மொழி

எனக்கு ஒரு தனித் திறமை. மொழிகளில். சொந்த கிராமம் பாலக்காட்டில். அதனால் மலையாளமும் தமிழும் சரளம். தவிர கற்ற மொழிகள் ஆறு. அப்பாவுக்கு மத்திய அரசாங்க வேலை ஆதலால், இரண்டு வருடங்களுக்கு வேறு ஊருக்கு மாற்றல். டெல்லி, மும்பை என்ற பெரிய ஊர்கள் தவிர, சிலிகுரி, மசீலிப் பட்டணம், பரோடா என்று நாடெங்கிலும் வசித்திருக்கிறேன். படித்து விட்டு வேலைக்கு வந்து பல வருடங்களாக வசிக்கும் மும்பையில் தாய் மொழி அளவுக்கு மராத்தி. வேலை செய்வது ஜெர்மன் நிறுவனம். அதனால் சரளமாகப் பேசி, எழுதி, கூட்டத்தில் பேசும் அளவுக்கு ஜெர்மன். இதெல்லாம் என்ன, ஸ்ட்ராஸ்போர்கில் ஒரு ப்ராஜெக்டுக்காக ஆறுமாதம் இருந்த போது ஆரம்பித்து , இப்போது தீவிரமான இலக்கியம் படிக்கும் அளவுக்கு ஃப்ரென்ச். 

எல்லா மனிதர்களும், எல்லாப் பொருட்களும் ஒழுங்கில் இயங்கும் நாட்டில் சுத்தமான கண்ணாடி வழியாக வெளியே உறைந்திருக்கும் பனியைப் பார்க்கும் போதே, தானாக மூளையில் ஜெர்மன் ஸ்விட்ச் ஆன் ஆகி விடும். அப்படி ஒரு ஃபிப்ரவரி ஞாயிற்றுக்கிழமையில், மைனஸ் இருபது டிகிரியில், எத்தனை அடுக்கு ஆடை, கோட்,கையுறை,தொப்பி என்று இருந்தாலும் குளிர் ஊடுருவி உறைக்கும் பனிக்காலத்தில் ஸ்டுட்கார்ட் என்ற தெற்கு ஜெர்மனி நகரில் இறங்கினேன். மத்திய ரயில்வே ஸ்டேஷனில், தரையடி நிலையத்தில் வண்டியைத் தவற விட்டு, பசியுடன் நொந்து போய் அடுத்த ரயிலுக்குக் காத்திருந்தபோது சோட்டுவைச் சந்தித்தேன். 

அவ்வளவாகக் கூட்டம் இல்லை, என்னைப் போல வெளியூர் ஆசாமிகள் சிலர் தென்பட்டார்கள்.  எனக்கு மொழி தவிர, சரித்திரம், மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், அவர்களுடைய விழாக்கள் என்று எல்லாமே விருப்பமாக தேடிக் அறிந்து கொள்வேன். அது மட்டும் இல்லை, எந்த வெளி நாட்டுக்குப் போனாலும் உடனே, எங்கே சரவணபவன் என்று தேட மாட்டேன். சைவமாகவே வளர்ந்திருந்தாலும், இப்போது எல்லா உணவு வகைகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். ஸ்வீடனில் ஏறக்குறைய அழுகிய மீனையும், பாரிசில் தவளைக் கால்களையும்,  ஜெர்மனியில் பன்றி மாமிச ஸாசேஜை உப்பு கூட இல்லாத மசித்த உருளைக் கிழங்குடன் ருசித்து சாப்பிட்டிருக்கிறேன். 

வழக்கமாக இந்த ஜெர்மன் பெட்டிக் கடைகளில் ப்ரெட்ஸல் எனப்படும் கோல முடிச்சு மாதிரி ரொட்டி, க்ரொஸோன், ஸாண்ட்விச் ஏதாவது கிடைக்கும்.  இப்போது எது கிடைத்தாலும் சாப்பிடும் நிலையில் இருந்தேன், ஆனால் பெரும்பாலான ஜெர்மன் மக்கள் ஞாயிற்றுக் கிழமை அதிகம் வெளியே வர மாட்டார்கள். கடைகள் எல்லாம் மூடி இருக்கும், சாலைகள் எல்லாம் வெறிச்சோடிப் போயிருக்கும். ஆனால் ரயில் நிலையங்களில் வயசான ஜெர்மன் தாத்தாக்களையும் பாட்டிகளையும் எந்த நாளிலும் பார்க்கலாம், குழுவாக ஒரே மாதிரி டீ ஷர்ட் ,தொப்பி அணிந்து கொண்டு கிளம்பி விடுவார்கள். சைக்கிள் ஒட்டுவார்கள், மலை ஏறுவார்கள், மீன் பிடிப்பார்கள் ,வைன் சுவைப்பார்கள். அந்த மாதிரி குழுவில் இல்லாதவர்கள் சிலர் கையில் தள்ளு வண்டி இல்லை எலெக்ட்ரிக் வீல் சேர் ஒன்றை வைத்துக் கொண்டு ஊர் சுற்ற வந்து விடுவார்கள்.

அன்றைக்கு குழு எதுவும் இல்லை, சில உதிரிக் கிழங்களும், கல்லூரி மாணவிகள் இருவர் பெரிய முதுகுச் சுமையுடன் காத்திருந்தார்கள். பருமனான ஒரு டர்கிஷ் பெண்-தலையில் கட்டிய கருப்புத் துணி, கை நிறைய பிதுங்கி வழியும் ப்ளாஸ்டிக் பையுடன் ஆடி அசைந்து நடந்து வந்தாள். சற்று வயதான ஒரு ஜெர்மன் பெண் கை வண்டியில் இரட்டைக் குழந்தைகளுடன், ஒரு அழுக்கு இளைஞன் நாய் கூடவே மூக்கு, காது உதடுகளில் உலோக அணிகளுடன் இளம் பெண், நான் மற்றும் ஒரு சிறுவன் என்று சொல்லக்கூடிய இந்திய இளைஞன். 

அவன் தலை பரட்டை,  எலி போல அலையும் கண்கள், நறுக்கிய மீசை, பான் போட்டு சிவந்த உதடு, ஒரு காதில் கடுக்கன், நிறம் சொல்ல முடியாத டீஷர்ட், மேலே ஒரு ஸ்வெட்டர், அதற்கும் மேல் ஒரு மலிவான ப்ளாஸ்டிக் ஜெர்கின், பழைய ஜீன்ஸ், என்னைப் பார்த்து புன்னகைத்தான். நான் கண்டு கொள்ளவில்லை. என் ப்ளாடினம் ஸ்ட்ராப் வாட்சைப் பார்த்தேன், இன்னும் இந்திய நேரம் காட்டிக் கொண்டிருந்து. மேலே கடிகாரத்தைப் பார்த்தேன், மணி மதியம் ஒன்று, அடுத்த வண்டி இன்னும் இருபது நிமிடத்தில். ஆனால் அன்றைக்கு தாமதம் என்று ஒடும் எழுத்துக்கள் அறிவித்தன. எவ்வளவு தாமதம் என்றும் சரியாக குறிப்பிடவில்லை. முன்பெல்லாம் ஜெர்மனியில் ரயில்கள் நேரத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தன, ஆனால் இப்போது அப்படி சொல்வதற்கில்லை. அவர்கள் இப்போதுதான் இந்த நிகழ் உலகத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றும். “ச, நான் வரும் போதுதான் இப்படி ஆகும்,” என்று அலுத்துக் கொண்டேன். 

வண்டி தாமதம் என்றதும், பசி இன்னும் உறைத்தது. டாக்ஸி எடுத்துக் கொண்டு நான் போக வேண்டிய ஹோட்டலுக்குப் போகலாம், ஆனால் அது அநியாயத்துக்கு அறுபத்து மூன்று யூரோ ஆகும். அதாவது சுமாராக ஐயாயிரம் . பசி வேளையிலும் இந்திய மூளை வேகமாகக் கணக்கு போடுகிறது. எவ்வளவு நேரம் ஆகுமோ என்று யோசித்தேன். அங்கே ப்ளட்பாரத்துக்கு நடுவே கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும் பெண்ணிடம் கேட்கச் சென்றேன். “ நல்ல நாள் ஆகட்டும், அடுத்த வண்டி எத்தனை மணிக்கு வரும் ? உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா ? “ என்று கேட்டேன்.  எனக்கு இலக்கணச் சுத்தமாக வட ஜெர்மனியில் பேசும் மொழியையும், தெற்கு ஜெர்மனியில் பேசப்படும் ஸ்வாபிஷ் எனப்படும் குழறல் மொழியையும் அவர்களைப் போலவே பேச வரும். அந்தப் பெண் நான் சரியாகப் பேசியதற்கு வேண்டும் என்றே ஆச்சரியம் காட்டாமல் தனக்கு முன் இருந்த கணிணியைப் பார்த்து விட்டு, “அதிகம் போனால் இரண்டுக்கு கால் மணி முன்பு வந்து விடும்” என்றார். ஜெர்மன் மொழியில் நேராக ஒன்றே முக்கால் என்று சொல்லாமல், இரண்டுக்கு கால் குறைவு என்ற வழக்கு உண்டு. அவளுக்கு நன்றியைத் தெரிவித்து அவள் எனக்கு பதில் நன்றி தெரிவித்து நான் திரும்புவதற்குள், அவன் என் பக்கத்தில் இடிக்கிறமாதிரி நின்றிருந்தான். “பையா , காடி கித்னே பஜே கி ?” என்ற மாதிரி என்னிடம் ஏதோ கேட்டான்.  அவன் பேசியது ஹிந்தியில் எந்த ஊரைச் சேர்ந்தது  என்று சரியாகப் புலப்படவில்லை. இப்போது பசி வேறு. சற்று கோபம் வந்தது. ஹிந்தி ஸ்விட்ச் ஆன் ஆகியது.  “ இடிக்கற மாதிரி கிட்ட வரக்கூடாது, சற்று தள்ளி நில்” என்று கடுமையாக சொன்னேன். முகத்தைப் பார்த்து விட்டு சற்று பின் வாங்கினான். பணிவாக மறுபடியும் “ சாப், வண்டி வருமா, எத்தனை மணிக்கு ? ஏன் யாருமே பேச மாட்டார்களா ? தவிர இங்கே சத்தமே இல்லையே என்றான். என்றான். கூண்டிற்குள் இருந்த பெண் கணிணியைத் தீவிரமாகப் பார்ப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தாலும், கவனம் இங்கேதான். அவன் உரத்துப் பேசுவது சற்று அவமானமாக இருந்து. 

சற்று தள்ளி வந்தேன். அவன் பெட்டிகளை இழுத்துக் கொண்டு என்னுடனே வந்தான். வீட்டையே காலி செய்து வந்திருப்பான் போல இருந்தது. வண்டிக்குக் காத்திருக்கலாம் என்று தீர்மானித்தேன். எனக்கு சற்று ஆயாசமாக இருந்து, விமானத்தில் கொடுத்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் குடித்தேன். அதற்குள் அவன் அருகே வந்து பாட்டிலை பிடுங்குவது போல கையை நீட்டினான். நீர் குறைவாகத்தான் மீதி இருந்து, வேறு வழி இல்லாமல் கொடுத்தேன். அவன் சிறிது குடித்து விட்டு நன்றி சொன்னான். “ சாப் , நான் சோட்டா ராம், சோட்டு என்றே கூப்பிடுங்கள்” என்று உற்சாகமாக ஆரம்பித்தான், “வண்டி எத்தனை மணிக்கு வரும் ? “ “இன்னும் அரை மணி ஆகலாம்” என்றேன். என்னுடைய ஹிந்தி அவனுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. அவன் ஒரு துண்டுக் காகிதத்தை பையிலிருந்து எடுத்துப் பார்த்து விட்டு, “ நான் கிர்ஷ் ஹைம் போக வேண்டும், நீங்கள் எங்கே? என்றான். “ எந்த கிர்ஷ் ஹைம் ?” என்றேன். ஜெர்மனியில் கிர்ஷ் ஹைம் , என்றால் சர்ச் இருக்கும் ஊர், தமிழ் நாட்டில் கோவிலூர் என்பது போல. அந்தப் பெயரில்  நூறு ஊர் இருக்கும். அவன் பேப்பரை மறுபடி பார்த்து விட்டு, தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கினான். அந்தக் காகிதத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அதே பெயர் எழுதி இருந்து. இந்த மாதிரி விவரம் தெரியாத ஆள் எப்படி ஜெர்மனிக்கு, அதுவும் தனியாக வந்திருக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்து. அவனே பக்கத்தில் காலியாக இருந்த பெஞ்சைக் காட்டி, “சாப், வாருங்கள் ,இந்தக் குளிரில் நிற்க வேண்டாம், உட்காரலாம் “ என்று இழுத்தான். 

உட்கார்ந்தவுடன், எதிரே சுவரில் இருந்த வரை படத்தைப் பார்த்து கீழ் மூலையில் எஸ் 5 தடத்தில் டீ கிர்ஷ் ஹைம் என்று எழுதி இருந்த ஸ்டேஷன் பெயரைக் காட்டி அதுதான் என்றான். “அது தான் என்று எப்படி உனக்குத் தெரியும் ? “ என்றேன். நான் இது வரை நூறு தடவைக்கு மேல் வந்திருப்பேன், அதனால் பெரும்பாலான ஸ்டேஷன்கள், ரூட், மாற வேண்டிய இடம் எல்லாம் அத்துப்படி. இவனைப் பார்த்தால் முதல் முறை வந்திருப்பவன் என்று சந்தேகம் இல்லாமல் தெரிந்து. 

இந்த மாதிரி மொழி தெரியாத, கலாச்சார பழக்க வழக்கங்கள் தெரியாத ஆசாமிகளை ஏன் அனுப்புகிறார்கள் என்று கோபம் வந்தது. இவர்களால்  நமது நாட்டுக்கே கெட்ட பெயர். இவர்களைப் பார்த்து விட்டு இந்தியர்கள் எல்லோருமே இப்படித்தான் என்று பொதுவாகப் பேசுவார்கள். ஆனாலும் சோட்டுவைப் பார்த்தால் பாவமாக இருந்தது. என்னால்முடிந்த அளவு அவனுக்கு கலாசாரம் பற்றியும், பழக்க வழக்கங்கள் பற்றியும் ஒரு வகுப்பு நடத்தலாம் என்று தோன்றியது. 

முதலில் பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்று கைப் பெட்டியில் துழாவினேன். ஃப்ளைட்டில் கொடுத்த சாக்லேட்டை எடுத்துப் போட்டுக் கொண்டதாக நினைவு. ஒரு பார் கிடைத்தது.. அதை பாதியாக உடைத்து நீட்டினேன். அவன் மறுத்து விட்டான். அவன் குளித்து, பூஜை முடிக்காமல் டீ கூட குடிக்க மாட்டானாம். சரியான பழங்காலம் என்று நினைத்துக் கொண்டு சாக்லேட் உறையை குப்பைத்தொட்டியில், எந்த  குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று சோட்டுவுக்கு விளக்கி விட்டு போட்டேன். ரீ சைகிள் என்பது அவனுக்குக் குழப்பமாக இருந்து.

அவனுக்கு எந்த ஊர், என்ன வேலையாக வந்திருக்கிறான் என்று விசாரித்தேன். அவனுக்கு பீஹாரில் கயாவுக்குப் பக்கத்தில் கிராமம். சிறு வயதிலிருந்தே சைகிளைக் கழட்டிப் போட்டு திரும்ப அசெம்பிள் செய்து விடுவானாம், அப்படியெ ஸ்கூட்டர், பைக் எல்லாம் தானாகவே ரிப்பேர் செய்ய ஆரம்பித்தானாம். இப்போது டெல்லியில் ஜெர்மன் கார் சர்வீஸ் ஸ்டேஷனில் சேர்ந்திருக்கிறான், அவனை ட்ரெயினிங்குக்கு அனுப்பி இருக்கிறார்களாம். ஜெர்மனியில் விமான நிலையத்திலேயே கார்களைப் பார்த்து அசந்து போய் விட்டானாம், எவ்வளவு விதம், எப்படி ஒழுங்காக சாலையில் எல்லோரும் வேகமாக போகிறார்கள், சத்தமே இல்லாமல் இப்படி இருந்தால் நகரம் மாதிரியே இல்லை என்று வாய் ஓயாமல் உரத்து பேசினான்.

நான் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய அரை மணிக்குள் அவனுக்கு ஞானம் அளிப்பது என்று முடிவு செய்தேன். முதலில் “ இடிக்கிற மாதிரி யாருக்கும் பக்கத்தில் போய் நிற்கக் கூடாது, ஒவ்வொருவருக்கும் பெர்சனல் ஸ்பேஸ் எனப்படும் கற்பனையான கண்ணாடிக் கூண்டுக்கு வெளியேதான் இருக்க வேண்டும்” என்று ஆரம்பித்தேன். அவன் பிரியமாகப் பேசும் போது தொடாமல் எப்படிப் பேச முடியும் என்று எதிர்க் கேள்வி கேட்டான்.

அடுத்தது  நன்றி சொல்வது பற்றி. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் நன்றி சொல்ல வேண்டும், அதற்கு பதில் நன்றி சொல்ல வேண்டும்.  ஜெர்மன் மொழியில் டங்க்க ஷோன் என்று நன்றியும், பிட்ட ஷோன் என்று அதற்கு பதில் நன்றியும் சொல்லியே பாதி உரையாடலை முடித்து விடலாம்.

பசி வேளை, உணவு நினைவு வந்தது. சாப்பிடும்போது வாயை மூடிக் கொண்டு எப்படி மெல்ல வேண்டும் என்று செய்து காண்பித்தேன். அப்படிச் சாப்பிட்டால் , வயிறு நிறைந்து திருப்தியாக இருக்குமா என்று கேட்டான்.

தவிர, அங்கே ரயில் நிலையத்தில், வெளியூர் செல்லும் ரயில்களில் என்று எல்லா இடத்திலும் நின்று கொண்டும், உட்கார்ந்தும்  நேரம் காலம் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். கூடவே காபி, ஜூஸ், கோக் இல்லை பியர் கூட எப்போதும் குடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. இந்த சோடூ என்னிடம் தண்ணீர் பாட்டிலைப் பறித்தது போல யாரிடமாவது செய்தால் விபரீதம் ஆகும். அதனால், யாராவது சாப்பிடும் போதோ, குடிக்கும் போதோ அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது, ஏதாவது தருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று விளக்கினேன். மறுபடியும் அவனுக்கு சந்தேகம், “இப்படிப் பகிர்ந்து கொள்ளாமல் சாப்பிட்டால், அவர்களுக்கு ஜீரணம் ஆகுமா ? “ என்று கேட்டான்.

வண்டி வரப் போகிறது என்று டிஸ்ப்ளே காட்டியது. நான் என்னுடைய பெட்டி, பை சரியாக மூடி இருக்கிறதா என்று பார்த்து எழுந்தேன். சோட்டு “பையா சிறிது தண்ணீர் வேண்டும் “ என்று கையை நீட்டினான்.

“இப்போது வண்டி வந்து விடும், ஒரு நிமிடந்தான் நிற்கும், ஏறிய பிறகு தண்ணீர் குடிக்கலாம்” என்றேன். தவிர என்னிடம் இருந்தே ஒரு மடக்குத் தண்ணீர்தான்.

சோட்டு ஏமாற்றமாக எழுந்து அவனுடைய பெட்டி பைகளை சேகரிக்க ஆரம்பித்தான். வண்டி ப்ளாட்பாரத்தில் வருவதாக அறிவிப்பு செய்தார்கள். குகைக்குள் எதிரொலி மாதிரி பெரிதாக ஒலி வந்தது. நான் எழுந்து பெட்டிகளை இழுத்துக் கொண்டு, சோடூவிடம், ப்ளாட்பாரத்துக்கு அருகே போக்கூடாது என்பதற்காக தரையில் போட்டிருந்த மஞ்சள் நிற கோட்டைக் காண்பித்து, அதற்குப் பின் நிற்க வேண்டும் என்றேன். அவனும் எழுந்து பெட்டிகளை இழுக்க ஆரம்பித்தான்.

வண்டி வந்து நின்றது. கதவைத் திறக்க பட்டனை அழுத்தினேன். 

“பார்த்து ஏறு “ என்று என் பேட்டிகளை ஏற்றி விட்டு திரும்பினேன். சோட்டு இன்னும் நாங்கள் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு அருகிலேயே வேறு எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான். 

அவன் பார்த்த திசையில் படிகள் தானாக இறங்கி வரும் எஸ்கலேட்டர். அதில் ஒரு வயதான பாட்டி, பறவை போல கையை விரித்து, தடுமாறியபடி கூவினார். அவருடைய முன் படியில் தள்ளு வண்டி சரிந்து விழுந்து கொண்டிருந்தது. அதைப் பிடிக்க அவர் குனிந்து முயற்சி செய்ய, நிலை தடுமாறினார். அதற்குள் படிகள் முடிந்து இறங்கும் இடம் வந்து விட்டது, வண்டி அடைத்துக் கொண்டு நின்று விட்டது. இன்னும் ஒரு கணம், பாட்டி அதன் மேல் இடித்து, விழுந்து விபத்து ஆகி இருக்கும். சோட்டு தன்னுடைய பெட்டிகளை விட்டு விட்டு ஓடினான்.

நான் “ ஏய், வண்டி இப்போது கிளம்பி விடும்” என்று கூவினேன் சோட்டு கேட்டதாகத் தெரியவில்லை. நான் உள்ளே ஏறி விட்டேன், கதவுகள் தானாக மூடிக் கொண்டன, வண்டி கிளம்பவில்லை, இப்போதுகூட சோட்டு ஒடி வந்தால் ஏற முடியும். 

அங்கே சோட்டு அந்த ஜெர்மன் பாட்டியைக் கைத்தாங்கலாக பிடித்து, அழைத்து வந்து பெஞ்சில் அமர்த்தினான். பக்கத்தில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அவர் மேல் இடிப்பது போல. மூடிய கண்ணாடிக் கதவையும் தாண்டி குரல் கேட்கும் அளவு உரத்து. பாட்டி தண்ணீர் பாட்டில் எடுத்து குடித்தார், சோட்டு தனக்கும் வேண்டும் என்று கையை நீட்டினான். அரை மணி நேரம் நான் அவனுக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாம் வீண். சோட்டு எல்லா விதிகளையும் மீறிக் கொண்டிருந்தான். 

அந்தப் பாட்டி முகத்தைப் பார்த்தால், அவனுக்கு நன்றி சொல்வது போல இருந்து, அவரும் பேசிக் கொண்டிருந்தார். அவன் என்ன மொழியில் பேசுகிறான் என்று ஆச்சரியப் பட்டேன்.

வண்டி கிளம்பி நகர்ந்தது.

11 Replies to “மொழி”

  1. படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.ஆனால் இவர் சொன்னதெல்லாம் சாதாரண நிலைமைகளுக்குத்தானே?ஆபத்துக்கு எந்த நாட்டிலும் உதவத்தானே செய்வார்கள்?

  2. நன்று. ஜெர்மனியை பற்றி நாலைந்து புத்தகங்களை பார்த்து, வலையில் மேய்ந்து அறிந்து கொள்வதை நாசூக்காக விளக்கியுள்ளீர்கள். நன்றி.

  3. அருமை…அருமை. I was in Germany few times. This story made me to travel back in time and refresh my memory. Chottu is classical example of a typical helping Indian.

    Krishnan hats off to you. I started and completed reading this story at one stretch since it was very interesting and lively.

    God bless you abundantly, my dear friend.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.