ஜப்பானின் நாட்டுப்புறக் கதை ஒன்றில் தான் விரும்பும் மனிதன் தன்னை விரும்புவதற்காக இரவு முழுதும் தூங்காமல் தன் அலகுகளைப் பிய்த்தெறிந்து பகலில் பெண்ணெனக் காட்சி தந்து கவரப் பார்க்கும் கொக்கின் கதையுள்ள புத்தகத்தை பேஸ் பால் தொப்பிகளின் இடையே பரிசுப் பொருள் கடையில் கண்டெடுத்தேன். அன்பிற்காக சிறகுகளை பிய்க்கத் துணிந்த அது, காலைப் பொழுதுகளில் சோர்வாக உணர்ந்தது; மீள மீளப் பெண்ணாவது என்பது, பறக்கத் தெரிந்த, கூரிய குரல் கொண்ட, படைப்புகளின் உணர்வு கொண்ட அதற்கு எத்தனை வேதனை அளித்திருக்கும்?

*
நான் செய்ய நினைத்திருப்பதை, செய்து கொண்டிருப்பதை, தன் திருமண நிச்சயத்தை நிறுத்தியிருந்த வேறெந்தப் பெண்ணும் செய்வார் எனத் தோன்றவில்லை. நிச்சயத்தை நிறுத்திய பத்து நாட்களில் நான் ஒரு அறிவியல் பயணம் செய்ய இருந்தேன். தடைகளுள்ள வடிகட்டியை வாங்கும் போது கூட இப்பயணத்திற்கான மனநிலை என்னிடம் இல்லை.
நெகிழ்வான, முகவாயில் பொருத்தப்படக்கூடிய பெரிய தொப்பியையும், பயணத்திற்கேற்ற கால் சராயும் வாங்கும்போது கூடத் தன் திருமணத்தை பத்து நாட்களுக்கு முன் நிறுத்திய பெண் இவ்வாறெல்லாம் செய்யாமல், துக்கம் அல்லவா காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றத்தான் செய்தது.
பத்து நாட்களுக்கு முன் கத்தி, அழுது, என் திருமணத்தை நிறுத்தி, என் கணவனாக வர இருந்தவருடன் நான் சேர்ந்து வாங்கிய இரு வில்லோ மரங்களுடனும், என் நாயுடனும் நியூயார்க்கிலிருந்து கிளம்பியவள் நான்.
*
டெக்ஸஸில் வளைகுடா கடற்கரையில் கக்கிக் கூவும் குரலுடைய கொக்குகளை நான் எழுதும் ஒரு நாவலின் பொருட்டு கள ஆய்வு செய்ய வந்தேன். கதைப்படி அந்தப் பாத்திரங்கள் இயற்கைச் சூழலில் பறவைகளை அவதானிப்பவர்கள். அது என்ன என்று தெரியாத என்னையும் ’எர்த் வாட்ச்’ குழுவினர் தங்கள் குழுவில் சேர்த்துக்கொள்ளச் சம்மதித்ததில், ’கார்பஸ் க்ரிஸ்டி’யில் நடுக்கத்துடன் தான் நின்றிருந்தேன்-குழுவில் அறிவியலாளர்களும், பறவை ஆர்வலர்களும், பெரிய திறன் மிக்க பைனாகுலரோடு இருப்பார்கள் என்பதே என் அச்சத்தின் காரணம்.
ஜெஃப் நாற்பதுகளில் இருந்தார்-குளிர் காலத் தாடி, இடது தோளில் நியான் பச்சை குத்தியிருந்தார், மகன்களுடன் ஒரு வாரம் முன்பாக ஹாக்கி விளையாடி கையை ஒடித்துக் கொண்டிருந்தார்-சூர்ய கண்ணாடி அணிந்து, பேஸ்பால் தொப்பியை பின் முன்னாக அணிந்து ஒரு பெரிய வெள்ளை வேனில் வந்தார். அதில் படகின் படம் எடுப்பாகத் தெரிந்தது. ’பயாலஜிகல் ஸைன்சஸ்’ என்ற எழுத்துக்கள் வாகனத்தில் ‘ஸ்டென்ஸில்’ செய்யப்பட்டிருந்தன. ’முதலில் ஒரு மதுபானக் கடைக்குப் போய்விட்டு பின்னர் ‘கேம்பிற்குப்’போகலாம் அல்லவா?’ என்று அவர் சொன்னவுடனே நான் அதில் ஒரு அங்கமாகிவிட்டேன்.
*
‘பீட்ரிக்ஸ் பாட்டர்’ கதா பாத்திரங்களைத் திறம்படக்(!)காலுறைகளில் பின்னும் என்னுடைய வருங்கால மாமியாராக வர இருந்தவர் இந்த கிரிஸ்மஸ்சிற்கு முந்தையதில் எனக்கு எது வேண்டுமென்று கேட்டார். என் கணவராக வர இருந்தவர் பெஞ்சமின் பென்னி. என் வருங்கால வீட்டில் என் மதிப்பை என்னுடைய தேர்வு ஏற்படுத்தும் என்பதால் தயங்கி, யோசித்து, சிவந்த அடர்ந்த வாலுடைய அணிலை நான் விரும்பினேன். ’நட்கின்’ என்ற துணிகரமான, பெருமை மிக்க அந்த அணில் அதற்கு விலையாகவே தன் வாலையும் இழக்கும். ஓஹையோவில் நான் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தக் க்ரிஸ்மஸ் உறையில் கையில் விளக்குமாறுடன், குப்பைத்தட்டு வைத்துக்கொண்டு, பிங்க் நிறத்தில் உடையும் அதன் மேல் வீட்டில் அணியும் மேலங்கியுடன் ‘ஹங்கா மங்கா’என்ற பெயர் கொண்ட மூஞ்சூறு இருந்தது. அந்த அம்மா சொன்னார் ’நான் அணில் தான் வரைய நினைத்தேன்; ஆனால் உனக்குப் பொருந்துவது இதுதான் என்பதால். . . ’
தேர்வு செய்ய நான் யார்? நான் ஏன் காலுறைகள் கேட்டேன்?அவர் அருமையானவர்தான்; நான் யார் என்பதை இருவரில் யார் தவறாகப் புரிந்து கொண்டோம்?
டெக்ஸஸில் வளைகுடா கடற்கரையிலுள்ள அரன்சஸ் தேசீய வனவிலங்கு சரணாலயத்தின் அருகிலிருந்த பழைய மீன் கூடாரத்தில் அருகி வரும் கொக்குகளைப் பற்றித் தகவல்கள் சேகரிக்கவும், அவை வாழும் சூழல், அதற்குத் தேவையான பிற புறக் காரணிகள், அவை நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றைப் பற்றி அறியும் முகமாகவும் இந்தப் பயணம். அவை குளிர் காலத்தை இங்கே கழிக்கின்றன. அவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மொத்த அறுநூற்றில் முன்னூறு கொக்குகள் இங்கே இருக்கின்றன.
பெண்கள் தங்குமிடம் சிறிதாக, மர வாசனையோடு, பின்னலிடப்பட்ட படுக்கைகளோடு, தனித்தனியான சின்னக் கட்டில்களோடு இருந்தது. விஸ்காஸினில் பயின்று கொண்டிருக்கும் (ஒரு பறவைப் பெண்ணாக) இருபது வயது தொடக்கத்தில் இருக்கும் அறிவியளாலரான லின்ட்ஸே பறவைகளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவைகளின் கழுத்து, அவைகளின் தோற்றத்தையெல்லாம் கைகளால் அபிநயித்துப் பேசினார். மற்றொரு பெண்ணான ஜேன் ஓய்வு பெற்ற ஒரு நில இயற்பியலாளர். எண்ணை நிறுவனங்களில் வேலை பார்த்து இப்போது உயர் நிலைப் பள்ளியில் வேதியியல் கற்பிக்கிறார். அவர் நல்ல திறமைசாலி, உடல் வலுவுள்ளவர், தேன் மெழுகு நிறத்தவர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட தோழியையும், வயதான அன்னையையும் இரு வருடங்களாகப் பராமரித்தவர். சமீபத்தில் அவர்கள் இறந்துவிட்டனர். ஜேனுக்கு தனக்கென ஒரு வார விடுதலை தேவைப்பட்டது-அவருக்கே அவருக்கென-அம்மா, தோழி, மனைவி, மகள் என்றில்லாமல் தனக்கான ஒரு மாற்றத்தைத் தேடி வந்திருக்கிறார்.
மினசோட்டாவிலிருந்து வந்துள்ள 84 வயதான வாரன், ப்ரும்மச்சாரி; ஜெஃப்புடன் வந்து 5 மணி வாக்கில் எங்கள் பதுங்கு அறைக் கதவைத் தட்டினார். ‘எர்த் வாட்ச்’ குழுவின் 95 பயணங்களில் பங்கேற்றவராம். அவருக்கு பறவைகளைப் பார்ப்பதில் ஆர்வம் இருக்கலாம்; ஆனால் அதைவிட அதிக ஆர்வம் ‘காக்டெயிலில்’ இருந்தது. ‘இது காக்டெயில் நேரமல்லவா?’ என்று கேட்டுக்கொண்டு அவர் முதல் முறை வந்தார். அவரது அடர்த்தியற்ற வெள்ளை முடி முழுதும் உலராத ஈரமாக, ஷாம்பூ வாசனையுடன் இருந்தது. மிக அருமையான விஷயம் என்னவென்றால் நாங்கள் எதிர்பார்க்காத அருமையான ‘ஸ்காட்ச்’ குப்பி அவர் கையில் இருந்ததுதான்!
‘நாங்கள் வித்தியாசமான குழுவினர்’ என ஜெஃப் சொல்கையில் ‘அது எங்களுக்குப் பிடித்திருக்கிறது’ என்று லின்ட்ஸே சொன்னார்.
*
என் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் நடந்த அந்த ஆண்டு முழுவதும் நான் என் காதலனுடன் அழுது கேட்டுப் பார்த்திருக்கிறேன், சண்டை போட்டுக் கேட்டிருக்கிறேன், காரணங்கள் சொல்லியிருக்கிறேன், மன்றாடியிருக்கிறேன்-அவர் என்னிடம் நயமாக நடக்க வேண்டுமென்று, என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டுமென்று, நான் வாழும் விதத்தை அவர் அறிய வேண்டுமென்று.
எனக்குப் பிடித்தமான அந்த சிவப்பு ஆடையை அணிந்து கொண்டு எதிர்பார்ப்பு மிகுதியில் படீரென்று குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வந்த நான்- அன்று ஒரு திருமணத்திற்கு நாங்கள் செல்ல இருந்தோம்-தன் கைபேசியையே பார்த்துக்கொண்டிருந்த அவர் தோள்களைப் பற்றி அழுத்தி’ நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். இந்த உடையில் நான் எப்படி இருக்கிறேன்?’ என்றேன் ஆவலுடன்.
‘போன கோடையில் நீ இதை அணிந்த போது அழகாக இருக்கிறது என்று சொன்னேனே!அதை மாற்றிக்கொள்ளும்படி எதுவும் இல்லையே?அப்படியென்றால் என்னவென்று உனக்குப் புரியாதா?’ என்றார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் கொடுத்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையில் பிரித்தெடுக்கப்படக்கூடிய தாள் இருந்தது. அதை எடுத்துவிட்டு ‘நான் எழுதாததால் புதிது போலவே இருக்கிறது; அப்படியே இருக்கட்டுமே’ என்றார். எங்கள் கோப்பு அலமாரியில் அதை வைத்தார்.
நான் இதைவிட அதிகமாக எதிர்பார்த்தேன்; அந்த ஆசைகளுக்காக என்னையே நான் வெறுத்தேன். தொண தொணக்கும் ஒரு பெண்ணாக சுய –நிறைவு இல்லாதவளாக இருப்பது எனக்கே ஒரு அவமானம்.
இதெல்லாம் பொருட்படுத்தத்தக்கதல்ல. ஏமாற்றமடைய இதிலெல்லாம் ஒன்றுமில்லை. பிறரிடம் எதிர்பார்க்கும் தன்மை என்பது நம் பலவீனம் என்ற புரிதலுடன்தான் நான் என் முப்பதுகளுக்குள் வந்தேன். பலருக்கு இது பொருந்தும் என்றாலும் பெண்களுக்கு இது மிகவும் பொருந்துகிறது. ஆண்களின் விருப்பம் ‘திண்மை’யானது என்றும், அது நிறைவேறாத சந்தர்ப்பங்களில் அது ‘கைகூடவில்லை’ என்றும், அவர்களின் ஆசைகள் அல்லது தேவைகள் ‘நிராகரிக்கப்பட்டுள்ளன’ என்றும் அக்காரணம் தொட்டே அவர்களின் நடத்தை அமைகிறது என்றும் சொல்பவர்கள், பெண்களின் விருப்பங்களைத் ‘தேவைகளால் ஆனவை’ என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். ‘கிடைத்ததைக் கொண்டு வாழும் கடப்பாடு அவளுக்கு மட்டுமே! ‘உன்னைப் பார்த்தேன், உன்னை நேசிக்கிறேன்’ என்று யாரோ சொல்லவேண்டுமென்று விரும்புவது எனது தனிப்பட்ட தோல்விதான். அதை மீற முயல்கிறேன்.
எங்கள் முதல் சந்திப்பிற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து அவர் எங்கள் சகத் தோழியுடன் உறவு கொண்டதைப் பற்றி கேட்கையில், நாம் அறிக்கை செய்து ‘டேடிங்’ செய்யவில்லை என்றும் எனவே நான் அதைப் பொருட்படுத்தக்கூடாது என்றும் சொன்னார். ‘சரிதானே’ என்று எனக்கும் தோன்றியது. இதற்கு சில மாதங்கள் கழித்து ஒரு பெண்ணை புது வருடக் கொண்டாட்டங்களின் போது முத்தமிட்டதைப் பற்றிக் கேட்டதற்கு ‘நாம் இன்னமும் ஒரு தார உறவைப் பற்றி பேசிக்கொள்ளவில்லையே?’ என்றார்; ஆம், அவர் சொல்வது சரிதான். ஒரு மண உறவினைப் பற்றி ஒரு அமைதியான பெண்ணாக நான் பேச விரும்பாத போது ‘நாம் ஒரு உறவில் மட்டும் இருப்போம்” என்றார்.
*
கொக்குகளைப் பற்றிய இந்தப் பயணத்தில் இதை நான் புரிந்து கொண்டேன்-பறவைகளைப் பாதுகாப்பது என்பது அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமில்லை; நாங்கள் நெல்லிகளை, நண்டுகளை, தண்ணீரின் உப்புத்தன்மையைப் பற்றி ஆராய்ந்தோம். உளைச்சேற்றில் நின்று காற்றின் வேகத்தை கணக்கிட்டோம்.
ஒரு இனத்தைக் காப்பது என்பது அதற்கான வாழ்வியல் சூழல், உணவு, தட்ப வெப்பம், தண்ணீர் எல்லாம் சேர்ந்து அமையும் போதுதான் சாத்தியம்.
அரன்சஸ் காப்பகத்தில் சேற்றில் நடக்கையில் உணவு இல்லாதிருப்பதற்கும், உயிரைத் தக்க வைத்துக் கொள்ளத் தேவையான உணவு கிடைக்காதிருப்பதற்குமான வித்தியாசம் மிகச் சிறிதே என உணர்ந்தேன்; ஜனவரி மாதத்தில், கடும் குளிர் நிலவுகையில், மரக்கிளையில் தொங்கும் ஒவ்வொரு வுல்ஃப் பெர்ரியும் மதிப்பு மிக்கது, கிடைக்கும் குடி நீர், உண்ணக் கிடைக்கும் பொருள் எல்லாவற்றின் மதிப்பும் புரிந்தது.
தங்களுக்குத் ‘தேவைகள்’ இருப்பதைப் பற்றி அவமானம் அடைபவர்களுக்கு டெக்சாஸின் வளைகுடா ஒரு மறு சீரமைப்பு மையமாகக் கூடும்.
*

பலமுறை என் கணவராக வர இருந்தவரிடம் சொல்லியிருக்கிறேன்: என்னை நேசிப்பதாக, நான் நன்றாக இருப்பதாகச் சொல்லுங்கள்; அன்பை வெளிப்படையாகக் காட்டுங்கள்
அதற்கு அவர் ‘நான் முன்னரே, ஒருமுறை, இருமுறை சொல்லியிருக்கிறேன்; அதன் தொடர்ச்சி இருக்கிறது எனப் புரிந்து கொள்,’ என்றார்.
‘பயணத்தின் போது எனக்கு தாகம் எடுக்கிறதென்றால் உங்கள் முதுகுப்பையில் உள்ள நீரை எடுத்துத் தராமல், என்ன உனக்கு தாகம் எனக் கேட்பது போல் இருக்கிறது,’ என்றேன்.
அதற்கு அவர்’நீரும், காதலும் ஒன்றல்ல’ என்றார். நான் சரியென ஒத்துக்கொண்டேன்.
அன்பு கிடைக்காமல் போவதை விடத் துக்ககரமான விஷயங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன; பல உயிரினங்கள் அழிகின்றன, புவி வெப்ப மயமாகிறது. உப்புப் பெறாத விஷயங்களுக்காகவா முறையீடு செய்வது என்று என்னை நானே கடிந்து கொண்டேன்.
*
வளைகுடாவில் வேலையில் என்னை மறந்தேன். கொக்குகளின் நீள்கழுத்து, பளீரிட்டு மறையும் சிவப்பு வண்ணம், கம்பீரம், முரட்டுத்தனமாக தங்கள் இறகுகளை ஒழுங்குபடுத்தும் ஒய்யாரம் என்னைக் கவர்ந்தது. அவைகளை வெளியிலிருந்து பார்க்கையில் வாழ்வதற்காகப் போராடும் இனம் எனத் தோன்றவில்லை.
காலைகளில் சான்ட்விட்ச் செய்தோம்; மாலைகளில் சிரித்தோம்; தூய்மையான காலுறைகளைப் பகிர்ந்து கொண்டோம்; சொன்ன கதைகளையே மீளச் சொன்னாலும் பொறுத்தோம். வாரன் நடக்க சிரமப்படுகையில் உதவினோம். இவற்றையெல்லாம் செய்வதில் மகிழ்ந்தோம். அழுக்கிலும், சோர்விலும் கடந்த வளைகுடா வாரமானது என் கல்யாணத்தை நிறுத்திய பின் வந்த துயரைக் கடக்க உதவி, என்னை மகிழ்வுக்குள்ளாக்கியது.
நாங்கள் திரும்பி வரும் போது பாதையில் கறுப்பான, இளஞ்சிவப்பான காட்டுப் பன்றி அன்னைகளையும், கள்ளிப் புதர்களினிடையே சேற்றில் புரண்டு வரும் அதன் குட்டிகளையும் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் எத்தனை பன்றிகளைப் பார்ப்போம் எனப் பந்தயம் வைப்போம். அத்தகைய ஒரு இரவில் சாதாரணமாக நான்கு பன்றிகளைப் பார்ப்பதால், ஐந்து காணப்படும் என நினைத்து மூன்று என்று பந்தயம் வைத்தேன். ஆனால், வாரன் தன்னுடைய பிணைக்கப்பட்ட கைகளைத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு, ’இருபது’ என்றார். அது இயல்வதில்லை என்று நாங்கள் வேனின் இருக்கைகளில் அடித்துச் சிரித்தோம். ஆனால், நாங்கள் இருபது பன்றிகளைப் பார்த்தோம்; இத்தனை குறைவான எண்ணிக்கையைச் சொன்னதற்கு எனக்கு வருத்தமாக இருந்தது- இதில் கூட இப்படியா?
*
என்னுடைய காதலில் நான் ‘குறைவில் தக்கபடி வாழ்வது’ என்பதைத்தான் அறிந்திருந்தேன். என்னைப் பொறாமை பிடித்தவள் என்றும் அந்தப் பொறாமையாலேயே கிறுக்குத்தனம் மிகுந்தவள் என்றும் பரவிய செய்திகளை நான் அறிய நேரும் போது, அவர்களது உறவு தொடர்ந்து ஒரு வருடத்திற்க்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. அவளை நான் சினேகிக்கத்தான் விரும்பினேன்; ஆனால் அவளுக்கு விருப்பமில்லை. அவர் அவளுடன் தொடர்ந்து உடலுறவு கொள்வதை அறிந்த போதே நான் எங்கள் உறவை முறித்துக்கொண்டிருக்க வேண்டும்! என்னைப்பற்றிய வதந்திகளையும், அவர்களின் கள்ள உறவின் வீச்சினையும் நான் அறியும் முன்னர் ஒரு வருடக்காலம் கடந்துவிட்டிருந்தது. எனக்குப் புதிய செய்தியாக இருந்தது, என் காதலனுக்கு பழைய செய்தி! ‘தர்க்கப்படி அதில் கவலைப்பட ஒன்றுமில்லை, ஏன் பழைய குப்பைகளைக் கிளற வேண்டும்?’ என்றார்.
நான் மனதளவில் பலத்த யோசனைகள் செய்தேன். எங்கள் வாழ்க்கைக்காக நான் தர்க்க ரீதியாக சிந்தித்தேன்-என்னை ஏமாற்றியதும், ஆணுறை அணியாமல்அவளுடன் உறவு கொண்டதும் எங்களின் அமையப் போகும் வாழ்விலிருந்து அகற்றப்படும் என நம்பினேன். ஒரு தார உறவு போன்ற சங்கடப்படுத்தும் கேள்விகளுக்கு இடமில்லை. இவைகள் பற்றிச் சிந்திக்கும் பெண்ணல்ல நான்; ‘குறைந்ததே நிறைவு’ என நம்பினேன்.
*
ஒரு நாள் இரவில் நாங்கள் ஒரு மீனவப் படகிலிருந்து சிப்பிக்களை வாங்கினோம். எங்கள் கூடாரத்தின் நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதும், தண்ணீரில் அலைக்கழிவதைப் போலவே உணர்ந்தேன்; காரணம் அன்று வளைகுடாவில் அதிக நேரம் நீரிலேயே இருந்தோம். என் உள்ளங்கைகளில் நழுவிக் கொண்டிருந்த உரிக்கும் கத்தியை ஜேன் வாங்கிக்கொண்டார். நாங்கள் சிப்பிகளைத் தின்றோம்; குடித்தோம். எறிந்த ஓடுகளை ஓடி முகர்ந்த காட்டுப்பூனைகள் மிச்சம் வைத்திருக்கும் உதிரியையும் கேட்டன.
பறவைகளைப் பார்வையிடும் நோக்கியை வைத்து இந்த இரவு நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என ஜெஃபைக் கேட்ட போது அவர் என்னை அருகழைத்தார். வான் நிலா நெருங்கி வந்தாள்.
தொலைவில் தெரிந்த அழகான நிலா இல்லை அவள்; எத்தனையோ காயங்கள், வடுக்கள்!
*
திருமணத்தை நிறுத்தினால், என் வாழ்க்கை பாழாகப் போய்விடும் என நான் பயந்தேன். மாற்ற இயலா தாக்கத்தை அது என் வாழ்வில் ஏற்படுத்தும் என நினைத்தேன். என் அமெரிக்க வாழ்வியல் முறை, மற்றெந்த சோகங்களையும் விட திருமணத்தை நிறுத்துவது என்பது அதிகத் துயரம் என கற்பித்திருந்தது. ஆனால், வளைகுடாவில் நான் அறிந்தது என்னவென்றால் ‘வாழ்வைத் தானாகவே பாழாக்க முடியாது,’ என்பதுதான். காயங்கள் ஏற்படலாம், அவை ஆறலாம், ஆனால் தன் தேவைகளை மறுத்து வாழ்வது என்பது இயலாததே! கொக்கு மனைவியாக இருக்க முடியாதல்லவா?
என் காதலன் என்னை ஏமாற்றினான் என்பதால் நான் பிரிந்தேன் என்று சொல்வது சுலபம்; ஆனால், உண்மை மிகக் கடினமானது. அந்த உண்மை தெரிந்த பிறகும் ஓரிரவு கூட நான் அவரைப் பிரியவில்லையே?
அன்று காலை எனக்குக் கிடைத்த வேலயைக் கொண்டாட நாங்கள் ஒரு பூங்காவில் இருந்த போது அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். எங்கள் நிச்சயத்திற்கு முன்னாடியே அவர் இன்னொரு பெண்ணிடம் தொடர்ந்த உறவில் இருப்பது தெரிந்தும், வைரம் அணிவது என்பது என் கொள்கைக்கு மாறு பாடு என்று சொல்லியும், பிரும்மச்சாரி போல் அவர் ஒரு ரோஜாப்பூ கொடுத்து திருமண சம்மதத்தை கேட்ட போது எப்படி நான் ஒப்புக்கொண்டேன்?
என்னைப் பற்றி சிறப்பாக ஒன்றும் சொல்லவில்லை, ஒரு ‘ப்ரபோசல்’ அதன் அழகியல்களுடன் நான் கற்பனை செய்திருந்தது போல் இல்லை; நாங்கள் பூங்காவிலிருந்து நீள் நடையில் திரும்பி வருகையில் என் எதிர்பார்ப்பிற்காக வெட்கப்பட்ட போதிலும், தூண்டும் கேள்வியைக் கேட்கக் கூடாதென்று நினைத்த போதிலும் நான் கேட்டேன், ’உண்மையாகவா சொல்கிறீர்கள்?என்னை எதனால் காதலிக்கிறீர்கள்?நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஏன் விரும்புகிறீர்கள்?’
‘நீ பியரில் திருப்தி அடைந்துவிடுவாய்; தொந்தரவு செய்யாதவள், உன் தேவைகள் குறைவு; உன்னுடன் வாழ்வது செலவு குறைந்த எளிய வாழ்க்கை,’ என்றார்.
நான் ஒன்றும் பேசவில்லை; சிறிது தூரத்தைக் கடந்த பின்’ நீ ஒரு நல்ல அன்னையாவாய் என்றும். . ’
இப்படிப்பட்ட வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் அதிகம் எதிர்பார்க்க நான் யார்?
எந்தப் பெண் என்னை ஏமாற்றினாளோ அவள் அவரிடத்தில் தொலைபேசியில் நான் அவர்கள் நட்பு தொடர்வதை விரும்பவில்லை என்றும், இனித் தொடர்வது என்பது ஒத்து வருமா என்று கேட்டதாக என் காதலன் என்னிடம் சொன்ன போது நான் விலகி வரவில்லை. எங்கள் திருமணத்திற்கு அவளை அழைப்பதாகச் சொன்ன போது நான் விலகவில்லை; அவள் வரவேண்டாம் என்று நான் சொன்ன போது அவர் எரிச்சலுற்றார்-தன் அம்மாவிற்கும், பிற நண்பர்களுக்கும் அவள் வராததைப் பற்றி என்ன சொல்வது என. அந்தத் தருணத்தில் நான் அவரை அனேகமாக கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன்.
கொடுக்கப்படுவது போதாமல் இருந்தால் நான் அதிகமாக எதிர்பார்க்கிறேன் என்றே நான் நினைக்கிறேன்; ’தேவைகளும், தாகங்களும்’ உள்ள பெண்கள் அவமானப்படக் கூடியவர்கள் என்றும் கருதுகிறேன். இந்த உலகின் முக்கியமான பிரச்னைகளை விடுத்து, கொக்குகளைப் பற்றி எழுதுவதை விடுத்து, இதை எழுதுவதில் வெட்கப்படுகிறேன்.
காலம் கடந்துதான் நான் என் காதலனைப் பிரிந்தேன். எளிய விஷயம் என்பதால் நான் ஏமாற்றப்பட்டதைச் சொன்னேன். ஆனால், என்னைத் தக்க வைத்துக் கொள்ள எது மிகவும் தேவையானதோ அது அவ்வளவு முக்கியமில்லை என்று என்னை நான் சமாதானப் படுத்திக்கொண்டதைச் சொல்வது கடினம். காதலுக்கு அருகதையாகும் விதத்தில் தேவைகள் இல்லாதிருப்பது இன்றியமையாதது என்று எண்ணம் வளர்த்தேன்.
எங்கள் ‘கேபின்’ சமையலிடத்தில், காக்டெய்ல் குடித்த ஓர் இரவில் என் கல்யாணத்தை நான் நிறுத்தி ஒரு வாரம் ஆனதை, அழகான, பொறுமை மிகுந்த, பறவைகளை நேசிக்கும் நல்லியல்பு கொண்ட லின்ட்ஸேயிடம் சொன்னேன். ’என்னுடைய திருமண கவுனுக்காக -அந்த ‘ஹை நெக்’ ஆடையின் அடிப்படைகள் செய்து விட்ட படியால், மணி வேலைப்பாடுகள் செய்யப்படாததால் பகுதிப் பணம்தான் திரும்பும் என்று ‘குரல் செய்தி’ வந்திருந்தது அன்று. நான் சரியான நேரத்தில் சொன்னதால் தைக்கப்படாத பகுதிகளை உபயோகிக்க முடியும் என்றும் அவர்கள் சொன்னார்கள். மூன்று வருடங்களாக நான் பேணி வந்த உறவை கல்யாணத் தருணத்தில் நானே நிறுத்தியதைக் கேட்டால் நல்லிதயம் கொண்டவர்கள் என்ன சொல்வார்கள் என நான் அறிவேன்.
‘எல்லோரும் எதிர்பார்ப்பதைச் செய்யாமல் நீங்கள் செய்திருப்பது துணிகரமானது,’ என்றாள்.
நானும், லின்ட்ஸேயும் பேசும் போது ஜெஃப்பும், வாரனும் கேபின் சமையல் இடத்தின் வாசலில்தான் இருந்தார்கள்; தன் நோக்கியை அவர் கோணங்கள் அமைத்து நிலவைப் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் பேசியது அவர் காதுகளில் விழுந்திருக்கும்; எனினும் என்னை ஒன்றும் கேட்கவில்லை.
என்னைப் படகை ஓட்டச் சொன்னார்.
மறுநாள் நான், லின்ட்ஸே, ஜெஃப் மூவரும் மட்டும் படகில். வேகமாகச் சென்றோம். அவர் லின்ட்ஸேயை படகை ஓட்டச் சொன்னார். நான் சுக்கானை இயக்கினேன். சிறு தீவுகளை, ரோஜா வண்ணமுடைய ‘ஸ்பூன்பில்ஸ்’களை, கடற்பறவைகளை, பசும் புற்களை, வுல்ஃப் பெர்ரிகளைக் கடந்து செல்கையில் சக மனிதருக்கு என்ன தேவையெனப் புரிந்து கொள்வது ஒன்றும் அத்தனை கடினமல்ல என்பது புரிந்தது.
***
இங்கிலிஷ் மூலம்: C.J. ஹௌஸர். இது த பாரிஸ் ரெவ்யூ பத்திரிகையின் வலைப் பக்கத்தில் கிட்டியது. மூலக்கதையை இங்கே காணலாம்.
https://www. theparisreview. org/blog/2019/07/16/the-crane-wife/
C.J. ஹௌஸர் கோல்கேட் பல்கலையில் படைப்பிலக்கியம் எழுதுவதெப்படி என்று போதிக்கிறார். ‘ஃபாமிலி ஆஃப் ஆரிஜின் என்ற தலைப்பில் ஒரு நாவலைப் பிரசுரித்திருக்கிறார். டபிள் டே பிரசுர வெளியீடு.
கதையைத் தழுவி தமிழாக்கம் செய்தவர்: பானுமதி ந.