லாவண்யா- கவிதைகள்

கல்குதிரைகளும் பாண்டவர்களும்

மாதம் முழுதும்
மாடாய் உழைக்கிறோம்.
ஊதியம் மட்டும்
ஒருநாள்தான் தருகிறார்கள்.
அதையும் எண்ணித் தருகிறார்கள்.
யானைப் பசிக்குச் சோளப்பொறி
எப்போதும் போதாமையில்
எத்தனைநாள் வாழ்வதென்று
கை நிறைய பை நிறைய பீரோ நிறைய
பணம் பார்க்க ஆசைப்பட்ட என் நட்புகள்
அற்புத விளக்குகளைத் தேடின ஒரு சமயம்.
சீட்டுக்குலுக்கிப்போட்டு
எடுத்துப் பார்த்தபோது
புரவிச் சீட்டு தேர்வானது.
தரவுப் புத்தகத்தில் தலையைப் புதைத்து
எந்தக் குதிரை ஓடும் குதிரை
எந்தக் குதிரை பாயும் குதிரை
எந்தக் குதிரை பறக்கும் குதிரையென
சல்லித்துப் பந்தயம் கட்டின பல்லாண்டு.
கனவுக் குதிரைகள் ஒவ்வொன்றும்
கல்குதிரை, மண்குதிரை, மரக்குதிரையானதில்
பேச்சிழந்தான் ஒருவன். மூச்சிழந்தான் ஒருவன்.
முச்சூடுமிழந்தான் மற்றொருவன்.
மதிற்சுவர்மீது பொம்மைக் குதிரைகள் வைத்து
மாளிகை கட்டினான் ஒருவன் மட்டும்…
நீறுபூசிப் பொட்டிட்டு சடைவளர்த்து
அரைத் துறவியானவன் விளக்கம் தந்தான்.
எதற்குப் போனாலும் அதிருஷ்டம் வேணும்.

***

கூண்டு

ஊட்டிவிடாமல்
உண்ணத் தெரியாக் குஞ்சு,
உறக்கம் தழுவும் சமயம்
அன்னையின் அணைப்பிலிருக்க
விழையும் பிஞ்சு.
பக்கெட் நீரை
கையில் அளைந்து
சுவரில் பதித்து
வியக்கும் அரும்பு.
காகிதம் கிழியும்
ஓசையை ரசிக்க
செய்தித்தாளைக்
கிழித்து மகிழும் மழலை.
ஆசைதீர விளையாடட்டும்
அணிற்பிள்ளையாய்
சுற்றித் திரியட்டுமென்றால்
யார் கேட்கிறார்கள்?
சுயமாய் கூவக் கற்கும் குயிலை
அழ அழ
சொன்னதைச் சொல்லும் கிளியாக்கும்
கிண்டர் கார்டன் கூண்டுக்குத்
தூக்கிச் செல்கிறார்கள்
முதல் வகுப்பு படிக்கும்
மூத்த பேரன் முதுகில்
அரிசிமூட்டை கனத்தில் புத்தக மூட்டை.
குழந்தைகளை ஏனிப்படி வதைக்கிறார்கள், ஆண்டவரே?

—-லாவண்யா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.