வரச்சாபம்

காலடியோசை கேட்டவுடனேயே
பரவசத்தில் சிலிர்ப்படைந்த தோல்தான்
இப்போது சுருங்குகிறது
வெம்மையில்
மென்முகம் நோக்கியபோது
பல்லாயிர மலர்களாய் விரிந்த
அகம்தான் கூம்புகிறது
பாலைக் கள்ளியாய்
ஒவ்வோர் அணுவையும்
தீஞ்சுவையால்
நனைத்த குரல்தான்
எரியவைக்கிறது
கார்ப்பினால்
தாயின் இறகிற்குள் அணைந்த
புள்ளின் நிம்மதியைத் தந்த
அருகாமைதான் அளிக்கிறது …
எண்திசைக் காலும் சுழன்றடிக்கும் பாறைத்தூசியின்
நிலையின்மையை
வரம் ஈயும் தெய்வ மந்தகாசத்தின் பொருள்
பெறுவது வரம் மட்டுமல்ல என
உணரும்போதுதான் புரிகிறது
**
நகரும் புடவி

இரவில் மலர்ந்திருந்த
கல்வாழையின் செம்மலர்களை
வருடிக் கொண்டிருந்தபோது
கூறினார்கள்
மூன்றாம் வீட்டு முதியவர்
காலமானதை ..
பூவன்வாழை
காய்த்திருந்த வீட்டின்
தம்பதியர் தற்பலியான அன்றுதான்
நான்கு ஈன்றது
எதிர்வீட்டு வெண்பூனை …
பறவைகளும் அணில்களும்
குதூகலித்தபடி பழங்கொறித்த
எங்கள் தெரு பெருவேம்பு
சாய்ந்த நாளில்தான்
பையன் பிறந்தான்
பக்கத்து வீட்டில் ..
படுகையின் பள்ளங்களை
நிரப்பியபடியே செல்லும்
நதியென
நகர்ந்துகொண்டிருக்கிறது
இப்புடவி …
கா.சிவா