இரா.கவியரசு-கவிதைகள்

நள்ளிரவில் மலர்களாக விழித்திருக்கும் மரம்


நீ என் மார்பில் துயிலும் போது
நான் உன் வயிற்றில் வளருகிறேன்
முடிவிலியின் இருபக்கமும்
கருப்பைகளாகப் பெருகுகின்றன
நதியின் ஆழத்தில்
மணலைக் கிளறும் கால் விரல்களைக்
கடிக்கும் மீன்குஞ்சுகள்
மேலே வந்து
கண்களைப் பார்க்கத் தயங்குகின்றன
குளிர்ந்து இறுகும் நீர்க்கண்ணாடி
தொடமுடியாத
கடைசித் துளியில்
உடைதலைச் சுமந்திருக்கிறது.
குத்திக் கிழிக்காத சில்லுகளில்
மின்னும் பொன்துகள்களை
நீண்ட நேரமாகப் பொறுக்குகிறோம்.
எதுவுமே சிக்காத போதும்
வெறும் கைகளை
ஒப்பிட்டுக் கொள்வதில்
அலாதிப் பிரியம்.
நள்ளிரவில்
மலர்களாக விழித்திருக்கும் மரம்
சிணுங்கினால் கூட போதும்
முழுமையாகத் தொலைந்து விடலாம்
சிறிது தலைகாட்டி வரலாம் வா !
கதவைத் திறந்திருந்தாலும்
அறை
வீட்டுக்குள்தானே இருக்கிறது.
இதற்கு மேல் இங்கு அடைவது
பறவைகளுக்குச் சாத்தியமில்லை.

மலைப்பாதை


மலையைக் குடைந்து
ரயில் பாதை அமைத்த பிறகும்
“உள்ளே என்ன இருந்தது
உள்ளே என்ன இருந்தது “
என்று
ரயிலில் செல்பவர்கள் கேட்டார்கள்.
“இருள்தான் இருந்தது
உடைந்த கற்கள்தான்
வேறென்ன இருக்கமுடியும்” என்றான் வழிகாட்டி.
“முதல் கல் உடைந்த போது
மலை அழுததும்
ஒவ்வொரு கல்லும் கட்டிக் கொண்டு
மீண்டும் அழுததும்
வெடி வைத்துத் தகர்த்த போது
பள்ளத்தாக்கில் விழுந்ததும்
சிதறிய பெரிய கல்
பாதை செய்தவரின்
காலுக்கு அடியில்
கல்வெட்டாக மாறியதும்
உள்ளேதான் இருந்தன
உள்ளேதான் இருந்தன “
என்று யாரோ சொல்லிய போது
ரயில்
அடுத்த குகைக்கு
விரைந்து கொண்டிருந்தது.

One Reply to “இரா.கவியரசு-கவிதைகள்”

  1. முதல் கவிதையில் மலர்களின் மென்மையை சொன்னவர் அடுத்த கவிதையில் கல்லுக்குள் இருக்கும் மென்மைகளை சொல்லுவது சிறப்பு.கல்லைப் பற்றியும் கவிதை எழுதலாம் என்று காட்டியிருக்கிறார்.உண்மையில் அது எதையோ குறிக்கும் படிமம் என்றாலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.