
கங்கு பறக்க பீடி சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு நடந்தான் பொன்னன். காட்டின் மெளனத்தை அவ்வப்போது சீர்குலைப்பது போல் போகும் வழி எல்லாம் காரி காரி உமிழ்ந்தான். நடு நிசியில் குள்ள நரிகளின் ஊளைகள் கேட்டுக்கொண்டிருந்தன. அவன் நடை ஓட்டமாய் இருந்தது. அவனை பின்தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தான் தங்கராசு.
மலைப்பாதை. தார் ரோடு என்று சொல்லிவிடமுடியாத படியான கல்லும் கரடுமான பாதை தான். தங்கராசு வருகிறானா என்றே பொன்னனுக்கு சந்தேகமாய் இருந்தது. அவ்வப்போது அவனை திரும்பிப் பார்த்துகொண்டிருந்தான். தங்கராசுவோ சற்று தளர்ந்தவன் போல வந்தான். மூன்று தினங்களாக வயிற்றுப்புண் அவனை வாட்டியெடுத்திருந்தது.
அந்த இருட்டில் அவர்கள் வழி தவறிப் போக வாய்ப்பில்லை. கால் பார்த்து அறிந்த பாதை தான். தங்கராசுவுக்கு அந்த பிரச்சினையும் இல்லை. பொன்னனின் வாயிலிருந்து எழும் முதல் நாள் இரவு குடித்த புளித்த கள் வாடையை வைத்தே அவனை பின் தொடர்ந்துவிடுவான்.
சித்திரையின் மழுங்கலான நிலவொளி காட்டுப் பாதையில் ஒழுகியது. காலையில் கொளுத்திய வெயிலுக்கு ஈடு செய்யும் அளவு அந்த மலை பிரதேசத்தில் குளிரும் இருந்தது.
நடந்தே தான் வெள்ளிமலையை அடையவேண்டும். விளைச்சல் இருக்கும் பருவமாக இருந்தால் தலைவாசலில் இருந்தோ ஆத்தூரில் இருந்தோ ஜவ்வரிசி ஆலைகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு ஏற்ற லாரிகள் வரும். அதில் ஏறிக்கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இப்போது எந்த ஒரு லாரியும் அந்த மலைப்பாதையில் வரவில்லை. நடந்தே தான் ஆகவேண்டும்.
தங்கராசு இரண்டரை மணிக்கு எழுந்து கொண்டு தேனாண்டாளை எழுப்பிவிட்டு அவளிடம் சொல்லிக்கொண்டு எதிர் குடிசையில் இருந்த பொன்னனையும் எழுப்பிவிட்டான். வேண்டியவற்றையெல்லாம் எடுத்துகொண்டார்கள்.
விடிகாலை நான்கரை மணி அளவில் வெள்ளிமலையை அடைந்தனர். வெள்ளிமலை பஸ் ஸ்டாண்டில் மலை இறங்கும் முதல் பஸ் கிளம்பும் வரை இருவரும் குந்தி அமர்ந்துகொண்டனர். மீண்டும் பீடி பற்ற வைத்தான் பொன்னன். தங்கராசு அப்போது திறக்கப்பட்டுக்கொண்டிருந்த டீக்கடையில் இரண்டு டீ வாங்கி ஒன்றை உறிஞ்சிக்கொண்டிருந்தான். பஸ்ஸிலேயே தூங்கிப்போன கண்டக்டர் எழுந்தார். பஸ்ஸின் விளக்குகளைப் போட்டார். ட்ரைவர் சீட்டுக்குப் பின் சீட்டில் கால் நீட்டி உறங்கிய ட்ரைவரை எழுப்பிவிட்டார். எதிரில் இருந்த டீக்கடைக்குச் சென்று முகம் கழுவி, காசு வைத்திருக்கும் தன் தோல்பையில் பொட்டலம் கட்டியிருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார். பின்னர் அவரது வாடிக்கையான டீயை அருந்தினார். அப்போது அவர் முன் ட்ரைவர் எழுந்து நடந்து வந்தார்.
“யோவ் சீக்கிரம் டீயக்குடிச்சுட்டு வண்டிய எடுயா. கள்ளக்குறிச்சி டிப்போல சரியா ஏழரை-எட்டு மணிக்குலாம் போய் ரிஜிஸ்தர்ல பதிஞ்சாகணும். மலை வண்டினு கூட பாக்காம ஏச்சு பேச்சு வரும்” என்றார்.
அருகில் இருந்த பைப்படியில் இரண்டு லிட்டர் காலி பெப்ஸி பாட்டிலில் தண்ணீர் நிரப்பினார்.
அந்த நீரை பஸ்ஸின் முன் கண்ணாடிகளில் பீய்ச்சி அடித்து தோள்பட்டையில் போட்டிருந்த துணியால் கழுவி துடைத்தார்.
பொன்னனும் தங்கராசுவும் அதைப் பார்த்துகொண்டே அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரையும் கவனிக்காதவராய் இருந்தார் கண்டக்டர்.
சிறிது நேரம் கழித்து, வண்டி கிளம்ப பார்த்தது. இவர்கள் இருவரும் ஏறிக்கொண்டனர். கண்டக்டர் அண்ணன், “வாங்கையா ஆரம்பூண்டி காரங்களா, என்ன தேன் எடுக்க மலையெறங்கவா? ரொம்ப நாளா ஆளக்காணலியே”
பொன்னன் “ஆமா சார். கெளங்கு வெளச்சல் அடிக்கிற வெயில்ல வசதி பட்டு வரலைங்க அதான்” என்றான். “யப்பா. பொண கப்பு. என்னய்யா இன்னும் நீங்க சொந்தமாய் காய்ச்சி குடிக்கிறத நிறுத்தலயா?”
“இது கள்ளுங்க. கலயத்துல ரொப்பி பத்தடி குழில பதப்படுத்தி வச்சதுங்க. நொரைக்க நொரைக்க போதை பாத்துக்குங்க” என்றான்.
“சரி, சரி. மாவடிப்பட்டுக்கு ரெண்டு சீட்டு தரவா?”
“இல்ல சார், கரியாலூருக்கு ரெண்டு”.
“ஏன்யா?”
“இப்ப இதான் ரூல்ஸ் சார். மலை எறங்கறவங்களாம் கரியாலூர் பாரஸ்ட் ஆபீஸ்ல கை நாட்டப் போட்டு தான போகணும்”
“யோவ் கரியாலூர்ல எறக்கிவிட்டா அடுத்த பஸ் கெடையாதே நாலு மணி நேரம் ஆகுமே.”
“நடந்துக்குவோம் சார்” என்றான் பொன்னன்.
“அது சரி. ஆரம்பூண்டிலேந்து வெள்ளிமலைக்கு நடக்க தெரிஞ்சவங்களுக்கு இந்த தூரத்த
நடந்து கடக்க தெரியாதா ”. காசை நீட்டிய தங்கராசுவைப் பார்த்து “ஊமத்தொற எப்படியா இருக்க” என்று மீதிச்சில்லறை பையில் அலசி சீட்டினை கிழித்து அவனிடம் கொடுத்தார்.
***
நான் அப்போது சிட்லிங்கை கடந்திருந்தேன். பெங்களூரிலிருந்து விடிகாலை மூன்று மணிக்கு என் இருசக்கர வாகனத்தில் கிளம்பியிருந்தேன். அரூர் வழியாக தீர்த்தமலையைத் தாண்டி திருவண்ணாமலை ரோட்டில் இருக்கும் நரிப்பள்ளிக்கு முன் பிரிய வேண்டும். கல்வராயன் மலையை முக்கோணமாக ஆக்கிக்கொண்டால் தீர்த்தமலை அந்த முக்கோணத்தின் மேல் நுனி. அதன் வலது நுனியில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம். இடது நுனியில் சேலம் மாவட்டம். மலையைச் சுற்றி செல்லாமல் நரிப்பள்ளிக்கு முன் செங்குத்தாக கீழிறங்கி வலப்பக்கம் மலையேறி – கருமந்துறை- வெள்ளிமலை – கரியாலூர் வழியாக மீண்டும் மலையிறங்கினால் – கோமுகி அணை – கச்சிராயபாளையம் – என் வீடு. இது தான் என் பயணத்திட்டம்.
***
பேருந்தில் போகும் போதே சிவந்த நிற ஒளிக்கீற்று கிழக்கு வானில் தெரிந்தது. வானம் தன் பொன் வாளால் பகலையும் இரவையும் இரண்டாக பிரிக்கிறது போல இருந்தது அது. கள்ளக்குறிச்சி மார்க்கெட்டுக்கு எடுத்து செல்வதற்காக காய்கறிக் கூடைகள், பூக்கூடைகளுடன் ஜனங்கள் அம்மலைப் பாதை பேருந்து நிறுத்துமிடங்களில் ஏறிக்கொண்டார்கள். இவர்கள் இருவரும் சற்று கண்ணயர்ந்து போனார்கள். பொன்னன் தங்கராசுவின் மேல் சாய்ந்து இருந்தான். அவனது எச்சில் நுரைத்து தங்கராசுவின் நெஞ்சின் மேல் வழிந்து கொண்டிருந்தது.
“யோவ். ஆரம்பூண்டி காரங்களா. கரியாலூர் ஆபீஸ் வந்துருச்சு. உங்க சாமான் சரச்சாலாம் எடுத்துகிட்டு எறங்குங்க” என்றார் கண்டக்டர். முழிப்பு தட்டி இருவரும் இறங்கிக்கொண்டனர். தங்கராசு தன் தலையில் கட்டியிருந்த துண்டால் அவன் நெஞ்சில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டே நடந்தான்.
இருவரும் வனச்சரக அலுவலகம் நோக்கி நடந்தனர். பூட்டியிருந்ததைப் பார்த்துவிட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டனர். எதிரே இருந்த ஓய்வறையில் இருந்து வனச்சரக அலுவலகத்தின் காப்பாளர் சோலைமணி கைலியும் மேல் துண்டுமாக பல் துலக்கிக்கொண்டிருந்தவர் அவர்களைக் கண்டதும் நடையை துரிதப்படுத்தி சாவியை எடுத்துக்கொண்டு வந்து அலுவலகக் கதவை திறந்தார்.
“என்னய்யா தேன்காரங்களா தேனெடுக்க மலையெறங்கவா?”
“ஆமாஞ்சாமி” என்றான் பொன்னன்.
தன் மேசை மேல் அடுக்கி வைத்திருந்த ரிஜிஸ்தர்களில் மூன்றாமாவது ரிஜிஸ்தரை எடுத்து தட்டி அவர்களிடம் ஒன்றன் கீழ் ஒன்றாக கை நாட்டுகளை வாங்கிக்கொண்டார். அவரே அவர்களது ஊர்ப்பெயரையும் அவர்களது பெயர்களையும் முறையே எழுதி நிரப்பிக்கொண்டார். பின்னர் அவர் ஒரு படிவத்தை எழுதி நிரப்பி அவர்களிடம் தந்து, “செக் போஸ்ட் ல முருகன் ட்யூட்டில இருப்பான். அவன்கிட்ட இத குடுத்துட்டு மலையெறங்கணும். சரியா?” என்றார்.
“யோவ் கொண்டு போற சாமான்கள ஒன்னு விடாம பரப்பி வைங்க பாப்போம்” என்றார்.
அவர்கள் தங்களிடம் இருந்த கொத்தரிவாள், 10 மீட்டர் சுற்றிவைக்கப்பட்ட சணல் கயிறு போன்றவற்றை வெளியே எடுத்து பரப்பி வைத்தனர். தங்கராசு கூடுதலாக வாசலிலேயே வைத்து விட்டு வந்த தேனை எடுத்து வருவதற்கான கித்தான் சாக்குப் பைக்குள் திணித்து வைக்கப்பட்டிருந்த இரு அலுமினிய குண்டான்களை எடுத்து வந்து வைத்தான். இடுப்பில் முடிந்து வைத்திருந்த கடுக்காய் பொட்டலத்தையும் எடுத்து காட்டினான்.
“யோவ். உடுத்திருக்கிற உடைய தவுத்து எல்லாமே இங்க சாமாங்க தான். அது என்ன சட்ட பாக்கெட்டுல. எடு வெளில.” என்றார் பொன்னனைப் பார்த்து.
பொன்னன் தன் பீடிக்கட்டையும் வத்திப்பெட்டியையும் எடுத்துக்காட்டினான். “இது தான் சாமி” என்றான் பழுப்புக் கறை எறிய பற்களால் இளித்துக்கொண்டே.
“யோவ் இத்தனையும் எடுத்துவைக்கச் சொன்னதே இதுக்காகத்தான். பாத்தில்ல காட. எப்படி காஞ்சு கெடக்குதுன்னு”.
அதனை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார். “இப்போ போலாம் நீங்க” என்றார்.
***
கரியாலூரைத் தாண்டி வளைந்த சாலையில் நிலை தடுமாறியதால் நான் என் இரு சக்கர வாகனத்தை சரித்து கீழே விழுந்தேன். எனக்குப் பின் நடந்து வந்து கொண்டிருந்த இருவரில் ஒருவர் என்னை கைப்பற்றி எழுப்பிவிட்டு “மலைப்பாதை தம்பி. பாத்துப்போணும்” என்றார். மற்றவர் என் இரு சக்கர வாகனத்தை நிமிர்த்தி ஓரமாக வைத்துவிட்டு பேசாமல் நின்றார். நான் நொடித்துக்கொண்டு நின்று என் கை கால் சிராய்ப்புக்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பின்னர் சற்று நிலைப்படுத்திக்கொண்டு நோக்கினேன். அவர்கள் என்னை கடந்து நான் போகும் திசையிலேயே சென்றனர். இடுப்பில் ஒரு துண்டைக்கட்டிக் கொண்டு கொத்தரிவாளை முதுகுக்கு பின்புறம் சொருகியிருந்தவாறு தோள்பட்டையில் சணல் கயிறு சுற்றியிருந்தவாறு கித்தான் சாக்குப்பையுடன் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
***
மாவடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாகவே சாலையில் இருந்து பிரிந்து ஜல்லிக்கல் பாதை வழியாக இருவரும் சென்றனர். தொடர்ந்து நடந்து ஊரைக் கடந்தனர். ஊரைத்தாண்டியவுடன் ஊர்க்காரர்களின் உழவுகாடு. அது கடந்து வனச்சரக செக்போஸ்ட். பின்னர் மூங்கில் காடு. இப்படி இரண்டு கிலோமீட்டர். பின்னர் தொடர்ந்து ஏழு கிலோமீட்டருக்கு மலை இறக்கம். இறக்கம் தொடங்கும் முன்னரே அந்த பள்ளத்தாக்கு தெரிய ஆரம்பித்துவிடும். மலைகளுக்கு நடுவே நீரில்லாத தடம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த தடம் செங்குத்தாக விழும் இடம் தான் மேகப் பாறை. மழை நாள்களில் அது மேகம் நீர்வீழ்ச்சி. இப்போது அங்கு நீர் வெறும் பூச்சியாக பாறையில் ஊர்ந்து கொண்டிருக்கும் அல்லது வெறும் நீர்க்கோடு தான் மிஞ்சியிருக்கும். அந்த பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் தான் மலைத்தேன் அடை மிகுதியாக காணப்படும். அதற்காகத் தான் இவர்கள் செல்கிறார்கள். செக்போஸ்டில் சோலைமணி கொடுத்த படிவத்தை முருகனிடம் தந்தார்கள். மீண்டும் ஒருமுறை செக்கிங் செய்துவிட்டு உள்ளே அனுப்பினான் முருகன்.
பொன்னன் வெக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உடுத்திக்கொள்ள ஆரம்பித்தான். இதுவரை பொத்தியிருந்த அவனது மெளனத்தையும் அமைதியையும் வெயில் சீர்குலைத்தது. அவனது பேச்சிலும் அந்த புழுக்கம் வீச ஆரம்பித்தது. தங்கராசு வயிற்றுப்புண்ணுக்காக தேனாண்டாள் கொடுத்தனுப்பிய கடுக்காய் பொடிப் பொட்டலத்தை தன் இடுப்புக்கட்டில் இருந்து எடுத்தான். பின்னர், பொட்டலத்தைப் பிரித்து
தன் வலது கை ஆள்காட்டி விரலால் பொடியை தொட்டு நாவில் எடுத்து வைத்துக்கொண்டான். கடுக்காயின் துவர்ப்பு அவனது நாவில் இறங்கி கடுகடுத்தது. அவனால் தாள முடியவில்லை. தொடர்ந்து உமிழ்ந்து கொண்டு வந்தான். பொன்னன் அவனை கண்டுகொண்டே வந்தான். “அவ இடிச்சு கொடுத்த பொடித்தான. கடுக்கச் செய்யுதோ” என்றான்.
தங்கராசு மலை இறக்கத்தின் ஓரங்களில் இருபக்கத்திலும் மண்டியிருந்த உண்ணிப்பூ புதர் களில் இருந்து மலர்க்கொத்துகளைப் பறித்தான். மஞ்சளும் சிவப்பும் ஆரஞ்சுமாக சிறு சிறு பூக்கள் கொண்ட கொத்துகள். அந்த பூந்தண்டுகளில் அடியில் இருக்கும் தேனுக்காக முதலில் அந்த கொத்துகளிலிருந்து ஒவ்வொரு பூவாக பிரித்தெடுத்து தண்டை நாவில் இட்டு உறிஞ்சினான். பின்னர் பொறுமை தாளாமல் கொத்தோடு அத்தனை தண்டுகளையும் உறிஞ்சிப்பார்த்தான். கடுகடுப்பு அடங்கியதாக தெரியவில்லை.
பொன்னன் “டேய் தேன் சிட்டாட்டம் அத போய் உறிஞ்சிட்டு கெடக்க. பூந்தேன் தேன் ஆகாது. அது தேன் ஆகுறது தேனீக வயித்துல. தேனீக வயித்துலதான் தேனுக்கான இனிப்பு கூடுது. நீ தேனீயும் இல்ல. உனக்கு அது இனிக்கவும் போறது இல்ல. போ போய் என் பொண்டாட்டி புண்டைய போய் உறிஞ்சு. இப்படி உறிஞ்சி உறிஞ்சித்தான அவ உங்கிட்ட கெரங்கி போயிருக்கா” என்றான். “ஆனா உன் நாக்கு உனக்கு வாய் பேச உதவுலனாலும் மத்ததுக்கு நல்லா உதவுதுடா. அவகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்.” என்று சிறிது நேரம் கழித்து முடித்தான்.
சில மணி நேரங்களிலேயே மேகப்பாறைக்கு இறங்கிவிட்டிருந்தனர். பாறைகளில் வெயிலின் பொழிவை உணர முடிந்தது. மேகப்பாறைக்கு மேல் பக்கமாக ஏறி அதன் இடப்பக்கம் ஓடை தடத்திற்கு அருகாமையில் ஒரு காட்டு மரத்தை இருவரும் அடைந்தனர்.
தங்கராசு விறு விறு வென்று அம்மரத்தில் ஏறினான். மரத்தின் நடுத்தண்டில் ஏறி கிளைகளை விலக்கி தேனடை இருக்கும் இடங்களை பார்வையால் கண்காணித்தான். பொன்னன் அவனை கீழிருந்து வழி நடத்தினான். தோள்பட்டையில் சுற்றியிருந்த கயிற்றினை உறுதியாக தன் இடுப்பைச் சுற்றி முடிந்துகொண்டு, கிளையினை கைகால்களினால் நன்றாக பற்றிக்கொண்டான். பின் கிளையோடு கிளையாக உடம்பினை ஒட்டி வைத்துக்கொண்டு அடை இருந்த பகுதிக்கு மெதுவாக கிளைமேல் ஊர்ந்து சென்றான்.
தேனீக்கள் மொய்ப்பினை கலைக்க தேர்ந்த தேன்காரனுக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு அடையிலும் ஒரு ராணி தேனீ இருக்கும். பல ஆண் தேனீக்கள் இருக்கும். ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு இருக்காது. ஆனால் தேன் எடுக்கச் சென்ற
வேலைக்காரத் தேனீகள் அடை குலைக்கப்படும் வாடையை ராணி தேனீ மூலம் எப்படியோ தெரிந்துகொண்டுவிடும். அதன் கொடுக்குகளை உயர்த்தி கூட்டைக் குலைப்பவனை பதம் பார்த்துவிடும்.
முதலில் தேன்காரன் தேனடையை வேவுபார்க்க வேண்டும். தேனீக்கள் எப்படி தன் கூட்டின் இடத்தை தேர்ந்தெடுக்கின்றனவோ அது போல தன்னையும் அவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவன் நம்பி காத்திருக்க வேண்டும். ஒரு மரத்தின் கிளையாக. ஒரு மலையின் குகையிடுக்காக. அவன் இருப்பை வெளிகாட்டிக் கொள்ளாத சாட்சியமாய். அது ஒரு தவநிலை. தேன்காரனுக்கென்று ஒரு வாடை உண்டு. தேனீக்களுக்கு அந்த வாடை தெரியும். முக்கியமாக ராணி தேனீக்கு. அந்த வாடைதான் அவனை தேர்ந்த தேன்காரனாக்குகிறது. அது அவர்கள் அந்த தவநிலையால் பெற்றுக்கொண்ட வரம். இக்காடு அவர்களுக்கு அளித்த தகுதி.
தேன்காரன் அவ்வாடையால் ராணி தேனீயை மயக்குகிறான். அந்த அடையின் ராணி தேனீக்கு ஒரு ராஜா தேனீயாகிறான். அந்நேரத்தில் அவன் ஒரு மனித தேனீ. எந்த கொடுக்கையும் தன் முன்னால் உயரவிடாமல் பார்த்துக்கொள்பவன் தானே அரச தகுதியை பெறுகிறான்!
மயக்கத்தில் இருக்கும் ராணி தேனீ மற்ற தேனீக்களுக்கு இடம்பெயரும் சமிக்ஞையை விடுக்கிறது. அந்த அடையின் ஆண் தேனீக்களும் தேனெடுக்கச் சென்ற வேலைக்காரத் தேனீக்களும் அதற்கு உடன்பட்டு அந்த அடையை விட்டு அகல்கின்றன. எந்த ஒரு வன்மமும் இல்லாமல் நிகழ வேண்டும் ஒரு தேனெடுப்பு. அத்தகைய தேனெடுப்பு கைவந்தவன் தான் இந்த தங்கராசு.
அவன் ராணி தேனீயை இணங்கண்டு கொண்டான். சிறிது நேரம் கடந்து அதுவாகவே அவன் கையில் வந்து அமர்ந்தது. தொடர்ந்து ஆண் தேனீக்கள் அவன் கைகளை வந்து மொய்த்தன. தேனெடுக்கச்சென்ற பணித்தேனீக்கள் பல இடங்களில் இருந்து வந்து அவனைச் சூழ்ந்து இருந்த இடத்திலேயே சிறகடித்துக்கொண்டிருந்தன. ஒரு வகை நடனம் அது. மனிதனாகிய அவனுக்கு அது ஒரு வகை ஆசிர்வாதம். தேனியாகிய அவனுக்கு அது ஒரு வகை ராஜ உபச்சாரம். அதன் பின் அப்பெருந்திரள் அவனை விட்டும் அவ்வடையை விட்டும் பறந்தகன்றது.
பறந்து சென்ற அப்பெருந்திரளைப் பார்த்துக்கொண்டே நின்றான் பொன்னன். தங்கராசு கயிற்றின் மறுமுனையை கீழே வீசினான். பொன்னன் கொண்டு வந்த சாக்குப் பையின் பிடியை அதோடு கட்டி கொத்தரிவாளையும் வைத்து மேலே அனுப்பினான். மொய்க்கப்படாத அந்த அடையை கொத்தரிவாளால் அறுத்தெடுத்தான் தங்கராசு. அடுக்கடுக்கான அறுகோண அறைகளில் இருந்து அந்த பொன் நிற திரவம் ஒழுகியது. இலைகளை கிழித்து அவ்வப்போது ஊடுருவிய வெயில் ஒளியில் தேன் என்பது பொன்னின் திரவ வடிவம் தானோ என்று ஒரு கணம் பட்டது. மொத்த அடையையும் வெட்டி பையில் திணித்து வைத்துக்கொண்டான். கொத்தரிவாளின் பக்கங்களில் வழிந்திருக்கும் தேனை எடுத்து அதன் நுனி பற்றி வாயில் விட்டுக்கொண்டான். பின்னர் கையுடன் வந்த தேன்மெழுகு துண்டு ஒன்றை பொன்னனுக்கு தூக்கிப் போட்டு தின்னச் சொல்லி கொடுத்தான்.
***
உச்சி பொழுது வந்தபோது பொன்னனும் தங்கராசுவும் மாறி மாறி மரங்களில் ஏறி இரண்டு பை குண்டான்களும் நிரம்ப தேனும் மெழுகுமாக சேகரித்து இருந்தனர். இனி மலையேற வேண்டும். மாவடிப்பட்டு பஸ் ஸ்டாப்பின் ரோட்டுக்கடையில் ஏதேனும் சாப்பிட்டு அடுத்த மலை வண்டியைப் பிடித்து கள்ளக்குறிச்சி சந்தைக்குப் போய் கூடுதல் கொள்முதல் விலைக்கு மொத்த தேனையும் விற்றுவிட்டு வர வேண்டும்.
இருவரும் நடக்கத் துவங்கினர். பொன்னன் தூரத்தில் ஒரு இலை உதிர்ந்த மொட்டை மரத்தினை கண்டான். அதில் ஒரு மரங்கொத்திப் பறவை தலையை திருப்பி தன் அலகால் இருமுறை வெயிலை கொத்திவிட்டு பின் உலர்ந்த மரப்பட்டையை கொத்திக்கொண்டிருந்தது. அவன் அருகில் வந்ததைக் கண்டு பறந்து சென்றது. அவன் அந்த மரத்தின் பின் பகுதியில் இருந்த பொந்தினைக் கண்டான். அந்த பொந்திற்குள் கையை விட்டு துழாவினான். எப்போதோ ஒளித்து வைத்திருந்த பீடிக்கட்டும் வத்திப்பெட்டியும் உள்ளிருந்தது. அதை எண்ணித்தான் அவன் அதனருகில் போயிருக்க வேண்டும். வத்திக்குச்சி முனைகள் நமுத்துப் போய் இருந்தன. பலமுறை முயற்சி செய்து ஒரு குச்சியில் மிஞ்சியிருந்த அக்கினியை கண்டுகொண்டு வாயில் வைத்திருந்த பீடி நுனியில் வைத்தான். பின்னர் வாயில் வைத்த பீடியை எடுக்காதவனாகவே பல்லிடுக்கில் புகையினை விட்டுக்கொண்டு சாமான்களோடு மலையேறினான். தங்கராசு அவனை தொடர்ந்து நடந்து வந்தான்.
சரிந்திருந்த பாறை மேட்டில் இருவரும் ஏறினர். அருகே காய்ந்த கோரப்புல் அடர்ந்து கிடக்கும் அந்த சரிவுப் பகுதியில் ஒரு மரநிழலைக் கண்டடைந்தனர். சற்று அயரலாம் என்று இருவருக்குமே தோன்றிற்று. சாமான்களை அருகில் வைத்துவிட்டு பொன்னன் நிழலில் துணி விரித்துப் படுத்துக்கொண்டான். தங்கராசு அருகிலேயே அமர்ந்துகொண்டான். பல்லிடுக்கில் இருந்த பீடி தீரும்போதெல்லாம் நுனியில் கொழுந்த கங்கினை பீடி விட்டு பீடி மாற்றி பற்றவைத்து வானின் வெறுமையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான் பொன்னன். ஏதோ எண்ணியவனாய் சட்டென்று அருகில் இருந்த தங்கராசுவைப் பார்த்தான். அப்போது தங்கராசு பொன்னன் அருகில் இருந்த பீடிக்கட்டிலிருந்து ஒன்றை எடுக்க முயற்சித்தான். அதைப் பார்த்த பொன்னன் “எடுடா எடுத்து இழு” என்று சொன்ன போது கையை பதறி எடுத்து வேண்டாம் என்பது போல் விலக்கிக்கொண்டான். “எட்றா என் சுன்னி” என்று உரத்த குரலில் கத்திக்கொண்டே எழுந்தான் பொன்னன். தங்கராசு மறுத்தான். பின்னர் அவனே பீடி ஒன்றை தன் பீடியில் பற்ற வைத்து, “இழுடா’னு சொல்றேன்ல்லடா பூலு” என்று வம்படியாய் தங்கராசுவின் வாயில் திணிக்க சென்றான். “உனக்கு திருட்டுத்தனமா எடுத்து இழுத்தாத்தான் இனிக்குமா? என் முன்னாடி இழுடா இப்போ” என்றான்.
மூச்சுத் திணறிய தங்கராசுவின் கீழ் உறுப்பைத் தொட்டு கசக்கிய படி, “தேனீ கொடுக்க தூக்கிட்டு திரியுறா மாதிரி நீ உன் பூல தூக்கிட்டு என் பொண்டாட்டி பக்கம் துணிஞ்சு திரியத் தெரிஞ்சுதுல்ல. அந்த வெடுக்குத்தனம் இப்ப இல்லையோ. இழுடா பூலு” என்று உரக்க கத்தினான்.
தேனீக்கு தன் கொடுக்கை முதல்முறை பயன் படுத்தியபின் வாழ்வில்லை. தன் விஷம் முழுதுமாக இறைத்துத் தீர்த்த எதுவும் வாழ இயலாததாக ஆகிவிடுகிறது போலும். பூரண விஷத்தையும் தன் முதல் கொட்டிலேயே தீர்த்துவிட்டு இறக்கிறது தேனீ. மனிதன் அத்தகைய கொடுப்பினை இல்லாதவன். விஷத்தினை வார்த்தையாக்கி பலமுறை தன் நாவால் கொட்டித் தீர்த்துவிட முயற்சிக்கிறான். கொட்ட கொட்ட அவன் விஷம் எண்ணத்திலிருந்து சொல் வழியாக ஊறி ஊறி அவனை நிரப்புகிறதோ? அவன் வாழ்நாளும் அதற்கேற்றது போல் நீட்டிவிக்கப்படுகிறதோ என்னவோ அது போன்ற ஒரு கடைசி உமிழ்வு வரை?
தங்கராசுவுக்கு ஒலியைத் திரட்டி நஞ்சாக்கும் நா அமையவில்லை என்பது குறைதான் அல்லவா? கூட்டையே அண்டிவாழும் கொடுக்குகள் வாய்க்கப் பெறாத சொரணையற்ற அந்த ஆண் தேனீக்கள் போல் தான் அவனுமல்லவா?
பொன்னனை விலக்க நினைத்து தங்கராசு அவனை ஒதுக்கி தள்ளிவிட்டான். சரிவான பாறையென்பதால் பொன்னன் நிலை தவறி கீழே விழப்போனான். அவனது கைவிரல் தங்க ராசுவின் சட்டை நுனியை தற்செயலாய் பிடித்து இழுக்க இருவரும் நிலைகொள்ளாமல் தடுமாறி விழுந்து பள்ளத்தை நோக்கி உருண்டு சரிந்தனர்.
பொன்னன் தூரத்தில் விழுந்து கிடந்த தங்கராசுவை பார்த்தான். வேகம் கொண்டு எழுந்து கொண்டு சக்திக்கு மீறி அருகில் இருந்த அந்த கருங்கல்லை எடுத்துக் கொண்டு தங்கராசுவை நெருங்கினான். வாயில் இருந்த கனன்று கொண்டிருக்கும் பீடியை தூர உமிழ்ந்துவிட்டு வியர்வையும் எச்சிலும் வழிய அந்த கல்லை ஓங்கினான். அவன் கண்களில் இருக்கும் சிவந்த நாளங்கள் புடைத்து எழ அப்படி ஒரு ஆவேசத்தை தங்கராசு பொன்னனிடம் கண்டான். “எல்லாம் உம் பூலுக்கு புண்டைய விரிச்ச அந்த புளுத்திமவள சொல்லணும்” என்று சொல்லிவிட்டு ஓங்கிய கல்லை தாழ்த்தி அருகில் வைத்து தன் மொத்த எடையையும் இழந்தவனாக தங்கராசுவின் மேல் கவிழ்ந்தான் பொன்னன்.
பின்னர் இருவரும் விறுட்டென்று எழுந்துகொண்டு சாமான்களை எடுத்துக்கொண்டு வேகமாக மேலேறி சென்றுகொண்டிருந்தனர்.
***
“தங்கராசு கதவத் தொறடா” என்ற குரல் கேட்டு குடிசை கதவைத் திறந்தாள் தேனாண்டாள்.
“தங்கராசு எங்க?” என்ற கேள்விக்கு கொல்லைப் பக்கமாய் குடிசைக்குள் நுழைந்தவனை கண்டுகொண்டு
“வா, உன்ன கைது பண்ணப்போறோம்” என்றார் சோலைமணி. அவர் இரு வனச்சரகர்களுடன் ஆரம்பூண்டிக்கு வந்திருந்தார்.
“எங்க இருக்கான் பொன்னன்?” என்று அவர் கேட்க, தங்கராசுவின் கண்கள் தற்செயலாக பொன்னன் இருக்கும் எதிர் குடிசையினை ஒரு கணம் பார்க்க
“யோவ் போய் அவனயும் சேர்த்து கூட்டிட்டு வாங்கையா” என்றார் அந்த இரு வனச்சரகர்களிடம்.
அவர்கள் தாழிடப்படாத அவன் வீட்டில் நுழைந்து கள்போதையில் கவிழ்ந்து கிடந்த பொன்னனை இழுத்து வந்தனர்.
அவர்கள் இருவரையும் ஆரம்பூண்டியிலிருந்து கரியாலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார் சோலைமணி.
***
முதல் நாள் வந்து பார்வையிட்டுவிட்டு சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டுச் சென்ற கல்வராயன் மலைப்பகுதியின் பிரதான வன இலாகா அதிகாரியான ராஜதுரை கரியாலூர் வனச்சரக காப்பாளர் சோலை மணியிடம் இன்றைய விவரத்தை கேட்டறிந்தார். “சார் மாவடிப்பட்டு வேழப்பாடி கரியாலூர் ஜோன்ல மொத்தம் முந்நூறு ஏக்கர் எரிஞ்சிருக்குங்க இன்னி கணக்குப்படி. மனுச உயிர் சேதம் ஏதுமில்லீங்க. கால் நடை சேதமும் இல்லைங்க. காட்டுல உள்ள உடும்பு, முயல்லாம் தான் பாவம். கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்துலேந்து ஃபயர் சர்வீஸ் ஆட்கள் கோமுகி அணை தண்ணிய கொண்டு வந்து ஃபாரஸ்ட் ஃப்யர் லைன் ஏற்படுத்தினதுல ஓரளவுக்கு சமாளிக்க முடிஞ்சுது சார். இன்னும் எங்கயாவது கங்கு மிச்சம் இருக்கலாங்க. முழு ரோந்துல ஈடுபட்டுருக்கோம்”
“ஆமா. எந்த கங்குனாலயும் நிரந்தரமா ஒளிஞ்சிருக்க முடியாது. ஒன்னு முழுசா எரிஞ்சு வெளிப்பட்டாகனும் இல்லன்னா தடயம் தெரியாம அணஞ்சாணும். அன்னிக்கு மலையெறங்குனவங்கள கைது பண்ணி உங்க ஊர் போலிஸ் ஸ்டேஷன்ல கேஸ் ரிஜிஸ்டர் பண்ணிடுங்க. புதுசா மாத்தல் ஆகி வந்துருக்குற கச்சிராபாளையம் சப்-இன்ஸ்பெக்டர கொஞ்சம் கெய்ட் பண்ணுங்க. அவர் தான் இந்த கேஸ பாக்கக் போறது. சம்மந்தப்பட்டவங்கள விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டுபோய் ப்ரொட்யூஸ் பண்ணியாகணும்.” என்றார் ராஜதுரை.
***
கரியாலூர் காவல் நிலையத்தில் பொன்னனும் தங்கராசுவும் காவலில் வைக்கப்பட்டு இருந்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்த
கச்சிராப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்.
ஓரமாக குத்திட்டு அமர்ந்திருந்த இருவரையும் பார்த்துகேட்டார்.
“எந்த ஊர்டா நீங்க ரெண்டு பேரும்?”
“ஆரம்பூண்டி புதுவளவு சார்”? என்றான் பொன்னன்.
“ரெண்டு நாள் முன்னாடி மலையெறங்குனீங்களா?”
“ஆமா சார்”.
“எதுக்கு”
“கெளங்கு வெளச்சல் கம்மி சார். வருமானம் பத்தல. அதான் தேனெடுக்க மலையெறங்கினோம்.”
“தேனெடுக்க மலையெறங்குனீங்க சரி. புகைய போட்டு வெரட்டி தேன் எடுத்துட்டு தீய ஒழுங்கா அமத்தாம விட்ருக்கீங்க காஞ்ச காட்டுல. என்ன?”
“சார் அப்படிலாம் புகைய போட்டு வெரட்டி தேன் எடுக்கும் ஈப்பயலுக இல்ல சார் நாங்க. நல்ல தேன்காரன் அப்படி செய்யமாட்டான். நாங்க தராதரம் தெரிஞ்சவங்க.” என்றான் பொன்னன்.
“அங்க காட்ட கொளுத்திட்டு இங்க தராதரத்த பத்தி பேசுறியா? அப்படி என்னையா தராதரம் சொல்லேன் கேப்போம்”
பொன்னன் அந்த எள்ளலலை புரிந்து கொண்டானா என்பது தெரியவில்லை. ஆனாலும் சொன்னான்.
“ஈ பீ மேலயும் ஒக்காரும் பூ மேலயும் ஒக்காரும். ஆனா தேனீ பூ மேல மட்டும் தான் ஒக்காரும். நாங்க தேனீ மாதிரிங்க”
“பொக போடாம அப்றம் எப்படிய்யா தேனெடுப்பீங்க?”
“சார், இது வெறும் காடுல்ல. கரியராமன் உறங்குற எடம். அவனோட காடுல இது. இங்க இருக்க ஒவ்வொரு தேனீப்பூச்சியும் அவனோட இருப்பாகபட்டது தான். அதோட நாசில புகையபோட்டு வெரட்டினா அது எங்களுக்கே சாபமால்ல மாறிடும். அந்த பொகையோட நெடி அதோட நாசில அப்படியே தங்கிபோய்டும். அப்புறம் எந்தவொரு பூவும் அதுக்கு உவக்காது பாத்துக்கோங்க. பின்ன தேனேது மரமேது காடேது. நாளப்பின்ன இந்த காடேல்ல அழிஞ்சுபோகும். ஒரு பொட்டு காடு கூட மிஞ்சாது. அப்படிப்பட்ட வேலைய நாங்க செஞ்சிட மாட்டோம் சார். இது எங்க பாட்டன் காலத்து தொழிலு. எங்களுக்கு தேனும் தீ தான சார். எழும்புற சூட்ட இனிப்பா மாத்தி மண்ணோக்கி விழற தீ. தீயயெடுக்க நாங்க தீய பயன்படுத்துறது இல்ல” என்றான் பொன்னன்.
“என்னய்யா இவங்க சொல்றது…” என்று சோலைமணியிடம் வினவினார். “ஆமா சார் இவனுங்க பொகைபோட்டு தேன் எடுக்கற பசங்க இல்ல. கல்வராயன் மலைல இருக்கற தேன்காரன் யாரும் அப்படி செய்யுறது இல்ல. வெளிலேந்து வரவங்க தான் அந்த மாதிரி பண்ணுறதுண்டு. இவங்க வம்சாவளியா இந்த மலைய நம்பி தேனெடுத்து வாழறவங்க.
அப்படி பண்ணியிருக்கமாட்டாங்க.
தேனீக்க அதுவாவே தேனெடுத்துக்கச் சொல்லி வழிவிடும் அவங்களுக்கு. என் சர்வீஸ்ல பல தடவை இவங்க தேன் எடுக்கறத பாத்திருக்கேன்.” என்றார் சோலைமணி.
“அவன் சொல்லுற அந்த கரியராமன்?”
“கரிய ராமன்னு அவன் சொல்றது வில்ல வச்சு வேட்டையாடும் ஒரு காட்டு தெய்வங்க. கரியகோயில்வளவு’னு ஒரு ஊர்ல கோயில் இருக்கு அதுக்கு. இந்த மலைப்பகுதி நாலு காடா பிரிஞ்சதுங்க. 30 டிகிரிக்கு மேல சரிவு இருக்கற பகுதிகள்லாம் கோயில் காடு. 30 டிகிரிக்குள்ள இருக்குற பகுதி புனர்க்காடு. 15 டிகிரிக்குள்ள இருக்குறது கொத்துக்காடு. சமதளத்துள இருக்கறது உழவுக்காடு. இதுல கோயில் காட்டு பகுதிலதான் அடர்ந்த காடு, காட்டோடை’னு ஓடுறதுலாம். அங்க அவங்க எதயும் எரிக்கிறதோ கொளுத்துறதோ செய்ய மாட்டாங்க. ஏன் விவசாயம் கூட பண்ணறது கெடையாது.
அந்த காட்ட அவங்க சாமிக்காடா பாக்குறாங்க.
மிச்ச மூணு காட்டுல தான் வெவசாயம் வெதப்பு எல்லாம்.”
“பின்ன எப்படியா இந்த காட்டுத்தீ, இத்தன வெயில்ல இவ்ளோ நாள் பத்திக்காத பூமி, திடீர்னு பத்திகிச்சோ?” என்றார் சப்இன்ஸ்பெக்டர் ஆவேசமாக.
பொன்னன் முந்திக்கொண்டு “அது எங்க கரியராமனோட அனல் மூச்சு சார். இந்த காட்டுல அலையற காத்துலாம் அவன் மூச்சு தான் சார். அப்பப்ப அவனுக்கு தகிக்கும் போது அனல் மூச்சு விடுவான். அப்படியே பத்திக்கும் சார் இந்த காடு” என்றான்.
துடுப்பு தனமாய் குறுக்கிட்ட அவனை பொறுக்கமுடியாமல் சப்-இன்ஸ்பெக்டர் லட்டியை எடுத்து அவன் அருகில் கோபமாக கிடாசினார்.
அதே சந்தேகத்தில் புருவம் நெளித்தவராக இருந்த சோலைமணி எதோ ஒன்று தோன்றி தெளிந்து பொன்னனிடமும் தங்கராசுவிடமும் திரும்பி, “பீடி சிகரெட்டு ஏதும் குடிச்சீங்களாடா?” என்றார் காட்டமாக.
“சார். நல்லா செக் பண்ணித்தான் சார் அனுப்பினேன். தோ, இவன்ட இருந்த பீடி கட்ட கூட வாங்கிட்டு தான் அனுப்புனேன். செக்போஸ்ட் ட்யூட்டில இருந்த முருகனும் ஏதும் இல்லனுதான் உள்ள அனுப்பிருக்கான்”
“சொல்லுங்கடா பீடி சிகரெட்டு ஏதேனும் குடிச்சீங்களா?” பொன்னனும் தங்கராசுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“எங்கயோ பதுக்கிவச்சு குடிச்சுருக்காங்க சார். தெள்ளவாரி பசங்க. இந்த காட்டுல எங்கனு சார் போய் அதத்தேடி துழாவ முடியும்?” என்று சினத்துடன் அலுத்துக்கொண்டார்.
“அது சரி. வந்ததுலேந்து நீயே தான் பேசுற. உன் பக்கத்துல இருக்கறவன் பேசமாட்டானா என்ன?” என்று பொன்னனைப் பார்த்து சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“சார், அவனுக்கு வாய் பேச வராதுங்க. ஊமங்க” என்றான் பொன்னன்.
சப் இன்ஸ்பெக்டர் எழுந்து பொன்னனின் அருகில் வந்தார். அவன் எழுந்து நின்றான்.
“என்னய்யா இந்த நாத்தம் நாறுது. புளிச்ச கள்ளு வாடை. இந்த வாடையோட எப்படியா உன் பொண்டாட்டி உன்ன நெருங்குறா” என்றார்.
பொன்னன் தங்கராசுவின் பக்கம் பார்வையைத் திருப்பினான். “இங்க கேட்டுட்டு இருக்கேன். அங்க என்ன பார்வை?”
பின்னர் அவரைப் பார்த்தான். தயங்கியவனாக தெரிந்தான்.
அவர் “சொல்லு” என்று அதட்டினார்.
சோலைமணி இடைமறித்து “சார் அவன் பொண்டாட்டி அவன்கூட இல்லைங்க. ஓடிப்போய்ருச்சுங்க” என்றார்.
பின்னர் எதனாலோ உந்தப் பட்டவனாய் இல்லை இல்லை சோலைமணியின் அந்த பதிலில் சீண்டப்பட்டவனாய் உரத்த குரலில் சொன்னான்.
“சார். மரியாதையா பேசுங்க. என் பொண்டாட்டி ஓடிலாம் போலைங்க. என் கண்ணு முன்னாடி தான் வாழுறா”.
சப்-இன்ஸ்பெக்டர் அவனது வலது தாடை மேல் ஒரு போடு போட்டார். “என்ன குரல் உசருது. அவ்ளோ கோபம் வருது. அவர்கிட்ட எகுறுற.”
“உன் பொண்டாட்டி பேரு என்ன?”
“தேனாண்டாள் சார்”
“சரி. உன் கண்ணு முன்னாடி வாழுறான்னு சொன்னியே யார்கூட?”
பொன்னன் ஒருகணம் யோசித்தான்.
“சொல்லு யார்கூட” என்றார்.
பின்னர், “என் நண்பன் கூட தான் சார்” என்றான் தொய்ந்து போன குரலில்.
சப் இன்ஸ்பெக்டர் குரூர புன்னகையுடன் “நண்பனா, யாரவன்? “ என்றார்.
பொன்னன் தங்கராசுவை பார்த்தான். “இதோ இவன் தானுங்க சார்” என்றான்.
சப் இன்ஸ்பெக்டர் குழம்பி போனார். சோலைமணியைப் பார்த்து “யோவ் என்ன எழவுயா இது?” என்றார்.
தங்கராசு பொன்னன் குரலில் இருந்த தொய்வு அவன் உடலிலும் பரவி மீண்டும் அவன் பழையபடி குந்தி அமர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
சோலைமணி அவரிடம் “சார், நம்மகிட்ட புழங்குற ஒழுக்க மதிப்பீடுலாம் அடிவாரம் தாண்டாது சார். புடிச்சா அண்டி கூட இருக்கணும் புடிக்கலனா ஒதுங்கி தூரமா போயிடனும் ங்கற எணக்க வரையறை லாம் இங்க கெடையாது சார்.
இங்க அது முழுசா வேற ஒன்னா இருக்கு. கூடவே இந்த இடமும் இவனுங்களும் ஜனநாயக இந்தியாவோட கடைக்குட்டில்ல.” என்றார்.
“என்ன சொல்றீங்க சோலை?” என்று அவ்விருவர்களிடமிருந்து விலகி மேஜையில் வந்து அமர்ந்தார் சப்-இன்ஸ்பெக்டர்.
“ஆமா சார். இந்த கல்வராயன் மலைப்பகுதியையும் இந்த மலைவாழ் மக்களையும் 1976 முன்னாடி வரை கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்துலேந்து ஐநூறு வருஷமா அரிய கவுண்டன், சடய கவுண்டன், குறும்ப கவுண்டன்’னு மூனு ஜாகிர்தார்கள்
வம்சாவளி வம்சாவளியா ஆண்டு வந்தாங்க. இந்த பழங்குடி மக்கள சுரண்டி கொத்தடிமைகளா வச்சுருந்தாங்க. இந்திய சுதந்திரத்துக்கு பிறகும் அந்த மூனு ஜாகிர்தார்களும் இந்த நிலப்பகுதி இந்தியாவோட இணைக்க விடமாட்டோம்’னு தனி ஆட்சில்ல நடத்திட்டு வந்தாங்க. அப்புறமா 76 ல இந்திராம்மா போட்ட தேசிய அளவிலான அவசரகால சட்டத்துல தான் தந்திரமாக புடுங்கப்பட்டு ஜாகிர்தாரி முறை ஒழிக்கப்பட்டு இந்தியாவோட முழுசா இணைக்கப்பட்டாங்க.” என்றார் சோலைமணி.
“ஹ்ம்ம். ஜனநாயக இந்தியாவின் கடைக்குட்டி அதாவது சவலைக்குட்டி இல்லயா சோலை. சரிங்க சோலை. நாளைக்கும் நீங்க வரவேண்டியிருக்கும். இவங்கள கோர்ட்’ல ப்ரொட்யூஸ் பண்ணனும்” என்று மேசையில் இருந்த காகித கோப்பினை ஒருமுறை சரிபார்த்து கையெழுத்திட்டார்.
“கண்டிப்பா வந்துடறேன் சார்” என்று விட்டு சோலைமணி விடைப்பெற்றுக்கொண்டார். தங்கராசுவும் பொன்னனும் அடுத்த நாள் வரை ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்தனர்.
***
காவல்துறை வண்டியில் தங்கராசுவும் பொன்னனும் ஏற்றப்பட்டு ஜன்னல் கம்பிகளில் விலங்கால் பிணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தங்கராசு இறங்கிச் செல்லும் மலைப்பாதை தடத்தையே ஜன்னலின் வழியாக பார்த்துக்கொண்டு வந்தான். வண்டி சாலையில் வளைந்த போது மலைசரிவுகளின் ஒரு பகுதியில் கரிய நிற தடம் தென்பட்டது. அவன் அதனை உற்றுப் பார்த்தான். அவனுக்கு அந்த நாளின் நினைவு வந்தது. அந்த மாலை வேளையில் பொன்னன் குடித்துவிட்டு வந்து குடிசைக்கு வெளியே சோறாக்கிக் கொண்டிருந்த தேனாண்டாளை மாரில் எட்டி மிதித்தான். உலையில் கொதிக்கும் சோற்றுபானையை இடறிவிட்டு அவள் தள்ளிப்போய் விழ, குழைந்து போன அரைவேக்காட்டு சோற்றுப் பருக்கைகள் அவள் மேல் தெறித்தன. அவன் அணத்தல் முற்றி அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகு கட்டை ஒன்றை எடுத்து, இடுப்பு பக்கம் இருந்த அவள் சேலையை விலக்கி, “ஒளசாரிக் கழுத” என்று அவள் தொப்புளின் அருகில் வைத்து பொசுக்கினான்.
சாணி மொழுகிய தரையில் துடிதுடித்து சுருண்டு கிடந்தாள் தேனாண்டாள். பார்த்துக்கொண்டிருந்த தங்கராசு அவள் படும் வதையை சகிக்க முடியாமல் பொன்னனை தள்ளிவிட்டு அவளை கூட்டிவந்து அன்றுடன் தன்னோடு வைத்துக்கொண்டான். அவளின் தீக்காயத்துக்கு வைத்தியம் பார்த்தான். பின்னர் ஓர் இரவில் தன் குடிசையின் உத்தரத்தில் மினுங்கிக்கொண்டிருந்த லாந்தர் வெளிச்சத்தில் அவனது அருகில் ஒருக்களித்து படுத்து உறங்கி கொண்டிருக்கும் தேனாண்டாளை கண்டான். அவளது இடையில் இருந்த சேலை நழுவி தழும்பாகிப் போயிருந்த தீக்காயம் தெரிந்தது. கரிய நிறத்தடம். அதனை தடவி கொடுத்தான். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. அதே பிசுபிசுப்பை இன்னும் உணர்ந்தவனாக கண்களில் நீர்கோர்த்து வண்டியில் அமர்ந்திருந்தான். தடவிகொடுப்பதற்காக கையை வெளியே நீட்ட முயன்றான். விலங்கு தடுத்தது. வண்டி அடிவாரத்தைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது.
***
நான் என் வீட்டு ஹால் நடுவில் வெறுந்தரைமேல் அமர்ந்து காய்ந்துப்போன என் முட்டி சிராய்ப்பினை சொறிந்தவாறே அன்றைய தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தேன். தினசரியின் இணைப்பிதழில் இருந்த விழுப்புர மாவட்டச் செய்தி பகுதியில் இவ்வாறு இருந்தது. “நேற்று முன்னிரவு வெப்ப சலனத்தின் காரணமாக கல்வராயன் மலைப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அப்பகுதியில் ஒரு சிறிய காட்டுத்தீ பரவி வனத்துறையினராலும் தீயணைப்பு துறையினராலும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது”
***