மகிமை

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பத்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே.
ஔவையார்

மேலுள்ள பாடல் ஒரு புறநானூற்றுத் தாய் காலில்லாத கட்டிலில் (பாடையில்) கிடத்தப்பட்டுள்ளத் தன் மகனைப் பார்த்து அழும் அரற்றல்.

சிறுவர்களை கால்கழிக் கட்டிலில் கிடத்திக் கொண்டிருந்த போர் பல நூற்றாண்டுகள் கழித்துச் சிறுமிகளையும் கிடத்தியதன் சித்திரத்தை ‘இச்சா’ அளிக்கிறது.

வீரம், போர், தியாகம் போன்றவற்றிற்கு இன்றைய வாழ்க்கையில் உண்டாகிவிட்டிருக்கும் அர்த்தமின்மையை , பொருத்தமின்மையை நம் கண் முன் நிறுத்துகிறது.

ஆலா என்னும் விடுதலைப் புலி தற்கொலைப் படைப் போராளியின் புனைவுச் சித்திரம்தான் இந்நாவல். ஒரு மகிமையான வாழ்விற்கு ஆசைப்படும் வயதில் மகிமையான சாவு ஒன்றுதான் ஆலாவிற்கு லட்சியமாய் இருக்கிறது.

ஓடு ஓடு என்று அதை நோக்கி ஓடுகிறாள் ஆனால் சாவில் சற்று மகிமை மங்குமோ எனும் சந்தேகம் கொள்கையில் அற்பமான சாவிற்கு, அற்பமான வாழ்வு மேலென வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறாள்.

வியட் தாங்க் குயென் எழுதிய 2015 ஆண்டிற்கான புலிட்சர் பரிசு வென்ற சிம்பதைஸர் எனும் நாவலுக்கும்இச்சாவிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.

சிம்பதைஸர் கதையின் நாயகன் ஓர் உளவாளி, எதிரி என அடையாளம் காட்டப்பட்டவர்களுடன்தான் தன் பாதி வாழ்வைக் கழிக்கிறான். அவனும் ஆலாவைப் போல மைய நீரோட்டத்தில் இருந்து வந்தவன் அல்லன், எதிரி எனும் அடையாளப் படுத்தபட்டவர்களுக்கு இடையே வளர்ந்தவன். எதிரி என்னும் கூட்டமாக இல்லாமல் தனி மனிதர்களாய் அவன் முன் வரும்பொழுது அவரவர் தனிப்பட்ட குணங்கள்தான் அவன் கண்ணில் படுகிறது. நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனே, வாக்குமூலம் எழுதும்போதுகூட அதை அவனால் சொல்லாமலிருக்க முடிவதில்லை. ஆலாவும் சிங்களத்தி என்றே அழைக்கப்படுகிறாள். அவளுக்கு சிங்கள றங்கணி அக்காவும், இயக்க அக்காக்களும் வேறு வேறு அல்லர். அவள் கடையின் சிங்கள முதலாளி ஒரு சொக்கத்தங்கம் எனச் சொல்வதில் அவளுக்குத் தயக்கம் எதுவும் இல்லை.

வேறு ஒரு சூழலில் அவள் சிங்கள சுமன்லாலை மணந்து கொண்டு அம்பாறையிலேயே அவளளவில் ஓர் மகிமையான வாழ்வை வாழ்ந்திருக்கவும் கூடும்.

இரு நாவல்களும் போர்கள் கட்டியெழுப்பும் கருப்பும் வெளுப்புமான கற்பிதங்களைக் கலைத்துப் போட்டுப் போரின் நிதர்சனங்களைப் பேசுகின்றன.

போர் வியட்நாமாய் இருந்தாலும், இலங்கையாய் இருந்தாலும் உருவாக்கும் சூழல் ஒன்றே. சாமான்யர்களின் வாழ்க்கையை சிதறடிக்கிறது, மக்கள் உயிரையும், உணர்வுகளையும் வைத்து செல்வம் கொழிக்கும் சந்தர்ப்பவாத வியாபாரிகளை உருவாக்குகிறது, மெல்லுணர்வுகளை மழுங்கடிக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளாய் செங்கல் செங்கலாய் அடுக்கிக் கட்டிய மானுடம் என்னும் விழுமியத்தை அடித்தளமில்லாமல் அடித்து நொறுக்கி மீண்டும் விலங்காக்கி நிர்வாணமாய் நிற்க வைக்கிறது.

மனிதர்கள் எனச் சொல்லிக் கொள்ளத் தேவைப்படும் அனைத்து அடிப்படைகளையும் முற்றாக இழந்து பெறப்படும் போர் வெற்றியைப் போல் வேறோர் அபத்தம் உண்டா எனும் கேள்வியை வாசிப்பவர் மனதில் இரு நாவல்களும் விதைக்கின்றன.

போர் வன்முறை மட்டுமன்று, இச்சா வன்முறையின் அனைத்து ரூபங்களையும் நம் முன் பரப்பி வைக்கிறது.
கிழவர்களின் பாலியல் வன்முறை , கணவர்களின் பெண்ணை உடைமையாக்கத் துடிக்கும் உளவியல் வன்முறைகள் போன்றவை போர் வன்முறையைவிட உக்கிரமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஷோபாவை அவருடைய பகடிக்காகவும், ஒரு விஷயத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் அணுகும் புதுமைக்காகவுமே நான் விரும்பி வாசிப்பதுண்டு. இந்நாவல் மூலம் அதிலிருந்து மேலேழுந்து வேறொரு தளத்திற்குச் சென்றிருக்கிறார். அவருடைய கருப்பு நகைச்சுவையும், கசப்பு மண்டிய பகடிகளும் மிக அரிதாகவே இச்சாவில் வருகிறது.

வாழ்வு வாழப்படுவதாலேயே மகிமை கொண்டதாகிறது அதற்கு மேலதிக மேற்பூச்சுகள் எதுவும் அவசியப்படுவதில்லை. சாவு அனைத்து மகிமைப்படுத்துதலுக்கு பிறகும் குழிக்குள் உறையும் வெறுமை மட்டுமே. எனவே எங்காவது , எவ்விதமாவது ஒரு சிறு வாழ்வை வாழ விடுங்கள் என இறைஞ்சுகிறது இந்நாவல்.
இதுவரைத் தன் கதைகளில் தள்ளி நின்று பகடி செய்யும், கை கொட்டிச் சிரிக்கும் கலகக்காரன் ஷோபா சக்தி இந்நாவலின் மூலம் அள்ளி அணைக்கும், ஊர்க் குழந்தை அனைத்தையும் தன் குழந்தையாய்ப் பாவிக்கும் பேரன்னையாக உருமாறியிருக்கிறார்.

இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி, பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளைப் பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.

தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல, புளிப்பு மிட்டாய்கள்கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர் வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதப்பட்ட நாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

புறநானூற்று ஔவையில் இருந்து இன்று ஷோபா சக்தி வரை உலகத் தரத்தில் எழுதும் தமிழ் படைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதில் மெய்யாகவே நாம் பெருமிதம் கொள்ளலாம்.

One Reply to “மகிமை”

  1. சிறப்பான ஆய்வு.ஒரே ஒரு கருத்து மட்டும் விவாதத்திற்குரியது என்று தோன்றுகிறது.
    போர் வியட்நாமாய் இருந்தாலும், இலங்கையாய் இருந்தாலும் உருவாக்கும் சூழல் ஒன்றே. சாமான்யர்களின் வாழ்க்கையை சிதறடிக்கிறது, மக்கள் உயிரையும், உணர்வுகளையும் வைத்து செல்வம் கொழிக்கும் சந்தர்ப்பவாத வியாபாரிகளை உருவாக்குகிறது, மெல்லுணர்வுகளை மழுங்கடிக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளாய் செங்கல் செங்கலாய் அடுக்கிக் கட்டிய மானுடம் என்னும் விழுமியத்தை அடித்தளமில்லாமல் அடித்து நொறுக்கி மீண்டும் விலங்காக்கி நிர்வாணமாய் நிற்க வைக்கிறது

    வியட்நாம் யுத்தம் எந்த வியாபாரிகளால் உண்டானது? வியட்நாம் வியாபாரிகளால் அல்ல. அதேபோல் போரின் விளைவுகள் நீங்கள் குறிப்பிட்டிருப்பது மட்டும்தானா? ஒரு நாட்டு மக்கள் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைவது அதன் விளைவுகளில் ஒன்றில்லையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.