விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 4 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

பாகம்-4

பேட்டியாளர்: உங்கள் ஒரே நாவலான ‘த ஃப்ளைட் ஆஃப் லூஸிஃபர்’-ரின் தொடர்ச்சியாக இன்னுமொரு நாவல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

ப்ளூம்: கிட்டத்தட்ட ஒரு பாதி எழுதினேன்.  ‘த லாஸ்ட் ட்ராவெலெர்ஸ் ட்ரீம்’ என்ற தலைப்பில். மாற்றுக் குழந்தையைப் பற்றியது, ஒருவிதமான மறைஞான கருத்தாக்கத்தைப் பற்றியது என்றாலும் த ஃப்ளைட் ஆஃப் லூஸிஃபர் -ஐக் காட்டிலும் குறைவான கொள்கை சார்புடையது. முந்தையதைக் காட்டிலும் நன்றாகவே எழுதப்பட்டிருந்தது என்று எனக்குத் தோன்றியது; அதைப் படிக்கக் கொடுத்த ஒன்றிரண்டு பேர்கள்கூட நன்றாக வருவதற்கான சாத்தியங்கள் அதில் நிறையவே இருக்கின்றன என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். இன்னமும் இங்குதான் மேலே இருக்கிறது. பார்க்கலாம், நீண்ட ஆயுள் கிட்டி, என் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களேதும் நிகழவில்லை என்றால் அதை கீழே எடுத்து வரக்கூடும்.

என்னுடைய புத்தகங்களிலேயே த ஃப்ளைட் ஆஃப் லூஸிஃபர் மட்டுமே ஒருகால் பதிப்பித்திருக்காமல் இருந்திருக்கலாமோ என்று நான் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் ஒரே புத்தகம். எழுதியதெல்லாம் சரி, ஆனால் பதிப்பித்திருக்கக் கூடாது. வெளியிட்டு ஆறு மாதங்கள் ஆன பிறகு, ஒரு இரவில் அதை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். புத்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு, அதை நிறைவு செய்யும் பகுதிகள், நன்றாகவே எழுதப்பட்டிருந்ததாய் எனக்குப் பட்டது என்றாலும், அது ஒரு படு மோசமான புத்தகம் என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். கதைகூறல், எதிர்மறை உருவகப்படுத்தல் போன்ற விஷயங்களில் அது தோற்றுவிட்டது. உன்னதமான, கிறுக்குத்தனமான, அந்த ‘எ வாயேஜ் டு ஆர்க்டுரஸ்’ (என்ற) புத்தகத்தைப் பின் தொடரும் முயற்சியில் அது முற்றிலும் தோல்வியையே தழுவியது. மீட்கும் நிறைகள் என்று அதில் ஒன்றுமே இல்லை. மறைஞானத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வகை ஆய்வுத் தனியேட்டு முயற்சி அது. பல மூர்க்கமான விமர்சனக் கருத்துக்களை அது முன்மொழிந்ததென்பது வெளிப்படை. த ஃப்லைட் ஆஃப் லூஸிஃபர்-ஐ இப்போது வாசிக்கையில், வால்டர் பேட்டர், ஸ்டார் வார்ஸை எழுதியது போலிருக்கிறது.

பேட்டியாளார்: எழுபதுகளில் அபாரமான படைப்பூக்கத்துடன் எழுதிக் குவித்தபின்  “வேகம் குறைந்து” விட்டதாக உணருகிறீர்களா?

ப்ளூம்: சாறு பிழியப்பட்ட சக்கையாக கருதுமளவிற்கெல்லாம் இன்னும் போகவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் காலம் போகப் போக, இலக்கிய வரலாற்றின் முரணியக்கத்தை உக்கிரமாக உணர்ந்து கொள்வதால், மற்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புத் தொகைக்கும் உங்களுக்குமான தொடர்பை சமாளிக்க உங்களுக்கு பல விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. இலக்கியத்திற்கும், ஆசிரிய மற்றும் எழுத்துப் பணிக்கும் இருக்கும் தொடர்பைப் பொருட்படுத்துவதற்கான விழைவிற்கும் மேலும் மேலும் அடிமையாகி விடுகிறீர்கள். அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலகட்டத்தில் சாத்தியப்பட்ட சில குறிப்பிட்ட விஷயங்கள் இனிமேலும் சாத்தியப்படுவதில்லை. எதைப் பற்றியும் எவ்வளவு நீளத்திற்கு எழுத முற்பட்டாலும் அது முன்னொரு காலத்தில் சமயம் சார்ந்தது என்று வகைமைப்படுத்தப்பட்டதின் தொனியை உடனழைத்து கொள்கிறது என்பதை உணர்கிறேன். “த அமெரிக்கன் ரிலிஜன்: அ ப்ராஃபெஸி” என்ற புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். சொல்லவே வேண்டாம், பிளேக்கின் “அமெரிக்கா: அ ப்ராஃபெஸி” -யையே அத்தலைப்பு எதிரொலிக்கிறது, சிறிது மட்டுமீறுவதற்காகவே எழுதப்பட்டிருந்தாலும் அது ஒரு பயனளிக்கும் உண்மையான புத்தகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அண்மையில் நிகழ்ந்த நமது தேர்தலில் தொடங்கி, அமெரிக்க ஆன்மா, அமெரிக்க இலக்கியம், மற்றும் அனைத்திற்கும் மேலாக எமர்சனுக்கு முன்னதாகவே தோன்றியிருந்தாலும் அவரிடமிருந்தே தனது தீர்மானமான வரையறைகளைப் பெற்றுக் கொண்ட அமெரிக்க மதம் குறித்த கேள்விகளுக்கு வழிநடத்திச் செல்கிறது. அமெரிக்காவின் மதம் கிருத்துவம் அல்ல; ஒருகால் அது எப்போதுமே கிருத்துவமாக அல்லாது ஒரு விசித்திரமான அமெரிக்க மறைஞான வகைமையாகவே இருந்திருக்கலாம். சில வழிகளில் பேருவகை அளிப்பதாக உள்ள, தனது நாசமளிக்கும் ஆற்றலால் அடையாளப்படும் மிக வினோதமான மதமது, போட்டியிட்ட இரு நபர்களுள் அவரே அம்மதத்தின் ஆதர்சங்களையும், தரிசனங்களையும் தன் ஆளுமையில் மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தினார் என்ற காரணத்தால்தான் விரலைக்கூட அசைக்காமலேயே ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார் (தவிர்க்க இயலாதபடி வெற்றி பெற்றார்) என்று மேலும் மேலும் எனக்கு தோன்றுகிறது. நம் மறைஞானத்தை நிறுவதற்கான பாதுகாப்பான இடமாக உலகைக் கட்டமைப்பதே நம் வெளிநாட்டுக் கொள்கை.

பேட்டியாளர்: அனைத்தையும் கணக்கில் கொண்டால், கிருத்துவ வேதாகமம் ஏமாற்றமளிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்?

ப்ளூம்: பழைய ஏற்பாடு அல்லது ஆதி ஆகமத்துடன் ஒப்பு நோக்குகையில் அதன் அழகியல் சாதனையை மிகக் குறைவாகவே மதிப்பிட வேண்டியிருக்கிறது. இலக்கியக் கண்ணோட்டத்தில் புதிய ஏற்பாடு மிக வினோதமான படைப்பு. அதன் கணிசமான பகுதிகள் அரமிய மொழியில் சிந்தித்து கிரேக்க அன்றாட வழக்கில் புழங்கும் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. அராமியத் தொடரியலும் கிரேக்க சொற்றொகையும் கூடிய அந்த விசித்திரக் கலவை அவ்வூடகத்தை கேள்விக்கிடமாக்குகிறது. மிகையுணர்ச்சியுடன் மோசமாக எழுதப்பட்டிருக்கும், புனித யோவான் சுவிசேஷகரின் வெளிப்பாடு, அபோகாலிப்ஸ், பகுதிகளில் இது அப்பட்டமாகவே புலப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் மிகக் காத்திரமான பகுதிகள் கூட – பாலின் சில குறிப்பிட்ட கடிதங்கள் மற்றும் யோவான் நற்செய்தி – இலக்கிய தரம் என்ற அடிப்படையில் ஹீப்ரூ ஆகமத்தின் காத்திரமான பகுதிகளுடன் அழகியல் ரீதியில் போட்டியிட முடியும் என்று தோன்றவில்லை. அதன் அழகியல், ஏன், தன் ஆன்மீகப் பெறுமதிக்கு மீறிய, தன்னுடன் துளிகூட பொருத்தமில்லாத, பாதிப்பை யோவான் வெளிப்படுத்தல் பெற்றிருப்பது மிக ஆச்சரியமான விஷயம். அது ஒரு கிறுக்குத்தனமான உணர்ச்சிவசப்படும் படைப்பு மட்டுமல்ல., அன்பும் காருண்யமுமற்ற படைப்பும்கூட. உண்மையில், அது அறச்சீற்றப் பிரதிகளின் ஆதிவடிவம். அதற்குப்பின் வந்த ஒவ்வொரு அறச்சீற்றப் பள்ளிக்கும் அஸ்திவாரம் அதுவே.

பேட்டியாளர்: தற்போது, உருவகம் என்பதற்கு மேலாக நம்பிக்கையை வேறு எவ்வாறாவது பொருட்படுத்துகிறீர்களா?

ப்ளூம்: நம்பிக்கை எனக்கு வாய்க்கக்கூடிய ஒன்றல்ல. மேலே அடுக்கத்தில் வீற்றிருக்கும் பஞ்சடைத்த பறவை அது. தத்துவமும் அப்படியே என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏன், சொல்லப் போனால், , ஃபிராய்டின் எழுத்து, அதன் நடைமுறைப் பழக்கம் மற்றும் உதாரணங்களை அடிப்படையாகக் கொண்ட உளவியலென்ற நிறுவனப்படுத்தப்பட்ட தேவாலயமும் அப்படியே. இவை கையில் பற்றவல்ல உயிருள்ள பறவைகளல்ல. நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது போல், நாம் ஒரு இலக்கிய கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை நல்லதென்று சொல்லவில்லை — அது மோசமானதாகவே இருக்கலாம் – ஆனால் நமது தற்போதைய நிதர்சனம் இதுவே. நம் அறிதல் முறைமைகள் நம்மை கைவிட்டுவிட்டன.

பேட்டியாளர்: புனைவு அளவிற்கு பிரத்தியேக விசித்திரத்துடனும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க நம்பிக்கையாலும் முடியுமா?

ப்ளூம்: சமய மேதைமை என்பது ஒரு செத்த முறைமை. நம்பிக்கையும் எந்த ஒரு காத்திரமான பிரத்தியேக இலக்கியப் படைப்பை போல அதிவிருப்பும் தனித்தன்மையும் வாய்ந்த புனைவாக இருக்க வேண்டும். ஆனால் அது அப்படி இருப்பதில்லை. அனேகமாக எப்போதுமே இருப்பதில்லை. சமயம் சமூகத்தாலும், மானுட வெறுப்புகளாலும் களங்கப்பட்டு விட்டது. அதன் சமூக மற்றும் நிறுவன முறைமையில் சமயத்தின் வரலாறு ஒரு இடையறாத பயங்கரமாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது, இக்கணத்தில்கூட பாவப்பட்ட திரு. ரஷ்டிக்கு நடந்து கொண்டிருப்பதில் இதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் அவர் சொல்லிக் கொள்ளும்படியான ஆசிரியர்கூட கிடையாது. Midnight’s Children-ஐ வாசிக்க முற்பட்டு சலிப்படைந்தேன். The Satanic Verses-சையும் படிக்க முயன்றேன். வளவளவென்று மிகவுமே நவ-ஜாய்சியத்தனமாக இருந்தது, மிகவுமே நிறைவளிக்காத புனைவு. உயர்-நடுத்தர அறிவுத்திறன் படைத்தவர் புனைவெழுத முயற்சி செய்தால் எப்படி இருக்கும், அதைவிட இதில் அதிகமொன்றுமில்லை. பாவம், பரிதாபத்துக்குரிய ஆசாமி, அவரை குற்றம் சொல்ல முடியாது. மன்னிப்பு கோருவதற்கும் அவருக்கு வழி இருப்பதாக தெரியவில்லை, ஏனெனில் மதத்தை புண்படுத்தியதற்காக எதிர்கொள்ள வேண்டிய பின்விளைவுகளிலிருந்து அவரைக் காப்பாற்ற உலகம் தயாராக இல்லை. சமூக, அரசியல், மற்றும் பொருளாதார அமைப்புகளாக அனைத்து மதங்களுமே நாசகரமாகவே இருந்திருக்கின்றன.

பேட்டியாளர்: இன்னமும் டிவியில் வரும் எவாஞ்சலியர்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

ப்ளூம்: ஓ, நிச்சயமாக. டிவி எவாஞ்சலியர்களை, குறிப்பாக ஜிம்மி ஸ்வாகர்டை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்திற்கும் மேலாக குடும்பத்தினர் அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருக்க, அமெரிக்கா முழுவதற்குமே, அவர் ஆற்றிய “நான் பாவம் செய்து விட்டேன்…” என்று தொடங்கும் ஆரவாரமான குற்ற ஏற்புரை பிடித்திருந்தது. அமெரிக்க கலாசாரத்தின் அற்புத தருணங்களில் இதுவுமொன்று.! மிகவுமே ரசித்துப் பார்த்தேன். அவரது ஆற்றுகைகளிலேயே மிகச் சிறந்ததும் கூட. அதன்பின் அந்தப் பெண்மணி, அவர் பதிப்பித்த பத்தியில் இவர் அவரைத் தொடக்கூட இல்லை என்று வெளிப்படுத்தியது! மேலும் அவர் இவருக்கு எக்கச்சக்கமான பணத்தொகைகளை அளித்துக் கொண்டிருந்தார், எல்லாம் எதற்காக? அவர் அவரையே சூம்பினேட் (Zoombinate) செய்து கொள்வதை இவர் கண்டு களிப்பதற்காக. என்னத்தைச் சொல்ல! பரிதாபமாக இருந்தது!. மிகப் பரிதாபமாக இருந்தது.

பேட்டியாளர்: நீங்கள் அவ்வப்போது ராக் இசை கேட்பீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ப்ளூம்: ஓ! கண்டிப்பாக. எவரிடமும் நான் இதை இதற்கு முன் ஒத்துக் கொண்டதில்லை. எவாஞ்சலியர்களை டிவியில் பார்க்காமல், படிக்கவோ எழுதவோ முடியாது, நடைப்பயிற்சிக்காக வெளியே போகமுடியாது, , தலையை பிய்த்துக் கொண்டு மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காத சமயங்களில், நுயூ ஹேவன் டிவியில் சானல் பதிமூன்றை போட்டுக் கொண்டு ஓயாமல் ராக் இசை பார்த்துக் கொண்டிருப்பதுதான் எனக்கு மிக பிடித்தமான காரியம். அமெரிக்க மதத்தின் அப்பட்டமான வெளிப்பாடாக அது மிகவுமே திணறடிப்பதாகவே உள்ளது. ஆமாம், நடன நங்கைகளையும் பார்க்கப் பிடிக்கும். பாலியல் காட்சிகளெல்லாம் பிரச்சனையல்ல, இசைரீதியாக அவ்வப்போது சுவாரஸ்யமாக இருந்தாலும் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது குழுக்கள் வெறும் குப்பையாகத்தான் இருக்கின்றன. த பாண்ட் குழு கலைந்தபின் அமெரிக்க ராக்கிசையில் உருப்படியாக ஏதும் நிகழவில்லை, நம் கெட்ட நேரம். மை டியர், MTVயை நேரம் காலம் தெரியாமல் இடையறாது பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் அங்கு நடந்து கொண்டிருப்பதில், அதன் பாடல் வரிகளில் மட்டுமல்லாது அதன் மொத்த சூழலிலும், இந்த தேசத்தின் தேவைகள் மற்றும் விழைவுகள் குறித்த மெய்யான தரிசனம் காணக் கிடைக்கிறது. நிதர்சனத்தின் பிம்பத்தையே அது பார்த்துக் கொண்டிருக்கிறது, அதைப் பார்ப்பது விசித்திரமாகவும் அமோகமாகவும் இருக்கிறது. இந்த இரு விவரங்களையும் அது ஊர்ஜிதப்படுத்துகிறது: முதலாவதாக, திரையில் ஒரே சமயத்தில் எவ்வளவு நபர்கள் இருந்தாலும் முற்றிலும் இறுமாப்பு செய்து கொண்டிருக்கும் தருணங்களைத் தவிர்த்தால் எவருமே தங்களை சுதந்திரமானவர்களாக உணர்ந்து கொள்வது போல் தெரியவில்லை. இரண்டாவதாக, இது மீண்டும் மீண்டும், பாடல் வரிகளிலும், ஒருவர் ஆடும் விதத்திலும், அவர் அசைவிலும், காணக் கிடைகிறது, ஒருவரின் மிக சிறப்பான, தூய்மையான அம்சங்களுக்கு படைப்பில் கிஞ்சித்தும் இடமில்லை – அனுபவத்திற்கு முன்னும் பின்னும் இன்றியமையாத தூய்மையே நிலவியிருக்கிறது என்ற தொன்மம் நம்மை விட்டு விலகுவதே இல்லை. அது எவ்வளவு வெகுவாக பரவியிருக்கிறது என்பதையும் கவனியுங்கள்! ஒரு மாத காலத்திற்கு ரோமில் விரிவுரை ஆற்ற வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும்போது மிகவுமே சோர்வுற்றிருந்ததனால், நானும் என் மகனும் இத்தாலிய MTVயை உற்சாகத்துடன் பார்த்து கொண்டிருப்போம். வெறித்துக் கொண்டிருந்த எனக்கு அதை சுத்தமாக நம்ப முடியவில்லை. இத்தாலிய MTV அமெரிக்க MTV-யின் அப்பட்டமான பகடி மட்டுமே; இதற்கு சில அமர்க்களமான பின்விளைவுகளும் உண்டு – அமெரிக்க மதம் ரோமையே எட்டிவிட்டது! இது ஒரு மதம் சார்ந்த பெருநிகழ்வேயன்றி வேறெதுவுமில்லை. அது நிகழ்வதைக் காண்பது மிக வினோதமாக இருந்தது.

பேட்டியாளார்: விமரிசகராக ஆக தேர்வு… அல்லது ஒரு வேளை, உண்மையில் அது தேர்வுக்குட்பட்ட ஒன்றில்லையோ….

ப்ளூம்: அது தேர்வல்ல, தண்டனை.

பேட்டியாளர்: விமர்சனத்தை வாழ்க்கைத் தொழிலாக கொண்டிருப்பது மகிழ்வூட்டுவதாக இருக்கிறதா?

ப்ளூம்: அந்த கண்ணோட்டத்தில் நான் அதைப் பற்றி சிந்திப்பதில்லை.

பேட்டியாளர்: நிறைவளிப்பதாக?

ப்ளூம்: அந்த கண்ணோட்டத்தில் நான் அதைப் பற்றி சிந்திப்பதில்லை.

பேட்டியாளர்: தவிர்க்க இயலாதது மட்டும்தானா?

ப்ளூம்: என்னைப் பிடிக்காதவர்கள் அப்படிக் கூறலாம். அவரது ‘ரூயின் த சேக்ரட் ட்ரூத்ஸ்’ நூல் பற்றிய விமர்சனத்தில் டெனிஸ் டானொஹ்யூ [2] என்னை இலக்கிய விமர்சனத்தின் சாத்தானாக விவரித்தார். அதை நான் அனிச்சையான புகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்கிறேன். ஒருகால் உண்மையில் அது தன்னிச்சையான புகழ்ச்சிதானோ என்னவோ. என்னவாக இருந்தாலும் அதை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். என் தகுதி காரணமாக அந்த தீய உச்சத்திற்கு உயர்த்தப்படுவது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது.

பேட்டியாளர்: இலக்கிய விமர்சனத்தின் சாத்தானாக இருப்பதற்கு தனிப்பட்ட முறையில் எதையாவது இழக்க வேண்டியிருந்ததா?

ப்ளூம்: அது என்னவாக இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. நாமெல்லோருமே, திரு, ஸ்டீவன்ஸ் கூறியது போல் “நாம் என்ற அந்த தவிர்க்க இயலாத மிருகமாக இருப்பதற்கே சபிக்கப்பட்டிருக்கிறோம்.” அல்லது அவரைக் காட்டிலும் மகோன்னதமான ஆளுமையான சர் ஜான் ஃபால்ஸ்டாஃப் கூறியது போல், “ஒருவன் தன் வாழ்க்கைத் தொழிலில் உழைப்பதில் ஒரு பாவமுமில்லை”. இலக்கிய விமர்சனத்தின் சாத்தான் என்று கருதப்படுவதைவிட அதன் ஃபால்ஸ்டாஃபாகவே கருதப்பட விரும்புகிறேன் என்பது வெளிப்படை. சாத்தான் மாமாவை எனக்கு மிகப் பிடித்திருந்தாலும் ஃபால்ஸ்டாஃப் மாமாவை ஒரு படி மேலேயே பிடிக்கும். அவர் சாத்தானைக் காட்டிலும் நகைச்சுவை மிக்கவர். சாத்தானைவிட ஞானமுள்ளவர். ஆனால் இதில் ஆச்சரியமேதும் இல்லை, மில்டனையும்விட ஷேக்ஸ்பியரே சிறந்த கவிஞர்.

பேட்டியாளர்: ஆசிரியராகவோ, விமரிசகராகவோ செய்து முடிக்க வேண்டியது ஏதாவது இருக்கிறதா? தற்போது திட்டமிட்டிருப்பதற்கு அப்பால்?

ப்ளூம்: மீதமிருக்கும் வாழ்நாளிலும் ஷேக்ஸ்பியரை பயிற்றுவிக்க உத்தேசித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரைப் பற்றி ஒரு பொதுவான, அனைத்தையும் தொகுக்கும் ஆய்வொன்று எழுத விரும்புகிறேன். ஒவ்வொரு நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பற்றி கருத்து தெரிவிக்காமல் ஷேக்ஸ்பியரைப் பற்றிய ஒரு முழுமையான பார்வைக்கு இட்டு செல்வது போல் அதை கட்டமைக்கலாம் என்று எண்ணம். ஷேக்ஸ்பியரைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை ஒருவருக்கு எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கான நேரம் அமையும்போது மூப்பெய்தி சிந்திக்கவே முடியாமலும் போகலாம்.

பேட்டியாளார்: நீங்கள் கூறுவது போல், உங்களை யாராவது பயனளிக்கும் வகையில் பிறழ்வாசிப்பு செய்திருக்கிறார்களா?

ப்ளூம்: உலகில் எங்கோவொரு மூலையில் ஒன்றிரெண்டு இளம் விமரிசகர்களாவது அவர்களுக்கு அனுகூலமான வழியில் என்னை காத்திரமான பிறழ்வாசிப்பிற்கு உட்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். கடவுளுக்குத் தெரியும், நான் சாமூயெல் ஜான்சனோ, வில்லியம் ஹஸ்லிட்டோ, ஜான் ரஸ்கினோ ஏன் வால்டர் பேட்டரோ அல்லது அவரது விமரிசகர் ஆளுமையில் ஆஸ்கர் வைல்டோ அல்லவென்று. ஆனால், ஆமாம், அப்படிச் செய்வார்கள் என்று நம்புவோம். பல வருடங்களாக, பழைய புத்தகக் கடைகள், நூலகங்கள், நணபர்களின் புத்தக் அலமாரிகள், இவற்றிலிருந்து நான் எழுதிய புத்தகங்களை கண்டெடுத்திருக்கிறேன். இவ்வளவு புத்தகங்கள் எழுதியும் பார்த்தாகியும் விட்டது என்ற நிலையில், நான் நிரம்பவே கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டேன்…விமர்சனங்கள், மற்றவர்களின் புத்தகங்களில் நம்மைப் பற்றி பேசப்படும் விஷயங்கள், இவற்றிலிருந்தும் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்… அல்லது மற்றவர் உங்களிடம் கூறுவதிலிருந்தும் — ஆனால் நீங்கள் பெருமைப்படும் விஷயங்கள், உங்கள் நுட்பமான அவதானிப்புகள், உங்கள் பங்களிப்புகள் என்று நீங்கள் கருதுவது…. காலகாலமாக இதை ஒருவர்கூட கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் போகிற போக்கில் கூறியது அல்லது உங்களுக்கு தலைகீழாய் தெரிந்த விஷயங்களுக்கு வியாக்கியானமளிப்பது, , அக்கப்போரில் உங்கள் கருத்தை நிலை நாட்ட, அலுப்பாகவே இருந்தாலும் அவ்விஷயங்களை விளக்கி முடிப்பது. இதைத்தான் கவனிக்கிறார்கள், இதைத்தான் அடிக்கோடிடுகிறார்கள், இதைத்தான் மேற்கோள் காட்டுகிறார்கள், இதைத்தான் தாக்குகிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள். இதைத்தான் அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை செய்யவோ செய்யாமலோ போகலாம், ஆனால் அது நிச்சயமாக மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதில்லை. இதைப்பற்றி மற்ற விமரிசகர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பேசியிருக்கிறேன்; என்னைப் போல் அவர்கள் இதை ஆழமாக உணரவில்லை என்றாலும் அக்கருத்து அவர்களின் அகத்தந்திகளுடன் ஒத்ததிர்வதை என்னால் உணர முடிகிறது. ஒருவருடைய மகத்தான கருத்துகள் என்பது உண்மையில் அவருக்கே உரித்தான மகத்தான கருத்துகள் மட்டுமே. ஆனால் அவற்றுள் எவரொருவருக்காவது பயனளிக்கும் அல்லது குறைந்தபட்சம் எவரொருவராவது அடையாளம் காணக்கூடிய ஒரு கருத்து கூட இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு மிக விநோதமான நிலை… நம்மை நாமே அறிந்து கொள்ளாதிருக்கும் அளவைக்கும் இதற்கும் ஏதொவொரு தொடர்பிருக்கும் போலிருக்கிறது.

———————————————-
Source(s) / Further Reading

Harold Bloom, The Art of Criticism, 1991 Interview, The Paris Review Interviews, Vol II, Picador, 2007

குறிப்புகள் (மொழி பெயர்ப்பாளர் வழங்குபவை)

[2] டெனிஸ் டானஹ்யூவின் விமர்சனத்தை இங்கே பெறலாம்: https://www.nybooks.com/articles/1989/03/02/the-sad-captain-of-criticism/

Series Navigation<< விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.