கா மென் – ரேச்செல் ஹெங்

This entry is part 1 of 2 in the series கா மென்

“gahmen /gah-mən, ˈgɑmən/ n. [repr. a pronunciation of English: government]”
www.singlishdictionary.com

கா- மனிதர்கள்

குறுக்கு வாட்டில் நாற்பத்து இரண்டு கிலோமீட்டர்களும், அகலத்தில் முப்பது கிலோ மீட்டர்களும் இருந்த அந்தத் தீவின் விளிம்புகளில் மெழுகுப் பச்சையான காடு கலங்கலாக இருந்த கடலுக்குள்ளும் கசிந்திருந்தது. நிலத்திற்கும், கடலுக்கும் இடையே கடும் பழுப்பு நிறத்தில் சதுப்பு நிலம், வாயுக்களை ஏப்பம் போல வெளி விடும் அடர்ந்த துண்டான நிலம். அந்தச் சதுப்பு நிலம் முழுதும் கண்டல் காடு நிரம்பி இருந்தது. அங்கு, அடர்ந்த சதுப்புச் சேற்றின் ஊடாக ஆகாயத்தை நோக்கி நீட்டி இருக்கும் நூற்றுக் கணக்கான சிறு கரங்களைப் போல, காந்தள் செடிகளின் வேர்கள் மேல் நோக்கி வளர்ந்தன. அன்னிய தேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தக் காட்சியை நரகத்தின் ஆறுகளோடு ஒப்பிடத் தோன்றி இருக்கலாம். ஆனால் அந்தத் தீவில் வாழ்வோருக்கு, இவை அலையாத்திக் காடுகள், வேறேதும் இல்லை, பிராணவாயு அரிதாகக் கிட்டும் மண்ணில் இவை அவசியமாக இருந்தன. 

அந்தத் தீவு போதுமான அளவு அன்னியர்களைக் கண்டிருந்தது. ஒப்பீட்டில் மிகப் பெரிய நாடு ஒன்றின் கையிடுக்கில் ஒண்டி இருந்த அது, ஒன்றை ஒன்று குறுக்கிட்டுச் செல்லும் வணிகப் பாதைகளின் மையத்தில் மிக வசதியாகப் பொருந்தி இருந்தது. நெடுநாட்களாக அது வியாபாரிகள், படைவீரர்கள், இளவரசர்கள் மேலும் திருடர்கள் வந்து சேரும் இடமாக இருந்தது. எனவே, கா- மனிதர்கள் இந்தத் தீவு ஒரு தூங்கி வழியும் கிராமம் என்று சொன்னாலும்- எப்போதும், பல நூற்றாண்டுகளாகவே- அது முழுதும் உண்மையில்லை. 

கா-மனிதர்கள் வெள்ளை சட்டையும், வெள்ளைக் கால் சராயும் அணிகிறார்கள், அவை வெப்ப மண்டலத்துச் சூரிய ஒளியில் நீலமாக மின்னுகின்றன. அவர்களின் சட்டைகள் அரைக்கை கொண்டவை; பால்பாயிண்ட் பேனாக்களைச் சட்டைப் பைகளில் வைத்திருக்கிறார்கள், பளபளப்பான கருப்புக் காலணிகளை, சிறிய சுத்தமான பாதங்களில் அணிகிறார்கள். கா மனிதர்களின் அடையாளச் சின்னம் ஒரு வெள்ளை நான்கு முனை நட்சத்திரம், ஒரு சிவப்பு வட்டத்தை அது பிரிப்பது போல அமைந்திருக்கும். 

***

லீ ஆ ஹுவாத்தின் மகன் லீ ஆ பூன், பதினெட்டு வயதானவன், முகத்தில் சிவப்புப் பள்ளங்கள் இருப்பது அதை உறுதி செய்யும், தன் வீட்டுக்கு வெளியில், கா மனிதர்கள் சதுப்பு நிலத்தின் காந்தள் காடுகளை நோக்கி இறங்கிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சைக்கிள்களில் வந்திருக்கிறார்கள், நெற்றியில் பளபளப்பு, வியர்வையால் ஒட்டிய சட்டைகளூடே உடல்கள் தெரிகின்றன. அவன் பார்க்கையில், சுருளாக இருந்த பெரிய காகிதங்களை பிரிக்கிறார்கள், அவற்றில் உள்ள கட்டங்களும், வளையும் கோடுகளுமாக, பூமியின் மீது கண்ணுக்குப் புலனாகாத குறியீடுகளை அவை சுட்டுகின்றன. அவர்கள் கண்களைக் காத்துக் கொண்டு, இடுக்கிய வண்ணம், வானை நோக்குகிறார்கள். மெல்லிய கருப்பு முடிகளின் கீழே அவர்களின் தலைகள் எண்ணெய்ப் பளபளப்பில் மின்னுகின்றன. 

தன்னருகே உள்ள தரை அசைந்து நீரில் பலத்த ஒலியோடு ஏதோ குதிப்பதைக் கேட்டதும், அவர்களில் ஒருவர் கூச்சலிடுகிறார், அவருடைய சக ஊழியர்கள் அங்கிருந்தது ஒரு சேற்றில் வாழும் மீன் வகை என்று அறிந்து சிரிக்கிறார்கள், அது பார்க்கப் புராதனப் பிராணியாக இருக்கிறது, கண்களைப் பார்த்தால் தீமையின் வடிவு கொண்டது. உடனே வேலையைப் பார்க்கத் திரும்புகிறார்கள். கா- மனிதர்கள் உழைப்பாளிகள்; சதுப்பு நிலத்தின் கேளிக்கைகளில் விரயம் செய்ய அவர்களுக்கு நேரமில்லை. 

“ஆ பூன்! மறுபடியும் கனாக் காணறியா! உன் தலையை நான் பிளக்கறத்துக்கு முன்னாடி உன் வேலையை முடிடா, பையா,” வீட்டுக்குள்ளே இருந்து அம்மா அவனிடம் கத்துகிறாள். 

கண்டலுடைய விளிம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த அட்டப் பனை ஓலைக் கூரை வேய்ந்த வீட்டில் அவர்கள் வசிக்கிறார்கள். அங்கு நிலம் சற்றே காய்ந்த தரையாக இருப்பதால் வீட்டைச் சுமக்கும் மரத் தூண்களை மண்ணுக்குள் ஆழமாக அடித்து இறக்க முடிகிறது. ஆ பூன் வீட்டுக்கு வெளியே சிறு புல் வெளியில் உட்கார்ந்திருக்கிறான். தான் செடுக்கு நீக்க வேண்டிய மீன் வலைகளை நோக்கித் தன் தலையைக் குனிந்து அமரும் அவன் கைகள் வேலையில் இறங்குகின்றன. 

ஆனால் அவன் இன்னும் கா மனிதர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறான், அவர்களுடைய கஞ்சி முடமுடப்பில், அப்பழுக்கற்ற துணியில் தைத்த சட்டைகளால், காற்றில் தீர்மானமாக கைகளால் வெட்டிப் பேசும் முறையால், கைகளில் வைத்திருக்கும் சிவப்புப் ப்ளாஸ்டிக் அட்டைகளால் எல்லாம் வசியத்துக்குள்ளாகி இருக்கிறான். திருகலும் வளைசலுமாக எதிரே அடர்ந்திருக்கும் காந்தள் காட்டின் எதிரே, கடற்கரை மண்ணில் வந்து அறையும் மங்கிய சாம்பல் நிற அலைகளின் பின்னணியில் இவர்கள் நேரவியலாத காட்சியாகத் தெரிகிறார்கள். அவ்வப்போது, காற்று அவன் அமர்ந்திருக்கும் இடத்துக்கு அவர்கள் பேசும் ஒலிகளைக் கொணர்கிறது. ஆழ்ந்த ஆண் குரல்களின், பழக்கமில்லாத பிரமாணங்களின் துண்டு ஒலிகள்.

சந்தேகமின்றி அவர்கள் இங்கிலிஷில் பேசுவார்கள். இங்கிலிஷை நன்கு தெரிந்து கொண்டிராமல் கா-மனிதராக ஒருவர் ஆக முடியாது என்பது நன்கு தெரிந்த விஷயம். ஆ பூனால் இங்கிலிஷை நன்றாகப் பேச முடியாது. அவன் சீனப் பள்ளியில் படித்தான், கா மனிதர்களுக்கு எதிர்ப்புப் போராட்டம் நடத்திய பள்ளிகளில் அது ஒன்று, அப்படி வந்த அவர்கள் தங்கத்தான் போகிறார்கள் என்பது அப்போது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. இடை நிலைப் பள்ளியில் படிக்கையில் ஆ பூனும் சக மாணவர்களுடன் கரம் கோர்த்துக் கொண்டு பஸ் நிலையங்களின் முன்னால், அரசுக் கட்டடங்களின் முன்னே நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். கா மனிதர்கள் அந்த ரகளையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் பயன்படுத்திய சக்தி மிக்க தண்ணீர் பீரங்கிகளால் அடித்துக் கீழே தள்ளப்பட்டிருக்கிறான். அந்தத் தடவை தார் சாலை அவன் முட்டிக்குக் கீழே ஓரிடத்தில் தோலைப் பிய்த்து, பின்னாலிருந்த சிவந்த சதையை வெளிப்படுத்தியது. அங்கு சொரசொரப்பான பழுப்புத் தோல் வளர்ந்து இன்னும் அப்படியே இருந்தது. 

எப்படிப் பார்த்தாலும், அவனுடைய எல்லா நண்பர்களும் செய்தது போல, ஆ பூனும் கா மனிதர்களை வெறுக்கவே வேண்டி இருக்கும். தன் சக வயதுத் தோழர்களுக்காக, துப்புவது, வசவு பொழிவது போன்றவற்றால், அவனும் அந்த வெறுப்பை காட்சிப்படுத்தவே செய்தான், கா மனிதர்கள் ஆங் மோக்களின் வளர்ப்பு நாய்கள்- ஆங் மோஹ்கள் என்பார் அந்தத் தீவை 150 வருடங்கள் ஆண்ட சிவப்பு முடி கொண்ட வெள்ளையர்கள், வெட்டி வெட்டிப் பேசுபவர்கள்- கா மனிதர்கள் ஊழல் செய்பவர்கள், இல்லை என்றால் எதற்கு முழு வெள்ளை உடுப்பு அணிய வேண்டும், எதையோ மறைக்கத்தானே; கா மனிதர் நம் பணத்தைக் கவர முற்படுபவர், அம்மாவை அடைய முனைபவர்; கா மனிதர் ரத்தத்துக்குத் துரோகிகள், கஷ்டப்பட்டு உழைக்கும் சகோதர சகோதரிகளை ஒழிக்க முயல்பவர்கள்.

ஆனால் அவனுடைய வீட்டுக்கு முன்னாலிருக்கும் சதுப்பு நிலத்தைத் தாண்டி வந்து தன்னம்பிக்கையோடு நீண்ட எட்டுக்களாக எடுத்து வைத்து நடந்து போகும் அந்த மனிதர்களிடமிருந்து தன் பார்வையை அகற்ற முடியாமலிருந்தான் ஆ பூன். இதற்கு முன்னால் கா மனிதர்களைப் பார்த்திருக்கிறான், ஆனால் நகரத்தில்தான். பிரும்மாண்டமாகத் தோற்றம் தரும் காலனிய முகப்புகள், மிட்டாய்களைப் போல வண்ணம் பூசிய கடைகளின் முன் வாயில்கள் நடுவேதான்.  அங்கே அவர்கள் குறிப்பிடும்படி தோற்றமளிக்கவில்லை, அலுவலகங்களுக்குச் செல்லும் பேனா உழவர்கள், புதிதாக எழுந்து வரும் நகரின் புறவெளியில் பூச்சிகளைப் போல விரைந்து ஊர்பவர்கள். நன்கு போடப்பட்ட சாலைகளும், குழாய்களில் ஓடி வரும் தண்ணிரும், பல மாடிக் கட்டடங்களும் கொண்டு தெளிவற்ற பிம்பமாக ஆகி வரும் நகரில், அவனைப் பின்னே விட்டு விட்டு எங்கோ சென்று விடப் போகிறது என்று ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தும் நகரில், இன்னொரு அம்சமாக ஆனவர்கள். அங்கே பின்னணியோடு கரைந்து போகிறவர்கள். 

கா மனிதர்கள் காந்தள் காடுகளில் எல்லாவற்றையும் மிதித்துப் போய் அலைவதைப் பார்த்தவன், தான் அத்து மீறி நசுக்கப்படுவது போல உணர்ந்தான்; அவர்களுடைய செருக்கை, அவர்களுடைய ஊடுருவும் காமிராக்கள், பாதரச அளவு மானிகள், தரையில் அவர்கள் செருகும் சிறு ஆரஞ்சு நிறக் கொடிகளை எல்லாம் பார்த்து ஆத்திரப்பட்டான். 

ஆனால், அவனுக்கே அருவருப்பூட்டும் விதத்தில், தானே ஒரு கா மனிதன் ஆனால் அது எப்படி இருக்கும் என்று அவனுக்கு யோசனை தோன்றியது. கஞ்சி போட்ட மொடமொடப்பான வெள்ளை காலர் கொண்ட சட்டை அவனது கழுத்தை உரச, தன்னுடைய சட்டைப் பையை பால்பாயிண்ட் பேனாவின் கனம் கீழே இழுக்க, கருப்பு விளிம்பு கொண்ட சிறு மூக்குக் கண்ணாடியை அணிந்து, அந்த சேற்று மீனைப் பார்த்துப் பயந்த கா மனிதனைப் போலத் தான் தோற்றம் தருவதை அவன் கற்பனை செய்து பார்த்தான். அவனுடைய மூக்கு எண்ணெய்ப் பசையால் வழுவழுப்பாக இருக்க, அவனுடைய மூக்குக் கண்ணாடி அடிக்கடி நழுவிக் கீழே விழும்; அதை அவன் மேலே தள்ளும்போது, அந்தச் சைகையால் அவன் அறியப்படுவான், அந்தச் செயல் அவனுடைய கண்ணியமான, அறிவு பூர்வமான இயல்புக்கு எதிராகத் தெரியும். நகர மையத்தில் ஒரு அலுவலகத்தில் அவன் வேலை செய்வான், பெரிய, விரிந்த ஜன்னல்களும், தலைக்கு மேலே புழுக்கமான காற்றில் சத்தமில்லாமல் வட்டங்களை வெட்டும் மின் விசிறிகளும் கொண்ட கட்டமாக இருக்கும் அது. அந்த  விசிறிகள் உள்ளூர் காம்பொங் பள்ளிக்கூடத்தின் வகுப்பறையில் இருக்கும் மின் விசிறிகளைப் போல கிறீச்சிடாதவை. 

மளார்! அவனுடைய தலை முன்னால் பாய்ந்தது, வலி தலைக்குள் வெடித்தது. 

“எத்தனை தடவை உன் கிட்டே நான் கத்தணும்?” அம்மா சுருட்டிய செய்தித்தாள் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அவனுக்கு எதிரே நின்றாள். அந்தச் சாம்பல் நிறத்தாளில் இருக்கும் சீன எழுத்துகள் கலங்கித் தெரிந்தன. அவன் கண்ணைக் கொட்டிக் கொண்டான், தலையைத் தடவிக் கொண்டான். 

“அப்படி உத்து உத்து முழிச்சுப் பாத்துக்கிட்டிருந்தா, தலையிலெருந்து ரெண்டு கண்ணும் விழுந்துடப் போறது. எதுக்கு அப்படி முழிக்கறே? இப்ப உனக்கும் கா மனுசங்களைப் போல ஆகணுமா? அதுதானா?”

ஆ பூன் தன் தலையை ஆட்டி மறுத்து, கைகளில் இருக்கும் மீன் வலைகள் மீது பார்வையைச் செலுத்துகிறான். போகிற போக்கில் வீசுகிற வார்த்தைகளில் அவனுடைய மனசுக்குள் ஓடுகிற எண்ணங்களை வெளியில் எடுத்துப் போட்டு விடுகிற அம்மாவின் திறமை அவனுக்கு எரிச்சல் ஊட்டும். இத்தனைக்கும் அவள் சொல்வதை அவளே நம்ப மாட்டாள். ஆ பூனோ அவன் அப்பாவைப் போல, அவன் பொய் சொல்கிற போதோ, அல்லது சங்கடப்படும்போதோ அழுத்தமாகச் சிவந்து போகும் தோலைப் பெற்றிருந்தான். 

நல்ல வேளை, அம்மா இந்தத் தடவை அதைக் கவனிக்கவில்லை. கா மனிதர்களால் அவளும் ரொம்பவே கவனம் தப்பி இருந்தாள். “அவுங்க இப்ப என்ன செய்றாங்க?” அவள் ஹோக்கியன் மொழியில் முணுமுணுத்தாள், “நாசமாப் போற கா மனுசங்க. எப்பவும் எதாவது கெடுக்கறதே தொழிலா வச்சுருக்காங்க.”

ஆ பூனின் கையை அம்மா இடித்தாள், நிமிர்ந்து அவளைப் பார்த்த போது, அவள் ஒரு கோப்பையில் தண்ணீரை நீட்டினாள். 

“நிறையக் குடி பையா. இன்னக்கி ரொம்ப சூடா இருக்கு.” அவள் குரல் கரடு முரடாக ஒலித்தது. 

அவளுடைய மேலணியும், கால் சராய்களும் நிறப் பொருத்தம் உள்ளன, சாயம் போயிருந்தாலும், சுத்தமானவை. முகத்தில் கீறல்கள் போல பள்ளமான கோடுகள், சூரிய ஒளியில் காய்ந்து செம்பு நிறமான முகத்தில் எங்கும் வயதான பிறகு தோன்றும் புள்ளிகள். அவளுடைய தலையிலிருந்து உயரும் முடி, தலையிலணியும் கவசம் போன்றிருந்தது, அதைப் பார்க்கையில் அவனுள்ளே ஒரு வலி எழுந்தது. 

“நன்றி, மா,” ஆ பூன் சொல்கிறான், இரு கைகளாலும் கோப்பையை வாங்கி, குளிர்ந்த நீரை வேகமாக விழுங்குகிறான். 

அவனுக்குத் தாகமாக இல்லை, ஆனால் திடீர் என்று தாகமெடுத்திருக்கிறது, நீர் அவனுடைய தொண்டையில் சொர்க்கச் சுகமாக இருக்கிறது. பகல் அவனுடைய பின் கழுத்தில் சுடுகிறது, சிள்வண்டுகளின் ரீங்காரம் காதுகளில் கிறங்குகிறது, குந்தி அமர்ந்திருந்ததால் அவனுடைய பின்கால்களில் தசைகள் எரிச்சலெடுக்கின்றன. அம்மாவின் கை அவனுடைய தோளில் இருக்கிறது, அவளுடைய விரல்கள் அவனுடைய கை இல்லாத மேலாடையின் துணியை வருடிக் கொண்டிருந்தாள். அவன் நீரைக் குடித்து முடிந்ததும், அவர்கள் கா மனிதர்களை மௌனமாகப் பார்த்திருந்தனர். 

கா மனிதர்களுக்கு முன்னால், ஆங் மோக்கள் இருந்தார்கள். தோலில் நிற மங்கலான புள்ளிகளோடு, புட்டிப் பால் பொடி வாசனையோடு, நிறம் வெளுத்த முடியும், நிறம் அழிந்த விழிகளும், வெளுத்த தோலும் கொண்ட பிசாசு போன்றவர்கள். 30 டிகிரி வெப்பமும், 90 சதவீதம் காற்றில் ஈரமும் கொண்ட தட்ப வெப்பத்தில் சற்றும் பொருந்தாத ஆடைகளை அணிந்து கொண்டிருப்பார்கள்: முழுக் கை வைத்த சட்டைகளும், முன் மடிப்புள்ள கால் சராய்களும், இடுப்பு வரை நீண்ட கரிநிறத்து மேலங்கிகளும், தொள தொளத்த கழுத்தைச் சுற்றி இறுகிய டைகளும் அணிந்திருந்தார்கள். பத்தொன்பதாவது நூற்றாண்டில் இந்தத் தீவை அவர்கள்தான் நிறுவினர் என்று சொல்லப்படுகிறது, ஏதோ அதற்கு முன் இந்தத் தீவு இருந்திருக்கவில்லை என்பது போல. 

உலகெங்கும் போர் வெடித்த போது, ஆங் மோஹ்கள் இந்தத் தீவை ஜிபுன்லாங்கிடம் இழந்தார்கள். தோற்கடிக்கப்பட முடியாத ஆங் மோஹ், கல்விமான்களும் நாகரீக மிக்கவர்களுமானவர்கள், தங்கள் பீரங்கிகளைத் தவறான திக்கை நோக்கி நிறுத்தி இருந்தனர். ஜிபுன்லாங் தெற்கிலிருந்து வருவார்கள் என்று நினைத்திருந்தனர், ஆனால் அவர்கள் வடக்கிலிருந்து கடந்து வந்தனர், ஆங் மோஹ்கள் சதுப்பு நிலங்களுக்கு நெருப்பு வைத்துக் கொளுத்த முயன்றபோது ஏற்கனவே காலம் கடந்திருந்தது. பல மைல்கள் பரவி இருந்த காந்தள் காடுகள் நெருப்பு அலையில் அழிந்தன, கரும்புகை மேகம் தீவின் மேல் பல நாட்கள் பொங்கி எழுந்த வண்ணம் இருந்தது. 

“ஆசியா ஆசியர்களுக்கே!” ஜிபுன்லாங் கோஷித்தார்கள், இந்தியப் படைவீரர்களைச் சிரச்சேதம் செய்யுமுன், சீனக் குழந்தைகளை துப்பாக்கிச் சனியனால் குத்திக் கொல்லுமுன், மலாய்களின் குடல்களில் அவை வெடிக்கும் வரை தண்ணீர் நிரப்புமுன்.  தீவுக்குப் புதுப் பெயர் சூட்டப்பட்டது: ஸையோனன் – டொ, தெற்கின் ஒளி விளக்கு, அச்சமூட்டும் வகையில் அந்த உச்சரிப்பு மாண்டரின் மொழியில் ஷௌ நான் டாஒ என்ற சொற்களைப் போல ஒலித்தது. அவற்றுக்குப் பொருள்- நோவான தீவு. போருக்குப் பிறகு, ஆங் மோஹ்கள் திரும்பினர். முதலில் தீவு அவர்களை மகிழ்வோடு வரவேற்றது, பல வருடங்களுக்கு நீர்த்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு கஞ்சியைச் சாப்பிடுவதும், ஜிபுன்லாங்கினர் வீட்டிற்குள் நுழைந்தால் பெண் உறவினர்களை ஒளித்து வைப்பதுமாகக் காலம் கழித்த பின், ஆங் மோஹ்கள் இஸ்திரி போட்ட உடுப்புகளுடனும், நியதி தெரியாத தடுமாற்ற நிலையில் மரியாதை கொடுப்பவராகவும் திரும்பி வந்தபோது அவர்களை நல்லது செய்யும் பழக்கமான கடவுளரைப் போலத் தெரிந்தனர். ஆனால் அதெல்லாம் முன் போல ஒரு போதும் இருக்கவில்லை. தீவினருக்கு நினைவு இருந்தது. தவறான திக்கு நோக்கிப் பொருத்தப்பட்ட பீரங்கிகள், அவர்கள் தம் பாதுகாப்புக்குப் பின் வாங்கிப் போதல், சந்திர நிலை முறையை ஒட்டி வரும் புத்தாண்டின் போது மழையாகப் பொழிந்த குண்டுகளின் நடுவே அவர்கள் உயர்த்தி ஆட்டிய வெள்ளைக் கொடி.  அலங்கோலமாக வரிசையில் நின்ற ஆங் மோஹ்கள், ஒரு காலத்தில் வெல்ல முடியாதவர்களாகத் தெரிய வந்தவர்கள் இப்போது போர்க் கைதிகளாக, தங்களுடைய சிறந்த ஆடைகளை அணிந்தபடி, தீவின் கிழக்குக் கோடியில் ஒரு கைதிகளின் முகாமுக்கு நடத்தி இழுத்துப் போகப்பட்டது. பழைய வசியம் நொறுங்கி இருந்தது.

தீவினரால் மறக்க முடியவில்லை, தாம் பார்த்ததைப் புதைத்து விட முடியவில்லை. 

கா மனிதர்கள் வருகை தந்தபோது, அவர்களுடைய முழு வெள்ளைச் சீருடைகள், ஒட்டி வாரப்பட்ட கருப்பு முடியுள்ள தோற்றமும், வீடுகளும், வேலைகளும், சுதந்திரமும் கொணர்வோம் என்ற உறுதி மொழிகளும், நிஜம் என்று நம்ப முடியாதவையாக இருந்தாலும், அவற்றால் தீவினர் ஸ்தம்பித்துப் போயிருந்தனர். ஏனெனில் கா மனிதர்கள் கச்சிதமான இங்கிலிஷ் பேசினர், ஆங் மோஹ்களின் மரியாதையை வென்றனர், ஆனால் அவர்கள் சிறிதும் துன்பமின்றி எளிதாகவே சீன மொழி, மலாய், தமிழ் என்று மாறி மாறிப் பேசவும் வல்லவர்களாக இருந்தார்கள். கா மனிதர்கள் அதே தீவிலிருந்து வந்தவர்கள். ஒரு காலத்தில் அவர்கள் மக்களில் பகுதியாக இருந்தாலும், அவர்கள் மக்கள் அல்ல. கா மனிதர்கள் இங்கிலாந்தில் பெற்ற கல்விப் பயிற்சியைப் பயன்படுத்தியபடி, மக்களைத் தட்டி எழுப்பும் உரைகளையும் நிகழ்த்தியபடி, ஆங் மோஹ்களோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். 

ஆங் மோஹ்கள் போய் ஆறு வருடங்கள் ஆகி விட்டன, கா மனிதர்கள் அவர்களிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர். ஆங் மோஹ்கள் விட்டுப் போன பல இடங்களைப் போலவே, இங்கு தீவினர் தம்மைத் தாமே ஆள்கின்றனர். தீவுக்குச் சுதந்திரம் கிட்டி இருக்கிறது, ஆனால் இந்தச் சுதந்திரம் என்பது கூடைகளில் செங்கற்களைச் சுமந்து கீழே விழாமல் நடக்கும் சாம்ஸுய் பெண்களுக்கோ, நிரம்பிய வலைகளில் துள்ளிக் குதிக்கும் வெள்ளி மீன்களை விடியற்காலையில் மேலிழுக்கும் ஒராங் லாவ்ட்களுக்கோ அப்படி ஏதும் அர்த்தமாகாதது. இந்தத் தீவு என்பது தீவு என்பது தீவுதான். 

**

கா மனிதர் சதுப்பு நிலங்களுக்குத் தினம் திரும்பினார்கள். ஆ பூன் தன் வீட்டு முன்னால் புல் தரையில் அமர்ந்து வலைகளை மடித்தபடி, மீன்களைப் பிரித்தபடி, தன் சகோதரனின் மஞ்சள் ரப்பர் பூட்ஸ்களை குழாயிலிருந்து நீரைப் பீய்ச்சிச் சுத்தம் செய்தபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஆனால் ஒரு வாரம், அவனுடைய சகோதரன் உடல்நலமில்லாமல் போகவும், ஆ பூன் அவனுடைய இடத்தில் சந்தையில் வேலை செய்ய வேண்டியதாயிற்று. தன் மாமாவுடன் அவன் காலையில் நான்கு மணிக்குச் சற்றே பிறகு கிளம்பி, குடும்பத்தின் துருப்பிடித்த நீல லாரியில் பயணியின் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவற்றின் மின்னும் கண்களோடு, சிவப்பு செவுள்கள் கொண்ட உடல்கள் பனிக்கட்டிகளால் முழுதும் மூடப்பட்டிருந்த மீன்கள் பின் புறத்தில் பெட்டி மேல் பெட்டியாக அடைத்து ஏற்றப்பட்டிருந்தன. எங்கும் பரவி இருக்கும் பரணிகளும், வளைந்து கவிந்த டெம்புஸு மரங்களும் சூழ்ந்த மண் சாலையில் அவர்கள் மெதுவாக ஓட்டிச் செல்கிறார்கள். கருப்பாகிப் போன தென்னை மரங்கள் சேற்றில் உளுத்துப் போனவை, நிலவொளியில் ஆபத்தானவையாகத் தெரியும் அவற்றின் மீது ஏற்றாமல் ஜாக்கிரதையாக ஓட்டுகிறார் ஆ பூனின் மாமன். லாரி பழையது, கடகடக்கிறது, ஆனால் மீன் பிடி படகோடு சேர்த்து, இது குடும்பத்தின் மிகப் பெரிய பொக்கிஷம். 

பல மொழிக் கூவல்களும், அழுக்கான, ஈரமான பண நோட்டுகளோடு சந்தை ஒரே குழப்பமாகத் தெரிகிறது. ஆ பூன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு இடத்தில் மீன்களை வரிசையாக வைக்க மாமனுக்கு உதவுகிறான், அவற்றைச் சீராக வைக்கப் பாடுபடுகிறான், கருப்பு மணி போன்ற கண்கள் எல்லாம் ஒரு பக்கமாகப் பார்க்கும்படி வைக்கிறான். அவனுடைய மாமன் பின்னந்தலையில் அடித்து, துரிதப்படுத்தும்படிச் சொல்கிறபோது அப்படிச் செய்வதை நிறுத்துகிறான். 

ஆ பூனுக்குச் சந்தை பிடிக்கவில்லை. மீன் வாடை அவனுக்குப் பழக்கமில்லை என்பதல்ல காரணம், அவனுடைய வியர்வையைப் போல மீன் வாடை அவனுக்கு நெருங்கிய ஒன்று. ஆனால் அதை கடலின் உப்புக் காற்றோடு பொருந்தியதாக உணர்வதுதான் அவனுக்குப் பழக்கம், மரங்களின் சுவாசமும், எப்போதும் பசியோடு திரிந்து தலைக்கு மேலே வட்டமிடும் பறவைகளோடு அதைச் சேர்த்துத்தான் அறிவான். இங்கு, சந்தையில், காற்று அழுகிய வாடை பூசி வருகிறது, இனிப்பு வாடையோடு மூச்சை அடைக்கும் நாற்றம் அவனுடைய குடலைப் பிடுங்கிக் கொண்டு வந்து அவனுடைய மூக்கு துவாரங்களை விரித்துச் சூடாக்குகிறது. 

“பையா! பலே, உன் அம்மா சொல்வதையும் விட அதிகமாகத்தான் நீ கனாக் காண்கிறாய். அந்த அத்தைக்கு உதவு, வேகமாகச் செய்!” நெய் மீன் ஒன்றால் ஆ பூனின் முன்னங்கையில் விளையாட்டாகத் தட்டுகிறார், அது ஓர் ஈரத் திட்டை அவன் கையில் விட்டுச் செல்கிறது, அது காயும்போது பிசுக்காக இருக்கும். 

ஆ பூன் மீன் வாங்கும் பெண்ணுக்கு, அவருடைய பேரனுக்கு அவர் ஆவியில் வேகவைக்கத் தோதான மீன் ஒன்றைப் பொறுக்கி எடுக்க உதவுகிறான். அவர் விலையுயர்ந்த மீன் ஒன்றை வாங்குகிறார். வெட்டப்பட்ட துண்டுகளான இஞ்சியும், சிவப்பு மிளகாய்களும் சேர்த்து வெந்தபின், காகிதம் போல மெல்லியதாக ஆன தோலுடன்,  வெள்ளையாக மென்மையாக இருக்கும் மீன், சாப்பிடும் சாப் குச்சியால் தொட்டதும் விரிந்து கொடுப்பதையும் கற்பனை செய்கிறான். 

கா மனிதர் என்ன சாப்பிடுவார், அவனுக்குத் திடீரென்று ஐயம் எழுகிறது. எந்தக் கடைகளில் வாங்குவார்கள்? அவர்களுடைய மனைவிமார் ஈரமுள்ள பொருட்களை வாங்கச் சந்தைக்கு வருவார்களா? இல்லை, அவர்களுக்கு அதை எல்லாம் செய்ய வேலையாட்கள் இருப்பார்கள்.  கா மனிதனின் மனைவி, தன் மேற்கத்தி உடுப்புகளுடன், நீர்த்துப் போன உள்ளூர் மொழி பேசியபடி, அழுக்குத் தண்ணீரும், மிருக ரத்தச் சிதறல்களும் கலந்து மின்னுகிற கல் பதித்த சந்தையில் நேர்த்தியான பாதுகை அணிந்த தன் ஒரு காலை எடுத்துக் கீழே வைப்பாள் என்று அவனால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. 

ஆ பூன் விலையுயர்ந்த மீனை காகிதத்தில் கவனமாகச் சுற்றுகிறான். ஆரஞ்சு நிறப் ப்ளாஸ்டிக் பையை அந்த வீட்டுப் பெண்ணிடம் கொடுக்கும் போது, தன் வரிசையான, வெள்ளைப் பற்கள் ஒளிர்ந்து தெரியும்படி கூச்சத்தோடு சிரிக்கிறான், 

“எத்தனை நல்ல பையனாய் இருக்கே! சில்லறையை நீயே வச்சுக்கோ, ஹொர்,” என்கிறார் அவர். 

 “அத்தைகளை எப்படிக் கவனிக்கணும்னு தெரிஞ்சு வச்சிருக்கிறே, இல்லையா பையா!” மாமன் இரைகிறார், அவனை முதுகில் படார் என்று தட்டுகிறார். “நீ அரசியல்வாதியா ஆகியிருக்கணும்!”

ஆ பூன் இளிக்கிறான், ஆனால் அதை நிறுத்துகிறான். யாரையும் எப்படிச் சரிக்கட்டுவது என்று தனக்குத் தெரியும் என்று அவன் ஒரு போதும் நினைத்ததில்லை. ஒரு மீனவருடைய பிள்ளையாக இருப்பதைத் தவிர தான் வேறு யாராகவும் ஆகமுடியும் என்று யோசித்ததில்லை. ஆனாலும், சந்தையின் நாற்றம் அவன் மூக்கைத் துளைக்கையில், மூக்குக் கண்ணாடி அணிந்த, வெள்ளைச் சட்டை கா மனிதர்கள் சதுப்பு நிலத்தைக் கடந்து வருவதான ஒரு பிம்பம் அவனுடைய மனதில் இன்னும் தங்கி இருக்கிறது. இரைந்து கத்துவதன் மூலம் தெரியும் வாடிக்கையாளரின் கோரிக்கைகள், எங்கும் தெறிக்கும் அழுக்கு நீர், காலைச் சூரியனின் வெடித்து வரும் சூடு, இவற்றின் நடுவே ஆ பூனுக்கு, அன்று முதல் தடவையாக, தன் வாழ்வில் ஒரு வெடிப்பு ஏற்படுவதைப் பார்க்கிறோம் என்று தெரிகிறது. ஒரு திறப்பு. 

**

சந்தையில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது, பல மொழிகளில் பல நிறங்களில் அதில் அறிக்கைகள் தாறுமாறாக ஒட்டப்பட்டிருக்கின்றன, ஒன்றன் மேல் ஒன்றாக. அவை விளம்பரப்படுத்துகின்றன: லாரிகள் வைத்திருக்கும் ஆட்கள் பொருட்களை ஏற்றிச் சென்று கொடுக்கத் தயார் என்று, மலிவான துணி வெளுக்கும் வேலை செய்யத் தயார் என்று, ஒரு மின் உற்பத்தி எந்திரம் மறு விற்பனைக்கு ரெடி என்று. அவனுடைய மாமன் கழிப்பறைக்குப் போயிருக்கையில், ஆ பூன் அந்த அறிக்கைகளைப் படிக்கிறான். ஒரு அறிவிப்பு அவன் கவனத்தை ஈர்க்கிறது. அது மற்ற கிழிசல் அறிவிப்புகளின் மங்கிய சாம்பல் நிற எழுத்துகளைப் போல ஏதும் இல்லாமல், பளபளப்பான, கன்னங்கரேலென்ற மசியில் சொற்களைக் கொண்டிருக்கிறது. ஆ பூன் அந்த அறிக்கையை ஆர்வமாகப் படிக்கிறான். அது ஒரு வேலைக்கான விளம்பரம். 

அந்த வாரம் பூராவும், ஆ பூன் மாறிய ஆளாகி விட்டிருக்கிறான். மாமனுக்கு லாரியில் பொருட்களை ஏற்ற ஊக்கத்தோடு வேலை பார்க்கிறான், லாரியின் பின்புறம் உள்ள நீலச் சட்டங்களில் மீன் பெட்டிகளை இறுகக் கட்டுவதைக் கவனமாகச் செய்கிறான், அப்படிக் கட்டுவது வண்டியின் சக்கரங்கள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது இங்குமங்கும் அசைந்தோடி இடிபடாமல் இருக்கச் செய்யும். சந்தைக் கடையின் இடத்தில் அவன் மிக நட்புடனும், வசீகரத்துடனும் தோன்றுகிறான்; அத்தைகளோடு சரசமாடுகிறான், பேரம் பேச அவர்கள் செய்யும் முயற்சிகளை அவர்களின் கொண்டைகளைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் திசை திருப்புகிறான்; கசாப்புக் கடைக்காரர் அன்று அவனுக்குச் சில எலும்புகளைக் கொடுக்கிறார், அவனுடைய அம்மா எலும்புக் கஞ்சியை அன்று இரவு தயாரிக்க உதவியாக, காய்கறிக் கடைக்காரர் அவன் கையில் இளசான அவரை முளைகள் கொண்ட ப்ளாஸ்டிக் பைகளைத் திணிக்கிறார். 

மாமன் அவனிடம் காணும் மாறுதல்களைப் பார்த்து அதிசயித்து நிற்கிறார், வார முடிவில் அவனுடைய அம்மாவிடம், அவனுடைய அண்ணனுக்குப் பதிலாக ஆபூன் சந்தைக்கு வரட்டும் என்று பரிந்துரைக்கிறார். வளர்ந்த பையனுக்கு வேறு எங்காவது வேலை கிடைக்கும், அதன் மூலம் வீட்டுக்கு மேலும் பணம் கிட்டும். 

“நீ என்ன நெனக்கிறே?” அம்மா கேட்கிறாள், ஆ பூனின் அண்ணனைப் பார்க்கத் திரும்பியபடி. 

ஆ ஹாக் வெறுப்புக் காட்டும் முகத்தோடு இருக்கிறான், உதவாக்கரை என்று அவன் நினைத்த சிறு பயல் தன்னை ஓரம் கட்டி விட்டதைக் கண்டு அவனுக்கு கடுப்பாக இருக்கிறது, ஆனால் தலையை அசைத்து ஏற்கிறான். அவனுடைய நண்பன் ஒருத்தன் நகரத்தின் மையத்தில் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்; அவர்கள் வலுவான இளைஞர்களைத் தேடுகிறார்கள், சம்பளமும் நிறைய. 

”அப்ப, எல்லாருக்கும் சம்மதம்தானே,” மாமன் மகிழ்வோடு சொல்கிறார். அவருடைய பழுப்பு நிற முகத்தில் கண்களில் தெறிப்பு தெரிகிறது, அது ஓர் அபூரவக் காட்சி. அவர் இரவு உணவுக்கு அமர்கிறார், மீதி எல்லாரும் கூட அமர்கிறார்கள். 

வழக்கமான கஞ்சி, நீர்த்து, சப்பென்று ருசியில்லாமல் இருக்கிறது. ஆனால் அம்மா, ஆ பூன் சந்தையிலிருந்து கொண்டு வந்த அவரை முளைகளை ஆவி வைத்து வேக வைத்திருக்கிறாள், அவை மெதுவானதாக, நாடா போல, கச்சிதமாக உப்பிடப்பட்டு, சிறப்பான துணைப் பண்டமாக இருக்கின்றன. அம்மா ஆ பூனின் கஞ்சிக் கலயத்தில் முளைகளைக் கரண்டியால் இடுகிறாள். 

“சாப்பிடு, பையா,” என்கிறாள், கண்டிப்பான கண்களை அவன் மீது நாட்டியபடி. 

ஆ பூன் ஒரு ஸ்பூன் கஞ்சியைத் தன் வாயில் இட்டுக் கொள்கிறான். அது மிகவும் சூடாக இருக்கிறது, நாக்கு எரிகிறது, ஆனால் அவன் தன் வாயை மூடிக் கொண்டு, அம்மாவைப் பார்த்துப் புன்னகைக்கிறான். 

குடும்பத்தினர் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருக்கிறான், பிறகு அவர்களிடம் சொல்கிறான். 

அம்மா காலியான கிண்ணங்களைச் சேகரிக்கும்போது, “நான் சந்தைக்குப் போகப் போறதில்லை,” என்கிறான்.

”என்ன சொல்றே, முட்டாளே?” ஆ ஹாக் சொல்கிறான். 

“நான் கா- மனுசனாகப் போறேன்,” என்று பதிலளிக்கிறான் ஆ பூன். 

மா உறைகிறாள். மாமன் இரு உள்ளங்கைகளையும் மேஜையில் பதிக்கிறார். 

“எனக்குப் பதினெட்டு வயசாச்சு. என்னால- வாழ்க்கை பூராவும்- இங்கேயே இருக்க முடியாது.” ஆ பூனின் குரல் சிறிது உடைகிறது, அவனுடைய இதயம் சுத்தியடியாக அடிக்கிறது, ஆனால் அவன் தன் கையை முயற்சி செய்து உயர்த்துகிறான், சுற்றியுள்ள வீட்டைக் காட்டிச் சொல்கிறான். சட்டம் சட்டமாகச் சேர்த்துக் கட்டப்பட்ட சுவர்களில் உள்ள இடுக்குகள் வழியே ஒவ்வொரு காலையும் ஒளி உள்ளே விழுகிறது, பனை ஓலைக் கூரை பூஞ்சணத்தால் கருப்பாக ஆகி இருக்கிறது, எல்லாவற்றையும் செய்கிற அதே அறைதான் சமையலறையும், ஆ பூன் உறங்குவது ஒரு மெல்லிய விரிப்பில். அவனுடைய கை கனக்கிறது. 

“நம்ம வீடு திடீர்னு நல்லதில்லாமப் போயிடுத்தா உனக்கு? என்ன, நீயாவே இதை விடப் பெரிசா சாதிக்கப் போறியாக்கும்?” ஆ ஹாக் ஏளனம் செய்கிறான். “நீ ஒரு மீனவனோட புள்ள, அதுவும் நல்ல புள்ள கூட இல்லை, படகுல போறத்துக்குப் பயப்படற ஆளு நீ. கா மனுசனாகப் போறியா? சொப்பனம் கண்டுகிட்டு இரு.”

மேஜையில் இருக்கிற மண்ணெண்ணை விளக்கின் கடுமையான, விட்டு விட்டு அடிக்கும் ஒளி ஆ ஹாக்கின் முகத்தின் ஒரு பாதியை ஒளியூட்டுகிறது, இன்னொரு பாதி இருட்டில் மூடி இருக்கிறது. ஆ பூன் தனக்கு நன்கு தெரிந்த அந்த முகத்துக்குள் உற்று நோக்குகிறான். அது சொரசொரப்பான, சிறிதும் வசீகரம் இல்லாத முகம். ஆ ஹாக்கின் கன்னங்களில் பருக்களின் வடுக்கள் விட்டுச் சென்ற பள்ளங்களும், தோலின் துளைகள் உப்பிக் கருப்பாகவும் இருக்கின்றன. அவனுடைய சகோதரனின் பிசுக்கான முகத் தோலைத் தன் நகங்களிடையே பிடித்து, பழைய அழுக்கும், எண்ணெயும் சேர்ந்த கருப்பான விதைகள் போன்ற அந்தப் பருக்களின் கருமுனைகள் ஒவ்வொன்றாக வெளியே வரும்படி பிதுக்கி எடுப்பதைக் கற்பனை செய்கிறான். பிதுக்கி எடுத்து ரத்தம் வெளியே வரும்வரை நசுக்குவதைக் கற்பனை செய்கிறான். 

“நான் ஏற்கனவே விண்ணப்பம் போட்டாச்சு. திங்கள் கிழமை நான் வேலையில் சேர்கிறேன்,” ஆ பூன் சொல்கிறான். இந்த முறை அவன் குரல் சீராக இருக்கிறது. 

”என்ன சொல்லிக்கிட்டிருக்கே, பையா?” மாமனுடைய குரலில் கோபத்தை விடத் தகவலறியும் ஆர்வம் இருக்கிறது. 

“உள்ளூர் ஸி.ஸி. இப்பத்தான் திறந்தாங்க, அவங்களுக்கு ஒரு உதவியாளர் தேவை. அங்கே வேலை பார்க்கிற ஆன்டிக்கு என்னைப் பிடிக்கும், அவங்க போய்க் கேட்ட உடனேயே எனக்கு வேலையைக் கொடுத்துட்டாங்க.”

“ஸி.ஸி யா? அந்த கம்யூனிடி செண்டரைச் சொல்றியா?” மாமன் தயங்குகிறார். “அவங்க உனக்கு எத்தனை கொடுக்கறாங்க?” 

“வாரத்துக்கு ஐம்பது டாலர்,” ஆ ஹாக்கை நேராகப் பார்த்தபடி, ஆ பூன் சொல்கிறான். அவனுடைய சகோதரனின் முகம் மாறவில்லை, ஆனால் ஆ பூன் அவனுடைய கழுத்தில் சிறிது இறுக்கத்தைக் கவனிக்கிறான், ஒரு நரம்பின் சிறு துடிப்பு. 

”அம்பது டாலரா!” அம்மா வியக்கிறாள், அழுக்குக் கிண்ணங்களை கழுவுகிற வாளியில் போட்டு விட்டு, ஆ பூனருகே வருகிறாள். மெதுவாக, ஏதோ யோசித்த வண்ணம்,  அவன் ஏதோ சுகமில்லாதவன் போல, அவனுடைய முதுகைத் தடவுகிறாள். ”அம்பது டாலருங்களா! நிச்சயமாத் தெரியுமா, பூன்?”

ஆ பூன் பெருமிதத்தோடு தலையை ஆட்டி ஆமோதிக்கிறான். ஸி.ஸி அலுவலகத்தில், கண்ணாடி அணிந்த அந்த ஆன்டி அவனுக்கு அவர்கள் எத்தனை சம்பளம் கொடுப்பார்கள் என்று சொன்னபோது, பிரமிப்பில் அவன் கீழேயே விழ இருந்தான். அவனை மேலும் கீழும் ஏற இறங்கப் பார்த்து விட்டு அந்தப் பெண்மணி அவனுக்கு ஒரு வாரம் முன்சம்பளம் கொடுப்பார்கள், அதை வைத்து அவன் புது உடுப்புகளை வாங்கிக் கொள்ளலாம் என்று வேறு சொல்லி இருந்தார். 

ஆ ஹாக் வாயால் ஒரு ஒலி எழுப்புகிறான், அது சதுப்பு நிலம் சேற்றுக்கடியில் அகப்பட்டிருந்த காற்றை வெளியே விடுவது போல ஒலிக்கிறது. 

“ஸி.ஸியில் வேலை பார்க்கறதால நீ கா மனுசனா ஆகிட முடியாது,” அவன் சொல்கிறான். ” நீ ஒரு கீழ் நிலை ஆஃபிஸ் வேலையாளாத்தான் இருப்பே.”

ஆனால் மாமனும், அம்மாவும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆ பூனுக்குத் தெரிகிறது, ஆ ஹாக் என்ன சொன்னாலும், தான் ஜெயித்தாயிற்று என்பது. வாரத்துக்கு ஐம்பது டாலர்கள் என்றால், கவனமாகச் சேமித்தால், அவர்கள் சீக்கிரமே வீட்டுக் கூரையை மாற்றி விடலாம். அல்லது மாசத்துக்கு ஒரு தடவைக்கு மேலேயே அவர்கள் எல்லாரும் மாமிசம் சாப்பிடலாம். அல்லது அம்மா வாராவாரம் சில டாலர்கள் சம்பாதிப்பதற்காக பிறருக்கு உபரியாகத் துணிகளைத் துவைத்துக் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம். 

“அதை விட இது மேல்,” அம்மா ஆ பூனின் பின்னங்கழுத்தின் மேல் பகுதியைத் தொட்டபடி சொல்கிறாள். “என் புள்ளை யாரும் கா மனுசனாறது எனக்கு வேண்டாம், ஆங் மோஹ்காரங்க மாதிரி பேசிக்கிட்டுத் திரிய வேணாம், வெள்ளையும் சள்ளையுமா துணி போட்டுகிட்டு ஏதோ பெரிய மனுசங்க மாதிரி பாவனை செய்ய வேணாம். ஸி.ஸியில ஆஃபிஸ் வேலையாளா இருக்கறது அதைப் போல இல்லை. கா மனுசங்க உனக்கு வாரத்துக்கு அம்பது டாலரைக் கொடுக்கறாங்கன்னா, சரிதான், நாம் ஒண்ணும் முட்டாளுங்க இல்லை. எல்லாரும் சாப்பிடத்தானே வேணும்.”

**

ஆ பூன் வேலைக்குப் போக முதல் நாளன்று, அம்மா அவனுக்கு காலைச் சிற்றுண்டி தயாரிக்கிறாள். சிறிய நீலக் கிண்ணத்தில் கொழகொழப்பான முட்டைவெள்ளயும், மஞ்சள் கருக்களும் நிரம்பி மிதப்பதைப் பார்க்கும்போது, ஆ பூனின் கண்களில் அபாயகரமாக நீர் துளிர்த்து நிரம்புகிறது. 

கரிய ஸோய் குழம்பில் தோய்ந்த அரை வேக்காட்டு முட்டைகளின் மீது மிளகுப் பொடியைத் தூவிய உண்டியைத்தான் அவனுடைய அப்பா காலை மீன்பிடிக்குப் போகுமுன் ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு விட்டுப் போவார். சாம்பல் நிறமாக ஆன கை வைக்காத மேல் சட்டையும், படகுக்காக தண்ணீரில் நனையாத தார்பாலின் போன்ற துணியில் தைக்கப்பட்ட  நீலச் சராயும் அணிந்து, மேஜையில் அவர் அமர்ந்திருப்பதை அவன் இப்போது காண்கிறான். அவருடைய இடது கணுக்கால் வலது முழங்கால் மீது போடப்பட்டிருக்கிறது, முட்டைகளின் திரவத்தைக் கிண்ணத்திலிருந்து உறிஞ்ச அவர் முன்புறம் குனியும்போது எலும்பான தோள்கள் அவர் முதுகில் கூரான கோணங்களைக் காட்டுகின்றன. அவர்களுடைய ஈரப்பசை நிறைந்த, சிறிய வீட்டில் எங்கோ இருட்டில் பத்துப் பதினோரு வருடங்களாக வைக்கப்பட்டிருந்த அந்த நீலக் கிண்ணம் இப்போது சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கிறது.

“மா—-” 

“நல்ல சாப்பாட்டை உனக்குப் போட்டு அனுப்பணும், பையா.  வேலைக்குப் போறத்தே பசியோட போகக் கூடாது,” அம்மா சொல்கிறாள்.

ஜன்னலுக்கு முதுகைக் காட்டி அவள் நிற்கிறாள், அதனால் அவள் முகம் இருண்டு தெரிகிறது. ஆ பூனால் அவளுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை, ஆனால் அவளுடைய குரல் எப்போதும் போல சங்கதியை மட்டும் தெரிவிப்பதாக இருக்கிறது. 

அவன் தலையசைத்து விட்டு, மேஜையில் அமர்கிறான். மஞ்சள் கருக்கள் கச்சிதமான உருண்டைகளாக, ஒளி கசியும்படி சுழலும் வெள்ளைத் திரவத்தில், வெளி மண்டலத்தில் தொங்கும் சிறு சூரியன்களைப் போல மிதக்கின்றன. அவற்றை உடைக்க அவன் விரும்பவில்லை, ஆனால் அம்மா பார்த்துக் கொண்டிருக்கிறாள், அதனால் அவன் சாப் குச்சிகளை எடுத்து அவற்றை உரசிப் பிரிக்கிறான், அவற்றின் பளிச்சிடும் உள்பாகங்கள் நீர்த்த திரவத்தில் கரைவதைப் பார்க்கிறான். இதில் ஏதோ சோகமான ஒன்று இருக்கிறது, அது என்ன என்று ஆ பூனால் சுட்ட முடியவில்லை, எனவே தன் சாப் குச்சிகளால் திரவக் கலவையைச் சுழற்றுகிறான், எல்லாமாக ஒரு கொழகொழப்பான வெளுத்த மஞ்சள் திரவமாகிறது. கருத்த ஸோய் குழம்பை அதில் சேர்க்கிறான், கொஞ்சம் மிளகுப் பொடியைப் போட்டு, மேலும் கலக்கிறான். இப்போது அது தயாராகி விட்டது. 

”உன் அப்பா ரொம்பப் பெருமைப்படுவார்,” அம்மா மென்மையாகச் சொல்வது அமைதியாக ஒலிக்கிறது, ஆ பூனுக்குத் தான் அதைக் கற்பனை செய்தோமா என்று கூட ஐயம் எழுகிறது. 

என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை, அதனால் அவன் அந்தக் கலவையைத் தன் தொண்டைக்குள் சரிக்கிறான். முட்டைகள் உப்புக் கரிப்புடன் வாயில் நழுவி உள்ளே போகின்றன, கதகதப்பாக ஆனால் ரொம்பச் சூடாக இல்லாமல், ஏதோ பெட்டைக் கோழியின் பின்புறத்திலிருந்து அப்போதே வெளி வந்தமாதிரி இருக்கின்றன. 

**

மற்ற எல்லாரையும் போல, பா (அப்பா)கூட போரின் போது இறந்தார். 

குண்டு வீச்சு, சொறி-கரப்பான் நோயை எல்லாம் தப்பிப் பிழைத்திருந்தார், ஆங் மோஹ்களை அரிசி மீது ஏறிக் கொண்டே போகும் வரிகளுக்காகவும், மேன்மேலும் கூடி வரும் இதர பொருட்களின் பற்றாக் குறைகளுக்காகவும் தினம் சபித்துக் கொண்டே இருந்தார். தீவுடைய தெருக்களின் வழியே ஜிபுன் லாங்குகளின்  இரு சக்கர சைக்கிள்கள் உருண்டோடியபோது, பின்னே ராணுவ இசையை ஒலி பரப்பியபடி அவர்களின் ட்ரக்குகள் வந்த போது. பா ஆ பூனை அழைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கப் போனார், நன்றாகப் பார்ப்பதற்காக அவனைத் தன் தோள்களில் துக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஜிபுன் லாங் வந்த போது அவர் கொண்டிருந்த உற்சாகத்தைப் போல முன்னர் அவரை அவன் பார்த்திருக்கவில்லை. 

கடைசியா அந்தக் கேடுகெட்ட ஆங் மோஹ்களுக்கு நல்லாக் காட்டினாங்க, அப்பா ஹோக்கியெனில் வெற்றிகரமாக முழங்கினார். திமிரு, பெருமை எல்லாம் போன இடமே தெரியல்லையே. 

தீவு முழுவது உள்ள பதிவு செய்யும் மையங்களில், பதினெட்டும், அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட எல்லா சீன ஆண்களும் ஆஜராக வேண்டும் என்று ஜிபுன்லாங் அறிவிப்பு செய்த போது பா முதலில் போனவர்களில் ஒருத்தராக இருந்தார். அவர் போன காலையை ஆ பூனுக்கு நினைவில்லை, அவன் அப்போது தூங்கிக் கொண்டிருந்தான், அவனை எழுப்பி அவனிடம் சொல்லிக் கொள்ள பா வுக்கு ஒரு காரணமும் இருக்கவில்லை. அது ஏதோ நிர்வாக சமாச்சாரம் என்று பா நினைத்திருக்க வேண்டும். ஜனத்தொகைக் கணக்கெடுப்பு போல ஒன்று, இன்னும் மேலான நிர்வாகத்திற்காகவும், நிலைமையை மேம்படுத்துவதற்காகவும் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அவர் நினைத்திருப்பார். ஜிபுன்லாங்குகளின் திட்டமிட்ட நிர்வாக அமைப்பு, கருக்கானது, மேலானது, அதே நிர்வாகமும், கட்டுப்பாடும்தான் போரில் வெல்வதற்கு அவர்களுக்கு உதவி இருந்தன. 

ஆ பூனுக்கு நினைவிருப்பது அந்த இரவு, சூரியன் கடலில் மூழ்கிய பின்னும் அப்பா திரும்பி இருக்கவில்லை. அம்மாவின் எலும்பான இடது கை முட்டியில் தோலை அம்மாவுடைய விரல்கள் சுருட்டிக் கொண்டிருந்த காட்சியிலிருந்த கவலையை அவனுக்கு நினைவிருந்தது, அன்று இரவில் வேர் கொண்ட அந்தப் பழக்கம் அவளுக்கு இப்போது வாழ்நாள் பூராவுக்குமான பழக்கமாகி இருந்தது. இரவு நேரப் பூச்சிகளின் கிறீச்சிட்ட கூச்சல் அவனுக்கு நினைவிருந்தது, முன் கதவருகே இருந்த மண்ணெண்ணை விளக்கில் மோதிய பழுப்பு இறக்கை கொண்ட விட்டில் பூச்சியின் இறகு கருகிய வாடை நினைவிருந்தது. அந்த சமயத்தில் தீவு பல வாரங்களாக நெருப்பு சூழ்ந்ததாக இருந்தது; முதலில் ஜிபுன்லாங்கினரின் விமானங்கள் வீசிய குண்டுகளின் நெருப்பு, பிறகு போரில் தோற்று விட்டது புரிந்ததும் கடற்படையின் தளத்தில் ஆங் மோஹ்கள் புதைத்து விட்டுப் போன குண்டுகளால் எழுந்த நெருப்பு. 

நாட்கள் செல்லச் செல்ல அம்மாவின் உயர்ந்தெழுந்த பதட்டமும், அப்பா திரும்பி வராததும் அவனுக்கு நினைவிருக்கின்றன. ஒரு வாரத்துக்குப் பிறகு அம்மா பதற்றப்படுவதை நிறுத்தி, மிகவும் அமைதியானாள், சமநிலையில் குரலோடு பிள்ளைகளிடம் அப்பா இனிமேல் திரும்பி வரமாட்டார் என்று அவள் அறிவித்தது அவனுக்கு நினைவிருந்தது. அவள் பாவின் துணிகளையும்,அவர் காஃபி குடிக்கப் பயன்படுத்திய எனாமல் கோப்பையையும், முட்டைகளைச் சாப்பிட அவர் பயன்படுத்திய நீலக் கிண்ணத்தையும் சேர்த்து எடுத்து மூட்டை கட்டி வைத்து விட்டாள். 

அன்று இரவு பல அப்பாக்களும் காணாமல் போயினர், தாத்தாக்களும், மகன்களும், சகோதரர்களும் கூடத்தான், காணாமல் போனார்கள். இங்குமங்கும் கேட்ட துண்டான உரையாடல்களில், ரகசியப் பேச்சுகளில் ஆ பூனுக்குத் தெரிந்தது, பதிவு மையங்களில் வந்த பல்லாயிரக் கணக்கானோரிலிருந்து எதேச்சாதிகாரமாக இழுத்துக் கொண்டு போகப்பட்டவர்களில் அப்பாவும் ஒருவர், சங்கிலிகளால் கட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றி, தூரத்து கடற்கரைகளில் கொண்டு போய், ஒரு காரணமும் இன்றிச் சுடப்பட்டவர்களில் பாவும் ஒருவர். ஸூக் சிங், பெரும் சுத்தப்படுத்தல், என்று அதற்குப் பிற்பாடு பெயரிடப்பட்டிருந்தது. 

அதைப் பற்றி யோசிக்கும்போது, கடற்கரையில் பல முன்பின் தெரியாத மனிதர்களோடு வரிசையில் பாவும் நிற்பதை ஆ பூன் கற்பனை செய்கிறான். ஒருக்கால் அவருக்கு அருகில் ஓர் இளைஞன் நின்று கொண்டிருக்கிறான், ஜிபுன்லாங்குகள் அவனை தண்ணீருக்கு அருகே நடந்து போகச் சொல்கிறபோது அவன் சத்தமில்லாமல் அழுது கொண்டிருக்கிறான். பா அழ மாட்டார். மற்றவர்கள் நீந்திப் போய் தப்பிக்க முயன்று, தம் கணுக்காலைச் சுற்றிக் கட்டியிருக்கிற சங்கிலிகளில் தடுக்கி விழுந்து, ஆழமில்லாத நீரில் கைகால்களை உதைத்துக் கொண்டு, வாயிலும் மூக்கிலும் நீர் ஏறித் தவித்துக் கொண்டிருப்பது போலத் தவிக்க மாட்டார். 

அவரைச் சுற்றி மற்றவர்கள் புலம்பித் தவிக்கும்போது, பா நேராக உயர நின்று அமைதி காப்பார். ஒரு வேளை துப்பாக்கி ரவைகள் அவர் முதுகைத் துளைத்து அவரது தண்டுவடத்தைச் சிதைக்கும்போது, அலைகளின் தாளகதி ஓசையில் அவர் நிம்மதியைக் கண்டிருக்கக் கூடும். என்ன இருந்தாலும், அப்பாவுக்கு கடல் வாழ்க்கைதான் தெரியும். பாவின் முழங்கால்கள் மணலில் புதைந்த போது, அந்த மணல் மிருதுவாக, கதகதப்பாக இருந்திருக்குமோ, தலைக்குமேலே காது கிழியக் கூவும் கடற்பறவைகளின் ஓலம் அவருக்கு ஏதாவது விதத்தில் நெருக்கமாகத் தெரிந்திருக்குமோ என்று அவன் யோசிக்கிறான். ஆ பூன் அப்படி இருந்ததாகத்தான் நினைக்கிறான், ஏனெனில் மாற்றுகள் எல்லாம் தாங்கமுடியாத அளவு வலியூட்டுவன. 

(தொடரும்)

இங்கிலிஷ் மூலம்: ரேச்செல் ஹெங்

தமிழில்: மைத்ரேயன்

இந்தக் கதை கியெர்நிகா என்ற பத்திரிகையில் நவம்பர் 20, 2019 அன்று வெளியான கதை. மூலக் கதையை இங்கே காணலாம்:

ரேச்செல் ஹெங், ‘சூயிசைட் க்ளப்’ (ஹென்ரி ஹோல்ட் பிரசுரம், 2018) என்ற நாவலை எழுதி இருக்கிறார். சிங்கப்பூரில் அது பெரும் வெற்றி பெற்ற நூல். த ஐரிஷ் டைம்ஸ், த இண்டிபெண்டெண்ட், எல்லெ, நைலான், பஸில், த ரம்பஸ், மேலும் பிட்ச் மீடியா ஆகிய பன்னாட்டுப் பத்திரிகைகளின் பாராட்டைப் பெற்ற நூல். இது உலகம் நெடுக பத்து மொழிகளில் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது. இவருடைய சிறுகதை ஒன்று புஷ்கார்ட் பரிசைப் பெற்றது. தற்போது இவர் ஆஸ்டின் நகரில் உள்ள யுனிவர்ஸிடி ஆஃப் டெக்ஸஸில், எழுத்தாளர்களுக்கான மிஷ்னெர் மையத்தில் இணைந்திருக்கிறார்.

மெற்கொண்டு தகவல்களை இங்கே பெறலாம்:

https://lkcnhm.nus.edu.sg/app/uploads/2017/06/2010nis139-145.pdf


Series Navigationகா-மென் – ரேச்செல் ஹெங் >>

One Reply to “கா மென் – ரேச்செல் ஹெங்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.