இரா. மதிபாலா – கவிதைகள்

முன்னும் பின்னுமாய் ஒரு குரல்

நான்
ஒடி விளையாட முடியாத
பெருவெளியை பார்க்கிறேன்
சக்கர நாற்காலியில்
சாய்ந்தபடி
சாதித்த சின்னங்கள்
என்னை
வரவேற்கின்றன
சில காணாதது போல பாவனையில்….
குறு நகையோடு
கடக்கிறேன்
மனசு பழைய கதவுகளை
திறந்த படியே பின்னால் போய்க் கொண்டிருக்கிறது
உடலால் முன்னாலும்
நினைவால் பின்னாலுமாய்
பெருவெளியில் பயணிக்கிறேன்
சுற்றிக் காட்டி விளக்குபவன் போல ஒரு குரல்
முன்னும் பின்னும்
சமநிலையோடு சக்கரநாற்காலியை
நகர்த்துகிறது
போய்க் கொண்டே இருக்கிறேன்.
அடிவானம் வந்து விட்டது
கடைசியாக திரும்பி பார்க்கிறேன்.
பேரன்
என் கவிதைகளை
படித்துக் கொண்டிருக்கும் குரல் கேட்கிறது
பெருவெளி அசைகிறது
கூடவே நானும்.

புகழ் சேறு

தரை பிடிக்கவில்லை

என் கால்கள்
புகழின் கைகளில் இருந்தன
கண்கள் வெளிக் கிளம்பிப் போய் மின்வெளியில் இடப்பட்ட
பாராட்டுப் புழுக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தன.

பல குறுக்கு சந்துகளிலிருந்து
கண் சிமிட்டல்களுக்கும்
கை இழுப்புகளுக்கும்
இரகசியமாய் போய் வர
கால்கள் மசிந்தன

போய்க் கொண்டிருந்தேன்
போய்க் கொண்டே இருந்தேன்.
சன்னதம் ஆடி
பரவசம் சிலிர்க்க..

என்
எழுத்துக் கூட்டுக்குள்
முடை நாற்றம்
பொரியாத முட்டைகளிலிருந்து முனகல்கள்

நாசியும் செவிகளும்
இல்லாததுப் போல
போய்க் கொண்டே இருந்தேன்.

கால வெப்பத்தில்
‘முகம்’
ஒழுக தொடங்கிய போதுதான்
பதறி கவனிக்கிறேன்.

கூடவே கேட்கிறது
வெளிச்சத்தின் போதே
உண்மையை சொன்ன
சில வாசக குரல்கள்

பழகிய பழக்கத்திற்காக
அறைக் கண்ணாடி
காத்திருந்தது
சில வார்த்தைகளோடு

என்
முந்தைய முகம் காட்ட.

One Reply to “இரா. மதிபாலா – கவிதைகள்”

Comments are closed.