சட்டம் யார் கையில்?

வழக்கமான மனிதர்கள், விசாரித்தல் மற்றும் புதிய கார் பெருமைகள் என்று மிகவும் போரான ஒரு பார்ட்டி. தட்டிக் கழிக்க முடியாதலால், செல்ல வேண்டிய கட்டாயம். அந்த ஓட்டலின் அறையை ஒட்டி வெளியே காற்றோட்டமாக புல் தரையில் சில நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அங்கு இருவர் பேசிக் கொண்டிருந்த்தைப் பார்த்து, ஏதாவது சுவாரசியமான விஷயம் இருக்குமோ என்று அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

முதலில் பேசியவர் பெயர் பரம் (ப).

ப:”என் பெயர் பரம். நான் ஒரு வழக்குத்துறை உதவியாளன். நான் சிவில் விஷயங்களில் உதவி செய்து வருகிறேன். இதோ, இவள், கவிதா (க). நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். இவள் க்ரிமினல் விஷயங்களில் உதவியாளர். இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்யறோம். பிஸியாக இருப்பதால் சந்திக்க நேரம் கிடைப்பதில்லை.”

க:”நீங்க என்ன செய்யறீங்க?”

“நான் ஒரு செயற்கை நுண்ணறிவுத் துறை ஆய்வாளன். எனக்கு சட்டம் பற்றி அதிகம் தெரியாது. சிவிலாக இருக்கத் தெரியும். க்ரிமினலாக இருக்கத் தெரியாது☺.”

ப:”மிக மோசமான ஜோக் சார். அதென்னமோ ஏ.ஐ (AI) உலகத்தையே ஆட்டிப் படைக்கும்னு படிச்சேன். உண்மையா சார்?”

“உங்களது கவனத்தைத் திருப்ப சில ஊடகங்கள் செய்யும் ஜாலம் அது. சின்னச் சின்ன விஷயங்களை எந்திரங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதே பெரிய பாடு. இதில் நீங்க வேற உலகத்தை ஆட்டிப் படைப்பதைப் பத்தி சொல்றீங்க.”

க:”நல்ல வேளை, இந்தத் துறையில் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தாதலால், நாங்க பிழைச்சோம். என்னோட பள்ளி சென்ற ஒரு பொண்ணு, அவங்க ஐ.டி. கம்பெனில, AI எல்லாம் செய்யுது, நீங்களெல்லாம் தேவையில்லைனு வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க.”

”நிச்சயமா எப்படி சொல்றீங்க?”

ப:”மிஞ்சிப் போனா, நாங்க கணினில Word –ஐ பயன்படுத்தறோம். எப்பவாவது கட்சிக்காரருக்கு சொத்துக் கணக்கு போன்ற விஷயத்தை Excel –லில் செய்வோம். அதுக்கு மேல எல்லாமே பேப்பர்தான்.”

“அப்படித்தான் நானும் நினைத்தேன். மத்தபடி கேசுக்கு வேற எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில்லையா?”

க: “சில சமயம் கட்சிக்காரருடன் மின்னஞ்சல் தொடர்பு உண்டு. அதுவும் வெளியூராக இருந்தால், பெரும்பாலும் படிச்சவங்களோட மின்னஞ்சல் தொடர்பு உண்டு.”

”ஆக, Word, Excel, Email தவிர வேற எந்த தொழில்நுட்பத்தையும் நீங்க தொடுவதில்லை. உங்க வேலை பெரும்பாலும் எப்படி நடக்கிறது?”

ப:”எல்லாம் காகிதத்தாலதான். வீட்டுப் பத்திரம், நிலப்பட்டா, விவாகரத்துப் பத்திரம் இப்படி எல்லாமே காகிதம்தான். சில சமயம் விடியோ போன்ற விஷயங்களை நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன. பெரும்பாலும், வணிக நிறுவன கேஸ்களில் இது போன்ற விஷயங்கள் உண்டு.”

க:”க்ரிமினல் வழக்கில் விடியோ ஃபுட்டேஜ் அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், சில டி.என்.ஏ. கையெழுத்து (DNA signature) சாட்சிகளும் அனுமதிக்கப்படுகின்றன. சில சமயம் ஒலிப்பதிவும் க்ரிமினல் வழக்கில் பயன்படுத்தறோம்.”

“அப்ப, தொழில்நுட்பமே இல்லைனு சொல்ல முடியாது. அன்றாட வழக்குகளில் ஒரு சிறு பங்கே தொழில்நுட்பம் பயன்படுகிறது, இல்லையா? சரி, போக்குவரத்து ஃபைன்கள் மற்றும் விபத்துக்கள் எதை வைத்து முடிவெடுக்கப்படுகிறன?”

ப:”விபத்துக்கள் அதிகமாக நீதிமன்றங்களுக்கு வருவதில்லை. இரு ஓட்டுனர்கள், காப்பீடு நிறுவனம் என்று பெரும்பாலும் முடிவெடுக்கப்படுகிறது. போக்குவரத்துக் காவல் துறை சம்பவத்தை உறுதிப்படுத்துகிறது. விபத்தில் பெரும் காயம் அல்லது மரணம் நேர்ந்தால், வழக்கு நீதிமன்றம் வருகிறது. மற்றபடி, போக்குவரத்து அபராதங்கள் ஸ்மால் கோர்ட்ஸ் மூலம் வசூலிக்கப்படுகிறன. அதில் வழக்கறிஞருக்கு அதிகத் தேவை இருப்பதில்லை. இன்னொரு விஷயம். குடிபோதையில் கார் ஓட்டினால், அத்தகைய வழக்குகள் நீதிமன்றம் வருகின்றன. ஏனென்றால், இதில் அபராதம் அதிகம்.”

”பரம், உங்களது வேலையில் எந்த வேலையை நீங்க செய்யறீங்க? எந்த வேலையை உங்க சீனியர் செய்யறாரு?”

ப:”பொதுவாகச் சொல்வதைவிட, கேசுக்கு கேஸ் மாறுபடும் சார். சொத்து வழக்கு போன்ற விஷயங்களில் சீனியர் வாதங்களை நீதிமன்றத்தில் முன் வைப்பார். என்னுடைய வேலை, அவருக்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பது. சில சமயம் இதற்காக கட்சிக்காரரின் ஊருக்குக்கூடப் பயணம் செய்ய வேண்டி வரும். சில விவாகரத்து போன்ற வழக்குகள் குடும்பக் கோர்டில் நடக்கும். தேவையான ஆவணங்களை நான் உருவாக்கித் தந்துவிடுவேன். சிக்கலான சில விவாகரத்து கேஸ்களைத் தவிர மற்ற கேஸ்களுக்கு சீனியர் தேவை இல்லை.”

 “இண்டரஸ்டிங். உங்கள நான் ஏதோ கெளரவம் சிவாஜி ரேஞ்சில் கற்பனை பண்ணிட்டேன். ஆக, எல்லா வழக்குகளுக்கும் சீனியரோ நீங்களோ ஒரு கட்சிக்காரருக்குத் தேவைப்படுது, இல்லையா? நீங்க வருமான வரி மற்றும் கம்பெனிச் சட்டம் போன்ற வழக்குகளில் ஆஜர் ஆவதில்லையா?”

ப: “அது எங்க நிறுவனம் செய்யறதில்லை. அதற்கென்று சில வழக்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அதே போல, வருமான வரி வழக்குகளும் கொஞ்சம் விசேஷமானவை. நாங்க அந்த மாதிரி வழக்குகளில் ஆஜர் ஆவதில்லை.”

“கவிதா, நீங்க எந்த வகை கேசுகளுக்கு வாதாடுவீங்க. எதை உங்கள் சீனியர் எடுத்துச் செய்வார்?”

க:”நல்ல வேளையாக என்னைக் கெளரவம் சிவாஜி போல நீங்க கற்பனை செஞ்சு பார்க்க வாய்ப்பில்லை. க்ரிமினல் கேஸ்கள் சிக்கலானவை. பித்தலாட்டம், திருட்டு போன்ற சில வழக்குகளில் நான் வாதாடி இருக்கிறேன். மற்றபடி, கொலை, ஆள்கடத்தல் போன்ற கேஸ்கள் என்னுடைய சீனியர்கள் கையாளுவார்கள். என்னுடைய வேலை சாட்சிகளைச் சேகரிப்பது, மற்றும் நீதிமன்றத்துடன் வழக்குத் தேதி சம்பந்தப்பட்ட விஷயங்கள். ஒன்று சொல்ல மறந்து விட்டேன். என்னுடைய சீனியர்கள், சில க்ரிமினல் வழக்குகளில், மற்ற நீதிமன்றத் தீர்வுகளைத் தேடச் சொல்வார்கள். முன் தீர்வுகள் (Precedent) என்பது சில சமயம் ஒரு பெரிய ஆயுதம்.”

“பரம், சிவில் வழக்குகளில், அதிகம் முன் தீர்ப்புகளைப்  பயன்படுத்துகிறார்களா? நீங்களும் இந்த மாதிரி உதவிகள் செய்வதுண்டா?”

ப:”சிவில் வழக்குகளில் அவை  முக்கியம்தான். ஆனால், எனக்கு அந்த மாதிரி வேலை செய்ய வாய்ப்பு இருந்ததில்லை.”

”சரி, நீங்க ரோபாட் லாயர்னு சொல்லக்கூடிய மென்பொருள் பற்றி கேள்விப் பட்டிருக்கீங்களா?”

க:”அட, இத்தனை கேள்வி கேட்டு , எதுக்கு அடி போடறீங்கன்னு யோசிச்சேன். ’எந்திரனில்’ வருமே அதைப் போல ஒரு சிட்டி ரோபாட் நீதிமன்றத்தில் சல்லிசாக நீதி வாங்கித் தருமா?”

ப:”என்ன சார் பொழப்புல மண் அள்ளிப் போடறீங்க? நம்ம ஊர்ல, ஒரு பேட்டரி கார் கூட இல்லை. ரோபோ வந்து வாதாடறதுக்குள்ளே எனக்கு வயசாயிடும் சார்”

“ரெண்டு பேரும் ரொம்ப தமிழ் சினிமா பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஷங்கர் சினிமா போல அவ்வளவு எளிதன்று, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உலகம். உடனே, ரோபோ நீதிமன்றத்தில் வாதாடுகின்றன என்று கற்பனை எல்லாம் வேண்டாம். இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால், ரோபோக்கள் வழக்குத் துறையின் அடிமட்டத்திலிருந்து தங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.”

க:”இது நீங்க முன்னாடி சொன்னதைவிட மோசம். அடிமட்டத்திலிருக்கும் எங்களுக்கு முதலில் பிரச்னை – அப்படித்தானே?”

”இது கொஞ்சம் அதிகமான ரியாக்‌ஷன்னு நினைக்கிறேன். இப்ப இந்த பார்ட்டிக்கு சந்திச்சிருக்கோமே – இது மாதிரி சமூக சந்திப்புகளில், உங்களிடம் சின்னச் சின்ன அதிகார வர்க்க பிரச்னைகள், அரசாங்க நச்சரிப்புகள் பற்றி யாரும் உங்களிடம் சொல்லுவதில்லையா?”

ப:”நிச்சயமாக் கேட்பாங்க. முடிஞ்சா, நேரமிருந்தா நண்பர்களுக்கு உதவியதுண்டு”

“இது போல சட்டத்துறையில் வேலை செய்யற எல்லோருக்கும் இப்படி நேர்வதுண்டு. இதற்காகவே  ‘டூ நாட் பே’ என்ற ஒரு பயன்பாட்டை உருவாக்கியிருக்காங்க”

https://donotpay.com/

க:”இதுனால என்ன செய்ய முடியும்?”

“பல விஷயங்களைச் செய்ய முடியும். நான் சொன்னது போல, பெரும்பாலும், பார்ட்டியில் உங்களைப் போன்ற வழக்குத்து றையினரை நச்சரிப்பதைவிட, இது அருமையான ஒரு செயற்கை நுண்ணறிவுச் சேவை. முதலில், விமானக் கம்பெனிகளிடம் நுகர்வோர் படும் அவஸ்தைகள் ஏராளம். புக் செய்த விமானப் பயணத்தை ரத்து செய்வது. உங்களின் சீட்டை இன்னொருவருக்கு விற்பது, உங்களது பெட்டிகளைத் தொலைப்பது என்று பலவற்றைச் சொல்ல்லாம்.”

ப:”இந்த மென்பொருள் என்ன செய்யும்?”

”ஓர் உதாரணம் எடுத்துக் கொள்வோம். உங்களது பெட்டியை ஒரு விமானக் கம்பெனி தொலைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். உங்களை அலைய விடுவார்கள். இந்த மென்பொருள் தளத்தில் நீங்கள் பதிவு செய்து கொண்டு, உங்களது பயண விவரங்கள், பெட்டி அடையாளம், உங்களது விவரங்கள் எல்லாவற்றையும் உள்ளிட்டால், விமான கம்பெனிக்கு ஒரு லாயர் நோட்டீஸை இந்த மென்பொருள் தயார் செய்து, அவர்களுக்கு மின்னஞ்சல் செய்யும். அடித்து பிடித்துக் கொண்டு, உங்களது பெட்டியோ, அல்லது தகுந்த நஷ்டயீடோ சில நாள்களில் உங்களை வந்தடையும். இதற்கான செலவு, ஒரு மனித வழக்கறிஞரின் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை.”

க:”முதல் அடி, வெற்றிகரமாக கொடுத்துட்டீங்க. வேற என்ன செய்யும் இந்த மென்பொருள்?”

 ”காரை பார்க் செய்துவிட்டு சென்றால், அபராதம் விதிக்கும் காவல்துறை மீது நோட்டீஸ், விடியோ சேவையை ரத்து செய்ய விரும்பும் வாடிக்கையாளருக்கு ரத்து செய்ய உதவி, இது போன்ற விஷயங்களை எளிதாக்குகிறது இந்த மென்பொருள்.”

ப: “பார்க்கிங் அபராதத்தை எப்படிக் கையாளுகிறது இந்த மென்பொருள்”

“காவல்துறையினர் சிலர், மாதத்தின் இறுதியில், தங்களது அபராத டார்கெட்டை அடைய சில தில்லாலங்கடிகள் எல்லா ஊர்களிலும் செய்கிறார்கள். நீங்கள் மதியம் 2 மணி வரை டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள், உங்களது காருக்குத் திரும்பி வர ஒரு 5 நிமிடம் அவகாசம் உண்டு. ஆனால், டார்கெட்டில் குறியாக இருக்கும் காவல்துறை அதிகாரி, உங்களுக்கு 2:01 மணிக்கு டிக்கெட் கொடுத்து விடலாம். நீங்கள், அடித்துத் பிடித்துக் காருக்கு 2:04 –க்கு வந்தும் பயனில்லை. அபராதம் சிரித்துக் கொண்டிருக்கும். இது போன்ற நிகழ்வுகள் நிகழும்போது அந்த ஐந்து நிமிட அவகாசம், உங்களுக்குச் சில நூறு ரூபாய்களை மிச்சம் செய்யும். இந்த மென்பொருள், உங்களிடமிருந்து எல்லா விவரங்களையும் வாங்கிக் கொண்டு, உங்களது அபராதத்தை ரத்து செய்யும்படி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிவிடும்.”

க:”இது நல்லா இருக்கே. என்னுடைய நண்பர்கள் சிலர் வேக எல்லைக்கு கொஞ்சம் அதிகமாக ஓட்டியதற்கே ஏராளமாக அபராதம் கட்டியுள்ளனர். இதைக் கண்ணில் எண்ணெய் விட்டுத் தேடிப் பார்க்கும் காப்பீட்டாளர்களும் தங்களது ப்ரீமியத்தை உயர்த்தி விடுகிறார்கள்.”

“வேகம் சற்று சிக்கலானது. இதில் சில சூழ்நிலை விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னொரு காரை நீங்கள் முந்திச் செல்லும்பொழுது, வேக எல்லைக்குச் சற்று அதிகமாகப் பயணம் செய்வதில் தவறில்லை. ஆனால், நீங்கள் மெதுவான வரைபாதையிலிருந்து (slow lane) வேகமான வரைபாதைக்குச் (fast lane) சரியாக மாறி இருக்க வேண்டும். பள்ளத்தாக்கான பாதையில் சற்று வேக எல்லைக்கு மேல் பயணம் செய்வதில் பிரச்னை இல்லை. இவற்றை ஒரு நீதிபதி முன் தகுந்த ஆதாரத்துடன் நீங்கள் நிரூபிக்க வேண்டும். இதனால், இது மென்பொருளால் சாத்தியமில்லை.”

ப:”சார், நிறைய சட்டங்கள் மனிதர்களுக்காக, மனிதனால் உருவாக்கப்பட்டது. மென்பொருள் பெரிசாக ஒன்றும் செய்ய முடியாது. மனித மதிப்பீடு மிக அவசியம்.”

“ஒப்புக் கொள்கிறேன். ஒரு விஷயம் இன்னும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சட்டத்தைத் துரிதப் படுத்துவதற்கே மென்பொருள் முயற்சி செய்கிறது. அதை நீக்க அன்று. இன்னும் முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். உங்களது வேலை இன்னும் சில ஆண்டுகளில் இருக்குமா என்பதே சந்தேகம்.”

க:”என்ன சார் அநியாயம். முதல்ல எங்களோட ஒத்துக்கறீங்க. அப்புறம் இப்படிக் குண்டைத் தூக்கி போடறீங்க. இந்த சஸ்பென்ஸை அடுத்த வாரம் பேசித் தீர்க்கலாமே.”

“நிச்சயமாக…”

***

Series Navigationசட்டம் யார் கையில் – பகுதி 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.