(1)
பனாரஸ்

வசந்தம் சட்டென நகரத்திற்கு
வருகை தருகிறது
அது வருங்கால்
லஹர்தாராவிலும் மண்டுவாதியிலும்
புழுதிப்புயலொன்று சுழற்றியடித்து
இந்தப் பழம்பெரும் நகரத்தின் நாவை
நுண்மணற்துகள்கள் உறுத்தக்
கவனித்திருக்கிறேன் நான்
உள்ளதெதுவும் வாழ்வின் சுவடுகளுடன் சுடர் மினுக்குகிறது
இல்லதெதுவும் காற்றை ஊதித் தள்ளுகிறது
தசாஸ்வமேதாவுக்கு செல்கிற மனிதன்
படித்துறையின் அடியிலுள்ள கடைக் கல்
சிறிது வழவழப்பேறிக் காண்கிறான்
படிக்கட்டுகளில் உட்கார்ந்திருக்கிற குரங்குகளின்
விழிகளில் விநோதமானதோர் ஈரம் தெரிகிறது
இரவலரின் கிண்ணங்களின் வெறுமையில்
விநோத மாயப் பிரகாசம் ததும்புகிறது
எப்படி இந் நகரம் விழிக்கிறது
எப்படி அது நிரம்புகிறது
எப்படி அது காலியாகிறது
எப்படி அது ஒவ்வொரு நாளும்
கங்கையின் ஒளிவிடும் நீர் நோக்கி
இருளில் சந்தொன்றிலிருந்து
எண்ணிறந்த சவங்களைத்
தன் தோள்களில் சுமந்து செல்கிறது-
காலிக் கிண்ணங்களில் வசந்தம் இறங்குவதை
எப்போதாவது கவனித்திருக்கிறாயா நீ?-
சரியாய் அப்படி இருக்கும் –
இந் நகரத்தில்
மெல்ல மெல்லத் தூசி பறக்கிறது
மெல்ல மெல்ல மனிதர் நடக்கின்றனர்
மெல்ல மெல்ல ஆலயமணிகள் அடிக்கின்றன
மெல்லமெல்ல அந்தி சாய்கிறது
அதன் மெல்ல மெல்ல
இயங்குகதியின் கூட்டு லயத்தோடு
நகரத்திருக்கிற அவ்வளவு ஆழ்ந்த பிடிப்பால்
எப்போதும் எதுவும் வீழ்கிறதில்லை
எதுவும் உண்மையிலே நகர்கிறதில்லை; அதிர்கிறதில்லை
ஒவ்வொரு பொருளும் எங்கிருந்ததோ அங்கேயே இருக்கிறது.
கங்கையும் அப்படியே.
படகு கட்டப்பட்டு நிலைகொண்டிருக்கிறது
துளசிதாஸின் பாதரட்சைகள்
நூற்றாண்டுகளாக குறிப்பிட்ட ஒரே இடத்தில்
நிலைபெற்றிருக்கின்றன
உன்னைத் தெரிவிக்காது ஒரு நாள்
உதயத்திலோ, அந்தியிலோ இந் நகரத்தில் நுழை
ஆரத்தி விளக்குகளின் ஒளியில்
சடுதியில் கவனி அதை
அதன் கட்டமைப்பு ஆச்சரியமான ஒன்று
அதன் பாதி தண்ணீரில்
பாதி மந்திரத்தில்
பாதி பூவில்,
பாதி சவத்தில்
அதன் பாதி துயிலில்
பாதி சங்கில்
தியானித்துக் காண்
அதன் பாதி உள்ளதாயும்
மறுபாதி இல்லதாயும்
நீ காணலாம்
உள்ளதாய் இருக்கும் பகுதி
தூண்களின்றி நிற்கிறது
இல்லதாய் இருக்கும் பகுதி
சாம்பல் மற்றும் ஒளியின் உயருயர் தூண்களில்
தீயின் தூண்களில்
நீர், புகை மற்றும் நறுமணத்தின் தூண்களில்
உயர்த்திய மனிதக் கைத் தூண்களில்-
தாங்கப்பட்டிருக்கிறது
நூற்றாண்டுகளாக இந் நகரம்
உறைந்திருக்கிறது
இந் நிலையில்-
கங்கை நீரில்
ஒரு காலில் நின்று
மற்ற காலைப் பற்றி
முற்றும் உணர்வின்றி
தென்படாததோர் சூரியனுக்கு
என்றென்றும் ஓர் ’அர்க்கியத்தைச்’
செலுத்துவதாய்-
(2)
அந்த மனிதனைப் பார்

தெருவைக் கடந்து கொண்டிருக்கிற
அந்த மனிதனைப் பார்
தெரியாதெனக்கு
எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறான் அவன்-
எங்கேகுகிறான் அவன் என்பதை இயம்புவதும்
கடினமானது
ஆனால்
இவ்வளவு மட்டும் தெளிவானது-
தெருவின் இப் பக்கம் நின்று கொண்டிருக்கும் அவன்
மறுபக்கம் கடக்க விழைகின்றான்
ஒரு கால் தூக்குகிறது
மற்றது தூக்கக் காத்திருக்கையில்
கேட்க முடிகிறது என்னால்
உயர்த்திய கால்
மற்றதிடம் கூறுவது-
”அவசரம், அவசரம் – இஃதோர் தெரு ”
ஓரிடத்திலே எப்போதும்
கிடக்கின்ற ஒன்று தெரு-
நகர்வதில்லை அது என்பதால்
ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு முறையும்
தனக்குரிய தெருவை
ஒரு புதிய தொடக்கப் புள்ளியிலிருந்து தொடங்கி
கடக்க வேண்டியிருக்கிறது
ஆகையால்
கடக்கக் காத்திருக்கும் அந்த மனிதன்
ஒருவேளை மூவாயிரத்து எழுநூற்று முப்பத்தேழாவது முறையாக
அதே தெருவை இன்னொரு முறை கடந்து கொண்டிருக்கலாம்
கடப்பான் நாளை மறுபடியும்
அதற்கடுத்த நாள் மறுபடியும்
எதிர்காலத்தில் எண்ணிலடங்கா ஆண்டுகளிலும்
அதே தெருவை அவன் திரும்பத் திரும்பக் கடப்பதற்கு-
வேறெத் தெருவையுமல்ல
அந்த ஒரு தெருவைக்
கடந்து கொண்டே இருப்பதற்கு
சாத்தியமுள்ளது
பார்- பார்-
ஆர்வமும் ஆத்திரமுமாய் அங்கு
இன்னும் நின்று கொண்டிருக்கிறான் அவன்-
இது நிறைவாயிருக்கிறது-
நிறைவாயிருக்கிறது-
எனக்கு
மனிதர்கள் தெருவைக் கடப்பது பற்றி
நான் எப்போதும் நிறைவாய் உணர்கிறேன்
ஏனென்றால் தெருவின்
இப் பக்கம் உள்ள உலகம்
மறுபக்கம் உள்ள உலகை விடச்
சிறிது மேலாய்
வெகுவாய் இருக்கலாமென்ற
ஒரு வித நம்பிக்கையைத்
தருகிறது எனக்கு
அது
(3)
மண்வெட்டி
முக்கியக் கதவருகில்
சாய்த்ததை வைத்து விட்டு
சென்று விட்டான் தோட்டக்காரன்.
விகாரமாகத் தெரிகிறது
அங்கிருப்பது அது
எனக்கு
நாள் செல்லத்
தேய்கின்ற ஒளியில்
அதன்
விநோதமான
வளைவும்
தூசியின் காந்தியும்
ஈர்க்கின்றன என்னை
செய்ய வேண்டிய வேலையைச்
செய்தாகி விட்டது
வேர்களோடிய வரைக்கும்
மண் அகழ்ந்தாகி விட்டது
சவால் விடுவது போல் கதவருகில் நிற்கும் அது
இப்போது முற்றிலும் அமைதியான மண்வெட்டி
அதை எடுத்து
உள்ளே கொண்டு வந்து
ஏதோ ஓர் மூலையில் வைக்க வேண்டுமென்று
எண்ணுகிறேன்
எப்படியிருக்கும் வரவேற்பறையில்,
யோசிக்கிறேன்-
இருக்கலாம்-
ஆனால், மண்வெட்டியல்ல
சில சிற்றலங்காரப் பொருட்கள்-
கற்றாழைச் செடியொன்று அங்கே தழைக்கும் போது
ஏன் மண்வெட்டி இருக்கக் கூடாது?
ஆனால்-
இல்லை, எனக்கு நானே கூறிக் கொண்டேன்
ஒரு மண்வெட்டியை
வரவேற்பறையில் வைத்திருக்க முடியாது
வீட்டின் ஒழுங்கிசைவை நிலைகுலைக்கக் கூடும் அது
அடுத்து
சமயலறை பற்றி சிந்தித்தேன்
ஆனால், அங்கு கழுவிப் புதிதாக்கப்பட்ட
புனிதத்தின் ஆழ்ந்த பிரமிப்பிருந்தது
அதன் முன்
மண்வெட்டி ஒன்றும் செய்ய இயலாததாய்த்
தோன்றுவதாய் யோசித்தேன் நான்
ஆகையால், நான்
என்ன செய்ய வேண்டும் பிறகு, வியந்தேன்,
யோசனை தாக்கிய சமயத்தில்:
ஏன் அதைப் படுக்கையின் அடியில் தள்ளி
இருளில் ஒளித்து வைக்கக் கூடாது?
இது உற்சாகத்தை தணித்து விடும்
ஆனால், ஒருவேளை
காற்றில் மாயநெடி நிரப்பி
வீடு வெம்மையுற மட்டுமே உதவக் கூடும்
ஆனால்
ஒரு மண்வெட்டி
படுக்கையின் அடியிலா?
அந்த வியத்தகு படிமத்தையெண்ணி
உரக்கச் சிரித்தேன்
கடைசியில்
மண்வெட்டி முன் சென்று நின்றேன்
சிறிது நேரம் மண்வெட்டிகளைப் பற்றி சிந்தித்தேன்
அப்படி சிந்தித்த போது,
என் தோளின் மேல்
மண்வெட்டியொன்றை ஏந்தி
ஏதோ ஒரு கட்புலனாகாத நீதிமன்றத்தில்
மண்ணுலகில் மண்வெட்டிகளின் இருத்தலுக்கு
சான்று தந்து
நின்று கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்
ஆனால்,
எங்கு தோட்டக்காரன் அதை விட்டு விட்டு-
விட்டுச் சென்றானோ
அங்கேயே கேள்வி இன்னும்
தொக்கி நின்றது.
எனக்கான நூற்றாண்டின் மிகக் கடினமான கேள்வி:
இப் பூவுலகில்
மண்வெட்டியை வைத்து
என் செய்ய?
இருட்டேற
மண்வெட்டி தன் பரிமாணங்களில்
இருளில் வளர்ந்தது
இப்போது அதைக் கதவருகே விட்டு வைப்பது
ஆபத்தானதாயும்
பாதையில் வெளியே வைத்திருப்பது
சாத்தியமற்றதாயும்
தோன்றிற்று.
என் இல்லத்தில்
மண்வெட்டிக்கு
ஓரிடமும் இல்லை
(4)
வார்த்தைகள் குளிரால் இறப்பதில்லை
வார்த்தைகள்
குளிரால் இறப்பதில்லை
கோழைத்தனத்தால் இறக்கின்றன
வார்த்தைகள் பல்சமயம்
அழிகின்றன
புழுக்கமான சூழலில்
ஒரு முறை
ஒரு வார்த்தையைச் சந்தித்தேன்
என் கிராமத்தின்
நதிக்கரையோரமிருக்கும்
சதுப்பிலுள்ள
ஒளிமிக்க செம்பறவையொன்று போலிருந்தது அது.
அதை இல்லத்திற்கு கொண்டு வந்தேன்
ஆனால்
மரக்கதவுச் சட்டத்தை
எட்டியவுடனே
விநோதமானதோர் வெருண்ட பார்வையை
என் மேல் வீசி விட்டு
தன் கடைசி மூச்சை விட்டு விட்டது அது
அதன் பிறகு
வார்த்தைகளைக் கண்டு அஞ்ச ஆரம்பித்தேன்.
அவற்றை எதிர்கொள்ள நேரின்
அவசரமாய்ப் பின்வாங்கினேன்
ஒளிமயமான வண்ணங்களில் உடுத்தி
முடியடர்ந்த ஒரு வார்த்தை
முன்னேறி எனை நோக்கி வரக் கண்டால்
என் விழிகளைப் பல்சமயம் வெறுமனே
மூடிக் கொண்டேன்
மெல்லச்
சிறிது காலம் கழித்து
இந்த விளையாட்டை இரசிக்க ஆரம்பித்தேன்
ஒரு நாள்
வைக்கோல் போரில் ஓரரவு போல்
ஒளிந்திருந்த
ஓர் அழகான வார்த்தையை
எக் காரணமுமே இல்லாமல்
கல்லால் தாக்கினேன்.
இந்நாள் வரை
அதன் அழகான சுடர்வீசும் விழிகளை
நினைவு கூர்கிறேன்
காலப் போக்கில்
என் அச்சம் தணிந்திருக்கிறது
இப்போதெல்லாம்
வார்த்தைகளை எதிர்கொள்ளுகையில்
நாங்கள் ஒருவரையொருவர்
விசாரித்துக் கொள்ளும் விதத்திலிலேயே
எப்போதும் முடிந்து விடுகிறது.
இப்பொழுது
அவற்றின் ஒளிவிடங்கள் பலவற்றை
அறிந்திருக்கிறேன்
அவற்றின்
வகைவகையான வண்ணங்கள் பல
பரிச்சியமாகியிருக்கின்றன எனக்கு
உதாரணமாக, எனக்குத் தெரியும் –
மிக எளிய வார்த்தைகள்
சாம்பல் மற்றும் பழுப்பானவை.
பேரழிவுடையவை
வெளிர் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பானவை
நம் துயர்மிகு கனத்த கணங்களுக்காக
நாம் காத்து வைத்திருக்கும்
வார்த்தைகள்
அப்படிப்பட்ட தருணங்களில்
வெறும் அருவருப்பாகத் தோன்றும்
வார்த்தைகளே.
குப்பையில் தூக்கியெறியப்பட்டு கிடக்கும்
அழகற்ற வண்ணங்களில் உடுத்திய
முற்றிலும் பயனில் வார்த்தைகளே
ஆபத்துக் கணங்களில்
மிகவும் நம்பத்தக்கவையாய்
நான் கண்ட உண்மையைக் கொண்டு
என் செய்ய நான்
இப்பொழுது
நேற்று
நிகழ்ந்தது இது-
கட்டுடல்நலனும் கவர்ச்சியுமுள்ள அரைடஜன் வார்த்தைகள்
சட்டென்று ஓர் இருள் நிறைந்த தெருவில்
சூழ்ந்து கொண்டன என்னை.
அதைரியமானேன் நான்
சிறிது சமயம்
பேச்சற்று
வேர்த்து தெப்பமாகி
நின்றேன் அவற்றின் முன்
ஓடினேன் பிறகு
தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”
(5)
உடைந்து கிடக்கும் டிரக்
கடைசி மழையிலிருந்து அங்கிருக்கிறது அது-
உடைந்து கிடக்கும் அது
அங்கு நின்று கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன்
அது துளிர்ப்பதை
ஆச்சரியத்துடன் நோக்கியிருக்கிறேன்
காண்கிறேன் நான்
கொடியொன்று
செலுத்தும் சக்கரத்தோடு
சுற்றி வளைத்திருக்க-
சிற்றிலையொன்று
’ஒலிப்பான்’ அடுத்து
ஏதோ அதை ஊதிமுழக்க விரும்புவது போல
கீழ் தொங்குகிறது-
சத்தமற்ற ஓர் ஒட்டுவேலையில்-
ஒரு திருகாணி தளர்ந்து
ஒரு கம்பி இறுக்கப்பட்டு
டிரக்
கிரீச்சிட்டும் முனகிக் கொண்டுமிருக்கிறது
உடைந்து கிடக்கும் டிரக்
புல்லிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
புல் இப்பொழுது
சக்கரங்களை மாற்றுவதற்கு
ஆர்வமுள்ளதாய்த் தோன்றுகிறது
எனக்கு முற்றிலும் ஆறுதலாயிருக்கிறது கற்பனை செய்ய-
நாளைக்குள் எல்லாமே அறுதி செய்யப்படும்
எழுந்து நான்
சட்டென்று ஒலிப்பானின்
எக்காளத்தைக் கேட்க
டிரக்
டின்சுகியவுக்கோ போகஜானுக்கோ
முழங்கிக் கொண்டு புறப்பட—–
அந்தி இறங்கும்-
உடைந்து கிடக்கும் டிரக்
வெறித்தென்னை நோக்கி இன்னும்
நின்று கொண்டிருக்கிறது அங்கு
வியக்கிறேன் நான் –
அங்கு அது நின்று கொண்டிருக்காமல் இருந்திருந்தால்
எவ்வளவு கடினமாயிருந்திருக்கும் எனக்கு
இது என் நகரம்
இவர்கள் என் மனிதர்கள்
இது என் உறையுள்
என்றறிய
(6)
1947-ஐ நினைவு கூர்ந்து
உனக்கு நினைவிருக்கிறதா, கேதார்நாத் சிங்
நூர் மியானை
கோதுமை நிற நூர் மியானை
குட்டையும் கட்டையுமான நூர் மியானை
ராம்கர் சந்தையில் அஞ்சனத்தை
நாள் முழுதும் விற்று விட்டு
வீட்டுக்கு கடைசியாய் வந்து சேரும் நூர் மியானை-
உனக்கு ஏதாவதாவது நினைவிருக்கிறதா, கேதார்நாத் சிங்
உனக்கு நினைவிருக்கிறது
மதார்ஸா
புளியமரம்
உள்ளூர் இமாமின் எஸ்டேட்
உனக்கு நினைவிருக்கிறது
பத்தொன்பதுக்கான
பெருக்கல் வாய்ப்பாடு
முதலிலிருந்து முடிவு வரை-
ஆனால் மறந்து விட்ட
உன் குழந்தைப் பருவச் சிலேட்டில்
கூட்டியும் கழித்தும்
கணக்கிட முடியுமா நீ
ஏன்
ஒரு நாள்
சட்டென்று உன் சேரியை விட்டு நூர் மியான்
சென்று விட்டான் என்பதை-
உனக்குத் தெரியுமா
எங்கிருக்கிறான் அவன்
இப்பொழுது-
டாக்காவிலா அல்லது மூல்டானிலா
உரைக்க முடியுமா நீ
பாகிஸ்தானில்
எத்தனை இலைகள்
ஒவ்வொரு வருடமும் வீழ்கின்றன
ஏன் மெளனமாய் இருக்கிறாய் , கேதார்நாத் சிங்
அல்லது
பலவீனமானதா உன் எண்கணிதம்
(7)
சிருஷ்டியின் மீது கூர்ந்து கவனித்து
மரத்தாலியன்ற அதன் வேர் மிதியடிகள் மீது
ஒரு சிறு தள்ளாட்டத்துடன்
நம் முன் நின்றது அது-
முக்திபோத்தின் கவிதையில் வரும்
பிரம்மராட்சசன் போல்
வெகுதொலைவு அப்பால் விரியும்
நிலப்பரப்பின் வாயிற்காவலன் அது –
ஓர் உலர்ந்த நொய்மையான உயர்ந்த மரம்
உச்சியில் மூன்று அல்லது நான்கு இலைகள் படபடக்க-
எத்தகு கம்பீரமான காட்சி-
உயர மூன்று அல்லது நான்கு இலைகள்
ஓர் உலர்ந்த மரத்தின் மீது படபடக்க
அந்த வறண்ட கொடும்பாலையில்
சிருஷ்டியின் மீது
மூன்று அல்லது நான்கு இலைகள்
கூர்ந்து கவனித்து-
(8)
ஓ, பூவுலகே எங்கிருக்கிறது உன் வீடு
வாழ்வின் முடிவற்ற கனிமங்களின் சுமையில் குலுங்கி
பிறப்பிக்க இறுதியற்ற ஏக்கங்களால் நிரம்பி
ஓ, பூவுலகே
ஓ தீச்சட்டிக்குள்
ஓ பசிக்குள்
ஓ தாகத்திற்குள்
ஓ மஞ்சளுக்குள்
ஓ புல்லுக்குள்
ஓ தன் ஒவ்வொரு மீட்சியிலும்
அதே கட்டற்றுடனும்
அதே தொடக்கத்திலிருந்த புத்துணர்ச்சியுடனுமுள்ள
ஒரு வண்ணமயமான உன்னத நிலையாமைக்குள்
ஓ எங்கிருந்தோ எடுக்கப்பட்ட
வறட்டிகளின் எரி மேல்
யாரோ ஒரு முதல் மனிதனின் முதல் ரொட்டி
வேது வைக்கப்பட
ஓ, பூவுலகே
ஓ, என் சக நடனரே,
எங்கிருக்கிறது உன் வீடு!
(9)
காலத்தோடு என் முதல் எதிர்கொள்ளல்
எப்போது காலத்தோடு என் முதல் எதிர்கொள்ளல் நிகழ்ந்தது?
எண்ணுகையில் அதை
என் முதற் பள்ளியின்
முன்ஷி ஹுலாஸ் ராமை நினைவுகூர்கிறேன்
மதிய இடைவேளைக்கு முன்னர்
கூறுவான் அவன்
குழந்தைகளே, கிணற்றடிக்குச் செல்லுங்கள்
நண்பகற் பூக்கள்
பூத்திருக்கின்றனவா இல்லையாயென்று
கவனியுங்கள்
இடைவேளை 12-க்கு தொடங்கும்
நண்பகற் பூக்கள் சரியாக 12-க்கு
பூக்குமென்று அவன் நம்பிக்கை
இப்பொழுது,
அக் குறுங்குறு பூக்களுக்கும்
கடிகாரம் அடிக்கும் 12-க்கும்
என்ன சம்பந்தம்
நாங்கள் ஓர் அற்புதமாய்
அதை உணரத் தலைப்பட்டோம்
பின்னரே அறிந்தேன் நான்
காலம் என்னுள் இப்படி
குறுங்குறு பூக்கள் மற்றும்
கிணற்றின் மருங்கு சேற்று நீரூடாக
நுழைந்ததென்று
அது தான் என் கைக்கடிகாரம்
தாறுமாறாய் ஓடக் காரணம்
இப்பொழுது
யாரை
நான் வினவ
இதுவில்லை என் காலம்
பின், என் கைக்கடிகாரத்திற்குள் ’டிக் டிக்’கென்று
ஒலித்துக் கொண்டே இருக்கின்ற
காலம் யாருடையது?
(10)
பிற்பகல்
கதிரொளிக்கும்
இலைகளுக்கும்
இடைநிகழ் உரையாடலில்
கவிதையின் ஒரு வரி மூடி மறைக்கப்பட்டது
மேற்செல்லும் கதிரோனுக்கும்
சரிவில் கீழிறங்கும் மனிதனுக்கும்
இடையில் விடப்பட்டிருப்பது
வெறும் ஓரிலையின் அகலமே
வீதியில்
இச் சமயங்களில்
ஒருவருமில்லை
வேறெவருக்கும் சமகாலத்தவராய்
குறிப்புகள்:
இந்தியின் மகத்தான கவிதாளுமைகளில் ஒருவர் கேதார்நாத் சிங் (1934-2018). அவர் கவிதைகள், மேற்போக்காக ஏமாற்றி விடும் எளிமையில் ஆழங் கொள்ளும் சாதாரண அன்றாட வாழ்க்கைப் படிமங்களில் பின்னப்படும் அசாதாரணமான அர்த்தங்களில், நுணுக்கமான ஸர்ரிரியலிசத் தன்மையும் கூடி அலாதியானதோர் கவிதானுபவத்தைத் தருகின்றன. ஏராளமான விருதுகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன. அவற்றில் சாகித்திய அகாடமி விருதும் (1989 ), ஞானபீட விருதும் (2013) அடங்கும்.இங்கு ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பத்து கவிதைகளும் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சாகித்திய அகாதமியின் வெளியீடான Banaras and Other Poems , Kedarnath Singh Editted by K.Satchidanandan , Sakitya Akademi(2015) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இந் நூலில் கவிஞர் கே.சச்சிதானந்தனின் கேதார்நாத் சிங்கின் கவிதைகளைப் பற்றிய விரிவான கட்டுரையொன்றும் இடம் பெற்றுள்ளது.
இந்த மொழிபெயர்ப்பில் இருக்கும் மண்வெட்டி (Spade), உடைந்து கிடக்கும் டிரக் (Broken Down Truck) என்ற இரு கவிதைகளில் கேதார்நாத் சிங்கின் கவிதையுலகை அலசுகிறார் அவர். இம் மொழிபெயர்ப்பைப் பற்றிய எச்சரிக்கையும் தேவை. கேதார்நாத் சிங்கின் கவிதைகளுக்கே உரித்தான நிறுத்தற்குறிகளில்லாமை (without punctuations) ஆங்கில மொழிபெயர்ப்பில் அடியொற்றியுள்ளது போலவே தமிழாக்கத்திலும் அடியொற்றியுள்ளது. ஒரு மொழிபெயர்ப்பிலிருந்து இன்னொரு மொழிபெயர்ப்பென்பதால் எந்த அளவு மொழிபெயர்க்கப்பட்டவை மூலக்கவிதைகளுக்கு –வாக்கியங்களின் எண்ணிக்கை, வார்த்தையமைப்பு, அதன் நிரல்- போன்ற வடிவ ரீதியில் நெருக்கமாயும், நியாயமாயும் இருக்குமென்பது சந்தேகம். ஆனால் இக் குறையை மீறி இம் மொழிபெயர்ப்புக் கவிதைகள் எப்படியோ நம்மைத் தொடுகின்றன, நெருடுகின்றன என்றுணர்கையில், மூலக் கவிதைகளின் உள்ளான்மா சிதைவுபடவில்லை என்ற புரிதலில் அவற்றின் வெற்றியும், ஒரு மகத்தான கவிதாளுமையின் பெற்றியும் பெறப்படும்.
கவிதை1: லகார்த்தாராவும் (Laharatara) மதுவதியும் (Maduvadih) வாரணாசி நகரின் பகுதிகள்.
கவிதை7 : முக்திபோத் (Muktibodh)- கவிதை, கட்டுரை, இதழியல், கதை என்று பல்துறைகளில் தடம் பதித்தவர். இந்தி நவீனக் கவிதையுலகில் முன்னோடி. இவரின் பிரம்மராட்சசன் என்ற படைப்பு பரீட்சார்த்த ரீதியில் முக்கியமானதாய்க் கருதப்படுகிறது (Source: Wikipedia)
தமிழாக்கம்: கு.அழகர்சாமி