் செய்யாதது முதல் குற்றம். சைக்கிளை இடித்தது இரண்டாவது. அப்படியே தவறுதலாக நிகழ்ந்து இருந்தாலும் காரை நிறுத்தி அடிபட்ட உனக்கு உதவிசெய்யாதது மிகப்பெரிய குற்றம். எல்லாவற்றையும் சேர்த்து பத்து ஆண்டுகள் தீட்டிவிடுவார்கள்.”   

“அவன் காரின் முன்புறத்தில் கான்ஃபெடரேட் கொடி. நிச்சயம் உயர்வு பாராட்டும் வெள்ளையாக இருப்பான். நான் பழுப்பு. நான் அவனை வம்புக்கு இழுத்தேன் என்று போலிஸ் குற்றம்சொன்னால்…”  

“உன் போஸ்டர்கள் அவனுக்குப் பிடிக்காவிட்டால் ட்ரம்ப் கொடியை அவன் உன் முகத்தில் எறியலாம், அவ்வளவுதான். உன்னைத் தொட்டது குற்றம். பேரம்பேச நீ வரவேண்டாம். நானே அவனை மடக்குகிறேன்.”  

“அப்படியும் அவன் வழிக்குவராவிட்டால்…”  

“தொலைக்காட்சி செய்திகளில் இந்த விடியோ வரும். நான் பலமுறை செய்திருக்கிறேன். அனுதாபமும் காணிக்கைப்பணமும் சம்பாதிக்கலாம்.”   

வரப்போகும் பணத்தில் பாதி பங்கு கேட்பானோ என்கிற பயத்தில் அலான்ட்ரோ,  

“எனக்காக இவ்வளவு செய்கிறாயே, உனக்கு நான் எவ்வளவு தரவேண்டும்?”  

“ஒரு டாலர், ஒரேயொரு டாலர்.”  

Series Navigation<< 2010- மீண்டும் மால்தஸ்2016 – எண்கள் >>

2 Replies to “2019- ஒரேயொரு டாலர்”

  1. .ஒருவனின் அறச் சிந்தனை எவ்வளவு மோசமான சோதனையான சூழ்நிலையிலும் மங்குவதில்லை என்பதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. சிறையில் இருக்கும்போதும் தண்ணீர் தாமதமாக கொண்டுவந்ததால் அதைப் பருக மறுத்த கணைக்காலிரும்பொறையை பாடத்தில் படிக்கிறோம். கு.அழகிரிசாமியின் சிறுகதையில் பசியினால் இரண்டு இட்டலிக்காக போராடும் தேவர் கடைசியில் மானமாவது மிஞ்சியதே என்கிறார். கே,பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படத்தில் சாக்கடையில் ஓடி வரும் ஆப்பிளை சாப்பிடலாமா என்று கதாநாயகன் ஒரு நிமிடம் நினைக்கிறான். இந்திரா பார்த்தசாரதியின் ‘வேத வித்து’கதையில் ‘நான் வேத வித்துவும் இல்லை.ஒன்றும் இல்லை.எனக்கு இப்போது தேவை ஒரு கப் காப்பி’ என்பான்.இப்படி வறுமை ஒரு மனிதனின் ஆளுமையை சிதைப்பதை, அவனது மனப் போராட்டத்தை இந்தக் கதை சிறப்பாக சொல்கிறது. ஒரு இடத்தில் வரும் ‘“மனதைக் கல்லாக்கி குழந்தைகளுடன் ஒருத்தி பிச்சை எடுக்கும்போது, அவளுக்கு என்னால் ஆன உதவி செய்யவில்லை என்றால் என் மனம் இன்னும் கடினம் என ஆகிறது, இல்லையா?” என்ற வரிகள் பொட்டில் அறைந்தாற்போல் இருக்கிறது.

    இதில் நா. பார்த்தசாரதியின் ‘கால் கட்டு’ என்ற கட்டுரை குறித்தும் ஆர்த்தர் டாய்லின் ‘த மான் வித் த ட்விஸ்டட் லிப்’ கதை குறித்தும் பேசுகிறீர்கள்.நா.பாவின் கட்டுரை அனுப்பித் தர முடியுமா? இரண்டும் கிடைத்தால் படிக்கவேண்டும்.’2000’த்தின் கதைகள் என்ற வரிசையில் இது ஐந்தாவது கதை.மற்ற நான்கையும் படிக்க வேண்டும். அமர்நாத் உங்கள் கைகளைப் பற்றி குலுக்குகிறேன்.

  2. பாராட்டுக்கு மிக்க நன்றி! இரமணன்!

    வேதவித்து தவிர பிறவற்றை நானும் ரசித்து இருக்கிறேன்.
    துணைப்பாடத்தின் புதிய விரிவாக்கிய வடிவம் ‘புறநானூற்றின் சிறுகதைகள்’. நா.பா.வின் தளத்தில் இருக்கிறது. நாற்பதாவது கதை கால்கட்டு. ஷெர்லக் ஹோம்ஸ் கதைக்கு http://www.eastoftheweb.com/short-stories/UBooks/TwisLip.shtml

    20xx வரிசையின் முதல்கதை சொல்வனம் 205 இதழின் ‘இருவேறு உலகங்கள்’ (அதை ரசித்து வெளியிட்ட ஆசிரியர் மைத்ரேயனுக்கு நன்றி!)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.