கா-மென் – ரேச்செல் ஹெங்

This entry is part 2 of 2 in the series கா மென்

(சென்ற இதழின் தொடர்ச்சி) பாகம் – 2

ஸி.ஸி காம்பொங்கின் நடுவே ஒரு செங்கல் கட்டிடம். காம்பொங்கில் பெரும்பாலும் சிவப்பு மண்ணும், இங்குமங்கும் கொஞ்சம் புல் தரையும் உண்டு, ஆனால் ஸிஸியைச் சுற்றிலும் உள்ள நிலம் நம்பமுடியாதபடி பசுமையாக இருக்கிறது, பணிவான, சீராகவும், நல்ல வளர்த்தியோடும் இருக்கிற புல்தரை.  சதுப்பு நிலத்தில் நடந்த கா மனிதர்களைப் போல, ஸிஸி சேறாக இருக்கிற காம்பொங்கில் பொருந்தாத ஒரு காட்சி. அந்தச் சூழலில் மெலிதான இறகுகள் கொண்ட கோழிகள் மண்ணில் கொத்திக் கிளறிக் கொண்டிருக்கின்றன, ஒல்லியான நாய்கள் சோம்பலாக ஈக்களைத் தங்கள் வால்களால் அடித்து விரட்டுகின்றன. 

ஆ பூன் காம்பொங்கின் வழியே நடந்து போகும்போது அக்கம் பக்கத்தினர் அவனுக்கு முகமன் சொல்கின்றனர்.  சமையலறை ஜன்னல்களிலிருந்தும், வீட்டு முன்புறத்திலிருந்தும் கையசைக்கின்றனர். 

“பூன்! புது வேலையா ஆ! வாஹ், ரொம்ப நல்ல விசயம், எங்களுக்கு எப்ப ஒரு டின்னர் போடப் போறே?”

“நான் ஒரு நாள் பகல் சாப்பாட்டுக்கு வர்ரேன்னு உன் அம்மாகிட்ட சொல்லு, ஓகே?”

”ஸி ஸில வேலை செய்யப் போறியா பூன், ஆங்? இந்தக் கா மனுசங்க ஏன் நம்ம வரிப்பணத்தை எல்லாம் இந்த உதவாக்கரைக் கட்டடத்துக்குச் செலவழிச்சாங்கன்னு இப்ப நீ விளக்கிச் சொல்லலாமே.”

“ஆ பூன், பையா! உன் அம்மாகிட்டேருந்து உன்னோட ஸிஸி வேலையைப் பத்திக் கேள்விப்பட்டேன். உனக்கு ரொம்ப நல்ல காலம். ஆனா வேலைங்கறது என்ன எப்படியும் வேலைதான் ஆ, ஆனா திரும்பி வரும்போது ஆங் மோஹ் மாதிரி பேசிக்கிட்டு வராத எங்க கிட்டே!”

“வாஹ் பூன். கா மனுசன் மாதிரி உடுத்திக்கிட்டிருக்கே, வெள்ளை சராய்தான் இல்லை. பெரிய ஆளாயிட்டே இப்போ, ஹா?”

ஆ பூன் கூச்சத்தோடு கையசைக்கிறான், திரும்பிச் சிரிக்கிறான், குத்தலாகப் பேசுவோரிடம் நல்ல தன்மையான சிரிப்போடு கடக்கிறான். சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து அந்தப் பகுதியில் வளர்ந்தவனுக்கு, அக்கம் பக்கத்தினரில் பெரும்பாலாரைத் தெரிந்திருந்தது, அவனுடைய காதுக்கு அவர்களின் குரல்களில் உள்ள நுட்பமான தடுக்குகள் தெரிந்திருக்கிறது, சற்றுப் பொறாமையுடனும், ஓரளவு பெருமிதத்தோடும், அவர்கள் வெறுமனே சீண்டுகிறார்கள் என்பதை அவன் அறிவான். 

ஸிஸியின் குளிர்ச்சியான உள்புறத்தில் அவன் நுழையும்போது, கதவருகே அவனை வரவேற்கும் ஆன்டி, வேலையைப் பற்றி அவன் பேசிய பெண்மணி இல்லை. இந்தப் பெண் கா மனிதர்களின் சலவை மடிப்போடு உள்ள வெண்ணிற உடைகளை அணிந்திருக்கிறார், அதே பால் பாயிண்ட் பேனா அவரின் மேலணியின் முன்புறப் பையில் இருக்கிறது, அவருடைய நீண்ட கருப்பு முடி, ஒழுங்கான, துடிப்பாகத் தெரியும் குதிரை வால் கொண்டையில் கட்டப்பட்டிருக்கிறது. அவர் இளைஞர், அவனுடைய அண்ணனை விடச் சில வருடங்களே மூத்தவராக இருப்பார். அவருடைய தோல் வழவழப்பாக, துளைகள் ஏதும் இல்லாது, கன்னத்து எலும்புகளருகே சிறிது சிவந்து காணப்படுகிறது, அவருடைய கருப்புக் கண்கள் விரிந்து, நம்ப முடியாதபடி பளபளப்பாக இருக்கின்றன. ஆ பூன், தன் கையை அந்தப் பெண்ணின் கழுத்தருகே கொண்டு போய் அவருக்கு செவுள்கள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என்பது போல ஒரு உந்துதலைத் திடீரென உணர்ந்தான், அது அவனைக் கொஞ்சம் நிலைகுலையச் செய்தது. 

“காலை வணக்கம், ஆ பூன்,” என்கிறார் அந்தப் பெண், சீராக வரிசையில் உள்ள பற்கள் மின்னின, வெளுத்த கையை முன்னே நீட்டுகிறார். “என் பெயர் நேடலி. வடக்குப் பகுதியில் உள்ள எல்லா ஸிஸிக்களுக்கும் நான் வட்டார மேலாளர். ஸிஸி ஈ 14க்கு வரவேற்கிறேன். நீங்கள் எங்களோடு சேர்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.”

“காலை வணக்கம், நேடலி,” ஆ பூன் சொல்கிறான். 

நேடலியின் கையைக் குலுக்கும் முன், தன் கைகளை தனது புது கடல் நீலநிறச் சராயில் துடைக்கிறான். அவருடைய கை சிறியதாக, கதகதப்பாக, மிருதுவாக இருக்கிறது. அவன் உடனே கையை விட்டு விடுகிறான், தன் கையை விருட்டென்று பின்னே இழுத்துக் கொள்கிறான், அவனுடைய கன்னங்களுக்கு ரத்தம் பாய்கிற மாதிரி உணர்கிறான். 

 “ஜூலியாவிடம் நீங்கள் பேசியபோது அவர் என்ன அளவுக்கு உங்களுடைய வேலை இங்கு என்ன என்பதை விளக்கினார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை,” ஆ பூனின் சங்கடத்தைச் சற்றும் பொருட்படுத்தாதது போல பேசிக் கொண்டு போனார் நேடலி. அவன் மௌனத்தால் அவருடைய பேச்சை எதிர் கொண்டதைப் பார்த்து, அவர் மேலே பேசுகிறார்: “உங்கள் பதவிப் பெயர், அவுட்ரீச் கோஆர்டினேடிங்க் ஆஃபிஸர். இதற்கு என்ன பொருள் என்றால், உங்களுக்கு எதைச் செய்ய நன்கு தெரியுமோ, அதை நீங்கள் தொடர்ந்து இங்கே செய்ய வேண்டும் என்பதுதான்.”

அவன் அவரை ஒன்றும் புரியாதது போலப் பார்க்கிறான், தன் கீழ் உதடு சிறிது தொங்குவதைத் திடீரென்று உணர்கிறான். வாயை மூடிக் கொள்கிறான். 

“ஆ பூன், நீங்கள் உங்கள் வாழ்க்கை பூராவும் இங்கேயேதான் கழித்திருக்கிறீர்கள், இல்லையா?”

ஆ பூன் தலையை அசைத்து ஆமோதிக்கிறான். 

“காம்பொங்கை உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும் என்பீர்கள் நீங்கள்?”

அவன் எச்சிலை விழுங்குகிறான். அவனுடைய நாக்கு அவனுடைய வாய்க்குள் பொருத்தமில்லாமல்,சேற்று மீன் போலக் கிடக்கிறதாக உணர்கிறான். 

“ரொம்ப நல்லாத் தெரியும், மா’ம்.”

அவர் சிரிக்கிறார். அந்த ஒலி ஆ பூனின் முன்கைகளின் சிறு முடிகளைச் சிலிர்த்து எழச் செய்கிறது. 

“என்னை மா’ம் என்று அழைக்க வேண்டாம், ப்ளீஸ், நேடலி என்றே அழையுங்க,” அவர் சொல்கிறார். “அப்ப சரி, உங்க வேலை காம்பொங் சமூகத்தோட உறவாடறதுதான். அவங்களை ஸிஸிக்கு அழைங்க, அவங்களே வேண்டுவதை எடுத்து உண்ணும்படி பகல் உணவுக்கு ஏற்பாடு செய்யுங்க, பிங்-பாங் விளையாட்டுகள் விளையாடட்டும், டிவி காட்சிகளைப் பார்க்க வரட்டும். இந்த இடத்தைப் பயன்படுத்தி அந்தச் சமூகம் ஒன்று சேரணும்.”

 நேடலி அறையைச் சுற்றிக் காட்டிக் கையால் சைகை செய்கிறார், முதல் தடவையாக அவரின் முகத்திலிருந்து தன் பார்வையை அகற்றிக் கொள்கிறான் ஆ பூன். கோ விளையாட்டுப் பலகைகள் பொறிக்கப்பட்ட வட்டமான சிறு மேஜைகளை, சோடா பானங்களை அளிக்கும் எந்திரத்தை, பிங்-பாங் மேஜையை எல்லாம் பார்க்கிறான். ஒரு சிறு கருப்புப் பெட்டி, அதன் முன்புறம் பளபளப்பான கண்ணாடித் தகடால் மூடப்பட்டிருக்கிறது, அதை உற்று நோக்குகிறான். அந்தக் கண்ணாடி, மனிதக் கண் போல இலேசாக வளைந்து உப்பி இருக்கிறது. 

“நீ டிவி பெட்டியை இதற்கு முன் பார்த்திருக்கிறாயா?” நேடலி கேட்கிறார்.

ஆ பூன் மறுத்துத் தலையை அசைக்கிறான். ஆனால் அதைப் பற்றி நண்பர்களிடமிருந்து கேட்டிருக்கிறான், அவர்கள் உள்ளூர் டோகேயின்[1] தோட்டத்தில் வேலை செய்தார்கள். அந்த முதலாளி நாட்டு எல்லைக்கு அப்பால் பனை எண்ணெய் வியாபாரம் செய்கிறவர். அவருடைய வீட்டில் ஓய்வறையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. சூதாட்ட வெறி பிடித்தவன் ஒருவனின் குற்ற நடவடிக்கைகளையும் கதையாகக் கொண்ட நாடகம் ஒன்றின் புதுப் பாகத்தைப் பார்க்க தினசரி மாலை நான்கு மணிக்கு, அவருடைய மனைவியின் நண்பர்கள் அங்கே குழுமுகிறார்கள். ஆ பூனின் நண்பர்கள் புதர்களைத் திருத்துவது போலவோ, கோய் மீன் குட்டையில் இருந்து பாசியை அகற்றுவது போலவோ பாசாங்கு செய்தபடி ஜன்னலுக்கு வெளியே இருந்து அதைப் பார்க்கிறார்கள்.

நேடலி அந்தக் கருப்புப் பெட்டியை நோக்கிச் செல்கிறார், கண்ணாடிக்குக் கீழே ஒரு பட்டனை அழுத்துகிறார். அது சிறு சப்தத்துடன் உயிர் பெறுகிறது, ஒளிரும் சாம்பல் நிற மண் போலத் திரையில் ஓடுகிறது, படம் ஏதும் இல்லை. ஆ பூனுக்கு இது என்ன பெரிய விஷயம் என்று தெரியவில்லை. அவர் இன்னொரு பட்டனை அழுத்துகிறார், பெட்டிக்கு மேலே இருக்கிற இரண்டு உலோகக் கம்பிகளை இப்படி அப்படி அசைக்கிறார், சாம்பல் நிறத்தில் ஒரு பெண்ணின் உருவம் திரையில் தோன்றுகிறது. அந்தப் பெண்ணின் உதடுகள் கொழுத்து இருக்கின்றன, தலையில் பம்மி நிற்கும் நிறைய முடி. அவள் ஒரு மேஜையின் பின் அமர்ந்து, ஒரு காகிதத்தில் இருந்து எதையோ படிக்கிறாள்.

“கா மனிதர்கள் கடற்கரையோரம் நிலத்தை மீட்டுப் பயன்பாட்டுக்குக் கொணர புதிய, ஊக்கம் நிறைந்ததோர் திட்டத்தை  முன்வைத்திருக்கிறார்கள். அது வடக்குக் கடற்கரையில் அறுபது சதவீதத்தைக் கையிலெடுக்கும். அதை முடிக்கப் பத்து வருடங்கள் போலாகும். இந்தப் புதுத் திட்டம் மக்களவையில் வரும் வாரம் வாக்களிப்புக்கு வரும்,” திரையில் இருந்த செய்தியாளர் சொல்கிறார்.

ஆ பூன் அந்தப் பெண்ணின் துள்ளி ஓடும் பிம்பத்தைப் பார்த்து அதிசயித்து நிற்கிறான். அவள் படிக்கிற சொற்கள் அவனுக்குப் புரியவில்லை, ஆனால் ஓடுகிற படம் ஈர்த்துப் பிடிக்கிறது. அவனுடைய நண்பர்கள் சொன்னது போலவேதான் இருக்கிறது: உயிரோடு எதிரே இருப்பது போல, ஆனால் எப்படியோ பிசாசைப் போல, பின்னாலிருந்து ஒளியோடு அந்த பிம்பம் இருக்கிறது.

நேடலி கை நீட்டி ஒரு பட்டனை அழுத்துகிறார், திரை இருள்கிறது.

“சரியான நேரத்துக்கு வந்திருக்கிறது,” அவர் சொல்கிறார். “இந்த நிலத்தைப் பயன்பாட்டுக்குக் கொணரும் திட்டத்தால்தான் உங்களுக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது. அது இன்னும் முடிவாகவில்லைதான், இருந்தாலும், கா மனிதர்கள் அந்தத் திட்டம் ஏற்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த வெளியுறவு முயற்சி. அதற்காகத்தான் சமூகத்துடன் உறவு கொள்ளும் முயற்சி உங்களுக்கு முக்கியமான வேலையாகிறது.”

ஆ பூனுக்கு அவர் சொல்வது என்ன என்று விளங்கவே இல்லை, ஆனால் அவன் உற்சாகத்தோடு தலையாட்டுகிறான், வாரம் ஐம்பது டாலர்கள் கிட்டுவதை, அவன் ஏற்பாடு செய்யவிருக்கும் பிங்-பாங் போட்டிகளை, இரவில் தொலைக் காட்சியைப் பார்க்க அம்மாவுக்கு ஒதுக்கவிருக்கும் தனி இருக்கையை எல்லாம் பற்றியே அவன் யோசனை ஓடுகிறது. முதல் வரிசையில், தடையில்லாது பார்க்கும்படியான இருக்கை. மின்னி ஓடும் திரையை அவள் பார்க்கும்போது, அவளை அக்கம் பக்கத்தினர் பொறாமையோடு பார்த்திருப்பார்கள்.

அன்று மாலை ஆ பூன் வேலையை முடித்து வீட்டுக்குப் போகும்போது, சதுப்புநிலக் காடுகளின் வழியே போகும் சுற்று வழியைத் தேர்ந்தெடுக்கிறான். திருகிக் கோணி நிற்கும் மரங்களூடே, சூரியன் செம்மீன் பந்தைப் போல மின்னுகிற தொடுவானில் மிதக்கிறது. தீவு அமைதியாக இருக்கிறது. மெல்லிய காற்று ஆ பூனின் முகத்தைத் தொட்டு ஓடுகிறது, கடலுப்புடன், இறகு போல மென்மையாக அது வீசும்போது, அவன் வாழ்வில் முதல் முறையாக பெரும் திருப்பு முனையில் தான் நிற்பதாக உணர்கிரான். சதுப்பு நிலத்தைச் சுற்றிப் பார்க்கிறான், ஆனால் அங்கு கா மனிதர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை. அவர்கள் வீட்டுக்குப் போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொள்கிறான்.

**

ஸிஸியில் முதல் வார வேலை மெதுவாகப் போகிறது. ஆ பூனுக்கு அலுவலகத்தின் ஒரு மூலையில் ஒரு மேஜை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது அவனை வேலைக்கு எடுத்த பெண்மணி, ஜூலியாவின் மேஜைக்கு அடுத்து உள்ளது, நேடலிக்கும் ஒரு மேஜை இருந்தது, ஆனால் அவர் அனேக நேரம் அங்கே இருப்பதில்லை.

ஸிஸியில் தன் வேலை என்னதென்று அவனுக்கு இன்னும் புரியவில்லை, ஆனால் கேட்பதற்கு அவனுக்கு அச்சமாக இருக்கிறது. அவனுக்குத் தெரிந்த வரையில், ஜூலியாவின் வேலை உள்ளே வந்து போகிறவர்களை கட்டடத்தின் பின்புறம் உள்ள நவீனக் கழிப்பறைக்குப் போகும் வழியைச் சுட்டுவதுதான். அவர் நாளின் பெரும்பகுதியை அங்கே படிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிற முன்னறையில் கிடக்கும் சீன மொழிச் செய்தித்தாள் சேகரிப்புகளைப் புரட்டிப் பார்ப்பதிலும், தொலைக் காட்சிப் பெட்டியின் முன் உள்ள இருக்கைகளைத் தூசி தட்டுவதிலும், பல படிவக் காகிதங்களைப் பூர்த்தி செய்வதிலும் செலவழிக்கிறார். அந்தப் படிவங்களைப் பற்றி ஆ பூன் கவலைப்படவேண்டாமென்று சொல்கிறார். அவருக்கு ஏதும் உதவ வேண்டுமா என்று ஆ பூன் கேட்கிறபோது, அவர் அவனை ஒரு சூள் கொட்டிச் சிரிப்போடு ஒதுக்குகிறார்.

“நீ என்ன செய்ய வேண்டுமென்று நேடலி சொல்வார், பையா. அவர் நீ என்ன செய்யணும்னு சொன்னாரா?” தன் கொழுகொழு கைகளால் ஓர் அடுக்கு விண்ணப்பப் பத்திரங்களை அடுக்கியபடி ஜூலியா கேட்கிறார்.

அவன் ஒரு கணம் யோசிக்கிறான். “அவர் ‘சமூகத்தோடு உறவாடு.’ என்று சொன்னார்.”

“அப்போ அதைச் செய்!”

அவர்கள் முன்னால் பேசியபடி, ஒரு பிங்-பாங் போட்டியை ஏற்பாடு செய்வதென்று அவன் முடிவு செய்கிறான். அன்றைய தினத்தின் மீதிப் பொழுதை அக்கறையோடு ஒரு பெரிய சுவரொட்டியை வரைவதில் செலவழிக்கிறான். இந்த வெள்ளிக் கிழமை உங்கள் உள்ளூர் ஸிஸியில்! இலவச பிங்பாங்! இலவச குளிர் பானங்கள்! இந்தச் சொற்களின் கீழே கவனமாக ஸிஸியின் இலச்சினை ஒன்றைப் படி எடுக்கிறான், ஒரு சிவப்பு வட்டத்தின் நடுவில் வெண்ணிற நான்கு முனை நட்சத்திரம். அந்தச் சுவரொட்டியை வெளிப்புறச் சுவரில் ஒட்டுகிறான், அதனருகே ஒரு நாற்காலியைப் போட்டு வைத்து, அங்கே காத்திருக்கிறான்.

நண்பகல் சூரியன் முழுச் சக்தியோடு வெளியில் வீசுகிறது, சீக்கிரமே அவனுடைய கால்சராய்கள் அவனின் தொடைகளோடு ஒட்டுகின்றன. காம்பொங் அமைதியாக இருக்கிறது; பெரும்பாலான மனிதர் வீடுகளுக்குள் இருக்கிறார்கள், காலையில் செய்த கடினமான உழைப்புக்குப் பிறகு சிறிது நேரம் குட்டித் தூக்கம் போடுகிறார்கள். அவன் வேலை என்னவோ பிறரோடு உறவாடுவது, அதை அவன் செய்வான்.

அவன் ஹூன் அத்தையை, அவனுடைய பாவுக்கு நன்கு தெரிந்த ஒரு மீனவரின் மனைவியை, தெருவில் வருகையில் பார்த்து விடுகிறான். அவளுடைய கையிலிருந்த காலி பக்கெட்டை வைத்து, அவள் சமூகத்தின் பொதுக் குழாயடிக்குப் போகிறாள் என்று ஊகிக்கிறான்.

ஆ பூன் தன் வாயருகே உள்ளங்கைகளைக் குவித்து வைத்துக் கூவுகிறான்: “ஹூன் அத்தை!”

அவள் கண்களில் சூரியன் படாமல் கைநிழலில் மறைத்தபடி கண்களை இடுக்கி அவனைப் பார்க்கிறாள். அவன் கையாட்டி அழைக்கிறான், அவள் நெருங்கி வருகிறாள்.

“ஆ பூன்! ஏயப்பா, எப்படி இருக்கே பார்க்க, சட்டை, கால்சராயெல்லாம் போட்டுகிட்டு. எத்தனை பளிச்சுனு இருக்கு. ஐயோ, ஆனா ரொம்ப சூடா இல்லியா?” அவனுடைய சட்டைக் கையைப் பிடித்து இழுக்கிறாள், வியர்வையில் முன்னங்கையில் ஒட்டி இருந்த துணி விலகி வருகிறது.

“ஹூன் அத்தை, உங்களுக்குப் பிங் பாங் விளையாடப் பிடிக்குமா?”

அவள் சிரிக்கிறாள், தலையை அசைத்து மறுக்கிறாள். “இல்லேப்பா! அத்தை கிழவியாயாச்சு, இப்ப என்ன விளையாடறது? இந்த விளையாட்டெல்லாம் உன்னெ மாதிரி இளசுகளுக்குத்தான், எங்களுக்கு இல்லை.”

“என்ன அத்தை, நீங்க சுலபமா என்னைத் தோற்கடிச்சுடுவீங்க. உங்க கையெல்லாம் எப்படி வலுவா இருக்கு பாருங்க!”

ஆ பூன் அவளுடைய மேல்கை இருதலைத் தசையை விளையாட்டாக அழுத்துகிறான், அவள் கெக்கலித்துச் சிரிக்கிறாள். தன் பின்னே உள்ள சுவரொட்டியைக் காட்டுகிறான். “நாங்க ஒரு பிங்-பாங் போட்டியை இந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருக்கோம். குளிர் பானமெல்லாம் இலவசம். நீங்க கட்டாயம் வரணூம், சரியா?”

“சரிப்பா சரி! நான் வந்து ஆதரவு கொடுக்கறேன். ஆனா விளையாடறதெல்லாம் எனக்குச் சரிப்படாது.” அவள் சிரிக்கிறாள்.

“உங்க பிள்ளைங்களையும் வரச் சொல்லுங்க!” அவள் போகும்போது அவளிடம் அவன் கூவுகிறான். அவள் கையசைத்துப் போ என்கிறாள். அவன் அதை சரி என்று சொல்வதாக எடுத்துக் கொள்கிறான்.

அன்று மீதிப் பொழுதை ஆ பூன் இப்படியே செலவழிக்கிறான், அங்கு நடந்து போகிறவர்களிடம் எல்லாம் பேசி, அவர்களை அவனுடைய பிங்-பாங் போட்டிக்கு வரும்படி இழுக்கிறான். மொத்த நேரமும் அவன் நினைப்பது நேடலியைத்தான், அவளுடைய பளபளப்பான கருப்பு முடி அவள் நடக்கும்போது அவள் பிடரியில் வீசி ஆடுவதை, எத்தனை சீராக, எத்தனை சுத்தமாக இருக்கும் என்பதை, அவளிடம் அவன் அந்தப் போட்டியைப் பற்றிச் சொல்லும்போது திருப்தியடைகிற அவளின் தலையசைப்பை நினைக்கிறான்.

**

வெள்ளியன்று காலை, காற்று சூடான மூச்சைப் போல இறுக்கமாக இருக்கிறது. முந்தைய இரவு மழை கொட்டித் தீர்த்திருந்தது, இப்போது வானம் தெளிவாக இருக்கிற போதும், நீர் ஊறிய மண்ணிலிருந்து இடைவிடாத வெப்பத்தை சூரியன் வெளியிழுக்கிறது, அது காற்றில் எரு மற்றும் ஈரமான புல்லின் வாடையை நிரப்புகிறது. மண்வெளி பூராவும் நிரம்பிய சிறு நத்தைகள் நடக்கும்போது காலடியில் சிக்கிப் பொடிகின்றன.

அம்மாவும், மாமனும், கூடவே ஆ ஹாக்கும் ஸிஸிக்கு முதலிலேயே வந்து விடுகிறார்கள், பளிச்சென்று தோற்றத்தோடு. அம்மா அரக்கு நிறத்தில் மேல் சட்டையும் கால்சராயும் அணிந்திருக்கிறாள், அதில் எங்கும் பால் வண்ணத்திலும், மஞ்சள் நிறத்திலும் சிறு பூக்களின் உருக்கள். மாமனும், அல் ஹாக்கும் கூட சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் புது வருட உடுப்புகளில் வந்திருக்கின்றனர்.

ஆ பூன் அவர்களை ஆர்வத்தோடு வரவேற்கிறான், ஐஸ்கட்டிகள் இட்ட மைலோ பானம் கொண்ட ப்ளாஸ்டிக் கோப்பைகளைக் கொடுக்கிறான், பிங் பாங் மேஜைக்கு அருகில் இருக்கைகளை இழுத்துப் போடுகிறான். ஆ ஹாக்கை முதல் போட்டியாளனாக கையெழுத்திட வைக்கிறான். சீக்கிரமே மேலும் பலர் வரத் துவங்குகிறார்கள். ஐந்து பெண்களையும், ஒரு பிள்ளையையும் அழைத்து வரும் ஹூன் அத்தை மொத்தக் குடும்பத்தையும் கொணர்ந்திருக்கிறாள். அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், காம்பொங்கிற்கு வெளியேயிருந்தும் சிலர் வந்திருக்கிறார்கள். ஆ பூன் ஒவ்வொரு நபரிடமும் ஓடிச் செல்கிறான், குளிர் பானங்களோடு கையில் நழுவும் ப்ளாஸ்டிக் கோப்பைகளைச் சமாளித்து எடுத்துப் போவதும், பிங் பாங் போட்டிக்கு பெயர்களை எழுதி வாங்குவதுமாக இருக்கிறான். சீக்கிரமே போட்டிக்கான இடங்கள் எல்லாம் நிரம்புகின்றன, வந்திருப்பவர்களில் மூன்றில் ஒருவர்தான் விளையாட முன்வருகிறார்- அதனாலென்ன, யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. எல்லாரும் சுற்றி வருகிறார்கள், இளையவர்கள் கோ விளையாட்டு மேஜைகளில் அமர்ந்திருக்கிறார்கள், முதியோர்கள் தொலைக்காட்சிக்கு முன் இருக்கைகளைப் பிடித்துக் கொண்டு, மாலை நேரச் செய்திக் காட்சியைப் பார்த்து அதிசயிக்கிறார்கள். தலைக்கு மேலே மின் விசிறிகள் வேகமாகச் சுழல்கின்றன, மாலை நேரத்து வெப்பத்தைத் தாண்டி, ஸிஸியின் உள்ளே காற்று இலேசாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறதாகத் தெரிகிறது.

யாரோ அவனுடைய முதுகைத் தொடுகிறார்கள். ஆ பூன் திரும்பியதும் நேடலியைக் காண்கிறான், அவருடைய சட்டைக் காலர் விறைப்பாக இருக்கிறது, சிறிய மூக்கு மின்னும் பட்டனைப் போல அத்தனை கச்சிதமாக இருக்கிறது. அவர் அவனருகே அத்தனை நெருக்கமாக நிற்பதால் அவருடைய சோப்பின் வாசனை அவனுக்குக் கிட்டுகிறது; செயற்கையான, பௌடரின் வாசனை.

“என்ன ஒரு அருமையான ஏற்பாடு, ஆ பூன்,” என்கிறார் அவர்.

அவருடைய கை தொட்டுக் கொண்டிருக்கும் அவனுடைய முதுகின் கீழ்ப்பகுதி சுடுகிற மாதிரி இருக்கிறது, அவருடைய மென்மையான விரல்கள் தன் வியர்வை ஈரம் ஒட்டும் சட்டையில் படுவதை நினைக்க அவனுக்கு முகம் சிவக்கிறது.

“மிகப் பொருத்தமான நேரமும் கூட, ஏன்னாக்க நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கிட்டி விட்டது, அதோட ரொம்பப்  பிரமாதமா ஒரு சட்டமும் தீட்டி இருக்காங்க. எல்லாரையும் இங்கே கவனிக்கும்படி சொல்றியா, நான் ஒரு அறிவிப்பைச் செய்யணும்?”

ஆ பூன் தலையாட்டுகிறான். ஒரு நாற்காலி மீது ஏறி நிற்கிறான், சிறிது குனிந்து நிற்கிறான், மின்விசிறி அவனை இடித்துக் கீழே தள்ளி விடும் என்ற பயம். இத்தனைக்கும் அது நடக்குமளவு அவனொன்றும் அத்தனை உயரமில்லை.

அவன் நிற்கிற இடத்திலிருந்து ஆ ஹாக் பிங்பாங் மேஜையில் ‘சர்வ்’ செய்வதையும், திருப்ப முடியாத அதை எதிராளி தோற்பதையும் பார்க்கிறான். அவனுடைய சகோதரன் இன்னொன்றை அனுப்புகிறான், அது முன்னதைப் போலவே திருப்ப முடியாதபடி கொல்லும் சர்வ். அவனுக்கு எதிராக விளையாடும் பையனுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவனுடைய உதடு பிதுங்கி இருக்கிறது- அவன் இதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை என்று தெரிகிறது, ஆ ஹாக் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. தன் அண்ணன் அந்தப் பையனை அவனுடைய நண்பர்கள் முன்னிலையில் முழுதும் அவமானப்படுத்தாமல் விட மாட்டான், அந்தத் தோல்வியைச் சிறிது பொறுக்கும்படி நல்ல தனமாக நட்பானதொரு சிரிப்பு கூட அவனிடம் இராது என்பது ஆ பூனுக்குத் தெரியும்.

“எல்லாரும் இங்கே பாருங்க!” வாயைச் சுற்றித் தன் உள்ளங்கைகளைக் குவித்தபடி ஆ பூன் சொல்கிறான். “தயவு செய்து உங்களோட கவனத்தைக் கொஞ்சம் இங்கே திருப்புங்க!”

பேச்சு அடங்குகிறது, மௌனம் வெளியில் கிரீச்சிடும் சிள்வண்டுகளின் சப்தத்தால் மட்டுமே குலைக்கப்படுகிறது. மழை பெய்த பிறகு பூச்சிகளின் சப்தம் எப்போதுமே பெரிதாக இருக்கும். அது அங்கு இருக்கும் இறுக்கத்தால்- ஈரம் ததும்பும் காற்று அவற்றுள் எதையோ தூண்டி விடுகிறது, மண்ணுக்குள்ளிருந்தும், மரங்களிலிருந்தும் அவற்றை வெளியே இழுக்கிறது, அவற்றைத் தம்முடைய ஆர்வம் நிரம்பிய பாடல்களைப் பாட வைக்கிறது.

“இன்று இங்கே வந்ததற்கு எல்லாருக்கும் நன்றி. ஸிஸி ஈ 14க்கு உங்கள் வருகை நல்வரவாகட்டும்.”

கைதட்டல்கள், சிலர் விஸில அடித்துக் கூவுகிறார்கள். ஆ பூன் தன் சகோதரனின் கண்கள் தன் மீது படிந்திருப்பதைப் பார்க்கிறான், இந்த முறை அதில் பொறாமை இல்லை, ஏதோ ஒரு தடவையாக, அதில் சிறிது பெருமை தெரிகிறது.

“நீங்கள் எல்லாம் பிங்பாங்கை, குளிர்பானங்களை, தொலைக்காட்சியை நன்றாக அனுபவிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஸிஸி என்பது நாம்ம் எல்லாரும் வந்து பகிர்வதற்கான இடம், காம்பொங்கின் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் வந்து சந்திக்க ஓர் இடம்-” அவன் சிறிது நிறுத்துகிறான், “உறவாடும் இடமும் கூட.” பழக்கமில்லாத அந்தச் சொற்கள் அவனுடைய நாக்கிலிருந்து சுலபமாக வழிந்தோடுகின்றன.

கூட்டத்திலிருந்த அம்மா அவனைக் கவனிக்கிறாள், மாமனும் பார்க்கிறார். மடிப்புள்ள வெள்ளை சட்டையும், கடல் நீல நிறச் சராய்களும் அணிந்து, கன்னங்கள் சுத்தமாகச் சவரம் செய்யப்பட்டு, சீராக வெட்டப்பட்ட தலைமுடியோடு தான் நிற்பது அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறான். பெருமை சிறு சுடராக ஒளிர்கிறதை உணர்கிறான். அது ஒரு கருமை கலந்த மகிழ்ச்சி, நிலை குலையச் செய்யும் மேட்டிமைத் தனம் அதில் கலந்திருக்கிறது. தான் மேலும் நேராக நிற்பதையும், தோள்களை அகட்டி, சட்டையை வழுமூனாக ஆக்கிக் கொண்டு நிற்பதை உணர்கிறான்.

”எங்கள் வட்டார மேலதிகாரி, நேடலி, ஒரு அறிவிப்பைச் செய்யவிருக்கிறார்,” அவன் சொல்கிறான். “பிறகு நீங்கள் மறுபடி உங்கள் மகிழ்வைத் தொடரலாம்.”

நேடலி அவன் நாற்காலியிலிருந்து கீழிறங்க உதவுகிறார், ஆனால் அவர் மேலே ஏறி நிற்பதில்லை.

“எல்லாருக்கும் நல்வரவு,” அவர் சொல்கிறார். “உங்கள் எல்லாரையும் இங்கு சந்திப்பது அருமையான நிகழ்வு.”

அறை அமைதியாக இருக்கிறது. ஆ பூன் பேசும்போது அவர்கள் உற்சாகப்படுத்தியது போலவோ, கிண்டல் செய்தது போலவோ ஏதும் செய்யவில்லை. நேடலியின் செதுக்கினாற் போன்ற இங்கிலிஷ் சொற்கள் வெளியிலிருந்து உள்ளே வந்து உரத்தொலிக்கும் சிள்வண்டுகளின் ஓசைக்கு மேலே எழுகின்றன.

 “உங்களில் சிலர், இதில் ஐயமில்லை, புது நில மீட்டெடுப்புத் திட்டம் பற்றியும், மேலும் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறிய கரையோரச் சட்டம் பற்றியும் இன்றைய செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.”

இன்னமும் அமைதி நிலவியது. ஆ பூன் அவரிடம் இந்த அறையில் உள்ள எவரும் அரசியலைக் கவனிப்பதில்லை என்று சொல்ல விரும்பினான்; அதுவும், கட்டளைகளும், முன்னெடுப்புகளைளும், தொடர்ந்து நிறைவேற்றப்படும் சட்டங்களும் என்று முடிவில்லாத பெருக்கை அவர்கள் கவனிப்பதே இல்லை.

“நீங்களே ஒரு கடற்கரைக் குடியிருப்பு என்பதால், உங்கள் எல்லாருக்கும் ஏதாவது கவலைகள் இருக்கலாம். ஆனால், கா மனிதர்கள் தங்களால் ஆன அனைத்தையும் செய்து கொடுப்பார்கள், நீங்கள் இந்த மாறுதல்களைச் சுலபமாகக் கடந்து போவதற்கு உதவுவார்கள் என்று நான் இங்கே உங்களுக்கு உறுதி கொடுக்கிறேன்.”

கூட்டத்தூடே ஒரு சலசலப்பு அலையாக எழுகிறது. இந்த கா பொம்பளை என்ன சொல்லிக் கொண்டிருகிறாள்? அவர்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

 “நீங்கள் இடம் மாறிப் போகத் தீர்மானித்தால், உங்களுக்கு அதைச் செய்ய மூன்று மாதங்கள் அவகாசம் உண்டு, அது தேவைக்கு மேலேயே உள்ள கால அவகாசம் என்று நாங்கள் கருதுகிறோம். நில மீட்புத் திட்டம் அதற்குப் பிறகு சீக்கிரமே துவங்கும். முதலில் அஸ்திவாரம் போடும் பணி, கடற்படுகையில் ஆழமாக சிமெண்ட் தூண்களைப் பதிக்கப் போகிறோம், இது நிலத்தை நிரப்பத் தேவையான பணி. பிறகு நிஜமான மண், நம் அண்டை நாட்டிலிருந்து பெரும் செலவில் இறக்குமதி செய்யப்படுவது அங்கு போடப்படும். ஐந்து வருடங்களில் இந்தத் தீவின் ஒரு கோடியில் இருக்கும் கரையோரச் சதுப்பு நிலம் சமதளமான, பயன்படுத்தப்படக் கூடிய நிலமாகி விடும், இதுதான் இந்தத் தீவின் புது நகர மையமாக ஆகப் போகிறது. யோசித்துப் பாருங்கள், மின்னுகிற புது விதக் கட்டடங்களும், காங்க்ரீட் சாலைகளும், தெருவில் மின் விளக்குகளும், எப்படி இருக்கும்.”

அறை பொங்கி எழுகிறது.

“என்னது? என்னது?”

“என்ன மாற்றத்துக்கான காலம்? என்ன நகர மையம்? தெளிவாகச் சொல்லுங்க!”

“ஹா! எங்களைத் துரத்தப் போறீங்களா?”

“அவ என்ன சொல்றா ஆ பூன்?” மாமன் அமைதியாகக் கேட்கிறார், அவருடைய உறுதியான குரல் அங்கிருந்த குழப்பத்தினூடே வெட்டிக் கொண்டு வருகிறது.

ஆ பூன் சுற்றிலும் தன் வாழ்நாள் பூராவும் தனக்குப் பழக்கமான மனிதர்களின் முகங்களைப் பார்க்கிறான், சந்தோஷமாக ஒரு தினத்தைக் கழிக்கத்தான் இங்கு அழைத்து வருவதாக அவன் நினைத்திருந்தான், ஆனால் அவர்களிடம் சொல்லப்படுவதோ அவர்கள் தம் வாழ்நாள் பூராவும் அனுபவித்துத் தெரிந்து கொண்டிருந்த வீடுகளையும், தம் வாழ்க்கைக்கு அவர்கள் நம்பி இருக்கிற கரையோரக் கடற்பரப்பையும் அவர்கள் இழக்கப் போகிறார்கள் என்பது. கூட்டத்தில் அம்மாவைப் பார்க்கிறான், அவளுடைய மெல்லிய புருவங்கள் ஒன்றாக இணைந்தபடி நெற்றிச் சுருக்கம், அவள் குழப்பத்தில் இருக்கிறாள், ஏதோ சொல்ல விரும்புபவள் போல வாய் பாதி திறந்திருக்கிறது. ஆ ஹாக்கைப் பார்க்கிறான், அவனுடைய கைவிரல்கள் பிங்பாங் மட்டையை அத்தனை இறுக்கிப் பிடித்திருக்கின்றதால் அவனுடைய மணிக்கட்டு வெளுத்துப் போயிருக்கிறது. மாமனைப் பார்க்கிறான், அவருடைய உதடுகள் நிறமிழந்து கோடாக ஆகி விட்டன, முதுமைப் புள்ளிகள் தெளித்திருக்கும் அவரது கைகள் அவருடைய எலும்பான நெஞ்சின் குறுக்கே கட்டப்பட்டிருக்கின்றன.

“ஆ,” பூன் சொல்கிறான், அந்த ஒற்றை ஒலி முட்டாள்தனமான, கனமான கூழாங்கல் ஒன்றைப் போல அங்கிருந்த ஆத்திரமான மௌனத்தில் விழுகிறது.

அறை பொங்கி எழுகிறது. அண்டை வீட்டுக்காரர்கள் முட்டிகளை ஆட்டுகிறார்கள், மேஜைகளைக் குத்துகிறார்கள், மைலோ பானக் கோப்பைகள் வழுக்கிக் கீழே விழுகின்றன. ஆ ஹாக் பிங் பாங் மேஜையிலிருந்து அவனை நோக்கிக் கத்திக் கொண்டிருக்கிறான், அவனுடைய வாயின் ஓரங்களிலிருந்து எச்சில் கொப்புளித்துத் தெறிக்கிறது. மாமன் தலையை ஆட்டுகிறார், ஆ பூனை கண்கொட்டாமல் பார்க்கிறதில் பெரும் ஏமாற்றம் தெரிகிறது. அத்தைகள் அம்மாவைச் சூழ்ந்து கொண்டு, மணிக்கட்டுகளையும், தோள்களையும் அவசரப்படும் கைகளால் பற்றி, ஆ பூனைப் பார்க்கச் சைகை செய்கின்றனர், அவளை சொல்லு, ஏதாவது சொல்லு, ஏதாவது செய், உன் மகனுக்கு அவனிடம் என்னவென்று தெளிவாக்கு என்பது போல.

அம்மாவின் கண்கள் மூடி இருக்கின்றன, விரல்கள் மென்மையாக நெற்றிப் பொட்டுகளைத் தடவுகின்றன, ஏதோ இந்த இடத்திலிருந்து தூர, வெகு தூரப் பகுதியில் தான் இருப்பதாகக் கற்பனை செய்கிறார்போல இருக்கிறது. இது ஆ பூனின் இதயத்தை நொறுக்குகிறது. அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாற்காலியிலிருந்து அகல்கிறான். அவன் அம்மாவிடம் போவான், எல்லாவற்றையும் மறுப்பான், எல்லாம் நேடலியின் குற்றம் என்று விளக்குவான். தன் வேலையை விட்டு விடுவான். அண்டை வீட்டுக்காரர்களுக்கு சமாதானம் சொல்வான், எதிர்ப்புகளை ஏற்பாடு செய்து, தன் சமூகத்தை கா மனிதர்களின் இதயமில்லாத திட்டங்களிலிருந்து காப்பாற்றுவான்.

ஆ பூன் அம்மாவை நோக்கிக் காலடிகளை எடுத்து வைக்கும்போது, அவன் நகரத்தைப் பார்க்கிறான், மின்னிக் கொண்டு, அப்பழுக்கற்று, கடலுக்குள்ளிருந்து அணைந்து போன எரிமலை போல அது எழுவதாகக் காண்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான்: ஒளிரும் நவீனக் கட்டடங்கள், காங்க்ரீட் சாலைகள், மின்சாரத் தெருவிளக்குகள்- நேடலி சொல்கிறார்போல- அது மிக அழகான, நம்பமுடியாத காட்சி. அவன் பாவைப் பார்க்கிறான், தலைக்கு மேலே கடற்பறவைகள் வட்டமிட்டபடி கிறீச்சிடுகையில், காலில் சங்கிலி கட்டப்பட்டு, சூடான மண்ணில் மண்டியிட்டு இருக்கிறார். அவன் தன்னை ஒரு வெள்ளைச் சட்டையில், வெள்ளைக் கால் சராயில், உருண்டையான விளிம்புகள் கொண்ட கண்ணாடி வில்லைகள் நுட்பமாக மூக்கில் சமநிலையில் பொருத்தப்பட்டு இருக்கும் உருவாகப் பார்க்கிறான். கையில் தகவல் நிறைந்த ஓர் அட்டையோடு, தரையில் கொடிகளை நட்டபடி, சரக்குப்பெட்டிகள் தாங்கும் மிதவைப் படகுகளுக்கு, டன் டன்னாகப் புதிதாகத் தோண்டப்பட்ட மண்ணைக் கொணரும் ட்ரக்குகளுக்கு தான் ஆக்ஞைகள் பிறப்பித்தபடி இருப்பதைப் பார்க்கிறான்.

அங்கே நிரப்பு, அவன் சொல்வான், சதுப்பு நிலத்தையும், கடலையும் காண்பித்து.

அதைப் புதை.

எல்லாவற்றையும் புதுசாக்கு.

ஆ பூன் அப்படியே நிற்கிறான். அம்மாவின் கண்கள் இன்னும் மூடியே இருக்கின்றன. அவள் அவன் திரும்பிச் செல்வதைப் பார்க்க மாட்டாள். அவன் ஒரு கணம் தயங்குகிறான், பின் மறுபடி நாற்காலி மீது ஏறுகிறான்.

_______________

[1] டோகே (Towkay)- முதலாளி. அல்லது உள்ளூர் பிரமுகர்.

**                    **

இங்கிலிஷ் மூலம்: ரேச்செல் ஹெங்

தமிழில்: மைத்ரேயன்

இந்தக் கதை கியெர்நிகா என்ற பத்திரிகையில் நவம்பர் 20, 2019 அன்று வெளியான கதை. மூலக் கதையை இங்கே காணலாம்:

ரேச்செல் ஹெங், ‘சூயிசைட் க்ளப்’ (ஹென்ரி ஹோல்ட் பிரசுரம், 2018) என்ற நாவலை எழுதி இருக்கிறார். சிங்கப்பூரில் அது பெரும் வெற்றி பெற்ற நூல். ஐரிஷ் டைம்ஸ், இண்டிபெண்டெண்ட், எல்லெ, நைலான், பஸில், ரம்பஸ், மேலும் பிட்ச் மீடியா ஆகிய பன்னாட்டுப் பத்திரிகைகளின் பாராட்டைப் பெற்ற நூல். இது உலகம் நெடுக பத்து மொழிகளில் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது. இவருடைய சிறுகதை ஒன்று புஷ்கார்ட் பரிசைப் பெற்றது. தற்போது இவர் ஆஸ்டின் நகரில் உள்ள யுனிவர்ஸிடி ஆஃப் டெக்ஸஸில், எழுத்தாளர்களுக்கான மிஷ்னெர் மையத்தில் இணைந்திருக்கிறார்.

மெற்கொண்டு தகவல்களை இங்கே பெறலாம்:

https://lkcnhm.nus.edu.sg/app/uploads/2017/06/2010nis139-145.pdf

Series Navigation<< கா மென் – ரேச்செல் ஹெங்

One Reply to “கா-மென் – ரேச்செல் ஹெங்”

  1. மிகத் திறமையான மொழி பெயர்ப்பு.பூர்வ குடிகளை மேம்படுத்துவதாகச் சொல்லி சில வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பின்னர் அவர்களின் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றின் மேல் செலுத்தப்படும் ஏவுகணை என நாகரீகங்களைச் செயல்படுத்துகிறார்கள்.தன் விரலைக் கொண்டே தன் கண்ணைக் குத்திகொள்வதைப் போல் பூர்வ குடியினரையே இதில் ஈடுபடுத்தவும் செய்கிறார்கள்.கா-மென் ஒரு ஒளி-ஒலி வாங்கிகள்.உண்மையான பிரச்னைகள் தோன்றும் போது அவர்கள் கண்களிலேயே படமாட்டார்கள்.உண்மையைச் சொன்ன கதை. நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.