2010- மீண்டும் மால்தஸ்

This entry is part 5 of 17 in the series 20xx கதைகள்

தன் பெற்றோர்கள் சராசரி அமெரிக்கர்களைவிட அதிபுத்திசாலிகள் என்பது நசியின் எண்ணம். அவளுடைய பிறந்தநாள் விருந்துக்கு வருகிற பத்துப்பதினைந்து சிறுவர்கள் விடைபெறும்போது பெண் என்றால் ஒரு அலங்காரப்பெண் பொம்மை, பையன் என்றால் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி அவர்கள் பரிசாகத் தருவதில்லை. (ஏன், அவளிடம் இருக்கும் பார்பி கூட வேறு யாரோ வாங்கிக்கொடுத்தது. அதைவைத்து அவள் விளையாடியதே கிடையாது.) மற்ற பெற்றோர்களிடம் நசியைப் புகழ்ந்து கொண்டாடியது இல்லை. (பெருமையடித்துக் கொள்ளும்படி நசி ஒன்றும் செய்துவிடவில்லை என்பது வேறுவிஷயம்.) நூற்றுக்கணக்கில் நசியைப் படம்பிடித்து அப்படங்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பியது கிடையாது, ஃபேஸ்புக்கில் போட்டதும் இல்லை. (நசிக்கு சாதாரண முகம், கட்டை தலைமயிர். இதில் அழகுபார்க்க என்ன இருக்கிறது?) முன்னுக்குப்பின் முரணான ‘ரியாலிடி டெலிவிஷன்’ என்கிற அபத்தக் களஞ்சியங்களை அவர்கள் பார்ப்பதில்லை. 

ஆனால், முந்தைய தினம் நடந்ததைப் பார்த்தால் தன் பெற்றோர்களைப் பற்றிய கணிப்பை மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று நசிக்கு தோன்றியது. 

அன்று பாட்டியின் பிறந்தநாள். அறுபதுக்கு மேல் ஒரு எண். பகலில் ஆறு மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து (அதற்குமேல் ஊத சக்தி இல்லை), கேக் வெட்டி தலை நரைத்தவர்களுடன் பார்ட்டி. மாலை இந்திய உணவகத்தில் குடும்பத்தினர் நான்கு பேர் மட்டும். பாட்டியும் பேத்தியும் ஒரு பக்கம், நசியின் பெற்றோர் எதிர்ப்பக்கத்தில். நசிக்கு சாவகாசமாக விண்டு தின்ன ஒரு பெரிய தோசை. மற்றவர்களுக்கு தட்டு சாப்பாடு. 

பாதி உணவு வயிற்றில் போனதும் பாட்டி, “எனக்கு வயதாகிக்கொண்டே போகிறது” என்று ஆரம்பித்தாள்.  

அது தெரிந்தது என்றாலும், முக்கியமான விஷயம் ஒன்றை சொல்லப் போகிறாள் என்று அதற்கு அர்த்தம். 

“மாம்! உனக்கு அறுபத்தெட்டுதானே. இக்காலத்தில் அது ஒரு வயதா?” என்று அப்பா ஸ்ரீ பாட்டியை சமாதானம் செய்தான். 

நசிக்குக்கூட ஆரஞ்சு பட்டுப்புடவையிலும், வாரிப்பின்னிய நரைகலந்த கூந்தலிலும், அவளுக்குத் தெரிந்த மற்ற பாட்டிகளைப்போல, அவள் பாட்டி கிழடுதட்டியதாகத் தெரியவில்லை. “யூ லுக் யங், டாடிமாம்!” என்றாள். 

அம்மா ஷால்டின், “இந்த வயதில் உன்னைப்போல் நான் இருந்தால் ரொம்பவுமே சந்தோஷப்படுவேன்” என்றாள். 

ஆனால், பாட்டி எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. “ஏதோ! இப்போதைக்கு நடமாட முடிகிறது. குனிந்து சாமான்களை தூக்கி வைக்க முடிகிறது. எனக்கு வேண்டியதை சமைக்க தெம்பு இருக்கிறது.”  

சிறு இடைவெளிக்குப் பின், நசியின் பெற்றோர்களை மாறிமாறிப்பார்த்து தணிந்த குரலில், “இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இருந்தால் இப்போதே செய்வது நல்லது. நான் அதை அடிக்கடி பார்த்துக்கொள்வேன். இன்னும் சில வருஷம் போனால் என் உடம்பு எப்படி இருக்குமோ…” என்று இழுத்தாள்.    

அவர்களுக்கும் அதே எண்ணம் போல. 

“நசிக்கு ஐந்தாகப் போகிறது” என்றான் அப்பா. 

“இன்னும் இரண்டு ஆண்டுகளில் பீச் கம்பெனியின் வைஸ்-சேர்மன் பதவி எனக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது. அப்புறம் பிரசவத்துக்கும், கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் நேரம் கிடைப்பது சந்தேகம்” என்றாள் அம்மா.   

பிறகு, நசிக்கு புரியாது என்று பாட்டி, “ஸ்ரீ! யோசிச்சுப் பாரு! வளர்ந்தப்புறமும் உங்க பெண்ணை யாராவது பாத்துக்க வேண்டியிருக்கும். மூணாவது மனுஷாள நம்பறதுக்கு பதிலா, சொந்தத் தம்பியோ தங்கையோ இருந்தா நல்லதுன்னு எனக்கு தோணறது” என்றாள். 

அவனும் அதை அவனுக்குத்தெரிந்த அரைகுறை ஃப்ரெஞ்ச்சில் தன் மனைவிக்குச் சொன்னான். 

“மாம்! நீ சொல்வது ரொம்ப சரி! நாங்களும் கொஞ்ச காலமாக அப்படித்தான் நினைக்கிறோம்” என்று அவள் மாமியாருக்கு ஒத்துப்பாடினாள். 

நசி தோசையைத் தின்னாமல் அதை துண்டுதுண்டாகப் பிய்த்து அழகு பார்த்தாள். ‘என்னை நான் கவனித்துக் கொள்வேன். என் எதிர்காலத்துக்காக இன்னொரு குழந்தையை வரவழைக்க வேண்டாம். அதற்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டால்… அஜீரணம் என்று மருத்துவரிடம் போக, அவர் வயிற்றில் கான்சர் என்று சொல்வதுபோல ஆகும்.’  

அதை அவர்களுக்கு எப்படி புரியவைப்பது?  

சிக்கு தன் மனக்குழப்பத்தின் தெளிவு குழந்தைகள் காப்பகம் அமைந்திருக்கும் இருபதுமாடிக் கட்டடத்தின் இருபத்தியோராவது தளத்தில் கிடைக்கும் என்று தெரியும். மற்ற குழந்தைகள் தூங்க, காப்பாளிகள் அரட்டையில் லயிக்க, நசி மெல்ல நழுவினாள். அவளுக்கு மட்டுமே தெரியும் அத்தளத்தில் மின்தூக்கி நின்றதும் வெளியே வந்தாள். 

அருங்காட்சியகத்தில் நுழைந்ததுபோல் இருந்தது. பழங்கால கரிப்புகை படிந்த சுவர்கள். மிக உயரமான மேஜை. அதற்கேற்ற உயரமான நாற்காலியில் அமர்ந்து ஒருவர் எழுதிக்கொண்டு இருக்கிறார். ஜன்னல் வழியாக வந்த வெளிச்சம்தான். அறையில் மின்சக்தியாலோ, எரிவாயுவாலோ வெளிப்படும் சூடு இல்லை. அதனால்தான் அவர் தடியான ஸ்வெட்டர், கம்பிளி கோட் அணிந்திருக்கிறார். நசி மேல் ஜாக்கெட்டுடன் வந்தது நல்லதாய்ப் போயிற்று. அவர் தோற்றம்கூட விநோதம். நரைமயிர் நீண்டு முன்புறம் தொங்கியது. அவள் வந்ததை அவர் கவனிக்கவில்லை. எழுதும் மும்முரத்தில் கதவுதிறந்த சத்தம் கூட காதில் விழவில்லை போலிருக்கிறது. 

“ஹாய்!”   

அவர் நிமிர்ந்து பார்த்தார். பேனாவை பத்திரமாக அதன் மூடியில் செருகிவிட்டு, விரல்களை சொடுக்கினார். 

“ஹலோ! யங்க் லேடி! குட்மார்னிங்!”  

உச்சரிப்பு விநோதம், ஆனால் கேட்க இனிமை. 

“குட் மார்னிங், சார்! நான் சாதாரண, சின்ன பெண். மரியாதை எதற்கு?”   

“பெண்களை லேடி என்று அழைத்துத்தான் பழக்கம். உட்கார்!”   

நாற்காலியின் முதுகில் தன் முதுகை ஒட்டி கால்களை மடக்கி நசி அமர்ந்தாள். அங்கே கவனத்தை சிதறடிக்க தொலைக்காட்சி, கணினி எதுவும் இல்லை. பூஜ்யத்திலிருந்து ஒன்பது வரை வட்டமான எண்கள் வைத்த புராதன தொலைபேசி கூட கண்ணில்படவில்லை. 

“என்ன பார்க்கிறாய்?”  

“சுவாரசியமாக ஒன்றும் இல்லையே. உங்களுக்கு எப்படி பொழுது போகிறது?” 

“ஏன்? பேனா. காகிதம்” என்று அவற்றை காட்டினார். “இவற்றை வைத்து பலமணிநேரம் எழுத்தில் செலவிடலாம்.” 

அம்மாவோ, அப்பாவோ அப்படி எழுதுவதை அவள் பார்த்தது இல்லை, ஆச்சரியமாக இருந்தது.      

“ஒரு பக்கம் எழுத ஒருமணி ஆகுமே.”    

“ஆகட்டுமே. நேரத்துக்கு என்ன பஞ்சம்?”   

“கை வலிக்காது?”  

“வலிக்கும். அதனால், அறிவாளிகளின் தீவிர சிந்தனைகள் மட்டுமே காகிதத்தில் பதிக்கப்படும்.” 

“இப்போது அப்படி இல்லை. செய்தித்தாள்களில் மூன்றாம்-தர மேதாவிகளின் நுனிப்புல் கருத்துக்கள். தொலைக்காட்சியிலும் அவர்களின் உளறல்கள்.”    

வந்த காரணத்தை தெரிவிக்காமல் ஏதேதோ பேசுகிறோமே என்று நசி, “எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்கலாம்” என்று அறிவித்தாள். 

“ரொம்ப சந்தோஷம்.”  

“தீர்க்கதரிசியான நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி?”   

“ஏன்?”   

“என் பெற்றோரின் ஜீன்ஸை அடுத்த தலைமுறைக்கு காப்பாற்றிக்கொடுக்க நான் ஒருத்தி போதாதா? இன்னொரு குழந்தை என்றால் சும்மா இல்லை. இப்போது நாங்கள் வசிக்கும் இடம் பத்தாது. பெரிய வீட்டுக்கு குடி போக வேண்டும். அதை கட்டுவதற்கு பல மரங்களை வெட்ட வேண்டும். எல்லாரும் சௌகரியமாக உட்கார்ந்து செல்ல மினி-வேன் தேவை. அது பெட்ரோலை ஜுஸ் மாதிரி குடிக்கும்.”   

“இன்னொரு குழந்தையை வரவழைக்க காரணம்…”   

“அவர்களுக்கு பிறகு என்னை கவனித்துக்கொள்ள ஒரு துணை வேண்டுமாம்.”    

நசியை ஏறஇறங்க பார்த்தார், தலை யசைத்தார். பிறகு, “நியாயம்தான்” என்றார்.  

“என்ன நியாயம்? இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சாக்கு. பதினெட்டு, பத்தொன்பது, இருபது என்று தங்களுக்கு எண்ணத் தெரியும் என்று காட்டுவதற்காகவே டுகார்கள் குழந்தைகளாக பெற்றுத்தள்ளுகிறார்கள். மருத்துவரின் திரிசமத்தால் செயற்கையாக கருத்தரித்து ஒரே பிரசவத்தில் எலிக்குஞ்சுகள் மாதிரி எட்டு குழந்தைகள் பெற்ற ‘ஆக்டோ-மாமு’க்கு வந்த பேரும் புகழும்.” 

“சரி, அந்த சுயநலமிகளை விடு! நீ பெரியவளாக வளர்ந்ததும், பிறர் உதவி இல்லாமல் உன்னால் வாழ முடியுமா?”      

“நான் மட்டும் என்ன, இக்காலத்தில் யாரால்தான் முடியும்? என் அப்பாவுக்கு இயந்திரங்களின் உதவியால் பயிரிட்ட கோதுமையில் செய்த ப்ரெட்டில், ஜியார்ஜியாவின் வேர்க்கடலை விழுதும், ப்ரேஸிலின் கரும்பு சர்க்கரை சேர்த்த ஜாமும் தடவித்தான் தின்னத்தெரியும். ஒரு கோதுமைமணி கூட விளைவிக்கத் தெரியாது. என் அம்மா தன் வாழ்நாளில் மீன் பிடித்ததில்லை, மானை வேட்டையாடிக் கொன்றதில்லை. அவளுக்கு தேவையான மாமிசம் பிளாஸ்டிக் உறையில் சுற்றி சூபர்மார்க்கெட்டின் குளிர்ப்பெட்டிகளில். என் ஒருத்தியின் எதிர்காலத்தைக் கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? இந்த உலகின் எதிர்காலத்தை யோசிக்க வேண்டாமா?”    

அவர் அதிர்ந்தார். 

“உன் வயதுக்கு நீ நன்றாகவே யோசிக்கிறாய்.”  

அறிஞரின் புகழ்ச்சியில் நசிக்கு பரம திருப்தி. 

“அதனால்தான் உங்களைத் தேடி வந்தேன்.” 

“நான் எவ்விதத்தில் உனக்கு உதவ முடியும்?”    

“என் பெற்றோர்கள் மனதை மாற்ற வேண்டும்.”   

“ஆகா! அது என்னால் முடியும். இந்தா! இதை அவர்கள் படிக்கட்டும். அப்புறம் என்ன நடக்கிறது பார்!” என்று ஒரு புத்தகத்தை நீட்டினார். “என் கட்டுரை. இதை எழுதியபோது இவ்வளவு பிரபலம் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை.”  

நசி நாற்காலியில் இருந்து எழுந்து ஜாக்கிரதையாக வாங்கிப்பிரித்தாள். இரண்டு பாகங்களும் சேர்ந்து ஆயிரம் பக்கம் இருக்குமா? காகிதங்கள் பழுப்பாகி தொட்டால் உதிர்ந்துவிடும் அளவுக்கு பழசு. முதல் பக்கத்தில்… ‘எஸ்ஸே ஆன் தி ப்ரின்சிப்ல் ஆஃப் பாபுலேஷன், பை ரெவரென்ட் தாமஸ் ராபர்ட் மால்தஸ்’.  

“ஒரு கட்டுரை இத்தனை பெரிசா?”    

“1798-இல் வெளிவந்த முதல் பதிப்பு சின்னதாக இருந்தது. இது ஆறாவது. ஒவ்வொரு தடவையும் தவறுகளைத் திருத்தி, புதிய வாதங்கள், விவரங்கள், பிற்சேர்க்கைகள் சேர்த்ததால் நான்கு மடங்கு ஆகிவிட்டது” என்று அவர் பெருமையாகச் சொன்னார். 

இரண்டு பாகங்களையும் நசி மேஜை மேல் வைத்துவிட்டு திரும்ப வந்து உட்கார்ந்தாள். 

“இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும்! என் அம்மாவோ அப்பாவோ இதை படிக்க விருப்பப்பட்டால் இன்டர்நெட்டில் இருந்து இறக்கிக்கலாம்.” 

மால்தஸுக்கு புரியவில்லை. சிறுபெண் ஆனாலும் அவளிடமிருந்து தெரிந்துகொள்ள நிறைய விஷயம் இருப்பதாக நினைத்தார். 

“உங்கள் காலத்தில் இந்த மாதிரி புத்தகம் படிக்க மக்களுக்கு போது இருந்திருக்கும். இப்போது யாருக்கும் பொறுமை கிடையாது. முக்கியமான கருத்தை சுருக்கமாகச் சொன்னால் போதும்.”   

புத்தகத்தில் பார்வையை பதித்து அவர் சொன்னார். “உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தினம் இரவுச் சாப்பாட்டின்போது ஒரு துண்டு மாமிசமும், ஒரு கோப்பை ஒயினும் இருக்க வேண்டும். அப்படி இல்லை யென்றால், மக்கள்தொகை பூமியின் தாங்கும் சக்தியை தாண்டிவிட்டது என்று அர்த்தம்.”     

நசி முகத்தை சுளித்தாள். “என் அப்பாவைப்போல நான் வீகன். வளர்ந்த பிறகும் அல்கஹாலைத் தீண்டுவதாக இல்லை.”    

“ஐரோப்பியர்களுக்காக இப்படி எழுதினேன். இந்தியர்களுக்கு என்றால், மதிய உணவின்போது பருப்பு, நெய் போட்ட சாப்பாடும், ஒரு கோப்பை பாயசமும். பிறகு, ஒரு குட்டித் தூக்கம். வக்கணையாக சாப்பிடும் வசதி இருந்தால் ஓய்வு நேரமும் இருக்கும். அப்போது, ஷேக்ஸ்பியரோ, காளிதாஸரோ படிக்கலாம்.”    

“அதாவது… உலகில் இத்தனை பில்லியன் மக்கள் என்று கணக்கிடுவதைவிட, எல்லோரும் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா என்று கணிப்பதுதான் முக்கியம்.”    

“கரெக்ட், நீயே அழகாகச் சொல்லிவிட்டாய்.”    

“இக்கருத்தை இக்காலத்துக்கு தகுந்தபடி நீங்கள் எழுதினால் என் அப்பாவும் அம்மாவும் படிக்கலாம்.”   

மால்தஸ் முகத்தை கையில் தாங்கியபடி யோசித்தார்.  

“இது எப்படி? மக்கள்தொகை இரட்டிக்க ஐம்பது ஆண்டுகள் என வைத்துக்கொள்வோம். நான் வாழ்ந்தபோது பூமியின் மக்கள்தொகை ஒரு பில்லியன். அது பதினாறு பில்லியனை எட்டுவற்கு இருநூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், அடுத்த பதினாறு பில்லியனுக்கு ஐம்பது ஆண்டுகளே போதும். இந்த எக்ஸ்பொனென்ஷியல் பெருக்கத்தை எதனுடன் ஒப்பிடலாம்? யெஸ்… பர்ஃபெக்ட்!” என்று முகமலர்ந்தார். “மக்கள் பெருக்கம் பற்றவைத்த வெடிகுண்டு மாதிரி. வெடிக்கும்வரை குண்டின் திரி பொறிப்பொறியாக, நிதானமாக, அழகாகச் சிதறும். முன்ஜாக்கிரதையாக அதை அப்போதே அணைத்து ஆபத்தைத் தவிர்த்துவிடலாம். திடும் என்று வெடித்த பிறகு அதன் விளைவுகளை கட்டுப்படுத்தவே முடியாது. இப்போதும் கணக்குவழக்கு இல்லாமல் குழந்தைகள் பிறக்கின்றன, டிக்… டிக்… டிக்…” என்று நாக்கினால் கொட்டினார்.     

“இதே ஐடியாவை வைத்து நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன், பால் ஏர்லிக் என்ற உயிரியல் அறிஞர் ‘பாபுலேஷன் பாம்’ என்ற புத்தகம் எழுதினார். இரண்டு மில்லியன் பிரதிகள் விற்றன.”   

“ம்ம்ம், என் காலத்தில் ஆயிரம் விற்றாலே அதிகம்” என்றார் மால்தஸ் பொறாமையாக. 

“ஆனால், அது கிறித்துவத்துக்கு எதிரான பத்து புத்தகங்களில் ஒன்றாக தெரிந்தெடுக்கப்பட்டது. அதை எழுதியவருக்கு நவீன-மால்தஸ் என்ற அவமானப்பெயர்.”   

“என் பெயர் அவ்வளவு மட்டமாகப் போய்விட்டதா?”   

“ஏர்லிக் அதை மதிப்பாக எடுத்துக்கொண்டார்.”    

“புத்திசாலிதான். சரி, அடுத்த ஐடியா. அதை சொல்வதற்குமுன், மனித வரலாற்றிலேயே முதலாவது பொருளாதார பேராசிரியர் நான் என்பதை உனக்கு நினைவுபடுத்துகிறேன். எளிதாகக் கிடைக்கும் நிலக்கரியையும் கனிமங்களையும் பயன்படுத்தி முதலில் ஐரோப்பிய, பிறகு அமெரிக்க, ஆசிய பொருளாதாரங்கள் வளர்ந்து வந்திருக்கின்றன. அந்த வளர்ச்சியில் மக்கள் பெருக்கம் அடிபட்டுப் போய்விட்டது. இப்படியே காலமெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை.”    

“க்ளப் ஆஃப் ரோம் என்ற சிந்தனைக்குழுவின் அறிஞர்கள் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் வெளியிட்ட ‘த லிமிட்ஸ் டு க்ரோத்’ என்ற அறிக்கையில் மூலப்பொருள்களின் தட்டுப்பாட்டினால் பொருளாதார வீழ்ச்சி நிகழும் என்று கம்ப்யூட்டர் உதவியுடன் காட்டினார்கள். பெட்ரோலியத்துக்கு புதுப்புது புதையல்கள் கிடைத்ததால் அந்த அறிக்கையை குப்பையில் போட்டாகிவிட்டது.”     

“சரி, அது போகட்டும். இயற்கையை இன்னொரு விதத்தில் நாம் சார்ந்திருக்கிறோம். நமக்கு உணவு தருவது மட்டுமல்ல, நம் கழிவுப்பொருள்களை ஏற்று சுத்தகரிக்கிறது. காற்றிலுள்ள மாசுப்பொருட்களின் நச்சுத்தன்மையை மாற்றுகிறது. நீரை வடிகட்டித் தருகிறது. இதெல்லாம் ஓர் எல்லை வரைதான். அதை மிஞ்சினால் இயற்கையின் சுழற்சிகள் படுத்துவிடும். காற்றில் கார்பன் டைஆக்ஸைடின் பங்கு அதிகரித்துக்கொண்டு போனால் பூமி சூடேறும். செயற்கை உரங்களும், பூச்சிகொல்லிகளும் விளைநிலத்தை பாலைவனம் ஆக்கும். காடுகளின் அழிவு நீர் வளத்தை பாழ்படுத்தும்.”     

“அதையும் ஜே. ஆர். மெக்நீல் என்ற வரலாற்று ஆசிரியர் ‘சம்திங் நியு அன்டர் த சன்’ என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தி யிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டைப்போல குறுகிய காலத்தில் பூமியில் இத்தனை மாற்றங்கள் இந்த அளவில் எந்தக் காலத்திலும் நிகழ்ந்தது இல்லையாம். இவ்வளவும் மனிதனை எங்கே கொண்டுபோய் விடுமோ, யாருக்குத் தெரியும்?”      

மால்தஸுக்கு இன்னொரு தடவை ஏமாற்றம். வேறொரு வழியை எடுக்க விரும்பினார். “ஒரு கதை சொல்லட்டுமா?” என்றார். 

“எனக்கு கதை கேட்க ரொம்ப ரொம்ப பிடிக்குமே” என்று நசி நாற்காலியில் காலை நீட்டினாள். 

“குட். அது ஒரு அழகான, இயற்கைவளங்கள் நிறைந்த தீவு. நீலநிறப்பட்டில் மரகதப்பச்சை. அங்கிருந்து எட்டும் தொலைவில் அகன்ற நிலப்பரப்பு கிடையாது. அத்தீவில் செழித்து வளர்ந்த பனை மரங்களின் அடர்ந்த காடு. எப்படியோ அங்கு வந்து சேர்ந்த ஏழெட்டு மனிதர்கள். அவர்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுக வளர்ந்து பிறகு வேகமாகப் பெருகுகிறது. மரங்களை ஒவ்வொன்றாக வெட்டிச் சாய்த்து பலகையாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள், பெரிய சிலைகள் செய்து கடற்கரையில் காவலுக்கு வைத்து வணங்குகிறார்கள். முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு, இந்த ஆண்டில் இவ்வளவு மரங்கள் குறைந்துவிட்டன என்று யாரும் கணக்கிடுவது இல்லை. அங்கே வெட்டினோம், இங்கே வளர்கிறது என்று அலட்சியமாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளைப் பார்த்த முதியோர்களுக்குத்தான் காடுகள் வேகமாக மறைந்து வருவது தெரிகிறது. அவர்கள், ‘காடுகளை நம்பித்தான் நாம் இருக்கிறோம். ஒரு ஆண்டில் மரங்களின் வளர்ச்சி எவ்வளவோ அதை மட்டும் அந்த ஆண்டின் கடைசியில் வெட்டினால் காலம் உள்ளவரை காடுகள் நிலைத்திருக்கும். அப்படிச் செய்யாவிட்டால், தன்னைப் புதுப்பிக்க இயலாமல் அவை அழிந்துபடும்’ என்ற எச்சரிக்கிறார்கள். அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை, வணிகர்கள் தங்கள் லாபத்தை, பொதுமக்கள் தங்கள் சௌகரியத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. சிறிதுசிறிதாகக் காட்டு மரங்களின் வளம் குன்றி கடைசியில் யாருக்கும் பயன்படாத சிறு குச்சுகள்தான் மிச்சம். வாழ்வதற்கு அத்தியாவசியமான சக்தி இல்லாததால் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வேகமாக அழிகிறார்கள். எப்படி என் கற்பனை? பிரமாதமாக இல்லை? ஹாலிவுட்காரர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். பிரும்மாண்டமான படத்துக்கான ப்ளாட்.”  

“நன்றாகத்தான் இருக்கிறது, மிஸ்டர் மால்தஸ்! ஆனால்…”    

“என்ன ஆனால்?”    

“இது தென் அமெரிக்காவுக்கு மேற்கே பசிஃபிக் பெருங்கடலின் நடுவில் இருக்கும் ஈஸ்டர் தீவில் நிஜமாகவே நடந்தது.”    

“அதனால் என்ன? நம் பூமியே அந்தத்தீவு போலத்தான். நாம் விண்வெளிக் கப்பலில் தப்பித்து போகும்படி எந்த கோளும் பக்கத்தில் இல்லை. நாம் இயற்கையின் வளங்களை சிறுகக்சிறுக அழித்து வருகிறோம். இப்படியே போனால் நமக்கும் அந்த ஈஸ்டர் தீவினர்களின் கதிதான்.”    

“அதையும் ‘கொலாப்ஸ்’ என்ற புத்தகத்தில் ஜாரெட் டயமன்ட் விவரித்திருக்கிறார். ஈஸ்டர் தீவு மட்டுமல்ல, சூழல் வளம் இழந்ததால் நினவே, சிந்துநதி, மாயா, நார்ஸ் என்று எத்தனையோ நாகரிகங்கள் அழிந்திருக்கின்றன.”   

“அடடா! எனக்கு தெரியாமல் போயிற்றே. இந்த சான்றுகளையும் என் கட்டுரையில் சேர்த்திருந்தால், ஒருவேளை என் வாதத்துக்கு வலிமை கூடியிருக்குமோ?” என்று அவருக்கு நப்பாசை.     

நசிக்கு அவ்வளவு நிச்சயமில்லை. “மூடநம்பிக்கையை அறிவுசான்ற வாதத்தால் மாற்றவே முடியாது” என்றாள்.   

“எனக்குத் தெரிந்த பழசு, புதுசு எல்லாம் சொல்லிவிட்டேன். மனிதர்களை நம்ப வைக்க ஒரேயொரு வழிதான் பாக்கி” என்று கைவிட்ட குரலில் சொன்னார்.    

“என்ன?”   

“காலக்கப்பலில் அழைத்துச் சென்று, இன்னும் அறுபது நூறு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மனிதர்கள் சூட்டில் வெந்து, பசியில் வாடி, நோயின் பிடியில் அவதிப்படுவதை நேராகக் காட்டுவது. ஆனால், அப்படிச் செய்ய இயலாது என நினைக்கிறேன்.”     

நசி காப்பகத்துக்கு திரும்பிப்போக வேண்டிய நேரம். தன் பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்று ஏமாற்றம். அதை கவனித்த மால்தஸ், “ஒரு அறிவுரை மட்டும் சொல்வேன். கேட்டுக்கொள்!” என்றார்.  

இறங்குவதற்கு தயாராக நசி நாற்காலியின் முனைக்கு வந்து கால்களை மடக்கினாள். 

“என் காலத்திலேயே மக்கள்தொகை பெருகி கஷ்டங்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். நிலக்கரியின் தயவினால் தொழில்வளம் பெருகி அப்படி நடக்கவில்லை. மனிதர்களுக்கு எவ்வளவோ உத்பாதங்கள் காத்திருக்கின்றன. ஒருவேளை, நீ என் வயதை அடைவதற்குள் மனித நாகரிகம் வேகமாக அழியத் தொடங்கலாம். அப்படி நிகழ்ந்தால், மால்தஸ் அந்தக் காலத்திலேயே மக்கள்தொகையை கட்டுப்படுத்து என்று எச்சரித்தார். நீங்கள்தான் கேட்கவில்லை என்று சொல்லிக்காட்டாதே! நான் ஒரு ஸ்காலர் அன்ட் அ ஜென்ட்ல்மன்.”

Series Navigation<< 2015: சட்டமும் நியாயமும்2019- ஒரேயொரு டாலர் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.