இரா. இரமணன்; விபீஷணன்; ஸ்வேதா புகழேந்தி
வீட்டுப்பாடம்

வீட்டுப்பாடம்
வெறுப்பெனக்கு.
வீச்சமடிக்குமதை
வீதிச் சாக்கடையில்
வீச விருப்பமெனக்கு.
உனைச் சுக்குநூறாய் ஆக்க
வெடிகுண்டொன்று கிட்டாதோ?
எனை வலிப்பு வந்தவன் போலாக்கும்
வீட்டுப்பாடமே! ஓ வீட்டுப்பாடமே!
ஆசிரியர் அனுப்பும்
வீட்டுப்பாடத்தைக்
கட்டியழுவதை விட
கடித்துக் குதறும்
சுறாவுடன் சுற்றிவரலாம்.
தன்னந்தனியனாய்
இருள் வனாந்திரத்தில்
சிங்கத்துடன் கட்டிப் புரளலாம்.
கீரையும் ஈரலும் உணவாகலாம்
பத்து முள்ளம்பன்றிகளை
செல்லம் கொஞ்சலாம்.
வீட்டுப்பாடமே! ஓ வீட்டுப்பாடமே!
வரிசையில் உனக்கிடம்
வறியவர் போல் கடைசியே.
உனக்குமொரு வாழ்வு ஏன்
என்பதறியேன.
நீ மாயமாய் மறைந்தொழிந்தால்
சிரித்து சிரித்து
சிவக்குமென் மேனி.
வீட்டுப்பாடமே! ஓ வீட்டுப்பாடமே!
நாறுமுனை நான் வெறுக்கிறேன். *** இங்கிலிஷ் மூலம்: ஜாக் ப்ரிலட்ஸ்கி; தமிழாக்கம்: இரா. இரமணன்
ஜாக் பிரிலட்ஸ்கி (1940) குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதும் அமெரிக்கக் கவிஞர்.இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இரண்டு வருடம் (2006-2008) குழந்தைகள் கவியரசாக(Children’s Poet Laureate) இருந்திருக்கிறார். எழுத்தாளராவதற்கு முன் கார் ஓட்டுனர்,சரக்குகள் இடம் மாற்றுபவர்,பஸ் பணியாள்,குயவர்,தச்சர்,வீடு வீடாக செல்லும் விற்பனையாளர் போன்ற பணிகளை செய்தாராம்.( சொல்வனம் இதழ் 210 இல் கொடுக்கப்பட்ட குறிப்பு.).அவருடைய கவிதைகளில் ‘home work’ என்பதன் மொழிபெயர்ப்பு
நான் யார்?

நானாகிய அவனுக்கும்
அவனாகிய எனக்கும்
ஆறடி இடைவெளி
அவன் கலகலவென சிரிப்பான்
கதறி அழுவான்
ஆசைக் கடலில்
உப்பாக திரிவான்
பொறாமை தீயில்
சாம்பலாகாது எரிவான்
அவனுக்கு அழகெனத் தோன்றும்
பெண்கள் மீது
மைல் அளவு
மையல் கொள்வான்
பிச்சையெடுப்பவருக்கு
இரக்கங்களிடுவான்
எவரெஸ்டின் உச்சத்தையும்
பசிஃபிக்கின் ஆழத்தையும்
சிந்தையால் அளந்திடுவான்
பணியென்னும் பெயரில்
கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்
எனக்கு வேலையொன்றும்
இருப்பதில்லை என்பதால்
சும்மா அவனை ஒரு புள்ளியில் கவனிப்பதுண்டு
இறைமை இடைவெளியில்
கொஞ்சம் கொஞ்சமாக
நிரம்பிக்கொண்டு வருகிறது.
–விபீஷணன்
அப்பா…!

நீண்ட நெடிய இரவுகளிலும்
நின் நிழல் தேடி காத்திருக்கிறேன்…
நிசப்தமிசைக்கும் மௌன மொழியாய்
கைலியோடுரசும் நின் பாத சப்தம்
கேட்டுக்கொண்டிருக்கிறது…
கண்கள் வழியே செவிகள் கடந்து
சிகை தொட்ட கண்ணீர் துளிகள்..
என் தலையணையில் மடிகின்றன.
தோற்த்து போகும் நம்பிக்கைகளுள் என்
துயில் துளைத்துக்கொண்டிருக்கிறேன்.
பரிட்சையும் படிப்பும்
அள்ளிச்சென்ற நேரங்களில்..
அன்பையும் ஆசையையும்
பேச மறந்தேன்..
விலங்கிட்ட அச்சொற்களெல்லாம்..
ஆயுள் கைதி ஆகியதுவோ…?
நின் சட்டையின் நுனி பிடித்து
சாலைகள் கடந்து சென்றேன்…
நின் கால்விரல்களின் நெட்டி முறித்து
என் அன்பின் பலத்தை அளவிடச்சொன்னேன்…
நிதம் நிதம் நின் வருகைகளை
காட்டிக்கொடுக்கும் செவிகள்..
கேட்ட நொடியே வேலைகள் விடுத்து
கதவைச்சேரும் கால்கள்..
ஓய்வெடுத்தனவோ விடுமுறை என்று..?
பக்கங்களாய் பேசினாலும்
திருக்குறளாய் முடித்தாலும்
பதில் தரும் உன் புன்னகையே..
நின் ஆகச்சிறந்த ஆயுதம்.
சின்னஞ்சிறு பிரிவுகளுள்
துணை வரும் சுகவீனங்கள்..
துணை தவிர்த்து சென்றதுவோ..?
துணை ஒன்றுண்டென துளைந்ததுவோ..?
துணை நீ இருப்பது உண்டெனில்..
நான் நிஜம்…
நான் என்பது உண்டெனில்…
நீயும் நிஜம்…
உயிர் பெறும் முன்பெனக்கு
உன்னுள் இடம் கொடுத்தாய்..
உயிர் விடுத்த பின்புனக்கு
என்னுள் இடமில்லையா..?
- ஸ்வேதா புகழேந்தி